The characteristics of varnas! | Shanti-Parva-Section-189 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 16)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் குறியீடுகளையும், பிரம்மத்துடன் கலப்பதற்கான தகுதிகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...
The characteristics of varnas! | Shanti-Parva-Section-189 | Mahabharata In Tamil |
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "ஒருவன் எந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு பிராமணனாகிறான்? எதனால் ஒரு க்ஷத்திரியனாகிறான்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, மேலும் என்ன செயல்பாடுகளின் மூலம் ஒருவன் வைசியானாகவும், சூத்திரனாகவும் ஆகிறான்? ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம், "ஜாதம் {ஜாதகர்ம} என்றழைக்கப்படும் சடங்குகள் மற்றும் அத்தகைய சடங்குகளால் புனிதமடைந்தவனும்; ஒழுக்கத்தில் தூய்மையானவனும்; வேத கல்வியில் ஈடுபடுபவனும்; நன்கு அறியப்பட்ட ஆறு செயல்களில் (காலையும், மாலையும் தூய்மைச் சடங்குகள் செய்தல்; மந்திரங்களை அமைதியாக ஓதுதல்; வேள்வி நெருப்பில் ஆகுதி ஊற்றுதல்; தெய்வங்களை வழிபடுதல், விருந்தோம்பல் கடமைகளின் படி விருந்தினர்கள் உபசரித்தல், விஸ்வதேவர்களுக்கு உணவளித்தல் ஆகிய ஆறு செயல்களில்) அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவனும்;(2) பக்திச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்பவனும்; தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் முறையாக உணவளிக்காமல் உண்ணாதவனும்; ஆசான் மீது பெரும் மதிப்பு கொண்டவனும்; நோன்புகள் மற்றும் வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(3) எவனிடம் வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு[1], தவம் ஆகியன உள்ளனவோ அவனே பிராமணனாக அழைக்கப்படுகிறான்.(4)
[1] "கிரீனாம் Ghrina என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் வெறுப்பு என்ற பொருளையும் கொண்டது. இங்கே இச்சொல் பயன்படுத்தப்படும்போது அறமற்ற செயல்பாடுகளில் கொள்ளும் வெறுப்பு என்ற பொருளையே தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தயமும், தானமும், த்ரோஹமின்மையும், க்ரூரமின்மையும், பொறுமையும், தயையும், தவமும் எவனிடம் காணப்படுகின்றனவோ அவன் ப்ராம்மணனென்று சொல்லப்படுகிறான்" என்றிருக்கிறது.
போர்த்தொழிலில் ஈடுபடுபவனும், வேதம் கற்பவனும், (பிராமணர்களுக்குக்) கொடையளிப்பவனும், (தன்னால் பாதுகாக்கப்படுகிறவர்களிடம் இருந்து) செல்வத்தைப் பெறுபவனுமான ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான்.(5)
கால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், செல்வம் ஈட்டுவதற்கான வழிமுறைகளின் {வணிகத்தின்} மூலம் புகழை ஈட்டுபவனும், ஒழுக்கத்தில் தூய்மை கொண்டவனும், வேத கல்வியில் ஈடுபடுபவனுமான ஒருவன் வைசியன் என்றழைக்கப்படுகிறான்[2].(6)
[2] "6ம் சுலோகத்தின் முதல் வரியில் முதல் பாதி, பம்பாய் பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த இரண்டு உரைகளையும் நீலகண்டர் கவனித்திருக்கிறார். பொருளில் பம்பாய் பதிப்பு தெளிவாக இருந்தாலும் நான் இங்கே வங்கப் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன். விசதி Vicati என்பது செயப்படு பொருளில் சொல்லப்படும் பிரதிஷ்ட pratishtaa ஆகும். அல்லது அதைப் போன்ற பெயர்ச்சொல்லைப் பொருளாகக் கொண்டதாகும். இதன் பொருள், "எவன் புகழை அடைகிறானோ முதலியனாவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "க்ருஷியிலும் பசுக்காதலிலும், வர்த்தகத்திலும் எப்பொழுதும் பரிசுத்தனாகிப் புகுகின்றவனும் வேதாத்யயனமுள்ளவனுமா யிருப்பவன் எவனோ அவன் வைஸ்யனென்று பெயருள்ளவனாகிறான்" என்றிருக்கிறது.
அனைத்து வகை உணவை உண்பதில் இன்பங்கொள்கிறவனும், அனைத்து வகை வேலைகளிலும் ஈடுபடுபவனும், ஒழுக்கத்தில் மாசுள்ளவனும், வேதங்களைக் கல்லாதவனும், தூய்மையற்ற ஒழுக்கம் கொண்டவனுமான ஒருவன் சூத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) ஒரு சூத்திரனிடம் {வாய்மை உள்ளிட்ட} இந்தப் பண்பியல்புகள்[3] காணப்பட்டாலும், ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையென்றாலும், அத்தகைய சூத்திரன் சூத்திரனுமல்ல, அத்தகைய பிராமணன் பிராமணனுமல்ல[4].(8)
[3] முன்பு பிராமணனுக்குச் சொல்லப்பட்ட வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு, தவம் என்ற ஏழு பண்பியல்புகள்.[4] கும்பகோணம் பதிப்பில், "முன்கூறிய ஸத்யமுதலிய ஏழும் சூத்திரனிடத்திலும் காணத்தக்கனவாகும். இவை ப்ராமணன் முதலிய மூன்று ஜாதிகளிடமும் இல்லாமலுமிருக்கும். சூத்திரன் சூத்திரனாகவேயிருப்பானென்பதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "{மேற்குறிப்பிடப்பட்ட} இந்தக் குறியீடுகள் ஒரு சூத்திரனிடம் காணப்படவில்லையெனில் அந்தச் சூத்திரன் சூத்திரனே அல்ல. அவை ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையெனில் அந்தப் பிராமணன் பிராமணனே அல்ல" என்றிருக்கிறது.
பேராசையும், கோபமும் அனைத்துவகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவையும், தற்கட்டுப்பாடும் அறிவின் உயர்ந்த விளைவுகளாகும்.(9) அந்த ஆவல்கள் (பேராசை மற்றும் கோபம் ஆகிய) இரண்டையும் ஒருவன் முழு இதயத்துடன் தடுக்க வேண்டும். அவை ஒருவனுடைய உயர்ந்த நன்மையை அழிக்கவே தோன்றுகின்றன.(10) ஒருவன் தன் கோபத்திடம் இருந்து தன் செழிப்பையும், செருக்கிலிருந்து தவங்களையும், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் இருந்து அறிவையும், குற்றங்களில் இருந்து தன் ஆன்மாவையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,(11)
ஓ! மறுபிறப்பாளனே, எந்தப் புத்திசாலி கனியில் விருப்பமில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்வானோ, எவனுடைய மொத்த செல்வமும் ஈகைக்காகவே இருக்கிறதோ, எவன் தினப்படியான ஹோமங்களைச் செய்வானோ அவனே உண்மையில் துறவியாவான் {தியாகியாவான்}. தீங்கிழைக்கும் செயல்கள் அனைத்தையும் தவிர்த்து உயிரினங்கள் அனைத்திற்கும் நண்பனாக ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்[5].(12) கொடைகள் யாவற்றையும் ஏற்காத ஒருவன், தன் நுண்ணறிவின் மூலம், தன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாக இருக்க வேண்டும். எந்தத் துன்பமும் இல்லாத தன் ஆன்மாவிலேயே அவன் வாழ வேண்டும். அப்போது அவன் இம்மையிலும் எந்த அச்சமும் கொள்ள மாட்டான், மறுமையிலும் அச்சமற்ற உலகத்தை அடைவான்.(13) ஒருவன், தவங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக, ஆசைகள் அனைத்தையும் முற்றாகத் தவிர்ப்பவனாக, எண்ணங்களை வெளியிடாத நோன்பை நோற்பவனாக, தன்னில் குவிந்த ஆன்மாவுடன் கூடியவனாக, வெல்லமுடியா புலன்களை வெல்ல விரும்புபவனாக, பற்றுகளுக்கு மத்தியில் பற்றற்றவனாக எப்போதும் வாழ வேண்டும்.(14)
[5] "இங்கே பேசுபவர் {பிருகு}, கர்ம சந்நியாசத்தின் {செயல்களைத் துறத்தல்) பண்பை விளக்குகிறார். சமாரம்பம் Samaarambha என்பது பொதுவாக அனைத்தை வகைச் செயல்களையும் குறிக்கும். எனினும், இங்கே வேள்விகள் மற்றும் பிற சாத்திர சடங்குகளை மட்டுமே குறிப்பிடுவது நோக்கமாகத் தெரிகிறது. இரண்டாவது வரியை உரைப்பதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். "அனைத்தையும் கொடையாக ஊற்றுபவன்" என்பது அதன் வெளிப்படையான பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் அனைத்தும் வெளிப்பாடு {வியக்தம்} என்றழைக்கப்படுகிறது. எனினும், புலன்களுக்கு எட்டாமல், வெளிப்பாடற்றதாக {அவியக்தமாக} இருப்பவையும், நுண்ணியப் புலனுணர்வால் மட்டுமே உறுதி செய்து கொள்ளக்கூடியவையுமான அனைத்தையும் அவன் அறிய முயல வேண்டும்[6].(15) நம்பிக்கையேதும் இல்லையென்றால், ஒருவனால் அந்த நுண்ணுணர்வை அடைய முடியாது. எனவே, அவன் நம்பிக்கையுடனே இருக்க வேண்டும். மனம் பிராணனிலும், பிராணன், பிரம்மத்திலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.(16) பற்றுகள் அனைத்திலிருந்தும் தொடர்பறுத்துக் கொள்ளும் ஒருவனே பிரம்மத்துடன் கலக்கலாம். வேறு எதையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. துறவுப் பாதையில் ஒரு பிராமணனால் எளிதாகப் பிரம்மத்தை அடைய முடியும்.(17) தூய்மை, நல்லொழுக்கம், அனைத்துயிரினங்களிடமும் கருணை ஆகியவையே ஒரு பிராமணனின் குறியீடுகளாகும்" என்றார் {பிருகு}.(18)
[6] மொத்த உலகமும் சாதாரணப் புலன்களுக்குப் புலப்படக்கூடியது. மொத்த உலகத்திற்குப் பின்னால் உள்ள நுட்பத்தை, யோகத்தினால் கூராக்கப்பட்ட நுண்ணியப் புலனுணர்வுகளால் அறிய முடியும். மரணத்தால் உடல் மட்டுமே கரைகிறது. லிங்க சரீரம் என்றழைக்கப்படுவதும், அடிப்படை பூதங்களின் தன்மாத்திரையினாலானதுமான நுண்ணிய உடல், அல்லது வடிவம் நீடித்திருக்கிறது. அஃது உலகின் பண்புகள் அனைத்தையும் உளவியல் வடிவில் தக்க வைத்துக் கொள்கிறது. பிரம்மத்துடன் கலப்பதற்கு முன்பு அந்த லிங்க சரீரமும் அழிவடைய வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 189ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |