The earth is the progenitrix! | Shanti-Parva-Section-190 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 17)
பதிவின் சுருக்கம் : உண்மை சொர்க்கத்திற்கும், பொய் நரகத்திற்கும் இட்டுச் செல்லும்; பொய்யாலுண்டாகும் துன்பங்கள்; இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றைப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...
The earth is the progenitrix! | Shanti-Parva-Section-190 | Mahabharata In Tamil |
பிருகு {பரத்வாஜரிடம்}, "உண்மையே பிரம்மம்; உண்மையே அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குகிறது. உண்மையின் மூலமே இந்த மொத்த அண்டமும் தாங்கப்படுகிறது; உண்மையின் துணை கொண்டே ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(1) பொய்மையானது இருளின் மற்றொரு வடிவமாக மட்டுமே இருக்கிறது. இருள் கீழ்நோக்கியே வழிகாட்டும். இருளால் பாதிப்படைந்தோரும், அதனால் மறைக்கப்பட்டோரும், சொர்க்கத்தின் ஒளிமிக்க உலகங்களைக் காணத் தவறுகின்றனர்.(2) சொர்க்கம் ஒளி என்றும், நரகம் இருள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அண்டத்தில் வசிக்கும் உயிரினங்கள் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் அடையலாம்.(3) இவ்வுலகிலும், உண்மையும் பொய்மையும், அறம் மற்றும் மறம், ஒளி மற்றும் இருள், இன்பம் மற்றும் துன்பம் என்பவைபோன்ற முரண்பட்ட வழிமுறைகளுக்கும், முரண்பட்ட குறியீடுகளுக்கும் வழிவகுக்கும்.(4) இவற்றில் எது உண்மையோ அஃது அறமாகும்; எஃது அறமோ அஃது ஒளியாகும்; எது ஒளியோ அஃது இன்பமாகும். அதேபோலவே, எது பொய்மையோ அது மறமாகும்; எது மறமோ அஃது இருளாகும்; எது இருளோ அது துன்பம் அல்லது துயரமாகும்.(5)
ஞானம் கொண்டோர், இவ்வுலக வாழ்வானது உடல் மற்றும் மனம் சார்ந்த கவலையிலும், நிச்சயம் துன்பத்தில் முடியக்கூடிய இன்பத்திலும் மூழ்கியிருப்பதைக் கண்டு, ஒருபோதும் திகைப்படையாதவர்களாக இருக்கிறார்கள்.(6) எவன் ஞானியோ அவன் கவலையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முனைவான். உயிரினங்களின் மகிழ்ச்சியானது, இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் நிலையற்றதாகும்[1].(7) இருளில் மூழ்கியிருக்கும் உயிரினங்களின் மகிழ்ச்சியானது, ராகுவால் பீடிக்கப்படும் சந்திரனின் காந்தியைப் போல மறைந்து போகிறது[2].(8) உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என்று இன்பம் இரு வகையாகச் சொல்லப்படுகிறது. இம்மையிலும், மறுமையிலும், புலப்படக்கூடியவையும், புலப்படாதவையுமான (செயல்களின்) கனிகள் இன்பத்தின் நிமித்தமாகவே (வேதங்களில்) குறிப்பிடப்படுகின்றன[3]. முத்தொகையின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின்} கனிகள், அல்லது விளைவுகளில், இன்பத்தைவிட முக்கியமானது வேறேதும் இல்லை. மகிழ்ச்சியே விரும்பத்தக்கது. அதுவே ஆன்மாவின் பண்பாகும். அறமும், பொருளும் அதற்காகவே நாடப்படுகின்றன. அறமே அதன் வேராகும். உண்மையில், இதுவே அதன் தோற்றுவாயாகும். அனைத்து செயல்களும் மகிழ்ச்சியை அடைவதையே முடிவான இலக்காகக் கொண்டிருக்கின்றன" என்றார் {பிருகு}.(9)
[1] "சொர்க்கத்தில் அடையப்படும் இன்பநிலை எப்போதும் நீடிக்கக்கூடியதல்ல. அஃது இம்மையில் அடையப்படும் தகுதியின் அளவுக்குத் தக்க காலம் வரையே நீடிக்கக்கூடியது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "சூரியனும், சந்திரனும் தைத்தியன் ராகுவால் விழுங்கப்படுகின்றன என்பதே சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் புராணக் கொள்கையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "மகிழ்ச்சியை அடைய விரும்பும் மனிதர்கள், இந்தக் கனிகளைப் பெற முனைவார்கள் என்பதாலேயே வேதங்கள் இக்கனிகளை அறிவிக்கின்றன என்ற பொருளைத் தருவதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "இன்பமே உயர்ந்த பொருள் என்று நீர் சொல்கிறீர். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. (நீர் சொல்வது போல) இவ்வளவு விரும்பத்தக்கதாக உள்ள ஆத்மாவின் இந்தப் பண்பை அடைய முனையாமல் முனிவர்கள் வேறு ஏதோ உயர்ந்த வெகுமதியை அடைவதில் ஈடுபடுகிறார்கள். மூவுலகங்களின் படைப்பாளனான பலமிக்கப் பிரம்மன், பிரம்மச்சரிய நோன்பை நோற்றுத் தனியாக வாழ்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறோம். இன்பத்தை நிறைவு செய்வதன் மூலம் அடையப்படும் மகிழ்ச்சியில் அவன் ஒருபோதும் பற்றுடன் இல்லை. மேலும், அண்டத்தின் தெய்வீகத் தலைவனான உமையின் தலைவன் {சிவன்}, (இன்பத்திற்கான தேவனான) காமனை இல்லாமல் செய்தான். இதன் காரணமாக, உயர் ஆன்ம மக்கள் இன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் சொல்கிறோம். மேலும் அஃது ஆன்மாவின் உயர்ந்த பண்பாகத் தெரியவில்லை. இன்பத்தைவிட வேறேதும் உயர்ந்ததில்லை என்று தெய்வீகமான நீர் {தேவரீர்} சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளாக, நற்செயல்களில் இருந்து இன்பமும், பாவச்செயல்களில் இருந்து துன்பமும் இரண்டு வகைகளில் எழுகின்றன என்று சொல்லப்படுவது வெற்றுமொழியாக மட்டுமே இவ்வுலகில் இருக்கிறது" என்றார் {பரத்வாஜர்}[4].(10)
[4] பரத்வாஜரின் இந்த நீண்ட, பெரிய கேள்விக்கு ஒரே ஒரு ஸ்லோக எண்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே போலப் பின்வரும் 11ம் ஸ்லோகமும் வெகு நீளமாக இருக்கிறது.
பிருகு {பரத்வாஜரிடம்}, "இது பின்வருமாறு சொல்லப்படுகிறது: பொய்மை இருளில் {அறியாமையில்} இருந்து எழுகிறது. இருளில் {அறியாமையில்} மூழ்கியிருப்போர் அறத்தையல்லாமல் {தர்மத்தையல்லாமல்}, மறத்தை {அதர்மத்தை} மட்டுமே பின்தொடர்ந்து, கோபம், பேராசை, வன்மம், பொய்மை, மற்றும் இவை போன்ற வேறு தீமைகளுக்கும் வசப்பட்டவர்களாகிறார்கள். அவர்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. மறுபுறம், பல்வேறு வகை நோய், துன்பம் மற்றும் தொல்லைகளில் அகப்படுகின்றனர். மரணம், சிறை மற்றும் இவ்வகைத் துன்பங்கள் பிறவற்றாலும், பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் உண்டாகும் கவலைகளாலும் அவர்கள் வதைக்கப்படுகின்றனர். மழை, காற்று, எரியும் வெப்பம், மிகைப்பட்ட குளிர் ஆகியவற்றில் இருந்து எழும் எண்ணற்ற உடல் துன்பங்களையும் அவர்கள் அடைகிறார்கள். செல்வ இழப்பு, நண்பர்களிடம் இருந்து பிரிவு, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால் உண்டாகும் எண்ணற்ற மனத் துன்பங்களிலும் மூழ்குகிறார்கள்.(11)
பல்வேறு வகை உடல் மற்றும் மனத் துன்பங்களால் தீண்டப்படாதவர்களே இன்பத்தை அறிவார்கள்.(12) இந்தத் தீமைகள் ஒருபோதும் சொர்க்கத்தில் காணப்படுவதில்லை. அங்கே இனிய தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. அங்கே சொர்க்கத்தில் இடையறாத நறுமணமும் வீசிக்கொண்டிருக்கிறது. சொர்க்கத்தில் பசியோ, தாகமோ, முதுமையோ, பாவமோ கிடையாது.(13) சொர்க்கத்தில் இடையறாத இன்பம் இருக்கிறது. இவ்வுலகில் {இம்மையில்} இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. நரகத்திலோ துன்பம் மட்டுமே இருக்கிறது. எனவே, இன்பமே அடையத்தக்க பொருளில் உயர்ந்ததாகும்.(14) இந்தப் பூமியே {பூமாதேவியே} அனைத்து உயிரினங்களின் மூதன்னையாக இருக்கிறாள். பெண்கள் அவளது இயல்பையே பெற்றிருக்கின்றனர். ஆண்விலங்கானது, பிரஜாபதியைப் போன்றதாகும். உயிர்வித்தானது, படைக்கும் சக்தி என அறியப்பட வேண்டும்.(15) இவ்வழியிலேயே படைப்பு நேர வேண்டுமெனப் பழங்காலத்தில் பிரம்மனால் விதிக்கப்பட்டது. தன் செயல்களால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும், இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள்" என்றார் {பிருகு}[5].(16)
[5] "கிட்டத்தட்ட இந்த மொத்த பகுதியும் உரைநடையாகவே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இதுவரை புரிந்து கொள்ளக் கடினமான தத்துவங்களையும் எளிதாகச் சொல்லிவந்த பிருகு இங்கே தெளிவற்றுப் பேசுவதாகத் தெரிகிறது. மேலும் 10 மறறும் 11ம் ஸ்லோகங்களின் நீளம், நாம் இதுவரை மொழிபெயர்த்தவற்றிலுள்ள ஸ்லோகங்களின் சராசரி நீளத்தைவிட மிக மிக அதிகமாக இருக்கிறது. இந்தப் பகுதி இடைசெருகலாக இருக்கக்கூடும். ஆனால் இடைசெருகல்கள் நீக்கப்பட்ட படைப்பாகச் சொல்லப்படும் பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி கங்குலியில் உள்ளவாறே இருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 190ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |