The duties of modes of life! | Shanti-Parva-Section-191 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 18)
பதிவின் சுருக்கம் : தானம், அறம், ஒழுக்கம் முதலியவற்றின் பயன்களையும், நான்கு ஆசிரமங்களுக்கு உரிய கடமைகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...
The duties of modes of life! | Shanti-Parva-Section-191 | Mahabharata In Tamil |
பரத்வாஜர் {பிருகுவிடம்}, "கொடையின் {தானத்தின்} விளைவும், அறம், ஒழுக்கம், நன்கு பயிலப்படும் தவம், வேத கல்வி மற்றும் வேதம் ஓதல், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றல் ஆகியவற்றின் விளைவுகளும் {பயன்களும்} என்னென்ன?" என்று கேட்டார்.(1)
பிருகு {பரத்வாஜரிடம்}, "புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதன் {ஹோமத்தின்} மூலம், பாவம் எரிக்கப்படுகிறது. வேத கல்வியின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த அமைதி மனத்தை அடைகிறான். கொடையின் மூலம் ஒருவன் இன்பங்களையும், இன்பநுகர் பொருட்களையும் அடைகிறான். தவங்களின் மூலம் ஒருவன் அருள் நிறைந்த சொர்க்கத்தை அடைகிறான்.(2) மறுமைக்கானது, இம்மைக்கானது என இருவகைக் கொடைகள் சொல்லப்படுகின்றன. நன்மைக்காகக் கொடுக்கப்படும் எதுவும் கொடையாளியின் மறுமையைக் கவனித்துக் கொள்கின்றன.(3) நன்மையற்றவைக்குக் கொடுக்கப்படும் எதுவும் இம்மையில் இன்புறுவதற்கான விளைவுகளை உண்டாக்குகின்றன. கொடைகளின் விளைவுகள் அந்தக் கொடைகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன" என்றார் {பிருகு}.(4)
பரத்வாஜர் {பிருகுவிடம்}, "எவனால் எந்தக் கடமைகள் செய்யப்பட வேண்டும்? கடமையின் {தர்மத்தின்} பண்பியல்புகள் என்னென்ன? கடமைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன? இவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்றார்[1].(5)
[1] "அடுத்தடுத்த மூன்று கேள்விகளில் தர்மம் என்ற சொல் எந்தப் பொருள்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது மிகக் கடுமையானதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எவனுக்கு எந்தத் தர்மம் ஆசரிக்க வேண்டியது? தர்மத்தின் லக்ஷணமென்ன? தர்மம் எத்தனை விதமாயிருக்கிறது? அதை நீர் சொல்ல வேண்டும்" என்றிருக்கிறது.
பிருகு {பரத்வாஜரிடம்}, "எந்த ஞானிகள் விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைச் செய்வதில் ஈடுபடுவார்களோ, அவர்கள் சொர்க்கத்தையே தங்கள் வெகுமதியாக அடைகிறார்கள். வேறு வகையில் செய்யும் மக்கள் மூடக்குற்றம் செய்தவர்களாகிறார்கள்" என்றார்.(6)
பரத்வாஜர் {பிருகுவிடம்}, "முன்பு பிரம்மனால் விதிக்கப்பட்ட நான்கு வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்}, அவை ஒவ்வொன்றின் நடைமுறைகளையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டார்.(7)
பிருகு {பரத்வாஜரிடம்}, "பழங்காலத்தில், தெய்வீகப் பிரம்மன், உலகின் நன்மைக்காகவும், அறத்தைப் பாதுகாப்பதற்காகவும் நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைச்} சட்டிக்காட்டினார். (கால வரிசையின் அடிப்படையில்) அவற்றில், ஆசானின் வசிப்பிடத்தில் வசிப்பது முதலாகக் குறிப்பிடப்படுகிறது. எவன் இந்த {பிரம்மச்சரிய} வாழ்வுமுறையில் இருக்கிறானோ, அவன் ஒழுக்கத்தூய்மை, வேத சடங்குகள், நலந்தரும் கட்டுப்பாடுகள், நோன்புகள், பணிவு ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை மற்றும் மாலை சந்திகளையும், சூரியனையும், தன் புனித நெருப்பையும், தெய்வங்களையும் அவன் வழிபட வேண்டும். தாமதம் மற்றும் சோம்பலை அவனைக் கைவிட வேண்டும். அவன் தன் ஆசானை வணங்குவது, வேத கல்வி, ஆசானின் போதனைகளைக் கேட்பது ஆகியவற்றின் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் (காலை, நடுப்பகல், மாலை என) மூன்று வேளை தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(8) அவன் திருமணம் செய்யாமல் இருக்க வேண்டும். தன் புனித நெருப்பைக் கவனிக்க வேண்டும். தன் ஆசானுக்குக் கடமை உணர்வுடன் தொண்டு செய்ய வேண்டும். (தன்னை ஆதரித்தக்கொள்ள) தினமும் பிச்சையெடுக்கச் செல்ல வேண்டும். ஆசான் சொல்லும் எந்தக் கட்டளையையும் விருப்பத்துடன் நிறைவேற்றி, தன் நன்மைக்காக ஆசானால் போதிக்கப்படும் வேத கல்வியைப் பெறத் தயாராக இருக்க வேண்டும்[2]. இது குறித்து ஒரு சுலோகம் இருக்கிறது {அது பின்வருமாறு}: தன் ஆசானை மதிப்புடன் கவனித்துக் கொள்வதன் மூலம் தன் வேதத்தை அடையும் பிராமணன், சொர்க்கத்தை அடைவதில் வென்று, தன் ஆசைக் கனிகள் அனைத்தையும் அடைவான்.(9)
[2] "ஒரு சீடன் தன் ஆசானிடம் கல்வியை ஒருபோதும் கேட்கக்கூடாது. ஆசான் அவனை அழைக்கும்போது மட்டுமே அவன் அவதைக் கவனிக்க வேண்டும். இந்த நாள் வரை இந்த விதி இந்தியா முழுமையிலும் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. போதிப்பதில் ஈடுபடுவோர் ஒருபோதும் தங்கள் சீடர்களைப் புறக்கணிப்பதில்லை என்பதையும் நாம் இங்கே சொல்ல வேண்டும். நியூடாவைச் சேர்ந்தவரும் பேராசிரியருமான பானேஸ்வர் வித்யாலங்காரின் பாட்டனாரும் ஒரு பேராசிரியராக இருந்தவராவார். அவர் தன் இல்லத்திற்கு வெளிப்புறத்தில் தன் சீடர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது, அவரது மகன் இறந்துவிட்ட செய்தி வந்து, அதைக் கவனிக்காமல் தன் சீடர்களுக்குப் பாடம் எடுப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவர் தன் பணியில் முற்றிலும் கரைந்திருந்தபோது அவரது மனைவி, அவரது இதயமற்ற தன்மையால் துன்புற்று வெளியே வந்து அவரை வசைபாடியபோது, முற்றிலும் பணியில் கரைந்திருந்தவரான அவர், "நன்று. கவலைப்படாதே. நான் என் மகனுக்காக அழவில்லையென்றாலும், உன் கைகளில் இருக்கும் அந்தப் பேரப்பிள்ளைக்காகவாவது அழுவேன்" என்றாராம். காலத்தின் முக்கியத்துவத்தைச் சீடர்கள் அவருக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(காலவரிசையின் படி) இரண்டாவதாக அழைக்கப்படுவது இல்லற வாழ்வுமுறையாகும் {கார்ஹஸ்த்ய ஆச்ரமம்}. அந்த வாழ்வுமுறையின் செயல்பாடுகள் மற்றும் குறியீடுகள் ஆகிய அனைத்தையும் நாம் உனக்குச் சொல்வோம். ஆசானிடம் வாசத்தை நிறைவு செய்து வீடு திரும்பியவர்கள், பக்தியொழுக்கம் கொண்டவர்கள், தங்கள் துணைவியரின் தோழமையோடு அறம் சார்ந்த ஒழுக்கத்தின் கனிகளை விரும்புவோர் இந்த வாழ்வுமுறையைத் தங்களுக்கெனக் கொள்கிறார்கள். அதில் அறம், செல்வம் {பொருள்}, இன்பம் ஆகிய அனைத்தையும் அடையலாம். (இவ்வாறே) அது {இல்லறம்} முத்தொகை {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை} வளர்க்கத் தகுந்ததாக இருக்கிறது. வேதங்களை ஓதுவதன் மூலம் அடையப்படும் உயர்ந்த பயனுடன் கூடிய செல்வத்தின் மூலம், அல்லது மறுபிறப்பாள முனிவர்கள் வாழ்வதற்காகப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் மூலம், அல்லது மலைகள் மற்றும் சுரங்கங்களில் விளைவதன் மூலம், அல்லது வேள்விகளில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் நோன்புகள் மற்றும் பிற சடங்குகளில், முடிவில் கொடுக்கப்படும் செல்வங்கள் மற்றும் தெய்வகளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளின் மூலம் ஓர் இல்லறத்தான் குற்றமற்ற செயல்பாடுகளின் மூலம் செல்வத்தை அடைந்து, தன் வாழ்வுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த வாழ்வுமுறையே {இல்லறமே} பிற வாழ்வுமுறைகள் அனைத்திற்குமான வேராகக் கருதப்படுகிறது. ஆசான்களின் வசிப்பிடங்களில் வசித்து, பிச்சையெத்து வாழ்வோரும், நோன்புகள் அல்லது உறுதியேற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளின் படி வாழ்வோரும், இந்த வாழ்வுமுறையில் வாழ்வோரிடமிருந்தே தங்கள் வாழ்வாதாரத்தை அடைய முடியும். அவர்கள் பித்ருக்களுக்கு அளிக்கும் காணிக்கைகள் மற்றும் தெய்வங்களுக்கு அளிக்கும் காணிக்கைகளின் மூலமே அவர்கள் தங்களை முழுமையாக ஆதரித்துக் கொள்ள முடியும்.(10)
மூன்றாவது வாழ்வுமுறையானது காட்டு வாழ்வு {வானப்ரஸ்தம்} என்றழைக்கப்படுகிறது. இந்த வாழ்வுமுறையை நோற்பவர்கள் செல்வத்தையோ, பொருட்களையோ சேர்த்துவைப்பதில்லை[3]. பொதுவாக, பக்திமிக்கவர்களும், நல்லவர்களுமான இம்மனிதர்கள், சிறந்த உணவை உண்டு, வேத கல்வியில் ஈடுபட்டு, பூமியில் உள்ள தீர்த்தங்களிலும், பல்வேறு ஆட்சிப்பகுதிகளிலும் திரிந்து கொண்டிருப்பார்கள். எழுந்து நிற்பது, முன் சென்று வரவேற்பது, நேர்மையுடன் இனிய பேச்சுகளைப் பேசுவது, கொடுப்பவரின் தகுதிக்கேற்ற அளவில் கொடைகள் அளிப்பது, இருக்கைகளை அளிப்பது, சிறந்த வகைப் படுக்கைகளை அளிப்பது, சிறந்த வகை உணவுகளை அளிப்பது ஆகியவை அவர்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய சில வழிமுறைகளாகும்[4].(11) இது குறித்து ஒரு ஸ்லோகம் இருக்கிறது: ஒரு விருந்தினர் நிறைவடையாத எதிர்பார்ப்புடன் ஒருவீட்டில் இருந்து சென்றால், அந்த வீட்டு உரிமையாளனின் தகுதிகளைத் தான் எடுத்துக் கொண்டு, தனது பாவங்களை அவனுக்கு விட்டுச் செல்கிறான் என்று கருதப்படுகிறது.(12)
[3] "உபஷ்காரம் Upashkara என்றால் துறவு என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வானப்ரஸ்தாஸ்ரமத்தி லிருப்பவர்களுக்கும் த்ரவியம் இருப்பதில்லை" என்றிருக்கிறது.[4] 8 முதல் 11-ம் ஸ்லோகங்களும், மற்றும் 16ம் ஸ்லோகமும் மிக நீண்டவையாக இருக்கின்றன. இவ்வாறு அமைவது இங்கே பொருந்துவதாகத் தெரியவில்லை.
மேலும், இல்லறவாழ்வில் வேள்விகள் மூலமும், பிற அறச் சடங்குகளின் மூலமும் தேவர்கள் நிறைவுசெய்யப்படுகிறார்கள்; ஈமச் சடங்குகளின் மூலம் பித்ருக்களையும், (வேத) அறிவை வளர்ப்பதாலும், ஆசான்களின் போதனைகளைக் கேட்பதாலும், சாத்திரங்களை நினைவுகூர்வதாலும் முனிவர்களையும், இறுதியாகப் பிள்ளைகளைப் பெறுவதால் படைப்பாளனையும் நிறைவு செய்கிறார்கள்[5].(13) இக்காரியத்தில் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கின்றன: இந்த வாழ்வுமுறையில் இருப்பவன், அனைத்து உயிரினங்களிடமும், பற்று நிறைந்த, காதுக்கு இனிய வார்த்தைகளைப் பேச வேண்டும். துன்பத்தை அளிப்பதும், அவமதிப்பதும், கடும் வார்த்தைகளைச் சொல்வதும் நிந்திக்கத்தக்கனவாகும்.(14) அவமதிப்பு, ஆணவம், வஞ்சனை ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். தீங்கிழையாமை {அஹிம்சை}, வாய்மை, கோபமின்மை ஆகியன (நான்கு) வாழ்வுமுறைகளில் வாழ்பவர்களுக்கும் தவங்களுக்குரிய தகுதியை உண்டாக்கும்.(15)
[5] "பிள்ளைகளைப் பெறுவதால் ஒருவன் பித்ருக்களை நிறைவு செய்கிறான், அல்லது தன் மூதாதையருக்குத் தான் பட்ட கடனைத் திரும்பச் செலுத்துகிறான் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இங்கே பிருகு, அச்செயல் படைப்பாளனுக்கு நிறைவைத் தருகிறது என்று சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மலர்மாலைகள், ஆபரணங்கள், ஆடைகள், நறுமண எண்ணெய்கள், களிம்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது, கருவி மற்றும் குரலிசை மற்றும் ஆடல்களின் மூலம் அடையப்படும் இன்பம்; கண்ணுக்கினிய காட்சிகளைக் காண்பது முக்கிய வகை உணவுப் பொருட்களைச் சேர்ந்த பல்வேறு வகைகளைச் சார்ந்தவையும், விழுங்கத்தக்கவை, பருகத்தக்கவை, உறிஞ்சத்தக்கவை ஆகிய உணவுகளையும் பானங்களையும் அனுபவிப்பது, விளையாட்டுகளின் மூலம் இன்பமடைவது; அனைத்து வகைக் கேளிக்கைகள் மற்றும் இன்ப நிகழ்ச்சிகளும் இல்லறவாழ்வில் அனுமதிக்கப்படுகின்றன.(16)
(அறம், பொருள், இன்பம் என்ற) முத்தொகையை அடைய முனையும் வாழ்வுமுறையை நோற்கும் மனிதன், நல்லுணர்வு {சத்வ}, ஆசை {ரஜோ}, இருள் {தமோ} ஆகிய மூன்று பண்புகளின் {குணங்களின்} பெருங்கதியை[6] அடைந்து, இம்மையில் பெரும் மகிழ்ச்சியை அடைந்து இறுதியில் அறவோர் மற்றும் நல்லோருக்காக ஒதுக்கப்படும் கதியை அடைகிறான்.(17) தன் வாழ்வுமுறைக்கு ஏற்ற கடமைகளைச் செய்வதன் மூலம், வயல் பிளவுகளில் விழுந்து கிடக்கும் தானியங்களைத் திரட்டி உண்பவனும், புலன் இன்பத்தைக் கைவிடுபவனும், செயல்பாட்டில் பற்றில்லாதவனுமாக இருக்கும் இல்லறத்தான், சொர்க்கத்தை அடைவதைக் கடினமானதாகக் காண மாட்டான்" என்றார் {பிருகு}[7].(18)
[6] "இந்தப் பண்புகளின் எல்லை அல்லது கதி என்பது மோக்ஷம் அல்லது விடுதலையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[7] இநதப் பகுதியும் முன்பு பிருகு உரைத்ததைப் போலத் தெளிவாக இல்லை.
சாந்திபர்வம் பகுதி – 191ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |