Here and hereafter! | Shanti-Parva-Section-192 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 19)
பதிவின் சுருக்கம் : வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாச ஆசிரமங்களுக்குரிய குறியீடுகளையும், இமயத்திற்கு வடக்கே சொர்க்கத்திற்கு இணையான ஒரு பகுதியைப் பற்றிய குறிப்பையும் பரத்வாஜருக்குச் சொன்ன பிருகு...
Here and hereafter! | Shanti-Parva-Section-192 | Mahabharata In Tamil |
பரத்வாஜர் {பிருகுவிடம்}, "காட்டுத் துறவிகள் {வானப்ரஸ்தர்கள்}, அறமீட்ட முனைந்து புனிதநீர்நிலைகளுக்கும், ஆறுகளுக்கும், நீரோடைகளுக்கும் பயணம் செய்து, மான்களும், எருமைகளும், பன்றிகளும், புலிகளும், காட்டு யானைகளும் நிறைந்திருக்கும் காடுகளில் தனியாகத் தவம் செய்வார்கள். அவர்கள் சமூகத்தில் வாழும் மக்கள் சுவைக்கும் அனைத்து வகை ஆடைகள், உணவுகள் ஆகியவற்றைக் கைவிடுவார்கள். அவர்கள் பல்வேறு வகைகளிலான காட்டு மூலிகைகள் {கீரைகள்}, கனிகள், கிழங்குகள், இலைகள் ஆகியவற்றைக் குறைவான அளவில் உண்டு வாழ்வார்கள். வெறுந்தரையே அவர்களது இருக்கையாக இருக்கும். அவர்கள் வெற்று பூமியிலோ, பாறைகளிலோ, கூழாங்கற்களிலோ, சரளைக் கற்களிலோ, மணலிலோ, சாம்பலிலோ படுத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் அங்கங்களைப் புற்களாலும், விலங்கு தோல்களாலும், மரவுரிகளாலும் மறைத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்கள் தலைமுடிகளையும், தாடிகளையும் சிரைப்பதோ, தங்கள் நகங்களைக் கழிப்பதோ கிடையாது. அவர்கள் தங்கள் தூய்மைச் சடங்குகளை முறையான இடைவெளிகளில் செய்வார்கள்.
அவர்கள் முறையான நேரங்களில் தவறாமல் ஆகுதிகளைத் தரையிலும், புனித நெருப்பிலும் ஊற்றுகிறார்கள். (தங்கள் ஹோமங்களுக்குத் தேவையான) புனித விறகு, (வேள்விக்கும், வழிபாட்டுக்கும் தேவையான) புனித புற்கள், மலர்கள் ஆகியவற்றைச் சேகரிக்காத வரையிலும், (தங்கள் வேள்விப் பீடங்களை) பெருக்கி, தூய்மைப்படுத்தாத வரையிலும் அவர்கள் ஓய்வெடுக்கமாட்டார்கள். தங்கள் மேனியெங்கும் புண்ணானாலும், தங்கள் சதை, குருதி, தோல் மற்றும் எலும்புகள் மெலிந்தாலும், குளிர், வெப்பம், மழை, காற்று ஆகியவற்றைக் கிஞ்சிற்றும் கருதிப்பாராமல், பல்வேறு வகைச் சடங்குகள், தங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் நோன்புகள் மற்றும் செயல்பாடுகளைச் செய்வார்கள்[1]. பெரும் பொறுமையும், மனோவுறுதியும் கொண்ட அவர்கள், நல்லுணர்வின் பண்பையே {சத்வ குணத்தையே} எப்போதும் பயில்வார்கள்.(1) {இந்த வானப்ரஸ்தாச்ரமத்தைப் பற்றி ஒரு ஸ்லோகமிருக்கிறது. அதன் பொருளாவது} எந்த மனிதன், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளைக் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன் செய்கிறானோ, அவன் நெருப்பைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்து, அடைவதற்கரிதான இன்ப உலகங்களை அடைகிறான்.(2)
[1] "நியமம் Niyama என்பது சடங்காகவும்; உபயோகம் upayoga என்பது உணவாகவும், சரியாம் charyyaa என்பது புனித நீர் நிலைகளுக்குப் பயணிப்பதையும், விஹிதம் vihita என்பது விதானம் vidhaana என்பதாகவும் நீலகண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "குளிர், வெப்பம் மழை காற்றுகளால் நன்றாகக் காய்ந்தவைகளும், வெடித்தவைகளுமான எல்லா அங்கங்களின் தோல்களையுமுடையவர்களும், பலவிதமான நியமங்களாலும், யோகாப்யாஸங்களாலும் கர்மானுஷ்டானங்களாலும் குறைந்து போனவைகளும் நன்றாகக் காய்ந்தவைகளுமான மாம்ஸம், உதிரம், தோல், எலும்பு இவைகளை உடையவர்களும், தைர்யத்தைப் பெரிதாகக் கொண்டவர்களுமாகி ஸத்வமிருத்தலால் சரீரங்களை வஹித்துக் கொண்டுமிருப்பார்கள்" என்றிருக்கிறது.
நான் இப்போது பரிவ்ராஜகர்கள் {துறவிகள் / சந்நியாசிகள்} என்றழைக்கப்படுபவர்களின் ஒழுக்கத்தைக் குறித்துச் சொல்லப் போகிறேன். அது பின்வருமாறு: அவர்கள், புனித நெருப்பு, செல்வம், மனைவி, பிள்ளைகள், ஆடைகள், இருக்கைகள், படுக்கைகள் போன்ற இன்ப நுகர் பொருட்களின் பற்றில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, பற்றின் கட்டுகளை அறுத்துக் கொண்டு, மண்ணாங்கட்டியையோ, பாறையையோ, தங்கத்தையோ சம கண்களுடன் கருதித் திரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் முத்தொகையை அடையவதிலோ, அனுபவிப்பதிலோ தங்கள் இதயங்களை ஒருபோதும் நிலைக்கச் செய்யக் கூடாது. எதிரிகள், நண்பர்கள், நடுநிலையாளர்கள், அந்நியர்கள் ஆகியோரைச் சமக் கண்களுடன் பார்க்க வேண்டும். அசையாத பொருட்கள் {மரங்கள்} அல்லது பாலூட்டிகள், முட்டையிடும் இனங்கள், கழிவுப்பொருட்களில் பிறப்பவை ஆகிய உயிரினங்கள், அல்லது காய்கறிகள் என்று அழைக்கப்படுபவற்றுக்கு, எண்ணம், சொல், அல்லது செயலில் ஒருபோதும் தீங்கிழைக்கமாட்டார்கள்[2].
[2] கும்பகோணம் பதிப்பில், "ஸ்தாவரங்களும், ஜங்கமங்களும், ஜராயுஜம் அண்டஜம் ஸ்வேதஜம் உத்பிஜ்ஜங்களுமான பிராணிகளுக்கு வாக்காலும் மனத்தாலும், கர்மத்தாலும் த்ரோஹஞ்செய்யாதவர்களும்" என்றிருக்கிறது.
அவர்களுக்கு வீடுகள் கிடையாது. அவர்கள் குன்றுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும், மரநிழல்களிலும், தெய்வங்களில் கோவில்களில் திரிந்து கொண்டிருப்பார்கள். வசிப்பதற்காக அவர்கள் நகரங்களுக்கோ, கிராமங்களுக்கோ செல்லலாம். எனினும், ஒரு நகரத்தில் அவர்கள் ஐந்து இரவுகளுக்கு மேல் வாழக்கூடாது. அதே போல ஒரு கிராமத்தில் அவர்கள் ஓரிரவுக்கு மேல் வசிக்கக்கூடாது. ஒரு நகரத்திற்குள்ளோ, கிராமத்திற்குள்ளோ நுழையும் அவர்கள், தயாளச் செயல்களைச் செய்யும் பிராமணர்களின் வசிப்பிடங்களுக்கு மட்டுமே சென்று தங்கள் வாழ்வைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தாங்கள் சுமந்து செல்லும் (மரக்) கிண்ணத்தில் விழுவதைத் தான் பிச்சையாக ஏற்க வேண்டுமேயன்றி, தவிர ஒருபோதும் பிச்சையேதும் கேட்கக்கூடாது. காமம், கோபம், செருக்கு, பேராசை, மாயை, கஞ்சத்தனம், வஞ்சனை, அவதூறு, பகட்டு, உயிரினங்களுக்குத் தீங்கிழைத்தல் ஆகியவற்றில் இருந்து அவர்க்ள விடுபட வேண்டும்[3].(3) இதுகுறித்துச் சில ஸ்லோகங்கள் இருக்கின்றன: எந்த மனிதன் தன் எண்ணங்களை வெளியிடாமை என்ற நோன்பை நோற்று, எந்த உயிரினத்தையும் அச்சுறுத்தாமல் உலவி வருகிறானோ, அவனுக்கு எந்த உயிரினத்திடம் இருந்து அச்சமேதும் எழாது.(4) (வெளிப்புற நெருப்பைக் கிண்டாமல்), தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் மீது தன் வாய்வழியாக ஆகுதிகளை ஊற்றி தன் உடலுக்குள் உள்ள நெருப்பின் துணையுடன் அக்னிஹோத்ரம் செய்யும் கல்விமான், ஈகைசார்ந்த வாழ்வின் மூலம் அடையப்படும் இத்தகைய ஆகுதிகளை அந்நெருப்பில் ஊட்டுவதன் விளைவாக எண்ணற்ற இன்ப உலகங்களை அடைகிறான்.(5) மேற்சொன்னது போல விடுதலையையே {முக்தியையே} முடிவாகக் கொண்ட வாழ்வு முறையை நோற்கும் மறுபிறப்பாளன், தூய இதயத்துடனும், மனவுறுதியில் இருந்து விடுபட்ட அறிவுடனும், எந்தச் சுடர்மிக்க எரிபொருளாலும் ஊட்டப்படாத அமைதியான ஒளிக்கீற்றைப் போலப் பிரம்மத்தை அடைகிறான்" என்றார் {பிருகு}.(6)
[3] 1 மற்றும் 3ம் ஸ்லோகங்கள் மிக நெடியவையாக இருக்கின்றன.
பரத்வாஜர் {பிருகுவிடம்}, "(நாம் வசிக்கும்) இந்த உலகத்துக்கு அப்பால், ஓர் உலகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறோமேயன்றி ஒருபோதும் பார்த்ததில்லை. அது குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன். அஃதை எனக்கு விளக்குவதே உமக்குத் தகும்" என்று கேட்டார்.(7)
பிருகு {பரத்வாஜரிடம்}, "வடக்கு நோக்கிச் சென்றால், இமயத்திற்கு மறுபக்கத்தில் புனிதமானதும், அருள் நிறைந்ததும், மிகவும் விரும்பத்தக்கதுமான ஒரு பகுதி இருக்கிறது. அது வேறு உலகம் என்றழைக்கப்படுகிறது[4].(8) அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், செயல்களில் அறம் மற்றும் பக்தி சார்ந்தவர்களாக, தூய இதயங்களைக் கொண்டவர்களாக, பேராசை மற்றும் தீர்மானப்பிழைகளில் இருந்து விடுபட்டவர்களாக, எவ்வகைத் துன்பங்களுக்கும் ஆளாதாவர்களாக இருக்கிறார்கள்.(9) இத்தகைய பண்புகளைக் கொண்ட அந்தப் பகுதி உண்மையில் சொர்க்கத்திற்கு இணையானதாகவே இருக்கிறது. அங்கே மரணம் உரிய காலத்தில் மட்டுமே நேர்கிறது. அங்கே வசிப்பவர்களை நோய்கள் ஒருபோதும் தீண்டுவதில்லை[5].(10) பிறன் மனைவியர் மீது ஒருவனும் எந்த ஆசையும் வளர்த்துக் கொள்வதில்லை. அனைவரும் தங்கள் தங்கள் மனைவியிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். இம்மக்கள் ஒருவரையொருவர் துன்புறுத்தாமலும், கொல்லாமலும், பிறரின் பொருளில் ஆசை கொள்ளாமலும் இருக்கின்றனர். அங்கே எந்தப் பாவமும் நேர்வதில்லை, எந்த ஐயங்களும் எழுவதில்லை[6].(11) அங்கே (அறச்) செயல்கள் அனைத்தின் கனிகளும் புலப்படுவதாக இருக்கின்றன. அங்கே சிலர், இருக்கைகளிலும், சிறந்த வகைப் பானங்கள் மற்றும் தின்பண்டங்களிலும் இன்பங்கொள்பவர்களாக, அரண்மனைகள் மற்றும் மாளிகைகளுக்குள் வாழ்கிறார்கள்.(12) சிலர், தங்க ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொண்டு, சுற்றிலும் இன்பத்திற்குரிய அனைத்துப் பொருட்கள் சூழ இருக்கிறார்கள். மேலும், சிலர் தங்கள் உடலையும் ஆன்மாவையும் தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும் மிகச் சொற்பமாகவே உண்கிறார்கள்.(13) அங்கே சிலர், பெரும் உழைப்புடன் தங்கள் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்ள முனைகிறார்கள்[7].
[4] "கேள்வியில் பரத்வாஜர் பயன்படுத்திய சொற்கள் மறுமையை விசாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டவை என்று பொருள்கொள்ள முடியும். பிருகுவும் தன் பதிலில் பரலோகம் Paro-lokah என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். எனவே, இங்கே குறிப்பிடப்படும் இமயத்தை உரையாசிரியர் உருவகமாக விளக்குகிறார். எனினும் பிருகுவின் மொத்த பதிலும், பூமியில் உள்ள ஒரு பகுதியைப் பேசுகிறதேயன்றி மரணத்திற்குப் பிறகு அடையப்படும் புலப்படாத உலகைக் குறித்துப் பேசவில்லை என்பதை அந்தத் தவசியே ஐயத்திற்கு இடமேதும் இல்லாத வகையில் சொல்லியிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாக்குணங்களுடன் கூடியதும், புண்ணியமுமான இமய மலையின் உத்தரபாகத்தில் புண்ணியமும், க்ஷேமமுள்ளதும், விரும்பத்தக்கதுமான அந்த லோகம் பரலோகம் என்று சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.[5] "மிருத்யம் mritya என்பதை அமிருத்யம் amritya என்று நீலகண்டர் எடுத்துக் கொள்கிறார். {அதாவது இறவாதவர்களாக இருக்கிறார்கள் என்று பொருள் கொண்டிருப்பார் போலும், அதைப் பின்வரும் கும்பகோணம் பதிப்பின் உரையில் காணலாம்}. இஃது உருவகப் பொருளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வலிய திருத்தும் செயலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்வுலகத்தில் மிருத்யு {மரணம்} உண்டாகிறதில்லை; வியாதிகளும் (மனிதனைத்) தொடுகிறதில்லை" என்றிருக்கிறது.[6] "அங்கே அனைத்து ஞானமும் நிச்சயம் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "அதாவது யோகம் பயில்கிறார்கள். வங்கப் பதிப்பில் தாரணாம் dhaaranaam என்றிருக்கிறது. உரையாசிரியர் அனைத்து சுலோகங்களையும் உருவகங்களாகவே விளக்கிச் செல்கிறார். குறிப்பிட்ட அளவுக்கு அவர் புத்திக்கூர்மை அவரிடம் வெளிப்படுகிறது. அவர் ஸ்ருதிகளில் இருந்தும் அதற்கு ஆதரவானவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இங்கே (நாம் வசிக்கும் இந்தப் பகுதியில்) சில மனிதர்கள் அறத்திற்கும், சிலர் வஞ்சகத்துக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். சிலர் இன்பத்துடனும், சிலர் துன்பத்துடனும் இருக்கிறார்கள். சிலர் ஏழைகளாகவும், சிலர் செல்வந்தர்களாகவும் இருக்கிறார்கள்.(14) இங்கே உழைப்பு, அச்சம், மாயை, வலிமிக்கப் பசி ஆகியன தோன்றுகின்றன. இங்கே செல்வத்திற்கான பேராசையும், கல்விமான்களையே மலைக்கச் செய்யும் ஆசையும் காணப்படுகிறது.(15) இங்கே நற்செயல்கள், அல்லது பாவச்செயல்கள் செய்வோரால் அளிக்கப்படும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருவகையாகப் பிரிந்திருக்கும் இந்தக் கருத்துகள் அனைத்தையும் அறிந்த ஞானி, ஒருபோதும் பாவத்தால் கறைபடியமாட்டான்.(16) ஏமாற்றத்துடன் கூடிய வஞ்சகம், களவு, அவதூறு, வன்மம், ஒடுக்குதல், தீங்கிழைத்தல், நம்பிக்கைக்குப்புறம்பாக நடத்தல், பொய்மை,(17) ஆகியவை தவங்களைச் செய்வோரின் தவத்தகுதிகளை {புண்ணியங்களைக்} கலைக்கின்றன. மறுபுறம் கல்விமானானவன், அவற்றைத் தவிர்த்து, தன் தவத்தகுதிகளை அதிகரித்துக் கொள்கிறான்.(18) இங்கே அறம் மற்றும் மறச் செயல்கள் குறித்த பல்வேறு சிந்தனைகள் இருக்கின்றன. நாம் வசிக்கும் இந்தப் பகுதி செயற்களமாகும். இங்கே நன்மையும், தீமையும் செய்யும் ஒருவன், தன் நற்செயல்களுக்காக நன்மையையும், தீச்செயல்களுக்காகத் தீமையையும் அடைகிறான்[8].(19)
[8] "இந்த ஸ்லோகமாவது இம்மை மற்றும் மறுமை குறித்து வெளிப்படையாகக் குறிப்பிடுவதால், அதற்கு முந்தைய மொத்த பத்தியும் மறுமையையே குறித்தது. இமயத்திற்கு வடக்கே உள்ள எந்தத் தொன்மகாலப் பகுதியையும் குறிக்கவில்லை என்பதை ஆதரிக்கக்கூடியதாக இருக்கிறது. சில மேற்கத்திய அறிஞர்கள், வரிக்கு வரியான மொழிபெயர்ப்பே இங்கே தேவைப்படுகிறது என நினைக்கிறார்கள். எனினும், இத்தகைய வாக்கியங்களை அவ்வாறு அமைக்க இயலாது. இந்த ஸ்லோகங்களை இயல்பாக ஏற்பதா, உருவகப் பொருளில் ஏற்பதா என்பதை மொழிபெயர்ப்பாளரே தேர்ந்தெடுக்க முடியும். இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தால் அவனால் வரிக்கு வரியான மொழிபெயர்ப்பை நிச்சயம் கொடுக்க முடியாது. இரண்டு நாவுகளைக் கொண்ட பேரறிஞர்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பழங்காலத்தில் இங்கே, முனிவர்களுடன் கூடிய தேவர்கள் அனைவரும், படைப்பாளனும் {பிரம்மனும்} உரிய தவங்களைச் செய்து தூய்மையடைந்து பிரம்மத்தை அடைந்தனர்[9].(20) பூமியின் வட பகுதியானது மிக மங்கலமானதாகவும், புனிதமானதாகவும் இருக்கிறது. அறச்செயல்களைச் செய்பவர்களே (நாம் வசிக்கும்) இந்தப் பகுதியை உடையவர்களாக இருக்கிறார்கள், அல்லது யோகத்திற்கு மதிப்பளிப்பவர்களே இந்தப் பகுதியில் பிறக்கிறார்கள். (பல்வேறு மனநிலைகளைக் கொண்ட) பிறர் நடுத்தர இனங்களில் பிறக்கிறார்கள். மேலும் சிலர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலம் முடிந்ததும், இந்தப் பூமியிலேயே தொலைந்து போகிறார்கள்[10].(21,22) ஒருவொரையொருவர் உண்பதில் ஈடுபட்டு, பேராசை மற்றும் மாயையால் கறைபடிந்த இம்மனிதர்கள், (இறந்த பிறகு) வட பகுதிக்குச் செல்ல முடியாமல் இந்தப் பகுதிக்கே திரும்பி வருகிறார்கள்.(23) ஆசான்களின் போதனைகளை மதிப்புடன் கேட்பவர்களும், பிரம்மச்சரியத்தை நோற்பவர்களும், நோன்புகளைக் கொண்டவர்களுமான ஞானிகள், மனித வர்க்கங்கள் அனைத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள கதிகளை அறிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(24) பிரம்மனால் விதிக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகளை நான் இப்போது சுருக்கமாக உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், இவ்வுலகில் எது அறம், எது மறம் என்பதை அறிந்த ஒருவனே நுண்ணறிவு கொண்டவனாகச் சொல்லப்படுகிறான்" என்றார் {பிருகு}".(25)
[9] "பிரம்மன் தவமிருந்த இடம் ராஜபுத்தானாவில் {ராஜஸ்தானில்} உள்ள புஷ்கரை என்று அனுமானிக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "முன்காலத்தில் ப்ரம்மதேவரும் மற்ற தேவர்களும் அப்படியே ரிஷிக்கூட்டங்களும் இவ்வுலகத்தில் செய்த யாகத்தாலும், தவத்தாலும் பரிசுத்தி பெற்று ப்ரம்மலோகத்தை அடைந்திருக்கிறார்கள்" என்றிருக்கிறது.[10] கும்பகோணம் பதிப்பில், "பூமியின் வடபாகமானது எல்லாவற்றையுங்காட்டிலும் மிகப் புண்யமாயும் சுபமாயுமிருக்கிறது. இவ்வுலகத்தில் புண்யத்தைச் செய்த மனிதர்கள் அவ்விடத்தில் பிறப்படைகிறார்கள். வேறு சிலர் கெட்ட கர்மங்களைச் செய்து பசுப் பறவை முதலிய பிறவிகளில் பிறக்கிறார்கள். அதுபோலப் பூதலத்தில் வேறு சிலர் லோபமோகங்களுடையவர்களும் ஒருவரையொருவர் விழுங்குவதில் ஆசையுள்ளவர்களுமாய் ஆயுள் முடிந்து நாசமடைகிறார்கள்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறே பிருகு, பெரும் சக்தி கொண்ட பரத்வாஜரிடம் பேசினார். உயரறம் சார்ந்த ஆன்மாவுடன் கூடிய பின்னவர் {பரத்வாஜர்}, ஆச்சரியத்தால் நிறைந்து, அந்தப் பெரும் முனிவரை {பிருகுவை} மதிப்புடன் வழிபட்டார்.(26) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே அண்டத்தின் தோற்றம் குறித்து உனக்கு விரிவாக உரைக்கப்பட்டது. ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, இதன் பிறகு நீ என்ன கேட்க விரும்புகிறாய்?" {என்று கேட்டார் பீஷ்மர்}.(27)
சாந்திபர்வம் பகுதி – 192ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |