Ordinances about conduct! | Shanti-Parva-Section-193 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 20)
பதிவின் சுருக்கம் : ஒழுக்கம் குறித்து உரையாடுமறு பீஷ்மரைக் கேட்ட யுதிஷ்டிரன்; நல்லோர் மற்றும் தீயோரின் பண்பியல்புகளையும், ஒழுக்க விதிகளையும் சொன்ன பீஷ்மர்; மனிதர்கள் அனைவருக்குமுரிய கடமைகளைக் குறித்துச் சொன்னது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, நீர் அனைத்தையும் அறிந்திருக்கிறீர் என நான் நினைக்கிறேன். ஓ! கடமைகளை அறிந்தவரே, ஓ! பாவமற்றவரே, ஒழுக்கம் குறித்த விதிகளைப் பற்றி நீர் என்னுடன் உரையாடுவதைக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தீய செயல்களையும், தீய அறிவையும், அதீத மூர்க்கத்தையும் கொண்ட தீய ஒழுக்கத்தினர், தீயவர்கள் அல்லது கொடியவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எனினும், நல்லோர் என்றழைக்கப்படுபவர்கள், தூய ஒழுக்கத்தாலும், நடைமுறைகளாலும் அடையாளம் காணப்படுகிறார்கள்.(2) நெடுஞ்சாலைகளிலோ, மாட்டுக் கொட்டகைகளிலோ, நெல் விளையும் வயல்களிலோ இயற்கையின் அழைப்புகளுக்கு ஒருபோதும் பதில் கூறாதவன் {மலஜலங்கழிக்காதவன்} நல்ல மனிதனாவான்[1].(3) ஒருவன் தேவையான செயல்களைச் செய்த பிறகு, ஆற்று நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்து, நீர்க்காணிக்கையின் மூலம் தேவர்களை நிறைவு செய்ய வேண்டும். இது மனிதர்கள் அனைவரின் கடமையாகச் சொல்லப்படுகிறது.(4) சூரியன் எப்போதும் வழிபடப்பட வேண்டும். சூரியன் உதித்த பிறகு ஒருவன் உறங்கக்கூடாது. (சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள) காலை மற்றும் மாலை வேண்டுதல்களை முறையே கிழக்கு, மற்றும் மேற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.(5) ஒருவன், ஐந்து அங்கங்களைக் கழுவிய பிறகு[2], கிழக்கு நோக்கி அமர்ந்து அமைதியாக உண்ண வேண்டும். ஒருவன் உண்ண வேண்டிய உணவை ஒருபோதும் இழித்துரைக்கக்கூடாது. ஒருவன் நல்ல சுவைமிக்க உணவை உண்ண வேண்டும்.(6) உண்ட பிறகு அவன் தன் கைகளைக் கழுவிய பிறகே எழ வேண்டும்[3]. ஒருவன் ஈரக்காலுடன் ஒருபோதும் இரவு உறங்கச் செல்லக்கூடாது.
[1] கும்பகோணம் பதிப்பில், "எந்த மனிதர்கள் ராஜமார்க்கத்திலும், பசுக்களின் நடுவிலும், தான்யத்தின் நடுவிலும், சிவாலயத்திலும், அக்னிசாலையிலும், ஜலக்கரையிலும், மலத்தையும், மூத்திரத்தையும் செய்யாமலிருக்கிறார்களோ அவர்கள் நல்லவர்கள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.[2] "இரு கால்கள், இரு கரங்கள் மற்றும் முகம் ஆகியவையே கழுவப்பட வேண்டிய ஐந்து அங்கங்கள்" எனக் கங்குலி விளக்குகிறார்.[3] "இஃது உணவு உண்ட பிறகு கை கழுவுவதற்கான பொதுவான வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்; அல்லது ஒருவன் தனது வலக்கரத்தில் சிறிதளவு நீரை எடுத்து, உதடுகள் வரை உயர்த்தி, சிறு மந்திரங்களை மீண்டும் மீண்டும் சொல்லி கீழே கொட்டும் செயலான கண்டுசம் Gandusha என்பதையும் குறிக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மிக்க ருசியுள்ளனவென்று புஜிக்க வேண்டும். ஈரமான கையுள்ளவனாகி எழுந்திருக்க வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "வேறுபாடம்: போஜனமுடிவில் ஆபோசனம் செய்து கொள்ள வேண்டும் என்பது கருத்து" என்றுமிருக்கிறது.
தெய்வீக முனிவரான நாரதர் நல்லொழுக்கத்தின் குறியீடுகள் இவையே என்று சொல்லியிருக்கிறார்.(7) ஒருவன் தினமும், ஒரு புனிதத்தலத்தையும், ஒரு காளையையும், ஒரு புனித சிலையையும் {தேவதையையும்}, பசுக் கொட்டகை, நாற் சந்தி சாலை, ஒரு பக்திமிக்கப் பிராமணன் மற்றும் ஒரு புனிதமான மரத்தை வலம் வர வேண்டும்[4].(8) உணவுக் காரியத்தில் ஒருவன் தன் விருந்தினர்கள், பணியாட்கள் மற்றும் சொந்தக்காரர்களுக்கிடையில் எந்த வேறுபாட்டையும் காணக்கூடாது. (இவ்வகையில்) பணியாட்களைச் சமமாக நடத்துவது மெச்சப்பட வேண்டும்.(9) (ஒரு நாளைக்கு இரண்டு வேளை) காலையும், மாலையும் உண்ண வேண்டும் என்பது தேவர்கள் விதித்ததாகும். இடைப்பட்ட எக்காலத்திலும் ஒருவன் (மீண்டுமொருமுறை) உண்ண வேண்டும் என்று விதிக்கப்படவில்லை. இவ்விதியின் படி உண்பவன் உண்ணாநோன்பிருந்த தகுதியை அடைகிறான்[5].(10)
[4] கும்பகோணம் பதிப்பில், "அக்னியையும், காளையையும், தேவதையையும், பசுவிருக்குமிடத்தையும், நாற்சந்தியையும், தர்மிஷ்டனான ப்ராம்மணையும் எப்பொழுதும் ப்ரதக்ஷிண செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.[5] கும்பகோணம் பதிப்பில், "மனிதர்களுக்குக் காலையிலும், மாலையிலும் போஜனம் வேதத்தால் விதிக்கப்பட்டிருக்கிறது. இடையில் போஜனம் விதிக்கப்பட்டதாகக் காணோம். அந்த விதிப்படி இருப்பவன் உபவாஸத்தின் பயனுள்ளவனாவான்" என்றிருக்கிறது.
ஹோமத்திற்காக விதிப்பட்ட நேரங்களில் ஒருவன் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்ற வேண்டும். அடுத்தவர் மனைவியரின் தோழமையை நாடாதவனும், உரிய பருவகாலத்தில் தன் மனைவியை நாடுபவனுமான ஞானி பிரம்மச்சரியத்தின் தகுதியை அடைகிறான்.(11) பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியவை அமுதம் போன்றவையாகும். அவை, வாழ்வாதாரமாகத் தாயின் மார்பு வழங்கும் பாலைப் போன்றவையாகும். அவ்வாறு எஞ்சியவற்றை உயர்ந்த மதிப்புள்ளதாகக் மக்கள் கருதுகிறார்கள். நல்லோர் அவற்றை உண்பதால் பிரம்மத்தை அடைகிறார்கள்[6].(12) (வேள்விப்பீடங்களை அமைப்பதற்காக) களிமண்ணைப் பிசைபவன், (வேள்வி எரிபொருளுக்காக) புற்களை வெட்டுபவன், (புனிதப்படுத்தப்பட்ட இறைச்சியை) உண்பதற்கு (எந்த வகை ஆயுதத்தையும் பயன்படுத்தாமல்) தன் நகங்களை மட்டுமே பயன்படுத்துபவன், பிராமணர்கள் உண்டவற்றில் எஞ்சியதையே எப்போதும் உண்பவன், வெகுமதியில் உள்ள விருப்பத்தால் செயல்படுபவன் ஆகியோர் இவ்வுலகில் நீண்ட நாள் வாழ மாட்டார்கள்[7].(13) (எந்த நோன்பிற்காகவும்) இறைச்சியை விலக்கியவன், இறைச்சியானது யஜுர்வேத மந்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டதாகவே இருந்தாலும் அஃதை உண்ணக்கூடாது. (எந்த விலங்கின்) முதுகுத்தண்டில் உள்ள இறைச்சியையும் ஒருவன் தவிர்க்க வேண்டும், வேள்விகளில் கொல்லப்படாத விலங்குகளின் இறைச்சியையும் தவிர்க்க வேண்டும்.(14) ஒருவன் தன் சொந்த இடத்திலிருந்தாலும், அந்நியரின் நிலத்தில் இருந்தாலும் அவனுடைய விருந்தாளியை ஒருபோதும் பட்டினியிருக்க விடக்கூடாது. பிச்சைகளையும், மாற்றுச் செயல்களின் மூலமும் பிற கனிகளை அடையும் ஒருவன் அவற்றைப் பெரியோர்களுக்கு அளிக்க வேண்டும்.(15)
[6] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணர்கள் உண்டு மிச்சமான அன்னமானது தாயின் மனம் போலவும், அமிருதம் போலவும் (ப்ரம்மாவினால்) செய்யப்பட்டிருக்கிறது. அந்த அன்னத்தை எந்த ஜனங்கள் அன்புடன் அடைகிறார்களோ அந்த ஸாதுக்கள் ஸத்யமான பிரம்மத்தை அடைகிறார்கள்.[7] "இந்த ஸ்லோகத்தின் பொருளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. நீலகண்டர் இரண்டு வகை விளக்கங்களை அளிக்கிறார். மேலுள்ள பதிப்பு தற்போதைக்கான ஆய்வாகவே தரபட்டுள்ளது. அத்தகைய மனிதர்கள் பிரம்மம் என்ற மகாதாயத்தை அடைய முடியாத இத்தகைய மனிதர்கள் நீண்ட நாள் வாழ மாட்டார்கள் என்று அறிவிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மண்கட்டிகளை உடைக்கிறவனும், புற்களைக் கிள்ளுகிறவனும், நகத்தைக் கடிக்கிறவனும் எப்பொழுதும் எச்சிலுள்ளவனும், பேராசை கொண்டவனுமாயிருக்கிறானோ அவன் இவ்வுலகில் நீண்ட ஆயுளை அடையமாட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்த வரிகளே இல்லை. கும்பகோணம் பதிப்பின் வரிகளே சரியானவையாக இருக்க வேண்டும்.
ஒருவன் பெரியோர்களுக்கு இருக்கைகளை அளித்து அவர்களை மதிப்புடன் வணங்க வேண்டும். அவன் பெரியோர்களை வணங்குவதன் மூலம் நீண்ட வாழ்நாளையும், புகழையும், செழிப்பையும் அடைகிறான்.(16) உதிக்கும் கணத்தில் சூரியனை ஒருவன் பார்க்கக்கூடாது, அதே போலவே பிறன் மனைவியான ஒரு பெண்ணின் நிர்வாணத்திலும் தன் பார்வையைச் செலுத்தக்கூடாது. (உரிய பருவ காலத்தில்) தன் மனைவியுடனான கலவி பாவமாகாது, ஆனால் அஃது எப்போதும் தனிமையிலேயே நடைபெற வேண்டும்.(17) புனிதத் தலங்கள் மற்றும் தீர்த்தங்கள் அனைத்திற்கும் இதயமாக இருப்பவர் ஆசானே. தூய்மையான மற்றும் தூய்மைப்படுத்தும் பொருட்கள் அனைத்தின் இதயமும் நெருப்பே {அக்னியே}. பசுவாலில் உள்ள முடியைத் தீண்டுவதுடன் சேர்த்து, நல்லோரும், பக்திமான்களும் செய்யும் செயல்கள் அனைத்தும் நல்லவையும், மெச்சப்படுபவையுமாகவே இருக்கும்.(18) ஒருவன் மற்றவனைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், மென்மையான நலன்விசாரிப்புகளை {ஸுகப்ரஸனங்களைச்} செய்ய வேண்டும். ஒவ்வொரு காலையிலும், மாலையிலும் பிராமணர்களை வணங்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.(19) தேவர்களின் கோவில்களிலும், பசுக்களுக்கு மத்தியிலும், பிராமணர்களால் விதிக்கப்பட்ட அறச்சடங்குகளைச் செய்யும்போதும், வேதங்களைப் படிக்கும்போதும், உண்ணும் போதும், வலக்கரமே உயர்த்தப்பட வேண்டும்.(20)
உரிய சடங்குகளின் படி காலையிலும் மாலையிலும் பிராமணர்களை வழிபடுவது பெரும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும். இத்தகைய வழிபாட்டின் விளைவால், வணிகர்களின் கையிருப்பு பொருட்களும், உழவர்களின் விளைச்சலும் அதிகமாகும். அனைத்து வகைத் தானியங்களின் விளைச்சலும் அதிகமாகும், புலன்களால் இன்புறும் பொருட்கள் அனைத்தும் அதிகமாகப் பெறப்படும்.(21) (உண்ண அமர்ந்திருப்பவன்) மற்றவருக்கு உணவளிக்கும்போது, "போதுமானதாக இருக்கிறதா {ஸம்பந்நம்}" என்று கேட்க வேண்டும். குடிப்பதற்குப் பானம் கொடுக்கும்போது, "இது நிறைவு செய்யுமா? {தர்ப்பணம்}" என்று கேட்க வேண்டும். பாயசம், கஞ்சி, சித்திரான்னம் ஆகியவற்றை அளிக்கும்போது, "இது விழுந்துவிட்டதா? {ஸ்ரிகம்}’" என்று கேட்க வேண்டும்[8].(22) சிரைத்தபிறகும், துப்பிய பிறகும், குளித்த பிறகும், உண்ட பிறகும் மக்கள் பிராமணர்களை மதிப்புடன் வழிபட வேண்டும். அத்தகைய வழிபாடு நோய்வாய்ப்பட்ட மனிதர்களுக்கு நீண்ட வாழ்நாளை நிச்சயம் அளிக்கும்.(23) ஒருவன் சூரியனை நோக்கித் திரும்பி சிறுநீர் கழிக்கக்கூடாது, அதேபோல ஒருவன் தன் மலத்தைத் தானே காணக் கூடாது. ஒருவன் ஒரே படுக்கையில் ஒரு பெண்ணுடன் படுக்கவும், அவளுடன் உண்ணவும் கூடாது[9].(24) பெரியோர்களிடம் பேசும்போது நீ என்று சுட்டும் பெயர்ச்சொல்லையோ, அவர்களுடைய பெயர்களையோ ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தாழ்ந்தவர்கள் {வயதில் இளையவர்கள்} அல்லது வயதில் சமமானவர்களிடம் நீ என்றோ, அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பதோ நிந்திக்கத்தக்கதல்ல[10].(25)
[8] ஒவ்வொரு தருணத்திலும், பெற்றுக் கொள்பவன் "போதுமானதாக இருக்கிறது, முழுதும் நிறைவைத் தரும், அதிகமாக விழுந்துவிட்டது, அல்லது அதுபோன்ற வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். இங்கே சொல்லப்பட்டிருக்கும், கிரிசரம் Krisara or Kricara என்னும் உணவானது, அரியி மற்றும் பயறால், அல்லது அரிசி மற்றும் எள்ளால் செய்யப்பட்டதாகும், ஒருவேளை இப்போது கிச்ரீ என்றழைக்கப்படும் உணவாக இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுதும் போஜனமளிக்கும்பொழுது அளிப்பவன் "ஸம்பந்நம்" என்று சொல்ல வேண்டும். பெற்றுக் கொள்பவன் "ஸுஸம்பந்நம்" என்று சொல்ல வேண்டும். குடிக்க ஜலமளித்தால் அளித்தவன் "தர்ப்பணம்" என்றும் பெற்றுக் கொண்டவன் "ஸுதர்ப்பணம்" என்றும், பாயஸமளிக்கும்பொழுதும், அதுபோல் கஞ்சியையும், சித்திரான்னத்தையும் அளிக்கும்பொழுதும் அளித்தவன் "ஸ்ரிகம்" என்றும் பெற்றுக் கொண்டவன் "ஸுஸ்ரிகம்" என்றும் சொல்ல வேண்டும்" என்றிருக்கிறது.[9] கும்பகோணம் பதிப்பில், "புத்திரர்களுடனும், ஸ்த்ரீயினுடனும் படுக்கையையும், போஜனத்தையும் விலக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சூதப் பெண்ணுடன் ஒருவன் உறங்கக்கூடாது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.[10] பவான் Bhavaan என்றழைப்பது கண்ணியமான சொல்வடிவமாகும். அது படர்க்கை ஒருமையில் third person singular இருக்கிறது. மிக நேரடியாக இருப்பதால் முன்னிலை second person தவிர்க்கப்படுகிறது.
பாவிகளின் இதயங்கள் அவர்களால் இழைக்கப்பட்ட பாவங்களைக் காட்டிக் கொடுக்கின்றன. தாங்கள் அறிந்தே செய்த பாவங்களை நல்லோரிடம் மறைக்கும் பாவிகள் அழிவைச் சந்திக்கிறார்கள்.(26) அறியாமை கொண்ட மூடர்களே தெரிந்தே செய்யப்பட்ட பாவங்களை மறைக்க முயல்வார்கள். அந்தப் பாவங்களை மனிதர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையே, ஆனால் தேவர்கள் அவற்றைக் காண்கிறார்கள்.(27) ஒரு பாவத்தால் மறைக்கப்படும் மற்றொரு பாவம் புதிய பாவங்களுக்கு வழிவகுக்கும். அதே போலத் தகுதிமிக்க ஒரு செயல் மற்றொரு தகுதிமிக்கச் செயலால் மறைக்கப்பட்டால், அது தகுதிகளை அதிகரிக்கச் செய்கிறது. அறவோரின் செயல்கள் எப்போதும் அறத்தின் பார்வையிலேயே அவர்களைப் பின்தொடர்கிறது.(28) அறிவற்ற மனிதன் தான் இழைத்த பாவங்களை ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை. எனினும், சாத்திரங்களில் இருந்து வீழ்ந்து பாவங்களைச் செய்தவனை அவை {அந்தப் பாவங்கள்} அடையவே செய்கின்றன. (உரிய நேரத்தில்) சந்திரனிடம் வரும் ராகுவைப் போலவே, அந்தப் பாவச்செயல்கள் அந்த மூட மனிதனை வந்தடைகின்றன[11].(29) எதிர்பார்ப்புடன் திரட்டி வைக்கப்படும் {சேமிக்கப்படும்} பொருட்கள் அரிதாகவே அனுபவிக்கப்படுகின்றன. காலன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை (தன் இரை தயாராக இருக்கிறதோ, இல்லையோ அதைப் பறித்தே செல்கிறான்) என்பதால், அத்தகைய சேமிப்பு ஞானிகளால் ஒருபோதும் மெச்சப்படுவதில்லை.(30)
[11] "பாவச்செயல்கள் பாவியை எவ்வழியில் அடைகின்றன என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. எனினும், அச்செயல்களின் விளைவுகள் செய்தவனைத் தவறாமல் அடையும் என்பது இந்து கருத்தியலாகும். எனினும், இந்த ஸ்லோகமானது, அந்தப் பாவங்களை நினைத்துப் பார்ப்பதே அப்பாவங்களைச் செய்தவனை அடையசெய்து, அவனைத் துன்புறுத்தாமல், அவனையே துன்பத்தை அடையச் செய்கிறது என்று சொல்வதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் மூடனானவன் தான் செய்த பாவத்தை நினையாமலிருக்கிறான். அந்தப் பாவமானது, சாஸ்திரத்திற்கு விரோதமாயிருப்பவனான அந்தச் செய்த மனிதனை அடையும். ராகுவானவன் எவ்விதம் சந்திரனைப் பிடிக்கிறானோ அவ்விதம் பாவமென்னும் காரியமானது அறிவில்லாதவனைப் பிடிக்கும்" என்றிருக்கிறது.
அனைத்து உயிரினங்களுடைய மனத்தின் இயற்பண்பே அறம் என ஞானிகள் சொல்கிறார்கள். இதன் காரணமாக ஒருவன், தன் மனத்தால் அனைத்திற்கும் நன்மையைச் செய்ய வேண்டும்[12].(31) ஒருவன் அறத்தைத் தனியாகப் பயில வேண்டும். அறம் பயிலும் போது ஒருவன் பிறரின் உதவியை நாடக்கூடாது. ஒருவன் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளதை மட்டுமே அடைகிறான் எனும்போதும், ஒரு தோழனால் {உதவியால்} என்ன செய்ய முடியும்[13]?(32) அறமே மனிதனின் தோற்றுவாயாகும். அறமே தேவர்களின் அமுதமுமாகும். மரணத்திற்குப் பிறகு அறத்தின் மூலமே மனிதர்கள் நித்திய இன்பத்தை அடைகிறார்கள்" என்றார் {பீஷ்மர்}.(33)
[12] கும்பகோணம் பதிப்பில், "அறிவுள்ளவர்கள் எல்லாப் பிராணிகளுக்கும் மனத்தால் செய்யப்படுவதைத் தர்மமென்று சொல்லுகிறார்கள். ஆகையால், எல்லாப் பிராணிகளிடங்களிலும் மனத்தால் க்ஷேமத்தைச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.[13] "அறம், அல்லது பக்தி குறித்த விதிகளை உறுதி செய்வதில் ஒருவன் வென்றாலும், மனம் பாவம் நிறைந்ததாக இருந்தால், எந்தத் தோழனும் அவனுக்கு உதவி செய்ய முடியாது. மனம் மட்டுமே அறத்திற்கும், பக்திக்கும் காரணமாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 193ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |