Tuesday, May 29, 2018

அத்யாத்மா! - சாந்திபர்வம் பகுதி – 194

Adhyatma! | Shanti-Parva-Section-194 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 21)


பதிவின் சுருக்கம் : அத்யாத்மாவின் இயல்பைக் குறித்து விசாரித்த யுதிஷ்டிரன்; அத்யாத்மா குறித்துப் பீஷ்மரின் உரையாடல்; சத்வ, ரஜோ, தமோ என்ற மூன்று குணகளின் இயல்புகளைச் சொன்னது...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டிருப்பதும், அத்யாத்மா என்ற பெயரில் அழைக்கப்படுவதுமானது எது? அதன் இயல்பென்ன? என்பது குறித்து எனக்குச் சொல்வீராக[1].(1) ஓ! பிரம்மத்தைக் குறித்து அறிந்தவரே, அசையும் மற்றும் அசையாத பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் எங்கிருந்து உண்டாக்கப்பட்டது? அண்டப்பேரழிவு ஏற்படும்போது, அது யாரிடம் செல்கிறது? இக்காரியம் குறித்து என்னுடன் உரையாடுவதே உமக்குத் தகும்[2]" என்றான்.(2)

[1] "மனத்தைச் சார்ந்திருக்கும் எதுவும் அத்யாத்மமாகும். இங்கே இது யோகதர்மத்தைச் சார்ந்திருப்பதாகவோ, மனத்தின் பண்பியல்பாகவோ உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. பொதுவாகப் பேசுகையில், மனத்தின் பண்பியல்புகளைக் குறித்த ஊகங்கள் அனைத்தும், புறப் பொருட்களுடன் அது கொண்டிருக்கும் உறவுகள் அனைத்தும் அத்யாத்மம் என்ற சொல்லில் அடங்குகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "பரத்வாஜரிடம் நடந்த பிருகுவின் உரையாடலுக்குப் பிறகு இந்தக் கேள்வி மீண்டும் கேட்கப்படுவதாகத் தெரிகிறது. அனைத்திற்கும் வேராக இருக்கும் அறம், மனத்தின் உடைமை என்று பீஷ்மர் அறிவிப்பதற்காக இஃது எழுகிறது என்று உரையாசிரியர் விளக்குகிறார். (சாந்தி பர்வம் பகுதி 193: 3 காண்க). எனவே, அத்யாத்மா குறித்த விசாரணையானது அனைத்துப் பொருட்களின் தோற்றுவாயைக் குறித்ததுமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, நீ என்னிடம் கேட்கும் அத்யாத்மா குறித்து நான் இப்போது உன்னுடன் உரையாடப்போகிறேன். ஓ! ஐயா, அது மிகவும் ஏற்புடையதும், பெரும் இன்ப {பேரின்ப} நிலையை உண்டாக்குவதுமாகும்.(3) (இதற்கு முன்பு) பேராசிரியர்கள், (இந்த அண்டத்தின்) படைப்பு மற்றும் அழிவு குறித்த உண்மைகளைச் சுட்டிக்காட்டிச் சென்றிருக்கிறார்கள். அவ்வுண்மைகளை அறிந்த மனிதன், இம்மையில் பெரும் நிறைவையும், மறுமையில் இன்பநிலையையும் அடைகிறான். அத்தகைய அறிவானது, பெரும் கனிகளை அடைவதற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் உயர்ந்த நன்மையை விளைவிப்பதற்கும் வழிவகுக்கும்.(4) பூமி {நிலம்}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர், எண்ணிக்கையில் ஐந்தாவதாக ஒளி (அக்னி) ஆகியவை பேருயிரினங்களாக {மகாபூதங்களாக} கருதப்படுகின்றன. இவற்றிலேயே படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றமும் மறைவும் இருக்கிறது.(5) எவனிலிருந்து இந்த அடிப்படை பூதங்கள் தங்கள் தோற்றத்தைப் பெற்றனவோ, (எவனிடம் அவற்றின் தொகை நுழையுமோ) அவனிடமே அனைத்து உயிரினங்களிடமிருந்தும் தங்களைப் பிரித்துக் கொண்டு கடலின் அலைகளைப் போல (எதிலிருந்து எழுந்தனவோ அதிலேயே) மீண்டும் திரும்புகின்றன.(6) ஆமை எவ்வாறு தன் அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்கிறதோ, அவ்வாறே பரமாத்மாவும் அனைத்துப் பொருட்களையும் படைத்தும், மீண்டும் தனக்குள்ளேயே எடுத்தும் கொள்கிறது.(7)படைப்பாளன், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும், இந்த ஐந்து அடிப்படை பூதங்களையும் பல்வேறு அளவுகளில் இடம்பெறச் செய்கிறான். எனினும், உயிரினமானது (அறியாமையின் மூலம்) அதைக் காண்பதில்லை.(8) ஒலி, கேட்பதற்கான உறுப்புகள் மற்றும் அனைத்துத் துளைகள் ஆகிய இந்த மூன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் பிறப்பிடமாகக் கொள்கின்றன. தீண்டல், செயல்பாடு, தோல் ஆகியவை காற்றின் {வாயுவின்} மூன்று பண்புகளாக இருக்கின்றன.(9) வடிவம், கண், செரிமானம் ஆகியவை நெருப்பு {அக்னி}, அல்லது சக்தியின் மூன்று பண்புகளாக இருக்கின்றன. சுவை, திரவங்கள் அனைத்தும், நாவு ஆகியவை நீரின் மூன்று பண்புகளாக இருக்கின்றன.(10) மணம், மூக்கு, உடல் ஆகியவை பூமியின் {நிலத்தின்} மூன்று தன்மைகளாக இருக்கின்றன. (அடிப்படையான) பெரும்பூதங்கள் ஐந்தாகும். ஆறாவது மனமாகும்.(11) ஓ! பாரதா, புலன்களும், மனமும் உயிரினங்களின் உணர்வுகள் (அனைத்திற்கும் மூலம்) ஆகும்[3]. ஏழாவதானது புத்தி {நுண்ணறிவு} என்றழைக்கப்படுகிறது, எட்டாவதோ ஆன்மா {ஜீவன்} என்றழைக்கப்படுகிறது[4].(12)

[3] "விஞ்ஞானானி Vijnaanaani என்ற சொல் உணர்வுகள் என்ற பொருளில் கொடுக்கப்படுகிறது. அறியும் ஆற்றல் என்பது ஒரு வேளை சிறந்த பொருளாக இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] பொதுவாக இந்து தத்துவஞானத்தில், குறிப்பாக வேதாந்தப் பள்ளியில், மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றுக்கிடையில் வேறுபாடு காணப்படுகிறது. மனம் என்பது உணர்வுகள் மற்றும் உள்ளுணர்வுகள் அனைத்தின் தோற்றுவாயாக, அல்லது இருக்கையாக இருக்கிறது. ஒப்பீடு உள்ளிட்ட அறியும் ஆற்றல்கள் என்று காண்டியன் பள்ளியில் Kantian School அழைக்கப்படுபவை, காரணம் என்றழைக்கப்படுகிறது. இந்த இறுதியானதே புரிதல் அல்லது புத்தி என்று அழைக்கப்படுகிறது. உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டிற்கும் வேறுபட்டதாக ஆன்மா கருதப்படுகிறது. உடலும் மனமும் எவனுக்குச் சொந்தமோ அவனே அது. செயல்பாடற்றதாக இருக்கும் அஃது, உடல் கட்டுமானத்திற்குள் அனைத்தையும் காணும் சாட்சியாகக் குறிப்பிடப்படுகிறது. அது பரமாத்மாவின் ஒரு பகுதியே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மஹாபூதங்கள் ஐந்தே. மனம் ஆறாவதென்று சொல்லப்படுகிறது. ஓ பாரத, இந்திரியங்களும், மனமும் இந்த ஜீவனுக்கு ஞானத்திற்குக் காரணங்களாகின்றன. புத்தியென்பது ஏழாவதென்றும் ஏஏத்ரஜ்ஞனான ஜீவனோ எட்டாவதென்றும் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது.

புலன்கள் உள்ளுணர்பவை; (அந்த உள்ளுணர்தல்களைத் தொடர்பு கொள்ள இயலாத) மனம், உறுதியற்ற நிலையை உண்டாக்குகிறது. புத்தியானது அனைத்து அறிவுகளையும் உறுதியான நிலையை அடையச் செய்கிறது. ஆன்மாவானது (செயல்படாமல்) சான்றாக {சாட்சியாக} இருக்கிறது.(13) இரண்டு உள்ளங்கால்களுக்கு மேலே இருப்பவை அனைத்தும், பின்னே {கீழே} இருக்கும் அனைத்தும், குறுக்காக இருக்கும் அனைத்தும் ஆன்மாவால் காணப்படுகின்றன. ஆன்மாவானது, நிரப்ப எந்த வெளியும் இல்லாத அளவுக்கு மொத்த இருப்பிலும் {உயிரினத்திலும்} படர்ந்தூடுருவி இருக்கிறது.(14) புலன்கள், மனம் மற்றும் புத்தியை மனிதர்கள் அனைவரும் முழுமையாக அறிவார்கள். இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} ஆகிய மூன்று நிலைகள், அல்லது குணங்கள் புலன்கள், மனம் மற்றும் புத்தியைச் சார்ந்தே இருக்கின்றன[5].(15) மனிதன், உயிரினங்கள் எவ்வாறு இவ்வுலகிற்கு வந்து போகின்றன என்பதை நுண்ணறிவின் {புத்தியின் துணையுடன் புரிந்து கொள்வதன் மூலம், நிச்சயம் படிப்படியாக உறுதியான மன அமைதியை அடைவான்.(16) (ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோல, இருள், ஆசை, நல்லியல்பு ஆகிய) மூன்று குணங்களும் (உலகப் பற்றுகளை {புரிந்து கொள்வதற்கு}) புத்திக்கு வழிவகுக்கின்றன. இவ்வகையில், புத்தியானது (நுண்ணறிவானது), புலன்களையும், மனத்தையும் போன்றதாகும். எனவே, புத்தியானது (ஐம்புலன்களுடன், மனத்தையும் சேர்ந்த) ஆறையும், அவற்றை உட்கொள்ளும் பொருட்களையும் போன்றதாகும். எனினும், (இருள், ஆசை மற்றும் நல்லியல்பு ஆகிய) இந்த மூன்று குணங்களும் செயல்பாட்டுக்கு வழிவகுக்க இயலாதபோது புத்தி அழிவடைகிறது[6].(17)

[5] "மனிதனின் உயர்ந்த ஒழுக்கப் பண்புகள் அனைத்தையும் கொண்டது நல்லியல்பாகும். அன்பு, பற்று மற்றும் உலகம் சார்ந்த பொருட்கள் தொடர்புடைய உணர்வுகள் அனைத்தும் ஆசையாகும் {அதிவிருப்பமாகும்}. கோபம், காமம், மற்றும் தீயவையான பிற நாட்டங்கள் இருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] "இந்த ஸ்லோகத்தை இலக்கண ரீதியில் வெளிப்படுத்துவதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். எனினும், இதன் பொருள் மிகத் தெளிவற்றதாக உள்ளது. புத்தி, அல்லது புலன்களின் நுண்ணறிவையும், மனத்தையும் ஒன்றாகக் காண்பது, உலகம் சார்ந்த பற்றுகளுக்குச் செயலின் முக்குணங்களும் வழிவகுக்கும்வரை அனுமதிக்கப்படுலாம். ஆனால், புத்தியையும், அதை உட்கொள்ளும் பொருட்களையும் ஒன்றாகக் காண்பதில் என்ன பொருள் இருக்கிறது? பீஷ்மர் இங்கே இலட்சியவாதத்தைப் போதிக்கிறாரா? புத்தியில் இருப்பதைத் தவிர வேறு எதுவும் இருப்பில் இல்லை என்றால், புத்தி அற்றுப் போனால் அனைத்துப் பொருட்களுக்கு ஒரு முடிவு வந்தாக வேண்டுமே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புத்தியானது, ஸத்வம்ரஜஸ்தமஸ் என்ற முக்குங்களாலும் பலவிதமாக இழுக்கப்படுகிறது. இந்திரியங்கள் ஐந்தும், ஆறாவதான மனமுமாகிய யாவும் புத்தியின் உருவமே. புத்தியில்லாவிட்டால் அக்குணங்கள் எங்கிருந்து உண்டாகும்? இவ்விதமிருப்பதைப் பார்க்க ஸ்தவாவரங்களும், ஜங்கமங்களுமான இவ்வுலகமனைத்தும் புத்திமயமாகவே ஆகிறது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "இந்தக் குணங்கள் புத்தியிலும், புத்தியானது புலன்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்தப் புத்தியில் மனமானது ஆறாவதாக இருக்கிறது. இந்தக் குணங்கள் எங்கிருந்து வரும்? அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்திலும் இது படர்ந்தூடுருவி இருக்கிறது" என்றிருக்கிறது. இங்கே கும்பகோணம் பதிப்பின் வரிகளே தெளிவாக இருக்கின்றன.

அசையாத மற்றும் அசையும் பொருட்களைக் கொண்ட இந்த அண்டம் இந்தப் புத்தியைக் கொண்டிருக்கிறது. புத்தியிலிருந்தே அனைத்தும் எழுகின்றன, அனைத்தும் அதனுள்ளேயே அடங்குகின்றன. இதன் காரணமாகவே அனைத்தும் புத்தியின் {நுண்ணறிவின்} வெளிப்பாடே என்று சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன.(18) எதைக் கொண்டு ஒருவன் பார்க்கிறானோ, அது கண்ணாகும், எதைக் கொண்டு ஒருவன் கேட்கிறானோ அது காதாகும். எதைக் கொண்டு ஒருவன் நுகர்கிறானோ, அது மணத்திற்கான உறுப்பு {மூக்கு} என்று அழைக்கப்படுகிறது. எதைக் கொண்டு ஒருவன் சுவையை வேறுபடுத்திப் பார்க்கிறானோ அது நாக்கு என்று அழைக்கப்படுகிறது.(19) தீண்டும் உணர்வை ஒருவன் உடலை மறைக்கும் தோலால் அடைகிறான். எது புத்தி என்றழைக்கப்படுகிறதோ, அது மாற்றங்களுக்கு உட்படுகிறது. புத்தியானது எதையும் விரும்பும்போது, அது மனம் என்றழைக்கப்படுகிறது.(20) எந்த அடித்தளங்களில் புத்தியானது ஓய்ந்திருக்கிறதோ, அவை {அந்த அடித்தளங்கள்} ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்திற்குத் தொண்டாற்றுபவையாகவும், எண்ணிக்கையில் ஐந்தாகவும் இருக்கின்றன. அவை புலன்கள் என்றழைக்கப்படுகின்றன. புலப்படாத கொள்கையான புத்தியானது, அவற்றிலேயே {அந்த அடித்தளங்களிலேயே} ஓய்ந்திருக்கிறது.(21)

ஓர் உயிரினத்தில் இருக்கும் புத்தியானது, (இருள் {தமஸ்}, ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} என்றழைக்கப்படும்) மூன்று நிலைகளுடன் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்கிறது. சிலவேளைகளில் அஃது இன்பத்தை அடைகிறது, சில வேளைகளில் துன்பத்தை அடைகிறது.(22) சில வேளைகளில் அஃது இன்பமும், துன்பமும் அற்றதாக இருக்கிறது. இவ்வாறே புத்தியானது, மனிதர்கள் அனைவரின் மனங்களிலும் இருக்கிறது.(23) ஆறுகளின் தலைவனும், அலைகளுடன் கூடியதுமான பெருங்கடலானது கரைகளை மீறிச் செல்வதைப் போல, (ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல) மூன்று நிலைகளாலான புத்தியானது, சில வேளைகளில், (யோகத்தின் மூலம்) அந்த மூன்று நிலைகளையும் கடந்து செல்கிறது[7].(24) எந்தப் புத்தி முக்குணங்களைக் கடந்து செல்கிறதோ, அது தூய நிலையில் (மாற்றமடையாத இருப்பாக) மட்டுமே மனத்தில் இருக்கிறது. எனினும், செயல்படத் தூண்டும் இருள் குணம் {தமோகுணம்}, அதை விரைவில் பின்தொடர்கிறது.(25) அந்த நேரத்தில் புத்தியானது, புலன்கள் அனைத்தையும் செயல்பட வைக்கிறது. அந்த மூன்றின் தன்மைகள் இவ்வாறே இருக்கின்றன: நல்லியல்பில் {சத்வ குணத்தில்} இன்பமும்; ஆசையில் {ரஜோ குணத்தில்} துன்பமும், இருளில் {தமோ குணத்தில்} மாயையும் வசிக்கின்றன.(26) மனத்தில் இருக்கும் நிலைகள் அனைத்தும் (பெயர் குறிப்பிடப்பட்ட) மூன்றில் சேர்க்கப்படுகின்றன. ஓ! பாரதா, புத்தியின் போக்கு குறித்து உனக்கு இப்போது சொல்லிவிட்டேன்.(27)

[7] "உரையாசிரியர் இந்தச் சுலோகத்தின் இரண்டாவது வரியை சற்றே இழுத்துச் சொன்னாலும் இவ்வாறே விளக்கியிருக்கிறார். இந்தக் காரியத்தில் நீலகண்டரின் விளக்கம் சரியென்றால், கே.பி.சின்காவின் விளக்கம் தவறாக இருக்கவேண்டும். பொதுவாகப் பார்க்கும்போது பெருங்கடல் கரைகளைக் கடப்பதில்லை. எனினும் அரிதிலும் அரிதாக அவ்வாறு நடக்கிறது. அதைப் போலவே யோக சக்தியின் மூலம் ரஜஸ், தமஸ் மற்றும் சத்வ குணங்களைக் அரிதாகக் கடக்கும் நிலை அந்த அரிதான நிலையுடன் ஒப்பிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். நல்லியல்பு, ஆசை, இருள் ஆகிய முக்குணங்கள் எப்போதும் உயிரினங்களைப் பற்றியிருக்கின்றன.(28) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நல்லியல்பு, ஆசை, இருள் ஆகியவற்றைச் சார்ந்த மூன்று வகைப் புத்திகளும் {நுண்ணறிவுகளும்} ஒவ்வொரு உயிரினத்திலும் காணப்படுகினறன.(29) நல்லியல்பின் குணம் {சத்வ குணம்} மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது; ஆசையின் குணம் {ரஜோ குணம்} கவலையை உண்டாக்குகிறது. இவ்விரண்டும், இருளின் குணத்துடன் {தமோ குணத்துடன்} சேர்ந்தால், அந்நிலை மகிழ்ச்சியையோ, கவலையையோ உண்டாக்காது (ஆனால் அதற்குப் பதில் மாயை, அல்லது குற்றத்தை மட்டுமே உண்டாக்கும்).(30) உடலிலோ, மனத்திலோ தோன்றும் ஒவ்வொரு மகிழ்ச்சியான நிலையும், நல்லியல்பின் பண்பினாலேயே விளைகின்றன என்று சொல்லப்படுகிறது.(31) ஒருவனுக்கு ஏற்பில்லாத துன்ப நிலையானது, ஆசைப்பண்பினால் விளைகிறதேயன்றி வேறெதனாலும் அல்ல. ஒருவன் அதைக் குறித்து எப்போதும் அச்சத்துடன் நினைக்கக்கூடாது[8].(32) மேலும், மாயையுடனும், குற்றத்துடனும் சேர்ந்ததும், உறுதிசெய்யப்பட முடியாததும், அறியப்படமுடியாததுமான அந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒருவன் அறியவில்லையெனில், அந்நிலை இருள் பண்பைக் கொண்டது என்று கருதப்பட வேண்டும்.(33)

[8] "மறுபுறம், அவனது மனத்தைத் துணிவுடன் அதில் செலுத்தி, அதன் காரணத்தை உறுதி செய்து கொண்டு, இங்கே குறிப்பிடுவது போன்ற அசைப் பண்பில் உள்ள காரணத்தை விலக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.உவகை {சந்தோஷம்}, நிறைவு {பிரியம்}, திளைப்பு {ஆனந்தம்}, {சுகம்}, இதய அமைதி {மனத்தில் நல்ல அடக்கம்} ஆகியவை நல்லியல்பு நிலையின் {சத்வ குணத்தின்} தன்மைகளாகும். இவை மனிதனுககு சில நேரங்களில் ஓரளவுக்கு உண்டாகின்றன.(34) நிறைவின்மை {சந்தோஷமில்லாமை}, இதய எரிச்சல் {பரிதாபம்}, துன்பம் {சோகம்}, பேராசை, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியவை அனைத்தும் ஆசை நிலையின் {ரஜோ குணத்தின்} குறியீடுகளாகும். அவற்றை விளைவிப்பதற்கான போதுமான தகுந்த காரணத்துடனோ, இல்லாமலோ அவை காணப்படுகின்றன.(35) அவமதிப்பு {அபிமானம்}, மாயை {அவிவேகம்}, குற்றம் {அஜாக்ரதை}, உறக்கம், மலைப்பு {சோம்பல்} மற்றும் ஒருவனின் தீயூழின் காரணமாக உண்டாகுபவை அனைத்தும் இருள் நிலையின் {தமோ குணத்தின்} பல்வேறு தன்மைகளாகும்.(36) எட்டாததை எட்டுவதும், பல திசைகளில் விரிந்து செல்லக்கூடியதும், ஆசைகளின் நோக்கங்களை வெல்லும் காரியத்தில் நம்பிக்கையில்லாததும், நன்கு கட்டுப்படுத்தப்பட்டதுமான மனத்தைக் கொண்ட மனிதன் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருப்பான்[9].(37)

[9] "இந்தச் சுலோகத்தை உரைப்பதில் நான் நீலகண்டரைப் பின்பற்றவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எட்டாத விஷயத்தில் செல்லுவதும், பலவிதமாகச் செல்லுந்தன்மையையும், தீனமாகயாசிப்பதையும், ஸந்தேஹத்தையும் உருவமாகக் கொண்டதுமான மனமானது எவனுக்கு நல்ல அடக்கமுள்ளதாயிருக்கிறதோ அவன் இவ்வுலகிலும், இறந்த பின்னும் ஸுகமுள்ளவனாயிருப்பான்" என்றிருக்கிறது.

புத்தி, ஆன்மா என்ற இரு நுண்ணியப் பொருட்களின் வேறுபாட்டைக் காண்பாயாக. இவற்றில் ஒன்று (புத்தி) குணங்களை வெளிப்படுத்துகிறது. மற்றது (ஆன்மா) அவ்வகையில் எதையும் செய்வதில்லை.(38) ஒரு கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் காணலாம். இணைந்திருந்தாலும், அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகும்.(39) அதே போலவே, புத்தியும், ஆன்மாவும் தங்கள் தங்களுக்குரிய இயல்புகளின்படி ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாக இருந்தாலும், அவை எப்போதும் ஒன்றான நிலையிலேயே காணப்படுகின்றன. மீனும், நீரும் ஒன்று கலந்த நிலையிலேயே இருக்கின்றன. எனினும், அவை ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவையாகும். இது புத்தி மற்றும் ஆன்மாவின் வழக்கிலும் அவ்வாறே ஆகிறது.(40) குணங்கள் ஆன்மாவை அறியாமல் இருக்கின்றன, ஆனால், ஆன்மாவோ அவை அனைத்தையும் அறிந்திருக்கிறது. ஆன்மாவானது, குணங்களின் சான்றாக இருந்து அவை அனைத்தும் தன்னில் இருந்தே உண்டாகின்றன என்று கருதுகிறது.(41) செயல்படாத ஆன்மாவானது, தன்னினைவற்ற {சுயநினைவற்ற} புலன்கள், மனம் மற்றும் ஏழாவதான அறிவு ஆகியவற்றின் மூலமாகச் செயல்படும் போது, அடைப்பில் உள்ள துளையின் வழியாக வரும் கதிர்களைப் பொழிந்து அனைத்துப் பொருட்களையும் காட்டும் ஒரு விளக்கைப் போல, (இருப்பில் உள்ளவற்றுக்கு மத்தியில் உள்ள) பொருட்களைக் கண்டறிகிறது.(42)

அறிவு அல்லது புத்தியே அனைத்துக் குணங்களையும் உண்டாக்குகிறது. ஆன்மாவானது அவற்றை (சான்றாக) பார்க்க மட்டுமே செய்கிறது. புத்தி மற்றும் ஆன்மாவுக்கிடையிலான தொடர்பு நிச்சயம் இத்தகையதே[10].(43) புத்தியோ, ஆன்மாவோ சார்ந்திருக்கக்கூடிய புகலிடம் ஏதும் கிடையாது. அறிவானது {புத்தியானது}, மனத்தை உண்டாக்குகிறது, ஆனால் ஒருபோதும் குணங்களை உண்டாக்குவதில்லை.(44) புலன்களில் இருந்து வெளிப்படும் கதிர்கள், போதுமான அளவுக்கு மனத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும்போது, ஆன்மாவானது, குடத்திலிட்ட விளக்கைப் போல, (அறிவுக்குத்) தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(45) இயல்பான செயல்கள் அனைத்தையும் துறக்கும் மனிதன், தவங்களைப் பயின்று, ஆன்ம கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, அதிலேயே திளைத்து, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னையே கருதுவானானால், அவன் உயர்ந்த கதியை அடைவான்.(46) நீரில் நகரும் நீர்க்கோழியானது, {நீரெனும்} அந்தப் பூதத்தால் நனையாமல் இருப்பதைப் போலவே ஒரு ஞானியும் (இவ்வுலகத்தில்) உயிரினங்களுக்கு மத்தியில் உலவுவான்.(47)

[10] "ஆன்மாவானது ஒரு சாட்சியாக, அல்லது ஒரு பார்வையாளனாகச் சொல்லப்படுகிறதேயன்றிச் செயல்படும் ஒன்றாகச் சொல்லப்படவில்லை. முனிவர்கள், எந்த ஒன்றுக்கு மனமும், புலன்களும் சொந்தமாக இருக்கிறதோ அந்த ஆன்மாவின் மூலம் இதைப் புரிந்து கொண்டார்கள். செயல்பாடற்ற, பாவம் செய்யாத ஆன்மாவானது, ஆன்ம தத்துவம், அல்லது சரி தவறு ஆகியவற்றைப் பகுக்கும் நினைவு ஆகியவற்றைக் காண்பதன் மூலம் எழுந்து, செயல்படுவதால், அது வேறுபாடற்ற நீதிபதியாக, அல்லது விருப்பமில்லாத பார்வையாளனாக அனைத்தையும் காண்கிறது என்ற கருத்து எழுந்திருக்க முடியுமா? ஐரோப்பிய ஆன்மவியலாளர்கள், நம்மை நன்மையைச் செய்யத் தூண்டுவதும், தீமையைத் தவிர்க்கத் தூண்டுவதும், சரியானது செய்யப்படும் போதும், தவறு தவிர்க்கப்படும்போதும் ஏற்பதுமான மனசாட்சிக்கு வேறு இரண்டு செயல்பாடுகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தச் செயல்பாடுகளை வேறு கொள்கைக்கும் எளிதாகப் பொருத்திப் பார்க்க முடியும். கேள்வியானது பெயரிடும் முறைக்காக மட்டுமே உள்ள வரையில், இந்த இரண்டு இறுதி செயல்பாடுகளையும் எடுத்துவிட்டு, ஆன்மா என்ற சொல்லுக்குப் பகுத்தறியும் புலமான மனசாட்சியை மட்டுமே குறிப்பிட முடியும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஒருவன் தனது நுண்ணறிவின் மூலம் இவ்வகையிலேயே, துன்பமும் இன்பமும் இல்லாமல், அனைத்திலும் சம கண்ணுடன், வன்மமும், பொறாமையும் அற்றவனாக இவ்வுலகில் செயல்பட வேண்டும்.(48) இவ்வழியில் வாழ்பவன், நூல்களை அறுக்கும் சிலந்தியைப் போல, (குணங்களில் சிக்கிக் கொள்வதற்குப் பதிலாக) குணங்களை உண்டாக்குவதில் வெல்கிறான். உண்மையில், குணங்கள் சிலந்தியின் நூல்களைப் போலவே கருதப்பட வேண்டும்[11].(49) அத்தகைய மனிதர்களைப் பொறுத்தவரையில் குணங்கள் தொலையாது எனச் சிலர் சொல்கின்றனர். அவை அனைத்தும் தொலைந்து போகும் என்று சிலர் சொல்கின்றனர். தொலைந்து போவதில்லை என்று சொல்பவர்கள், (ஸ்ருதிகளில்) வெளிப்படுத்தப்பட்டவையும், இதற்கு முரணான எந்த அறிவிப்பும் இல்லாதவையுமான சாத்திரங்களைச் சார்ந்திருக்கின்றனர். மறுபுறம், அனைத்துப் குணங்களும் தொலைந்து போகின்றன என்று சொல்பவர்கள், ஸ்மிருதிகளைச் சார்ந்திருக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இரண்டையும் சிந்தித்துப் பார்த்து, தனக்கு எது சரியெனத் தோன்றுவதை ஒருவன் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(50,51) இவ்வாறே ஒருவன் கடினமானதும், முடிச்சு கொண்டதுமான, ஐயத்தால் அறிவைக் குலைக்க வல்லதுமான இந்தக் கேள்வியைக் கடந்து, அதைக் கடபபதன் மூலம் மகிழ்ச்சியை அடைய வேண்டும். அந்த ஐயம் அகன்றால், அதற்கு மேலும் அவன் எந்த வகைத் துன்பத்திற்கும் ஆளாக வேண்டாம்.(52)

[11] "இங்கே குறிப்பிடப்படும் குணங்கள், சத்வம் (நல்லியல்பு), ரஜஸ் (ஆசை) மற்றும் தமஸ் (இருள்) ஆகியவையாகும். அத்தகைய மனிதன் அக்குணகளைக் கடப்பான், அக்குணங்கள் அவனையோ, அவனது செயல்களையோ கடக்காது என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.நன்கு நிரம்பிய நீரோடைகளில் அருவருக்கத்தக்க அனைத்துடன் சேர்ந்து மூழ்கித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்பவர்களைப் போல, அருவருக்கத்தக்க இதயங்களைக் கொண்ட மனிதர்களும் அறிவை அடைவதில் வெல்லக்கூடும்.(53) ஒரு பெரிய ஆற்றைக் கடக்க வேண்டிவன், மறுகரையைப் பார்ப்பதால் மட்டுமே மகிழ்ச்சியை உணர்ந்துவிட மாட்டான். இவ்வழக்கு வேறுமாதிரியாக இருந்தால், (பார்த்துவிடுவதால் மட்டுமே ஒருவனால் ஒரு படகைக் கொண்டு மறுகரையை அடைந்துவிட முடியுமென்றால்), அவன் ஒருவேளை மகிழ்ச்சியை அடையலாம். உண்மையை அறிந்தவனிடம் இக்காரியமோ, வேறுமாதிரி இருக்கிறது. உண்மையைக் குறித்த வெறும் அறிவே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. அந்த அறிவானது, கனிகளைத் தாங்கத் தொடங்கியதும், அம்மனிதன் மறுகரையை அடைந்துவிட்டான் என்று கருதப்படலாம். ஆன்மாவை உலகப் பொருட்களில் இருந்து விடுபட்ட தனியான ஒன்றாக அறிபவர்கள், உயர்ந்ததும், சிறந்ததுமான அறிவை அடைவதாகச் சொல்லப்படுகிறது.(54) ஒரு மனிதன், உயிரினங்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் மறைவைக் குறித்து அறிவதன் மூலம், அக்காரியத்தைச் சிந்தித்து, படிப்படியாக முடிவிலா மகிழ்ச்சியை அடைகிறான்.(55) எவன் (அழிவற்றதாக இல்லாமல் அழியத்தக்கதாக இருக்கும்) இந்த முத்தொகையை {மூன்று குணங்களைச்} சிந்தித்துப் பார்த்து, அஃதை அறிந்து கொண்டு கைவிடுகிறானோ, அவன் யோகத்தின் மூலம் உண்மையைக் காண்பதில் வென்று, முற்றான இன்பநிலையை அடைகிறான்.(56) பல்வேறு பொருட்களில் ஈடுபாடு கொண்டவையும், கட்டுப்படுத்துவதற்குக் கடினமானவையுமான புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தாத வரையில் ஆன்மாவைக் காண முடியாது.(57)

இஃதை அறிந்தவன் உண்மையில் ஞானியாவான். ஞானிக்கு வேறென்ன குறியீடு இருக்க முடியும்? இந்த அறிவை அடைந்தவர்களும், நுண்ணறிவுமிக்கவர்களுமான மனிதர்கள், வெற்றிமகுடம் சூடியவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறார்கள்.(58) அறியாமையிலுள்ளோரை எது அச்சுறுத்துமோ, அஃது அறிவாளிகளை ஒருபோதும் அச்சுறுத்த முடியாது. (விடுதலையை {முக்தியை} விட) எவருக்கும் வேறேதும் உயர்ந்த கதியில்லை. எனினும், அதீத நற்குணத்தின் விளைவாக, விடுதலையின் {முக்தியின்} அளவைப் பொறுத்தே வேறுபாடுகள் தெரிகின்றன என்று தவசிகள் சொல்கிறார்கள்.(59) கனிகளில் எதிர்பார்ப்பில்லாமல் செயல்படும் மனிதன், (அச்செயல்களின் மூலம்) முற்பிறவியில் இழைக்கப்பட்ட தன் பாவச்செயல்களை அழிக்கிறான். ஞானம் கொண்ட ஒருவனுக்கு, (இவ்வாறு கழுவப்படும்) முற்பிறவியின் செயல்களும், இப்பிறவியில் (கனியின் எதிர்பார்ப்பில்லாமல் நிறைவேற்றப்படும்) செயல்களும், (நரகத்தில் வீழ்வது போன்ற) ஏற்பில்லாத எந்த விளைவுகளையும் உண்டாக்காது. ஆனால், அவன் செயல்களைச் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், அச்செயல்களால் எவ்வாறு ஏற்புடைய (விடுதலையை {முக்தியைக்}) கொண்டு வர முடியும்.(60) (காமம், பொறாமை மற்றும் பிற தீய ஆசைகளால்) பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனை மக்கள் நிந்திக்கிறார்கள். அத்தீமைகள் அம்மனிதனை அடுத்தப் பிறவியில் தாழ்ந்த பல வகைப் பிறப்புகளில் வீழ்த்துகின்றன[12].(61) இவ்வுலகில் (மகன்கள், மனைவியர் போன்ற) தங்கள் உடைமைகளின் இழப்பால் அதிகமாக வருந்தும் தீயோரை மிகக் கவனமாகப் பார். அதே போன்ற சூழ்நிலைகளில் ஒருபோதும் வருந்தாதவர்களையும், அறிவைக் கொடையாகக் கொண்டவர்களையும் பார். (படிப்படியான விடுதலை {முக்தி} மற்றும் உடனடி விடுதலை ஆகிய) இரண்டையும் அறிந்தோரே, உண்மையில் ஞானிகளாக அழைக்கத்தகுந்தவர்களாவர்" என்றார் {பீஷ்மர்}[13].(62)

[12] "இந்த ஸ்லோகத்தின் நோக்கமானது, பாவச் செயல்கள் இம்மையிலும், மறுமையிலும் அச்சத்தையே உண்டாக்கும் என்பதைச் சொல்வதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[13] "பீஷ்மர் இங்கே இரண்டாவது வகையே {உடனடி முக்தியே} மேன்மையானது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். எனவே, வேத சடங்குகள், அல்லது செயல்கள் யோகத்தைக் கொடுத்து, மனத்தையும், அறிவையும் துளைத்து, உலகம் சார்ந்த அனைத்தில் இருந்தும் அவர்களைக் கடக்கத் தகுந்தவர்களாக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 194ல் உள்ள சுலோகங்கள் : 62

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்