Yoga meditation! | Shanti-Parva-Section-195 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 22)
பதிவின் சுருக்கம் : தியான யோகம் குறித்துச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்; மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்தி தியானயோகத்தில் ஈடுபடச் செய்யும் வழிமுறைகள் குறித்துச் சொன்னது...
Yoga meditation! | Shanti-Parva-Section-195 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே, இனி நான் தியான யோகத்தின் நான்கு வகைகளைக் குறித்துப் பேசப் போகிறேன். அதைக்குறித்த அறிவை அடைந்த பெரும் முனிவர்கள், இம்மையிலேயே அழிவில்லா வெற்றியை அடைகிறார்கள்.(1) அறிவால் நிறைவடைந்த பெரும் முனிவர்கள், விடுதலையில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, யோகத்தை அறிந்து, தங்கள் தியான யோகம் சரியாகும் வழியில் செயல்படுகின்றனர்.(2) ஓ! பிருதையின் மகனே, உலகக் குற்றங்களில் இருந்து விடுபட்ட அவர்கள், ஒருபோதும் (மறுபிறவிக்காக இங்கே) திரும்பி வருவதில்லை. மறுபிறவியில் இருந்து விடுதலை அடைந்த அவர்கள், தங்கள் இயல்பான ஆன்ம நிலையிலேயே {ஆத்மரூபத்திலேயே} வாழ்கிறார்கள்[1].(3) (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் போன்ற) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுபட்டு, (பற்றுகளில் இருந்து) விடுதலையடைந்து, ஒருபோதும் (கொடையாக) எதையும் ஏற்காமல், தங்கள் (இயல்பான) நிலையிலேயே எப்போதும் நீடிக்கும் அவர்கள், மனைவியர் மற்றும் பிள்ளைகளின் தோழமையிலிருந்து விடுபட்டவையும், யாராலும் எந்தச் சச்சரவுகளும் எழாத நிலையில் இருப்பவையும், முற்றான இதய அமைதிக்கு ஏற்ற வகையில் இருப்பவையுமான இடங்களில் வாழ்கின்றனர்.(4) அத்தகைய மனிதன், பேச்சை அடக்கி, தியானத்தின் உதவியால் (பரமாத்மாவிடம்) பிரியாத ஒன்றிய மனத்துடன், தன் புலன்கள் அனைத்தும் நொறுங்கிய ஒரு மரத்துண்டைப் போல அமர்ந்திருக்கிறான்.(5)
[1] "ஆன்ம நிலை என்பது தூய்மையான நிலையாகும். உலகப் பற்றுகளின் விளைவால் ஒருவன் அதிலிருந்து வீழ்கிறான். அந்தப் பந்தங்களில் இருந்து அவனை விடுதலை செய்யத் துணைபுரியும் யோகத்தின் மூலம் அவன் மீண்டும் தூய்மையை அடைகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவன் காதின் மூலம் எந்த ஒலியையும் உணர்வதில்லை; தோலின் மூலம் எந்தத் தீண்டலையும் உணர்வதில்லை; கண்ணின் மூலம் எந்த வடிவத்தையும் உணர்வதில்லை; நாவின் மூலம் எந்தச் சுவையையும் உணர்வதில்லை.(6) மணத்திற்கு உரிய உறுப்பின் மூலம் அவன் மணங்கள் எதையும் உணர்வதில்லை. யோகத்தில் மூழ்கிய அவன், தியானத்தில் மெய்மறந்து அனைத்துப் பொருட்களையும் கைவிடுகிறான்.(7) பெரும் மனோ சக்தியைக் கொண்ட அவன், ஐம்புலன்களைத் தூண்டக்கூடிய எதையும் விரும்புவதில்லை. ஐம்புலன்களையும் தன் மனத்திற்குள் இழுத்துக் கொள்ளும் ஞானி, உறுதியற்ற தன் மனத்தை அந்த ஐம்புலன்களைக் கொண்டு (அறிவில் {புத்தியில்}) நிலைநிறுத்த வேண்டும் {மனத்தை ஸமாதியிலிருக்கும்படி செய்வான்}.(8) பொறுமையைக் கொண்ட யோகியானவன், எந்தப் பொருட்கள் உறுதியில்லாதவையாக இருக்கின்றனவோ அவை உறுதியடையும் வகையில், (உலகம் சார்ந்த பொருட்களுக்கு மத்தியில்) எப்போதும் திரியும் தன் மனத்தை (பயிற்சியின் ஆதிக்கத்தின் கீழுள்ள) தன் ஐந்து வாயில்களில் {புலன்களில்} நிலைநிறுத்த வேண்டும். அவன், உடலில் இருந்தோ, வேறு எந்தப் புகலிடத்திலிருந்தோ தன் மனத்தைச் சார்பற்றதாகச் செய்து, இதய ஆகாயத்தின் யோகப் பாதையில் அதை {இதயத்தை} நிலைநிறுத்த வேண்டும்[2].(9) யோகியானவன், முதலில் தன் புலன்களையும், மனத்தையும் நொறுக்கி (தியானப் பாதையில் செலுத்த வேண்டும்) என்பதால், நான் முதலில் தியானப் பாதையைக் குறித்துப் பேசினேன்.(10)
[2] கும்பகோணம் பதிப்பில், "தீரனான மனிதன் விஷயங்களில் ஓடும் தன்மையுள்ளதும், பிடிப்பற்றதும், ஐந்து இந்திரியங்களையும் வழியாகக் கொண்டதும், ஸ்திரமில்லாத வஸ்துக்களில் ஸ்திரமாயிருப்பதுமான மனத்தை முதலில் தியான வழியில் நிலைபெறும்படி செய்ய வேண்டும். இந்த மனிதன் எப்பொழுது இந்திரியங்களையும் மனத்தையும் திரட்டி ஒன்றாகச் சேரும்படி செய்கிறானோ அப்பொழுது இது முதன்மையான த்யானவழியாகிறதென்று என்னால் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.
{புலன்களைத் தவிர்த்து} ஆறாவதாக இருக்கும் மனமானது இவ்வாறு அடக்கப்படும்போது, மேகங்களுக்கு மத்தியில் களித்தாடி கணிக்கப்படமுடியாத வேகத்தில் நகரும் மின்னலைப் போல மின்ன முனைகிறது.(11) ஒரு (தாமரை) இலையில் உள்ள நீர்த்துளி எவ்வாறு நிலையில்லாமல் அனைத்துத் திசைகளிலும் நகர்ந்து கொண்டிருக்கிறதோ, அவ்வாறே அந்த யோகியின் மனமும் தியானப் பாதையில் முதலில் நிலைக்கச் செய்யப்படும்போது {அப்பாதையில்} அலைபாய்கிறது.(12) இவ்வாறு நிலைக்கச்செய்யப்படும்போது, அந்த மனமானது சிறிது நேரத்திற்கு அந்தப் பாதையில் நிலைத்திருக்கிறது. எனினும், அது மீண்டும் காற்றின் பாதையில் சுற்றும்போது, காற்றைப் போலவே அது வேகம் கொள்கிறது.(13) தியான யோகத்தின் வழிகளை நன்கறிந்த மனிதன், இதனால் உற்சாகமிழக்காமல், உழைப்பு வீணானதை ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், சோம்பலையும், வன்மத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் தன் மனத்தைத் தியானத்தில் செலுத்த வேண்டும்.(14) ஒருவன், அமைதிநோன்பை {மௌனவிரதத்தை} நோற்று யோகத்தில் தன் மனத்தை நிலைபெறச் செய்யத் தொடங்கும்போது, பகுத்தறிவு {விகாரஸமாதி}, ஞானம் {விதர்க்கஸமாதி}, தீமையைத் தவிர்க்கும் சக்தி {விவேகஸமாதி} ஆகியவை அவனால் ஈட்டப்படுகின்றன[3].(15)
[3] "இங்கே விசாரம் vichaara, விவேகம் viveka மற்றும் விதர்க்கம் vitarka ஆகிய மூன்று சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை யோக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளைக் குறிக்கும் நுட்பமான சொற்களாகும். உரையாசிரியர் அவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "த்யானயோகத்தைத் தெரிந்து கொண்ட மனிதன் (இதில்) வெறுப்பில்லாமலும், வருத்தமில்லாமலும், சோம்பலில்லாமலும், மத்ஸரமில்லாமலும் திரும்பவும் மனத்தை த்யானத்துடன் சேர்த்து வைக்க வேண்டும். முதலாவதான த்யான வழியை அடைந்து ஸமாதியிலிருக்கும் யோகிக்கு ஆரம்பத்தில் விசாரஸமாதியும், விதர்க்கஸமாதியும், விவேகஸமாதியுமுண்டாகும்.
மனோவேகத்தின் விளைவாக எரிச்சலை உணர்ந்தாலும், அவன் அதை {மனத்தை} (தியானத்திலேயே) நிலைநிறுத்த வேண்டும். அந்த யோகி, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காமல், தன் நன்மையை நாட வேண்டும்.(16) புழுதி, அல்லது சாம்பல், அல்லது எரிக்கப்பட்ட சாணக் குவியல் நீரால் நனைக்கப்படும்போது நனையாதிருப்பதாகத் தோன்றி,(17) உண்மையில், அரைகுறையாக நனைக்கப்படும்போது காய்ந்ததாகவே இருந்து, அவை {சாம்பற்குவியல்கள்} முற்றாக நனையும் முன் இடையறாமல் தொடர்ந்து நனைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பது போல,(18) அந்த யோகியும் தன் புலன்களைப் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும். அவன் அவற்றை {புலன்களை} (அனைத்துப் பொருட்களில் இருந்தும்) படிப்படியாக விலக்க வேண்டும். இவ்வழியில் செயல்படும் மனிதன் அவற்றை {புலன்களைக்} கட்டுப்படுத்துவதில் வெல்கிறான்.(19) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒருவன் தன் மனத்தையும், புலன்களையும் தானே தியானப் பாதையில் செலுத்துவதால், உறுதிமிக்க யோகத்தின் மூலம் அவற்றை {புலன்களை} முழுக் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவருவதில் வெல்கிறான்.(20) தன் மனத்தையும், புலன்களையும் கட்டுப்படுத்துவதில் எவன் வெல்கிறானோ, அவன் முயற்சியாலோ, விதியாலோ ஒருபோதும் அடைய முடியாத இன்பநிலையை உணர்வான்[4].(21) அத்தகைய இன்பநிலையில் ஒன்றியிருக்கும் அவன், தியானச் செயல்பாட்டில் தொடர்ந்து மகிழ்கிறான். இவ்வாறே யோகிகள் அருள்மிக்க உயர்ந்த நிலையான நிர்வாணத்தை அடைகின்றனர்" என்றார் {பீஷ்மர்}.(22)
[4] "மனிதன் கொண்டிருக்கும் அனைத்தும் முயற்சி அல்லது விதியால் கிடைத்த விளைவே ஆகும்; அதாவது வெளிப்படையான செயல்பாடுகளில் செய்யப்படும் முயற்சி மற்றும் முற்பிறவியின் செயல்களைச் சார்ந்த விதி, அல்லது தேவர்களின் விருப்பம் அல்லது வெறும் வாய்ப்பின் மூலம் கிடைக்கும் பொருட்களே ஆகும். யோகத்தின் இன்பநிலை என்பது இவ்விரண்டு வழிமுறைகளால் அடையப்பட முடியாததாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 195ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |