Silent recitation! | Shanti-Parva-Section-196 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 23)
பதிவின் சுருக்கம் : ஜபம் செய்வதன் பலன்களையும், அவை செய்யப்பட வேண்டிய வழிமுறைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Silent recitation! | Shanti-Parva-Section-196 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "நீர் நால்வகை வாழ்வு முறைகள் {ஆசாரங்கள்} மற்றும் அவற்றின் கடமைகளைக் குறித்து உரையாடினீர். அதே போல மன்னர்களின் கடமைகளைக் குறித்தும் உரையாடினீர். பல்வேறு வகை வரலாறுகளையும், அவை தொடர்பான பல்வேறு காரியங்கள் குறித்தும் உரைத்தீர்.(1) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, அறநெறி தொடர்பான பல்வேறு உரைகளையும் நான் உம்மிடம் இருந்து கேட்டிருக்கிறேன். எனினும், எனக்கு ஓர் ஐயம் இருக்கிறது. அதைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(2) ஓ! பாரதரே, அமைதியாகப் புனித மந்திரங்களை ஓதுபவர்கள் {ஜபம் செய்பவர்கள்} (தங்கள் நடைமுறையால்) அடையும் கனிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அத்தகைய மனிதர்களுக்குக் குறிப்பிடப்படும் கனிகள் என்னென்ன? அவர்கள் இறந்த பிறகு எந்த உலகத்திற்குச் செல்வார்கள்?(3) ஓ! பாவமற்றவரே, அத்தகைய அமைதியான {மந்திர} ஓதலுக்கு {ஜபத்திற்கு} விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும். ஓதுவார் {ஜபிப்பவர்} என்ற சொல்லைக் கேட்கும்போது, அதன் மூலம் நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும்? அத்தகைய மனிதன், சாங்கிய, அல்லது யோக, அல்லது கர்ம விதிகளைப் பின்பற்றுபவனாகக் கருதப்பட வேண்டுமா?[1](4) அல்லது, அத்தகைய மனிதன் (மனோ) வேள்விகளுக்குரிய விதிகளை நோற்பவனாகக் கருதப்பட வேண்டுமா? ஓதுவார்களின் {ஜபிப்பவர்களின்} பாதை எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்? அண்ட அறிவைக் கொண்டவரென என்னால் கருதப்படும் நீர், இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
[1] "சாங்கியம் என்பது வேதாந்த விசாரத்தைக் குறிப்பால் உணர்த்துகிறது என உரையாசிரியர் புரிந்து கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, யமன், காலன் மற்றும் ஒரு குறிப்பிட்ட பிராமணருக்கு இடையில் என்ன நிகழ்ந்தது என்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது[2].(6) விடுதலையை {முக்தியை} அடையும் வழிமுறைகளை அறிந்த தவசிகள், சாங்கியம், யோகம் என்ற இரு வழிமுறைகளைக் குறித்துப் பேசியிருக்கின்றனர். இவற்றில், வேதாந்தம் என்றும் அழைக்கப்படும் முன்னதில் {சாங்கியத்தில்), அமைதியான ஓதல் {ஜபம்} என்பதைப் பொறுத்தவரை துறவே போதிக்கப்படுகிறது. (சடங்குகளில் இருந்து) விலகப் போதிக்கும் வேதங்களின் அறிவிப்புகள், அமைதி நிரம்பியவையாகவும், பிரம்மம் தொடர்பானவையாகவும் இருக்கின்றன[3].(7) நன்மை அடைய தவசிகளால் சுட்டப்படும் சாங்கியம் {ஞானம்} மற்றும் யோகம் ஆகிய இரு பாதைகளும், (அமைதியான ஓதல்களுக்கு) தொடர்பானதாகவும், தொடர்பில்லாததாகவும் இருக்கின்றன[4].(8)
[2] இந்தக்கதை சாந்தி பர்வம் பகுதி 199ல் விவரிக்கப்படுகிறது.
[3] "இந்தச் சுலோகம் மூன்று வரிகளைக் கொண்டதாக இருக்கிறது. இரண்டாம் வரியில் உள்ள வேதாந்தம் என்பது சாங்கியம் என்ற பொருளைக் கொண்டது என்று உரையாசிரியர் விளக்குகிறார். பிற காரியங்களில் வேதாந்தத்துக்கும், சாங்கியத்திற்கும் இடையில் வேறுபாடுகள் இருந்த போதிலும் இக்காரியத்தில் ஒத்துப் போவதால் இவ்வாறு சொல்லப்படுகிறது என நான் நினைக்கிறேன். சாங்கியத்தின்படி, மந்திரங்களை அமைதியாக உரைப்பதற்கான அவசியம் இல்லை என்பதைச் சொல்வதே இந்தச் சுலோகத்தின் நோக்கமாகும். குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொல்லாமல் செய்யப்படும் மனோ தியானமானது பிரம்மத்திற்கு வழிவகுக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "ஒருவன் தன் ஆன்மாவைக் காண்பதில் வெல்லாதவரை, அவன் பிரணவத்தையோ, மூலச் சொல்லான ஓம் என்பதையோ அமைதியாக ஓதலாம் என்று இரண்டும் {சாங்கியமும், யோகமும்} அறிவிக்கின்றன என உரையாசிரியர் விளக்குகிறார். எனினும், அவன் தன் ஆன்மாவைக் காண்பதில் வெல்லும்போது, அவன் அத்தகைய ஓதலைக் கைவிடலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(அந்த இரு பாதைகளிலும்) அமைதியான ஓதல் {ஜபம்} தொடர்பு கொண்டிருக்கும் முறையையும் {பிரவிருத்தி தர்மத்தையும்}, அதன் காரணத்தையும் நான் இப்போது விளக்கப் போகிறேன். அமைதியான ஓதலை {ஜபத்தைப்} பொறுத்தவரையில், இவ்விரண்டிலும் {சாங்கியம் மற்றும் யோகம் ஆகியவற்றில்}, புலன்களைக் கட்டுப்படுத்துவது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கி) மனத்தை நிலைநிறுத்துவது;(9) வாய்மை, (புனித) நெருப்பைப் பராமரித்தல், தனிமையில் வசித்தல், தியானம், தவம், தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, நன்மை செய்வதில் மனநாட்டம், உணவில் அளவோடிருத்தல்,(10) உலகம் சார்ந்த பற்றுகளில் இருந்து விலகல், பேசிக்கொண்டே இருப்பதைத் தவிர்த்தல், அமைதி ஆகியன அவசியமாகும். இவை (மறுபிறவியில் இன்பநிலைக்கோ, சொர்க்கத்திற்கோ செல்வது குறித்த ஆசையின் கனிக்கு வழிவகுக்கும்) ஒரு வேள்விக்கான {ஜபயஜ்ஞத்திற்கான} செயல்களாகும். (செயல்களில் இருந்து) விடுபடுவது தொடர்பான நடைமுறையை {நிவிருத்தி தர்மத்தை} இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.[5](11)
[5] "ஒருவன் இந்த உலகத்தில் பின்பற்றக்கூடிய இரு பாதைகள் இருக்கின்றன. ஒன்று பிரவிருத்தி தர்மம் மற்றும் மற்றொன்று நிவிருத்தி தர்மம் என்றும் அழைக்கப்படுகின்றன. முதல் வழியானது செயல்களின் நடைமுறையாகும்; இரண்டாவது செயலில் இருந்து விடுபடுவதாகும். சுலோகங்கள் 10 மற்றும் 11ல் சொல்லப்படும் பண்புகள் முதல் வழிக்குச் சொந்தமானவையாகும். எனவே பிரவிருத்தி அல்லது செயலை மூலமாகக் கொண்ட அவை பிரவர்த்தக யஜ்ஞம் அல்லது வேள்வி என்றழைக்கப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிரம்மச்சரிய நோன்பை நோற்று {புனித மந்திரங்களை} ஓதுபவனின் செயல்கள் {ஜபயஜ்ஞகர்மம்} நிற்கும் வகையைக் குறித்து நான் இப்போது அறிவிக்கப் போகிறேன். அத்தகைய மனிதன், என்னால் (ஏற்கனவே) சொல்லப்பட்ட ஒவ்வொரு வழியின்படியும் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்[6].(12) துறவுப் பாதையில் நடக்கும் ஒருவன், புறம் மற்றும் அகச் சார்புகள் இரண்டையும் விடுவதில் முனைய வேண்டும்.(13) குசப்புல்லில் அமர்ந்து, கையில் குசத்துடன், அவனது சடாமுடியை குசத்தால் கட்டி, தன்னைச் சுற்றிலும் குசத்தை வைத்துக் கொண்டு அவன் குச ஆடைகளை உடுக்க வேண்டும்.(14) உலகம் சார்ந்த அனைத்தையும் வணங்கும் அவன், அவற்றில் இருந்து விடுபட்டு, ஒருபோதும் அவற்றை நினைக்காமல் இருக்க வேண்டும். தன் மனத்தின் துணையுடன் சமநிலையை அடையும் அவன், தன் மனத்தை அந்த மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும்.(15)
[6] "அஃதாவது, அவன் முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள அறங்களை நோற்று தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உயர்ந்த நன்மையைத் தரும் (காயத்ரி என்ற) தொகுப்பை உரைத்துக் கொண்டும், அறிவின் துணையுடன் அவன் பிரம்மத்தை மட்டுமே தியானிக்க வேண்டும். அதன் பிறகு அவன், அதையும் கைவிட்டு, குவிந்த தியானத்தில் ஈர்க்கப்பட்டவனாக இருக்க வேண்டும்.(16) அவன் ஓதும் காயத்ரி {மந்திர} பலத்தைச் சார்ந்திருப்பதன் விளைவாக, குவிந்த தியானமானது தானே அவனுக்குக் கைக்கூடும். அவன் தவங்களின் மூலம் ஆன்மத் தூய்மை, தற்கட்டுப்பாடு, வெறுப்பின்மை மற்றும் ஆசைகளை அடைகிறான்.(17) பற்று மற்றும் மாயையிலிருந்து விடுபட்டு, (வெப்பம், குளிர், இன்ப துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கங்கள் அனைத்திற்கும் மேம்படும் அவன், ஒருபோதும் வருத்தம் அடையாமலும், உலகப் பொருட்களை நோக்கி இழுக்கப்படாமலும், ஒரு போதும் துன்பமடையாமலும் இருக்கிறான். அவன் தன்னைச் செயல்படுபவனாகவோ, தன் செயல்களின் விளைவுகளாலும் இன்புறுபவனாகவோ, துன்புறுபவனாகவோ கருதிக் கொள்வதில்லை.(18) தன்னலத்தின் மூலம் அவன் ஒருபோதும் வேறெதிலும் தன் மனத்தை நிலைநிறுத்துவதில்லை. செல்வத்தை அடைவதில் ஈடுபடாமல் இருக்கும் அவன், பிறரை அலட்சியம் செய்வதையோ, அவமதிப்பதையோ தவிர்க்கிறானேயன்றி செயல்படுவதைத் தவிர்ப்பதில்லை.(19)
அவன் தியானத்தில் ஈடுபடவே செயல்படுகிறான்; அவன் தியானத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறான, மாறாத தியான நாட்டம் கொண்டவனாக இருக்கிறான். அவன் தியானத்தின் மூலம் குவிந்த தியான {ஸமாதி} நிலையை அடைந்து, படிப்படியாக {காலகர்மத்தில்} தியானத்தையே கைவிடுகிறான்.(20) அந்நிலையில் அவன் அனைத்துப் பொருட்களையும் கைவிடுவதால் உண்டாகும் இன்பநிலையை அனுபவிக்கிறான். ஆசையின் கோட்பாடுகளில் முழுமையான திறன் பெற்ற அவன் தன் உயிர் மூச்சுகளை {ப்ராணன்களைக்} கைவிட்டுப் பிரம்மவுடலில் {ப்ரம்மரூபமானசரீரத்தில்} நுழைகிறான்.(21) அல்லது, அவன் பிரம்மவுடலுக்குள் நுழைய விரும்பவில்லையெனில், உடனே அவன் பிரம்மலோகத்திற்கு மேல்நோக்கி {தேவயானமென்னும் மார்க்கத்தில்} சென்று, மறுபிறப்பென்பதை மீண்டும் ஒருபோதும் அடையாமல் இருக்கிறான்.(22) அமைதித்தன்மையை {ஆத்மஞானத்தை} அடைந்து, அனைத்து வகைத் துன்பங்களில் இருந்தும் விடுபட்ட அத்தகைய மனிதன், தன் நுண்ணறிவைச் சார்ந்திருந்து, தூயதும், அழிவற்றதும், ஒரு களங்கமும் அற்றதுமான ஆன்மாவை அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(23)
சாந்திபர்வம் பகுதி – 196ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |