Silent recitation and rebirths! | Shanti-Parva-Section-197 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 24)
பதிவின் சுருக்கம் : விதிப்படி ஜபிக்காதவன் அடையும் நரகங்களை யுதிஷ்டிரனுக்குப் பட்டியலிட்ட பீஷ்மர்...
Silent recitation and rebirths! | Shanti-Parva-Section-197 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஜபம் செய்பவன் அடையும் உயர்ந்த கதியை நீர் சொன்னீர். இது மட்டுமே அவர்களது ஒரே கதியா? அல்லது அவர்கள் அடையக்கூடிய வேறேதும் கதிகள் உள்ளனவா?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பலமிக்க ஏகாதிபதியே, ஓ! மனிதர்களில் காளையே, ஜபம் செய்பவர்கள் அடையும் கதியையும், அவர்கள் மூழ்கும் பல்வேறு வகையான நரகங்களையும் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(2) ஜபம் செய்யும் எந்த மனிதன், வழிமுறைப்படி விதிக்கப்பட்டுள்ள நடத்தையில் நடந்து கொள்ள வில்லையோ, எவன் விதிக்கப்பட்ட சடங்கு, அல்லது ஒழுக்க நடைமுறையில் முழுமையாக நடந்து கொள்ள வில்லையோ, அவன் நரகத்திற்குச் செல்வான்[1].(3) நம்பிக்கையில்லாமல் ஜபம் செய்பவன், தன் செயல்பாட்டில் நிறைவில்லாதவன், அதில் எந்த மகிழ்ச்சியும் கொள்ளாதவன் ஐயமில்லாமல் நரகத்திற்குச் செல்வான்.(4) தங்கள் இதயங்களில் செருக்குடன் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் நரகத்திற்கே செல்வார்கள். ஜபம் செய்பவன் பிறரை அலட்சியம் செய்பவனாகவும், அவமதிப்பவனாகவும் இருந்தால், அவன் நரகத்திற்குச் செல்வான்.(5) ஜபம் செய்யும் மனிதன், உணர்வு முழுக்க ஆதிக்கத்தின் கீழும், கனியில் {பலனில்} உள்ள விருப்பத்தின் கீழும் அதில் ஈடுபட்டால், தன் இதயத்தில் இருக்கும் அந்தப் பொருட்கள் அனைத்தையும் அடைவான்[2].(6)
[1] இங்கே குறிப்பிடப்படும் நரகம், விடுதலை {முக்தி} என்பதற்கு எதிர்ப்பதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஜபிப்பவன் சொர்க்கத்தின் இன்பங்களை அடையலாம், ஆனால் விடுதலையை ஒப்பிடும்போது, மறுபிறப்போடு தொடர்புடைய எதுவும் நரகமேயாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
[2] "இதுவும் மறுபிறப்போடு தொடர்புடையது என்பதால் ஒருவகை நரகம் தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தெய்வப் பெயரைக் கொண்ட பண்புகளில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து ஜபம் செய்பவனும் நரகத்திற்கே சென்று, அதில் இருந்து ஒருபோதும் விடுபடமாட்டான்[3].(7) (உலகம் சார்ந்த நோக்கங்களான செல்வம், மனைவியர் போன்ற) பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழ் ஜபம் செய்பவன், தன் இதயத்தில் நிலைபெற்றிருக்கும் அந்த நோக்கங்களை அடைவான்.(8) தீய அறிவும், தூய்மையற்ற ஆன்மாவும் கொண்டு, நிலையில்லா மனத்துடன் பணியில் ஈடுபட்டு ஜபம் செய்யும் ஒருவன், நிலையற்ற கதியை அடைவான், அல்லது நரகத்திற்குச் செல்வான்.(9) ஞானமில்லாதவனும், மூடனுமான ஒருவன் ஜபம் செய்தால், மலைப்படையவோ, மாயைவசப்படவோ செய்வான்; அத்தகைய மாயையின் விளைவால் நரகத்திற்குச் சென்று வருந்துவான்.(10) உறுதியான இதயம் கொண்ட ஒரு மனிதன், முழு ஒழுக்கத்துடன் ஜபம் செய்தாலும், தங்கள் தீய குணத்தால், நேர்மையான நம்பிக்கையில்லாமல் பலவந்தமாகப் பற்றுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு {ஜப} நிறைவை அடையாமல் இருந்தால், அவனும் நரகத்திற்கே செல்வான்" என்றார் {பீஷ்மர்}.(11)
[3] "ஐஸ்வர்யம், அல்லது கடவுள் பண்புகள் என்பன நிச்சயம் யோகிகள் மற்றும் ஜபம் செய்பவர்கள் அடையப்படும் இயல்புக்குமிக்க சக்திகளே ஆகும். அவை வடிவில் சிறியதாகவோ, பெரியதாகவோ ஆவதற்கும், நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்வதற்கும், இதுபோன்ற அமானுஷ்ய செயல்களுக்கும் உதவும் சக்திகளாகும். இவையும் மறுபிறப்புடன் தொடர்புடையதால் நரகமேயாகும். விடுதலை {முக்தி}, அல்லது பரமாத்மாவுக்குள் ஈர்க்கப்படுதல் ஆகிய நிலைகளைத் தவிர்த்த வேறெந்த கதியும் முனையப்படக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜபஞ்செய்கிறவன் அணிமா முதலிய ஐச்வர்யங்களில் பற்றுதலுடன் எந்த ஐச்வர்யத்தில் ஆசை பெற்றிருக்கிறானோ அந்த ஐச்வர்யத்தின் ஆசையே அவனுக்கு நரகமாகும். அந்த மனிதன் அவ்வாசையிலிருந்து விடுதலை பெற மாட்டான்" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஜபம் செய்யும் ஒருவன், (படைக்கப்பட்ட எந்தப் பொருளையும் போலல்லாமல்) தன்னியல்பில் நிலைத்திருப்பதும், உயர்ந்ததும், விவரிக்க முடியாததும், புலப்பட முடியாததும் {நினைத்துப் பார்க்க முடியாததும்}, ஜபம் மற்றும் தியானத்தின் காரியமாக அமைந்திருக்கும் ஓம் எனும் அசையில் வசிப்பதுமான சாரத்தை அடையும்போது, (உண்மையில், ஜபம் செய்பவர்கள் பிரம்ம நிலையை அடையும்போது), அவர்கள் ஏன் உடல்கொண்ட வடிவங்களில் மீண்டும் மறுபிறப்படைய வேண்டியிருக்கிறது" என்று கேட்டான்.(12)
பீஷ்மர், "உண்மை அறிவும், ஞானமும் இல்லாததன் விளைவால் ஜபம் செய்பவர்கள் பல்வேறு நரகங்களை அடைகிறார்கள். ஜபம் செய்பவர்கள் பின்பற்றும் ஒழுக்கங்கள் நிச்சயம் மிக மேன்மையானவையாகும். எனினும், நான் சொன்னவை அனைத்தும் குற்றங்களால் நேர்பவையாகும்" என்றார் {பீஷ்மர்}.(13)
சாந்திபர்வம் பகுதி – 197ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |