Supreme region! | Shanti-Parva-Section-198 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 25)
பதிவின் சுருக்கம் : பரலோகத்திற்கும் பிற உலகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும், பரலோகத்தைத் தவிர ஜபிப்பவன் அடையும் வேறு எந்த உலகமும் நரகமே என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Supreme region! | Shanti-Parva-Section-198 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஜபிப்பவன் எவ்விதமான நரகத்தை அடைகிறான்? ஓ! மன்னா {பீஷ்மரே}, இஃதை அறிய ஆவலாக இருகிறேன். இது குறித்து என்னிடம் உரையாடுவதே உமக்குத் தகும்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நீ நீதிதேவனின் {தர்மதேவன்/ எமதர்மன்} ஒரு பகுதியில் இருந்து எழுந்தாய் {பிறந்தாய்}. நீ இயல்பாகவே நீதியை நோற்பவனாக இருக்கிறாய். ஓ! பாவமற்றவனே, நீதியை அடிப்படையாகக் கொண்ட இவ்வார்த்தைகளைச் சிதறாத கவனத்துடன் கேட்பாயாக.(2) பல்வேறு கூறுகள் மற்றும் வண்ணங்களைக் கொண்டவையும், பல்வேறு தன்மைகளையும், பல்வேறு கனிகளையும் உண்டாக்கவல்லவையும், பெரும் சிறப்பு வாய்ந்தவையும், செலுத்துபவர்களின் விருப்பங்களுக்கு ஏற்பச் செயல்படும் தேர்களைக் கொண்டவையும், தங்கத் தாமரைகள் பளபளக்கும் பல்வேறு இன்பத் தோட்டங்களைக் கொண்டவையும், அழகிய மாளிகைகள் மற்றும் நரகங்களைக் கொண்டவையும், உயர் ஆன்மத் தேவர்களுக்குச் சொந்தமானவையும், நான்கு லோகபாலர்கள், சுக்ரன், பிருஹஸ்பதி, மருத்துகள், விஸ்வதேவர்கள், சாத்யர்கள், அசுவினிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், வசுக்கள் மற்றும் பிற தேவர்களுக்குச் சொந்தமானவையுமான உலகங்களேகூட, பரமாத்மாவின் உலகத்தோடு ஒப்பிடப்படுகையில் நரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.(3-6)
இறுதியாகப் பேசப்பட்ட உலகமானது, (இழிந்த நிலைக்கு மாறிவிடும் என்ற) அச்சமேதும் இல்லாததும், படைக்கப்படாததும் (அதனால் உண்மை இயல்பைக் கொண்டதும்), (அறியாமை, மாயை போன்ற) துன்பமேதும் இல்லாததும், ஏற்புடைய, அல்லது ஏற்கப்படாத ஏதும் இல்லாததும், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) முக்குணங்களின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதும், (அடிப்படையான ஐந்து பூதங்கள், புலன்கள், மனம், புத்தி ஆகிய) {புரிபஷடகமென்னும்} எட்டில் இருந்து விடுபட்டதும், (அறிபவன், அறியப்படும் பொருள், அறியும் செயல் ஆகியவற்றுக்குள்ள வேறுபாடுகள்) மூன்றும் இல்லாததும்;(7) (பார்த்தல், கேட்டல், நினைத்தல், அறிதல் என்ற) நான்கு பண்பியல்களில் இருந்து விடுபட்டைதும், (அறிவின்) நான்கு வகைக் காரணங்கள் இல்லாததும், இன்பம், திளைப்பு, கவலை, நோய் ஆகியவை இல்லாததுமான ஓர் உலகமாகும்[1].(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "பரமாத்மரூபமானது, விநாசபயமில்லாததும், ஒரு காரணத்தாலுமுண்டாகாததும், அவித்யை முதலியை ஐந்துக்லேசங்களாலும் உண்டான பயத்தால் சூழப்படாததும், விருப்பு வெறுப்பு முதலிய இரட்டைகளிலிருந்து விடுபட்டதும், முக்குணங்களிலிருந்தும் விலகியதும், புரிபுஷ்டகமென்னும் எட்டுக்களாலும் விடப்பட்டதும், அறியப்படுவது அறிவு அறிகிறவன் என்ற மூன்றின் தன்மைகளாலும் விடப்பட்டதும் நான்கு விதமான அறிவுகளுக்கும் விஷயமாகாததும் அந்தநான்குக்கும் விஷயமாவதற்குத் தகுந்த காரணங்களிலாததும் ஸந்தோஷமில்லாததும் ஆனந்தமில்லாததும் சோகமில்லாததும் ச்ரமமில்லாததுமாயிருக்கிறது" என்றிருக்கிறது.
(கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் என்ற வடிவங்களில் உள்ள) காலம் அங்கே பயன்பாட்டுக்காக எழுகிறது. அங்கே காலம் ஆட்சியாளனாக இருப்பதில்லை. இந்த உயர்ந்த உலகமே {பரலோகமே / பரமாத்மாவே} காலத்திற்கும், சொர்க்கத்திற்கும் ஆட்சியாளனாக இருக்கிறது.(9) ஜபிப்பவன் எவன் (அனைத்தையும் தன் ஆன்மாவுக்குள் உள்ளிழுத்துக் கொண்டு அந்த) ஆன்மாவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறானோ, அவன் அங்கே செல்கிறான். அவன் அதற்குபிறகு எந்தக் கவலையையும் உணரமாட்டான். இதுவே பரலோகம் என்றழைக்கப்படுகிறது. (நான் உன்னிடம் முதலில் பேசிய) பிற உலகங்களே நரகங்கள் ஆகும்.(10) நரகம் என்றழைக்கப்படும் உலகங்கள் அனைத்தையும் நான் உன்னிடம் சொல்லிவிடவில்லை. உண்மையில், அந்த முதன்மையான உலகத்தோடு {பரலோகத்தோடு} ஒப்பிடுகையில், பிற உலகங்கள் அனைத்தும் நரகங்கள் என்றே அழைக்கப்படுகின்றன" என்றார் {பீஷ்மர்}.(11)
சாந்திபர்வம் பகுதி – 198ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |