The strength of recitation! | Shanti-Parva-Section-199 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 26)
பதிவின் சுருக்கம் : ஜபத்தின் வலிமையை விளக்க ஜபம் செய்த ஒரு பிராமணர், தன்மன், மன்னன் இக்ஷ்வாகு, காலன், மிருத்யு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "காலம், மிருத்யு, யமன், இக்ஷ்வாகு மற்றும் ஒரு பிராமணருக்கு இடையில் நடந்த சச்சரவு ஒன்றை நீர் முன்னர்க் குறிப்பிட்டீர். அந்தக் கதையை முழுமையாக உரைப்பதே உமக்குத் தகும்" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நான் பேசிக் கொண்டிருக்கும் காரியம் தொடர்புடையதும், சூரியனின் மகனான இக்ஷ்வாகு, ஒரு குறிப்பிட்ட பிராமணர், காலம் {காலதேவன்}, மிருத்யு {யமன்} ஆகியோருக்கு இடையில் நடந்ததுமான உரையாடலைச் சொல்லும் இந்தக்கதை ஒரு பழைய வரலாற்றில் தென்படுகிறது.(2) என்ன நடந்தது என்பதையும், அவர்களுக்குள் நடைபெற்ற அந்த உரையாடலையும், அஃது எங்கு நடைபெற்றது என்பதையும் என்னிடம் இருந்து கேட்பாயாக.(3) பெரும்புகழையும், பக்திமானுக்குரிய நடத்தையையும் கொண்ட குறிப்பிட்ட பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் ஜபம் செய்பவராக இருந்தார். பெரும் ஞானத்தைக் கொண்டிருந்த அவர், (வேதங்களின்) ஆறு அங்கங்களையும் அறிந்தவராக இருந்தார். அவர் குசிக குலத்தைச் சேர்ந்தவராகவும், பிப்பலாதரின் மகனாகவும் இருந்தார்[1].(4) அவர் (தமது தவங்களின் மூலமாக) அங்கங்களின் ஆன்ம உட்பொருளை அடைந்தார்[2]. இமயத்தின் அடிவாரத்தில் வசித்து வந்த அவர் வேதங்களுக்குத் தம்மை அர்ப்பணித்தவராக இருந்தார்.(5)
[1] "இங்கே குறிப்பிடப்படும் ஆறு அங்கங்களாவன சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம் மற்றும் ஜ்யோதிஷம் என்பனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இந்த ஆறு அங்கங்கள் என்ற வார்த்தைகளுக்கு அடிக்குறிப்பில், "வேதாங்கங்கள் ஆறு; அல்லது ஹ்ருதயம், சிரஸ், சிகை, கவசம் நேத்ரம், அஸ்த்ரம் என்று மந்திரங்களுக்குள்ள அங்கங்கள் ஆறுமாம்" என்றிருக்கிறது.[2] "இயல்பான வழியில் அடையப்படாமல், உள்ளுணர்வால் அடையப்பட்ட உட்பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காயத்ரி தொகுப்பை அமைதியாக ஜபித்து வந்த அவர், பிரம்மத்தை அடைவதற்காகக் கடும் தவங்களைச் செய்து வந்தார். அவர் நோன்புகளிலும், உபவாசங்களிலும் ஈடுபட்டு வரும்போதே ஓராயிரம் {1000} வருடங்கள் கடந்தன.(6) (காயத்ரி அல்லது சாவித்ரி) தேவரி அவர் முன்பு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, "நான் உம்மிடம் நிறைவுகொண்டேன்" என்றாள். அந்தப் பிராமணரோ அமைதியாக அந்தப் புனித மந்திரம் உரைப்பதைத் தொடர்ந்தபடியே அந்தத் தேவியிடம் ஒருவார்த்தையும் பேசாதிருந்தார்.(7) அவரிடம் இரக்கமடைந்த அந்தத் தேவி மிகவும் நிறைவடைந்தவளானால். அப்போது அந்த வேதங்களின் மூதன்னை, அந்தப் பிராமணர் ஈடுபட்டிருந்த ஜபத்தை மெச்சினாள்.(8) அந்தப் பிராமணர் (அந்த நாளைக்கான) ஜபத்தை நிறைவு செய்து எழுந்து, தலை வணங்கி அந்தத் தேவியின் பாதங்களில் தம்மை நெடுஞ்சாண்கிடையாகக் கிடத்திக் கொண்டார்.
உயர் ஆன்மா கொண்டவரான அந்த ஜபம் செய்பவர், அந்தத் தேவியிடம்,(9) "ஓ! தேவி, என் நற்பேற்றினாலேயே நீ என்னிடம் நிறைவு கொண்டு, எனக்குக் காட்சியளிக்கவும் வந்தாய். உண்மையில், நீ என்னிடம் நிறைவு கொண்டவளாக இருந்தால், என் இதயம் ஜபத்திலேயே இன்புறுவதாக இருக்க வேண்டும் என்ற வரத்தையே நான் கேட்பேன்" என்றார்.(10)
சாவித்ரி {காயத்ரி}, "ஓ! மறுபிறப்பாள முனிவரே, நீர் என்ன கேட்கிறீர்? நான் நிறைவேற்ற வேண்டிய உமது விருப்பம் யாது? ஓ! ஜபிப்பவர்களில் முதன்மையானவரே, நீர் விரும்பும் அனைத்தையும் என்னிடம் சொல்வீராக" என்று கேட்டாள்.(11)
இவ்வாறு அந்தத் தேவியால் சொல்லப்பட்டவரும், கடமைகளை அறிந்தவருமான அந்தப் பிராமணர், "ஜபம் செய்வதில் எனக்குள்ள விருப்பமானது ஒவ்வொரு கணமும் அதிகரிக்க வேண்டும்.(12) ஓ! மங்கலகரமான தேவியே, என் மனத்திற்குள் ஈர்க்கப்படும் ஸமாதி நிலையானது இன்னும் அதிகமாக முழுமை பெற வேண்டும்" என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தேவி இனிமையாக, "நீர் விரும்பியவாறே ஆகட்டும்" என்றாள்.(13)
அந்தப் பிராமணருக்கு நன்மை செய்ய விரும்பிய அந்தத் தேவி மீண்டும் அவரிடம், "பெரும் பிராமணர்களும் செல்லத்தக்க நரகத்திற்கு நீர் செல்லமாட்டீர்.(14) படைக்கப்படாததும், அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டதுமான பிரம்ம லோகத்திற்கு நீர் செல்வீர். நான் இப்போது செல்கிறேன், நீர் என்னிடம் கேட்டது நடக்கும்.(15) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவுடனும், {மெய்மறந்த நிலையில்} குவிந்த கவனத்துடனும் ஜபித்துக் கொண்டிருப்பீராக. தர்மதேவனே உம்மிடம் நேரில் வருவான். காலம், மிருத்யு, யமன் ஆகியோர் உம்மிடம் வருவார்கள். அறநெறி குறித்த கேள்வி ஒன்றின் நிமித்தமாக உமக்கும் அவர்களுக்குமிடையில் ஒரு சச்சரவு எழும்" என்றாள் {சாவித்ரி தேவி}".(16)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தேவி தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றாள். அந்தப் பிராமணர் இன்னும் ஓராயிரம் தேவ வருடங்களுக்கு ஜபத்தில் ஈடுபட்டார். கோபத்தைக் கட்டுப்படுத்தி, எப்போதும் சுயத்தையும் கட்டுப்படுத்திய அவர், உண்மைக்கு உறுதியான அர்ப்பணிப்புடனும், வன்மத்தில் இருந்தும் விடுபட்டவராகவும் இருந்தார்.(17) நுண்ணறிவு மிக்கப் பிராமணருடைய நோன்பின் நிறைவில் அவரிடம் நிறைவடைந்த தர்மன் {தர்மதேவன்}, அந்த மறுபிறப்பாளரிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்.(18)
தர்மன், "ஓ! மறுபிறப்பாளரே, தர்மனான என்னைப் பாரும். உம்மைக் காண்பதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நீர் ஈடுபட்டுவரும் இந்த ஜபத்திற்கான வெகுமதியை வென்றுவிட்டீர். அந்த வெகுமதியானது என்ன என்பதை என்னிடம் கேட்பீராக.(19) தேவர்கள் அல்லது மனிதர்கள் தொடர்புடைய அனைத்து இன்பலோகங்களையும் நீர் வென்றிருக்கிறீர். ஓ! நல்ல மனிதரே, தேவர்களின் வசிப்பிடங்கள் அனைத்திற்கும் மேலாக நீர் உயர்ந்திருப்பீர்.(20) ஓ! தவசியே, நீர் உமது உயிர் மூச்சை விட்டு, நீர் விரும்பிய உலகங்களுக்குச் செல்வீராக. உமது உடலைக் கைவிடுவதன் மூலம் நீர் இன்ப உலகங்கள் பலவற்றை நீர் வெல்வீர்" என்றான் {தர்மதேவன்}.(21)
அந்தப் பிராமணர், "நீர் சொல்லும் அந்த இன்ப உலகங்களில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? ஓ! தர்மா, நீர் விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பலமிக்கத் தலைவா, இன்பத்திற்கும், துன்பத்திற்கும் ஆட்படும் இவ்வுடலை நான் கைவிடமாட்டேன்" என்றார்.(22)
தர்மன், "ஓ! தவசிகளில் முதன்மையானவரே, உமது உடல் நிச்சயம் கைவிடப்பட வேண்டும். ஓ! பிராமணரே, நீர் சொர்க்கத்திற்கு உயர்வீராக. அல்லது, ஓ! பாவமற்றவரே, உமக்கு விருப்பமுள்ள வேறு எதையும் எங்களுக்குச் சொல்வீராக என்றான்.(23)
அந்தப் பிராமணர், "ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்தில் வசிக்க விரும்பவில்லை. ஓ! தர்மா, என்னைவிட்டுச் செல்வாயாக. என்னுடைய உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை" என்றார்.(24)
தர்மன், "(இவ்வாறு) இந்த உம்முடைய உடலில் உமது இதயத்தை நிலைக்கச் செய்யாமல் அதைக் கைவிட்டு மகிழ்ச்சியை அடைவீராக. ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} இருந்து விடுபட்ட உலகங்களுக்குச் செல்வீராக. உண்மையில், நீர் அங்கே சென்றால எந்தத் துன்பத்தையும் உணர மாட்டீர்" என்றான்.(25)
அந்தப் பிராமணர், "ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நான் ஜபிப்பதிலேயே பேரின்பம் கொள்கிறேன். நீ சொல்லும் அந்த அழிவற்ற உலகங்களில் எனக்கு என்ன தேவை இருக்கிறது? உண்மையில், ஓ! பலமிக்கத் தலைவா, என்னுடைய இந்த உடல் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை" என்றார்.(26)
தர்மன், "ஓ! மறுபிறப்பாளரே, உமது உடலைக் கைவிட நீர் விரும்பவில்லையெனில், உம்மை அணுகிக் கொண்டிருக்கும் காலன், மிருத்யு, யமன் ஆகியோரைக் காண்பீராக" என்றான்".(27)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! அருளப்பட்ட மன்னா {யுதிஷ்டிரா} தர்மன் இதைச் சொன்னதும், (இந்த உலகத்தில் இருந்து அனைத்து உயிரினங்களையும் பறித்துச் செல்பவர்களான) விவஸ்வானின் மகன் (யமன்), காலன் மற்றும் மிருத்யு ஆகிய மூவரும் அந்தப் பிராமணரை அணுகி, அவரிடம் இவ்வாறு பேசினார்கள்.(28)
யமன், "நானே யமன். உம்மால் நன்கு செய்யப்பட்ட இந்தத் தவங்களுக்காகவும், நீர் நோற்று வந்த பக்தி ஒழுக்கத்திற்காகவும் உமக்கு உயர்ந்த வெகுமதி காத்திருக்கிறது" என்றான்.(29)
காலன், "உண்மையில், நீர் செய்து வந்த ஜபத்தின் நிறைவாக உயர்ந்த வெகுமதியை வென்றிருக்கிறீர். நீர் சொர்க்கத்திற்கு உயர வேண்டிய காலம் வந்துவிட்டது. நானே காலன், நான் உம்மிடம் வந்திருக்கிறேன்" என்றான்.(30)
மிருத்யு, "ஓ! அறமறிந்தவரே, நான் உரிய வடிவைக் கொண்ட மிருத்யுதேவியாவேன். ஓ! பிராமணரே, காலத்தால் தூண்டப்பட்டு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் உம்மிடம் வந்திருக்கிறேன்" என்றாள்.(31)
அந்தப் பிராமணர், "சூரியனின் மகனுக்கும் {யமனுக்கும்}, உயர் ஆன்மக் காலனுக்கும், மிருத்யுதேவிக்கும், தர்மனுக்கும் நல்வரவு. உங்கள் அனைவருக்கும் நான் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டார்".(32)
பீஷ்மர் தொடர்ந்தார், "அந்தச் சந்திப்பில், அந்தப் பிராமணர் அவர்களுடைய கால்களைக் கழுவிக் கொள்வதற்கு நீரும், அர்க்யத்திற்குத் தேவையான வழக்கமான பொருட்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். பிறகு, மிகவும் நிறைவடைந்த அவர், அவர்களிடம், "என் வலிமையைக் கொண்டு உங்கள் அனைவருக்கும் நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.(33)
சரியாக அதே நேரத்தில், புனித நீர்நிலைகள் மற்றும் புண்ணியத் தலங்களுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த (மன்னன்) இக்ஷ்வாகு, தேவர்கள் ஒன்றுகூடியிருந்த அந்த இடத்திற்கு வந்தான்.(34) அரசமுனியான அந்த இக்ஷ்வாகு தலைவணங்கி அவர்கள் அனைவரையும் வழிபட்டான். மன்னர்களில் சிறந்த அவன் பிறகு அவர்கள் அனைவரின் நலன் குறித்தும் விசாரித்தான்.(35) அந்தப் பிராமணர் மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} ஓர் இருக்கையையும், அவனது பாதம் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான அர்க்யமும் கொடுத்தார். அடுத்ததாக வழக்கமான அன்பு விசாரிப்புகளுக்குப் பிறகு அவர்,(36) "ஓ! பெரும் ஏகாதிபதியே, உனக்கு நல்வரவு. உன் விருப்பங்கள் அனைத்தையும் என்னிடம் சொல்வாயாக. உன்னதமானவனான நீ, என் வலிமையைக் கொண்டு நான் உனக்கு நிறைவேற்ற வேண்டியற்றை எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார்.(37)
மன்னன் {இக்ஷ்வாகு}, "நான் ஒரு மன்னனாவேன். நீரோ நன்கறியப்பட்ட ஆறு கடமைகளைச் செய்யும் ஒரு பிராமணராவீர். (நான் கேட்க முடியாது), {எனவே} நான் உமக்குக் கொஞ்சம் செல்வம் தருகிறேன். அது நன்கறியப்பட்டது. நான் உமக்கு எவ்வளவு தரவேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(38)
அந்தப் பிராமணர், "ஓ ஏகாதிபதி, இரு வகைப் பிராமணர்கள் இருக்கிறார்கள். செயலுக்கு அடிமை, செயலின்மை என்ற இருவகை அறநெறிகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில், கொடைகள் எதையும் ஏற்பதை நான் விலக்குகிறேன்.(39) ஓ! மன்னா, செயல் மற்றும் ஏற்பு ஆகிய கடமைகளுக்கு அடிமையாக இருப்போருக்கு அந்தக் கொடைகளை அளிப்பாயாக. எனவே, நான் கொடையாக எதையும் ஏற்க மாட்டேன். மறுபுறம், உனக்கு எது நன்மையானது என்பதை நான் உன்னிடம் கேட்கிறேன்? உண்மையில், நான் உனக்கு என்ன தர வேண்டும்? ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, என் தவத்தின் மூலம் நான் அதை நிறைவேற்றுகிறேன், சொல்வாயாக" என்று கேட்டார்.(40)
மன்னன் {இக்ஷ்வாகு}, "நான் ஒரு க்ஷத்திரியன். கொடுப்பீர் என்ற சொல்லை எவ்வாறு சொல்வது என்பதை நான் அறியமாட்டேன். ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நாங்கள் கேட்கக் கூடிய ஒன்றே ஒன்று போரை எங்களுக்குக் கொடுப்பீராக என்பது மட்டும்தான்" என்றான்.(41)
பிராமணர், "நீ உன் வகைக்கான கடமையைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறாய். அதே போலவே, ஓ! மன்னா, நான் என் கடமைகளைச் செய்வதில் நிறைவுடன் இருக்கிறேன். எனவே, நம்மிடைய மிகச் சிறிய வேறுபாடுதான் இருக்கிறது. நீ விரும்பியவாறு செயல்படுவாயாக" என்றார்.(42)
மன்னன், "நீர், "என் வலிமைக்குத் தகுந்ததை நான் உனக்குக் கொடுப்பேன்" என்ற வார்த்தைகளை முதலில் சொன்னீர். எனவே, ஓ! மறுபிறப்பாளரே, "(நீர் செய்த) ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுப்பீராக" என்பதை நான் வேண்டுகிறேன்" என்றான்.(43)
பிராமணர், "நீ எப்போதும் போரையே கேட்பாய் என்று தற்பெருமை பேசிக் கொண்டிருந்தாய். பிறகு ஏன் நீ என்னிடம் போரைக் கேட்கவில்லை?" என்று கேட்டார்.(44)
மன்னன், "பிராமணர்கள், பேச்செனும் இடியைத் தரித்தவர்கள் என்றும், க்ஷத்திரியர்கள் கர வலிமையைக் கொண்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, ஓ! கல்விமானான பிராமணரே, உனக்கும் எனக்கும் இடையில் இந்தச் சொற்போர் தொடங்கியிருக்கிறது" என்றான்.(45)
பிராமணர், "என்னைப் பொறுத்தவரையில், இன்று என்தீர்மானமும் அதுவேதான். என் வலிமைக்குத்தக்க நான் என்ன உனக்குக் கொடுக்க வேண்டும்? ஓ! மன்னர்களின் மன்னா, சொல்வாயாக, என் செல்வத்தைக் கொண்டு நான் உனக்குக் கொடுப்பேன். தாமதிக்காதே" என்றார்.(46)
மன்னன், "உண்மையில், நீர் எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென விரும்பினால், இந்த ஆயிரக்கணக்கான வருடங்களாக ஜபம் செய்ததன் மூலம் நீர் ஈட்டிருக்கும் கனிகளை எனக்குக் கொடுப்பீராக" என்று கேட்டான்.(47)
அந்தப் பிராமணர், "நான் செய்த ஜபங்களின் உயர்ந்த கனியை எடுத்துக் கொள்வாயாக. உண்மையில், அந்தக் கனியில் பாதியை எந்த ஐயுணர்வுமின்றி எடுத்துக் கொள்வாயாக.(48) அல்லது, ஓ! மன்னா, நீ விரும்பினால் என் ஜபக்கனிகளை மொத்தமாகவும் எந்த ஐயுணர்வின்றி எடுத்துக் கொள்வாயாக" என்றார்.(49)
மன்னன், "நீர் அருளப்பட்டிருப்பீராக. நான் உம்மிடம் வேண்டிய உமது ஜபங்களின் கனிகளுக்கான எந்தத் தேவையும் எனக்கு இல்லை. உமது தலையின் மேல் அருள் நிலைக்கட்டும். நான் உம்மைவிட்டுச் செல்கிறேன். எனினும், (உமது ஜபங்களின்) அந்தக் கனிகள் என்னென்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(50)
அதற்கு அந்தப் பிராமணர், "நான் வென்ற கனிகள் குறித்த எந்த ஞானமும் எனக்குக் கிடையாது. எனினும், ஜபத்தின் மூலம் நான் அடைந்த அந்தக் கனிகளை நான் கொண்டிருக்கிறேன். தர்மன், காலன், யமன், மிருத்யு ஆகியோர் (அந்தக் கொடைச் செயலின்) சாட்சிகளாவர்" என்றார்.(51)
மன்னன், "இந்த நோன்புகளின் மூலம் நீர் அடைந்த அந்தக் கனிகளால் எனக்கு என்ன செய்ய முடியும்? உமது ஜபங்களின் கனிகள் என்ன என்பதை எனக்கு உம்மால் சொல்ல முடியவில்லை என்றால், நிச்சயம் எனக்கு விருப்பமில்லாத அந்தக் கனிகள் உமதாகவே இருக்கட்டும்" என்றான்.(52)
பிராமணர், "நான் (உன்னிடம் இருந்து) வேறெதையும் ஏற்கமாட்டேன். ஓ! அரச முனியே, உன் வார்த்தைகளும், என் வார்த்தைகளும் உண்மையாக வேண்டும்.(53) என் ஜபத்தைப் பொறுத்தவரையில், சிறப்பான எந்த ஒரு விருப்பத்தையும் நான் பேணி வளர்த்ததில்லை. ஓ! மனிதர்களில் புலியே, பிறகு எவ்வாறு, அந்த ஜபங்களுக்கான கனிகளைக் குறித்த எந்த அறிவையும் நான் கொண்டிருப்பேன்?(54) நீ, "கொடுப்பீர்" என்றாய், நானும், "நான் கொடுத்தேன்" என்றேன். என்னால இந்த வார்த்தைகளைப் பொய்த்துக் கொள்ள முடியாது. வாய்மை காப்பாயாக. அமைதியாய் இருப்பாயாக.(55) ஓ! மன்னா, நீ என் வார்த்தையை மறுத்தால் பொய்மை மூலம் உனக்கு உண்டாகும் பாவம் பெரியதாக இருக்கும்.(56) ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே, உண்மையற்ற ஒன்றைச் சொல்வது உனக்குத் தகாது. அதேபோல, நானும் நான் சொன்னதைப் பொய்த்துக் கொள்ள ஒருபோதும் துணியமாட்டேன்.(57) இதற்கு முன்பே, எந்தத் தயக்கமும் இல்லாமல் "நான் கொடுக்கிறேன்" என்று சொல்லிவிட்டேன். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், என் கொடையை ஏற்பாயாக.(58) ஓ! மன்னா, நீ இங்கே வந்து என் ஜபங்களின் கனிகளை வேண்டினாய். எனவே, நீ வாய்மையில் உறுதியுள்ளவனாக இருந்தால், நான் கொடுத்ததைப் பெற்றுக் கொள்வாயாக.(59) பொய்மைக்கு அடிமையாக இருப்பவனுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை. அத்தகைய மனிதன் (இறந்து போன தன்) மூதாதையர்களை மீட்பதில் தவறுகிறான். அவ்வாறிருக்கையில், (பிறக்கப் போகும் அவனுடைய) வாரிசுக்கு நன்மை செய்வதால் அவனால் எவ்வாறு வெல்ல முடியும்?(60)
ஓ! மனிதர்களில் காளையே, வேள்விகள், கொடைகள், நோன்புகள், அறச் சடங்குகள் ஆகியனவும் (ஒரு மனிதனைத் தீமையிலும், நரகத்திலும் இருந்து) இம்மையிலும், மறுமையிலும் மீட்பதில் வாய்மையை விடச் சிறந்தவை கிடையாது.(61) உன்னால் செய்யப்பட்ட தவங்கள் அனைத்தும், எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ செய்யப்போகும் தவங்கள் அனைத்தும் சிறப்பில் வாய்மையைவிடப் பெரியன கிடையாது.(62) வாய்மையே அழிவில்லா பிரம்மமாகும் {பரமாத்மரூபமாகும்}. வாய்மையே அழிவில்லாத தவமாகும். வாய்மையே அழிவல்லாத வேள்வியாகும். வாய்மையே அழிவில்லாத வேதமாகும்.(63) வாய்மை வேதங்களில் விழித்திருக்கிறது {விளங்கிக் கொண்டிருக்கிறது}. வாய்மையுடன் பிணைக்கப்பட்ட கனிகளே உயர்ந்தவையாகச் சொல்லப்படுகின்றன. வாய்மையிலிருந்து அறமும், தற்கட்டுப்பாடும் எழுகின்றன. அனைத்தும் வாய்மையைச் சார்ந்தே இருக்கின்றன {வாய்மையிலேயே நிலைபெற்றிருக்கின்றன}.(64) வாய்மையே வேதங்களும், அவற்றின் அங்கங்களுமாகும். வாய்மையே அறிவாகும். வாய்மையே விதியாகும். வாய்மையே நோன்புகளும், உபவாசங்களுமாகும். வாய்மையே தொடக்கச் சொல்லான ஓம் ஆகும் {ஓங்காரமானது ஸத்யமாகவேயிருக்கிறது}.(65)
வாய்மையே உயிரினங்களின் தோற்றமாகும். வாய்மையே அவற்றின் சந்ததியாகிறது. வாய்மையின் மூலமே காற்று {வாயு} நகர்கிறது. வாய்மையின் மூலமே சூரியன் வெப்பத்தைக் கொடுக்கிறது.(66) வாய்மையின் மூலமே நெருப்பு எரிகிறது. வாய்மையிலேயே சொர்க்கமும் நிலைபெற்றிருக்கிறது. வாய்மையே, வேள்வி, தவம், வேதங்கள், சாம வேத சொற்கள்[3], மந்திரங்கள் மற்றும் சரஸ்வதி ஆகும்.(67) ஒரு காலத்தில் வாய்மையும், அனைத்து அறச்சடங்குகளையும் தராசின் இரு தட்டுகளில் நிறுத்தப்பட்டன என்று நாம் கேள்விப்படுகிறோம். இரண்டையும் எடை பார்த்தபோது, வாய்மையிருந்த பக்கமே கனம் அதிகமாக இருந்தது.(68) எங்கே வாய்மை இருக்குமோ அங்கே அறம் இருக்கிறது. வாய்மையின் மூலமே அனைத்தும் அதிகரிக்கிறது. ஓ! மன்னா, பொய்மையின் களங்கம் கொண்ட ஒரு செயலைச் செய்ய நீ ஏன் விரும்புகிறாய்?(69) வாய்மையில் உறுதியுடன் இருப்பாயாக. ஓ! ஏகாதிபதி தவறாகச் செயல்படாதே. "(எனக்குக்) கொடுப்பீர்" என்று நீ சொன்ன வார்த்தைகளே ஏன் பொய்யாக்கப் போகிறாய்?(70) ஓ! ஏகாதிபதி, நான் உனக்குக் கொடுத்த என் ஜபங்களுக்கான கனிகளை நீ ஏற்க மறுத்தால், நீ அறத்தில் இருந்து வீழ்ந்து உலகத்தில் திரிய வேண்டியிருக்கும்.(71) உறுதிமொழியளித்த பிறகு கொடுக்காத மனிதனும், வேண்டிய பிறகு அஃதை ஏற்காத மனிதனும் என இருவரும் பொய்மையால் களங்கப்படுவார்கள். எனவே, நீன் உன் வார்த்தைகளைப் பொய்யாக்குவது உனக்குத் தகாது" என்றார் {பிராமணர்}.(72)
[3] கும்பகோணம் பதிப்பில் "ஸ்தோபங்கள்" என்று குறிப்பிடப்படுகிறது. அதன் அடிக்குறிப்பில், "ரிக்கில்லாமல் ஸாமவேதத்தின் இடையில்வரும் அக்ஷரங்கள்" என்றிருக்கிறது.
மன்னன், "போரிடுவதும், (குடிமக்களைக்) காப்பதுமே க்ஷத்திரியர்களின் கடமைகளாகும். க்ஷத்திரியர்கள் (கொடைகளைக்) கொடுப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. பிறகு என்னால் எவ்வாறு நீர் (கொடையாகக் கொடுக்கும்) எதையும் ஏற்க முடியும்?" என்று கேட்டான்.(73)
அந்தப் பிராமணர், "ஓ! மன்னா, (முதலில் என்னிடம் இருந்து எதையும் ஏற்றுக்கொள்ளுமாறு ) ஒருபோதும் நான் சொல்லவில்லை. நான் வீட்டையும் நாடி வரவில்லை. நீயே இங்கு வந்து என்னிடம் வேண்டினாய். பிறகு ஏன் நீ ஏற்க மறுக்கிறாய்?" என்று கேட்டார்.(74)
தர்மன், "நானே தர்மன் என்று நீங்கள் இருவரும் அறிவீராக. உங்களுக்கிடையில் எந்தச் சச்சரவும் வேண்டாம். கொடையுடன் பிணைந்திருக்கும் வெகுமதி பிராமணருடையதாக இருக்கட்டும், வாய்மையின் தகுதியை {புண்ணியத்தை} இந்த ஏகாதிபதி அடையட்டும்" என்றான்.(75)
சொர்க்கம், "ஓ! பெரும் மன்னா, நான் உடல்வடிவம் கொண்டு இங்கே வந்திருக்கும் சொர்க்கம் என்பதை அறிவாயாக. உங்களுக்கிடையிலான இந்தச் சச்சரவு நிற்கட்டும். நீங்கள் ஈட்டிய தகுதி, அல்லது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீங்கள் இருவரும் சமமானவர்களே" என்றது.(76)
மன்னன் {இக்ஷ்வாகு}, "சொர்க்கத்தால் எனக்கு எந்தப் பயனும் கிடையாது. ஓ! சொர்க்கமே, நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே செல்வாயாக. கல்விமானான இதநப் பிராமணர் உன்னுடம் வர விரும்பினால், (வாழ்க்கையில் என் செயல்களின் மூலம்) நான் வென்ற வெகுமதிகளையும் எடுத்துக் கொண்டு உன்னோடு செல்லட்டும்" என்றான்.(77)
அந்தப் பிராமணர், "என் இளமைக் காலத்தில், அறியாமையின் மூலம் (கொடைகளை ஏற்பதற்காக) நான் என் கரங்களை நீட்டியிருக்கிறேன். எனினும், தற்போது துறவுக் {தவிர்க்கும்} கடமையை நோற்றபடி நான் காயத்ரியை ஜபித்து வருகிறேன்[4].(78) ஓ! மன்னா, துறவு {தவிர்க்கும்} கடமையை நீண்ட காலமாக நோற்கும் எனக்கு ஏன் இவ்வாறு ஆசை காட்டுகிறாய்? நான் என் கடமையை நானே செய்வேன். ஓ! ஏகாதிபதி உன்னால் வெல்லப்பட்ட வெகுமதிகளின் எந்தப் பங்கையும் பெற நான் விரும்பவில்லை. நான் தவங்களுக்கும் வேதங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருந்து {பிச்சை} ஏற்பதைத் தவிர்த்து வருகிறேன்" என்றார்.(79)
[4] "செயல்படுவதும், செயலைத் தவிர்ப்பதும் பரிந்துரைக்கப்பட்ட, அல்லது பின்பற்றத்தக்க கடமையின் இரண்டு விழிமுறைகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னன் {இக்ஷ்வாகு}, "ஓ! பிராமணரே, நீர் உமது ஜபத்தின் சிறந்த வெகுமதியை எனக்கு உண்மையில் கொடுக்கிறீர் என்றால், அந்த வெகுமதியில் பாதி எனதாகட்டும். அதேபோல என் செயல்களின் மூலம் நான் வென்ற வெகுமதியில் பாதியை நீர் எடுத்துக் கொள்வீராக.(80) பிராமணர்கள் ஏற்புக் கடமையில் ஈடுபடுகிறார்கள். அரச வகையில் பிறந்த மனிதர்கள் கொடுக்கும் கடமையில் ஈடுபடுகிறார்கள். (இரு வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கும்) கடமைகளை நீ அறியாவிட்டால், (நான் பரிந்துரைத்தபடியே) நமது கனிகள் சமமாக இருக்கட்டும்.(81) அல்லது நமது வெகுமதிகளைப் பொறுத்தவரையில் நீர் எனக்கு இணையானவராக இருக்க விரும்பவில்லையென்றால், நான் வென்ற வெகுமதிகள் மொத்தத்தையும் நீரே எடுத்துக் கொள்ளும். நீன் எனக்கு அருள்தர விரும்பினால், நான் வென்ற தகுதியை {புண்ணியத்தைப்} பெற்றுக் கொள்வீராக" என்றான்".(82)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த நேரத்தில் விரும்பத்தகாத தோற்றத்தைக் கொண்ட இருவர் {விரூபன், விக்ருதன்} அங்கே வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் அடுத்தவன் தோள் மீது தன் கரத்தை வைத்திருந்தனர்; இருவரும் மோசமான ஆடைகளை உடுத்தியிருந்தனர். அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்:(83) "நீ எனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம்" என்றும், "உண்மையில் நான் உனக்குக் கொடுக்க வேண்டும்" என்றும் சொல்லிக் கொண்டு, "நாம் இவ்வழியில் சச்சரவில் ஈடுபடுகிறோம். மனிதர்களை ஆளும் மன்னன் இதோ இருக்கிறான்.(84) உண்மையில் நீ ஏனக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். நீ பொய்யாகப் பேசுகிறாய். நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன்" என்றும் சூடான சச்சரவு செய்து கொண்ட அந்த இருவரும் மன்னனிடம், "ஓ! ஏகாதிபதி, எங்கள் இருவரில் எவரும் பாவத்தின் களங்கத்தை அடையாமல் பார்த்துக் கொள்வாயாக" என்றனர்.(86)
விரூபன், "ஓ! ஏகாதிபதி, என் தோழனான விக்ருதனுக்கு, ஒரு பசுக்கொடையின் தகுதிகளை நான் கொடுக்க வேண்டும். அந்தக் கடனை அடைக்க நான் விரும்புகிறேன். எனினும், இந்த விக்ருதன் இந்த மீட்டளிப்பை மறுக்கிறான்" என்றான்[5].(87)
[5] "விக்ருதன் ஒரு பசுவைக் கொடுத்திருக்கிறான் என்பது தெரிகிறது. {விக்ருதன்} அந்த அறச்செயலின் மூலமாகத் தான் வென்ற தகுதியை {புண்ணியத்தை} விரூபனுக்குக் கொடையளிக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
விக்ருதன், "ஓ! ஏகாதிபதி, இந்த விரூபன் எனக்கு ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஓ! மன்னா, வாய்மையின் தோற்றத்தில் அவன் பொய்மையைப் பேசுகிறான்" என்றான்.(88)
மன்னன், "ஓ! விரூபா, நீ இங்கே உன் நண்பனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. முதலில் நீ சொல்வதைக் கேட்டு, அதன்பிறகு உரியதைச் செய்வதே என் தீர்மானமாக இருக்கிறது" என்றான்.(89)
விரூபன், "ஓ! மன்னா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, என் தோழனான இந்த விக்ருதனுக்குக் கொடுக்க வேண்டியவாறு அமைந்த அனைத்துச் சூழ்நிலைகளையும் விரிவாகச் சொல்கிறேன், கவனமாகக் கேட்பாயாக.(90) ஓ! பாவமற்றவனே, ஓ! அரசமுனியே, கடந்து சென்ற நாட்களில், இந்த விக்ருதன், தகுதியை {புண்ணியத்தை} வெல்லும் நிமித்தமாகத் தவங்களுக்கும், வேதகல்விக்கும் தம்மை அர்ப்பணித்திருந்த ஒரு பிராமணருக்கு ஒரு மங்கலப் பசுவைத் தானமாக அளித்தான்.(91) ஓ! மன்னா, அவனிடம் {விக்ருதனிடம்} சென்ற நான் அவனது அந்தச் செயலுக்கான வெகுமதியை இரந்து கேட்டேன். தூய இதயத்துடன் கூடிய விக்ருதன் அந்த வெகுமதியை எனக்குக் கொடையாக அளித்தான்.(92) பிறகு நான் தூய்மையடைவதற்காகச் சில நல்ல செயல்களைச் செய்தேன். மேலும் நான் கன்றுகளுடன் கூடியவையும், அதிக அளவில் பால் தரக்கூடியவையுமான இரண்டு கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களை} வாங்கினேன்.(93) பிறகு நான், அந்த இரு பசுக்களையும் உஞ்ச முறையில்[6] வாழ்ந்து வந்த ஓர் ஏழை பிராமணருக்கு உரிய சடங்குகளின் படி உரிய அர்ப்பணிப்புடன் கொடுத்தேன். ஓ! தலைவா, முன்பு என் தோழனிடம் இருந்து கொடையேற்ற நான், அவனுக்கு அந்த வெகுமதியை இரண்டு மடங்காகக் கொடுக்க விரும்புகிறேன்[7]. ஓ! மனிதர்களில் புலியே, சூழ்நிலைகள் இவ்வாறு இருக்கையில் (உன் தீர்மானத்தின்படி) எங்கள் இருவரில் அப்பாவி யார்? குற்றம் செய்தவன் யார்?(94,95) ஓ! ஏகாதிபதி, இதுகுறித்து ஒருவரோடொருவர் சச்சரவு கொண்டே நாங்கள் இருவரும் இங்கே வந்திருக்கிறோம். நீ சரியாகவோ, தவறாகவோ தீர்மானித்து, எங்கள் இருவருக்கிடையில் அமைதியை நிறுவுவாயாக.(96) இந்த எனது தோழன் ஏற்கனவே எனக்குக் கொடுத்ததற்குச் சமமானதை என்னிடமிருந்தும் திரும்பப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லையெனில், நீயே பொறுமையாகத் தீர்மானித்து, எங்கள் இருவரையும் சரியான பாதையில் நிலைநிறுத்த வேண்டும்" என்றான் {விரூபன்}.(97)
[6] "வயலின் பிளவுகளில் கிடக்கும் தானியங்களைத் திரட்டி, அதைக் கொண்டு வாழும் ஒரு வாழ்வுமுறையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கன்றுடன் கூடியவைகளும், அதிகமாகக் கறக்கும் தன்மையுள்ளவைகளுமான இரண்டு காராம்பசுக்களை விலைக்கு வாங்கி அப்பசுக்களை உஞ்சவிருத்தி செய்யும் ஒருவனுக்குக் கொடுத்தேன்" என்றிருக்கிறது.[7] "ஒரு பசுவைக் கொடுத்ததன் மூலம் அவன் வென்ற தகுதியை {புண்ணியத்தை} எனக்குக் கொடுத்தான். நான் இரண்டு பசுக்களைக் கொடுத்ததன் மூலம் வென்ற தகுதியை அவனுக்குத் திரும்பக் கொடுக்க விரும்புகிறேன் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னன், "கடனாகக் கொடுக்கப்பட்டது திருப்பிக் கொடுக்கப்படுகையில் நீ ஏன் ஏற்க மறுக்கிறாய்? தாமதிக்காமல், உனக்கு உரியயதைப் பெற்றுக் கொள்வாயாக" என்றான்.(98)
விக்ருதன், "இவன் எனக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறான். நான் கொடுத்ததைக் கொடுத்துவிட்டேன் என்று நான் அவனிடம் சொல்கிறேன். எனவே, அவன் எனக்குத் தரவேண்டியது ஏதும் இல்லை. அவன் விரும்பியவாறு எங்கும் செல்லட்டும்" என்றான்.(99)
மன்னன் {இக்ஷ்வாகு}, "அவன் உனக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறான். எனினும், நீ அதைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. இஃது எனக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. இதற்கு நீ தண்டிக்கத்தகுந்தவன் என நான் நினைக்கிறேன். இதில் சிறு ஐயமும் இல்லை" என்றான்.(100)
விக்ருதன், "ஓ அரசமுனியே, நான் அவனுக்குக் கொடையளித்தேன். அஃதை எவ்வாறு என்னால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்? இதில் நான் குற்றவாளியென்றால், ஓ பலமிக்கவனே, எனக்குத் தண்டனையைச் சொல்வாயாக" என்றான்.(101)
விரூபன், "நான் கொடுக்கத் தயாராக இருக்கும்போது நீ மறுத்தால், நீதியை நிறுத்துபவனான இந்த மன்னன் உன்னை நிச்சயம் தண்டிப்பான்" என்றான்.(102)
விக்ருதன், "எனக்குச் சொந்தமானது அவனால் வேண்டப்பட்ட பிறகே நான் கொடுத்தேன். அதை நான் எவ்வாறு திரும்ப எடுத்துக் கொள்வேன்? நீ செல்லலாம். நான் உனக்கு விடைகொடுத்துவிட்டேன்" என்றான்.(103)
{பிப்பலாதரின் மகனான அந்தப்} பிராமணர், "ஓ! மன்னா, நீ இவ்விருவரின் வார்த்தைகளையும் கேட்டாய். நான் உனக்குக் கொடுப்பதாக உறுதியளித்ததை எந்தத் தயக்கமும் இல்லாமல் பெற்றுக் கொள்வாயாக" என்றார்.(104)
மன்னன், "உண்மையில் இக்காரியம் அடியற்ற குழியைப் போன்று (முக்கியத்துவத்தில்) மிக ஆழமானதாகும். ஜபிப்பவரான இவரின் பிடிவாதம் எவ்வாறு முடியப் போகிறது?(105) இந்தப் பிராமணரால் கொடுக்கப்பட்டதை நான் ஏற்கவில்லையெனில், பெரும் பாவத்தின் களங்கம் படிவதை நான் எவ்வாறு தவிர்க்க முடியும்?" என்றான்.(106)
பிறகு அந்த அரச முனி {இக்ஷ்வாகு}, "உங்கள் ஒவ்வொருவருக்குமுரிய நோக்கங்களை வென்றுவிட்டவர்களாக நீங்கள் இருவரும் செல்லலாம். என்னில் நிறுவப்பட்டுள்ள அரசகடமைகள் பயனற்றவையாகக் கூடாது {இந்த இடத்தில் இருந்து கொண்டு மன்னர்களுக்கான தர்மத்தைப் பொய்யாக்காதீர்கள்}.(107) மன்னர்கள் அவர்களுக்குரிய கடமைகளை நோக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். எனினும், என் தீப்பேற்றின் நிமித்தமாக இழிந்தவனான என்னைப் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் நடைமுறைகள் பற்றுகின்றன" என்றான்[8].(108)
[8] "107 மற்றும் 108ம் சுலோகங்கள் தெளிவற்றவையாக இருக்கின்றன. 107ல் "நீங்கள் இருவரும் மன்னனான என்னிடம் உங்கள் சச்சரவைக் குறித்துச் சொன்னீர்கள். என் கடமையை என்னால் குறுக்கிக் கொள்ள முடியாது, உங்கள் இருவருக்கிடையில் நியாயம் தீர்க்கக் கடன் பட்டவன் நான். என்னைப் பொறுத்தவரையில் மன்னர்களுக்கான கடமைகள் பயனற்றதாகாமல் நான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று மன்னன் சொல்வதாகத் தெரிகிறது. 108ல் அவன், "நான் ஒரு மன்னனாக இருப்பதால், சச்சரவுகளைத் தீர்த்து வைத்தல் தானமளித்தல் ஆகியவற்றைச் செய்யலாம்,, ஆனால் ஒருபோதும் எதையும் {தானமாக} ஏற்கக்கூடாது. ஆனால், தீயூழின் காரணமாக இந்தக் குறிப்பிட்ட பிராமணர் கொடுக்க விரும்புவதைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒரு பிராமணரின் செயலைச் செய்யக் கடன்படும் நிலையை நான் அடைந்திருக்கிறேன்" என்று சொல்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த ராஜரிஷியானவன், "நீங்கள் கார்யத்தைச் செய்து கொண்டவர்களாகவே போவீர்கள். இப்பொழுது இவ்விடத்திலுள்ள என்னை அடைந்து அரசர்களுக்குள்ள தர்மமானது பொய்யாக வேண்டாம். அரசர்களுக்குத் தம் தர்மத்தை ரக்ஷித்துக் கொள்ள வேண்டுமென்பது நிச்சயம். புத்தில்லாத என்னைக் கடினமான ப்ராம்மணத் தர்மமானது பிடித்துக் கொண்டது" என்று சொன்னான்" என்றிருக்கிறது.
அதற்கு அந்தப் பிராமணன், "ஓ! மன்னா, ஏற்பாயாக. நான் உனக்குக் கொடுக்க வேண்டும். நீ வேண்டினாய், நானும் (உனக்குக் கொடுப்பதாக) உறுதியளித்துவிட்டேன். எனினும், ஓ! ஏகாதிபதி, நீ ஏற்க மறுப்பாயானால், நிச்சயம் நான் உன்னைச் சபிப்பேன்" என்றார்.(109)
மன்னன் {இக்ஷ்வாகு}, "அரச கடமைகளுக்கு ஐயோ. {கடமைகள் குறித்து} தீர்மானிக்கப்பட்ட முடிவுகளின் இயக்கம் இவ்வாறாகிவிட்டதே. எனினும், முற்றிலும் இணையான இரண்டு கடமைகளின் நடைமுறைகளை வெளிப்படுத்தும் ஒரே காரணத்திற்காக நீர் கொடுப்பதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும்[9].(110) இதற்கு முன்பு ஒருபோதும் (கொடைகளை ஏற்க) நீட்டப்படாத என் கரமானது, கொடுப்பதற்காகவே இப்போது (ஏற்பதற்காகவும்) நீட்டப்படுகிறது. நீர் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுப்பீராக" என்றான்.(111)
[9] "இந்தச் சுலோகமும் மிக மிகத் தெளிவற்றதாக இருக்கிறது. மன்னனின் இயல்பான போக்கு பிராமணர் கொடுக்கும் கொடையை ஏற்க அவனை உந்துகிறது. அரச கடமைகளின் விதிகளோ அவனைத் தடுக்கின்றன. எனவே அவன் அந்தக் கடமைகளை நிந்திக்கிறான் எனத் தெரிகிறது. இரண்டாவது வரியில், கொடையேற்க தார்மீக ரீதியில் கட்டப்பட்டிருப்பதாகவும், தன் தகுதிகளைப் பதிலுக்குக் கொடையளிக்க விரும்புவதாகவும் தெரிகிறது. இச்செயலின் விளைவானது, இரண்டு (க்ஷத்திரிய மற்றும் பிராமணக்) கடமைகளின் நடைமுறைகளையும் மறுமையில் அதே வகை வெகுமதிகளை உண்டாக்கும் என அவன் நினைக்கிறான்" எனக் கங்கலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(பெற்றுக் கொண்டாலும்) எவ்விதம் (ராஜதர்மத்திற்கு) ஸரியாக இருக்குமென்று தெரிந்து கொண்டு நான் பெற்றுக் கொள்ள வேண்டும். ஓ பிராமணரே, என்னுடைய இந்தக் கையானது நூதனமாக ப்ரதிக்ரஹத்திற்காக நீட்டப்பட்டிருக்கிறது. எனக்காத எதைத் தரித்துக் கொண்டிருக்கிறீரோ அதை இப்போது கொடுக்கலாம்" என்றிருக்கிறது.
அந்தப் பிராமணர், "காயத்ரி ஜபத்தின் மூலம் நான் எந்தக் கனிகளையாவது வென்றிருந்தால், அவை அனைத்தையும் நீ பெற்றுக் கொள்வாயாக" என்றார்.(112)
மன்னன் {இக்ஷ்வாகு}, "ஓ! பிராமணர்களில் முதன்மையானவரே, என் கரங்களில் விழுந்திருக்கும் இந்த நீர்த்துளிகளைப் பாரும். நானும் உமக்குக் கொடுக்க விரும்புகிறேன். என் கொடையை ஏற்பீராக. (நான் உமது கொடையை ஏற்றுக் கொண்டதைப் போல நீரும் என் கொடையை ஏற்றுக் கொள்வதன் மூலம்) நமக்கிடையில் ஒரு சமத்தன்மை இருக்கட்டும்" என்றான்.(113)
விரூபன், "ஓ! மன்னா, நாங்கள் இருவரும் ஆசையும், கோபமும் ஆவோம் என்பதை அறிவாயாக. எங்களாலேயே நீ இவ்வழியில் செயல்பட்டாய். நீ இந்தப் பிராமணருக்குப் பதில் கொடையை அளித்துவிட்டாய். மறுமையின் இன்பவுலகங்களைப் பொறுத்தவரையில் இந்த மறுபிறப்பாளருக்கும் உனக்கும் இடையில் சமத்தன்மை நிலைக்கட்டும். இந்த விக்ருதன் உண்மையில் எனக்குத் தர வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் உன் நிமித்தமாகவே அவ்வாறு நடந்து கொண்டோம். காலன், தர்மன், மிருத்யு மற்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து, உனக்கும் இந்தப் பிராமணருக்கும் இடையில் இந்தச் சச்சரவை உண்டாக்கி உன்னைக் குறித்த அனைத்தையும் உன் எதிரிலேயே ஆய்வு செய்தோம். உன் செயல்களின் மூலம் நீ வென்ற உலகங்களுக்கு உன் விருப்பப்படியே செல்வாயாக" என்றான் {விரூபன்}".(116)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஜபம் செய்பவர்கள் (தாங்கள் செய்யும் ஜபத்தின்) கனிகளை எவ்வாறு அடைகிறார்கள் என்பதையும், ஜபம் செய்பவனின் கதி, அவர்கள் வெல்லும் உலகங்கள் ஆகியவற்றையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(117) காயத்ரி ஜெபம் செய்யும் ஒருவன், பரப்பிரம்மத்தை அடைவான், அல்லது அக்னியிடம் செல்வான், அல்லது சூரியலோகத்திற்குள் நுழைவான்.(118) அவன் சக்திமிக்கத் தனது (புதிய) உடலுடன் அங்கே விளையாடினால், அத்தகைய பற்றுகளில் திகைப்படையும் அவன், அந்தக் குறிப்பிட்ட உலகங்களின் பண்பியல்புகளைப் பற்றிக் கொள்வான்[10].(119) சோமன் {சந்திரன்}, வாயு, பூமி, வெளி ஆகியவற்றுக்குச் செல்பவனின் நிலையே அதே போன்றதே ஆகும். உண்மையென்னவெனில், இவை அனைத்திலும் வசிப்பவர்கள், அவற்றில் பற்றுக் கொண்டு, அந்தந்த உலகங்களின் குறிப்பிட்ட பண்பியல்புகளை வெளிக்காட்டுவார்கள். எனினும் ஒருவன் பற்றுகளில் இருந்து விடுபட்டு அந்த உலகங்களுக்குச் சென்று, (அங்கு அனுபவிக்கும் இன்பங்களில்) நம்பிக்கையில்லாமல் இருந்து, உயர்ந்ததையும், நினைத்தற்கரியதையும் விரும்பினால், அப்போது அவன் அதற்குள்ளும் நுழைவான்.(121) அவ்வழக்கில் அவன், ஆசையில் இருந்து விடுபட்டு, தனிப்பட்ட நனவு நிலை இல்லாதவனாக அமுதத்தின் அமுதத்தை அடைகிறான். முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, இன்பத்தையும் அமைதியை அடைந்து, துன்பமில்லாதவனாகப் பிரம்மமாகவே ஆகிறான்[11].(122)
[10] "இது விடுதலை {முக்தி நிலை} கிடையாது, ஆனால் வெறும் தற்காலிக இன்பநிலையே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[11] "விடுதலை {முக்தியை} அடைகிறான், அல்லது பிரம்மத்தின் சாரத்திற்குள் உறிஞ்சப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில் அவன், துன்பத்தில் இருந்து விடுபட்டதும், அமைதியானதும், திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததும், ஒன்றேயானதும், நினைத்தற்கரியதுமான பிரம்ம நிலையை அவன் அடைகிறான்.(128) அச்சத்தின் நான்கு வழிமுறைகளில் இருந்தும்[12], ஆறு நிலைகளில் இருந்தும், மேலும் வேறு ஆறு மற்றும் பத்துப் பண்பியல்புகளில் இருந்தும் அவன் விடுபடுகிறான்[13]. படைப்பாளனையே விஞ்சி அவன் பரமாத்மாவுக்குள் உறிஞ்சப்பட்ட நிலையை அடைகிறான்.(124) அல்லது, பற்றுகளின் ஆதிக்கத்தின் கீழிருக்கும் அவன், அத்தகைய உறிஞ்சலுக்கு விரும்பாமல், அனைத்திற்கான பரம காரணத்தைச் சார்ந்த தனியான இருப்பாக இருக்க விரும்பினால், அவன் பேணி வளர்க்கும் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைவான்.(125) அல்லது (முன்னர்ச் சொல்லப்பட்டதுபோல) நரகங்கள் என்றழைக்கப்பட்ட இன்ப உலகங்கள் அனைத்தையும் (வெறுப்புடன்) கண்டு, ஆசையை விரட்டி, அனைத்திலிருந்தும் விடுபட்டு அந்தந்த உலகங்களிலேயே உயர்ந்த இன்ப நிலையை அனுபவிக்கிறான்[14].(126) ஓ ஏகாதிபதி, ஜபிப்பவர்கள் அடையும் கதியைக் குறித்து உனக்குச் சொல்லிவிட்டேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்லிவிட்டேன். வேறு என்ன கேட்க விரும்புகிறாய்" {என்றார் பீஷ்மர்}.(127)
[12] "இவை (புலன்களின் மூலமான) நேரடி அறிவு, மறைவான ஒன்றின் வெளிப்பாடு, ஊகித்தறிதல், உள்ளுணர்வு ஆகியவை ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[13] "முதல் ஆறு, பசி, தாகம், துன்பம், மாயை, நோய் மற்றும் மரணமாகும். அடுத்தப் பதினாறு, ஐந்து மூச்சுகள், பத்துப் புலன்கள் மற்றும் மனம் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[14] "மூன்று கதிகளைக் குறித்து இங்கே பேசப்படுகின்றன. ஒன்று பிரம்மத்திற்குள் உறிஞ்சப்படும் நிலை; மற்றொன்று, சாதாரண இன்ப நிலையை அனுபவித்தல். இது தற்காலிகமானது. இறுதியாகச் சொல்லப்படுவது ஆசை மற்றும் பற்றுகளில் இருந்து விடுபடுவதின் மூலம் அடையும் இன்பநிலையை அனுபவிப்பது ஆகும். சுலோகம் 126ல் இந்த வகை இன்பநிலையையே பேசுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 199ல் உள்ள சுலோகங்கள் : 127
ஆங்கிலத்தில் | In English |