The end of reciters! | Shanti-Parva-Section-200 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 27)
பதிவின் சுருக்கம் : பிராமணரும், இக்ஷ்வாகுவும் அடைந்த கதியைக் குறித்துக் கேட்ட யுதிஷ்டின்; இருவரும் வெகுமதிகளை அடைந்து பிரம்மலோகத்தை அடைந்தது; அவர்கள் உயிரை விட்ட வழிமுறை; அவர்களைப் பிரம்மன் வரவேற்ற விதம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, விரூபன் பேசி முடித்ததும், அந்தப் பிராமணராலோ, அந்த ஏகாதிபதியாலோ {இக்ஷ்வாகுவாலோ} அவனுக்கு என்ன மறுமொழி கொடுக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்வீராக.(1) உம்மால் விவரிக்கப்பட்ட கதிகளுள் அவர்கள் அடைந்த கதியென்ன? உண்மையில், அவர்களுக்கு இடையில் நடந்த உரையாடல் என்ன? அங்கே அவர்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அந்தப் பிராமணர், "நீ சொன்னதுபோலவே ஆகட்டும்" என்று சொல்லி தர்மன், யமன், காலன், மிருத்யு, சொர்க்கம் ஆகியவர்களையும், வழிபாட்டுக்குத் தகுந்த அனைவரையும் வழிபட்டார்.(3) தம்மை வணங்கி அங்கே வந்திருந்த முதன்மையான பிராமணர்களை அனைவரையும் அவர் வழிபட்டார். பிறகு அந்த ஏகாதிபதியிடம் பேசிய அவர், "ஓ! அரசமுனியே, என் ஜபங்களுக்கான வெகுமதிகளுடன் கூடிய நீ உயர்ந்த நிலையை அடைவாயாக. நீ சென்றதும் நான் என்னை மீண்டும் ஜபங்களில் நிறுவிக் கொள்வேன்.(5) ஓ! பெரும் வலிமைமிக்கவனே, "ஜபத்தில் உனது அர்ப்பணிப்புத் தொடர்ச்சியானதாக இருக்கட்டும்" என்று சாவித்திரி தேவி எனக்கு வரமளித்திருக்கிறாள்" என்றார்.(6)
மன்னன் {இக்ஷ்வாகு}, "(ஜபத்தின் கனிகளை எனக்குக் கொடுத்துவிட்டதன் விளைவால்) உமது வெற்றிக் கனியற்றதாக இருந்தால், உமது இதயம் மீண்டும் பயிற்சியில் நிலைக்க வேண்டுமானால், என்னிடம் பாதி, பாதியைப் பகிர்ந்து கொண்டு, உமது ஜபங்களின் வெகுமதியை அடைவீராக" என்றான்[1].(7)
[1] "இரண்டாம் வரியில் உள்ள சார்த்தம் என்பது மறுக்கத்தக்கதல்ல; அல்லது அவ்வாறே எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பொருளில் எந்த மாறுபாடும் ஏற்படாது. இங்கே அந்த ஏகாதிபதி, தான் வென்ற வெகுமதிகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அந்தப் பிராமணரை அழைக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உமது மந்த்ரஸித்தியானது இவ்விதம் பயனுள்ளதாயிருந்து உமக்கும் ஜபிக்க வேண்டியதற்கு ச்ரத்தையிருக்குமாகில், அதை அடையும். என்னுடன் கூட ஜபத்திற்குரிய பயனைப் பெற்றுக் கொள்ளும்" என்றிருக்கிறது.
அதற்கு அந்தப் பிராமணர், "(உன் செயல்பாடுகளின் விளைவுகளால் நீ அடைந்த வெகுமதிகளை என்னோடு பகிர்ந்து கொள்ள) இம்மனிதர்கள் அனைவரின் முன்னிலையிலும் நீ தளர்வுறாமல் முயற்சி செய்திருக்கிறாய். எனவே, (மறுமையில்) நமது வெகுமதிகள் நமக்கிடையில் சமமானவையாக இருக்கட்டும். நாம் நமது கதியை அடைவோமாக" என்றார்.(8)
தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவர்கள் அடைந்த தீர்மானத்தை அறிந்து லோகபாலர்கள் மற்றும் தேவர்களின் துணையுடன் அந்த இடத்திற்கு வந்தான்.(9) சத்யஸ்கள், விஸ்வர்கள், மந்திரர்கள், பல்வேறு வகை இசைகள், ஆறுகள், மலைகள், கடல்கள், புனித நீர்நிலைகள்,(10) தவங்கள், யோகம் குறித்த விதிமுறைகள், சாம வேத வரிகளைப் பாடுவதற்குத் துணை புரியும் ஒலிகள், சரஸ்வதி, நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹாக்கள், ஹுஹூக்கள்,(11) குடும்பத்துடன் கூடியவனான கந்தர்வன் சித்திரசேனன், நாகர்கள், சித்தர்கள், முனிவர்கள், தேவர்களின் தேவனான பிரஜாபதி ஆகியோரும்,(12) நினைத்தற்கரியவனும், ஆயிரம் தலைகளைக் கொண்டவனுமான விஷ்ணுவும் அங்கே வந்தனர். ஆகாயத்தில் பேரிகைகளும், துந்துபிகளும் முழக்கப்பட்டன.(13) உயர் ஆன்மா கொண்ட அவர்கள் மீது தெய்வீகப் பூமாரி பொழியப்பட்டது. சுற்றிலும் அப்சரஸ் கூட்டங்கள் ஆடிக் கொண்டிருந்தனர்.(14)
சொர்க்கமானவன், தன் உடல்வடிவத்துடன் அங்கே வந்தான். அந்தப் பிராமணரிடம் பேசிய அவன் {சொர்க்கம்}, "நீர் வெற்றியை அடைந்தீர். நீர் உயர்வாக அருளப்பட்டிருக்கிறீர்" என்றான். அடுத்ததாக அந்த ஏகாதிபதியிடம் {இக்ஷ்வாகுவிடம்} அவன் {சொர்க்கம்}, "ஓ! மன்னா, நீயும் வெற்றியடைந்தாய்" என்றான்.(15)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இருவரும் (அந்தப் பிராமணரும், மன்னனும்) ஒருவருக்கொருவர் நன்மை செய்து, உலக நோக்கங்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கொண்டனர்.(16) பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய உயிர்மூச்சுகளை {வாயுக்களைத்} தங்கள் இதயங்களில் {மனத்தில்} நிலைக்கச் செய்த அவர்கள், ஒன்றுகலந்த பிராணன் மற்றும் அபானனில் மனத்தை குவித்தார்கள்.(17) பிறகு அவர்கள் ஒன்று கலந்த அந்த இரு மூச்சுகளையும் வயிற்றில் நிறுத்தி, தங்கள் பார்வையை மூக்கு நுனியில் செலுத்தி, மெல்ல இரு புருவங்களுக்குக் கீழே அவற்றைச் செலுத்தினார்கள். பிறகு அவர்கள், தங்கள் மனத்தின் துணைகொண்டு அந்த இரு மூச்சுக்காற்றுகளையும் படிப்படியாகத் தங்கள் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடத்திற்குக் கொண்டுவந்தார்கள்.(18) முற்றிலும் செயலற்ற உடல்களுடன் அவர்கள் தங்கள் நிலைத்த பார்வையிலேயே மூழ்கியிருந்தார்கள் {லயித்திருந்தார்கள்}. தங்கள் ஆன்மாக்களின் கட்டுப்பாட்டைக் கொண்ட அவர்கள், மூளையில் தங்கள் ஆன்மாவை நிறுத்தினார்கள்.(19) அப்போது அந்த உயர் ஆன்ம பிராமணரின் மகுடத்தை {பிரம்மரந்தரஸ்தானத்தைப்} பிளந்து கொண்டு ஒரு காந்திமிக்க ஒளித்தழல் {ஜ்யோதியின் ஜ்வாலை} சொர்க்கத்திற்கு உயர்ந்தது.(20)
அனைத்து உயிரினங்களின் துன்ப ஓலங்களும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. அனைவராலும் துதிக்கப்பட்ட அந்தக் காந்தி {ஜ்யோதி}, பிரம்மனின் சுயத்துக்குள் நுழைந்தது.(21) அப்போது எதிர்கொண்டு சென்ற பெரும்பாட்டன் {பிரம்மன்}, ஒரு சாண் உயரமுள்ள வடிவத்தை ஏற்றிருந்த அந்தக் காந்தியிடம் {ஒளியிடம்}, "நல்வரவு" என்று சொல்லி,(22) மீண்டும் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்: "உண்மையில், ஜபிப்பவர்களும் யோகிகளின் அதே கதியையே அடைவார்கள்.(23) (இங்கே திரண்டிருக்கும்) இவை அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பதே, யோகி அடையும் கதியாகும். ஜபிப்பவர்களைப் பொறுத்தவரையில், ஒரு வேறுபாடு இருக்கிறது. (அவர்கள் பூமியில் இருந்து புறப்பட்டதும்) பிரம்மனே எதிர்கொண்டு வந்து அழைக்கும் கௌரவம் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.(24) நீ என்னில் வசிப்பாயாக" என்றான். இவ்வாறு பேசிய பிரம்மன் மீண்டும் அந்த ஒளிக்கு நனவுநிலையைக் கொடுத்தான். உண்மையில், அந்தப் பிராமணர், கவலைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு படைப்பாளனின் வாய்க்குள் நுழைந்தார்.(25)
அந்த ஏகாதிபதியும் {இக்ஷ்வாகுவும்}, அந்த முதன்மையான பிராமணரைப் போலவே அதே வழியில் தெய்வீகப் பெரும்பாட்டனுக்குள் நுழைந்தான்.(26) (அங்கே திரண்டிருந்த) தேவர்கள் அந்தத் தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, "ஜபிப்பவர்களுக்கு உண்மையில் மேன்மையான கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) (நாங்கள் காண நீர் செய்திருக்கும்) இந்த முயற்சியானது ஜபிப்பவர்களுக்கானதாகும். எங்களைப் பொறுத்தவரையில், இதைக் காணவே நாங்கள் இங்கே வந்தோம். சமமானவர்களான இவ்விருவருக்கும் சம கௌரவத்தைக் கொடுத்து, சமகதியையே அவர்களுக்கு அளித்திருக்கிறீர்.(28) யோகிகள் மற்றும் ஜபிப்பவர்கள் அடையும் உயர்ந்த கதியை நாங்கள் இன்று கண்டோம். (இன்ப) உலகங்கள் அனைத்தையும் விஞ்சி செல்லும் இவர்கள் இருவரும் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல வல்லவர்களாக இருப்பார்கள்" என்றனர் {தேவர்கள்}.(29)
பிரம்மன், "எவன் பெரிய ஸ்மிருதியை (வேதங்களைப்) படிப்பானோ, எவன் முன்னதை {வேதங்களைப்} பின்தொடரும் (மனு மற்றும் எஞ்சிய) பிற மங்கலமான ஸ்மிருதிகளைப் படிப்பானோ, அவனும் இவ்வழியிலேயே என்னுடன் இதே உலகத்தை அடைவான்.(30) எவன் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருக்கிறானோ, அவனும் தன் மரணத்திற்குப்பிறகு இவ்வழியிலேயே எனக்குச் சொந்தமான உலகங்களை அடைவான்.(31) நான் செல்கிறேன். நீங்கள் அனைவரும் உங்களுடைய காரிய நிறைவேற்றத்திற்காக அவரவர் இடங்களுக்குச் செல்வீராக" என்றான் {பிரம்மன்}".(32)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த வார்த்தைகளைச் சொன்ன அந்த முதன்மையான தேவன் அங்கேயே, அப்போதே மறைந்து போனான். முன்பே அவனிடம் விடைபெற்றிருந்தவர்களும் அங்கே திரண்டிருந்தவர்களுமான தேவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.(33) ஓ! ஏகாதிபதி, அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் தர்மனால் கௌரவிக்கப்பட்டு, நன்கு நிறைவடைந்த இதயங்களுடன் அந்தப் பெரும் தேவனின் பின்னால் நடந்து சென்றனர்.(34) இவையே ஜபிப்பவர்களின் வெகுமதிகளும், இதுவே அவர்களுடைய கதியுமாகும். நான் கேட்டவாறே இவற்றை நான் உனக்கு விளக்கிவிட்டேன். ஓ! ஏகாதிபதி, நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" {என்று கேட்டார் பீஷ்மர்}.(35)
சாந்திபர்வம் பகுதி – 200ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |