The creature-soul! | Shanti-Parva-Section-201 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 28)
பதிவின் சுருக்கம் : செயல், ஞானம், ஜீவன், பிரம்மம் குறித்துப் பிருஹஸ்பதிக்கும் மனுவுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
The creature-soul! | Shanti-Parva-Section-201 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வேதங்கள் அனைத்திலும், (பல்வேறு} சடங்குகளிலும், நோன்புகளிலும் ஞானத்தைப் பிரதிபலிக்கும் யோகத்தின் கனிகள் {பயன்கள்} என்னென்ன? ஜீவனை எவ்வாறு அறியலாம்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக உயிரினங்களின் தலைவரான மனுவுக்கும், பெரும் முனிவரான பிருஹஸ்பதிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் அடங்கிய பழங்கதை குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில் தெய்வீக முனிவர்களில் முதன்மையானவரும், மனுவின் சீடருமான பிருஹஸ்பதி, தன் ஆசானை வணங்கி உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரும், தலைவருமான அவரிடம்,(3) "(இந்த அண்டத்தின்) காரணம் என்ன? (வேள்விகள் மற்றும் பக்திச் செயல்பாடுகள் பிறவற்றையும் குறித்த) விதிகள் எங்கிருந்து பாய்ந்தன? கற்றோர் சொல்வது போன்ற ஞானத்துடன் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன? ஓ! சிறப்புமிக்கவரே, வேதங்களாலேயே வெளிப்படுத்தப்பட இயலாதது எது? என்பவைக் குறித்து எனக்குச் சொல்வீராக[1].(4) வேள்விகள் மற்றும் அபரிமிதமான பசுக்கொடைகளின் மூலம், பொருள் அறிவியல் {அர்த்த சாஸ்திரம்}, வேதங்கள், மந்திரங்கள் ஆகியவற்றை அறிந்த அறிஞர்களால் புகழப்படும் அந்தக்கனிகள் என்னென்ன? அக்கனிகள் எங்கிருந்து எழுகின்றன? அவற்றை எங்கே காணலாம்?(5) பூமி, பூமிசார்ந்த பொருட்கள், காற்று, வானம், நீர்வாழ் உயிரினங்கள், நீர், சொர்க்கம், சொர்க்கவாசிகள் ஆகிய அனைத்தும் எங்கிருந்து எழுந்தன என்ற பழைய வரலாற்றை எனக்குச் சொல்வீராக.(6)
[1] கும்பகோணம் பதிப்பில், "பகவானே, கர்மகாண்டமானது எதை அறிய வேண்டிய காரணத்திற்காக ப்ரவ்ருத்திருக்கிறதோ, எதை ஜ்ஞானத்திற்குப் பயனென்று ப்ராம்மணர்கள் கூறுகிறார்களோ, எது மந்திரத்திலுள்ள சப்தங்களால் வெளியிடப்படாததாயிருக்கிறதோ, அதை எனக்கு உள்ளபடி உபதேசிக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "{படைப்பின் பின்னணியில்} உள்ள காரணம் யாது? மந்திரங்களும், சடங்குகளும் எங்கிருந்து வந்தன? ஞானத்தோடு பிணைக்கப்பட்டவை என்று பிராமணர்கள் எக்கனிகளைச் சொல்கிறார்கள்? ஓ! சிறப்புமிக்கவரே, மந்திரங்களாலும், ஒலிகளாலும் வெளிப்படுத்த இயலாத பொருட்கள் என்னென்ன என்பதை எனக்குச் சரியாகச் சொல்வீராக" என்றிருக்கிறது.
மனிதன் எந்த ஞானத்தை அடைய முயல்கிறானோ அந்தப் பொருளை நோக்கியே அவனது உள்ளுணர்வுகள் செல்ல முனைகின்றன. அந்தப் பழைமையான, பரமனைக் {புராதானமான பரவஸ்துவை [பரம்பொருளைக்]} குறித்து எனக்கு எந்த அறிவும் இல்லை. அவனை {பரமனை} நோக்கிய உள்ளுணர்வுகளின் போலி வெளிப்பாடுகளில் இருந்து நான் எவ்வாறு என்னைக் காத்துக் கொள்ள முடியும்[2].(7) ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்கள், சந்தங்கள் {சந்தஸ்கள்}, வானியல் {நக்ஷத்ரவித்யை}, நிருக்தம், இலக்கணம் {வ்யாகரணம்}, சங்கல்பம் {கல்பஸூத்ரங்கள்}, சிக்ஷை ஆகிய அனைத்தையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் ஒவ்வொன்றின் தொகைக்குள்ளும் நுழையும் பெரும்பூதங்களின் (ஐந்து அடிப்படை பூதங்களின்) இயல்பைக் குறித்த அறிவு எனக்கில்லை[3].(8) நான் கேட்ட அனைத்தையும், எளிய கூற்றுகளை மட்டுமே பயன்படுத்தி, உரிச்சொற்கள், அல்லது அடைமொழிகளைப் பிரித்து வேறுபடுத்தி எனக்குச் சொல்வீராக[4]. ஞானத்தின் கனிகள் என்னென்ன என்பதையும், வேள்வி மற்றும் பிற அறச்சடங்குகளில் பிணைக்கப்பட்ட கனிகள் என்னென்ன என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஒருவனின் உடலில் இருந்து ஜீவன் {ஜீவாத்மா} எவ்வாறு வெளியேறுகிறது என்பதையும் அது மற்றொன்றில் எவ்வாறு அடைகிறது என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார் {பிருஹஸ்பதி}.(9)
[2] "அவனைக் குறித்து எதையும் நான் அறியாமல் இருந்தாலும், அவனை வழிபடுகிறேன். இது போலி நடத்தையாகும். இத்தகைய பொய்மையில் இருந்து நான் எவ்வாறு என்னைக் காத்துக் கொள்ள முடியும்? இதைத்தான் பிருஹஸ்பதி சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "சந்தஸ் என்பது வேத பாடல்களுக்குப் பொருந்தும் யாப்பிலக்கணத்தின் {பேசும் தொனியில் உள்ள மாற்றங்களுக்கான} விதிகள் ஆகும். இது வேதங்களின் அங்கமாக அமைகிறது. நிருக்தம் என்பது வேதங்களில் உள்ள தெளிவற்ற வாக்கியங்களையும், நுட்பமான அல்லது தெளிவற்ற வார்த்தைகளுக்கான பொருட்களையும் விளக்குவதற்குள்ள விதிகளை வெளிப்படுத்தும் ஒன்றாகும். சங்கல்பம் என்பது அறச்சடங்குகளின் விளக்கமாகும். சிக்ஷை என்பது வேத பாடல்களுக்கும், மந்திரங்களுக்கும் பொருந்தும் உச்சரிப்பு அறிவியலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "பொதுவான சப்தங்களாலும், விசேஷ சப்தங்களாலும் உபதேசிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
மனு {பிருகஸ்பதியிடம்}, "எது ஒருவனுக்கு ஏற்புடையதோ, அதுவே அவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே போலவே எது ஒருவனுக்கு ஏற்பில்லையோ அதுவே அவனது துன்பமாகச் சொல்லப்படுகிறது. "இதன் மூலம் நான் மகிழ்ச்சியை அடைந்து துன்பத்தை விலக்குவேன்" என்ற உணர்விலிருந்தே அறச்சடங்குகள் அனைத்தும் பாய்கின்றன.(10) எனினும், ஞானத்தை அடைவதற்கான முயற்சிகளோ, இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டையும் தவிர்ப்பதற்கான உணர்வில் இருந்து எழுகின்றன[5].(11) வேதங்களில் தோன்றும் வேள்விகள் மற்றும் பிற சடங்குகள் குறித்த விதிகள் அனைத்தும் ஆசையுடன் பிணைக்கப்பட்டிருக்கின்றன. எனினும், எவன் ஆசையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறானோ அவனே பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான். மகிழ்ச்சியை அடையும் ஆசையில், பல்வேறு வகைச் செயற்பாதைகளில் நடக்கும் மனிதனோ நரகத்தையே அடைகிறான்[6]" என்றார் {மனு}.(12)
[5] "மகிழ்ச்சி நிலையானதல்ல, எனவே, அதைப் பின்பற்றக்கூடாது என்று நம்புபவர்கள், மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் பக்திச் செயல்பாடுகளில் இருந்து தங்களை விலக்கிக் கொள்கின்றனர். நிலையற்றதும், மாறிக் கொண்டே இருப்பதுமான அனைத்தையும் தவிர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகவே அவர்கள் ஞானத்தை நாடுகிறார்கள். அவர்கள் முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கும் மோக்ஷம், அல்லது முற்றான விடுதலையை அடைய முனைகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "இத்தகைய வாக்கியங்களில் வரும் "நரகம்" என்பதற்கான பொருள் ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிருஹஸ்பதி {மனுவிடம்}, "இன்பத்தில் முடியும் ஏற்புடையதை அடைவதிலும், துன்பத்தைக் கொடுக்கும் ஏற்பில்லாததைத் தவிர்ப்பதிலும் மனிதர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். மேலும், இத்தகைய அடைதலும், இத்தகைய தவர்த்தலும் செயல்களாலேயே நிறைவேற்றப்படுகின்றன" என்றார்[7].(13)
[7] "இஃது ஓர் உயர்ந்த முதுமொழியாகும். வார்த்தைகளை விரித்துப் பொருளைத் தருகிறேன். இங்கே சொல்லப்படும் "செயல்கள்" என்பன வேள்விகளும் அறச்சடங்குகள் பிறவும் ஆகும். செயல்கள் இல்லாமல் தான் வாழும் வாழ்வின் தேவைகளை அடைய முடியாது என்பதால், செயல்களின் முறைமைகளை நடைமுறைப்படுத்துவதே இங்கே பிருஹஸ்பதியின் நோக்கமாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்போகணம் பதிப்பில், "வேண்டியதும், வேண்டாததும், முறையே ஸுகமும், ஸுகமில்லாததுமாயிருக்கின்றன. (ஸுகத்தை விரும்புவதும் துக்கத்தை வெறுப்பதுமாகிய) இதுதான் (மனிதனுடைய) விருப்பம். அதைக் கர்மங்களாலடைகிறான்" என்றிருக்கிறது.
மனு {பிருஹஸ்பதியிடம்}, "ஒருவன், செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலமே பிரம்மத்திற்குள் நுழைகிறான். செயல்கள் {வேள்விகள்} குறித்த விதிகளும் இந்தக் கதிக்காகத்தான் பாய்ந்தன[8]. செயல்களைக் குறித்த விதிகள், ஆசையில் இருந்து விடுபடாதோரின் இதயங்களை மட்டுமே மயக்கும். (ஏற்கனவே சொன்னது போல) ஒருவன் செயல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதன் மூலம் உயர்ந்த நிலையை {பரமனான வஸ்துவை} அடைகிறான்.(14) இன்பநிலையில் (விடுதலையில் {முக்தியில்}) விருப்பம் கொண்ட ஒருவன், அறச்செயல்களைச் செய்து, ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல்களின் மூலம் (பற்றுகளில் இருந்து) தூய்மையடைந்து, இறுதியாகப் பெரும் காந்தியை வெல்கிறான். ஒருவன் தன்னைச் செயல்களில் இருந்து விடுவித்துக் கொள்வதன் மூலம், அந்தச் செயல்கள் கொடுக்கும் வெகுமதிக்கும் மேலான உயர்ந்த கதியான பிரம்மத்தை அடைகிறான்.(15) உயிரினங்கள் அனைத்தும் மனம் மற்றும் செயலாலேயே {கர்மத்தாலேயே} உண்டாக்கப்படுகின்றன. மேலும் இவை இரண்டே சிறந்த வழிகளாக அனைவராலும் துதிக்கப்படுகின்றன. புறச் செயல்கள் நிலையானவையும், நிலையற்றவையுமான கனிகளை உண்டாக்குகின்றன. நிலையான கனிகளை அடைவதற்கு, மனத்தால் கனிகளைக் கைவிடுவதைவிட வேறேதும் வழி இல்லை[9].(16) இரவு கடந்ததும், கண்ணானது, தன்னிலுள்ள இருள் திரை விலகி, தன் உடைமையாளரைத் தன் சக்தியின் மூலமே வழிநடத்துவதைப் போல, புத்தியானது ஞானத்தை அடையும்போது, தவிர்க்கத்தக்க தீமைகள் அனைத்தையும் காண்பதில் வெல்கிறது.(17)
[8] "ஓர் அயத்த நிலைக்காகவே ஒருவன் செயல்களுக்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பது பொருளாகும். அதன்பிறகு அவன், உயர்ந்த கதியை அடைவதற்காக அவற்றை உதற வேண்டும். எனவே, செயல்கள் பயனைக் கொண்டிருக்கின்றன, மெதுவாக இருந்தாலும் அவை பிரம்மத்தை அடைவதில் ஒருவனுக்கு உதவி புரிகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] "மனமும் செயல்களுமான அனைத்தையும் உண்டாக்குகின்றன: இது 190ம் பகுதியின் இறுதி சுலோகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. மனத்தைக் குடைவதன் மூலம் உயர்ந்த கதியை அடைய முடிகிறது, (இங்கே 14ம் சுலோகத்தில் சொல்லப்படுவதைப் போல) செயல்களாலும் அடையப்படுகிறது. எனவே இரண்டுமே நல்ல பாதைகள்தான். உயர்ந்த கதியை அடைய வேண்டுமென்றால், செயல்களின் கனிகளை மனத்தால் கைவிட வேண்டும், அதாவது செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும், ஆனால் ஒருபோதும் அவற்றின் கனிகளில் ஆசை கொள்ளக் கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பாம்புகள், கூர்முனை குசப்புற்கள் {தர்ப்பைகள்} ஆகியவை வழியில் கிடப்பதைக் காணும்போது மனிதர்கள் அவற்றைத் தவிர்க்கிறார்கள். சிலர் அவற்றை மிதித்தாலும், அல்லது அவற்றில் விழுந்தாலும் அஃதை அறியாமையின் மூலமே செய்கிறார்கள். (அந்த அறியாமையைத் தவிர்த்து) ஞானக் கனிகளின் மேன்மையைப் பார்.(18) முறையாகச் சொல்லப்படும் மந்திரங்கள், வேள்விகள், தக்ஷிணை என்றழைக்கப்படும் கொடைகள், உணவு தானம், (தெய்வீகத் தியானத்திற்கான) மனக்குவிப்பு ஆகிய ஐந்து செயல்களே கனிகளை உண்டாக்கவல்லவை என்று சொல்லப்படுகின்றனவே தவிர வேறு எதுவும் {அவ்வாறு சொல்லப்படுவது} இல்லை.(19) செயல்கள் (மூன்று) குணங்களையே (சத்வம், ரஜஸ், தமஸ் {ஆகிய மூன்று குணங்களையே}) தங்கள் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன. இதை வேதங்கள் சொல்கின்றன. (வேதங்கள் மந்திரங்களைக் கொண்டிருக்கின்றன). எனவே, மந்திரங்களின் மூலமே செயல்கள் நிறைவேற்றப்படுவதால், மந்திரங்களுக்கும் அதே மூன்று குணங்கள் இருக்கின்றன. சடங்கும் அதே மூன்று குணங்களையே கொண்டிருக்கிறது. செயலின் கனிகள் மனத்தைச் சார்ந்திருக்கின்றன. ஜீவனே அந்தக் கனிகளை அனுபவிக்கிறது[10].(20)
[10] "இந்தச் சுலோகம், கர்மம், அல்லது செயல்களின் முக்கியக் கோட்பாடாக அமைகிறது என்றும், மோக்ஷம், அல்லது விடுதலையை விரும்பும் மனிதர்கள் ஏன் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சொல்கிறது எனச் சொல்லலாம். செயல்கள் மூன்று குணங்களைக் கொண்டன: சொர்க்கம் முதலியவற்றுக்காக வேள்விகள் செய்யப்படுவதால் சாத்வீகம் (நல்ல குணம்) என்றும்; மேன்மை மற்றும் வெற்றியில் உள்ள விருப்பத்தால் தவங்களும், சடங்குகளும் செய்யப்படுவது ராஜசீகம் (ஆசையின் குணம்) என்றும்; குறிப்பாக மாரணம், உச்சாடனம் முதலிய அதர்வனச் சடங்குகள் பிறருக்குத் தீங்கிழைப்பதற்காகச் செய்யப்படுவதால் தாமசீகம் (இருளின் குணம்) என்று மூன்று குணங்கள் சொல்லப்படுகின்றன. எனவே, எவை இல்லையென்றால் செயல்களை நிறைவேற்ற முடியாதோ அந்த மந்திரங்கள் நிச்சயம் அதே மூன்று குணங்களைக் கொண்டிருக்கின்றன. பரிந்துரைக்கப்படும் சடங்குகளிலும் அதே மூன்று குணங்கள் இருக்கின்றன. எனவே, வெல்லப்படும் கனிகளின் வகைக்கு முக்கியக் காரணமாக மனம் இருக்கிறது. அக்கனியை ஜீவன் {ஜீவாத்மா} அனுபவிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதங்கள் கர்மத்தை மூன்று குணமுள்ளதாகக் கூறுகின்றன. கர்மமானது மந்திரத்தையன்றோ முன்னிட்டதாயிருக்கிறது. அக்காரணம் பற்றி மந்திரமானது முக்குணமுள்ளதாகிறது. (அதன் மூலமான) விதியானது மூன்று குணமுள்ளதாகிது. கர்மமானது அதைச் செய்கிறவன் மனத்திலுள்ள குணத்தால் மூன்று விதமாகிறது. அந்தக் கர்மத்தின் பயனைப் புஜிக்கும் ஜீவனும் அதுபோல முக்குணமுள்ளதாகிறது" என்றிருக்கிறது.
சிறந்த வகைகளிலான ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய அனைத்தும் செயல் உலகத்தில் {கர்மலோகத்தில்} (சொர்க்கத்தில்) அடையப்படுவதால் அவையே செயல்களின் கனிகளாக இருக்கின்றன. எனினும் ஞானத்தின் கனிகளைப் பொறுத்தவரையில், மனிதன் அவற்றை மரணத்திற்கு முன்பே இம்மையிலேயே அடைகிறான்.(21) உடல் மூலம் செய்யப்படும் எந்தச் செயல்களுக்குமான கனிகளையும் ஒருவன் உடல் சார்ந்த நிலையிலேயே அனுபவிப்பான். உண்மையில், மகிழ்ச்சி பொதிந்த கட்டுமானமான உடல், துன்பம் பொதிந்த ஒரு கட்டுமானமுமாகும்[11].(22) சொற்களால் நிறைவேற்றப்படும் எந்தச் செயல்களின் கனிகளும், பேசப்படும் சொற்கள் என்ற நிலையிலேயே அனுபவிக்கப்படும். அதே போல, மனத்தால் நிறைவேற்றப்பட்ட எந்தச் செயல்களின் கனிகளும், விடுபடாத நிலையிலுள்ள மனத்தினாலேயே அனுபவிக்கப்படுகின்றன.(23) செயல்களின் கனிகளில் பற்றுடன் ஒரு மனிதன் செய்யும் நன்மையோ, தீமையோவான எவ்வகைச் செயல்களின் கனிகளையும் அதனதன் பண்பியல்புகளுடனே அவன் அனுபவிக்கிறான்.(24) நீரோட்டத்திற்கு எதிராகச் செல்லும் மீன்களைப் போல, முற்பிறவியின் செயல்கள், அவற்றைச் செய்தவனை அடைகின்றன. ஜீவன் {ஜீவாத்மா} தன் நற்செயல்களுக்காக இன்பத்தையும், தீச்செயல்களுக்காகத் துன்பத்தையும் அனுபவிக்கிறது.(25)
[11] "உடலால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் அனைத்தின் விளைவும், அந்தக் கனிகளை ஒருவன் சொர்க்கத்தில் உடல்சார்ந்து அந்தக் கனிகளை அனுபவிப்பான். விடுதலை வேண்டப்பட்டால் அது மனம் மூலம் அடையப்பட வேண்டும் என்ற உண்மையை இந்தச் சுலோகம் விளக்குகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எவனிலிருந்து {எதனிலிருந்து}, இந்த அண்டம் எழுந்ததோ, எவனை அறிவதன் மூலம் தூய்மையான ஆன்மா கொண்ட மனிதர்கள் இவ்வுலகைக் கடக்கிறார்களோ, வேத மந்திரங்களும், வார்த்தைகளும் எவனை வெளிப்படுத்துகின்றனவோ, அவனை {அஃதை} இப்போது நான் சுட்டிக்காட்டுவேன். உயர்ந்தவற்றில் உயர்வான அவனைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(26) பல்வேறு வகைச் சுவை, மணம், தீண்டல், ஒலி மற்றும் வடிவங்களில் இருந்து விடுபட்டவனான அவன், புலன்களுக்குப் புலப்படாதவனும், வெளிப்படாதவனும், நிறமற்றவனும், ஒருவனாக இருப்பவனுமாவான். அவனே, ஐந்து வகைப் பொருட்களைத் தன் உயிரினங்களாக {ஜீவன்களாகப்} படைத்திருக்கிறான்[12].(27) அவன் ஆணோ, பெண்ணோ, அலியோ அல்லன். இருப்பாகவோ, இல்லாமையாகவோ, இருந்தும் இல்லாமையாகவோ அவன் இல்லை[13]. பிரம்மத்தை அறிந்தவர்களால் மட்டுமே அவனை {பரம்பொருளைக்} காண முடியும். அவன் சிதைவில்லாதவனாவான்" {என்றார் மனு}.(28)
[12] "சுவை முதலிய புலனுணர்வுகள் ஐந்தும் இங்கே உயிரினங்களாகச் சொல்லப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[13] "அணுக்களைப் போன்ற இருப்பாகவோ, வெளியைப் போன்ற இல்லாமையாகவோ, மாயையைப் போன்ற இருந்தும் இல்லாமையாகவோ அவன் இல்லை என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகமனைத்தும் எதிலிருந்து பிறப்படைகிறதோ, புத்தியுள்ளவர்கள் எதை அறிந்து சாந்தியை அடைகிறார்களோ, எதானது வேத வாக்குகளாலும், விளங்கச்செய்ய முடியாததோ, எது பரமான பொருளோ அந்த வஸ்து சொல்லப்படுவதைக் கேள். பலவிதமான ரஸங்களிலிருந்தும், வாஸனைகளிலிருந்து விடுபட்டதும், சப்தமில்லாததும், ஸ்பர்சமில்லாததும், ரூபமில்லாததும், கர்மேந்திரியங்களுக்கு விஷயமாகாததும், ஞானேந்திரியங்களுக்குப் புலப்படாததும், ஜாதியில்லாததும் ஒன்றுமான அந்த வஸ்துவானது ப்ரஜைகளுக்கு வேண்டிச் சப்தமுதலிய ஐந்து விஷயங்களையும் உண்டு பண்ணிற்று. அது பெண்ணுமன்று; ஆணுமன்று; நபும்ஸகமுமன்று; ஸத்துமன்று, அஸத்துமன்று; ஸதஸத்துமன்று; ப்ரம்மத்தை அறிந்த மனிதர்கள் எதைப் பார்க்கிறார்களோ அந்த அக்ஷரவஸ்துவானது நசிக்கிறதில்லையென்று தெரிந்து கொள்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 201ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |