The Karma Theory! | Shanti-Parva-Section-202 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 29)
பதிவின் சுருக்கம் : பரம்பொருளுக்கும், ஐம்பூதங்களுக்குமிடையில் உள்ள உறவு; புலன்கள் மற்றும் புலன்நுகர் பொருட்களுக்கிடையில் உள்ள உறவும் அவற்றின் செயல்பாடுகளும்; ஆன்மாவின் தன்மையை உணரும் வழி; காரணக் காரியங்கள்; கர்மவினைகளின் தொடர்ச்சி; ஆன்மா உடல்களை உடையாகப் பயன்படுத்தல்; உடலின் அழிவுக்குப் பிறகு ஐம்பூதங்களுடன் கலக்கும் முறை; புதிய உடல் அடையும் நன்மை, தீமைகளின் தன்மைகள் ஆகியவற்றை பரத்வாஜருக்குச் சொன்ன மனு...
மனு {பரத்வாஜரிடம்}, "அழிவற்றவனும், சிதைவற்றவனுமான அவனிடமிருந்து {பரம்பொருளிடமிருந்து} முதலில் வெளி {ஆகாயம்} உண்டானது; வெளியில் இருந்து காற்று {வாயு} வந்தது; காற்றில் இருந்து ஒளி வந்தது; ஒளியில் இருந்து நீர் வந்தது. நீரில் இருந்து இந்த அண்டம் உண்டானது; அண்டத்திலிருந்து அதில் தோன்றும் அனைத்துப் பொருட்களும் உண்டாகின.(1) (பிரளயத்திற்குப் பிறகு), (உலகம் சார்ந்த) அனைத்துப் பொருட்களும் முதலில் நீருக்குள் நுழையும், அங்கிருந்து ஒளி அல்லது வெப்பத்திற்கும், அங்கிருந்து காற்றுக்கும் {வாயுவுக்கும்}, அங்கிருந்து வெளிக்குள்ளும் {ஆகாயத்திற்குள்ளும்} நுழையும். விடுதலையை {முக்தியை} நாடுவோர் வெளிக்கு {ஆகாயத்துக்குத்} திரும்ப வேண்டியதில்லை. மறுபுறம் அவர்கள் பிரம்மத்தை அடைகிறார்கள்.(2) முக்தியின் புகலிடமான பிரம்மம் வெப்பமானதோ, குளிந்ததோ, மென்மையானதோ, கடுமையானதோ, புளிப்பானதோ, துவர்ப்பானதோ, இனிமையானதோ, கசப்பானதோ கிடையாது. அவன் {பிரம்மத்தை அடைந்தவன்} ஒலியையோ, மணத்தையோ, வடிவத்தையோ கொண்டிருப்பதில்லை. அவன் இவை அனைத்தையும் விஞ்சியவனாக, அளவுகள் அற்றவனாக இருக்கிறான்.(3) தோலானது தீண்டலை உணர்கிறது; நா சுவையையும், மூக்கு மணத்தையும், காதுகள் ஒலிகளையும், கண்கள் வடிவங்களையும் உணர்கின்றன. அத்யாத்மாவை {ஆன்ம யோகத்தை} அறியாத மனிதர்கள், இவற்றைத் தாண்டிய எதையும் காண மாட்டார்கள்.(4) சுவைகளில் இருந்து நாவையும், மணங்களில் இருந்து மூக்கையும், ஒலிகளில் இருந்து காதுகளையும், வடிவங்களில் இருந்து கண்களையும், தீண்டலில் இருந்து தோலையும் விலக்கிய ஒருவனே, (புலன்கள் மற்றும் மனத்தில் இருந்து விடுபட்ட) சுயத்தின் {ஆன்மாவின்} பண்பியல்புகளைக் {ஆத்மஸ்வபாவத்தைக்} காண்பான்.(5)
செயல், செயலுக்கான பொருள், இடம், செயலின் நேரம், விருப்பங்கள், இன்பம் மற்றும் துன்பம் குறித்த மனச்சார்புகள் ஆகியவற்றில் செயல்படுபவனின் காரணங்களாக இருப்பவையே சுயம் (அல்லது ஆத்மா) என்று அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது[1].(6) எது அனைத்தையும் ஊடுருவி {வ்யாபகமானாசுவரரூபமோ} இருக்குமோ, எது (உயிரினங்களின் வடிவை ஏற்று) அனைத்தையும் செய்யுமோ, எது மந்திரங்களை {வேதங்களைப்} போல அண்டத்தில் நிலைத்திருக்குமோ[2], எது அனைத்திற்கும் காரணமாக இருக்குமோ, எது உயர்ந்ததில் உயர்ந்ததாக இருக்குமோ, எது இரண்டாவதாக ஒன்றில்லாமல் ஒன்றாகவே இருந்து அனைத்தையும் செய்யுமோ அதுவே காரணமாகும். வேறு அனைத்தும் விளைவுகளேயாகும் {காரியங்கள் ஆகும்}.(7) ஒரு மனிதனால் செய்யப்படும் செயல்களின் விளைவால் அவன் அடையும் விளைவுகளில் நன்மையும், தீமையும் ஒன்றாக ஒற்றுமையுடன் வசிக்கின்றன. உண்மையில், செயல்களில் பிறக்கும் நன்மை மற்றும் தீமையின் கனிகள் {பலன்கள்}, உடலில் வசிக்கும் ஞானத்தைப் போலவே தங்களுக்கு {அந்தப் பலன்களுக்குப்} புகலிடமான உயிரினங்களின் உடல்களில் ஒன்றாகவே வசிக்கின்றன[3].(8) தூண்டப்பட்ட விளக்கு எரியும்போது, தன் முன்னே இருக்கும் பிற பொருட்களைக் காணச் செய்வதைப் போலவே, உயர்ந்த மரங்களில் நிறுவப்பட்ட விளக்குகளைப் போன்றவையான ஐம்புலன்களும், அறிவால் தூண்டப்படும்போது தங்கள் தங்களுக்குரிய பொருட்களைக் கண்டடைகின்றன[4].(9) ஒரு மன்னனின் பல்வேறு அமைச்சர்கள் எவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து அவனுக்கு ஆலோசனை வழங்குகிறார்களோ, அவ்வாறே உடலில் உள்ள ஐம்புலன்களும் அறிவுக்குப் பணிவிடை செய்கின்றன. அறிவே அவை அனைத்திலும் மேன்மையானதாகும்.(10) நெருப்பின் தழல்கள், காற்றோட்டம், சூரியனின் கதிர்கள், ஆறுகளின் நீர்கள் எவ்வாறு மீண்டும் மீண்டும் சென்று வருகின்றனவோ, அவ்வாறே உடல் கொண்ட உயிரினங்களின் உடல்களும் மீண்டும் மீண்டும் சென்று வருகின்றன {இறந்து பிறக்கின்றன[5].(11)
[1] கும்பகோணம் பதிப்பில், "எதற்காக எதைக் குறித்து எந்த ஸ்தானத்தால் எந்தக் கர்த்தாவானவன் எவ்விடத்தில் எந்த முயற்சியைச் செய்கிறானோ, எதிலிருந்து பிடித்துக் கொண்டு எந்தக் கர்மத்தைச் செய்கிறானோ, அவையாவும் எதைக் காரணமாகக் கொண்டனவோ, அக்காரணத்தைத் தன்னுருவமாக அடையத்தக்க பரமாத்மா என்று சொல்கிறார்கள்" என்றிருக்கிறது.[2] "கலங்கிய நீரில் ஆயிரக்கணக்கான வடிவங்களில் தன்னைப் பிரித்துக் கொள்ளும் நிலவின் தோற்றத்தைப் போல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "ஒரு மனிதன் நன்றாகச் செய்யப்பட்ட பல கர்மங்களால் சுபத்தையும், அசுபத்தையும் விரோதமில்லாமல் எவ்விடம் அடைகிறானோ அது போல இந்த அறிவான பரமாத்மரூபமானது சுபங்களும் அசுபங்களுமான சரீரங்களில் தன் கர்மங்களால் கட்டப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.[4] "மரங்களில் நிறுவப்பட்ட விளக்குகள் என்ற கருத்து இங்கே ஏன் அறிமுகப்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமானதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "விறகூட்டப்படும் நெருப்பு தழல்களாக வெடிக்கிறது. விறகூட்டப்படாதபோது அணைகிறது, ஆனால் அழிக்கப்படுவதில்லை, புது விறகு ஊட்டப்படும்போது தழல்கள் மீண்டும் திரும்பும். காற்றோட்டம் நிற்கிறது, ஆனால் இல்லாமல் போவதில்லை, அவ்வாறானால் மீண்டும் காற்றோட்டம் தோன்றாது. சூரியக் கதிர்களும் அவ்வாறே ஆகிறது. இரவில் அவை மறைந்து, காலையில் மீண்டும் அவை தோன்றுகின்றன. ஆறுகள் கோடையில் காய்ந்து மழைக்காலத்தில் மீண்டும் நிரம்புகின்றன. உடலும் அழிந்த பிறகு மீண்டும் வேறொரு வடிவில் தோன்றும். இங்கே குறிப்பிடப்படும் பொருள்களைப் புரிந்து கொள்வதில் உள்ள பலவீனம், தவறான நம்பிக்கையில் மட்டுமே ஏற்படுகிறது என்பதைக் காணலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒரு மனிதன் ஒரு கோடரியை எடுத்து ஒரு மரத்துண்டை வெட்டினாலும் கூட, புகையையோ, நெருப்பையோ காணாததைப் போலவே, ஒரு மனிதனின் கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றை வெட்டிப் பிரித்தாலும், வயிறு, கரங்கள் மற்றும் கால்களுக்கிடையில் உள்ள பொதுவான எந்த அறிவுக் கோட்பாட்டையும் {ஆன்மாவையும்} அவன் காணமாட்டான்[6].(12) மரத்தை ஒன்றோடொன்று உரசுவதால், ஒரு மனிதன் புகையையும், நெருப்பையும் காண்பதைப் போலவே, நன்கு செலுத்தப்பட்ட புத்தியையும், ஞானத்தையும் கொண்ட மனிதன், (யோகத்தின் மூலம்) புலன்களையும், ஆன்மாவையும் ஒருங்கிணைத்து, தன் இயல்பின் இருப்பில் இருக்கும் பரமாத்மாவைக் காணலாம்[7].(13) ஒருவன் கனவுக்கு மத்தியல், தன் உடலானது தன்னில் இருந்து வேறுபட்டுத் தரையில் கிடப்பதைக் காண்பதைப் போலவே, ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியுடன் கூடிய மனிதன், (தான் இறந்த பிறகு) தன் உடலைக் கண்ட பிறகு, வேறொரு வடிவிற்குள் செல்கிறான்.(14) பிறப்பு, வளர்ச்சி, சிதைவு மற்றும் அழிவு ஆகியவற்றுக்கு ஆன்மா ஒரு போதும் ஆட்படுவதில்லை. வாழ்வின் விளைவுகளுடன் கூடிய செயல்களின் விளைவால், உடலை ஆடையாக உடுத்தியிருக்கும் ஆன்மாவானது, (அசைவை இழந்து), பிறரால் பார்க்கப்படாதவாறு இந்த உடலில் இருந்து மற்றொன்றுக்குக் கடந்து செல்கிறது.(15)
[6] கும்பகோணம் பதிப்பில், "ஒரு மனிதன் கோடாலியை எடுத்து வெட்டுவதால் கட்டையிலுள்ள புகையையும் நெருப்பையும் காணமுடியாதது போலச் சரீரத்தையும், வயிற்றையும், கையையும், காலையும் அறுப்பதால் அச்சரீரத்தைவிட வேறான ஆத்மாவைக் காண்கிறார்களில்லை" என்றிருக்கிறது[7] "இயல்புத் தன்மைகள், குணங்கள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படாமல் தன்னியல்பில் நிலைத்திருக்கும் பரமாத்மா என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆன்மாவின் வடிவை ஒருவராலும் தங்கள் கண்களால் காண முடியாது. மேலும் ஆன்மாவானது, எவரின் தீண்டலுக்கும் ஆட்பட முடியாது. ஆன்மாவானது அவற்றை (புலன்களைக்) கொண்டு எந்தச் செயலையும் செய்யாது. புலன்கள் ஆன்மாவை அணுகாது. எனினும், ஆன்மாவானது அவை அனைத்தையும் உணர்கிறது.(16) பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு முன்னால் சுடர்மிக்க நெருப்புக்குள் வைக்கப்படும் எதுவும், அதில் உள்ள ஒளி மற்றும் வெப்பத்தின் விளைவால், வேறு எந்த வண்ணத்தையோ, இயல்பையோ ஏற்காமல் ஒரு குறிப்பிட்ட நிறத்தை ஏற்பதைப் போலவே, ஆன்மாவின் வடிவும் அதன் நிறத்தை உடலில் இருந்து எடுப்பதாகத் தெரிகிறது.(17) இந்த வகையிலேயே, உடலைக் கைவிடும் மனிதனும், எவராலும் பார்க்கமுடியாதவாறு மற்றொன்றில் நுழைகிறான். உண்மையில், தன் உடலை அடிப்படையான (ஐந்து) பெரும்பூதங்களில் கைவிடும் அவன், அதே போல (ஐந்து) பூதங்களால் செய்யப்பட்ட ஒரு வடிவை ஏற்கிறான்.(18) உடல் கொண்ட உயிரினமானது (தன் உடல் அழிந்ததும்), தன் உடலில் உள்ள ஒவ்வொரு குறிப்பிட்ட பூதத்தையும், (தன் உடலுக்கு வெளியே உள்ள) தன் மெய்க்கு இயல்பான குறிப்பிட்ட பூதத்தில் கலந்து வெளி {ஆகாயம்}, காற்று {வாயு}, நெருப்பு {அக்னி}, நீர் மற்றும் பூமி {நிலம்} ஆகியவற்றில் நுழைகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவையும், (தங்கள் செயல்பாட்டுக்காக) ஐந்து பூதங்களைச் சார்ந்திருப்பவையுமான புலன்களும், அதனதனுக்குரிய பூதங்களில் நுழைகின்றன.(19)
காதானது தன் திறனை வெளியில் {ஆகாயத்தில்} இருந்து பெறுகிறது; மூக்கானது மணத்தின் உணர்வைப் பூமியில் இருந்து பெறுகிறது. கண்ணின் தன்மையான வடிவமானது, ஒளி அல்லது நெருப்பின் விளைவாகும். நெருப்பு அல்லது வெப்பமானது, நீரின் காரணத்தைச் சார்ந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறுது. சுவையைத் தன் தன்மையாகக் கொண்ட நாக்கானது, நீரில் கலக்கிறது. தீண்டலைத் தன் தன்மையாகக் கொண்ட தோலானது, அதன் இயல்பான காற்றில் {வாயுவில்} தொலைந்து போகிறது.(20) (ஒலி உள்ளிட்ட) ஐந்து வகைத் தன்மைகளும் (அடிப்படையான ஐந்து பூதங்களான) (ஐந்து) பேருயிரிகளில் வசிக்கின்றன. (வெளி உள்ளிட்ட) ஐந்து வகைப் புலன்நுகர் பொருட்களும், (ஐந்து) புலன்களில் வசிக்கின்றன. மேலும் (ஐந்து வகைத் தன்மைகள், ஐந்து வகைப் பூதங்கள், ஐம்புலன்கள் ஆகிய) இவை மனத்தின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கின்றன. மனமோ, புத்தியின் வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது, புத்தியோ அசுத்தமற்றதும், உண்மையானதும் எதுவோ, அதன் (பரமாத்மாவின் {ஆத்மாவின்}) வழிகாட்டுதலைப் பின்தொடர்கிறது.(21) செயலைச் செய்தவன், தன் முற்பிறவியில் தான் செய்த செயல்கள் அனைத்திற்கு ஏற்பவும் தன் புதிய உடலின் மூலம் நன்மையான மற்றும் தீமையான செயல்கள் அனைத்தையும் பெறுகிறான். இப்பிறவியில் செய்யப்படும் செயல்கள் மற்றும் அடுத்தடுத்த பிறவிகளில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும், நல்ல நீரோட்டத்தில் {பிரவாஹத்தில்} அதற்கு இணக்கமாகக் கடந்து செல்லும் நீர் வாழ் விலங்குகளைப் போலவே மனத்தைப் பின்தொடர்கின்றன.(22) வேகமாக நகர்வதும், ஓய்வற்றதுமான பொருள் காணப்படுவதைப் போல, (கண்ணாடியின் மூலம் காணப்படும்) நுண்ணியப் பொருள் பெரும் அளவுகளில் தோன்றுவதைப் போல, (வேறு வகையில் காணமுடியாத) தன் முகத்தை ஒரு மனிதனுக்கு நிலைக்கண்ணாடி காட்டுவதைப் போல, ஆன்மாவும் (நுண்ணியதாகவும், புலப்படாததாகவும் இருப்பினும்) புத்தியின் உணர்வுப் பொருளாகிறது" என்றார் {மனு}[8].(23)
[8] "கண்ணாடிகள், நுண்ணோக்கிகள் ஆகியவற்றின் அறிவை முனிவர்கள் பெற்றிருந்தனர் என்பதை இந்தச் சுலோகம் காட்டுவதாகத் தெரிகிறது. நுண்ணியப் பொருட்களைக் காட்டும் கருவியானது நன்கறியப்பட்டு இருக்க வேண்டும், அல்லது அதற்கு ஏதாவது ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். உரையாசிரியர் அதை உபநேத்ரம் upanetra {துணைவிழி} என்றழைக்கிறார். கும்பகோணம் பதிப்பில், "ஜலத்தை இருப்பிடமாகக் கொண்ட பிராணிகள் ப்ரவாஹம் செல்லுவதை அனுசரித்துச் செல்லுவது போலப் பெரியவைகளும், சிறியவைகளுமான ப்ராணிகள் {விஷயம் புத்தி முதலியவை} மனத்தை அனுஸரித்துச் செல்லுகின்றன. நிலையற்ற பொய்ப் பொருளானது எவ்விதம் உண்மைப் பொருள் போலக் கண்களுக்குப் புலப்படுகிறதோ, நுட்பமான வஸ்து எவ்விடம் பெரிய உருவமுள்ளது போலத் தோன்றுகிறதோ அவ்விதமே தீர புருஷன் மிக்கத் தாபமுள்ளவன் போலிருந்தாலும் உண்மையில் மோஹத்தில் விழமாட்டான்; அப்படியே புத்திக்கு விஷயமான பரமாத்மாவையும் அடைவான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 202ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |