The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 30)
பதிவின் சுருக்கம் : புலப்படாததாக இருக்கும் ஆன்மாவின் இருப்பையும், எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதையும் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...
The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil |
மனு {பிருஹஸ்பதியிடம்}, "புலன்களுடன் ஒன்றிணையும் மனம், கடந்தகாலத்தில் பெறப்பட்ட பொருட்களின் மனப்பதிவுகளை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவுகூர்கிறது. புலன்கள் அனைத்தும் (தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால்,[1] புத்தியின் வடிவில் உள்ள உயர்ந்தது (ஆன்மா), தன் உண்மையான இயல்பில் நீடித்திருக்கிறது.(1) (அத்தகைய நேரத்தில்) ஆன்மாவானது, புலன்நுகர் பொருட்களின் ஒருங்கமைவையோ, முரணையோ கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துத் திசைகளில் இருந்தும் அவற்றைத் திரட்டி ஒன்றாகப் பற்றி வைக்கும்போது, பொருத்தமற்ற பொருட்கள் அனைத்திற்கும் மத்தியில் அஃது அவசியம் உலவ நேர்கிறது. எனவே, அஃது (அமைதியான) சாட்சியாக இருக்கிறது. உடலுக்குள் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தனிப்பட்ட சுதந்திர இருப்பாக இருக்கிறது[2].(2)
[1] "இறந்தவன் போல் உறங்கும்போது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "கனவில் ஆன்மாவானது, பல்வேறு நேரங்கள் மற்றும் இடங்களுக்குரிய பொருட்களையும், நிகழ்வுகளையும் ஒன்றாகத் திரட்டும்போதும், காலம் மற்றும் இடம் தொடர்பான பொருத்தமில்லா முரண்கள் தோன்றும்போதும், அது புலன்கள் மற்றும் உடலில் இருந்து தனிப்பட்ட, சுதந்திர இருப்பைக் கொண்டுள்ளது என்பது இங்கே சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ரஜஸ், தமஸ், மற்றும் மூன்றாவதாகச் சத்வம் ஆகியவை {குணங்கள்} இருக்கின்றன. மேலும் புத்திக்கு, விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்று மூன்று நிலைகளும் இருக்கின்றன. ஆன்மாவானது, அந்த நிலைகள், முதலில் குறிப்பிட்டப்பட்ட மூன்று வகைக் குணங்களின் இயல்புகள், முரண்பட்டவையான இன்பங்கள் மற்றும் துன்பங்கள் ஆகியவற்றைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறது[3]. ஆன்மாவானது, மரத்துண்டில் உள்ள நெருப்பில் நுழையும் காற்றைப் போலப் புலன்களுக்குள் நுழைகிறது.(3) ஒருவன் தன் கண்ணால் ஆன்மாவின் வடிவத்தைக் காணவோ, புலன்களுக்கு மத்தியில் உள்ள தீண்டலின் புலனுணர்வால் அதை {ஆன்மாவை} உணரவோ முடியாது. மேலும் ஆன்மாவானது, காதால் உணரப்படும் பொருளாகவும் இல்லை. எனினும், ஸ்ருதிகளின் துணை மற்றும் ஞானியரின் போதனைகள் மூலம் அதை {ஆன்மாவைக்} காணலாம். புலன்களைப் பொறுத்தவரையில், அதை {ஆன்மாவைத்} தொடரும் குறிப்பிட்ட புலனானது, தன் உணர்வை இழந்து, புலன் என்ற தன் இருப்பையே இழக்கிறது.(4)
[3] "சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றின் விளைவாலும், அந்த மூன்று குணங்களினால் உண்டாகும் புத்தியின் மூன்று நிலைகளுடனான தொடர்பாலும் எழும் இன்ப துன்பங்களின் அறிவை மட்டுமே ஆன்மா கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. எனினும், ஆன்மாவானது அவற்றை அறிந்தாலும் அவற்றை அனுபவிப்பதோ, அவற்றால் துன்புறுவதோ இல்லை. அஃது அனைத்திற்கும் அமைதியான, செயலற்ற சாட்சியாக மட்டுமே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புலன்களால் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களைத் தாங்களே உணர முடியாது. ஆன்மாவானது (அறிவதையும், அறியப்படுவதையும உணர்வதால்) அனைத்தையும் அறிந்ததாக இருக்கிறது. அஃது அனைத்துப் பொருட்களையும் பார்க்கிறது. அனைத்தையும் அறிந்ததாக இருப்பதால், (முன்னர்ச் சொன்னது போலப் புலன்களால் உணரப்படாத) ஆன்மாவே புலன்களைக் காண்கிறது.(5) இமய மலையின் மறு பக்கத்தை யாரும் பார்த்ததில்லை, அதே போலச் சந்திர வட்டிலின் பின்புறத்தையும் யாரும் பார்த்ததில்லை. எனினும் அவை இல்லை என்று சொல்ல முடியாது.(6) அதேபோலவே, புலன்களால் உணரப்படாததாக இருப்பினும், அனைத்து உயிரினங்களிலும் வசிப்பதும், நுட்பமானதும், அறிவையே தன் சாரமாகக் கொண்டதுமான ஆன்மா இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.(7)
நிலவின் களங்கங்களின் வடிவில் உலகம் பிரதிபலிக்கப்படுவதையே மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்தாலும் கூட, உலகமே அங்கே பிரதிபலிக்கப்படுகிறது என்பதை அறிவதில்லை. ஆன்ம அறிவும் அவ்வாறானதே ஆகும். அந்த அறிவு தானாகவே வர வேண்டும். ஆன்மாவானது ஆன்மாவையே சார்ந்திருக்கிறது.(8) பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பிறகும் புலப்படக்கூடிய பொருட்களின் வடிவமற்ற தன்மையைச் சிந்தித்த ஞானிகள், மேலீடான வடிவங்களாக இருக்கும் வடிவமற்ற பொருட்களைப் புத்தியின் துணையால் பார்க்கின்றனர். சூரியனின் நகர்வு காணப்படவில்லையெனினும், அஃது எழுவதையும் மறைவதையும் கண்டு, சூரியனுக்கு அசைவிருக்கிது என்று தீர்மானிக்கப்படுகிறது[4].(9) அதே போலவே, ஞானமும் கல்வியும் கொண்டவர்கள், ஆன்மாவானது எட்ட முடியாத தொலைவில் இருந்தாலும், நுண்ணறிவு {புத்தி} எனும் விளக்கின் உதவியுடன் அதை {ஆன்மாவைக்} கண்டு, அருகில் உள்ள ஐந்து வகைப் பூதங்களையும் பிரம்மத்துடன் கலக்க முனைகிறார்கள்.(10)
[4] "இதை விளக்க உரையாசிரியர் ஒரு மரத்தைப் பயன்படுத்துகிறார். பிறப்பதற்கு முன்பு மரமில்லை; அழிந்த பிறகும் அஃது இல்லை; இடைப்பட்ட வேளையில் மட்டுமே அஃது இருக்கிறது. அதன் வடிவமற்ற தன்மை, அல்லது ஏதுமற்ற தன்மை இந்த இரண்டு நிலைகளிலேயே வெளிப்படுகிறது. எது கடந்த காலத்தில் இல்லையோ, எது எதிர்காலத்தில் இருக்காதோ, அது நிகழ்காலத்தில் இருக்கிறது என்று கருதப்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில், வழிமுறைகளைச் செயல்படுத்தாமல் எந்த நோக்கமும் நிறைவேற்றப்பட முடியாது. மீனவன், இழைகளால் செய்யப்பட்ட வலைகளின் வழியின் மூலமே மீனைப் பிடிக்கிறான்.(11) விலங்குகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற விலங்குகள் கைப்பற்றப்படுகின்றன. பறவைகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற பறவைகள் பிடிக்கப்படுகின்றன. யானைகளை நியமித்தே பிற யானைகள் பிடிக்கப்படுகின்றன. இவ்வழியில் ஆன்மாவை அறிவுக் கோட்பாட்டின் மூலம் உணரலாம்.(12) பாம்பின் கால்களைப் பாம்பே அறியும் என நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையிலேயே ஒருவன், மொத்த உடலுக்குள் நுட்பமான வடிவத்தில் வசிக்கும் ஆன்மாவைத் தன் அறிவின் மூலம் காண்கிறான்.(13) மக்கள் தங்கள் புலன்களின் மூலம் புலன்களை அறிவதில்லை. அதேபோல, உயர்ந்ததான ஆன்மாவை வெறும் உயர்ந்த புத்தியால் மட்டுமே காண முடியாது. (14)
தேய்பிறையின் பதினைந்தாவது நாள் {புது நிலவின் / அமாவாசை} இரவில் நிலவு மறைக்கப்படுவதால் அதைக் காண முடியாது. எனினும், அதற்கு அழிவு ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. உடலில் வசிக்கும் ஆன்மாவின் வழக்கும் அவ்வாறானது ஆகும்.(15) தேய்பிறையின் பதினைந்தாவது நாளில், நிலவின் மொத்த உடலும் புலப்படாத் தன்மையை அடைகிறது. அதே வகையிலேயே உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவையும் உணர முடியாது.(16) நிலவானது, ஆகாயத்தின் மற்றொரு புள்ளிக்கு நகர்ந்ததும், மீண்டும் ஒளிரத்தொடங்குவதைப் போலவே, ஆன்மாவும் புதிய உடலை அடைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது.(17) நிலவின் பிறப்பு, வளர்ச்சி, மறைவு ஆகிய அனைத்தும், கண்களால் நேரடியாக உணரப்படுகிறது. எனினும், இந்தத் தோற்றப்பாடுகள், அந்த ஒளிக்கோளின் மொத்த வடிவுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. அவை ஆன்மாவின் குணங்களைப் போன்றவையல்ல.(18) தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} நிலவு மறைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, மறைந்து போன அதே ஒளிக்கோளாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையிலேயே, பிறப்பு, வளர்ச்சி, வயது ஆகிய மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும் ஒரு மனிதன் தன் அடையாளத்தில் ஐயங்கொள்ளாத வகையில் அதே நபராகவே கருதப்படுவான்.(19)
ராகு எவ்வாறு நிலவை அணுகுகிறது, விடுகிறது என்பது தெளிவாகக் காணப்படுவதில்லை. அந்த வகையிலேயே ஆன்மாவும், ஒருவனுடைய உடலை விட்டுப் பிரிவதையும், மற்றொன்றுக்குள் நுழையவதையும் காண முடியாது.(20) சூரியன் அல்லது நிலவுடன் இருக்கும்போது மட்டுமே ராகு புலப்படுகிறது. அதே போலவே ஆன்மாவும், உடலில் இருக்கும்போது மட்டுமே உணரப்படும் பொருளாக இருக்கிறது.(21) சூரியன் அல்லது சந்திரனிலிருந்து விடுபட்டதும் ராகுவைக் காண முடியாது. அதே போலவே, ஆன்மாவும் உடலைவிட்டு அகன்றதும் காணப்பட முடியாது.(22) மேலும், தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} சந்திரன் மறையும்போது, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களால் அது கைவிடப்படாதிருப்பதைப் போல, ஆன்மாவானதும் உடலில் இருந்து பிரிந்தாலும், அந்த உடலால் அடைந்த செயல்களின் கனிகளை {கர்மப்பலன்களைக்} கைவிடுவதில்லை" என்றார் {மனு}.(23)
சாந்திபர்வம் பகுதி – 203ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |