Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 31)
பதிவின் சுருக்கம் : எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...
Spiritual sense! | Shanti-Parva-Section-204 | Mahabharata In Tamil |
மனு {பிரஹஸ்பதியிடம்}, "இந்த வெளிப்பாடு (உடல்) {ஸ்தூலசரீரம்}, கனவின்போது (செயலின்றி) கிடந்து, ஜீவனானது {ஸூக்ஷமசரீரமானது} முன்னதிலிருந்து {உடலான ஸ்தூலசரீரத்திலிருந்து} தன்னை விடுவித்துக் கொண்டு நுண்ணிய வடிவில் நடப்பதைப் போல, ஆழ்ந்த உறக்கம் (அல்லது மரணம்) என்றழைக்கப்படும் நிலையில், புலன்கள் அனைத்துடன் கூடிய அந்த நுண்ணிய வடிவம் {ஜீவன் / சூக்ஷமசரீரம்} செயலற்றுப் போகவும், புத்தியானது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விழிப்புடன் இருக்கிறது. இவ்வாறு இருப்பு மற்றும் இல்லாமை {முக்தி} ஆகிய நிலைகளில நேர்கிறது[1].(1) தெளிந்த நீரில் கண்ணால் வடிவச் சாயல்கள் {பிரதிபிம்பங்கள்} காணப்படுவதைப் போல, புலன்கள் கலக்கமடையாமல் இருந்தால், ஆன்மாவானது புத்தியால் காணப்படவல்லதாக இருக்கிறது.(2) எனினும், அந்நீர் கலங்கினால், அதன் அருகில் இருக்கும் மனிதனால் அந்த வடிவத்தோற்றங்களைக் காண முடியாது. அதைப் போலவே, புலன்கள் கலக்கமடைந்தால், ஆன்மாவைப் புத்தியால் காண முடியாது.(3) அறியாமையானது மாயையைத் தோற்றுவிக்கிறது. மாயை மனத்தைப் பாதிக்கிறது. மனமானது, பழுதாகும்போது, மனத்தையே தங்கள் புகலிடமாகக் கொண்ட ஐம்புலன்களும் பழுதடைகின்றன.(4) அறியாமையால் மடக்கப்பட்டு, உலகம் சார்ந்த பொருட்களெனும் சகதிக்குள் மூழ்கும் ஒருவனால், மனநிறைவு அல்லது நிலையமைதியின் இனிமைகளை அனுபவிக்க முடியாது. (இவ்வாறான சூழ்நிலையில்} நன்மை மற்றும் தீமையான செயல்களின் தொடர்பறாத ஆன்மாவானது, மீண்டும் மீண்டும் உலகம் சார்ந்த பொருட்களுக்கே திரும்புகிறது.(5)
[1] "இது மிகக் கடினமான சுலோகமாகும். இதில் சம்பந்தப்பட்ட தனிச்சிறப்புகள் புரிந்து கொள்ளக் கடினமானகவும் இருக்கின்றன. இதை விவரிப்பதில் நான் உரையாசிரியரையே பின்பற்றியுள்ளேன். ஒரு கனவில் வியக்தம் Vyaktha (வெளிப்படும் உடல்) செயலற்றுக் கிடக்கிறது, அதே வேளையில் சேதனம் Chetanam (நுண்ணிய வடிவம்) நடக்கிறது. சுசுப்தி Sushupti (மரணம் போன்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், இந்திரியசம்யுக்தம் Indriyasamyuktam (நுண்ணிய வடிவம்) கைவிடப்பட்டு, முன்னதிலிருந்து {நுண்ணிய வடிவத்திலிருந்து} விடுபட்டு ஞானம் (புத்தி) நிலைக்கிறது. அதே வகையிலேயே, சொல்லப்பட்ட நிலைகள் அனைத்தின் சார்புமற்றதான பரமாத்மாவுக்குள் {ஜீவன் / நுண்ணிய வடிவம் / சூக்ஷமசரீரம்} ஈர்க்கப்படுவதே விடுதலை {முக்தி} என்பதால், காலச் சார்பு, உணர்வு முறை முதலிய அறியப்பட்ட நிலைகளுக்கு ஆட்பட்டுப் பாவம் bhavah, அல்லது இருப்பு அழிந்து, அபாவம் abhava (இல்லாமை, அதாவது {முக்தி} விடுதலை) விளைகிறது. விடுதலை {முக்தி} சாத்தியமானதே என்பதைக் காட்ட இந்த உய்த்துணர்வுகள் {அவதானிப்புகள்} அவசியம் தேவைப்படுகின்றன என உரையாசிரியர் விளக்குகிறார். கடந்த பகுதியில் {அத்தியாயத்தில்} சொல்வபவர் {மனு} உடலைச் சார்ந்ததாக ஆன்ம வெளிப்பாட்டைக் காட்ட தொடர்ந்து விளக்கங்கள் அளித்தார். எனவே, கேட்பவர் {பிருஹஸ்பதி}, முக்தி அல்லது பரமாத்மாவுக்குள் ஈர்க்கப்படுதல் என்ற நிலைக்கு உடல் ஆன்மா பிரிவு அவசியம் என்றாலும், உடலில் இருந்து பிரிக்க முடியாத கறைந்த நிலையிலேயே ஆன்மா இருக்கிறது என்று ஆன்மாவின் உடல் சார்பு என்ற தோற்றத்திற்கு எதிராக வாதிட்டார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ப்ரத்யக்ஷமான இந்த ஸ்தூலசரீரமானது ஸ்வப்ன காலத்தில் உறக்கமடைந்திருக்கிறது. புத்தியென்னும் ஸூக்ஷமசரீரமானது இச்சரீரத்தில் பற்றுதலில்லாமல் ஸஞ்சரிக்கிறது; இது போல ஸம்ஸாரமுண்டாகிறது. ஸ்வப்ன காலத்தில் ஸூக்ஷமசரீரமான இந்திரியங்களுடன் கூடிய ஜ்ஞானரூபியான ஆத்மாவானது ஸுஷுப்தியில் அந்த ஸூக்ஷ்மசரீரத்தை விட்டு விலகியிருப்பது போல மோக்ஷமுண்டாகிறது" என்றிருக்கிறது. இதன் பொருள் பின்வருமாறு: வெளிப்படையாகத் தெரிகின்ற இந்த உடலானது {ஸ்தூல சரீரம்}, கனவின் போது, உறங்குகிறது. அதே வேளையில் புத்தியான ஜீவன் {ஸூக்ஷ்ம சரீரம்} இந்த உடலில் பற்றில்லாமல் உலவி கொண்டிருக்கிறது. கனவின் போது, ஜீவன் மற்றும் புலன்களுடன் கூடிய ஞான வடிவான ஆன்மாவானது மரணம் போன்ற ஆழ்ந்த உறக்க நிலையில் ஜீவனை {புத்தியை} விட்டு விலகி இருக்கும் நிலையைப் போல முக்தியை / விடுதலையை அடைகிறது.
பாவத்தின் விளைவால் ஒருவனுடைய தாகம் ஒருபோதும் அடங்குவதில்லை. அவனுடைய பாவம் அழியும்போதே அவனது தாகமும் தணிகிறது.(6) தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்ளத்தக்க போக்கைக் கொண்ட உலகப் பொருட்களில் உள்ள பற்றின் விளைவால், ஒருவன் தான் விரும்ப வேண்டியவற்றை விடுத்து வேறு பொருட்களை விரும்புவதால், உயர்ந்ததை {பரமனை / பரம்பொருளை} அடையத் தவறுகிறான்[2].(7) அனைத்துப் பாவச் செயல்களின் அழிவிலிருந்தே மனிதர்களிடம் ஞானம் எழுகிறது. ஞானம் தோன்றியதும், ஒருவன், பளபளப்பான கண்ணாடியில் தன் வடிவத்தைக் காண்பதைப் போலவே, தன் புத்தியில் தன் ஆன்மாவைக் காண்பான்.(8) புலன்களைக் கட்டுப்படுத்தாததன் விளைவால் ஒருவன் துன்பத்தை அடைகிறான். புலன்களைக் கட்டுப்படுத்தியதால் ஒருவன் இன்பத்தை அடைகிறான். எனவே, ஒருவன் புலன்களால் உணரப்படும் பொருட்களில் இருந்து தன் முயற்சியுடன் தனது மனத்தை விலக்க வேண்டும்[3].(9) புலன்களுக்கு மேலானதாக மனம் இருக்கிறது; மனத்திற்கு மேலானதாகப் புத்தி இருக்கிறது. புத்திக்கு மேலானதாக ஆன்மா இருக்கிறது; ஆன்மாவுக்கு மேலானதாக உயர்ந்தது அல்லது மிகப்பெரியது {பரம்பொருள் / பரமாத்மா} இருக்கிறது.(10)
[2] கும்பகோணம் பதிப்பில், "விஷயங்களில் பற்றுதலாலும் அதில் சாச்வதத்தன்மையை அடைந்திருப்பதாலும் அதற்கு மாறான ஸுகத்தை மனத்தால் விரும்பிக் கொண்டிருப்பவன் பரமாத்மாவை அடையமாட்டான்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "மனிதன் விஷயங்களிற் சென்ற இந்திரியங்களால் துக்கமுள்ளவனாவான்; அதிலிருந்து அடக்கப்பட்ட அவ்விந்திரியங்களாலேயே ஸுகமுள்ளவனாவான். ஆகையால் இந்திரியங்களென்னும் திருடர்களிடமிருந்து ஆத்மாவைப் புத்தியால் அடக்கி ரக்ஷித்துக் கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
வடிவமற்றதிலிருந்து {பரம்பொருளில் இருந்து} ஆன்மா எழுந்தது; ஆன்மாவில் இருந்து புத்தி எழுந்தது; புத்தியிலிருந்து மனம் எழுந்தது. மனம் புலன்களோடு கலக்கும்போது, அஃது {மனம்} ஒலியையும், புலன் நுகர் பொருட்களான பிறவற்றையும் உணர்கிறது.(11) எவன் அந்தப் {புலன்நுகர்} பொருட்களையும், வெளிப்பட்டிருக்கும் அனைத்தையும் கைவிடுவானோ, எவன் மூலப் பொருளில் {ப்ரக்ருதியில்} இருந்து எழும் அனைத்துப் பொருட்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறானோ, அவன் அவ்வாறு விடுபடுவதால் அழிவின்மையை அனுபவிக்கிறான் {முக்தியை அடைகிறான்} [4].(12) உதிக்கும் சூரியன் தன் கதிர்களை வெளியிடுகிறான். அவன் மறையும்போது தன்னால் வெளியிடப்பட்ட கதிர்களைத் தானே விலக்கிக் கொள்கிறான்.(13) அந்த வகையிலேயே ஆன்மாவும், உடலுக்குள் நுழைந்து, புலன்களால் வெளியிடப்படும் கதிர்களால் புலன்களின் ஐந்து வகைப் பொருட்களை அடைகிறது. எனினும், அது திரும்பும்போது, தானே அந்தக் கதிர்களை விலக்கிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது.(14) செயல்களால் உண்டாக்கப்பட்ட பாதையில் மீண்டும் மீண்டும் வழிநடத்தப்படும் அது {ஆன்மா} செயல்கள் செய்யப்பட்டதைப் பின்தொடர்ந்ததன் விளைவால் தன் செயல்களுக்கான கனிகளை அடைகிறது[5].(15)
[4] "புலன்களால் உணரப்படுபவையும், மூலப் பொருளுக்குச் சொந்தமானவையுமான பொருட்களே கைவிடப்பட வேண்டும். முன்னர்ச் சொன்னப்பட்டவற்றிலிருந்து தனித்தன்மை வாய்ந்தவையும், பூதத்திரள்களின் தன்மாத்திரைகளால் செய்யப்பட்டவையுமான லிங்கங்கள், அல்லது நுண்ணிய வடிவங்கள், அல்லது இருப்புகளே நீடித்திருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சப்தமுதலிய அந்த வியங்களையும், அவைகளுக்கிடமான எல்லா வஸ்துக்களையும் விலக்கிக் கொள்கிறவனும், ஆமையானது தன் அங்கங்களை அடக்கிக் கொள்வது போல வெளியில் சென்ற இந்திரியங்களை அடக்கிக் கொள்ளுகிறவனுமானவன் ப்ரக்ருதியிலிருந்து உண்டானவைகளும், மனம் ஸஞ்சரிக்கும் கிராமங்கள் போன்றவைகளுமான அந்த விஷயங்களை விலக்கிக் கொண்டு மோக்ஷத்தை அடைகிறான்" என்றிருக்கிறது.[5] கும்பகோணம் பதிப்பில், "ப்ரவிருத்தி மார்க்கத்திற்குரிய தர்மத்தை அடைந்த இந்த ஜீவன் கர்மத்தால் காண்பிக்கப்பட்ட வழியில் அந்தக் கர்மத்தால் திரும்பவும் திரும்பவும் இழுக்கப்பட்டவனாகிக் கர்மத்திற்குரிய பயனை அடைகிறான்" என்றிருக்கிறது.
புலன்நுகர் பொருட்களில் உள்ள ஆசையானது, அத்தகைய ஆசையில் ஈடுபடாத மனிதனிடம் இருந்து விலகி இருக்கிறது. எனினும், ஆசையில் இருந்து முற்றிலும் விடுபட்ட ஆன்மாவைக் கொண்டவனிடம் இருந்து ஆசையெனும் கோட்பாடே உண்மையில் விலகிச் செல்கிறது[6].(16) புத்தியை ஈர்த்திருக்கும் மனமானது இல்லாமல் போவது சாத்தியமென்பதால், புத்தியானது, புலன் நுகர் பொருட்களில் உள்ள பற்றில் இருந்து விடுபட்டு, மனத்தில் நிலைபெறும்போது, ஒருவன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.(17) பிரம்மம் என்பது தீண்டவோ, கேட்கவோ, சுவைக்கவோ, பார்க்கவோ, நுகரவோ, ஆலோசிக்கவோ படக்கூடிய பொருள் அல்ல. (வேறு அனைத்தில் இருந்தும் விடுபட்ட) புத்தியால் மட்டுமே அஃதை அடைய முடியும்.(18) புலன்கள் மூலம் மனம் உணரும் அனைத்துப் பொருட்களும், மனத்திற்குள் ஈர்க்கப்படவல்லவை; மனமானது புத்திக்குள் ஈர்க்கப்படக்கூடியது; புத்தியானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படக்கூடியது, ஆன்மாவோ உயர்ந்ததற்குள் {பரம்பொருளுக்குள்} ஈர்க்கப்படக்கூடியது[7].(19) புலன்களால் மனத்தின் வெற்றிக்குப் பங்காற்ற முடியாது. மனத்தால் புத்தியை உணர முடியாது. வெளிப்படும் ஆன்மாவைப் புத்தியால் உணரமுடியாது. எனினும் நுட்பமான ஆன்மாவானது இவை அனைத்தையும் காண்கிறது[8]" என்றார் {மனு}.(20)
[6] "புலன்நுகர் பொருட்களைத் தவிர்ப்பதால் ஒருவன் அவற்றின் மீது கொண்ட தன் ஆசையை வெல்லலாம். ஆனால், அந்த வழிமுறையின் மூலம் ஒருவன் ஆசையெனும் கோட்பாட்டில் இருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. அவன் தன் ஆத்மாவைக் காணும் வரை, ஆசையெனும் கோட்பாட்டை அவனால் அடக்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "விஷய போகங்களிலிருந்து விலகுகிற ஜீவனுக்கு ஆசை ஒன்றைத் தவிர விஷயங்கள் விலக்கமடையும். இந்த ஜீவனுக்குள்ள அந்த ஆசையும் பரமாத்மாவைக் கண்டதும் விலக்கமடையும்" என்றிருக்கிறது.[7] "இங்கே முதற்கூறாக, புற உலகத்தின் தனித்த இருப்பு மறுக்கப்படுகிறது. புலன்நுகர் பொருட்கள் அனைத்தும் அகநிலை இருப்பாகவே சொல்லப்படுகின்றன; எனவே அவற்றை மனத்தால் ஈர்த்துக் கொள்ள முடியும். ஐரோப்பிய தத்துவவியலில் பருப்பொருளின் மிகச் சமீபத்திய விளக்கம், உணர்வுகளின் சாத்தியம் நிரந்தரமான ஒன்று என்பதே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[8] கும்பகோணம் பதிப்பில், "இந்திரியங்கள் யாவும் மனத்தால் விஷயங்களை அறிகின்றன. இந்திரியங்களின் உருவங்கள் மனத்தில் முழுகியிருக்கின்றன. மனமானது ஸங்கல்பத்தை அடைந்திருக்கிறது. ஸங்கல்பமானது புத்தியை அடைந்திருக்கிறது. புத்தியானது மேலான ஆத்மரூபத்தை அடைந்திருக்கிறது. இந்திரியங்களால் மனத்தைக் காண முடியாது. மனமானது புத்தியை அறிகிறதில்லை. புத்தியானது ஸூக்ஷ்மமான ஆத்மாவை அறிகிறதில்லை. ஸூக்ஷ்மமான ஆத்மாவோ இவைகளைப் பார்க்கிறது" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 204ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |