Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 32)
பதிவின் சுருக்கம் : துன்பத்தைத் தவிர்ப்பதும், பிரம்மத்தை அடைவதும் எவ்வாறு என்பதைக் குறித்துப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...
Supreme Brahma! | Shanti-Parva-Section-205 | Mahabharata In Tamil |
மனு {பிரஹஸ்பதியிடம்}, "உடல் மற்றும் மனத் துன்பங்கள் தோன்றும்போது, ஒருவனால் யோகத்தைப் பயில முடியாது. எனவே, அத்தகைய கவலைகளை நினைத்தேங்கிக் கொண்டிருப்பவனுக்கு அது கைக்கொள்ளக்கூடியதல்ல.(1) கவலைகளை நினைத்து ஏங்காமல் இருப்பதே அதற்கான மருந்தாகும். துன்பங்களை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால், அவை மேலும் தீவிரமடைந்து, தீங்கை அதிகரிக்கச் செய்கிறது.(2) ஒருவன் ஞானத்தால் மனத்துன்பத்தில் இருந்தும், குணப்படுத்தும் மருந்துகளால் உடல் துன்பத்தில் இருந்தும் விடுபட வேண்டும். ஞானம் இதையே கற்பிக்கிறது. கவலையில் இருக்கும்போது ஒருவன் குழந்தை போல நடந்து கொள்ளக்கூடாது.(3) ஞானம் கொண்ட மனிதன், நிலையற்றவையான இளமை, அழகு, நீடித்த வாழ்நாள் {ஆயுள்}, செல்வத் திரட்டு, அன்புக்குரியோரின் தோழமை ஆகிய ஆசைகளை ஒருபோதும் பேணி வளர்க்கக்கூடாது.(4) மொத்த சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கவலைக்காக ஒருவன் தனியாக வருந்தக்கூடாது. வாய்ப்பைக் காணும்போது அவன் தீர்வை நடைமுறைப்படுத்த முனைய வேண்டும்.(5)
வாழ்வில் மகிழ்ச்சியை விடத் துன்பத்தின் அளவே பெரியது என்பதில் ஐயமில்லை. புலன்நுகர் பொருட்களில் நிறைவுடன் இருக்கும் ஒருவனுக்கு, அவனது மயக்கத்தின் விளைவால், ஏற்பில்லா {இனிமையற்ற} மரணம் ஏற்படுகிறது.(6) துன்பம் மற்றும் இன்பம் ஆகிய இரண்டையும் தவிர்க்கும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் நிச்சயம் வெல்கிறான். அத்தகைய ஞானம் கொண்ட மனிதர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை.(7) உலகம் சார்ந்த உடைமைகள் கவலையையே கொண்டு வருகின்றன. அவற்றைப் பாதுகாப்பதால் உனக்கு எந்த மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியாது. மேலும் அவை துன்பப்பட்டே ஈட்டப்படுகின்றன. எனவே, ஒருவன் அவற்றின் இழப்பைக் கருத்தில் கொள்ளக்கூடாது.(8) தூய அறிவானது (அல்லது பிரம்மம்), அறிவு சார்ந்த பல்வேறு பொருட்களில் (வடிவங்களில்) இருக்கிறது என்று (அறியாமை கொண்டோரால்) கருதப்படுகிறது. மனமானது அறிவின் ஓர் இயல்பே என்று அறிவாயாக. மனமானது அறிவுப்புலங்களோடு கலக்கும்போது, (பொருள் வடிவங்களின் உடல்களை உண்டாக்கும்) புத்தியானது பிறக்கிறது.(9) புத்தியானது, செயலின் குணங்களில் இருந்து விடுபடும்போது, (புறப்பொருட்களில் இருந்து விலக்கப்பட்ட) மனத்தை நோக்கிச் செலுத்தப்பட்டு, தியானம், அல்லது யோக முடிவிலான முழுமையான ஈர்ப்பின் (சமாதிநிலையின்) மூலமாகப் பிரம்மத்தை அறிவதில் வெல்கிறது.(10)
அறியாமையில் இருந்து பாய்வதும், புலன்களுடன் கூடியதும், குணங்களைக் கொண்டதுமான புத்தியோ, மலை முகட்டில் இருந்து பிற பகுதிகளை நோக்கிப் பாயும் ஓர் ஆற்றைப் போலப் புறப்பொருட்களை நோக்கி ஓடுகிறது.(11) புத்தியானது, மனத்திற்குள் ஈர்க்கப்படும்போது, உரைகல்லைக் கொண்டு தங்கத்தைத் தீண்டுவதைப் போலக் குணங்களில் இருந்து விடுபட்ட சிந்தனையை ஈர்ப்பதில் வென்று பிரம்ம அறிவை அடைகிறது.(12) புலன் நுகர் பொருட்களை உணர்வது மனமே ஆகும். (பிரம்மத்தை அடைவதற்கு முன்பாக) அதுவே முதலில் அடக்கப்பட வேண்டும். தன் முன்னுள்ள பொருட்களின் குணங்களைச் சார்ந்த மனத்தால், குணங்களற்ற ஒன்றைக் காட்ட முடியாது.(13) புலன்களுக்குண்டான வாயில்களனைத்தும் அடைக்கப்பட்டு, புத்தியானது மனத்திற்குள் ஈர்க்கப்பட வேண்டும். தியானத்தில் ஈர்க்கப்பட்டிருக்கும் இந்நிலையிலேயே அது {புத்தியானது} பிரம்ம அறிவை அடைகிறது.(14) (மொத்த வடிவங்களிலான) ஐவகைப் பூதங்களும், குணங்கள் என்று அறியப்படுபவையின் அழிவுக்குப் பிறகு, (தன்மாத்திரைகள் என்றழைக்கப்படும் தங்கள் நுட்பமான வடிவில்) விலகும் வகையிலேயே, புலன்நுகர் பொருட்களில் இருந்து விலகிய புலன்களுடன் கூடிய புத்தியானது மனத்திற்குள் மட்டுமே வசிக்கும்[1].(15)
[1] இங்கே கங்குலியால் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் தன்மாத்திரைகள் என்பன சுவை, ஒளி, ஊறு {தீண்டல்}, ஒலி, மணம் ஆகும். கும்பகோணம் பதிப்பில், "ஸூக்ஷ்மமான பூதங்கள் லயமடையும்பொழுது அவைகளின் கார்யங்களான ஸ்தூல பூதங்கள் லயமடைகின்றதுபோலப் புத்தியானது தன் கார்யங்களான இந்திரியங்களை லயப்படுத்திக் கொண்டு அஹங்காரத்தில் லயமடைகிறது" என்றிருக்கிறது.
நிச்சயமான குணத்தைக் கொண்டதாக இருப்பினும் புத்தியானது மனத்திற்குள் வசித்து, உட்புறத்தில் திரிந்தாலும், அது {புத்தி} மனமேயன்றி (தன்னைவிட உயர்ந்த) வேறேதுமாக இல்லை.(16) தியானத்தின் மூலம் சிறப்பை அடையும் மனம், அல்லது நனவுநிலையானது {அஹங்காரமானது}, குணங்களையும், அவற்றைக் கொண்டவைகளாகக் கருதப்படுபவற்றையும் அடையாளம் காண்பதில் வென்று, அந்தக் குணங்கள் அனைத்தையும் கைவிட்டு, குணங்களற்ற பிரம்மத்தை {நிர்க்குண பிரம்மத்தை} அடைகிறது[2].(17) வடிவமற்றதை (பிரம்மத்தை) {ஸூக்ஷ்மமானப்ரம்மத்தைக்} குறித்த அறிவைத் தருவதற்குப் போதுமானதாக, தகுந்ததாக எந்தக் குறியீடும் {த்ருஷ்டாந்தமும்} இல்லை. மொழியில் பொருள் அமைக்கப்பட முடியாத ஒன்று, எவராலும் அடையப்பட முடியாததாகும்[3].(18) தூய்மையடைந்த ஆன்மாவுடனும், தவங்கள், ஊகங்கள், தற்கட்டுப்பாடு, தன் வகைக்கென விதிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் பயிற்சிகள், வேதங்கள் ஆகியவை அளிக்கும் உதவியின் மூலமும் ஒருவன் உயர்ந்த பிரம்மத்தை {பரப்ரம்மத்தை} அடைய முயல வேண்டும்.(19) (தங்களுக்குள் உள்ள உயர்ந்ததை {பரம்பொருளைக்} காண்பதைத் தவிர்த்து) தெளிந்த பார்வை கொண்ட மனிதர்கள், குணங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு புற வடிவங்களிலும் அதை {பிரம்மத்தை} அடைய முயல்கிறார்கள். ஞேயம் (Jneya அறியப்பட வேண்டிய ஒன்று) என்ற பெயரால் அழைக்கப்படும் உயர்ந்தது {பிரம்மம்}, குணங்கள் இல்லாததன், அல்லது அவற்றின் இயல்பு இல்லாததன் விளைவாக, வாதத்தால் ஒருபோதும் உணரப்பட முடியாததாக இருக்கிறது {அது யுக்திக்கு எட்டாததாகும்}.(20)
[2] "சாதாரண மனிதர்கள், புறப்பொருட்கள் அனைத்தையும் சுதந்திர இருப்புகளாகவும், அவற்றின் குணங்களை அந்தப் பொருட்களில் இருந்து வேறுபட்டவையாகவும் கருதுகின்றனர். குணங்களும், பொருட்களும் ஒன்றே, அல்லது குணங்களே அந்தப் பொருட்களாக இருக்கின்றன என்ற கருத்தை அடைவதே முதல் படியாகும். ஐரோப்பிய கருத்தியலுடன் இஃது உடன்படுகிறது. தியானத்தின் மூலம் அந்தக் குணங்களை ஒழிப்பதே அடுத்தப் படியாகும். இதன் விளைவு பிரம்மத்தை அடைவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "த்யானத்திற்சென்ற மனமானது விஷயங்களுடன்கூட முக்குணங்களுள்ளப்ருக்ருதியில் எப்பொழுது லயமடைகிறதோ, அப்பொழுது எல்லாக்குணங்களையும் விட்டுவிட்டு நிர்க்குணமானப்ரம்மத்தை அடைகிறது" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "ஸூக்ஷ்மமானப்பரம்மத்தை அறியும் விஷயத்தில் இவ்வுலகில் ஸரியான த்ருஷ்டாந்தமில்லை. எந்த விஷயத்தில் சொல்லத்தக்க பதப்ரயோகமில்லையோ அந்த விஷயத்தை எவன் அறிய முடியும்?" என்றிருக்கிறது.
புத்தியானது, குணங்களில் இருந்து விடுபடும்போது மட்டுமே அதனால் பிரம்மத்தை அடையமுடியும். குணங்களில் இருந்து விடுபடாதபோது அஃது உயர்ந்ததிலிருந்து {பிரம்மத்திலிருந்து} மீண்டும் வீழ்கிறது. உண்மையில், குணங்களை நோக்கி விரைவதும், விறகுக்கு மத்தியில் நெருப்பைப் போல அவற்றின் மத்தியில் திரிவதுமே புத்தியின் இயல்பாகும்.(21) சுசுப்தி (கனவற்ற ஆழ்ந்த உறக்கம்) என்றழைக்கப்படும் நிலையில், ஐம்புலன்களும் தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து விடுபட்டிருக்கும் வகையிலேயே, உயர்ந்த பிரம்மமானது, குணங்கள் அனைத்தில் இருந்து விடுபட்ட நிலையில், பிரக்ருதிக்கு {மூல இயற்கைக்கு} மேலாக உயர்ந்து நிலைத்திருக்கிறது[4].(22) இவ்வாறே, உடல்படைத்த உயிரினங்கள் குணங்களின் விளைவுகளால் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து அவை விலகும்போது விடுதலையை {முக்தியை} அடைகின்றன. (செயலின் மூலம்) சில சொர்க்கத்திற்குச் செல்கின்றன.(23) வாழும் பூதம் {ஜீவன்}, மூல இயற்கை {ப்ரக்ருதி}, புத்தி, புலன்நுகர் பொருட்கள் {விஷயங்கள்}, புலன்கள், நனவுநிலை {அஹங்காரம்}, தன்னடையாள நம்பிக்கை {அபிமானம்} ஆகியன (அழிவுக்குரியவையாக இருப்பதால்) பூதங்கள் என்றழைக்கப்படுகின்றன.(24) இவற்றின் மூலப் படைப்பு உயர்ந்ததில் {பரம்பொருளில்} இருந்து பாய்ந்தது. இரண்டாவது, அல்லது அடுத்தப் படைப்பானது, (எதிர்பாலின) இணைகள், அல்லது துணைகளின் மூலம், அடிப்படையான ஐந்தை {புலன்களைத்} தவிர்த்து அனைத்துப் பொருட்களையும்[5] உள்ளடக்கி, இனங்கள் அதே இனங்களைப் படைக்கும் விளைவிலான விதிகளுக்குக் கட்டுப்பட்டு உண்டாக்குகின்றன[6].(25) (வாழும்) உயிரினங்கள அறத்தின் மூலம் உயர்ந்த கதியை அடைகின்றன, பாவத்தின் மூலம் அவை இழிந்த கதியை ஈட்டுகின்றன. பற்றுகளில் இருந்து விடுதலையடையாதவன் மறுபிறப்பைச் சந்திக்கிறான்; அதே வேளையில் அவற்றில் இருந்து விடுதலை அடைந்தவன் அறிவை (அல்லது பிரம்மத்தை) {முக்தியை} அடைகிறான்" என்றார் {மனு}.(26)
[4] கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுது ஐந்து இந்திரியங்களும் தம் வேலைகளிலிருந்து விடுபட்டவைகளாயிருக்கின்றனவோ அப்பொழுது (குணங்களால்) விடுபட்டதும், ப்ரக்ருதியை விட வேறானதுமான அந்தப் பரப்ரம்மம் விளங்கும்" என்றிருக்கிறது.[5] சுவை, ஒளி, தீண்டல் {ஊறு}, ஒலி, மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகள், வாய், கை, கால், மலவாய், கருவாய் ஆகிய ஐந்து செயற்பொறிகள் {கர்மேந்திரியங்கள்}, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து அறிவுப்பொறிகள் (ஞானேந்திரியங்கள்}, மனம், நனவுநிலை {அஹங்காரம்} ஆகியவையே இந்தப் பொருட்கள்[6] கும்பகோணம் பதிப்பில், "இக்கூட்டத்தின் முதலான ஸ்ருஷ்டியானது ப்ரதானமென்ற மூலகாரணத்திலிருந்து உண்டாகிறது. இரண்டாவது ஸ்ருஷ்டியானது இரண்டு வஸ்துக்களின் சேர்க்கையால் வெளியாகி இந்திரிய முதலிய பொதுவான பொருள்களை அடங்கி நடக்கச் செய்கிறது" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 205ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |