Abstention from acts! | Shanti-Parva-Section-206 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 33)
பதிவின் சுருக்கம் : செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறம் என்பதைப் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...
Abstention from acts! | Shanti-Parva-Section-206 | Mahabharata In Tamil |
மனு {பிரஹஸ்பதியிடம்}, "ஐம்புலன்களோடும், மனத்தோடும் ஐவகை உடைமைகள் கலக்கும்போது, ரத்தினத்தின் ஊடாகக் கடக்கும் நூலைப் போலத் தனிப்பட்ட ஒருவனால் {ஆன்மாவால்} பிரம்மம் {பரம்பொருள்} காணப்படுகிறது.(1) மேலும் நூலானது எவ்வாறு தங்கம், முத்து, வைடூரியம் அல்லது மண்ணால் செய்யப்பட்ட எந்தப் பொருளிலும் நூலாகக் கிடக்குமோ,(2) அவ்வாறே ஒருவனின் ஆன்மாவும், அதன் செயல்களின் விளைவாக ஒரு பசுவுக்குள்ளோ, குதிரை, மனிதன், யானை, பிற விலங்கு, புழு, அல்லது பூச்சிக்குள்ளோ வாழ்கிறது.(3) தனிப்பட்ட ஒருவன் {ஆத்மா} குறிப்பிட்ட ஓர் உடலுக்குள் இருந்து செய்யும் நற்செயல்கள் உண்டாக்கும் வெகுமதிகளை அந்தக் குறிப்பிட்ட உடலுக்குள் உள்ள அந்த ஒருவனே {ஆத்மாவே} அனுபவிக்கிறான்[1].(4) குறிப்பிட்ட வகை நீர்மத்தால் நனைக்கப்பட்ட மண்ணானது, அதில் வளரும் ஒவ்வொரு வகை மூலிகை, அல்லது செடிக்கும் அதற்குத் தேவையான வகையில் உள்ள சாற்றைக் கொடுக்கிறது. அதே வகையில், ஆன்மாவை சாட்சியாகக் கொண்ட புத்தியானது, முற்பிறவிச் செயல்களால் குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றவே இணங்குகிறது[2].(5)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்த ஆத்மாவானது எந்த எந்தச் சரீரத்திற்காக எந்த எந்தக் கர்மத்தைச் செய்கிறதோ, அந்த அந்தச் சரீரத்தால் அந்த அந்தக் கர்மத்தின் பயனை அடைகிறது" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "ஒரே ரஸமுள்ள பூமியானது ஔஷதிகளின் ரூபத்தை அனுஸரித்துச் செல்லுகிறதுபோல உள்ளிலுள்ள ஆத்மாவை ஸாஷியாகக் கொண்ட புத்தியானது கர்மங்களை அனுஸரித்துச் செல்லுகிறது" என்றிருக்கிறது.
அறிவில் இருந்து ஆசை எழுகிறது. ஆசையிலிருந்து தீர்மானம் {முயற்சி} எழுகிறது. தீர்மானத்திலிருந்து செயல் பாய்கிறது. செயலில் இருந்து கனிகள் (நல்ல மற்றும் தீய விளைவுகள்) உண்டாகின்றன.(6) எனவே கனிகள் தங்களுக்குக் காரணமான செயல்களையே சார்ந்திருக்கின்றன. செயல்களோ தங்களுக்குக் காரணமாகப் புத்தியைக் கொண்டிருக்கின்றன. புத்தி அதன் காரணமாக அறிவைக் கொண்டிருக்கிறது; அறிவு அதன் காரணமாக ஆன்மாவைக் கொண்டிருக்கிறது.(7) அறிவு, கனிகள் {பலன்கள்}, புத்தி, செயல்கள் ஆகியன அழிவதன் விளைவால் அடையப்பட்டும் சிறந்த முடிவே பிரம்ம அறிவு என்றழைக்கப்படுகிறது {அதுவே பரமாத்மரூபத்தில் நிலைபெற்ற ஞானமாகும்}[3].(8) யோகியர் காணும் தன்னிருப்பின் சாரம் {பரமாத்மரூபம்} பெரியதும், உயர்ந்ததுமாகும். ஞானமற்றவர்களும், உலக உடைமைகளில் பற்றுடைய புத்தியைக் கொண்டவர்களும், ஆன்மாவுக்குள் இருப்பதை ஒருபோதும் காண்பதில்லை.(9)
[3] "முதலில் ’அறிவு’ என்பது ஆத்மா மற்றும் அனாத்மாவுக்கு இடையில் உள்ள உண்மையான தொடர்பைக் குறித்த உள்ளுணர்வைக் குறிக்கிறது. ’கனிகள்’ என்பன புதிய பிறவிகளால் ஈட்டப்படும் உடல் வடிவங்களைக் குறிக்கின்றன. புலன்களும், மனமும் புத்திக்குள் ஈர்க்கப்பட்டு, அவை அனைத்தும் ஒன்றாகக் கலந்து ஆன்மாவை நோக்கிச் செலுத்தப்படும்போதே புத்திக்கு அழிவு ஏற்படுகிறது. ஞேயபிரதிஷ்திதம் ஜ்ஞானம் Jneyapratishthitam Jnanam என்பது உண்மையில் பிரம்ம அறிவையே குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நீரானது அளவில் பூமியைவிடப் பெரியதாகும்; ஒளியானது நீரைவிடப் பெரியதாகும்; காற்றானது ஒளியைவிடப் பெரியதாகும்;(10) வெளியானது {ஆகாயமானது} காற்றைவிடப் பெரியதாகும்; மனமானது வெளியைவிடப் பெரியதாகும்; புத்தியானது மனத்தைவிடப் பெரியதாகும்; காலமானது புத்தியைவிடப் பெரியதாகும்.(11) இந்த அண்டம் எவனுடையதோ அந்தத் தெய்வீக விஷ்ணு, காலத்தைவிடப் பெரியவனாவான். அந்தத் தேவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனாக இருக்கிறான்.(12) அவனுக்குத் தொடக்கம், நடுநிலை மற்றும் முடிவு ஆகியவை இல்லாததன் விளைவால் அவன் மாற்றமில்லாதவனாக இருக்கிறான். கவலைக்கும் எல்லைகள் உண்டு என்பதால், அவன் கவலைகள் அனைத்தையும் விஞ்சியவனாக இருக்கிறான்[4].(13) அந்த விஷ்ணுவே உயர்ந்த பிரம்மம் {பரப்பிரம்மம்} என்றழைக்கப்படுகிறான். உயர்ந்தது என்று எது அழைக்கப்படுமோ, அதன் பொருளாகவோ, புகலிடமாகவோ அவனே {விஷ்ணுவே} இருக்கிறான். அவனை அறிந்த ஞானியர், காலத்தின் ஆதிக்கத்திற்குள் உள்ள அனைத்தில் இருந்தும் விடுபட்டு, விடுதலை {முக்தி} என்றழைக்கப்படும் நிலையை அடைகிறார்கள்.(14) (நம்மால் காணப்படும்) இவை அனைத்தும் குணங்களில் வெளிப்படுகின்றன. எது குணங்களற்ற பிரம்மம் என்றழைக்கப்படுமோ, அதுவே இவைகளைவிடப் பெரியதாகும். செயல்களில் இருந்து விலகுவதே உயர்ந்த அறமாகும். அவ்வறம் நிச்சயம் மரணமின்மைக்கு (விடுதலைக்கு {முக்திக்கு}) வழிவகுக்கும்.(15)
[4] "அறிவது, அறியப்படுவது ஆகியவற்றின் உறவில் இருந்தே கவலை எழுகிறது என்று உரையாசிரியர் விளக்குகிறார். உறவைச் சார்ந்திருக்கும் அனைத்துப் பொருட்களும் நிலையற்றவையே. எது நித்தியமானதோ, எது அந்த உறவை விஞ்சியிருக்கிறதோ, அதன் ஒரு பகுதியாக அவற்றால் {உறவைச் சார்ந்த பொருட்களால்} அமைய முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ரிக்குகள், யஜுஸ்கள், சாமங்கள் ஆகியவை உடலையே தங்கள் புகலிடமாகக் கொண்டுள்ளன. அவை நாவின் நுனியில் இருந்து பாய்கின்றன. முயற்சியில்லாமல் அவற்றை அடையமுடியாது, மேலும் அவை அழிவுக்குள்ளாகுபவையே.(16) எனினும், (உடலைச் சாராத) பிரம்மம், உடலைப் புகலிடமாகக் கொண்டிருப்பவனை (அறிபவனை அல்லது ஆன்மாவைச்) சார்ந்திருப்பதால், அதை {பிரம்மத்தை} இவ்வழியில் அடையமுடியாது. (வேதங்களை அடைய எது தேவைப்படுமோ அந்த) முயற்சியால், தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாத பிரம்மத்தை அடைய முடியாது.(17) ரிக், சாமங்கள், யஜுஸ்கள் ஆகிய ஒவ்வொன்றும் தொடக்கத்தைக் கொண்டுள்ளன. தொடக்கத்தைக் கொண்டுள்ளவைக்கு முடிவும் உண்டு. ஆனால் பிரம்மம் தொடக்கமற்றது என்று சொல்லப்படுகிறது.(18) பிரம்மம் தொடக்கமோ, முடிவோ இல்லாதிருப்பதால், அளவற்றதென்றும், மாற்றமில்லாததென்றும் சொல்லப்படுகிறது. மாற்றமில்லாத் தன்மையின் விளைவால், கவலைகள் அனைத்தையும், முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் விஞ்சியிருக்கிறது அந்தப் பிரம்மம்.(19) சாதகமில்லாத விதியின் மூலமும், முறையான வழிமுறைகளைக் காண்பதில் உள்ள இயலாமையின் மூலமும், செயல்களால் அளிக்கப்படும் இடையூறுகளின் மூலமும், மனிதர்கள் பிரம்மத்தை அடையும் பாதையைக் காணாதிருக்கிறார்கள்.(20)
உலகம் சார்ந்த பொருட்களில் உள்ள பற்று, உயர்ந்த சொர்க்கத்தின் இன்பங்களில் உள்ள நாட்டம், பிரம்மத்தைத் தவிர வேறெதிலும் உள்ள ஆசை ஆகியவற்றின் விளைவால் மனிதர்கள் உயர்ந்ததை {பரமாத்மாவை} அடைவதில்லை.(21) உலகம் சார்ந்த பொருட்களைக் காணும் பிறர் அவற்றை அடைய ஆசை கொள்கிறார்கள். அத்தகைய பொருட்களை விரும்பும் அவர்கள், பிரம்மமானது குணங்கள் அனைத்தையும் விஞ்சியிருப்பதன் விளைவால் அஃதை அடைய ஏங்குவதில்லை.(22) தாழ்ந்தவையான குணங்களில் பிணைக்கப்பட்டவனால், மேன்மையான குணங்களைப் படைத்தவனை {பரமாத்மாவைக்} குறித்த அறிவை எவ்வாறு அடைய முடியும்? குணங்கள் மற்றும் வடிவங்களைக் கொண்ட அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பவனைக் குறித்த அறிவை ஒருவனால் ஊகத்தினால் மட்டுமே அடைய முடியும்.(23) நுட்பமான புத்தியினால் மட்டுமே நம்மால் அவனை அறிய முடியும். நம்மால் அவனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மனத்தை மனத்தாலும், கண்ணைக் கண்ணாலுமே கைப்பற்ற முடியும்[5].(24) கசடுகளுடன் கூடிய புத்தியை அறிவின் {ஆத்மஞானத்தின்} மூலம் தூய்மையடையச் செய்ய முடியும். மனத்தைத் தூய்மைப்படுத்த புத்தியை ஈடுபடுத்தலாம். மனத்தின் மூலம் புலன்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒருவன் இவை யாவற்றையும் அடைந்தால், மாற்றமில்லாதவனை {அழிவற்ற பரமாத்மாவை} அடையலாம்.(25)
[5] புறவுலகம் என்றழைக்கப்படுவது புறநிலை இருப்பெதையும் கொண்டிருக்கவில்லை. அது தூய்மையான அகநிலையாகும். எனவே, மனமே பார்க்கவும் கேட்கவும் மனத்தைத் தீண்டவும் செய்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆழ்ந்த சிந்தனையின் {தியானத்தின்} மூலம் பற்றுகளில் இருந்து விடுபட்டு, தெளிவான மனத்தால் வளம்பெருகிய ஒருவன், ஆசையற்றதும், குணங்கள் அனைத்திற்கும் மேலானதுமான பிரம்மத்தை அடைவதில் வெல்லலாம். மரத்துண்டுக்குள் பொதிந்திருக்கும் நெருப்பில் இருந்து காற்று விலகி இருப்பதைப் போலவே, (உலகம் சார்ந்த உடைமைகளில் உள்ள விருப்பத்தின் மூலம்) கலக்கமடைந்திருக்கும் மனிதர்கள், உயர்ந்ததில் {பரமாத்மாவில்} இருந்து விலகியே இருக்கிறார்கள்.(26) உலகம் சார்ந்த நோக்கங்கள் அனைத்தின் அழிவின் பேரில் மனமானது புத்தியைவிட உயர்ந்ததையே எப்போதும் அடைகிறது; அதே வேளையில், அவற்றின் பிரிவிலோ மனமானது புத்தியைவிடத் தாழ்ந்ததையே எப்போதும் அடைகிறது. எனவே, ஏற்கனவே விவரிக்கப்பட்ட வழிமுறைக்கேற்ப ஒருவன், உலகம் சார்ந்த நோக்கங்களை அழிப்பதில் ஈடுபட்டால், அவன் பிரம்ம உடலுக்குள் ஈர்க்கப்படும் நிலையை {பிரம்ம ரூபத்தை} அடைவான்[6].(27) ஆன்மாவானது புலப்படாததாக இருப்பினும், குணங்கள் எனும் ஆடை போர்த்தப்படும்போது, அதன் செயல்கள் புலப்படுகின்றன. (உடலுக்கு) அழிவு நேரும்போது, மீண்டும் அது புலப்படாததாகிறது. உண்மையில் ஆன்மா செயலற்றதாக இருக்கிறது. இன்பம் அல்லது துன்பத்தை உண்டாக்கவல்ல புலன்களுடன் அது கலந்திருக்கிறது.(28) புலன்களுடன் கலந்திருப்பதும், உடலுடன் கூடியதுமான அஃது {ஆன்மா} அடிப்படையான ஐந்து பூதங்களில் புகலிடத்தை அடைகிறது. எனினும், உயர்ந்ததும், மாற்றமில்லாததுமான ஒன்றின் {பரமாத்மாவின்} மூலம் சக்தியை இழக்கும்போது, அந்தச் சக்தி குறைபாட்டின் காரணமாக அது {ஆன்மா} செயல்படத் தவறுகிறது.(29)
[6] கும்பகோணம் பதிப்பில், "மனமானது விஷயங்களை ஆத்மாவில் லயிக்கச் செய்யும்போது புத்தியை விட மேலான பரமாத்மாவையடைவதற்கும், அந்த விஷயங்களை ஆத்மாவைவிட வேறாகப் பார்க்கும்பொழுது எப்பொழுதும் புத்திக்குக் கீழான உலக வாழ்க்கையை அடைவதற்கும் தகுதியுள்ளதாகிறது. இவ்விதியைத் தெரிந்து கொண்டு விஷயங்களை ஆத்மாவில் லயிக்கச் செய்யத் தொடங்கிய மனிதன் ப்ரம்மரூபத்தை அடைகிறான்" என்றிருக்கிறது.
எந்த மனிதனும் இந்தப் பூமியின் முடிவைப் பார்த்ததில்லை, ஆனால் பூமிக்கும் நிச்சயம் முடிவு வரும் என்பதை அறிவாயாக. (பற்றுகளால்) இங்கே கலக்கமடையும் மனிதன், கடலில் தத்தளிக்கும் ஓடத்தைக் காற்றானது பாதுகாப்பான துறைமுகத்தில் சேர்ப்பதைப் போல, தன் இறுதி புகலிடத்திற்கு வழிநடத்தப்படுவான்.(30) தன் கதிர்களைப் பரப்பும் சூரியன், (உலகத்தின் ஒளி என்ற) ஒரு குணத்தை அடைகிறான்; (மறையும் வேளையில்) தன் கதிர்களை விலக்கிக் கொள்ளும் அவன் மீண்டும் குணங்களற்ற ஒரு பொருளாகிறான். அதே வகையில், வேறுபாடுகள் அனைத்தையும் கைவிட்டுத் தவங்களைச் செய்யும் ஒரு மனிதன், குணங்கள் யாவும் அற்றதான அழிவற்ற பிரமத்திற்குள் இறுதியாக நுழைகிறான்.(31) எவன் பிறப்பற்றவனோ, எவன் அறவோர் அனைவரின் உயர்ந்த புகலிடமோ, எவன் தான்தோன்றியோ {சுயம்புவோ}, எவனிடமிருந்து அனைத்தும் உண்டாகினவோ, எவனிடம் அனைத்தும் திரும்புமோ, எவன் தொடக்கமும், நடுவும், முடிவும் இல்லாதவனோ, எவன் நிச்சயத்தன்மையைக் கொண்ட உயர்ந்தவனோ, அவனை {அந்தப் பரமாத்மாவைப்} பகுத்தறிவதன் மூலம் ஒரு மனிதன் அழிவின்மையை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்" என்றார் {மனு}.{32)
சாந்திபர்வம் பகுதி – 206ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |