The lotus eyed one! | Shanti-Parva-Section-207 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 34)
பதிவின் சுருக்கம் : விஷ்ணு உலகங்களை எவ்வாறு படைத்தான் என்று நாரதரால் சொல்லப்பட்டவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; கிருஷ்ணன் சாதாரண மனிதனல்ல என்று சொன்னது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானியே, ஓ! பாரதர்களின் தலைவரே, தாமரைக் கண்ணனும், அழிவில்லாதவனும், அனைத்தையும் படைத்தவனும் {கர்த்தனும்}, எவராலும் படைக்கப்படாதவனும், (அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பதன் விளைவால்) விஷ்ணு என்று அழைக்கப்படுபவனும், அனைத்து உயிரினங்களின் மூலமாக இருப்பவனும், அனைத்து உயிரினங்களும் திரும்பிச்செல்லும் இடமாக இருப்பவனும், நாராயணன், ரிஷிகேசன் {இந்திரியங்களுக்கு ஈஸ்வரனும்}, கோவிந்தன், கேசவன் என்ற பெயர்களில் அறியப்படுபவனும், எவராலும் வெல்லப்பட முடியாதவனுமான அந்த ஒருவனைக் குறித்து விபரமாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1,2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இக்காரியம் குறித்து நான் கிருஷ்ண துவைபாயனரிடமிருந்தும் {வியாசரிடமிருந்தும்}, முனிவர் நாரதரிடமிருந்தும், இது குறித்து உரையாடிய ஜமதக்னியின் மகனான ராமரிடம் {பரசுராமரிடம்} இருந்தும் கேட்டிருக்கிறேன்.(3) ஓ! மகனே, அசிதர், தேவலர், கடுந்தவங்களைக் கொண்ட வால்மீகி, மார்க்கண்டேயர் ஆகியோர், ஆச்சரியம் நிறைந்தவனும், உயர்ந்தவனுமான கோவிந்தனைக் குறித்துப் பேசுகின்றனர்.(4) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தெய்வீகமான கேசவனே, அனைத்தின் பலமிக்கத் தலைவனாவான். புருஷன் என்று அழைக்கப்படும் அவன், அனைத்திற்குள்ளும் படர்ந்தூடுருவி, தன்னையே பலராக ஆக்கியிருக்கிறான்.(5) ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, அந்த உயரான்ம சாரங்கபாணியின் குணங்களைக் குறித்துப் பெரும் பிராமணர்கள் சொல்வதை இப்போது கேட்பாயாக.(6)
ஓ! மனிதர்களின் இளவரசே {யுதிஷ்டிரனே}, பழைய வரலாறுகளை அறிந்த மனிதர்கள் சொல்லும் கோவிந்தனின் செயல்களையும் நான் உனக்குச் சொல்கிறேன்.(7) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகவும், உயர் ஆன்மா கொண்டவனாகவும், அனைத்திலும் முதன்மையானவனாகவும் அவனே சொல்லப்படுகிறான். அவனே {அந்தப் புருஷோத்தமனே} (தன் விருப்பத்தின் பேரில்) காற்று, ஒளி, நீர், வெளி {ஆகாயம்} மற்றும் பூமி {நிலம்} என்ற ஐவகைப் பூதங்களை உண்டாக்கினான்.(8) உயர் ஆன்மா கொண்டவனும், அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து பொருட்களின் பலமிக்கத் தலைவனுமான அவன், பூமியை {நிலமெனும் பூதத்தைப்} படைத்த பிறகு, நீரின் பரப்பில் தன்னைக் கிடத்திக் கொண்டான்.(9) அனைத்திலும் முதன்மையானவனும், அனைத்து வகைச் சக்தி மற்றும் காந்திக்குப் புகலிடமாக இருப்பவனுமான அவன் இவ்வாறு நீரில் மிதந்து கொண்டிருந்தபோது, அண்ட உயிரினங்கள் அனைத்திற்கும் முதலாகப் பிறந்த நனவுநிலையை உண்டாக்கினான்.(10) படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் புகலிடமாக உள்ள நனவுநிலையை மனத்துடன் சேர்த்தே அவன் படைத்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம். அந்த நனவுநிலையே கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் உயிரினங்கள் அனைத்தையும் தாங்கிப் பிடிக்கிறது.(11)
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரனே}, நனவுநிலை என்ற பேரிருப்பு உதித்த பிறகு, சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்ட மிக அழகிய ஒரு தாமரையானது (நீரில் மிதந்து கொண்டிருந்த அந்தப்) பரம்பொருளின் தொப்புளில் இருந்து முளைத்தது.(12) ஓ! மகனே, அந்தத் தாமரையில் இருந்து சிறப்பு மிக்கவனும், தெய்வீகமானவனும், அனைத்துயிரினங்களின் பெரும்பாட்டனுமான பிரம்மன், தன் பிரகாசத்தால் அடிவானின் புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டியபடியே இருப்பிற்கு எழுந்தான்.(13) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இவ்வாறு தொடக்ககாலத் தாமரையில் இருந்து உயர் ஆன்மப் பெரும்பாட்டன் உதித்த பிறகு, தொடக்கமேதும் இல்லாதவனும், மது என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு பேரசுரன் ,இருள் குணத்தில் (தமோ குணத்தில்) இருந்து உதித்துப் பிறப்பை அடைந்தான்.(14) பிரம்மனுக்கு நன்மை செய்வதற்காக, அனைத்திலும் முதன்மையானவன் (உயர்ந்த தேவன்), கடுஞ்செயல்களைச் செய்பவனும், (பெரும்பாட்டனைக் கொல்லும்) கடுஞ்செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனுமான அந்தக் கடும் அசுரனைக் கொன்றான்.(15) இவனை (மது என்ற பெயர் கொண்ட அசுரனைக்) கொன்றதிலிருந்தே, தேவர்கள், தானவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரும், அறவோர் அனைவரிலும் முதன்மையான அவனை,[1] மதுசூதனன் (மதுவைக் கொன்றவன்) என்ற பெயரால் அழைக்கத் தொடங்கினர்.(16)
[1] "இங்கே சொல்லப்படும் ரிஷபம் சர்வசாத்வாம் என்பது சாத்வதர்களில் காளையே என்ற பொருளைத் தரும். சாதாரணமாகப் பார்த்தால், சாத்வதர்கள், அல்லது யாதவர்களின் இளவரசனான கிருஷ்ணனுக்கு இஃது ஒரு பட்டப்பெயரே. எனினும் இங்கே இது நற்குணம் கொண்ட மனிதர்களை {சத்வ குணம் கொண்டவர்களைக்} குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது; எனவே நானும் அறவோர் அனைவரிலும் முதன்மையானவன் என்று சொல்லியிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இதன் பிறகு, பிரம்மன் தன் மனக்கட்டளையின் பேரில், தக்ஷன் முதலிய ஏழு மகன்களைப் படைத்தான். அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது (மற்றும் ஏற்கனவே குறிப்பிட்ட தக்ஷன்) ஆகியோராவர்.(17) இவர்களில் மூத்தவரான மரீசி, தன் மனக்கட்டளையின் பேரில், பெரும் சக்தி கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், கசியபர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு மகனைப் பெற்றார்.(18) மரீசி பிறப்பதற்கு முன்பே பிரம்மன் தன் கால் பெரு விரலில் இருந்து ஒரு மகனைப் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அந்த மகனே, உயிரினங்களுக்கு மூதாதையான தக்ஷனாவான்[2].(19) ஓ! பாரதா, அந்தத் தக்ஷனுக்கு முதலில் பதிமூன்று மகள்கள் பிறந்தனர். அவர்களில் மூத்தவள் திதி என்றழைக்கப்பட்டாள்.(10) ஓ! ஐயா, மரீசியின் மகனும், கடமைகள் அனைத்தையும், அவற்றின் தனிச்சிறப்புகளையும் அறிந்தவரும், அறச் செயல்களையும், பெரும்புகழையும் கொண்டவருமான கசியபரே அந்தப் பதிமூன்று மகன்களுக்குக் கணவரானார்.(21)
[2] "பிரஜாபதி என்பது உண்மையில் உயிரினங்களின் தலைவன் என்ற பொருளைத் தரும். பிள்ளைகளைப் பெற்றவர்களான, பிரம்மனின் மகன்களுக்கு இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உயர்ந்த அருளைக் கொண்டவனான தக்ஷன், (ஏற்கனவே சொல்லப்பட்ட பதிமூன்றைத் தவிர) அடுத்ததாக மேலும் பத்து மகள்களைப் பெற்றான். உயிரினங்களின் மூதாதையும், அறவோனுமான தக்ஷன் அவர்களைத் தர்மனுக்குக் கொடுத்தான்.(22) ஓ! பாரதா, தர்மனானவன், வசுக்கள், அளவிலா சக்தி கொண்ட ருத்திரர்கள், விஸ்வதேவர்கள், சத்யஸ்கள் மற்றும் மருத்துகளுக்குத் தந்தையானான்.(23) தக்ஷன் அடுத்ததாக இருபத்தேழு இளைய மகள்களைப் பெற்றான். உயர்ந்த அருளைக் கொண்ட சோமனே {சந்திரனே} அவர்கள் அனைவருக்கும் கணவனானான்.(24) கந்தர்வர்கள், குதிரைகள், பறவைகள், பசுக்கள், கிம்புருஷர்கள், மீன்கள், மரங்கள் மற்றும் செடிகளைக் கசியபரின் (பதிமூன்று) மனைவிகள் பெற்றெடுத்தனர்.(25)
{கசியபரின் பதிமூன்றிலொரு மனைவியான} அதிதியானவள், தேவர்களில் முதன்மையானவர்களும், பெரும் பலம் கொண்டவர்களுமான ஆதித்யர்களைப் பெற்றாள். அவர்களுக்கு மத்தியில் விஷ்ணு, குள்ளனின் வடிவில் {வாமன அவதாரமாகப்} பிறப்பை எடுத்தான். கோவிந்தன் என்றும் அழைக்கப்படும் அவன், அவர்கள் அனைவரிலும் முதன்மையானவனானான்.(26) அவனுடைய ஆற்றலின் மூலமே தேவர்களின் வளம் அதிகரித்தது. தானவர்கள் வெல்லப்பட்டனர். {கசியபரின் மற்றொரு மனைவியான} திதியின் வாரிசுகளாக அசுரர்கள் இருந்தனர்.(27) {கசியபரின் மற்றொரு மனைவியான} தனுவானவள், விப்ரசித்தியை முதன்மையானவனாகக் கொண்ட தானவர்களைப் பெற்றெடுத்தாள். திதியோ பெரும்பலம் கொண்ட அசுரர்கள் அனைவரையும் பெற்றெடுத்தாள்.(28)
பகல், இரவு, வரிசையான பருவகாலங்கள், காலை {முற்பகல்}, மாலை {பிற்பகல்} ஆகியவற்றையும் அந்த மதுசூதனன் படைத்தான்.(29) சிந்தனைக்குப் பிறகு, மேகங்களையும், அசையாத மற்றும் அசையும் பொருட்கள் அனைத்தையும் படைத்தான். அபரிமிதமான சக்தியைக் கொண்ட அவன் விஸ்வர்களையும், பூமியையும், அவள் மீது கொண்ட அனைத்துப் பொருட்களையும் படைத்தான்.(30) பிறகு, ஓ! யுதிஷ்டிரா, உயர்ந்த அருளைக் கொண்டவனும், பலமிக்கவனுமான கிருஷ்ணன், தன் வாயிலிருந்து {முகத்திலிருந்து} நூறு முதன்மையான பிராமணர்களைப் படைத்தான்.(31) தன்னிரு கரங்களில் இருந்தும் அவன் நூறு க்ஷத்திரியர்களையும், தன் தொடைகளில் இருந்து நூறு வைசியர்களையும் படைத்தான். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அதன் பிறகு அந்தக் கேசவன் தன்னிரு பாதங்களில் இருந்து நூறு சூத்திரர்களைப் படைத்தான்.(32) பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான அந்த மதுசூதனன், இவ்வாறு நான்கு வகைகளைச் சேர்ந்த மனிதர்களையும் படைத்த பிறகு, அனைத்து உயிரினங்களின் தலைவனாகவும், ஆட்சியாளனாகவும் தாத்ரியை (பிரம்மனை) நிறுவினான்.(33)
அளவிலா பிரகாசம் கொண்ட பிரம்மன், வேத அறிவை விளக்குபவனாகவும் ஆனான். மேலும் அந்தக் கேசவன், விருபாக்ஷன் என்றழைக்கப்படுபவனை ஆவிகள், பேய்கள் {பூதங்கள், பிரமதகணங்கள்} மற்றும் மாத்ரிகைகள் (தாய்மார்) என்று அழைக்கப்படும் பெண்கள் ஆகியோரின் ஆட்சியாளன் ஆக்கினான்.(34) பிறகு அவன், பித்ருக்கள் மற்றும் பாவிகள் அனைவரின் ஆட்சியாளனாக யமனை {ஸமவர்தின்} நியமித்தான்[3]. உயிரினங்கள் அனைத்தின் பரமாத்மாவான அவன், கருவூலங்கள் அனைத்தின் {நிதிகளின்} தலைவனாகக் குபேரனையும் நியமித்தான்.(35) பிறகு அவன், நீர் நிலைகளின் தலைவனும், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தின் ஆட்சியாளனுமான வருணனைப் படைத்தான். பலமிக்க அந்த விஷ்ணு, தேவர்கள் அனைவரின் தலைவனாக வாசவனை {இந்திரனை} நியமித்தான்.(36) அந்தக் காலங்களில் {சத்திய / கிருத யுகத்தில்}, யமனிடம் எந்த அச்சமும் இல்லாமல் மனிதர்கள் தாங்கள் விரும்பிய அளவு நீண்ட காலத்திற்கு வாழ்ந்தனர்.(37) அப்போது, கலவியானது இனவிருத்திக்கு அவசியமானதாக இருக்கவில்லை. அந்தக் காலங்களில் மனக்கட்டளையின் பேரிலேயே வாரிசுகள் பெறப்பட்டனர்.(38) அதைத் தொடர்ந்த திரேதா யுகத்தில், வெறும் தீண்டலால் மட்டுமே பிள்ளைகள் பெறப்பட்டனர். ஓ! ஏகாதிபதி, அப்போதும், அந்தக் காலத்தைச் சேர்ந்த மக்களுக்குக் கலவி அவசியமாக இருக்கவில்லை.(39) ஓ! மன்னா, அதற்கடுத்த காலமான துவாபர யுகத்தில் தான், கலவி நடைமுறை தோன்றி, மக்கள் மத்தியில் நீடித்தது. ஓ! ஏகாதிபதி, கலிகாலத்தில் மனிதர்கள் திருமணம் செய்து கொண்டு இணைகளாக வாழ்கின்றனர்[4].(40)
[3] "ஸமவர்தின் என்பது தீயோரைத் தண்டிக்கும் யமனுக்கு மற்றுமொரு பெயராகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் பெரிய தவமுள்ள அந்தப் பகவான் நான்கு வர்ணங்களையும் உண்டு பண்ணிய பின் தாம் வேத வித்தைகளை வெளியிடத் தக்கவரும், அளவற்ற காந்தியுள்ளவரும், எல்லாப்ராணிகளையும் படைப்பவரும் அதிபதியுமான ப்ரம்மதேவரைப் படைத்தார். அந்தப் பகவான் பூதங்களுக்கும் ஸப்த மாதாக்களுக்கும், ப்ரமதகணங்களுக்கும் அதிபதியான ருத்ரரையும் படைத்தார். பாபிகளைச் சிஹிப்பவரும், பித்ருக்களுக்குப் பதியும் ஸமமாயிருப்பவருமான தர்மராஜரையும் படைத்தார்" என்றிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "இவர்களுக்கு ஆண்பெண்களுக்குரிய சேர்க்கையென்னும் தர்மமானது இல்லை. ஸங்கல்பத்தாலேயே இவர்களுக்குக் கர்ப்பமுண்டாயிற்று. பிறகு, திரேதாயுக காலத்தில் தொடுவதால் ப்ரஜை உண்டாயிற்று. அரசனே, அக்காலத்திலுள்ளவர்களுக்கும் ஆண் பெண்களுக்குரிய சேர்க்கையென்னும் தர்மமானது இருக்கவில்லை. அரசனே, ஆண்பெண்களின் சேர்க்கையென்னும் தர்மமானது ப்ரஜைகளுக்கு த்வாபரயுகத்திலுண்டாயிற்று. அரசனே, அப்படியே கலியுகத்திலுள்ள ஜனங்கள் த்வந்த்வ தர்மத்தை அடைந்தார்கள்" என்றிருக்கிறது.
அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனைக் குறித்து நான் இப்போது சொல்லிவிட்டேன். அவனே அனைத்தின் ஆட்சியாளன் என்று அழைக்கப்படுகிறான். ஓ! குந்தியின் மகனே, பூமியில் உள்ள பாவம் நிறைந்த உயிரினங்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(41) ஓ! மன்னா, அவர்கள் தென் பகுதியில் பிறந்தவர்களான ஆந்திரகர்கள், குஹர்கள், புளிந்தர்கள், சபரர்கள், சூசுபர்கள் மத்ரகர்கள் ஆகியோர் ஆவர்.(42) வட பகுதியில் பிறந்தவர்களையும் நான் சொல்வேன். அவர்கள் யவனர்கள், காம்போஜர்கள், காந்தாரர்கள், கிராதர்கள், பர்ப்பரர்கள் ஆகியோராவர்.(43) ஓ! ஐயா, பாவிகளான அவர்கள் அனைவரும் சண்டாளர்கள், காக்கைகள் மற்றும் கழுகுகளுக்கு ஒப்பான நடைமுறைகளைக் கொண்டவர்களாக இந்தப் பூமியில் திரிகிறார்கள்.(44) ஓ! ஐயா, கிருத யுகத்தில் அவர்கள் இந்தப் பூமியில் எங்கேயும் இல்லை. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, திரேத யுகத்திலே தோன்றிய அவர்கள் பல்கிப் பெருகத் தொடங்கினர்.(45) திரேதா யுகமும், துவாபர யுகமும் சேர்ந்த பயங்கரக் காலத்தில், க்ஷத்திரியர்கள் ஒருவரையொருவர் அணுகி போரிட்டனர்[5].(46)
[5] "கே.பி.சின்ஹா இந்தச் சுலோகத்தைத் தவறாகப் புரிந்து கொள்கிறார் என நினைக்கிறேன். அனைத்து உரைகளும் இவ்வாறே இருக்கின்றன. எனவே, பாவம் நிறைந்த இனங்களை ஒன்றோடொன்று போரிட்டுக்கொண்டு அழிந்தன என்று எடுத்துக் கொள்வது ராஜான என்ற சொல்லுக்குத் தீங்கிழைப்பதாகும். சந்தியாக்காலம் என்பது (திரேதா மற்றும் துவாபர) யுகங்களுக்கு இடையிலான சந்திக் காலமாகும். அது பயங்கரமானது என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலத்தில் தோன்றிய பயங்கரப் பஞ்சத்தில்தான் அரசமுனியான விஷ்வாமித்திரர் நாயிறைச்சி உண்டு வாழ்ந்தார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! குருகுலத்தின் தலைவா, இவ்வாறே இந்த அண்டம் உயர் ஆன்ம கிருஷ்ணனால் தொடக்கி வைக்கப்பட்டது. உலகங்கள் அனைத்தையும் காண்பவரான தெய்வீக முனிவர் நாரதர், கிருஷ்ணனே உயர்ந்த தேவன் என்பதைச் சொல்லியிருக்கிறார். ஓ! மன்னா, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாரதக் குலத் தலைவா, கிருஷ்ணனின் மேன்மையையும், அவனது நித்தியத்தன்மையையும் நாரதரே ஏற்றுக் கொள்கிறார்[6].(48) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, கேசவன் வெல்லப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனாவான். அந்தத் தாமரைக் கண்ணன் வெறும் மனிதனல்ல. அவன் நினைத்தற்கரியவனாவான்" என்றார் {பீஷ்மர்}.(49)
[6] "கிருஷ்ணனின் மேன்மையைக் குறித்த சச்சரவு இருந்ததை இந்தச் சுலோகம் வெளிப்படையாகக் காட்டுகிறது. கிருஷ்ண வழிபாடு முதலில் ஒருசிறுபான்மைக் குழுவிற்குள்ளேயே இருந்திருக்க வேண்டும். கிருஷ்ணனின் தெய்வீகத் தன்மையை ஏற்றுக் கொள்ள விரும்பாத சிசுபாலன் மற்றும் ஜராசந்தனின் நிலை இதை ஓரளவுக்குச் சுட்டிக்காட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்த வரிகள் கும்பகோணம் பதிப்பில் இல்லை.
சாந்திபர்வம் பகுதி – 207ல் உள்ள சுலோகங்கள் : 49
ஆங்கிலத்தில் | In English |