Prajapatis and witnesses of the universe! | Shanti-Parva-Section-208 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 35)
பதிவின் சுருக்கம் : மரீசி முதலிய பிரஜாபதிகளையும், ஒவ்வொரு திக்கிலும் உள்ள முனிவர்களையும் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே முதல் பிரஜாபதிகள் யாவர்? இருப்பில் உள்ளவர்களான உயர்ந்த அருளைக் கொண்ட முனிவர்கள் யாவர்? அவர்கள் ஒவ்வொருவரும் எந்தத் திசைப்புள்ளிகளில் {திக்குகளில்} வசிக்கிறார்கள்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவா, நீ கேட்பதைக் குறித்துச் சொல்கிறேன், என்னிடம் இருந்து கேட்பாயாக. அந்தப் பிரஜாபதிகள் யாவர், அடிவானின் எந்தப் புள்ளியில் {திக்கில்} எந்தெந்த முனிவர்கள் வசிக்கிறார்கள் என்பதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(2) நித்தியமானவனும், தெய்வீகமானவனும், தான் தோன்றியுமான {சுயம்புவான} பிரம்மனே முதலில் இருந்தான். தான் தோன்றியான அந்தப் பிரம்மன் சிறப்புமிக்க ஏழு மகன்களைப் பெற்றான்.(3) அவர்கள் மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் அந்தத் தான்தோன்றிக்கே இணையானவரும், உயர்ந்த அருளைக் கொண்டவருமான வசிஷ்டர் ஆகியோராவர்.(4) இந்த ஏழு மகன்களே புராணங்களில் ஏழு பிரம்மர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இவர்களுக்குப் பின் வந்த பிரஜாபதிகள் அனைவரையும் நான் இப்போது சொல்லப் போகிறேன்.(5)
அத்ரியின் குலத்தில், நித்தியமானவரும், தெய்வீகமானவரும், தவங்களையே தமது மூலமாகக் கொண்டவரும், பழமையானவருமான பர்ஹி {பராசீனபர்ஹி} பிறந்தார். {ப்ரசேதஸின் மகனான} பர்ஹியில் இருந்து பழமையானவர்களான பத்துப் பிரசேதகர்கள் எழுந்தனர்.(6) அந்தப் பத்து பிரசேதகர்களும் தங்களுக்கு மத்தியில் தக்ஷன் என்றழைக்கப்பட்ட பிரஜாபதியை ஒரு மகனாகக் கொண்டிருந்தனர். இந்த இறுதியானவருக்கு இவ்வுலகில் ’தக்ஷன்’ என்றும், ’க’ என்றும் இரண்டு பெயர் உண்டு.(7)
மரீசி, கசியபர் என்றழைக்கப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தார். இவருக்கும் இரண்டு பெயர்கள் இருந்தன. சிலர் அவரை ’அரிஷ்டநேமி’ என்றும், சிலர் ’கசியபர்’ என்றும் அழைக்கிறார்கள்.(8)
அத்ரி, தன் மடியில் பிறந்தவனும், அழகனும், பெரும் சக்தி கொண்ட இளவரசனுமான சோமன் {சந்திரன்} என்ற மற்றொரு மகனை {ஔரசப் புத்ரனாகக்} கொண்டிருந்தார். அவன் ஓராயிரம் தேவ யுகங்கள் நெடுகிலும் தவங்களைச் செய்து கொண்டிருந்தான்.(9) ஓ! ஏகாதிபதி, தெய்வீகமான அர்யமானும், அவனுக்குப் பிறந்த மகன்களும், உலகங்களைப் படைப்பவர்களென்றும், கட்டளையிடுகிறவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள்.(10) சசபிந்துவுக்குப் பத்தாயிரம் மனைவியர் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களது தலைவன் {சசபிந்து} ஓராயிரம் மகன்களைப் பெற்றார்.(11) இவ்வாறே அவருக்கு ஆயிரமாயிரம் {பத்து லட்சம்/ கோடி} மகன்கள் இருந்தனர். அந்த மகன்கள் தங்களைத் தவிர வேறு எவரையும் பிரஜாபதி என்று அழைக்க மறுத்தனர்.(12)
பழமையான பிராமணர்கள், சசபிந்துவிடம் இருந்து பெறப்பட்ட பட்டப்பெயரை உலகின் உயிரினங்களுக்கு அளித்தனர். பரந்த அளவில் இருந்த பிரஜாபதியான சசபிந்துவின் குலத்தவரே, காலப்போக்கில் விருஷ்ணி குலத்தின் முன்னோர்களானார்கள்.(13) என்னால் சொல்லப்படும் இவர்கள் சிறப்புமிக்கப் பிரஜாபதிகளாகக் குறிப்பிடப்படுகின்றனர்.
இதன் பிறகு நான் மூவுலகங்களின் தலைவர்களாக இருக்கும் தேவர்களைக் குறித்துச் சொல்லப் போகிறேன்.(14) பகன், அம்சன், அர்யமான், மித்ரன், வருணன், சவிதன், தாத்ரி {தாதா}, பெரும் வலிமைமிக்க விவஸ்வான்,(15) துவஷ்டிரி {த்வஷ்டா}, பூஷன், இந்திரன், பனிரெண்டாவதாக அறியப்படும் விஷ்ணு ஆகிய இந்தப் பனிரெண்டு ஆதித்தியர்களும் கசியபரில் இருந்து எழுந்தவர்களாவர்.(16) நாஸத்யன், தஸ்ரன் ஆகியோர் அசுவினிகள் இருவராகச் சொல்லப்படுகின்றனர். இவ்விருவரும் மேற்கண்ட வரிசையில் எட்டாவதாக உள்ள {எட்டாவது பிரஜாபதியான} சிறப்புமிக்க மார்த்தாண்டரின் மகன்களாவர்.(17) இவர்களே தேவர்களில் முதல்வர்கள் என்றும், பித்ருக்களின் இரண்டு வர்க்கத்தினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். துவஷ்டிரிக்குப் பல மகன்கள் இருந்தனர். அழகர்களும், புகழ்மிக்கவர்களுமான அவர்களில் விஸ்வரூபன்,(18) அஜைகபாத், அஹி, பிரத்னன், விரூபாக்ஷன், ரைவதன், ஹரன், பஹுரூபன், தேவர்களின் தலைவனான திரியம்பகன்,(19) சாவித்ரியன், ஜயந்தன், வெல்லப்பட்ட முடியாத பினாகி ஆகியோர் {பதிமூன்று ருத்திரர்களாக அறியப்படும் இவர்கள்} அடங்குவர். உயர்ந்த அருளைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் எட்டாக இருப்பவர்களுமான வசுக்கள் என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றனர்.(20) பிரஜாபதி மனுவின் காலத்தில் இவர்களே தேவர்களாக அறியப்பட்டனர். இவர்களே தேவர்கள் மற்றும் பித்ருக்களில் முதல்வர்களாக அழைக்கப்பட்டனர்.(21)
சித்தர்கள் மற்றும் சாத்யஸ்களில் நடத்தை மற்றும் இளமையின் விளைவால் இரண்டு வர்க்கத்தினர் இருந்தனர். முன்னர் ரிபுக்கள் மற்றும் மருத்துகள் என்று இரண்டு வர்க்கங்களாகத் தேவர்கள் கருதப்பட்டனர்.(22) விஸ்வர்கள், தேவர்கள்[1], அசுவினிகள் ஆகியோர் இவ்வாறே சொல்லப்படுகின்றனர். இவர்களில் ஆதித்தியர்கள் க்ஷத்திரியர்களும், மருத்துகள் வைசியர்களுமாவர்.(23) கடும் தவங்களில் ஈடுபடுபவர்களான அசுவினிகள் இருவரும் சூத்திரர்களாகச் சொல்லப்படுகிறார்கள். அங்கீரஸ குலத்தில் எழுந்த தேவர்கள் பிராமணர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இஃது உறுதியானதாகும்.(24) இவ்வாறே தேவர்களில் நால்வகை வர்ணங்களை நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஒரு மனிதன், காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்ததும், இந்தத் தேவர்களின் பெயர்களை உரைத்தால்,(25) தெரிந்தோ, தெரியாமலோ, பிறரது சேர்க்கையில் பிறந்தவையோவான தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைகிறான்.
[1] விஸ்வதேவர்கள் என்று இருந்திருக்க வேண்டும். கும்பகோணம் பதிப்பில் அவ்வாறே குறிப்பிடப் பட்டிருக்கிறது.
யவக்ரீதர், ரைப்யர், அர்வாவசு, பராவசு,(26) ஔஸிஜன், கக்ஷீவான், பலன் ஆகியோர் அங்கீரஸின் மகன்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவர்களும், முனிவர் மேதாதியின் மகனான கண்வர், பர்ஹிஷதன் ஆகியோரும்,(27) நன்கறியப்பட்டவர்களும், மூவுலகங்களுக்கும் மூதாதையராக இருப்பவர்களுமான ஏழு மனிவர்களும் {சப்தரிஷிகளும்} கிழக்கில் {கிழக்குத் திசையில்} வசிக்கிறார்கள்.
உன்முசர், விமுசர், பெரும் சக்தியைக் கொண்டவரான ஸ்வஸ்தாய்தரேயர், பிரமுசர், இத்மவாஹர், தெய்வீகமானவரான திருடவிரதர், மித்ரவருணர்களின் மகனும், பெரும் சக்தியைக் கொண்டவருமான அகஸ்தியர்(29) ஆகிய இந்த மறுபிறப்பாள முனிவர்கள் அனைவரும் தெற்கில் வசிக்கிறார்கள்.
உஷங்கு, கருஷர் {கவஷர்}, தௌம்யர், பெரும் சக்தியைக் கொண்டவரான பரிவ்யாதர்,(30) ஏகதர், திவிதர், திரிதர், அத்ரியின் மகனும், சிறப்புமிக்கவரும், பலமிக்கவருமான சாரஸ்வதர் {துர்வாசர்},(31) ஆகிய இந்த உயரான்மாக்களைக் கொண்டவர்கள் மேற்கில் வசிக்கிறார்கள்.
ஆத்ரேயர் {அத்ரி}, வசிஷ்டர், பெரும் முனிவரான காஸ்யபர்,(32) கௌதமர், பரத்வாஜயர், குசிகனின் மகனான விஷ்வாமித்திரர், உயர் ஆன்மா கொண்டவரும், ரிசீகரின் சிறப்புமிக்க மகனுமான ஜமதக்நி(33) ஆகிய இந்த எழுவரும் வடக்கில் வாழ்கிறார்கள்.
இவ்வாறே, திசைகளின் பல்வேறு புள்ளிகளில் {திக்குகளில்} வாழும் கடும் சக்தி கொண்ட பெரும் முனிவர்களைக் குறித்து நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(34) அந்த உயர் ஆன்மாக்களே, இந்த அண்டத்தின் சாட்சிகளாகவும், உலகங்கள் அனைத்தையும் படைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறே அவர்கள் தங்கள் தங்களுக்குரிய பகுதிகளில் வசித்து வருகிறார்கள்.(35) இவர்களது பெயர்களைச் சொல்வதால் ஒருவன், தனது பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அந்தந்தத் திசைகளில் பயணிக்கும் ஒரு மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, பாதுகாப்பாக வீட்டை அடைவதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}[2].(36)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஒவ்வொரு திக்கிலுமிருப்பவர்களும், தீக்ஷணமான தேஜஸுள்ளவர்களும், உலகங்களைப் படைப்பவர்களும், மஹாத்மாக்களும், ஸாக்ஷிபூதர்களுமான இவர்களனைவரும் சொல்லப்பட்டார்கள். இவ்விதம் மஹாத்மாக்களான இந்தரிஷிகள் தனித்தனியே திக்குகளிலிருக்கிறார்கள். இவர்களைக் கீர்த்தனம் செய்பவன் எல்லாப் பாவத்திலிருந்தும் விடுபடுகிறான். எந்த எந்தத் திக்குகளில் இவர்களிருக்கிறார்களோ அந்த அந்தத் திக்கைச் சரணமடைந்தவன், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான், அவ்விதமே க்ஷேமமுள்ளவனுமாகிறான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 208ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |