Boar Incarnation! | Shanti-Parva-Section-209 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 36)
பதிவின் சுருக்கம் : விஷ்ணுவின் வராஹ அவதாரம் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
Boar Incarnation! | Shanti-Parva-Section-209 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானமும், போரில் வெல்லப்பட முடியாத ஆற்றலும் கொண்டவரே, மாற்றமில்லாதவனும், எல்லாம் வல்லவனுமான கிருஷ்ணனைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவனது பெருஞ்சக்தி மற்றும் பழங்காலத்தில் அவனால் அடையப்பட்ட பெரும் சாதனைகள் குறித்த அனைத்தையும் எனக்கு உண்மையாகச் சொல்வீராக.(2) ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக அந்தப் பலமிக்கவன் ஏன் ஒரு விலங்கின் வடிவை ஏற்றான்? ஓ! வலிமைமிக்கப் போர்வீரரே இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "முன்பொரு காலத்தில் நான் வேட்டைக்குச் சென்றிருந்தபோது, மார்க்கண்டேயரின் ஆசிரமத்தை அடைந்தேன். அங்கே பல்வேறு வகைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தவசிகள் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.(4) அந்த முனிவர்கள் எனக்குத் தேனும், தயிர்க்கடைசலும் கொடுத்து என்னைக் கௌரவித்தனர். அவர்களது வழிபாட்டை ஏற்றுக் கொண்ட நான், பதிலுக்கு அவர்களை மரியாதையுடன் வணங்கினேன்.(5) அங்கே பெரும் முனிவரான கசியபர் உரைத்ததை நான் சொல்லப் போகிறேன். இனிமையான அந்தச் சிறந்த கதையைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(6)
முன்பொரு காலத்தில், கோபமும், பேராசையும் நிறைந்த முக்கியத் தானவர்களும், நூற்றுக்கணக்கானவர்களும், வலிமையில் போதையுண்டவர்களும், நரகனைத் தங்கள் முதல்வனாகக் கொண்டவர்களுமான வலிமைமிக்க அசுரர்களும்,(7) போரில் வெல்லப்பட முடியாத எண்ணற்ற தானவர்கள் பிறரும், தேவர்களின் ஒப்பற்ற செழிப்பில் பொறாமை கொண்டனர்.(8) (இறுதியாக) அந்தத் தானவர்களால் ஒடுக்கப்பட்ட தேவர்களும், தெய்வீக முனிவர்களும், அமைதியடையத் தவறிவர்களாக அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினார்கள்.(9) பூமியானவள் புண்பட்ட நிலையில் துயரத்தில் மூழ்கியிருப்பதைச் சொர்க்கவாசிகள் {தேவர்கள்} கண்டனர். பயங்கர முகத்தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்கத் தானவர்களால் நிறைந்திருந்த பூமி, பெரும் கனத்தால் ஒடுக்கப்படுவதாகத் தெரிந்தது. உற்சாகமிழந்தவளாகவும், துயரால் பீடிக்கப்பட்டவளாகவும் இருந்த அவள், பாதாளங்களின் ஆழங்களுக்குள் மூழ்கி விடுபவளைப் போலத் தெரிந்தாள்.(10)
அச்சத்தால் பீடிக்கப்பட்ட ஆதித்தியர்கள், பிரம்மனிடம் சென்று, அவனிடம், "ஓ! பிரம்மா, தானவர்களின் ஒடுக்குமுறையை நாங்கள் எவ்வாறு தொடர்ந்து தாங்கிக் கொள்வது?" என்று கேட்டனர்.(11) அதற்கு அந்தத் தான்தோன்றி {பிரம்மன்}, "இக்காரியத்தில் செய்ய வேண்டியதை நான் ஏற்கனவே செய்துவிட்டேன்.(12) வரங்களையும், வலிமையையும் கொண்டு, செருக்கில் பெருகியிருக்கும் உணர்வற்றவர்களான இந்த இழிந்தவர்கள், புலப்படாத வடிவைக் கொண்டவனும்,(13) ஒன்று சேர்ந்த தேவர்களாலும் வெல்லப்பட்ட முடியாத தேவனுமான விஷ்ணு, பன்றியின் வடிவை ஏற்றிருப்பதை அறிய மாட்டார்கள். அந்த உயர்ந்த தேவன் {விஷ்ணு}, பயங்கரத் தன்மையைக் கொண்டவர்களும், பூமிக்கடியில் ஆயிரக்கணக்கில் வாழ்பவர்களுமான தானவர்களில் இழிந்தவர்களின் இடத்திற்கு விரைந்து சென்று, அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறான்" என்றான். பெரும்பாட்டனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களில் முதன்மையானோர் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தனர்.(14,15)
சில காலம் கழித்து, பன்றியின் வடிவத்தில் பொதிந்திருந்தவனும், வலிமைமிக்க சக்தி கொண்டவனுமான விஷ்ணு, பாதாள உலகத்திற்குள் ஊடுருவி, அந்தத் திதியின் வாரிசுகளை எதிர்த்து விரைந்தான்.(16) இயல்புக்குமீறிய வகையில் இருந்த அந்த விலங்கைக் கண்ட தைத்தியர்கள் அனைவரும், காலத்தால் மயங்கியவர்களாக, ஒன்றாகச் சேர்ந்து, தங்கள் பலத்தை முயற்சி செய்து பார்க்க அதனை எதிர்த்து விரைந்து, அதைச் சூழ்ந்து கொண்டனர்.(17) பிறகு விரைவில் அந்தப் பன்றியை எதிர்த்து விரைந்த அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அதைக் கைப்பற்றினர். சினத்தால் நிறைந்த அவர்கள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அந்த விலங்கை இழுக்க முயற்சி செய்தனர்.(18) ஓ! ஏகாதிபதி, வலிமையும், சக்தியும் கொண்டவர்களும், பலத்தால் பெருகியவர்களும், பேருடல்களைப் படைத்தவர்களுமான அந்தத் தானவர்களில் முதன்மையானவர்களால் அந்தப் பன்றியை ஏதும் செய்ய முடியவில்லை.(19) இதனால் மிகவும் ஆச்சரியமடைந்த அவர்கள், அச்சத்தால் நிறைந்தனர். எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் இருந்த அவர்கள் தங்கள் இறுதி வேளை வந்துவிட்டதெனக் கருதினார்கள்.(20)
பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, யோகத்தைத் தன் ஆன்மாவாகக் கொண்டவனும், யோகத்தையே தன் தோழனாகக் கொண்டவனும், தேவர்கள் அனைவரிலும் உயர்ந்த தேவனுமான அவன், யோகத்தில் மெய்மறந்து, அந்தத் தைத்தியர்களையும், தானவர்களையும் கலங்கடித்தபடியே மகத்தான முழக்கங்களை வெளியிடத் தொடங்கினான்.(21) உலகங்கள் அனைத்தும், திசைகளின் பத்து புள்ளிகளும் இந்த முழக்கங்களை எதிரொலித்தன, அதன் காரணமாகக் கலக்கமடைந்த உயிரினங்கள் அனைத்தும் அச்சத்தால் நிறைந்தன.(22) இந்திரனின் தலைமையிலான தேவர்களே கூட அச்சத்தால் பீடிக்கபட்டனர். அவ்வொலியின் விளைவால் மொத்த அண்டமே அசையாதிருந்தது. அது பயங்கரமான வேளையாக இருந்தது.(23) அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் யாவும் அவ்வொலியால் திகைப்படைந்தன. அவ்வொலியால் அச்சமடைந்த தானவர்கள்,(24) விஷ்ணுவின் சக்தியால் முடக்கம் அடைந்து உயிரற்றுக் கீழே விழத் தொடங்கினர். அந்தப் பன்றியானது {வராஹமானது}, தேவர்களின் எதிரிகளும், பாதாளலோகவாசிகளுமான அவர்களைத் தன் குளம்படிகளால் துளைக்கத் தொடங்கி, அவர்களது தசை, கொழுப்பு மற்றும் எலும்புகளைக் கிழிக்கத் தொடங்கியது.(25)
அந்த {பன்றியின்} மகத்தான முழக்கங்களின் விளைவால் அந்த விஷ்ணு, சனாதனன் என்ற பெயரால் அழைக்கப்படலானான்.(26) அவன் பத்மநாபன் என்றும் அழைக்கப்படுகிறான். யோகியரில் அவனே முதன்மையானவனாக இருக்கிறான். அவனை அனைத்துயிரினங்களின் குருவாகவும், அவர்களது உயர்ந்த தலைவனாகவும் இருக்கிறான். அப்போது, தேவ இனங்கள் அனைத்தும் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றனர்.(27)
அந்த அண்டத்தின் தலைவனிடம் {பிரம்மனிடம்} வந்த அந்தச் சிறப்புமிக்கவர்கள் {தேவர்கள்}, "ஓ! பலமிக்கவரே, என்ன வகை ஒலியிது? இஃதை எங்களால் புரிந்து கொள்ள முடியவிலை. இது யார்? அல்லது அண்டமே திகைப்படையும் வகையில் உள்ள இந்த ஒலி யாருடையது?(28) இந்த ஒலி, அல்லது இதைச் செய்பவனின் சக்தி மூலம் தேவர்கள் மற்றும் தானவர்கள் அனைவரும் தங்கள் உணர்வுகளை இழக்கின்றனர்" என்றனர்.(29) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அதே வேளையில், பன்றிக்குரிய வடிவில் இருந்த விஷ்ணு, கூடியிருந்த தேவர்களின் பார்வையிலேயே, அவனது புகழைச் சொல்லும் துதிகளைக் கொண்டு பெரும் முனிவர்களால் பாடப்பட்டான்.(30)
பெரும்பாட்டன் {பிரம்மன்}, "அனைத்தையும் படைத்தவனும், அனைத்துயிரினங்களின் ஆன்மாவும், யோகியர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவனே உயர்ந்த தேவனாவான். பெரும் உடலையும், பெரும் பலத்தையும் கொண்ட அவன் {விஷ்ணு}, தானவர்களில் முதன்மையானோரைக் கொன்றுவிட்டு இங்கே வந்து கொண்டிருக்கிறான்.(31) அனைத்தின் தலைவனும், யோகத்தின் குருவும், பெரும் தவசியும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவும் அவனே ஆவான். நீங்கள் அனைவரும் அசையாதிருப்பீராக. அவனே, தடைகள் மற்றும் இடையூறுகள் அனைத்தையும் அழிக்கும் கிருஷ்ணன் ஆவான்.(32) அனைத்து ஆசிகளின் பெரும்புகலிடமும், அளவில்லா காந்தியைக் கொண்டவனுமான அந்த உயர்ந்த தேவன், பிறரால் நிறைவேற்ற முடியாத மிகக் கடினமான சாதனையைச் செய்து விட்டு, கலப்பில்லாத தன் சொந்த இயல்புக்கே திரும்பியிருக்கிறான்.(33) அவனுடைய தொப்புளில் {நாபியில்} இருந்தே தொடக்கக் காலத் தாமரை {ஆதி தாமரை} எழுந்தது. அவனே யோகியரில் முதன்மையானவன். பரமாத்மாவான அவனே அனைத்து உயிரினங்களின் படைப்பாளனாவான்.(34) அவனே விதி சமைப்பவன். அவனே படைப்புக் கோட்பாடாவான். அவனே அனைத்தையும் அழிக்கும் காலம் ஆவான். அவனே அனைத்து உலகங்களையும் தாங்குபவனாவான். உங்களை அச்சுறுத்தும் இந்த முழக்கங்களை அந்த உயர் ஆன்மாவே செய்கிறான்.(35) வலிய கரங்களைக் கொண்ட அவனே உலகளாவிய வழிபாட்டுக்குத் தகுந்தவனாவான். சிதைவடைய இயலாதவனான அந்தத் தாமரைக் கண்ணனே அனைத்துயிரினங்களின் மூலமும், அவர்களது தலைவனுமாவான்" என்றான் {பிரம்மன்}" என்றார் {பீஷ்மர்}.(36)
சாந்திபர்வம் பகுதி – 209ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |