Yoga! | Shanti-Parva-Section-210 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 37)
பதிவின் சுருக்கம் : ஓர் ஆசானுக்கும், அவரது சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்; முற்பிறவியின் விருப்பங்களும், உள்ளுணர்வுகளும் புதிய பிறவியில் எவ்வாறு ஆன்மாவைப் பாதிக்கிறது என்பது குறித்துச் சொன்னது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஐயா, ஓ! பாரதரே, நான் விடுதலையை {முக்தியை} அடைய வகைச் செய்யும் உயர்ந்த யோகத்தைக் குறித்து எனக்குச் சொல்வீராக. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, யோகம் குறித்த அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகவும், விடுலை {முக்தி / மோக்ஷம்} குறித்தும் ஓர் ஆசானுக்கும், ஒரு சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒரு பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) முனிவர்களில் முதன்மையான ஒருவர் மறுபிறப்பாள ஆசானாகவும் இருந்தார். அவர் காந்தியின் திரளைப் போலத் தெரிந்தார். உயர்ந்த ஆன்மாவைக் கொண்ட அவர், உண்மையில் உறுதியுள்ளவராகவும், தன் புலன்களின் முற்றான தலைவனாகவும் இருந்தார்.(3)
ஒரு காலத்தில், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், நல்ல கவனம் கொண்டவனுமான சீடன் ஒருவன் தன் ஆசானின் பாதங்களைத் தீண்டி, அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்று,(4) "ஓ! சிறப்புமிக்கவரே, என் வழிபாட்டில் நீர் நிறைவடைந்தீரென்றால், என் பெரும் ஐயம் ஒன்றைத் தீர்த்து வைப்பதே உமக்குத் தகும்.(5) நான் எங்கிருந்து வந்தேன்? நீர் எங்கிருந்து வந்தீர்? இதை எனக்கு முழுமையாகச் சொல்வீராக. இறுதிக் காரணம் யாது என்பதையும் எனக்குச் சொல்வீராக. ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அனைத்து உயிரினங்களின் பொருள் காரணம் ஒன்றாக இருக்கும்போது, அவற்றின் தோற்றமும், அழிவும் இத்தகைய வேறுபட்ட வழிகளில் நேர்வதேன்? ஓ! பெரும் கல்வியைக் கொண்டவரே, (பல்வேறு வகை மனிதர்களுக்குச் சொல்லப்பட்டுள்ள பல்வேறு சடங்குகள் குறித்து) வேதங்களில் உள்ள தீர்மானங்களின் நோக்கம், அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் ஸ்மிருதி கட்டளைகளின் பொருள் ஆகியவற்றை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்[1].(6,7)
[1] "பொருள் காரணத்தைப் பொருத்தவரையில் மனிதர்கள் அனைவரும் சமமானவர்களாக இருக்கும்போது, மனிதர்களின் கடமைகளைக் குறித்து, ஸ்ருதிகளிலும், ஸ்மிருதிகளிலும் இத்தகையே வேறுபாடுகள் ஏன் தோன்றுகின்றன என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆசான், "ஓ!! சீடா, ஓ! பெரும் ஞானியே, கேட்பாயாக. நீ என்னிடம் கேட்பது வேதங்களில் வெளிப்படுத்தப்பட்டிருப்பதும் {வேத ரஹஸ்யமும்}, சிந்தனை, அல்லது உரையாடலுக்குத் தகுந்த உயர்ந்த காரியமும் ஆகும். அஃது அத்யாத்மா என்றழைக்கப்படுகிறது, மேலும் கல்விக் கிளைகள் மற்றும் புனித நிலைகள் அனைத்திலும் அது மதிப்புமிக்கதாக இருக்கிறது.(8) வாசுதேவனே இந்த அண்டத்தில் ({அண்டக்} காரணத்தில்) உயர்ந்தவனாவான். அவனே வேதங்களின் மூலம் ({மூலச் சொல்லான} ஓம்) ஆவான். அவனே வாய்மை, அறிவு, வேள்வி, துறவு, தற்கட்டுப்பாடு, அறம் ஆகியவை ஆவான்.(9) வேதங்களை அறிந்த மனிதர்கள், அனைத்திலும் படர்ந்தூடுருவியிருப்பவனாக, அழிவில்லாதவனாக, எங்கும் படர்ந்திருப்பவனாக, அழிப்பவனாக, புலப்படாதவனாக, பிரம்மமாக, மாறும் இயல்பற்றவனாக அவனையே அறிகிறார்கள்.(10)
விருஷ்ணி குலத்தில் பிறந்தவனின் {விஷ்ணுவின்} கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக. ஒரு பிராமணன், அளவிலா சக்தி கொண்டவனும், தேவர்களுக்குத் தேவனும், விஷ்ணு என்றழைக்கப்படுபனுமான அவனின் மகிமையைப் பிராமணர்களின் உதடுகள் மூலம் அறிய வேண்டும். அரச வகையைச் சார்ந்த மனிதனர் அதே வகையைச் சார்ந்த மனிதர்கள் மூலம் கேட்க வேண்டும். ஒரு வைசியன் வைசியர்களின் மூலமும், ஓர் உயர் ஆன்ம சூத்திரன், சூத்திரர்களின் மூலம் அதைக் கேட்க வேண்டும்.(11,12) நீ அதைக் கேட்கத் தகுந்தவனே. கதைகள் அனைத்திலும் முதன்மையான கதையான கிருஷ்ணனின் மங்கலக் கதையை இப்போது கேட்பாயாக.
வாசுதேவன், தொடக்கமும் முடிவும் இல்லாத காலச்சக்கரமாவான். இருப்பு, இல்லாமை ஆகிய குணங்களின் மூலமே அவனது உண்மையான இயல்பை அறிந்து கொள்ள முடியும்.(13) அனைத்து உயிரினங்களின் தலைவனான அவனைச் சார்ந்தே இந்த அண்டமானது சக்கரம் போலச் சுழல்கிறது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கேசவன், அழிவற்றவனாகவும், புலப்படாதவனாகவும், அழிவில்லாதவனாகவும், பிரம்மமாகவும், மாறும் இயல்பற்றவனாகவும் சொல்லப்படுகிறான்.(14) உயர்ந்ததில் உயர்ந்தவனும், மாற்றமும், சிதைவும் அற்றவனுமான அவனே, பித்ருக்கள், தேவர்கள், முனிவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், நாகர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களைப் படைத்தான்.(15) வேதங்களையும், அழிவற்ற கடமைகளையும், மனிதர்களின் பழக்கவழக்கங்களையும் அவனே படைத்தான். அனைத்தையும் இல்லாமைக்குள் குறைக்கும் {அழிக்கும்} அவன், மீண்டும் (புதிய) யுகத் தொடக்கத்தில் (தொடக்கப் பருப்பொருளான) பிரக்ருதியைப் படைக்கிறான்.(16) பருவகாலத்தின் படி, ஒன்றன்பின் ஒன்றாகப் பல பருவங்களில் தோன்றும் பல்வேறு தோற்றங்களைப் போன்ற வகையிலேயே ஒவ்வொரு (தேவ) யுகத்தின் தொடக்கத்திலும் உயிரினங்கள் தோன்றுகின்றன.(17) புதிதாகப் பிறக்கும் உயிரினங்கள் தொடர்புடையதே, உலக நடைமுறையின் ஒழுங்கை நோக்கமாகக் கொண்ட விதிகள் மற்றும் கடமைகளைக் குறித்த அறிவாகும்[2].(18)
[2] "ஒவ்வொரு தேவ யுகத்தின் தொடக்கத்திலும், உறக்கத்தில் இருந்து விழிக்கும் பரம்பொருள் அனைத்து உயிரினங்களையும் புதிதாகப் படைக்கிறது, அல்லது உயிரினங்கள் மீண்டும் பிறக்கின்றன. ஒவ்வொன்றும் இவ்வாறு பிறப்பதால், அவற்றின் உறவு மற்றும் செயல்களின் ஒழுங்குக்கான விதிகளும் தோன்றுகின்றன. ஏனெனில், அந்த விதிகளின் அறிவு இல்லையென்றால், புதிய படைப்பு குழம்பி ஒரு முடிவுக்கு வந்துவிடும் {அழிவடைந்துவிடும்}. இவ்வாறே ஆணும் பெண்ணும் பிறக்கும்போது, ஒருவரையொருவர் உண்ணாமல், இருவரும் இணைந்து இனங்களைப் பெருக்குகின்றனர். மனித இனம் பெருகுவதால், யுக முடிவில் படைப்பாளன் மீண்டும் தனக்குள் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் வரையில், புதிய படைப்பை ஒழுங்கு படுத்தக்கூடிய அனைத்து அறக்கடமைகளையும், பல்வேறு நடைமுறைகளையும் குறித்த அறிவு ஒவ்வொருவர் இதயத்திலும் எழுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(தேவ) யுகங்கள் ஒவ்வொன்றின் முடிவிலும் (பிரளயம் தோன்றும்போது), வேதங்களும், பிற சாத்திரங்கள் அனைத்தும் (எஞ்சியவை போல) காணாமல் போகின்றன. பெரும் முனிவர்கள், தான்தோன்றியின் {சுயம்புவின்} அருளின் விளைவால், தங்கள் தவங்களின் மூலம், முதலில் தொலைந்து போன வேதங்களையும், சாத்திரங்களையும் மீண்டும் அடைகின்றனர்.(19) தான்தோன்றியே (பிரம்மனே) முதலில் வேதங்களை அடைந்தான். அங்கங்கள் என்றழைக்கப்படும் அவற்றின் கிளைகளை {வேதங்கங்களை} (தேவ குருவான) பிருஹஸ்பதி முதலில் அடைந்தார். அண்டத்திற்கு நன்மை பயக்கும் அறநெறி அறிவியலை {நீதி சாத்திரத்தை} பிருகுவின் மகன் (சுக்கிரன்) முதலில் அடைந்தார்.(20) இசை அறிவியல் {சங்கீத சாஸ்திரம்} நாரதரால் அடையப்பட்டது; ஆயுத அறிவியல் {தனுர் வேதம்} பரத்வாஜரால் அடையப்பட்டது; தெய்வீக முனிவர்களின் வரலாறு {சோதிடம் / வானியல்} கர்க்கரால் அடையப்பட்டது; மருத்துவ அறிவியல் கரிய நிறத்தவரான அத்ரியின் மகனால் {கிருஷ்ணாத்ரேயரால்} அடையப்பட்டது.(21) நியாயம் (வைசேஷிகம், சாங்கியம், பாதஞ்சலம் முதலியவை) போன்ற பல்வேறு பிற அறிவியல்களை அதன் தொடர்புடைய பெயரைக் கொண்ட பல்வேறு முனிவர்கள் அறிவித்தனர். வேதங்களின் மூலமும், புலன்களின் நேரடி சாட்சியம் மூலம் பெறப்பட்ட உள்ளுணர்வின் மூலமும் அறிவில் இருந்து ஈர்க்கப்பட்ட வாதங்களைக் கொண்டு அந்த முனிவர்களால் குறிப்பிடப்படும் பிரம்மம் துதிக்கப்படட்டும்[3].(22)
[3] 22ம் சுலோகத்தில் உள்ள விபரங்கள் கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கின்றன. அது பின்வருமாறு: "கௌதமரானவர் ந்யாயசாஸ்திரமுழுமையையும் உண்மையாய் அறிந்தார். வேதங்களையறிந்தவரும், பிரம்மத்தையறிந்தவரும் பிரபுவுமான ஸ்ரீ வ்யாஸரானவர் வேதாந்தத்தையும், கர்மயோகத்தையும் அறிந்தார். ப்ருகுவானவர் சில்பசாஸ்த்ரத்தை அறிந்தார். அந்த அந்த வாதிகளால் பல தர்க்க சாஸ்த்ரங்களும் கற்பிக்கப்பட்டன. எது யுக்தியுடனும், ஆகமத்துடனும், ஸதாசாரத்துடனும் கூறப்பட்டதோ அஃது ஆதரிக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
தொடக்கமில்லாததும், உயர்ந்ததில் உயர்ந்ததுமான பிரம்மத்தைத் தேவர்களோ, முனிவர்களோ (முதலில்) அறியவில்லை. அனைத்தையும் படைத்தவனும், தெய்வீகமானவனும், பலமிக்கவனுமான நாராயணன் மட்டுமே பிரம்மத்தைக் குறித்த அறிவைப் பெற்றிருந்தான்.(23) முனிவர்கள், தேவர்களில் முதன்மையானோர், அசுரர்கள், பழங்காலத்தின் அரசமுனிகள் ஆகியோர் நாராயணனிடமிருந்தே கவலைத் தீர்க்கும் உயர்ந்த மருந்தின் அறிவை அடைந்தனர்.(24) தொடக்கத்திலிருந்த பருப்பொருள், தொடக்க சக்தியின் செயல்பாட்டின் மூலம் இருப்புகளை உண்டாக்கும்போது, அதிலிருந்து திறன்கள் அனைத்துடன் கூடிய அண்டமானது உண்டாகிறது[4].(25) ஒளி ஏற்றப்பட்ட ஒரு விளக்கிலிருந்து, ஆயிரக்கணக்கான பிற விளக்குகள் ஒளியேற்றப்படவல்லனவாக உள்ளன. அதே வகையிலேயே, தொடக்ககாலப் பருப்பொருள் இருப்புக்குரிய ஆயிரக்கணக்கான பொருட்களை உண்டாக்குகிறது. மேலும், அதன் முடிவிலாத் தன்மையின் விளைவால் அந்தப் பொருள் ஒருபோதும் தீர்ந்து போவதில்லை.(26)
[4] கும்பகோணம் பதிப்பில், "ப்ரக்ருதியானது எப்பொழுது ஈசனென்னும் புருஷனால் ஆலோசிக்கப்பட்ட பொருள்களை உண்டுபண்ணத் தொடங்குகிறதோ அப்பொழுது (தர்மம் அதர்மம் என்ற) காரணங்களுடன் கூடிய உலகமானது இந்த ப்ரக்ருதியினிடத்திலிருந்து முதலில் உண்டாகிறது" என்றிருக்கிறது.
புலப்படாததில் {பரம்பொருளில்}<1> இருந்து தீர்மானிக்கப்பட்ட செயல்களால் புத்தி<2> எழுகிறது. புத்தி நனவுநிலையை {அஹங்காரத்தை}<3> உண்டாக்குகிறது. நனவுநிலையிலிருந்து {அஹங்காரத்திலிருந்து} ஆகாயம்<4> உண்டாகிறது. ஆகாயம் காற்றை<5> உண்டாக்குகிறது.(27) காற்று வெப்பத்தை<6> உண்டாக்குகிறது. வெப்பம் நீரை<7> உண்டாக்குகிறது, நீரானது பூமியை {நிலத்தை}<8> உண்டாக்குகிறது. இந்த எட்டும் தொடக்ககாலப் பிரகிருதியில் இருக்கின்றன. இந்த அண்டம் அவற்றையே சார்ந்திருக்கிறது.(28) இந்த எட்டிலிருந்தே ஐந்து அறிவுப்புலன்களும் {ஞானேந்திரியங்களும்}, ஐந்து செயற்புலன்களும் {கர்மேந்திரியங்களும்}, (முதல் ஐந்து) புலன்களுக்குரிய புலன்நுகர் பொருட்களும் {விஷயங்களும்}, பதினாறாவதாக அவற்றின் மாற்றத்தின் விளைவால் உண்டான ஒரு மனமும் {சேர்ந்து பதினாறு காரியங்களாகத்} தோன்றுகின்றன.(29) காது, தோல், இரு கண்கள், நாக்கு, மூக்கு ஆகியனவே ஐந்து அறிவுப்புலன்களாகும் {ஞானேந்திரியங்களாகும்}. இரு கால்கள், குதம் {பாயு}, பிறப்புறுப்பு {உபஸ்தம்}, இரு கரங்கள், வாக்கு ஆகியனவே ஐந்து செயற்புலன்களாகும் {கர்மேந்திரியங்களாகும்}.(30) ஒலி, தீண்டல் {ஊறு}, வடிவம் {ஒளி}, சுவை, மணம் ஆகியவையே அனைத்தையும் மறைத்திருப்பவையும், புலன்களுக்குரியவையுமான புலன் நுகர் பொருட்கள் {விஷயங்களாகும் [தன்மாத்திரைகள்]} ஆகும். மனமானது அனைத்துப் புலன்களிலும், அவற்றுக்குரிய பொருட்களிலும் {விஷயங்களிலும்} வசிக்கிறது.(31) சுவை என்ற உணர்வில் மனமே நாவாக இருக்கிறது, வாக்கில் இந்த மனமே வார்த்தைகளாகிறது. பல்வேறு புலன்களுடன் கூடிய மனமே, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் உணர்கிறது.(32)
தங்கள் தங்களுக்குரிய வடிவங்களில் இருக்கும் இந்தப் பதினாறும் தேவர்களாக அறியப்பட வேண்டும். எவன் அறிவுகள் அனைத்தையும் படைத்தவனோ, எவன் உடலுக்குள் வசிக்கிறானோ அவனையே {பரமாத்மா / ஆத்மா} இவை வழிபடுகின்றன.(33) சுவையானது நீரின் குணமாகவும்; மணமானது பூமியின் {நிலத்தின்} குணமாகவும்; கேள்வியானது ஆகாயத்தின் குணமாகவும்; பார்வையானது {வடிவமானது} நெருப்பு அல்லது ஒளியின் குணத்தைக் கொண்டதாதாகவும்;(34) தீண்டல் {ஊறு} என்பது காற்றின் குணத்தைக் கொண்டதாகவும் அறியப்பட வேண்டும். இதுவே அனைத்துக் காலங்களிலும் அனைத்து உயிரினங்களின் வழக்காகும்.(35) மனமானது, இருப்பின் குணமாகச் சொல்லப்படுகிறது. இருப்பானது, இருப்பிலுள்ள அனைத்துக்கும் ஆன்மாவாக இருக்கும் புலப்படாததிலிருந்து {பரமாத்மாவிலிருந்து} (அல்லது பிரகிருதியிலிருந்து} உண்டாகிறது என்பதை நுண்ணறிவுமிக்க ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டும்.(36) பிரகிருதிக்கு மேலானதாக இருக்கும் உயர்ந்த தெய்வீகத்தைச் சார்ந்தவையும், செயல்படாமல் இருப்பவையுமான இந்த இருப்புகளே {அவ்யக்தம் முதலிய பொருட்களே}, அசையும் மற்றும் அசையாதன அடங்கிய மொத்த அண்டத்தையே தாங்கிப் பிடிக்கின்றன.(37) இந்தப் புனிதமான மாளிகையின் {உடலின்} ஒன்பது வாயில்களும் இந்த இருப்புகள் அனைத்தையும் கொண்டவையே. அவற்றிலும் உயர்ந்ததான ஆன்மாவானது, அதற்குள்ளேயே {உடலிலேயே} வசித்துக் கொண்டு, முழுமையாக அதனுள் படர்ந்தூடுருவி இருக்கிறது. இதன் காரணமாகவே அது {ஆன்மா} புருஷன் என்றழைக்கப்படுகிறது.(38)
ஆன்மாவானது சிதைவற்றதும், மரணத்திற்கு உட்படாததுமாகும். புலப்படும் மற்றும் புலப்படாதவற்றைக் குறித்த அறிவு அதற்கு இருக்கிறது. மேலும் அஃது அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதாகவும், குணங்களைக் கொண்டதாகவும், நுட்பமானதாகவும், இருப்புகள் மற்றும் குணங்கள் அனைத்திற்கும் புகலிடமாகவும் இருக்கிறது.(39) பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும் பொருட்கள் அனைத்தையும் (அதனதன் அளவைப் பொருட்படுத்தாமல்) காணச் செய்யும் ஒரு விளக்கைப் போலவே அனைத்து உயிரினங்களில் உள்ள ஆன்மாவும், (அதம உயிரினங்களின் குணங்களைக் கருத்தில் கொள்ளாத) அறிவின் கோட்பாடாக இருக்கிறது.(40) கேட்பதைக் கேட்க காதைத் தூண்டி ஆன்மாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோலக் கண்ணைப் பயன்படுத்தி ஆன்மாவே பார்க்கிறது. ஆன்மா அடையும் அறிவுக்கு இந்த உடலே வழிமுறைகளைக் கொடுக்கிறது. உடலில் உள்ள உறுப்புகள் செயல்படுபவையல்ல. ஆன்மாவே அனைத்துச் செயல்களையும் செய்வதாக இருக்கிறது.(41) மரத்திற்குள் நெருப்பு இருக்கிறது, ஆனால் அந்த மரத்துண்டை வெட்டித் திறந்தால் அதைக் காண முடியாது. அதே போலவே ஆன்மா உடலுக்குள் வசித்தாலும், உடலைக் கூறுபோடுவதால் அஃதை ஒருபோதும் காணமுடியாது.(42) மரத்தை மற்றொரு மரத்துடன் சரியான வழிமுறைகளின்படி உரசும்போது மரத்திற்குள் வசிக்கும் நெருப்பானது காணப்படுகிறது. அதே வகையில், உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவும், யோகம் எனும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தும்போது காணப்படும்.(43)
நீரானது ஆறுகளில் இருக்கிறது. ஒளிக்கதிர்கள் எப்போதும் சூரியனையே பற்றியிருக்கிறது. அதே வகையிலேயே ஆன்மாவுக்கும் ஓர் உடல் இருக்கிறது. ஆன்மாவானது அடுத்தடுத்த உடல்களில் நுழைய வேண்டிய காரணதால் இந்தத் தொடர்பு நிற்காமல் தொடர்கிறது[5].(44) ஒரு கனவில், ஐந்து வகைப் புலன்களுடன் கூடிய ஆன்மாவானது, உடலைவிட்டகன்று பரந்த பகுதிகளில் திரிகிறது. அதே வகையிலேயே மரணம் ஏற்படும்போதும், (நுண்ணிய வடிவங்களிலான புலன்களுடன் கூடிய) ஆன்மாவானது, மற்றொரு உடலுக்குள் நுழைவதற்காக, {தானிருக்கும்} ஓர் உடலைக் கடந்து செல்கிறது.(45) ஆன்மாவானது அதன் முற்பிறவி செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறது. ஓர் இருப்பு நிலையில் செய்யப்பட்ட செயல்களுக்குக் கட்டுப்பட்டிருக்கும் அது, மற்றொரு நிலையை அடைகிறது. உண்மையில், பலமிக்க விளைவுகளைக் கொண்டவையான தன் செயல்களின் மூலமே அஃது ஓர் உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு வழிநடத்தப்படுகிறது.(46) ஒரு மனித உடலுக்குச் சொந்தக்காரன் {ஆன்மாவானது}, தன் உடலை விட்டகன்று, எவ்வாறு மற்றொரு உடலுக்குள் நுழைகிறான்? உண்மையில் (கடந்த கால மற்றும் தற்கால வாழ்வுகளில்) தங்கள் தங்களுக்குரிய செயல்களின் விளைவால் எவ்வாறு மொத்த உயிரினங்களும் உண்டாகின்றன? என்பதைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன்" என்றார் {அந்த ஆசான்}(47).
[5] "நீரில்லாத ஆறு ஏதும் கிடையாது. நீரில்லாத ஓர் ஆறு இருக்க முடியாது. ஒரு ஆறு குறிப்பிடப்படும்போது, நீரே வெளிப்படுத்தப்படுகிறது. ஓர் ஆற்றுக்கும், நீருக்குமான தொடர்பு ஒரு விபத்துக் கிடையாது, ஆனால் அவசியமான ஒன்றாகும். சூரியனும், அதன் கதிர்களும் கொண்டுள்ள தொடர்பு குறித்தும் இவ்வாறே சொல்லலாம். அதே போலவே, ஆன்மாவுக்கும், உடலுக்குமான தொடர்பும் விபத்துக் கிடையாது, ஆனால் அவசியமான ஒன்றே. ஓர் உடலில்லாமல் ஆன்மாவால் இருக்க முடியாது. யோகத்தின் மூலமாக ஒருவன் தன் ஆன்மாவை உடலின் தொடர்பில் இருந்து விடுபட்டு பிரம்மத்துடன் இணைந்து கொள்ள முடியும் என்பதால் இங்கே குறிப்பிடப்படும் சாதாரண வழக்கு மட்டுமே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆறுகளில் ஜலங்களும், ஸூர்யனிடத்தில் கிரணங்களும் சேர்ந்து கொண்டு தொடர்ந்தவைகளாக எவ்விதம் செல்லுகின்றனவோ அவ்விதம் சரீரிகளுக்குச் சரீரங்கள் செல்லுகின்றன" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 210ல் உள்ள சுலோகங்கள் : 47
ஆங்கிலத்தில் | In English |