Philosophy of soul | Shanti-Parva-Section-211 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 38)
பதிவின் சுருக்கம் : செயல்களின் பிறப்பு மற்றும் ஞானத்தின் இயல்பு ஆகியவற்றைக் குறித்து ஓர் ஆசானுக்கும் சீடனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{ஆசான் தன் சீடனிடம் தொடர்ந்தார்}, "நான்கு வகைகளில் பிரிந்திருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், புலப்படாத பிறப்பையும், புலப்படாத மரணத்தையும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. புலப்படாத ஆன்மாவில் மட்டுமே இருக்கும் மனமானது, புலப்படாத குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[1].(1) மலராத அஸ்வத மலருக்குள் பதுங்கிருந்த ஒரு பெரிய மரம், வெளியே வரும்போது மட்டுமே புலப்படுவதைப் போலவே, புலப்படாததிலிருந்து பிறப்பு நேர்கிறது.(2) அசைவற்றதாக இருக்கும் இரும்புத் துண்டானது, காந்தத் துண்டை நோக்கி ஓடும். அதே போலவே, இயற்கையான உள்ளுணர்வுகளின் மூலமான விளையும் விருப்பங்கள், மனச்சார்புகள் மற்றும் யாவும் புதுப்பிறவியில் ஆன்மாவை நோக்கி ஓடுகின்றன[2].(3) உண்மையில், அந்த மனச்சார்புகளும், உடைமைகளும், அறியாமை மற்றும் மாயையிலிருந்து உண்டாகி, இயல்பில் அசைவற்றவனவாக இருந்தாலும், அந்த ஆன்மாவானது மீண்டும் {புதிய} பிறப்பை அடையும்போது, ஆன்மாவில் கலந்துவிடுவதைப் போல, பிரம்மத்தில் இருந்தே நேரடியாக வரும் அந்த ஆன்மாவின் மனச்சார்புகளும், நாட்டங்களும் பிரம்மத்தை நோக்கித் தங்கள் பார்வையைச் செலுத்தி, தங்களை அதனுடன் இணைத்துக் கொள்கின்றன[3].(4) சித் எனும் ஆன்மாவை {ஜீவனைத்} தவிரப் பூமியோ, வானமோ, சொர்க்கமோ, பொருட்களோ, உயிர்மூச்சுகளோ, அறம் மற்றும் மறமோ, வேறு எதுவுமோ முன்பு இருந்ததில்லை. அறியாமையால் மாசடைந்த சித் எனும் ஆன்மாவிடம் {ஜீவனிடம்} அவை எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை[4].(5)
[1] "ஆன்மாவில் இருக்கிறது என்பதைத் தவிர மனத்திற்கு வேறு இருப்பேதும் கிடையாது. மனத்தின் இயல்பை விளக்குவதற்காக நீரில் தென்படும் இரண்டாவது நிலவை உருவகமாக இங்கே உரையாசிரியர் பயன்படுத்துகிறார். ஆன்மாவிலிருந்து பிரிந்த தனியிருப்பென உண்மையில் அதற்கேதும் கிடையாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தாவரங்களும், ஜங்கமங்களுமான நான்விதப் பிராணிகளும் ஸூக்ஷ்மமான பிறப்புடையவைகளென்றும், ஸூக்ஷ்மமான இறப்புடையவைகளென்றும் கூறுகிறார்கள். மனமானது அவ்யக்தமான லக்ஷணமுள்ளதென்றும் ப்ரக்ருதியின் ஸ்வரூபத்தைத் தன் உருவமாகக் கொண்டதென்றும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.[2] "ஸ்வபாவஹேதுஜா பாவஹம் Swabhaavahetuja bhavah என்பது அறம் மற்றும் மறம் சார்ந்த மனச்சார்புகள் என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. "பிற அனைத்தும்" முற்பிறவிச் செயல்களைச் சாராத பிரம்மத்தில் இருந்து நேரடியாகப் பாயும் அவித்யை அல்லது மாயையாகும். இங்கே சொல்ல வரும் பொருள் என்னவென்றால், ஆன்மாவானது புதிய வடிவம் அல்லது உடலை ஏற்கும்போது, முற்பிறவி செயல்களைச் சார்ந்த மனச்சார்புகள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் அதைப் பற்றுகின்றன. அவித்யை அல்லது மாயையும் அதைப் பற்றும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "3 மற்றும் 4ம் சுலோகங்கள் ஒன்றோடொன்று தொடர்புடையனவாகும். 3வது சுலோகத்தில், பேசுபவர் இரண்டு ஒப்புமைகளைக் குறிப்பிடுகிறார். முதலில், அசைவற்றதாக இருக்கும் இரும்பு காந்தத்தைப் பின்தொடர்ந்து செல்கிறது. இரண்டாவது ஸ்வபாவஹேதுஜா பாவஹம் (ஏற்கனவே விளக்கப்பட்டது போல, இத்தகைய விளைவுகள் எல்லாம் முற்பிறவியின் செயல்களால் பிறக்கின்றன) மற்றும் அந்நியதபி anyadapi, அஃதாவது ஒரே இயல்பைக் கொண்ட பிற அனைத்தும், உண்மையில் முற்பிறவிச் செயல்களில் இருந்து பாயாமல் பிரம்மத்தில் இருந்து நேரடியாகப் பாயும் அவித்யை அல்லது மாயையின் விளைவுகளான அந்நியதபி anyadapi ஆகும். 4வது ஸ்லோகத்தில், மனச்சார்புகள் மற்றும் உடைமைகள் அவித்யை அல்லது மாயையில் இருந்து பிறக்கின்றன என்ற அவ்யக்தஜா பாவஹம் avyaktajabhavah மீண்டும் குறிப்பிடப்படுகிறது. இஃது, ஏற்கனவே 3ம் சுலோகத்தின் 2ம் வரியில் சொல்லப்பட்டிருப்பதை மற்றொரு வடிவத்தில் மீண்டும் சொல்வதாகும். உரையாசிரியர் தன் தெளிவுரையின் தொடக்க வரிகளிலேயே இதை மிகத் தெளிவாக விளக்குகிறார். இதன் பிறகு, ஆன்மாவில் உள்ள உயர்ந்த மனச்சார்புகள் மற்றும் நாட்டங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதன் வெளிப்படையான பொருள், முற்பிறவிச் செயல்களின் மூலம் பிறந்த இருள்சார்ந்த, கருத்தற்ற மனச்சார்புகள் அனைத்தும் புதிய பிறவியில் ஆன்மாவிடம் வந்து சேர்வதைப் போலவே, ஆன்மாவின் உயர்ந்த நாட்டங்கள் அனைத்தும் கூட நேரடியாகப் பிரம்மத்தில் இருந்து ஆன்மாவை வந்தடையும் என்பதாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பிரம்மம் என்பதற்கு, அனைத்திற்குமான உயர்ந்த காரணம் என்ற பொருளைக் கொண்ட காரணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "காந்தமணியின் ஸமீபத்திலிருக்கும் இரும்பானது (அந்த மணியை) அனுஸரித்துச் செல்வது போல அவ்யக்தத்திலிருந்துண்டான புத்தியானது ஆத்மாவை அனுஸரித்துச் செல்கிறது. அதுபோல மனமானது அந்தப் புத்தியை அனுஸரித்துச் செல்லுகிறது. அறிவில்லாத இரும்பானது காந்தமணியையனுஸரித்துச் செல்வது போலப் பூர்வவாஸனையைக் காரணமாகக் கொண்ட கர்மங்களாலுண்டாகும் தர்மாதர்மங்களென்னும் பொருள்களும் இவை போன்ற மற்றவைகளும் தேகத்தையனுஸரித்துச் செல்லுகின்றன. அவ்வாறே அஜ்ஞானத்தாலுண்டான பொருள்கள், கர்த்தாவான ஜீவனுக்குக் காரணமான ப்ரம்மத்தையனுஸரித்துச் செல்லுகிறவைகளும் அறிவில்லாதவைகளும் அறிவுள்ள ஜீவனுக்குக் காரணமான ப்ரமத்தினிடமிருந்து வெளிந்தவந்தவைகளுமாயிருக்கின்றன" என்றிருக்கிறது.[4] "தொடக்கத்தில் சித்-ஆன்மாவைத் தவிர வேறு எதுவும் இருந்ததில்லை. இருப்பில் உள்ள பொருட்கள் அறியாமையால் மாசுபடுத்தப்பட்ட ஆன்மாவின் காரணமாகவே இருக்கின்றன. மேலும் ஆன்மாவுடனான அவற்றின் தொடர்பும் முழுமையானதோ, தேவையானதோ அல்ல. ஆன்மா எதையும் இழக்காமலே அத்தொடர்பை அழித்துவிட முடியும். இந்தச் சுலோகத்தின் மூலம் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், படைப்புத் தொடங்குவதற்கு முன், ஜீவன், அல்லது அறிவைக் குறிக்கும் குணத்தைக் கொண்ட ஆன்மாவைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. குறிப்பிடப்பட்ட பூமி முதலிய பொருட்கள் அப்போது இல்லை. {புதிதாகப்} பிறந்த ஆன்மாவின் குணத்தைக் குறிக்கும் அறியாமை, அல்லது மாயையுடன் கூடிய ஜீவனுக்குள்ளும் அவை பண்புக்கூறாய் அமையவில்லை. புதிதாகப் பிறந்த ஆன்மா, அந்தக் குணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாகத் தோன்றும், ஆனால் உண்மையில் அஃது அவற்றின் சார்பற்றதும், அவற்றிலிருந்து தனிப்பட்ட வடிவத்தைக் கொண்டதுமாகும். ஆன்மாவுடனான அவற்றின் தொடர்பு ஏற்கனவே சொல்லப்பட்டது போல முழுமையானதோ நித்தியமானதோ அல்ல. இங்கே பேசிக் கொண்டிருப்பவர் அடுத்த ஸ்லோகத்தில் அந்த வெளிப்பாடுகளின் இயல்பை விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆன்மா நித்தியமானதாகும் {நிலையானதாகும்}. அஃது அழிவற்றதாகும். ஒவ்வொரு உயிரினத்திலும் அது தோன்றுகிறது. மனத்திற்கு அதுவே காரணமாக இருக்கிறது. அது குணங்களற்றதாக இருக்கிறது. நாம் காணும் இந்த அண்டமானது, அறியாமை அல்லது மாயையின் காரணமாக விளைவது என்று (வேதங்களில்) தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ஆன்மாவானது, முற்பிறவி விருப்பங்களின் காரணமாகவே, வடிவம் முதலியவற்றை உணர்கிறது[5].(6) ஆன்மாவானது, அந்தக் காரணங்களுடன் (விருப்பங்களுடன்) கூடியதாகும்போது, செயல்களில் ஈடுபடும் நிலைக்கு வழிநடத்தப்படுகிறது. (அந்தச் செயல்கள் மீண்டும் ஆசைகளை உண்டாக்கி புதிய செயல்களைச் செய்ய வைக்கும்) அந்நிலையில் விளைவால், இருப்பெனும் {வாழ்வெனும்} இந்தப் பெருஞ்சக்கரம் தொடக்கமும், முடிவும் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது[6].(7) புலப்படாதது (ஆசைகளுடன் கூடிய புத்தியானது), அந்தச் சக்கரத்தின் அச்சாக இருக்கிறது. புலப்படக்கூடியது (புலன்களுடன் கூடிய உடலானது) அதன் ஆரங்களின் கூட்டமாக இருக்கிறது. உணர்வுகளும் {ஞானமும்}, செயல்களும் {கர்மமும்} அதன் சுற்றளவாக {சக்கரத்தின் வட்டையாக} இருக்கின்றன. ரஜஸ் (ஆசை) குணத்தால் உந்தப்படும் ஆன்மாவானது (அதன் சுழற்சியைப் பார்த்துக் கொண்டே) அதைச் சுழலச் செய்கிறது.(8) காணிகர்கள் {எண்ணெய் ஆட்டுபவர்கள்} தங்கள் செக்கில் எள்ளையிட்டு ஆட்டுவதைப் போல, அறியாமையில் பிறந்த விளைவுகள் {காரியங்கள்}, ரஜஸ் {ஆசை} குணத்தால் நனைக்கப்பட்ட (உயிரினங்களுடன் கூடிய) அண்டத்தை அந்தச் சக்கரத்தில் இட்டு, அதைத் தாக்கி, நசுக்கவோ, அரைக்கவோ செய்கின்றன.(9) உயிரினமானது {ஜீவனானது}, இந்த அடுத்தடுத்த இருப்புகளில், ஆசையின் விளைவால் உண்டான சுயக் கருத்தால் பற்றப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறது. காரணம் மற்றும் விளைவின் {காரியத்தின்} கலப்பில் அந்தச் செயல்கள் மேலும் (புதிய) செயல்களை உண்டாக்குகின்றன[7].(10)
[5] "பூமி முதலியவற்றுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள தொடர்பானது முழுமையானதோ, நிலையானதோ அல்ல என்று முன்னர்ச் சொல்லப்பட்டது. அவ்வாறெனில், அத்தொடர்பு எங்கிருந்து வந்தது? 6ம் சுலோகத்தில், ஆன்மாவானது, பூமி முதலிய அனைத்தையும் பிரம்மத்தில் இருந்து நேரடியாகப் பாயும் அறியாமை அல்லது மாயையின் காரணமாக உணர்ந்து, பின்னர் அதைத் தாக்குகிறது. இது மனிதன், அல்லது இது விலங்கு, இதற்கு உடல் இருக்கிறது, இது செயல்படுகிறது என்ற ஆன்மவுணர்வுகள், மன்னனாக இல்லாதவன் கனவில் அவ்வாறு நினைப்பதும், குழந்தையாக இல்லாதவன் உண்மையில் குழந்தையாக இருப்பதும் போன்றதாகும். நிலையானதாகவும், தொடக்கமில்லாததாகவும் உள்ள அதன் முதல் இருப்பு, கண்டுபிடிக்க முடியாத மாயையின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. மேலும், அறிவை மட்டுமே குணமாகக் கொண்டிருக்கும் அஃது, இருப்பு மாறுதல் என்பதில் இருந்து விடுபட்டு அழிவில்லாததாக நீடிக்கிறது. அது மனிதன், விலங்கு உள்ளிட்ட ஒவ்வொரு உயிரினத்தில் நேர்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "ஆசைகளின் விளைவால் ஆன்மாவானது, ஏதோவொரு இருப்பின் வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. அந்நிலையில் அது செயல்படுகிறது. அந்தச் செயல்கள் புதிய ஆசைகளுக்கு வழிவகுக்கின்றன. அதன் {அந்தப் புதிய ஆசைகளின்} காரணமாகப் புதிய வடிவங்கள், அல்லது இருப்பு நிலைகளை அஃது உண்டாக்குகிறது. இருப்பு, அல்லது வாழ்வு எனும் சக்கரம் இவ்வாறே தொடக்கமும் முடிவும் இல்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது என்பதே இங்கே சொல்லவரும் பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "காரணம் என்பது அறியாமையாகும். விளைவு என்பது உடல் மற்றும் புலன்கள், அல்லது குறிப்பிட்ட வடிவத்திலான இருப்புகள் ஆகும். உயிரினமானது, இந்தக் கலப்பின் விளைவால் செயலில் ஈடுபடும்போது, இவை (காரணமும், விளைவும்) புதிய இருப்பு நிலைகளுக்குக் காரணமாக அமைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
விளைவுகள் {காரியங்கள்} காரணங்களுக்குள் நுழைவதில்லை. அல்லது காரணங்களும், விளைவுகளுக்குள் {காரியங்களுக்குள்} நுழைவதில்லை. விளைவுகளை {காரியங்களை} உண்டாக்குவதில் காலமே காரணமாக இருக்கிறது[8].(11) காரணங்களால் நிறைந்தவையாக இருக்கும் தொடக்ககாலச் சாரங்களும் (முன்னர்க் குறிப்பிட்ட எட்டு காரணங்கள்), அவற்றின் (பதினாறு) மாறுதல்களும் {காரியங்களும்} ஆன்மாவால் எப்போதும் நடத்தப்படுவதன் விளைவால் {காரணங்களும், காரியங்களும்} ஒன்றுகலந்த நிலையிலேயே இருக்கின்றன[9].(12) புழுதியானது காற்றால் அசைக்கப்பட்டு, அதைப் பின்தொடர்ந்து செல்வதைப் போலவே, உடலை இழந்ததும், இன்னும் ஆசை {ரஜஸ்} குணம் மற்றும் இருள் {தமோ} குணத்தில் பிறந்த விருப்பங்களுடன் கூடியதும், முடிந்து போன பிறவியில் செய்த செயல்களுக்கான காரணக் கோட்பாடுகளுடன் கூடியதுமான ஜீவாத்மாவும், பரமாத்மாவால் அசைக்கப்பட்டு, அது {பரமாத்மா} காட்டும் திசையில் செல்கிறது.(13) எனினும், ஆன்மாவானது, ஒருபோதும் அந்த விருப்பங்கள் மற்றும் மனச்சார்புகளால் தீண்டப்படுவதில்லை. அதேபோல இவற்றிலும் மேன்மையான ஆன்மாவால் இவை தீண்டப்படுவதுமில்லை. தூய இயல்பைக் கொண்ட காற்றானது ஒருபோதும் அது தாங்கிச் செல்லும் காற்றால் களங்கமடைவதில்லை[10].(14)
[8] 7 முதல் 10ம் சுலோகம் வரை உள்ள கருத்துகள், கும்பகோணம் பதிப்பில், "அவ்யக்தமான வாஸனையைக் குடமாகவும், வ்யக்தமான சரீர முதலியவைகளை ஆர்களாகவும், ஞானம் கர்மம் முதலிய காரியங்களைச் சுற்றிலுமுள்ள வட்டையாகவும், ஆசையென்ற பசையுள்ள ரஜோகுணத்தை அச்சாகவும் கொண்ட சம்ஸாரசக்ரமானது க்ஷேத்ரஜ்ஞனான ஜீவனால் ஏறப்பட்டு உறுதியாயிருக்கிறது. எண்ணெயென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதால் எள்ளானது செக்கார்களால் பீடிக்கப்படுவது போல இவ்வுலகம் யாவும் ஆசையென்னும் ஸ்நேகமுள்ளதாயிருப்பதனால் அஜ்ஞானத்தாலுண்டாகும் போகங்களால் ஆக்ரமித்து இந்த ஸம்ஸாரசக்ரத்தில் பீடிக்கப்படுகிறது. இந்த உலகமானது போக விருப்பத்தாலுண்டான அபிமானத்தால் பிடிகப்பட்டுக் கர்மத்தைச் செய்கிறது. அந்தக் கர்மமானது அஜ்ஞானத்திற்கும் சரீரத்திற்கும் சேர்க்கையுண்டாவதற்குக் காரணமென்று உபதேசிக்கப்படுகிறது. காரணமானது கார்யத்தைப் போய் அடைகிறதில்லை. அதுபோலக் கார்யமும் காரணத்தை அடைவதில்லை. இக்கார்யங்கள் காரணத்திலிருக்கின்றன. இதர காரணங்களுடன் கூடிய காலமானது (அவைகளை வெளிபண்ணக்) காரணமாயிருக்கிறது" என்றிருக்கிறது.[9] பரம்பொருள், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்}, ஆகாயம், காற்று, வெப்பம், நீர், பூமி ஆகிய எட்டும் தொடக்கக் காலப்ரகிருதியின் சாரங்களாகும் {காரணங்களாகும்}. அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} ஐந்தும், செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்தும், புலன்களுக்குரிய பொருட்கள் {விஷயங்கள்} ஐந்தும், மனமும் சேர்ந்த பதினாறும் காரியங்களாகும்.[10] "உடல் மற்றும் புலன்கள் முதலியவற்றைக் கொண்டிருப்பதனாலேயே ஆன்மாவின் நிலையை அது மாற்றிவிடாது என்ற கோட்பாட்டை இந்தச் சுலோகம் மீண்டும் வலியுறுத்துகிறது. காற்றானது அது தாங்கிச் செல்லும் புழுதியுடன் வெளிப்படையாகக் கலந்திருந்தாலும், ஒரு சாரமாக அது தூய்மையான இயல்பில் தனித்திருப்பதைப் போலவே ஆன்மாவும் வெளிப்படையாக இவற்றுடன் கலந்திருப்போது போலத் தெரிந்தாலும் உண்மையில் தனித்தே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காற்றானது, அது சுமந்து செல்லும் புழுதியில் இருந்து உண்மையில் தனித்திருப்பதைப் போலவே, ஒரு ஞானியானவன், இருப்பு அல்லது வாழ்வு என்றழைக்கப்படும் ஒன்றுக்கும், ஆன்மாவுக்கும் இடையில் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும். உடல், புலன்கள், பிற மனச்சார்புகள், நம்பிக்கைகள், நம்பிக்கையின்மைகள் ஆகியவற்றுடன் ஆன்மாவானது வெளிப்படையாகக் கலந்திருப்பதன் விளைவால், அதற்கு {ஆன்மாவுக்கு} அவை அவசியமானவை மற்றும் முழுமையான குணங்களாக இருப்பவை என்று உண்மையில் ஒருவரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. மறுபுறம், ஆன்மாவானது தன்னியல்பிலேயே இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார் {ஆசான்}.(15) இவ்வாறே அந்தத் தெய்வீக முனிவர் தமது சீடனின் மனத்தில் இருந்த ஐயத்தைத் தீர்த்தார். இவை யாவும் இருந்த போதிலும், துன்பத்தைக் கைவிடுவதற்கும், மகிழ்ச்சியை வெல்வதற்கும் செயல்கள் மற்றும் சாத்திரச் சடங்குகள் அடங்கிய வழிமுறைகளையே மக்கள் சார்ந்திருக்கின்றனர்.(16) நெருப்பால் எரிக்கப்பட்ட வித்துகள் முளைப்பதில்லை. அதே வகையில், துன்பத்தை அளிக்கும் அனைத்தும் உண்மை ஞானம் என்ற நெருப்பால் எரிக்கப்பட்டால், ஆன்மாவானது இவ்வுலகில் மறுபிறவி என்ற கடப்பாட்டில் இருந்து தப்பித்துவிடும் {விடுதலை பெறும் / முக்தி அடையும்}" என்றார் {பீஷ்மர்}.(17)
சாந்திபர்வம் பகுதி – 211ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |