Conquer the senses! | Shanti-Parva-Section-213 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 40)
பதிவின் சுருக்கம் : ஆன்ம மயக்கம்; அதில் பிறக்கும் உணர்வுகள்; உணர்வுகளின் மூலம் ஏற்படும் பற்று; பற்றில் பிறக்கும் செயல்; குணங்களின் சார்பு நிலைகள்; அவற்றின் காரணமாகப் பிறக்கும் புலனுறுப்புகள்; மறுபிறப்பில் இருந்து விடுதலை அடைந்து முக்தி அடைவதற்குப் புலன்களை வெற்றி கொள்வதன் அவசியம் ஆகியவற்றை யுதிஷ்டிரனிடம் சொன்ன பீஷ்மர்...
Conquer the senses! | Shanti-Parva-Section-213 | Mahabharata In Tamil |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஆசை குணத்தின் {ரஜோ குணத்தின்} மூலம் மயக்கம் அல்லது தீர்மான இழப்பு எழுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, இருள் குணத்தில் {தமோகுணத்தில்} இருந்து கோபம், பேராசை, அச்சம் மற்றும் செருக்கு ஆகியன எழுகின்றன. இவை யாவும் அழிக்கப்படும்போது ஒருவன் தூய்மையடைகிறான்.(1) தூய்மை அடைவதன் மூலம் ஒரு மனிதன், புலப்படாதவனான முதன்மையான தேவனின் புகலிடத்தை அடைந்து, காந்தியுடன் ஒளிர்வதும், சிதைவடைய இயலாததும், மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பதுமான பரமாத்ம ஞானத்தை அடைவதில் வெல்கிறான்.(2) மாயையில் விழுந்த மனிதர்கள், அறிவில் இருந்து வீழ்ந்து, அறிவற்றவர்களாகி, அவர்களது ஞானம் இருளடைவதன் விளைவால் கோப வசப்படுகிறார்கள்[1].(3) கோபத்தின் மூலம் அவர்கள், ஆசையின் ஆதிக்கத்திற்கு உள்ளாகிறார்கள். ஆசையில் இருந்து பேராசை, மாயை, வீண் தற்பெருமை, செருக்கு, தன்னலம் ஆகியவை எழுகின்றன. இத்தகைய தன்னலத்தில் இருந்து பல்வேறு செயல்கள் பிறக்கின்றன[2].(4) செயல்களில் இருந்து பல்வேறு பற்றுகளும், பிணைப்புகளும் எழுகின்றன, அந்தப் பற்றுப் பிணைப்புகளில் இருந்து துன்பம் எழுகிறது. இன்பமும், துன்பமும் நிறைந்த செயல்களில் இருந்து பிறப்பு மற்றும் இறப்புக்கான கடப்பாடு எழுகிறது.(5)
[1] "பிரம்மமானது, வித்யை (அறிவு {ஞானம்}) மற்றும் மாயையுடன் கூடிய அவித்யை (அறியாமை) ஆகிய இரு குணங்களைக் கொண்டிருப்பதாகச் ஸ்ருதிகளில் சொல்லப்படுகிறது. இந்த மாயையின் விளைவாலேயே, சித் ஆன்மாக்கள், அல்லது ஜீவன்கள் உலகப் பொருட்களின் மீது பற்றுக் கொள்கின்றன. இந்த மாயையின் விளைவாகவே மனிதர்கள், அனைத்தும் ஒன்றுமில்லை என்பதைப் புரிந்து கொள்ளும்போதும் கூட, அவற்றில் இருந்து தங்களை முற்றிலும் விடுவித்துக் கொள்ள முடியாதவர்களாகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "மானா Maana என்பது தன்னைத் தானே வழிபடுவது என்றும்; தர்பம் Darpa என்பது அனைத்துக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது என்றும்; அஹங்காரம் Ahankaara என்பது பிறவற்றை முற்றிலும் அலட்சியம் செய்து, அனைத்து சிந்தனைகளையும் தன்னையே மையமாகக் கொண்டு செய்வது என்றும் உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. இங்கே அகங்காரம் என்பது நனவுநிலையல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த விஷ்ணுவின் மாயையால் மறைக்கப்பட்ட அங்கங்களுள்ளவர்களும் ஞானத்திலிருந்து நழுவினவர்களும் போகங்களில்லாதவர்களுமான மனிதர்கள் பிறகு, புத்தியிலுள்ள பெரிய அவிவேகத்தால் ஆசையை அடைகிறார்கள்; ஆசையிலிருந்து கோபத்தையடைந்து, அதன்பிறகு லோபத்தையும் மோஹத்தையுமடைகிறார்கள். அவற்றிலிருந்து அபிமானத்தையும், கர்வத்தையும், அகங்காரத்தையும் அடைகிறார்கள் அந்த அகங்காரத்திலிருந்து கார்யங்கள் உண்டாகின்றன" என்றிருக்கிறது.
பிறப்புக் கடமையின் விளைவால், உயிர்வித்து {சுக்லம்} மற்றும் குருதியின் {சோணிதத்தின்} கலவையின் மூலம் கருவறையில் வசிக்கும் கடப்பாடு நேர்கிறது. அந்த வாசமானது {கருவறையில் வசிக்கும் நிலையானது}, மலம், சிறுநீர் மற்றும் சளி ஆகியவற்றுடன் {மலஜலசிலேத்தமங்களுடன்} சேர்ந்து மாசடைந்து, அங்கே உற்பத்தியாகும் குருதியால் எப்போதும் கசடுள்ளதாகிறது.(6) தாகத்தில் {ஏக்கத்தில்} மூழ்கும் சித்-ஆன்மா {ஜீவன்} கோபத்திலும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள எஞ்சியவற்றிலும் கட்டப்படுகிறது. எனினும், அத்தீமைகளில் இருந்து தப்புவதற்கு அது முனைகிறது. இதன் காரணமாகவே, படைப்பு எனும் ஓடையை ஓடச் செய்யும் கருவிகளாகப் பெண்கள் கருதப்பட வேண்டும்.(7) பெண்கள் தங்கள் இயல்பில் க்ஷேத்திரமாகவும், ஆண்கள் தங்கள் குணங்களைப் பொறுத்தவரையில் க்ஷேத்ரஜ்ஞனாகவும் இருக்கிறார்கள். இந்தக் காரணத்திற்காகவே, (உலகப் பொருட்கள் பிறவற்றுக்கு மத்தியில்) குறிப்பாகப் பெண்களை ஞானிகள் பின்தொடரக்கூடாது[3].(8) உண்மையில் பெண்கள் பயங்கரமான மந்திர சக்திகளைப் போன்றவர்களாவர். ஞானமற்ற மனிதர்களை அவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள். அவர்கள் ஆசை குணத்தில் {ரஜோ குணத்தில்} மூழ்கியிருக்கிறார்கள். அவர்கள் புலன்களின் நித்தியமான உடல்வடிவங்களாவர்[4].(9) பெண்களுக்காக ஆண்கள் அடையும் ஆசையின் விளைவாலும், உயிர் வித்தின் (செயல்பாட்டின்) காரணமாகவும் அவர்களில் இருந்து வாரிசுகள் உண்டாகின்றனர். ஒருவன் தன் உடலில் இருந்து பிறக்கும் புழுக்களைத் தங்களில் ஒருபகுதியாகக் கருதாமல் அவற்றைக் கைவிடுவதைப் போலவே, அவனது சுயமாகக் கருதப்படுபவர்களும், உண்மையில் அவ்வாறு அல்லாதவர்களுமான பிள்ளைகள் என்றழைக்கப்படும் அந்தப் புழுக்களையும் அவன் கைவிட வேண்டும்.(10)
[3] "இந்த உவமையின் சக்தி பின்வருவதில் இருக்கிறது: பிரகிருதியானது, க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவைக் கட்டி, பிறப்பெடுக்கும் கடமையில் அதைத் தள்ளுகிறது. ஆன்மாவானது, பிரகிருதியின் தொடர்பைத் தவிர்க்க முனைந்து, விடுதலையை {முக்தியை} நாட வேண்டும் என்பதைப் போலவே, மனிதர்கள் பெண்களைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து வட்டாரப் பேச்சுமொழிகளிலும் சம்ஸ்க்ருதத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, பொதுவாகப் பிரகிருதி, அல்லது பிரகிருதியின் குறியீடுகளாகவே பெண்கள் அழைக்கப்படுகின்றனர். இது பிரகிருதி மற்றும் புருஷன் குறித்த தத்துவக் கோட்பாட்டின் இயல்புக்கு மீறிய செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "இங்கே சொல்லப்படும் கிரியை Kriya என்பது மந்திர சக்தி அல்லது அதர்வணச் சடங்குகளின் உச்சவினையாகும். புலப்படாத எதிரிகளுக்கு அழிவைக் கொண்டுவரும் அதர்வணச் சடங்குகளைப் போலவே பெண்கள் பயங்கரமானவர்கள் என்று இங்கே சொல்லப்படுகிறது. ராஜசி அந்தர்ஹிதாம் Rajasi antarhitaah என்பது அவர்கள் அந்தக் குணத்திலேயே முற்றிலும் மறைந்தவர்களாகி முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள் என்ற பொருளைத் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வியர்வையின் (மற்றும் பிற மாசுகளின்) மூலமாக உடலில் இருந்து உயிரினங்கள் எழுவதைப் போலவே, முற்பிறவிச் செயல்களின் ஆதிக்கத்தில் அல்லது இயற்கையின் போக்கில் உயிர்வித்தில் {உயிர் நீரில்} இருந்தும் அவை {உயிரினங்கள் / பிள்ளைகள்} எழுகின்றன. எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், அவர்களிடம் ஒரு மதிப்பையும் உணரக்கூடாது[5].(11) ஆசை குணம் {ரஜோ குணம்} அந்த இருளையே {இருள் குணத்தையே} சார்ந்திருக்கிறது. மேலும் நற்குணமோ {சத்வ குணமோ} அந்த ஆசையையே {ஆசை குணத்தையே} சார்ந்திருக்கிறது. புலப்படாத இருளானது, ஞானத்தை மறைத்து, புத்தி மற்றும் நனவுநிலை {அஹங்காரம்} எனும் குறிப்பிடத்தக்க கூறுகளை உண்டாக்குகிறது[6].(12) புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களைக் கொண்ட அறிவே, உடல்கொண்ட ஆன்மாக்களின் வித்தாகச் சொல்லப்படுகிறது. மேலும், எது அத்தகைய ஞானத்தின் வித்தாக இருக்கிறதோ, அது ஜீவன் (அல்லது சித்-ஆன்மா) என்று அழைக்கப்படுகிறது[7]. செயல்கள், கால ஒழுங்கு ஆகியவற்றின் விளைவால் ஆன்மாவானது, பிறப்பையும், மீண்டும் மீண்டும் மறுபிறப்பெனும் சுழற்சியையும் அடைகிறது.(13) கனவில் ஆன்மாவானது, உடலைக் கொண்டிருப்பது போல், மனச் செயல்பாட்டின் மூலம் விளையாடிக் கொண்டிருப்பதைப் போல (முற்பிறவி) செயல்களைத் தங்கள் மூலமாகக் கொண்ட குணங்கள் மற்றும் மனச்சார்புகளின் விளைவாக, அஃது {ஆன்மா} ஒரு தாயின் கருவறையில் ஓர் உடலை அடைகிறது.(14) அஃது அங்கே இருக்கும்போது, முற்பிறவிச் செயல்களையே செயல்படும் காரணமாகக் கொண்டு விழிப்படையும் புலன்கள் அனைத்தும், பற்றுகளுடன் கூடிய மனத்தின் விளைவால் நனவுநிலையை {அஹங்காரத்தை} அடைகிறது[8].(15)
[5] "உடலில் இருந்து வெளிவரும் வியர்வை மற்றும் பிற மாசுக்களில் இருந்து ஒட்டுண்ணி புழுக்கள் உண்டாகின்றன. பிள்ளைகள் உயிர்வித்தில {உயிர்நீரில்} இருந்து உண்டாகின்றனர். முந்தைய வழக்கில் செயல்படும் சக்தியை ஸ்வபாவமே (இயற்கையே} தருகிறது. பிந்தைய வழக்கில், முற்பிறவிச் செயல்கள், மனச்சார்புகள் ஆகியவற்றின் அழியாத ஆதிக்கமே செயல்படும் சக்தியைத் தருகிறது. எனவே, ஒருவனுடைய வாரிசுகள், அவனது உடலில் உள்ள ஒட்டுண்ணி புழுக்களைப் போன்றவர்களே. இரண்டு வழக்கிலும் அலட்சியம், அல்லது கவனமின்மையையே ஞானம் போதிக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டதுதான் இப்போது மீண்டும் சொல்லப்படுகிறது. பிரவிருத்தி, அல்லது செயல்களுக்கான மனச்சார்புகளின் காரணமாக ரஜஸ் (ஆசை) குணமே இருக்கிறது. சத்வ குணம் (நற்குணம்) என்பது பிரம்மத்துக்கு வழிவகுக்கும் ஞானம், அல்லது உயர்ந்த உணர்வுகளாகும். இரண்டும் தமஸையே (இருள் குணத்தையே) சார்ந்திருக்கின்றன. சித், அல்லது ஜீவன் என்பது தூய ஞானமாகும். தமஸ், அல்லது அவ்யக்ததால் மூழ்கடிக்கப்படும் போது, வாழ்வின் நிலைகளாக நனவுநிலை மற்றும் புத்தி ஆகிவற்றைக் கொண்டு இவ்வுலகில் நாம் உணரும் வகையில் அது வாழ்வு எனும் ஆடையைப் போர்த்திக் கொள்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "சித், அல்லது ஆன்மா என்பது மொத்த அறிவாகும். அறியாமை மற்றும் இருளால் மறைக்கப்படும்போது அது புத்தி மற்றும் நனவுநிலையால் வெளிப்பட்டு ஒரு வடிவத்தை, அல்லது உடலை ஏற்கிறது. எனவே, இருளால் மறைக்கப்பட்ட ஞானம், அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவானது, சித், அல்லது ஆன்மா, அல்லது ஜீவன் உடலை ஏற்பதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே, அத்தகைய அறிவானது உடலின் வித்து என்றழைக்கப்படுகிறது. மேலும், அறியாமையால் மறைக்கப்படும் அறிவின் (அல்லது புத்தி மற்றும் நனவுநிலையின் குணங்களுடன் கூடிய அறிவின்) அடித்தளமாக (இரண்டாம் வெளிப்பாடான) தத்விஜம் சார்ந்திருப்பது, உண்மையில் பிறப்புக்கு முன்பிருந்த தூய அறிவு, அல்லது சித், அல்லது ஜீவன், அல்லது ஆன்மாவையே ஆகும். இஃது ஏற்கனவே பலமுறை சொல்லப்பட்ட அறிக்கையை மீண்டும் சொல்லும் மற்றொரு வடிவம் மட்டுமே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்[8] "ஆன்மாவானது, தாயின் கருவறையில் இருக்கும்போது, முற்பிறவி செயல்களை நினைத்துப் பார்க்கிறது, அந்தச் செயல்களின் செல்வாக்கு, புலன்களின் வளர்ச்சியையும், புதிய வாழ்வில் அதை வெளிக்காட்டப்போகும் பண்பையும் தீர்மானிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆன்மாவானது, ஒலி குறித்த முற்பிறவி எண்ணங்களின் விளைவால் விழிப்படைந்து, அத்தகைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிந்து, கேட்கும் உறுப்பைப் பெறுகிறது. அதே போலவே, வடிவங்களில் உள்ள பற்றின் மூலம், அதன் கண்கள் உண்டாகிறது, மணத்தில் உள்ள ஏக்கத்தின் மூலம், நுகரும் உறுப்பையும் அது பெறுகிறது.(16) தீண்டல் குறித்த எண்ணங்களின் மூலம் அது தோலை அடைகிறது. அதே வழியில், உடலைச் செயல்படச் செய்வதில் பங்காற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் ஆகிய ஐவகை மூச்சுகளும் {வாயுக்களும்} அதனால் அடையப்படுகிறது.(17) (முன்னர்ச் சொன்னதுபோல) முற்பிறவி செயல்களின் விளைவால் முழுதாக வளர்ந்த உறுப்புகள் அனைத்துடன் கூடிய உடலில் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தொடக்கத்திலும், நடுவிலும், முடிவிலும் உடல் மற்றும் மனத் துன்பத்துடன் கூடிய பிறப்பை எடுக்கிறது.(18) (கருவறையில்) உடலை ஏற்கிறது என்ற உண்மையிலிருந்தே கவலையும் எழுகிறது என்பது அறியப்பட வேண்டும். அது தன்னுணர்வை அதிகரிக்கச் செய்கிறது. இவற்றில் இருந்து (பிறப்புக்குக் காரணமான பற்றுகளைத்) துறப்பதன் மூலமே கவலைக்கு ஒரு முடிவு ஏற்படுகிறது. கவலையின் முடிவைக் குறித்து அறிந்தவன் விடுதலையை {முக்தியை} அடைவான்.(19) புலன்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகிய இரண்டும் ஆசை குணத்தை {ரஜோ குணத்தைச்} சார்ந்திருக்கிறது. ஞானம் கொண்ட மனிதன், சாத்திரங்களால் அமைக்கப்பட்ட கண்ணின் உதவியுடனும், தகுந்த ஆய்வுடனும் செயல்பட வேண்டும்[9].(20) அறிவுப் புலன்கள் {ஞானேந்திரியங்கள்} தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் ஈட்டினாலும், தாகமில்லாத {ஏக்கமில்லாத} மனிதனை நிறைவு செய்வதில் ஒருபோதும் வெல்வதில்லை. உடல்கொண்ட ஆன்மாவானது, அதன் புலன்களைப் பலவீனமடையச் செய்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறது" என்றார் {பீஷ்மர்}.(21)
[9] "ஏற்கனவே (இந்தப் பகுதியின் 9ம் சுலோகத்தில்) பெண்கள் புலன்களின் உடல்வடிவங்கள் என்றும், ரஜஸ் அல்லது ஆசை குணத்தின் அந்தர்ஹிதம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எனவே, புலன்கள் ரஜஸில் பிறந்தவை என்று இங்கே முடிவு செய்யப்படுகிறது. மேலும் ரஜஸின் அழிவால் அவையும் {புலன்களும்} அழிவடையும். எனவே, ரஜஸ், அல்லது ஆசை குணத்தை வெற்றிகொள்வதே இங்கு அவசியம். சாத்திர அறிவால் கூர்மையாக்கப்பட்ட பார்வை கொண்ட கண்ணின் துணையுடன் இது சாத்தியப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 213ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |