Brahmacharyya! | Shanti-Parva-Section-214 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 41)
பதிவின் சுருக்கம் : பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறை; பிரம்மச்சரியம் என்றால் என்ன? பிரம்மச்சரியமும் பெண்களும்; சுக்லம் பிரியும் முறை; பிறப்பறுக்கும் உயர்ந்த நிலை ஆகியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "சாத்திரக் கண் கொண்டு காணும்போது, (புலன்களை வெற்றிகொள்ளக்கூடிய) வழிமுறைகள் என்ன, என்பது குறித்து இப்போது நான் சொல்லப்போகிறேன். ஓ! மன்னா, அத்தகைய அறிவின் துணையுடனும், அதன் படியும் தன் ஒழுக்கத்தை அமைத்துக் கொள்வதன் மூலமும் ஒரு மனிதன் உயர்ந்த கதியை அடைவான்.(1) வாழும் உயிரினங்கள் அனைத்திலும் மனிதனே முதன்மையானவனாகச் சொல்லப்படுகிறான். மனிதர்களில் மறுபிறப்பாளர்களே முதன்மையானவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்; மறுபிறப்பாளர்களில், வேதங்களை அறிந்தோரே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகிறார்கள்.(2) இறுதியாகச் சொல்லப்படும் இவர்களே வாழும் உயிரினங்கள் அனைத்தின் ஆன்மாக்களாகக் கருதப்படுகிறார்கள். உண்மையில், வேதங்களை அறிந்த பிராமணர்கள், அனைத்தையும் கண்டவர்களாகவும், அனைத்தும் அறிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்கள் பிரம்மத்தை அறிந்த மனிதர்களாவர்.(3) வழிகாட்டியில்லாத பார்வையிழந்த மனிதன் ஒருவன், சாலைகளில் பல சிரமங்களுக்கு ஆளாவதைப் போலவே, அறிவற்ற மனிதனும் இவ்வுலகில் பல இடையூறுகளைச் சந்திப்பான். இதன் காரணமாகவே எஞ்சியோரைக் காட்டிலும் அறிவுடையோர் மேன்மையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(4) அறமீட்ட விரும்புவோர், சாத்திர விதிகளின்படியான பல்வேறு வகைச் சடங்குகளைச் செய்கிறார்கள். எனினும், அவர்கள் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்வதில்லை. அந்த நற்குணங்களைக் கொண்டு அவர்கள் ஈட்டுவது அனைத்தையும் குறித்து நான் இப்போது பேசப் போகிறேன்[1].(5)
[1] "இங்கே பேசுபவர், பிரவிருத்தி அல்லது செயல்களின் அறத்திற்கும், நிவிருத்தி அல்லது செயலைத் துறத்தலுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்ட விரும்புகிறார். முந்தையதை {பிரவிருத்தி அல்லது செயலறத்தைப்} பின்பற்றுவோரால் விடுதலையை {முக்தியை} அடைய முடியாது. அடுத்த வரியில் அவர்கள் ஈட்டுவது குறிப்பிட்ட நற்குணங்களை என்று சொல்லப்படுகிறது. எனினும், நிவிருத்தி அறத்தை {செயல்களில் துறவைப்} பின்பற்றுபவர்களும் அஃதை சமமாக ஈட்டவே செய்கின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இருவகை அறங்களை நோற்கும் அறவோரும், வாக்கு, உடல் மற்றும் மனத்தூய்மை, மன்னிக்கும் தன்மை, வாய்மை, நிலைமாறாவுறுதி {மனத்துணிவு}, புத்தி ஆகிய இந்த நற்குணங்களையே வெளிப்படுத்துகிறார்கள்.(6) எது பிரம்மச்சரியம் (விலகும் அறம், அல்லது யோகம்) என்றழைக்கப்படுகிறதோ, அது பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறையாகக் கருதப்படுகிறது. அதுவே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். அந்த அறத்தை நோற்பதாலேயே ஒருவன் உயர்ந்த கதியை (விடுதலையை {முக்தியை}) அடைகிறான்.(7) ஐந்து முக்கிய மூச்சுக்காற்றுகள், மனம், புத்தி, ஐந்து அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியங்கள்} மற்றும் ஐந்து செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஆகியவற்றுடன் கூடிய அனைத்துத் தொடர்புகளும் அற்ற நிலையே பிரம்மச்சரியமாகும். உள்ளுணர்வுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்ட காரணத்தாலேயே புலன்கள் அந்நிலையை {பிரம்மச்சரிய நிலையைக்} கொடுக்கின்றன. அஃது ஒரு சொல்லாகக் கேட்கப்படுகிறது.(8) புலப்படாத அதன் வடிவத்தைக் கருத்தால் மட்டுமே உணர முடியும். அது புலன்களுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விடுபட்ட ஒரு நிலையாகும். அந்தப் பாவமற்ற நிலையைப் புத்தியால் மட்டுமே அடைய முடியும்.(9) எவன் அதை முறையாகப் பயில்கிறானோ, அவன் பிரம்மத்தை அடைகிறான்; அதைப் பாதியே பயில்பவன், தேவர்களின் நிலையை அடைகிறான்; அதே வேளையில் அஃதை அலட்சியமாகப் பயில்பவன், பிராமணர்களுக்கு மத்தியில் பிறப்பையும், கல்வியையும் அடைந்து, உயர்ந்த நிலையை அடைகிறான்.(10)
பிரம்மச்சரியம் நோற்பது மிகக் கடினமானதாகும். அதன் {அஃதை ஒருவன் பயிலத்தக்க} வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. அதைச் செய்வதில் ஈடுபடும் மறுபிறப்பாளன் {பிராமணன்}, ஆசை குணம் {ரஜோ குணம்} தோன்றும்போதெல்லாம், அல்லது பலமிக்கதாகும்போதெல்லாம் அஃதை அடக்க வேண்டும்.(11) அந்நோன்பை நோற்பவர்கள் பெண்களுடன் பேசக் கூடாது. ஆடையற்ற பெண்களின் மீது அவன் ஒருபோதும் கண்களைச் செலுத்தக் கூடாது. அக்கறையற்ற சூழ்நிலைகளிலும்கூடப் பெண்களைப் பார்க்கும்போது, பலவீன மனம் கொண்ட மனிதர்கள் அனைவரையும் ஆசை {ரஜோ குணம்} நிறைகிறது.(12) (இந்நோன்பை நோற்கும்போது) ஒரு மனிதன், தன் இதயத்தில் பெண்ணுக்கான விருப்பத்தை உணர்ந்தால், அவன் (அதற்கு ஈடு செய்ய {பரிகாரமாக}) கிருச்சரம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்று, மூன்று நாட்களை நீரில் கடத்த வேண்டும்[2]. அந்த ஆசையானது கனவில் தோன்றினால், அவன் நீருக்குள் பாய்ந்து, அகமர்ஷணரின் மூன்று ரிக்குகள் மூன்று முறை மனத்தில் சொல்ல வேண்டும்[3].(13) இந்நோன்பை {பிரம்மச்சரிய நோன்பை} நோற்கும் ஞானியானவன், ஆசை {ரஜோ} குணத்தின் மூலம் தன் மனத்தில் உண்டான பாவங்கள் அனைத்தையும் ஞானத்துடன் கூடிய பரந்த மனத்துடன் எரிக்க வேண்டும்.(14) உடலின் கழிவை {மலத்தைச்} சுமந்து செல்லும் நாளமானது {குழாயானது [குணபம் என்ற பையானது]}, உடலுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதைப் போலவே, உடல் படைத்த ஆன்மாவும், அது பொதியப்பட்டிருக்கும் உடலின் நெருக்கமான தொடர்பிலேயே இருக்கிறது {இடைவெளியில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது}.(15)
[2] "கிருச்சரம் என்ற நோன்பானது குறிப்பிட்ட சில உபவாசங்களை {உண்ணா நோன்புகளைக்} கொண்டதாகும். குளத்திலோ, நீரோடையிலோ கழுத்தளவு நீரில் நின்று மூன்று நாட்களைக் கடத்த வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் ஒரு நாளைக்கு மூன்று முறை ஜலத்தில் மூழ்க வேண்டும் என்றிருக்கிறது.[3] "இந்த மூன்று ரிக்குகள் ரிதஞ்ச சத்யஞ்ச என்று தொடங்குவனவாகும். காலை மற்றும் மாலை வேண்டுதல்களை {துதிகளை} அறிந்த பிராமணர்கள் ஒவ்வொருவரும், இந்த மூன்று ரிக்குகளையும் நன்றாக அறிவார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தமனிப் பிணையத்தின் {நாடிக் கூட்டத்தின்} வழியாகக் கடந்து செல்லும் பல்வேறு வகையான சாறுகள் {ரசங்கள்}, மனிதர்களின் காற்று {வாதம்}, பித்தநீர் {பித்தம்}, சளி {கபம்}, குருதி {உதிரம்}, தோல், இறைச்சி, குடல்கள், எலும்புகள், மஜ்ஜை மற்றும் மொத்த உடலுக்கும் உணவூட்டுகின்றன.(16) பத்து முக்கிய நாளங்கள் {நாடிகள்} இருக்கின்றன என்பதை அறிவாயாக. இவை ஐம்புலன்களின் செயல்பாட்டுக்கும் உதவி செய்கின்றன. இந்தப் பத்தில் {பத்து நாளங்களில்} இருந்து நுண்ணிய வடிவிலான ஆயிரக்கணக்கான பிற நாளங்கள் {நாடிகள்} கிளைகளாகப் பிரிந்து செல்கின்றன.(17) உரிய பருவகாலத்தில் பெருங்கடலை நிறைக்கும் ஆறுகளைப் போலவே, சாறுகளைக் கொண்ட இந்த நாளங்கள் அனைத்தும் உடலுக்கு உணவூட்டுகின்றன.(18) மனோவஹம் என்ற பெயரில் இதயத்துக்குச் செல்லும் ஒரு நாளமிருக்கிறது. மனித உடலின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஆசையில் பிறக்கும் உயிர் வித்தை அது திரட்டுகிறது.(19) முக்கியமான அந்தவொன்றில் இருந்து, கிளைகளாகப் பிரிந்து செல்லும் எண்ணற்ற நாளங்கள் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் விரிந்தபடியே வெப்பமுன் பூதத்தைச் சுமந்து சென்று, பார்வை (உள்ளிட்ட பிற) புலனுணர்வுகளுக்குக் காரணமாக அமைகின்றன.(20)
பாலில் மறைந்திருக்கும் நெய்யானது மத்தால் கடைந்து எடுக்கப்படுவதைப் போலவே, (பெண்களைப் பார்ப்பது, அல்லது அவர்களைக் குறித்து எண்ணுவதன் மூலம்) மனத்தில் உண்டாகும் ஆசைகளும், உடலுக்குள் கிடக்கும் உயிர் வித்துகளை {சுக்லத்தை} ஒன்றாகத் திரட்டுகின்றன.(21) நமது கனவுகளுக்கு மத்தியிலும், கற்பனையில் பிறக்கும் ஆசையானது {ரஜோ குணமானது} மனத்தைத் தாக்கி, மனோவஹம் என்று ஏற்கனவே பெயரிடப்பட்ட அந்த நாளத்தின் விளைவால், ஆசையில் பிறக்கும் உயிர்வித்தை {சுக்லத்தை} வெளியேற்றுகிறது.(22) மகத்தானவரும், தெய்வீகமானவருமான அத்ரி முனிவர், உயிர் வித்தின் {சுக்கிலத்தின்} உற்பத்தி குறித்த காரியத்தை நன்கறிந்தவராக இருந்தார். உணவால் பெறப்படும் சாறுகள் {ரஸங்கள்}, மனோவஹம் என்றழைக்கப்பட்ட நாளம் {நாடி}, கற்பனையில் பிறக்கும் ஆசை ஆகிய இம்மூன்றும் இந்திரனைத் தலைமையாகக் கொண்ட உயிர்வித்தை {சுக்கிலத்தைத்} தோற்றுவிக்கும் காரணங்களாக இருக்கின்றன. எனவேதான் இந்தத் திரவத்தை வெளியேற்ற உதவும் ஆசையானது, இந்திரியம் என்றழைக்கப்படுகிறது.(23) உயிர்வித்தின் போக்கே, சாதிக் கலப்பு (என்றழைக்கப்படும் பாவகர நிலைக்குக்) காரணம் என்பதை அறிந்த மனிதர்கள், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாவர்[4]. அவர்களது பாவங்கள் எரிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது, அவர்கள் ஒருபோதும் மறுபிறப்புக்கு ஆளாவதில்லை.(24) தன் உடலைத் தாங்கிக் கொள்ளும் நோக்கத்திற்காக மட்டுமே செயலில் ஈடுபடுபவன், மனத்தின் துணையுடன் (நற்குணம் {சத்வம்}, ஆசை குணம் {ரஜஸ்}, இருள் குணம் {தமஸ்} ஆகிய மூன்று) குணங்களைச் சீரான நிலைக்குக் குறைத்து, தன் இறுதிக் கணங்களில் மனோவஹம் என்றழைக்கப்படும் நாளத்திற்கு உயிர்மூச்சுகளைக் கொண்டுவந்து, மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்பிக்கிறான்[5].(25)
[4] இது வர்ணக் கலப்பு என்ற பொருளில் சொல்லப்படுகிறதா என்பது தெரியவில்லை. "மூலத்தில் வர்ணஸங்கர என்ற சொல் இல்லை ’பூதஸங்கரகாரிகாம்’, அஃதாவது, உயிர்க்கலப்புக்குக் காரணமானது என்றே உள்ளது. கங்குலி அதை வர்ணக்கலப்பு என்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மேலும், பாவகரமான என்ற சொல் மூலத்தில் இல்லை. அதுவும் இங்கு வலிந்து சேர்க்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. மூலத்திலும் சுக்ர என்று தான் உள்ளது. அது சுக்கிலத்தைக் குறிக்கிறது. (தமிழ் இலக்கணத்திலும் இது போல சொல் உருவங்களில் மாறுபாடு உண்டு) - ஜடாயு விளக்கம். கும்கோணம் பதிப்பில், "சுக்லமானது (வேறு இடத்திற்குச் செல்லுவதே பிராணிகளின் ஜாதிஸங்கரத்திற்குக் காரணம் என்று தெரிந்து கொண்டவர்கள்" என்றிருக்கிறது.
[5] கும்பகோணம் பதிப்பில், "சரீரம் நடைபெற வேண்டியதற்குரிய கர்மத்தை மட்டில் செய்கிறவனும் (யோகசக்தியுள்ள) மனத்தாலேயே முக்குணங்களும் ஸமமாயிருக்கும் நிலைமைக்கு வரும்படி செய்து முடிவுக்காலத்தில் பிராணன்களை மனோவஹ நாடியில் செல்லும்படி செய்கிறவனுமாயிருப்பவன் முக்தி அடைகிறான்" என்றிருக்கிறது.
மனமானது நிச்சயம் அறிவை ஈட்டும். மனமே அனைத்துப் பொருட்களின் வடிவத்தை ஏற்கிறது. உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரின் மனங்களும், தியானத்தின் மூலம் வெற்றியை அடைந்து, ஆசையில் இருந்து விடுபட்டு, நித்தியமானதாகவும், ஒளிபொருந்தியதாகவும் ஆகின்றன.(26) எனவே, (மனமாக இருக்கும்) மனத்தை அழிப்பதற்காக ஒருவன் பாவமற்ற செயல்களை மட்டுமே செய்து, ஆசை மற்றும் இருள் குணங்களில் {ரஜோ மற்றும் தமோ குணங்களில்} இருந்து விடுபெற்றால், அவன் நிச்சயம் மிக உயர்ந்த கதியை அடைவான்.(27) (சாதாரணமாக) இளமையில் அடையப்படும் ஞானமானது முதுமையில் பலவீனமடைகிறது. எனினும், கனிந்த புத்தியைக் கொண்ட ஒரு மனிதன், முற்பிறவி மங்கல விளைவுகளின் மூலம் தன் ஆசைகளை அழிப்பதில் வெற்றி அடைகிறான்.(28) அத்தகைய மனிதன், இடையூறுகள் நிறைந்த ஒரு பாதையைக் கடக்கும் பயணி, தான் காணும் தடைகள் அனைத்தையும் மீறிச் செல்வதைப் போலவே, உடல்கட்டுகள் மற்றும் புலன்களை விஞ்சுவதன் மூலம், (விடுதலையெனும் {முக்தியெனும்}) அமுதத்தைச் சுவைப்பதில் வெல்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(29)
சாந்திபர்வம் பகுதி – 214ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |