Resoluteness! | Shanti-Parva-Section-215 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 42)
பதிவின் சுருக்கம் : அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் மனப்பயிற்சி; அறிவை நோக்கிச் செலுத்தப்பட வேண்டிய மனம்; புலன் கட்டுப்பாட்டில் உறுதி; வைராக்கியத்தின் மூலம் அடையும் பிரம்மநிலை ஆகியவற்றைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "வாழும் உயிரினங்கள், எப்போதும் தீமை நிறைந்தவையான புலன்நுகர் பொருட்களில் பற்றுடன் இருப்பதால் ஆதரவற்றவையாகின்றன. எனினும், அவற்றில் பற்று கொள்ளாத உயர் ஆன்ம மனிதர்கள், உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(1) நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வுலகமானது பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம், நோய், கவலைகள் ஆகிய தீமைகள் நிறைந்தது என்பதைக் கண்டு, விடுதலையை {முக்தியை} அடைய முயல வேண்டும்.(2) அவன் பேச்சு, எண்ணம், உடல் ஆகியவற்றில் தூய்மையுள்ளவனாக; செருக்கில் இருந்து விடுபட்டவனாக இருக்க வேண்டும். அமைதிமிக்க ஆன்மாவையும், அறிவையும் கொண்ட அவன், பிச்சையெடுக்கும் வாழ்வை நோற்று, உலகப் பொருட்கள் எதனிலும் பற்றுக் கொள்ளாமல் மகிழ்ச்சியைப் பின்தொடர வேண்டும்.(3) மேலும், உயிரினங்கள் மீது கொண்ட கருணையின் விளைவால், பற்றானது ஒருவனது மனத்தைப் பீடிக்கிறதென்றால், அவன் இந்த அண்டமே செயல்களின் விளைவெனக் கருதி, அந்தக் கருணையையும் புறக்கணிக்க வேண்டும்[1].(4) என்னென்ன நற்செயல்கள் செய்யப்பட்டாலும், அல்லது பாவங்கள் இழைக்கப்பட்டாலும், அதைச் செய்பவன், அதனதன் விளைவுகளைச் சுவைக்கிறான். எனவே, ஒருவன் வாக்காலும், எண்ணத்தாலும், செயலாலும் நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.(5)
[1] "பரதன் ஒரு சிறு மானிடம் கொண்டதைப் போல, சில வேளைகளில் கருணையே அதீதப் பற்றுக்கு வழிவகுக்கிறது. ஆன்மா ஏற்கும் வாழ்வின் பண்பைச் செய்லகளே தீர்மானிக்கின்றன என்பதால், இந்த அண்டம் செயல்களின் விளைவாகவே இருக்கிறது. பரதனைப் பொறுத்தவரையில், முற்பிறவியில் தன் எண்ணங்களை ஒரு மானில் குவித்து வைத்திருந்ததன் விளைவால், அடுத்தப் பிறவியில் அவன் மானாகப் பிறந்தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(பிறருக்கு) தீங்கிழைப்பதில் இருந்து விலகல், பேச்சில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, கவனம் ஆகியவற்றைப் பயில்பவன் மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான்.(6) எனவே, தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்துவான்.(7) எந்த மனிதன் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அறங்களைப் பயில்வதை உயர்ந்த கடமையாகவும், அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாக்குவதாகவும் கருதுகிறானோ அவன் உயர்ந்த அறிவை அடைந்தவனாக, மகிழ்ச்சியை அடைவதில் வெல்கிறான். எனவே (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) தன் நுண்ணறிவை {புத்தியைப்} பயன்படுத்தும் ஒருவன், தன் மனத்திற்குப் பயிற்சி அளித்து, அனைத்து உயிரினங்களிடமும் அமைதியை ஏற்படுத்திக் கொள்வதில் அதை {மனத்தை} நிலைநிறுத்த வேண்டும்.(8) ஒருவன் பிறருக்குத் தீங்கிழைக்க ஒருபோதும் நினைக்கக்கூடாது. ஒருவன், தன் சக்திக்கு அப்பாற்பட்ட எதனிலும் பேராசை கொள்ளக்கூடாது. இல்லாத பொருட்களை நோக்கி அவன் தன் எண்ணங்களைத் திருப்பக்கூடாது. மறுபுறம், அவன், நிச்சயம் வெல்லத்தக்க தொடர் முயற்சியுடன் தன் மனத்தை அறிவை நோக்கிச் செலுத்த வேண்டும்[2].(9)
[2] "ஒருவன் சாதாரண மனிதனாக இருந்தால் நாடுகள் மற்றும் அரியணைகளின் மேல் பேராசை கொள்ளக் கூடாது. இறந்து போன, அல்லது பிறக்காத மகன்கள், மணக்காத மனைவியர் போன்ற இல்லாத பொருட்களில் ஒருவன் தன் எண்ணங்களைச் செலுத்தக் கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஸ்ருதிகளின் தீர்மானங்கள் மற்றும் வெற்றியை அடைய கணக்கிடப்பட்ட தொடர் முயற்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் அந்த அறிவும் நிச்சயம் பாயும். நற்சொற்களைச் சொல்ல, அல்லது கசடுகள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்த ஓர் அறத்தைப் பயில விரும்பும் ஒருவன்,(10) எந்த வன்மமோ, நிந்தனையோ இல்லாத உண்மையை மட்டுமே பேச வேண்டும். நல்ல இதயத்தைக் கொண்ட ஒருவன், நேர்மையின்மையற்றவையும் {நேர்மையானவற்றையும்}, கடுமையற்றவையும் {மென்மையானவற்றையும்}, கொடூரமற்றவையும் {அன்பானவற்றையும்}, தீமையற்றவையும் {நல்லவற்றையும்}, வம்பளக்கும் இயல்பற்றவையுமான {நல்லியல்பைக் கொண்டவையுமான} வார்த்தைகளையே பேச வேண்டும். இந்த அண்டமானது பேச்சிலேயே கட்டப்பட்டிருக்கிறது. ஒருவன், (உலகப் பொருட்கள் அனைத்திலும்) துறவைக் கொண்டால்,(11,12) பணிவு நிறைந்த மனத்துடனும், தூய்மையடைந்த புத்தியுடனும், தன் சொந்த தீச்செயல்களை அறிக்கையிடவேண்டும்[3]. செயல்களில் ஈடுபடுபவன், ஆசை {ரஜோ} குணத்துடன் கூடிய மனச் சார்புகளால் தூண்டப்பட்டு,(13) இவ்வுலகில் துன்பத்தை அடைந்து, இறுதியாக நரகத்தில் வீழ்கிறான். எனவே அவன், உடல், வாக்கு மற்றும் மனம் ஆகியவற்றில் தற்கட்டுப்பாட்டைப் பயில வேண்டும்.(14) உலகச் சுமைகளைச் சுமக்கும் அறியாமை கொண்டோர், (மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லப்பட்ட மந்தையில் இருந்து தனிமைப்பட்ட) ஆட்டைத் தங்கள் கொள்ளைப் பொருளாகத் திருடிச் சுமந்து செல்லும் கள்வர்களைப் போன்றவர்களாவர். கள்வர்கள், தங்களுக்குச் சாதகமற்றவையாக இருக்கும் சாலைகளில் (மன்னனின் கண்காணிப்பில் அவை உள்ளதால்) எப்போதும் மிகக் கவனமாக இருப்பார்கள்[4].(15)
[3] "இம்மையும், மறுமையும் சேர்ந்ததே சம்சாரம் Samsaara என்று உரையாசிரியர் விளக்குகிறார். என்னவெல்லாம் பேசப்படுகின்றனவோ, அவை ஒருபோதும் அழியாமல், பேசுபவன் மற்றும் கேட்பவனை நிரந்தரமாகப் பாதிக்கிறது. ஒன்றைப் பேசுபவன், உதடுகளில் இருந்து உதிரும் வார்த்தைகளில் உண்டாகும் நன்மை மற்றும் தீய விளைவுகளால் ஒரு பிறவியில் மட்டுமேயல்லாமல், முடிவில்லாத பிறவிப் போக்கில் பாதிக்கப்படுகிறான். இஃதுவே, உலகம் பேச்சில் கட்டப்பட்டிருக்கிறது என்ற பொருளில் இங்கே சொல்லப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிடப்படும் தன்னறிக்கையானது, அந்தச் செயல்களின் விளைவுகளை அழித்து, அவை மீண்டும் தோன்றாமல் தடுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "கொள்ளைப் பொருளைச் சுமையாகக் கொண்ட கள்வர்கள் பிடிபடும் ஆபத்தில் எப்போதும் இருக்கிறார்கள். அதைப் போலவே, புத்தியில்லாத மனிதனும், அழியத்தக்க வாழ்வின் சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில் அந்தக் கள்வர்கள் தங்கள் பாதுகாப்பை விரும்பி, அவர்களது கொள்ளைப் பொருளை வீசிவிடுவதைப் போலவே, ஒரு மனிதன், இன்ப நிலையை அடையவிரும்பினால், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களுக்குரிய செயல்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.(16) உலகப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும், ஆசையற்றவனும், தனிமைவாழ்வில் நிறுவுடையவனும், சொற்ப உணவை உண்பவனும், தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளவனும்,(17) (தான் அடைந்த) ஞானத்தால் தன் துன்பங்கள் அனைத்தையும் எரித்தவனும், யோக ஒழுக்கத்தின் விவரங்கள் அனைத்தையும் பயில்வதில் இன்புற்றிருப்பவனும், தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், தன் மனத்தை அதற்குள்ளேயே ஈர்த்ததன் விளைவால் பிரம்மத்தை, அல்லது விடுதலையை {முக்தியை} அடைவதில் நிச்சயம் வெல்வான்.(18) தூய்மையடைந்த ஆன்மாவையும், பொறுமையையும் கொண்ட ஒருவன், தன் புத்தியை நிச்சயம் கட்டுப்படுத்துவான். (இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட) புத்தியுடன் கூடிய ஒருவன், அடுத்ததாகத் தன் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதன் பிறகு தன் மனத்தைக் கொண்டு புலன்நுகர் பொருட்களை வெல்ல வேண்டும்.(19) இவ்வாறு மனமானது கட்டுப்படுத்தப்பட்டு, புலன்கள் அனைத்தும் வெல்லப்பட்டதும், அந்தப் புலன்கள் ஒளிர்ந்து மகிழ்ச்சியாகப் பிரம்மத்திற்குள் நுழைகின்றன.(20)
ஒருவனுடைய புலன்கள் மனத்திற்குள் ஈர்க்கப்பட்டதும், அதன் விளைவாக, பிரம்மமே அதற்குள் {மனத்திற்குள்} வெளிப்படுகிறது. உண்மையில் புலன்கள் அழிக்கப்பட்டதும், ஆன்மாவானது தூய இருப்பெனும் குணத்தை மீண்டும் அடைந்து, பிரம்மமாகவே மீண்டும் மாற்றப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.(21) ஒருவன் தனது யோக சக்தியை ஒருபோதும் வெளிப்படுத்தக்கூடாது. மறுபுறம் அவன், யோக விதிகளைப் பயில்வதன் மூலம் எப்போதும் தன் புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். உண்மையில், யோக விதிகளைப் பயிலும் ஒருவன், எந்தச் செயல்களின் மூலம் தன் ஒழுக்கமும், மனநிலையும் தூய்மையடையுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும்.(22) அவன் (தனது யோக சக்திகளைத் தனது வாழ்வாதாரமாகக் கொள்ளாமல்), பிச்சையாக அடையப்படும் அவல், சுண்டல், பிண்ணாக்கு, கீரைகள், {காய்கள்}, பிட்டு {யாவகம்}, {வறுத்த பருப்பின்} மாவு, கனிகள் மற்றும் கிழங்கு ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும்.(23) காலம் மற்றும் இடத்தின் பண்புகளைக் கருத்தில் கொண்டும், உரிய ஆய்வுக்குப் பிறகும் ஒருவன் நோன்புகள், மற்றும் உபவாசங்களின் விதிகளைத் தன் விருப்பத்தின்படி நோற்க வேண்டும்.(24) நோற்றல் தொடங்கிய பிறகு அஃதை அவன் நிறுத்தக்கூடாது. மெதுவாக நெருப்பை உண்டாக்குபவனைப் போல அவன், அறிவால் தூண்டப்பட்ட ஒரு செயலைப் படிப்படியாகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால், அவனுக்குள் உள்ள பிரம்மமானது சூரியனைப் போலப் படிப்படியாக ஒளிரத் தொடங்குகிறது.(25)
அறிவையே தன் சார்பு நிலமாகக் கொண்ட அறியாமையானது, (விழிப்பு, கனவு மற்றும் கனவற்ற ஆழ்ந்த உறக்கம் ஆகிய) மூன்று நிலைகளின் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. புத்தியைப் பின்பற்றிச் செல்லும் அறிவானது {ஞானமானது}, அறியாமையால் தாக்கப்படுகிறது.(26) தீய இதயம் படைத்த மனிதர்கள், உண்மையில் ஆன்ம அறிவானது, அம்மூன்று நிலைகளையும் கடந்ததாக இருந்தாலும், அவற்றுடன் ஒன்று கலந்திருக்கிறது என நினைத்துக் கொள்வதன் விளைவால் அவர்கள் அஃதை {ஆன்ம அறிவை} அடையத் தவறுகிறார்கள். எனினும் ஒருவன், அந்த மூன்று நிலைகளுடன் கலப்பு மற்றும் அவற்றில் இருந்து பிரிவு ஆகிய இரண்டு எல்லைகள் வெளிப்பட்டு, அவற்றை உணர்வதில் வெல்லும்போது, அவன் பற்றை இழந்து, விடுதலையை {முக்தியை} அடைகிறான்.(27) அத்தகைய உணர்வு அடையப்பட்ட பிறகு, வயதின் எல்லைகளை விஞ்சும் அவன், முதுமை, மரணம் ஆகியவற்றின் விளைவுகளில் இருந்து மேன்மையடைந்து, நித்தியமானதும், மரணமற்றதும், மாறும் இயல்பற்றதும், சிதைவற்றதுமான பிரம்மத்தை அடைகிறான்" என்றார் {பீஷ்மர்}.(28)
சாந்திபர்வம் பகுதி – 215ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |