The knowledge of Brahma! | Shanti-Parva-Section-216 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 43)
பதிவின் சுருக்கம் : கனவுகள் தோன்றும்போது உடலின் நிலை; கனவுகள் தோன்றும் காரணம்; மனமும் கனவும்; மனப்பதிவுகளுடைய குணத்தின் மூலம் மனம் ஏற்படுத்தும் தோற்றங்கள்; கனவுகளின் கதவாகச் செயல்படும் உடல்; ஆன்மாவில் நுழையும் மனம் விழிப்புடன் இருப்பது; தவத்தின் வல்லமை; பிரம்ம ஞானம் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பாவமற்ற பிரம்மச்சரியத்தையே எப்போதும் பயில விரும்புபவனும், கனவுகளின் தொடர்புடைய களங்களின் மனப்பதிவுகளைக் கொண்டவனுமான ஒரு யோகி, தன் முழு இதயத்துடன் உறக்கத்தைக் கைவிட முனைய வேண்டும்.(1) கனவுகளில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களால் பாதிப்படைந்த உடல் படைத்த ஆன்மாவானது, மற்றொரு உடலைக் கொள்வது போல் தோன்றுவதுடன், ஆசையின் ஆதிக்கத்தில் அசைந்து செயல்படுகிறது.(2) ஞானம் பெறுதல், தொடர்ந்த சிந்தனை, தொகுத்துரைத்தல் ஆகியவற்றைச் செய்வதன் விளைவால் யோகியானவன், ஞானத்திற்குத் தன்னை அர்ப்பணித்துத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கலாம்.(3) இக்காரியத்தில், உடல்படைத்த உயிரினமானது {ஜீவாத்மாவானது}, எந்தச் சூழ்நிலையில், எந்த நோக்கங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதாக நினைக்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில், செயல்முடக்கப்பட்ட புலன்களைக் கொண்ட உடல்படைத்த உயிரினமானது, அறிவுப்புலன்கள் மற்றும் செயற்புலன்களுடன் {ஞான மற்றும் கர்மேந்திரியங்களுடன்} கூடிய உடலைத் தான் கொண்டிருப்பதாகவே கருதுகிறது.(4) இங்கே எழுப்பப்பட்ட கேள்வியைப் பொறுத்தவரையில், ஹரி என்ற பெயரைக் கொண்ட யோகத்தின் தலைவனே, அஃது எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் புரிந்தவன் எனச் சொல்லப்படுகிறது. ஹரியால் சொல்லப்பட்ட விளக்கம் சரியானதாகவும், அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருப்பதாகப் பெரும் முனிவர்கள் சொல்கிறார்கள்.(5)
களைப்படைந்த புலன்களின் விளைவாலேயே உயிரினங்கள் அனைத்தும் கனவுகளைக் காண்கின்றன என்று கல்விமான்கள் சொல்கிறார்கள். (புலன்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும்) மனமானது, ஒருபோதும் மறைவதில்லை (அல்லது செயல்படாமல் இருப்பதில்லை), எனவே கனவுகள் எழுகின்றன. கனவுக்கான குறிப்பிட்ட காரணம் என்று இதையே அனைவரும் சொல்கிறார்கள்.(6) விழிப்புநிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடைய கற்பனைகள், மனத்தின் படைப்பு சக்தியால் மட்டுமே உண்டாவதைப் போல, கனவில் தோன்றும் மனப்பதிவுகளும் மனம் தொடர்புடையனவாக மட்டுமே இருக்கின்றன.(7) ஆசை மற்றும் பற்றுடன் கூடிய ஒரு மனிதன், எண்ணற்ற முற்பிறவிகளின் மனப்பதிவுகளின் அடிப்படையில் (கனவுகளில்) அந்தக் கற்பனைகளை அடைகிறான். ஒரே ஒரு முறை மனத்தில் பதிந்த எதுவும் ஒருபோதும் தொலைந்துபோவதில்லை, மேலும், அந்த மனப்பதிவுகள் அனைத்தையும் அறிந்த ஆன்மாவானது, இருண்மையில் {தெளிவற்ற நிலையில்} இருந்து அவற்றை முன்னே கொண்டு வருகிறது[1].(8) நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய மூன்று குணங்களில் முற்பிறவி செயல்களின் ஆதிக்கத்தால் எது கொண்டு வரப்படுகிறதோ, இவற்றில் {இந்த மூன்று குணங்களில்} எதனால் எவ்வழியிலாவது மனம் பாதிப்படைந்திருக்கிறதோ, அதன்படியே (நுட்பமான வடிவில் உள்ள) பூதங்களாக {பொருட்களாக} (தோற்றங்களின் வடிவில்) அவை {மனப்பதிவுகள்} வெளிப்படுகின்றன[2].(9) இவ்வாறு தோற்றங்கள் உண்டான பிறகு, முற்பிறவி செயல்களால் கொண்டுவரப்படும் சத்வம், ரஜஸ், அல்லது தமஸ் என்ற அந்தக் குறிப்பிட்ட குணம் மனத்தில் எழுந்து இன்பம், அல்லது துன்பம் என்ற விளைவை விளைவிக்கிறது.(10)
[1] "இங்கே சொல்லப்பட்டுள்ளதைவிடத் தெளிவாகச் சொல்வதற்காக 8ம் சுலோகத்தின் முதல்வரியை இன்னும் சற்றே விரித்துக் கூறுகிறேன். கனவுகளில் தோன்றும் மனப்பதிவுகள் அனைத்தும், இந்தப் பிறவியின் மூல் அடையப்பட்ட மனப்பதிவுகளாகவோ, கடந்து சென்ற எண்ணற்ற பிறவிகளில் மனம் அடைந்த பதிவுகளாகவோ இருக்கின்றன. மேலும் நினைவானது அவற்றைத் தக்க வைத்துக் கொள்ளவில்லையெனினும் ஆன்மாவானது அந்த மனப்பதிவுகள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிறது. அந்த மனப்பதிவுகள் கனவுகளில் தோன்றுவதற்கு, இருண்மையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவற்றை வெளிக்கொணரும் ஆன்மாவின் செயல்பாடே காரணமாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "சத்வம், அல்லது ரஜஸ், அல்லது தமஸ் ஆகிய குணங்களில் ஏதோவொரு குறிப்பிட்ட குணமானது, இப்பிறவி அல்லது முற்பிறவிகளின் செயல்கள் ஆதிக்கத்தின் மூலம் மனத்தில் கொண்டவரப்படுகிறது. அந்தக் குணமானது, நிச்சயமாக உடனே மனத்தைப் பாதிக்கிறது. அதன் விளைவாக, நுட்பமான வடிவங்களில் உள்ள பூதங்கள், பாதிப்பை ஏற்படுத்தும் அந்தக் குணத்திற்குத் தொடர்புடைய வகையிலும், மனத்தைப் பாதிக்கும் வகையிலும் தோற்றங்களை வெளிப்படுத்துகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அறியாமையின் மூலமும், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் நிறைந்த மனச் சார்புகளின் விளைவாலும், காற்று {வாதம்}, பித்தம், சளி {கபம்} ஆகியவற்றைத் தங்கள் முக்கியக் காரணங்களாகக் கொண்ட அந்தத் தோற்றங்களை எளிதாக விலக்கிவிட முடியாது என்று சொல்லப்படுகிறது[3].(11) (விழித்திருக்கும் நிலையில்) ஒரு மனிதன், நுண்ணறிவின் நிலையிலுள்ள புலன்களின் மூலம் தன் மனத்தில் காணும் பொருட்கள் யாவும், தெளிவற்ற நிலையில் அந்தப் புலன்கள் செயல்படும்போது, {அதே பொருட்கள்} மனத்தால் கனவுகளில் உண்டாக்கப்படுகின்றன.(12) மனமானது அனைத்துப் பொருட்களிலும் தடையற்ற நிலையிலேயே இருக்கிறது. இஃது ஆன்மாவின் இயல்பினால் விளைவதாகும். ஆன்மாவானது புரிந்து கொள்ளப்பட்ட வேண்டும். பூதங்கள் அனைத்தும், அவை தொகுக்கும் பொருட்களும் ஆன்மாவிலேயே இருக்கின்றன[4].(13) கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கம் (ஸுஸுப்தி) என்றழைக்கப்படும் நிலையில், கனவுகளின் கதவான வெளிப்படையான மனித உடலானது, மனத்திற்குள் மறைகிறது. உடலுக்குள் வசிக்கும் மனமானது, புலப்படாதிருப்பதும், இருக்கும் மற்றும் இல்லாத பொருட்கள் அனைத்தும் சார்ந்திருப்பதுமான ஆன்மாவுக்குள் நுழைந்து, குறிப்பிட்ட வகை உணர்வுடன் விழிப்புநிலையில் உள்ள சாட்சியாக அது {மனம்} மாறுகிறது. இவ்வாறு, அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் தூய நனவுநிலையில் வசிக்கும் அது, நனவுநிலை மற்றும் அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விஞ்சியிருப்பதாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது[5].(14) எந்த யோகி, ஆசையின் விளைவால் (ஞானம், துறவு முதலிய) தெய்வீகக் குணங்களில் பேராசை கொள்கிறானோ, அவன், தான் ஆசைப்படும் பொருளுக்குச் சமமானதாகத் தூய மனத்தைக் கருத வேண்டும் அனைத்துப் பொருட்களும் தூய மனம், அல்லது ஆன்மாவையே சார்ந்திருக்கின்றன[6].(15)
[3] "முற்பிறவி செயல்களில் உண்டான ஆசைகளில் இருந்து எழுந்தவையானதால், யோகத்தைவிடக் குறைந்த எதனாலும் அவற்றை விலக்கவோ, அழிக்கவோ முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "அக மற்றும் புற உலகங்கள் ஆகிய இரண்டும் நனவுநிலையின் மூலமே எழுகின்றன, நனவுநிலையோ ஆன்மாவைப் பாதிக்கும் மாயையிலிருந்து எழுகிறது. மனம் என்று அழைக்கப்படும் ஒன்று ஆன்மாவின் ஓர் உற்பத்திப் பொருளே ஆகும். முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டது போல அக மற்றும் புற உலகங்கள் மனத்தின் விளைவுகள் மட்டுமே. எனவே மனமானது அனைத்துப் பொருட்களிலும் இருக்கிறது. ஆன்மாவானது அனைத்துப் பொருள்களிலும் இருக்கிறது என்பதன் பொருள் என்னவென்றால், ஆன்மாவானது அனைத்தையும் அறிந்ததாகும், ஆன்மாவை அறிவதில் வெல்பவன் அனைத்தையும் அறிவதில் வெல்வான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "முற்பிறவிச் செயல்ககளின் விளைவாக இருப்பதாலும், முற்பிறவிச் செயல்களின் மூலம் ஆன்மாவானது ஓர் உடலுக்குள் அடைக்கப்படும் வரை கனவுகள் தோன்றாது என்பதாலும் உடலானது கனவுகளின் கதவென்று அழைக்கப்படுகிறது. உடல் மனத்திற்குள் மறைவது என்பதன் பொருள் என்னவென்றால், கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் மனமானது உடலை உணர்வதில்லை. இவ்வாறு மனத்தில் உடல் தொலைந்து போகும்போது, மனமானது (தன்னுள் தொலைந்து போன உடலுடன்) ஆன்மாவிற்குள் நுழைகிறது, அல்லது அதற்குள் ஈர்க்கப்படுகிறது. நிதர்சன் Nidarcanam என்பது நிதர்சனம் சாக்ஷிரூபம் Nidarcanam Sakshirupam என்று விளக்கப்படுகிறது. இந்தச் சுலோகத்தின் பொருள் என்னவென்றால், கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தில் புலன்கள் மனத்திற்குள் ஈர்க்கப்படுகின்றன; மனமானது ஆன்மாவுக்குள் ஈர்க்கப்படுகிறது. அப்போது ஆன்மா மட்டுமே அந்தத் தூய மூல நிலையில் வாழ்கிறது. அந்த நேரத்தில் அதில் இருந்து எழும் நனவுநிலை மற்றும் அனைத்துப் பொருட்களும் மறைந்துபோகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "அதாவது, மனம் தூய்மையடைந்தால், அவன் அனைத்தும் அறிந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும் ஆகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தவங்களில் ஈடுபடும் ஒருவன் இந்த விளைவையே அடைகிறான். எனினும், இருள் அல்லது அறியாமையைக் கடந்த யோகியானவன், மேம்பட்ட ஒளியுடன் கூடியவனாகிறான். இருள் அல்லது அறியாமை கடக்கப்படும்போது உடல் படைத்த ஆன்மாவானது, அண்டத்தின் காரணமாக இருக்கும் பரப்ரம்மம் ஆகிறது.(16) தேவர்கள், தவங்களையும், வேத சடங்குகளையும் கொண்டிருக்கின்றனர். முந்தையதை அழிக்கும் இருளானது {செருக்கு, கொடூரம் முதலியன), அசுரர்களால் பின்பற்றப்படுகிறது. அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட பிரம்மமானது, தேவர்களாலோ, அசுரரர்களாலோ அடைவதற்குக் கடினமானதாக இருக்கிறது.(17) நல்லியல்பு {சத்வம்}, ஆசை{ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்கள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சொந்தமானவை என்பது அறியப்பட வேண்டும். நல்லியல்பு {சத்வம்} தேவர்களின் குணமாகும்; அதே வேளையில் மற்ற இரு குணங்களும் அசுரர்களுடையவையாகும்.(18) பிரம்மம் அந்தக் குணங்கள் அனைத்தையும் கடந்ததாகும். அது தூய அறிவாகும். அது மரணமற்ற நிலையாகும். அது தூய ஒளிநிலையாகும். அது சிதைவற்றதாகும். பிரம்மத்தை அறிந்தவர்களும், தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களுமான மனிதர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(19) அறிவையே தன் கண்ணாகக் கொண்ட ஒருவனால், ஆய்வறிவு மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றின் துணையுடன் இவ்வளவே சொல்ல முடியும். அழிவற்றதான பிரம்மமானது, புலன்கள் மற்றும் மனத்தை (புறப் பொருட்களில் இருந்து ஆன்மாவுக்குள்) ஈர்ப்பதன் மூலம் மட்டுமே அடையப்படமுடியும்" என்றார் {பீஷ்மர்}.(20)
சாந்திபர்வம் பகுதி – 216ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |