Nirguna and Saguna Brahmam! | Shanti-Parva-Section-217 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 44)
பதிவின் சுருக்கம் : நிவிருத்தி மற்றும் பிரவிருத்தி அறங்கள்; பிரகிருதி மற்றும் புருஷன்; நிர்க்குண மற்றும் சகுன பிரம்மம்; ஆன்மாவுக்குக் குணங்கள் ஏற்படும் முறை; பிரம்மச்சரியம் மற்றும் அஹிம்சை ஆகிய யோகங்கள்; சகுன பிரம்மத்தின் குணங்களை முக்குணங்களில் இருந்து வேறுபட்டதாக அறிய வேண்டியதன் அவசியம்; முக்தியை அடைதல்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(கனவுகள், கனவுகளற்ற ஆழ்நிலை உறக்கம், குணங்களால் குறிப்பிடப்படும் பிரம்மம், குணங்கள் அனைத்தையும் விஞ்சிய பிரம்மம் ஆகிய) நான்கு காரியங்களையும், புலப்படுவது (உடல்), தத்துவம் எனப் பெரும் முனிவரால் (நாராயணனால்) விளக்கப்பட்ட புலப்படாதது (சித்-ஆன்மா) ஆகியவற்றையும் அறியாதவனைப் பிரம்மத்தை அறிந்தவன் என்று சொல்ல முடியாது[1].(1) எது புலப்படுமோ அது மரணத்திற்கு உட்பட்டதாகும். எது புலப்படாததோ, அது (சித்-ஆன்மா) மரணத்தைக் கடந்தது என்று அறியப்பட வேண்டும். முனிவன் நாராயணன் நிவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான்.(2) அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டமும் அதனிலேயே நிலைத்திருக்கிறது. மேலும், நிவிருத்தி அறமானது புலப்படாததும், அழிவற்றதுமான பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது[2].(3) படைப்பாளன் (பிரம்மன்) பிரவிருத்தி அறத்தை விளக்கியிருக்கிறான். பிரவிருத்தியானது மறுபிறவி, அல்லது திரும்புதலைக் குறிப்பால் உணர்த்துகிறது. மறுபுறம் நிவிருத்தியோ, உயர்ந்த கதியைக் குறிப்பால் உணர்த்துகிறது.(4) நன்மை மற்றும் தீமைக்கிடையிலான நிச்சய வேறுபாடுகளைப் பகுத்துப் பார்க்க விரும்புபவனும், ஆன்மாவின் இயல்பைப் புரிந்து கொள்ள எப்போதும் முயல்பவனும், நிவிருத்தி அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான தவசி உயர்ந்த கதியை அடைகிறான்[3].(5)
[1] "இந்தச் சுலோகத்தில் குறிப்பிடப்படும் முனிவர், நரனின் நண்பனும் தோழனுமான நாராயணன் என்று உரையாசிரியர் நினைக்கிறார். வியாசர் பிற்காலத்தில் எங்கு வசித்தாரோ அந்தப் பதரியின் வசித்தவர்களே இந்த நர நாராயணர்கள். இங்கே குறிப்பிடப்படும் தத்துவம் என்பதை விவாதத்திற்குரிய தலைப்பாக உரையாசிரியர் கருதவில்லை. மாறாக, எது தூய மூலமாக இருக்கிறதோ, எது மனத்தின் வண்ணத்தையோ, வடிவத்தையோ ஏற்காதோ அதுவே இங்கே குறிப்பிடப்படும் தத்துவம் என்று நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "பிரவிருத்தி அறம் செயல்களைக் கொண்டதாகும். அதனால் ஒருவனை மறுபிறவியில் இருந்து விடுவிக்க முடியாது. செயல்களின் விளைவாக இருக்கும் இருப்புகளின் மொத்த சங்கிலியும் பிரவிருத்தி அறத்திலேயே நிலைத்திருக்கிறது. மறுபுறம், நிவிருத்தி அறம், அல்லது செயல்களைத் துறப்பது, விடுதலை, அல்லது பிரம்மத்திற்கு வழிவகுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "நிவ்ருத்தி மார்க்கத்தைப் பெரிதாகக் கொண்டவனும், ஞானத்தின் உண்மையில் முயற்சியுள்ளவனும், எப்பொழுதும் சுபாசுபங்களைப் பகுத்துப் பார்ப்பவனுமான முனிவனானவன் அந்தப் பரமகதியைப் பெறுவான்" என்றிருக்கிறது.
இதை நிறைவேற்ற விரும்பும் ஒருவன், நான் தற்போது பேசிக் கொண்டிருக்கும் புலப்படாதது மற்றும் புருஷன் குறித்த இரண்டையும் அறிய வேண்டும். மேலும், புலப்படாதது மற்றும் புருஷன் ஆகிய இரண்டிலிருந்தும் எது வேறுபட்டிருக்கிறது, அவை இரண்டையும் எது கடந்திருக்கிறது,(6) அனைத்தில் இருந்தும் எது தனிப்பட்டதாக இருக்கிறது என்பனவற்றை நுண்ணறிவுடன் கூடிய அவன் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்[4]. பிரகிருதி, புருஷன் ஆகிய இரண்டும் தொடக்கமும் முடிவும் அற்றனவாக இருக்கின்றன. அவற்றுக்கிடையிலுள்ள ஒற்றுமைகளை அறியாதவகையிலேயே அவ்விரண்டும் இருக்கின்றன.(7) இரண்டும் நித்தியமானவையும், அழிவற்றவையுமாக இருக்கின்றன. இரண்டும் பெரியனவற்றில் பெரியனவாக இருக்கின்றன. இவற்றில் அவை ஒரே தன்மையைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றுக்கிடையில் சில வேறுபாடுகளும் இருக்கின்றன. (அதைக் குறித்து இப்போது நான் பேசப் போகிறேன்).(8) பிரகிருதியானது, (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) மூன்று குணங்களால் நிரம்பியதாக இருக்கிறது. அது படைப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. க்ஷேத்திரக்ஜனின் (புருஷன், அல்லது ஆன்மாவின்) உண்மைக் குணங்கள் வெவ்வேறானவையாக அறியப்பட வேண்டும்[5].(9) புருஷனானவன், பிரகிருதியின் மாற்றங்கள் அனைத்தையும் உணர்பவனாக இருக்கிறான் (ஆனால் {பிறவற்றால்} உணரப்படாதவனாக இருக்கிறான்). (உண்மை இயல்பைப் பொறுத்தவரையில்) அவன் அனைத்துக் குணங்களையும் கடந்தவனாக {நிர்க்குண பிரம்மமாக} இருக்கிறான். மேலும், புருஷன் மற்றும் பரமாத்மாவைப் பொறுத்தவரையில், அவை இரண்டும் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. வேறுபாடு காண குணங்கள் எவற்றையும் அவை கொண்டிருக்காததால், அவை இரண்டும் அனைத்திலும் மிகவும் வேறுபட்டிருக்கின்றன[6].(10)
[4] அவ்யக்தம், அல்லது புலப்படாதது என்பது பிரகிருதி அல்லது ஆதியில் நிறைவாகவும், நுட்பமாகவும் இருந்த தொடக்கப் பொருளாகும். பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் கடந்திருப்பது உண்மையில் பரமாத்மா, அல்லது பிரம்மமே. குணங்களின் மூலம் அனைத்தில் இருந்தும் வேறுபட்டிருப்பது "விசேஷம்" என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "புருஷன் எதையும் படைக்காதவன் மற்றும் முக்குணங்களையும் கடந்தவன் என்று உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "அஸம்ஹதௌ Asamhatau என்பதை அத்யந்தவிவிக்தௌ atyantaviviktau என்று உரையாசிரியர் விளக்குகிறார். புருஷௌ Purushau என்பது சித்-ஆன்மா, மற்றும் பரமாத்மா ஆகிய இரண்டு புருஷர்களைக் Purushas குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தலைப்பாகை அணிந்த மனிதன், தன் தலையைச் சுற்றிலும் மூன்று வகைத் துணிகளால் சுற்றியிருக்கிறான். (எனினும், அவன் அணிந்திருக்கும் தலைப்பாகையானது அந்த மனிதனல்ல).(11) அதேவகையிலேயே உடல்படைத்த ஆன்மாவானது, நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} ஆகிய முக்குணங்களைக் கொண்டிருக்கிறது. அவ்வாறு கொண்டிருந்தாலும் ஆன்மாவும், அந்தக் குணங்களும் ஒன்றல்ல.(12) இதனால், நான்கு வகைக் கருத்துகளைக் கொண்ட இந்த நான்கு காரியங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்[7]. இவை யாவற்றையும் புரிந்து கொள்ளும் ஒருவன், (அனைத்தையும் விசாரிப்பதைப் பொறுத்தவரையில்) தீர்மானத்தை எட்ட வேண்டிய தருணத்தில் ஒருபோதும் திகைப்படைய மாட்டான்.(13) உயர்ந்த செழிப்பை அடைய விரும்பும் ஒருவன், மனத்தில் தூய்மையடைந்தவனாக, உடல் மற்றும் புலன்களைப் பொறுத்தவரையில் தவப்பயிற்சிகளில் ஈடுபட்டு, கனிகளில் {பலன்களில்} எந்த விருப்பமும் இல்லாமல் யோகத்திற்குத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும்.(14) யோக சக்தியானது, அண்டத்தில் மறைமுகமாகப் படர்ந்தூடுருவி, அதன் {அண்டத்தின்} ஒவ்வொரு பகுதியிலும் சுழன்று கொண்டு, அதைப் பிரகாசமாக ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது.(15)
[7] "அந்த நான்கு காரியங்கள் இவையே: 1. பிரகிருதி மற்றும் புருஷனுக்கிடையில் உள்ள ஒற்றுமைகள்; 2. அவற்றுக்கிடையிலான வேறுபாடுகள்; 3.புருஷனுக்கும் {ஆன்மாவுக்கும்}, ஈஸ்வரனுக்கும் {பரமாத்மாவுக்கும்} இடையில் உள்ள ஒற்றுமைகள்; 4. அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் ஆகியனவாகும். இந்த நான்கையும் மறைக்கும் நான்கு கருத்துகள், 1. தொடக்கமும் முடிவும் இல்லாமை, 2. சித் மற்றும் அசைவின் இருப்பு, 3. அனைத்துப் பொருட்களில் இருந்தும் வேறுபட்டிருப்பது, 4. செயல்பாட்டு எனும் கருத்து ஆகியவையே அவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யோகத்தின் விளைவு ஞானமாகும். உலகத்தில் யோகம் மிக உயர்வாகச் சொல்லப்படுகிறது. உண்மைப் பண்பைப் பொறுத்தவரையில், ஆசை {ரஜஸ்} மற்றும் இருள் {தமஸ்} குணங்களை எந்தெந்த செயல்கள் அழிக்கின்றனவோ அவை யோகமாக அமைகின்றன.(16) பிரம்மச்சரியம், தீங்கிழையாமை {அஹிம்சை} ஆகியன உடலின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது; அதே வேளையில், முறையான மனக்கட்டுப்பாடு மற்றும் பேச்சுக் கட்டுப்பாடு ஆகியன மனத்தின் யோகமாக அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.(17) சடங்குகளை அறிந்த மறுபிறப்பாளர்களிடம் இருந்து பிச்சையாகப் பெறப்படும் உணவானது, மற்ற உணவுகள் அனைத்திலும் இருந்து வேறுபட்டிருக்கிறது. அந்த உணவைச் சொற்பமாக உண்டாலும், ஆசை {ரஜோ} குணத்தில் பிறந்தவையான ஒருவனின் பாவங்கள் மங்கத் தொடங்குகின்றன.(18) அத்தகைய உணவில் வாழும் ஒரு யோகி, அவனது புலன்கள், தங்களுக்குரிய புலனுணர்வுப் பொருட்களில் இருந்து படிப்படியாக விலகுவதைக் காண்கிறான். எனவே அவன், தன் உடலைத் தாங்கிக் கொள்ளத் தேவையான அளவுக்கு மட்டுமே அத்தகைய உணவையும் உண்ண வேண்டும்.(19) யோகத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனத்தின் மூலம், ஒருவன் படிப்படியாக அடையும் ஞானமானது, அவனது இறுதித் தருணங்களில் வலுக்கட்டாயமாகவும், உற்சாகமாகவும் அடையப்பட வேண்டும் (என்று மற்றொரு ஆசோலனையும் வழங்கப்படுகிறது)[8].(20)
[8] "அஃதாவது, ஒருவன், தன் இறுதித் தருணங்களில் தன் உயிரை அங்கேயே கைவிடுவதற்காகக் காசி போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதையே இந்தச் சுலோகம் குறிப்பிடுகிறது என உரையாசிரியர் நீண்ட விளக்கம் தருகிறார். சிவனே ஆசிரியராக இருந்து உயர்ந்த கதிக்கு வழிவகுக்கிறான் என்ற கோட்பாட்டால், காசியில் மரணமடைவது நிச்சயம் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உடல்படைத்த ஆன்மாவானது, ரஜஸ் {ஆசை} குணமற்றிருக்கும்போது, (உடனடியாக விடுதலையை {முக்தியை} அடையாமல், புலனுணர்வுகளனைத்தின் நுண்ணிய வடிவை ஏற்று, வெளியில் {ஆகாயத்தில்} அசைந்து கொண்டிருக்கிறது. அவனது {அந்த ஆன்மாவின்} மனம் செயல்களால் பாதிப்படையாதபோது, அத்தகைய துறவின் விளைவால் அவன் (அந்த நுண்ணிய வடிவை இழந்து) பிரகிருதியில் கலக்கிறான் (எனினும் அவன், பிரகிருதிக்கும் மேன்மையான பிரம்மம், அல்லது விடுதலையை அடைவதில்லை).(21) இந்த உடல் திரட்டு அழிந்த பிறகு, கவனமற்ற தன்மை இல்லாமையின் மூலம், (திரள், நுட்பம் மற்றும் காரணம் என்ற) மூன்று உடல்களில் இருந்து தப்பி, விடுதலையை {முக்தியை} அடைவதில் அவன் வெல்கிறான்[9]. உயிரினங்களின் இறப்பும், பிறப்பும், அவற்றின் மூலமான அறியாமையில் (அல்லது அவித்யையில்) அமைந்த காரணத்தைச் சார்ந்தே இருக்கின்றன.(22) பிரம்மஞானம் எழும்போது, அம்மனிதனைத் தேவையேதும் பின்தொடர்வதில்லை. எனினும் (உண்மையில் சுயமல்லாததைச் சுயம் என்று நம்புவதன் மூலம்) உண்மைக்கு நேர்மாறானதை ஏற்கும் மனிதர்கள், இருக்கும் அனைத்துப் பொருட்களின் பிறப்பு மற்றும் இறப்பிலேயே எப்போதும் தங்கள் புத்தியைச் செலுத்துகின்றனர். (அத்தகைய மனிதர்கள் கனவில் கூட விடுதலையை ஒருபோதும் காண்பதில்லை)[10].(23) சில யோகிகள், பொறுமையின் துணை மூலம், தங்கள் உடல்களைத் தாங்கிக் கொண்டு, தங்கள் புத்தியின் துணை மூலம் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும்) தங்கள் இதயங்களை விலக்கிக் கொண்டு, புலன்களின் உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, நுட்பமாக இருப்பதன் விளைவால் அந்தப் புலன்களையே துதிக்கின்றனர்[11].(24) அவர்களில் சிலர், யோகத்தால் தூய்மையடைந்த மனத்துடன் சாத்திரங்களின்படி (சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளின்படி) செயல்பட்டு, புத்தியின் உதவியால் உயர்வானதை அறிவதில் வென்று, உயர்ந்ததை அடைந்து, வேறு எந்தப் பொருளையும் சாராமல் தன்னிலேயே நிலைத்திருக்கும் அந்த உயர்ந்ததிலேயே வசிக்கிறார்கள்[12].(25)
[9] "அதேஹம் என்பது உரையாசிரியரால் தேஹபாதாத் என்று விளக்கப்படுகிறது. தேஹாந்தாத் என்பது மூன்று உடல்கள் அனைத்தும் அழிவதாகும். (மரணத்திற்குப் பிறகு) திரள் உடல் அழிவதன் மூலம் மறுபிறப்பெனும் கடப்பாட்டில் இருந்து தப்புகிறான் என்பது பொருள். காரண உடல் என்பது லிங்க சரீரத்தைவிட மிக நுண்ணிய இருப்புநிலையாகும்; பிரகிருதியில் அதன் இருப்பே 21ம் சுலோகத்தில் குறிப்பிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] "அத்தகைய மனிதர்கள், உடல், புலன்கள் முதலிய சுயம் அல்லாத அனைத்தும் சுயமெனத் தவறாக எடுத்துக் கொண்டு, பொருட்கள் பிறந்து இறக்கின்றன, ஆனால் விடுதலை {முக்தி}, அல்லது மறுபிறவியில் இருந்து முற்றிலும் தப்பித்தல் போன்றவை ஏதுமில்லை என்ற கருத்தையே அவர்கள் அடைகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்[11]"’பொறுமையின் உதவி மூலம்’ என்பது, தங்கள் நிலைகளை விட்டு எழாமல் யோக மனோநிலையில் மாற்றம் கொள்வது என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. ‘புலன்களின் உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வது’ என்பது முற்றிலும் புலன்களின் சார்பற்ற நிலையை அடைவதால் புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுவது என்ற பொருளைக் கொண்டதாகும். ’ நுட்பமாக இருப்பதன் விளைவால் அந்தப் புலன்களையே துதிப்பது’ என்பது பிராணனையும், இந்திரியங்களையும் சுயமாக, அல்லது ஆன்மாவாகக் கருதித் துதிப்பது என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. யோகிகள் பிரம்மத்தை அடையும் காரியத்திற்கு இந்த விளக்கம் என்ன பயனளிக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தைரியத்தால் சரீரங்களை உறுதியுள்ளவைகளாகச் செய்து கொண்டவர்களும், புத்தியால் அடக்கப்பட்ட மனமுள்ளவர்களும், இந்திரியங்களுக்கு இருப்பிடமான ஸ்தூல சரீரத்தை விட்டு விலகினவர்களுமான சிலர் ஸூக்ஷ்மமாயிருப்பதால் அந்த இந்திரியங்களை உபாஸிக்கிறார்கள்" என்றிருக்கிறது.[12] "’சாத்திரங்களின் (சாதிரங்களில் குறிப்பிட்டுள்ள நிலைகளின்) படி செயல்படுவது" என்பது இந்திரியேப்யம் பராஹ்யர்த்தம் Indriyebhyah parahyartha என்று தொடங்கும் கீதையின் நன்கறியப்பட்ட சுலோகங்களை {பகவத் கீதை 3:42} மறைமுகமாகக் குறிக்கிறது. அந்தச் சுலோகத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு நிலைகள் பின்வருமாறு: "புலன்களைவிடப் புலன்நுகர் பொருட்கள் மேன்மையானவை. அவற்றை விட மனம் மேன்மையானது. மனத்தைவிடப் புத்தி மேன்மையானது. புத்தியைவிட ஆன்மா மேன்மையானது. ஆன்மாவைவிடப் புலப்படாதது மேன்மையானது. புலப்படாததைவிடப் புருஷன் (பிரம்மம்) மேன்மையானவன். புருஷனைவிட மேன்மையானது எதுவும் இல்லை".
சிலர் பிரம்மத்தைத் தோற்றங்களாக {வடிவங்களாக / சிலைகளாக} வழிபடுகின்றனர். சிலர் குணங்களுடன் கூடியவனாக {சகுன பிரம்மமாக} அவனை வழிபடுகிறார்கள். சிலர், அழிவற்றதும், மின்னலின் கீற்றைப் போன்றதுமாக விளக்கப்படும் அந்த உயர்ந்த தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் உணர்கிறார்கள்[13].(26) தவங்களின் மூலம் தங்கள் பாவங்கை எரித்தவர்களான வேறு சிலர், முடிவில் பிரம்மத்தையே அடைகிறார்கள். இந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் உயர்ந்த கதியையே அடைகிறார்கள். சாத்திரக்கண் கொண்ட ஒருவன், பல்வேறு வடிவங்களிலான நுண்ணியக் குணங்களை, மனிதர்களால் வழிபடப்படும் பிரம்மத்தில் இருந்து வேறுபட்ட குணங்களாகக் காண வேண்டும். உடலைச் சார்ந்திருக்கும் தேவையைக் கடந்தவனும், பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவனும், தியானயோகத்தில் அர்ப்பணிப்புள்ள {தாரணையில் பற்றுள்ள} மனத்தைக் கொண்டவனுமான யோகியானவன், பரம்பொருள் அல்லது புலப்படாததைப் போன்ற மற்றொருவனாகவே கருதப்பட வேண்டும்.(28) ஞானம் அடைவதில் அர்ப்பணிப்புள்ள இதயங்களைக் கொண்டோர், மனிதர்களின் உலகில் இருந்து விடுபடுவதிலேயே முதலில் வெல்கிறார்கள். அடுத்தபடியாகப் பற்றுகளைக் கைவிட்டு, பிரம்மத்தின் இயல்பில் கலந்து, இறுதியாக அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(29) வேதங்களை அறிந்த மனிதர்கள், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கும் அறத்தைக் குறித்து இவ்வாறே சொல்லியிருக்கின்றனர். தங்கள் தங்கள் அறிவின் அளவுக்குத் தக்கபடி அவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், உயர்ந்த கதியை அடைவதில் வெல்கிறார்கள்.(30)
[13] "மின்னலின் கீற்றை மீண்டும் மீண்டும் உணரும்போது அது சுடர்மிக்க ஒளித்திரளாகிறது. ஒருவேளை பேசுபவர் இதையே சொல்ல நினைக்கிறார் போலும்" எனக் கங்குலி இங்கே விளுக்கிறார்.
(ஐயுறுவாதத்தின் தாக்குதல்கள் மூலம்) அசைக்கப்பட முடியாததும், உடையவர்களை அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபடச் செய்வதுமான அறிவை அடைவதில் வெல்லும் மனிதர்கள், மரணத்திற்குப் பிறகு பல்வேறு உயர்ந்த உலகங்களை அடைந்து, தங்கள் ஞானத்தின் அளவுக்குத்தக்கபடி விடுதலை {முக்தி} அடைகிறார்கள்.(31) அறிவின் மூலம் நிறைவை உள்ளீர்த்துக் கொள்பவர்களும், ஆசைகள் மற்றும் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டவர்களுமான தூய இதயம் கொண்டோர், தங்கள் இயல்பின்படி, புலப்படாத குணத்தைக் கொண்டதும், தெய்வீகமானதும், பிறப்பும் இறப்பும் அற்றதுமான பிரம்மத்தின் அருகே படிப்படியாக நெருக்கமடைந்து செல்கிறார்கள்.(32) தங்கள் ஆன்மாக்களில் வசிக்கும் {நிர்க்குண} பிரம்மத்தை உணர்ந்து, தாங்களே மாறும் இயல்பற்றவர்களாகும் அவர்கள் (பூமிக்கு) மீண்டும் திரும்ப வேண்டியதில்லை. அழிவற்றதும், நித்தியமானதுமான பரம நிலையை அடைந்த அவர்கள் அந்த இன்பநிலையிலேயே நிலைத்திருப்பார்கள்.(33)
இவ்வுலகத்தைப் பொறுத்தவரையில் ஞானமென்பது (பிழை செய்பவர்களின் வழக்கில்) இவ்வளவுதான். (பிழையால் திகைப்படையாதோர் வழக்கில்) அஃது {ஞானம்} இருப்பில் இருப்பதில்லை. ஆசையில் கட்டப்பட்டுள்ள மொத்த அண்டமும் ஒரு சக்கரத்தைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறது[14].(34) தாமரைத்தண்டின் இழைகள், அத்தண்டின் அனைத்து பகுதிகளிலும் படர்ந்திருப்பதைப் போலவே, ஆசை இழைகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் உடலில் படர்ந்திருக்கிறது.(35) நெசவாளன் ஒருவன், தனது நூல்களைத் தன் ஓடத்தின் {ஊசியின்} மூலம் ஓர் ஆடையில் நெய்வதைப் போலவே, அண்டமெனும் துணியில் உள்ள நூல்கள் {ஸம்ஸாரமெனும் நூலானது} ஆசையெனும் ஓடத்தால் {ஊசியால்} {அண்டத்திற்குள்} நெய்யப்படுகிறது.(36) பிரகிருதி, பிரகிருதியின் மாறுதல்கள் {விகாரம்} மற்றும் புருஷன் {பரமாத்மா} ஆகியவற்றை முறையாக அறிந்த ஒருவன், ஆசையில் இருந்து விடுபட்டவனாக விடுதலையை {முக்தியை} அடைகிறான்[15].(37) தெய்வீக முனிவரும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன், அனைத்து உயிரினங்களிடமும் கொண்ட கருணையின் நிமித்தமாக, அழிவின்மையை {மரணமில்லா நிலையை} அடைவதற்கான இந்த வழிமுறைகளைத் தெளிவாக வெளியிட்டிருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}.(38)
[14] கும்பகோணம் பதிப்பில், "இந்த ஞானம் என்பது இவ்வளவுதான். இவ்வுலகமானது இருப்பதும் இல்லாததுமாயிருக்கிறது. உலகமனைத்தும் ஆசையால் கட்டப்பட்டு உருளை போலச் சுற்றிக் கொண்டிருக்கிறது" என்றிருக்கிறது.[15] "விகாரம், பிரகிருதி, புருஷன், அல்லது விளைவுகள், அவற்றின் பொருள் காரணம் மற்றும் பரமாத்மா என்றும் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 217ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |