Wednesday, July 04, 2018

நாஸ்திக மறுப்பு! - சாந்திபர்வம் பகுதி – 218

Objectionable atheism! | Shanti-Parva-Section-218 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 45)


பதிவின் சுருக்கம் : வேள்விகளும், சடங்குகளும் மாயையின் விளைவுகள் என்று சொன்ன பஞ்சசிகர்; ஆன்மா என்ற தனிப்பட்ட இருப்புக் கிடையாது என்ற நாத்திகர்களின் கோட்பாடு; இவ்வாதத்தால் அறச் செயல்கள் மற்றும் ஒழுக்கம் ஆகியவை பொருளற்றுப் போவதை விளக்கும் பஞ்சசிகர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! ஒழுக்கவழிமுறைகள் அனைத்தையும் அறிந்தவரே, விடுதலை {முக்தி / மோக்ஷ} அறத்தை நன்கறிந்தவனும் மிதிலையின் ஆட்சியாளனுமான ஜனகன், உலகம் சார்ந்த இன்பங்கள் அனைத்தையும் கைவிட்டபிறகு, எந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி விடுதலையை {முக்தியை} அடைவதில் வென்றான்?" எனக் கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒழுக்க வழிமுறைகள் அனைத்தையும் முற்றிலும் அறிந்தவனான அந்த ஆட்சியாளன் {ஜனகன்}, எந்தக் குறிப்பிட்ட ஒழுக்கத்தின் மூலம் உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வென்றான் என்பது தொடர்பான பின்வரும் உரையாடல் பழங்கதையில் தென்படுகிறது.(2) மிதிலையில், ஜனக குலத்தைச் சேர்ந்தவனும், ஜனதேவன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் ஆட்சியாளன் இருந்தான். பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுக்கக்கூடிய ஒழுக்க வழிமுறைகளைக் குறித்துச் சிந்திப்பதில் அவன் எப்போதும் ஈடுபட்டு வந்தான்.(3) பல்வேறு வகை வாழ்வுமுறைகளை நோற்கும் மக்களால் பின்பற்றப்படும் பல்வேறு கடமைகளின் வழிமுறைகளை அவனுக்குப் போதிக்க, அவனது அரண்மனையில் எப்போதும் நூறு ஆசான்கள் இருந்து வந்தனர்[1].(4) வேத கல்வியில் ஈடுபட்டிருந்த அவன் {ஜனதேவன்}, ஆன்மாவின் குணம் குறித்துத் தனது ஆசான்களின் ஊகங்கள் மற்றும் உடலை இழந்த பிறகு ஏற்படும் அழிவு அல்லது மரணத்திற்குப் பிறகான மறுபிறவி குறித்த அவர்களின் கோட்பாடுகளில் நிறைவடையாதவனாக இருந்தான்[2].(5)

[1] "நானாபாஷாண்டவாஷினம் Nanapashandaashinah என்ற வேறொரு உரையும் உரையாசிரியரால் குறிப்பிடப்படுகிறது. "லோகாயதிகர்களின் பல்வேறு பிரிவுகளை நிந்திப்பவர்கள்" என்று அதற்குப் பொருள் அளிக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவனுடைய வீட்டில் பலவிதமான பாஷண்டமதங்களைக் கண்டிப்பவர்களும், வெவ்வேறான தர்மங்களைக் காணிப்பிப்பவர்களுமான நூறு ஆசிரியர்கள் எப்பொழுதும் வஸித்துக் கொண்டிருந்தார்கள்" என்றிருக்கிறது.

[2] கும்பகோணம் பதிப்பில், "அவன் அந்த ஆசிரியர்கள் சொல்லுகிறபடி இறந்தபின் ஆத்மா இருக்கின்றதென்ற நிச்சயத்திலும், மறுபிறப்பைப் பற்றிய நிச்சயத்திலும் மிக்க ஸந்தோஷப்படுகிறதில்லை. அவன் வேதமார்க்கத்திலிருந்து கொண்டு ஆத்மதத்வ விஷயத்தில் மிகவும் விசேஷமாக ஸந்தோஷப்படுவான்" என்றிருக்கிறது.

ஒரு காலத்தில், கபிலையின் மகனும், பஞ்சசிகர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெருந்தவசி, உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தபோது மிதிலையை வந்தடைந்தார்.(6) துறவு தொடர்புடைய பல்வேறு கடமைகள் குறித்த அனைத்து ஊகங்களிலும் {ஸந்யாச தர்மங்கள் அனைத்திலும்} சரியான தீர்மானங்களைக் கொண்டிருந்த அவர், (வெப்பம் மற்றும் குளிர், இன்பம் மற்றும் துன்பம் போன்ற) முரண்பட்ட இரட்டைகள் {துவந்துவங்கள்} அனைத்தையும் கடந்தவராகவும், ஐயங்களேதும் இல்லாதவராகவும் இருந்தார்.(7) அவர் முனிவர்களில் முதன்மையானவராகக் கருதப்பட்டார். விரும்பிய இடத்தில் வசிக்கும் அவர், மனிதர்கள் அனைவரும் அடைவதற்கு மிகக் கடினமான இன்ப நிலையை அவர்கள் எட்டும்படி செய்ய விரும்பினார்.(8) சாங்கிய கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், கபிலர் என்ற பெயரில் யாரை அறிவார்களோ, உயிரினங்களின் தலைவரான அந்தப் பெரும் முனிவரின் வடிவை ஏற்று உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியபடி அந்தப் பஞ்சசிகர் திரிந்து கொண்டிருந்தார் என்று தெரிகிறது[3].(9) ஆசுரியின் சீடர்கள் அனைவரிலும் முதன்மையானவராக இருந்த அவர் {பஞ்சசிகர்}, மரணமற்றவர் {சிரஞ்சீவி} என்றும் அழைக்கப்பட்டார். அவர் ஆயிரம் ஆண்டுகள் நீடித்த மனோவேள்வி {மானஸயாகம் / சத்ரயாகம்} ஒன்றைச் செய்தார்[4].(10)

[3] கும்பகோணம் பதிப்பில், "ஸாங்கியர்கள் அவரை உத்தமரிஷியான கபிலப்பிரஜாபதியென்று சொல்வார்கள். கபிலர் நேரில் அந்தப் பஞ்சசிகர் உருவத்துடன் வந்து ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறார்" என்றிருக்கிறது.

[4] "இங்கே சொல்லப்படும் பஞ்சஸ்ரோதஸ் Panchcrotas என்பது ஐந்து ஓடைகளை {பிரவாகங்களைக்} கொண்டதாகச் சொல்லப்படும் மனத்தைக் குறிப்பிடுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவர் ஐந்து பிரவாகங்களுள்ள இடத்தில் ஆயிரம் வருஷம் செய்யத்தக்க ஸத்ரயாகத்தைச் செய்து கொண்டிருக்கிறார்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஞானேந்திரியங்களென்னும் ஐந்து பிரவாகங்களுடன் கூடின மனம் என்ற இடத்தில் மானஸயாகம் செய்தார் என்பது பொருள்" என்றிருக்கிறது.

அவர் உறுதியுள்ள மனத்தைக் கொண்டவராக இருந்து, சாத்திரங்களோடு இணைந்தவையும், பிரம்மத்தை அடைவதற்கு வழிவகுப்பவையுமான சடங்குகள் மற்றும் வேள்விகள் அனைத்தையும் நிறைவு செய்தார். அவர், ஆன்மாவை மறைக்கும் ஐந்து உறைகளையும் {உடல்களையும்} முழுமையாக அறிந்தவராக இருந்தார்[5]. பிரம்மத் துதியுடன் தொடர்புடையவையும், (அமைதி, தற்கட்டுப்பாடு முதலிய {சமம், தமம், உபரதி, திதிக்ஷை மற்றும் ஸமாதானம் ஆகிய) ஐந்து குணங்களைக் கொண்டவையுமான ஐந்து செயல்களில் அர்ப்பணிப்புள்ளவராக அவர் இருந்தார். (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) பஞ்சசிகர் என்ற பெயரில் அறியப்பட்டிருந்த அவர், {முன்பு} ஒருநாள், சாங்கிய கோட்பாடுகளைப் பின்பற்றும் பெரும் முனிவர்க்கூட்டத்தை அணுகி, புலப்படாததும், அல்லது ஐந்து புருஷர்களோ (ஏற்கனவே {அடிக்குறிப்பு 5ல்} பெயர் சொல்லப்பட்ட) உறைகளோ சார்ந்திருப்பதும், மனிதர்கள் அடையத்தக்க உயர்ந்த நோக்கமுமான ஒன்றை {பிரம்மத்தைக்} குறித்து அவர்களிடம் விசாரித்தார்[6].(11,12) ஆன்ம ஞானம் அடைவதன் நிமித்தமாக, ஆசுரி என்பவர் ஏற்கனவே தமது ஆசானிடம் விசாரித்திருந்தார். பின்னவரின் {ஆசுரியுடைய ஆசானின்} போதனைகள் மற்றும் தன் சொந்த தவங்கள் ஆகியவற்றின் விளைவால் அந்த ஆசுரி, உடல் மற்றும் ஆன்மாவுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டு, தெய்வீகப் பார்வையை அடைந்திருந்தார்.(13) மாறும் இயல்பற்றதும், ஒன்றேயானதும், அழிவில்லாததும், பல்வேறு வடிவங்களில் காணப்படுவதுமான பிரம்மம் குறித்து {இப்போது} அந்த முனிவர்க்கூட்டத்தில் ஆசுரி தமது விரிவுரையை அளித்தார்.(14) {அந்தக் கூட்டத்தில் இருந்த} பஞ்சசிகர் ஆசுரியின் சீடரானார். அவர் மானுடப் பாலில் {மானுடப்பெண்ணின் பாலை உணவாகக் கொண்டு} வாழ்ந்தார். கபிலை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிராமணி இருந்தாள். அவள் ஆசுரியின் மனைவியாக இருந்தாள்[7].(15)

[5] "இவை அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம் மற்றும் ஆனந்தமயம் ஆகியவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[6] கும்பகோணம் பதிப்பில், "ஐந்து பிரவாகமுள்ளவிடத்தில் ஸ்நானம் செய்தவரும், ஐந்து நாள் செய்ய வேண்டிய பஞ்சராத்திரமென்ற யாகத்தில் ஸமர்த்தரும், ஐந்து கோசங்களைப் பற்றிய உபாஸனங்களைச் செய்தவரும் ஐந்து குணங்களுள்ளவரும் பஞ்சசிகரென்று சொல்லப்படுகிறவருமான அவர் கபில மதத்தைச் சேர்ந்த பெரிய முனிக்கூட்டம் உட்கார்ந்திருக்கும் இடத்தினருகில் வந்து புருஷர்களிடமிருப்பதும், இந்திரியங்களுக்குப் புலப்படாததும், பரமார்த்தமுமான பிரம்மத்தை அறிவித்தார்" என்றிருக்கிறது.

[7] "இங்கே சொல்லப்படும் குடும்பினி Kutumvini என்பதற்கு மூதன்னை, அல்லது இல்ல உரிமையாளரின் மனைவி என்று பொருள் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த ஆஸுரியினுடைய சிஷ்யரான பஞ்சசிகமுனிவர் மானிடப்பெண்ணின் பாலால் வளர்க்கப்பட்டவர். கபிலையென்று பிரஸித்தி பெற்றவளும், குடும்பத்திலுள்ளவளுமான ஒரு பிராம்மணப் பெண் இருந்தாள். அவர் அந்தப் பெண்ணுக்குப் புத்திரராயிருக்கும் தன்மையையடைந்து அவளிடம் ஸ்தன்யபானம் செய்தார்" என்றிருக்கிறது.

பஞ்சசிகர் அவளால் ஒரு மகனாக ஏற்கப்பட்டார், அவர் அவளது முலைப்பால் அருந்தினார் {ஸ்தன்யாபானம் செய்தார்}. இதன் விளைவால் அவர், கபிலையின் மகன் {காபிலேயர்} என்று அறியப்பட்டார். அவரது புத்தி பிரம்மத்தில் நிலைத்திருந்தது.(16) அவரது பிறப்பு மற்றும் அவர் கபிலையின் மகனானது {காபிலேயரானது} ஆகிய சூழ்நிலைகள் குறித்த இவை யாவையும் எனக்குத் தெய்வீக முனிவரால் {மார்க்கண்டேயரால் / சனத்குமாரரால்} சொல்லப்பட்டது[8]. அவரே அனைத்தையும் அறிந்தவரான பஞ்சசிகர் குறித்து எனக்குச் சொன்னார்.(17) கடமைகள் அனைத்தின் வழிமுறைகளையும் அறிந்த பஞ்சசிகர், உயர்ந்த ஞானத்தை {ஆசுரியிடமிருந்து} அடைந்த பிறகு, (ஜனகனிடம் {ஜனதேவனிடம்} வந்து), அந்த மன்னன் தன் ஆசான்கள் அனைவரையும் சமமாக மதிப்பவன் என்பதை அறிந்து, அபரிமிதமான காரணங்களால் {பலயுக்திகளால்} அந்த நூறு ஆசான்களையும் வியக்கச் செய்தார்.(18) காபிலேயரின் {பஞ்சசிகரின்} திறன்களைக் கண்ட ஜனகன் {ஜனதேவன்}, அவரிடம் அதீதப் பற்றைக் கொண்டு, தன் நூறு ஆசான்களையும் கைவிட்டு, குறிப்பாக அவரையே பின்பற்றத் தொடங்கினான்.(19) அப்போது காபிலேயர் {பஞ்சசிகர்}, (ஒரு சீடன் செய்ய வேண்டிய முறையில்) தம்மிடம் விதிப்படி தலை வணங்கியவனும், அந்தத் தவசியின் போதனைகளைப் புரிந்து கொள்ளும் முழுத் தகுதி கொண்டவனுமான ஜனகனிடம் {ஜனதேவனிடம்}, சாங்கிய ஆய்வேடுகளில் விளக்கப்பட்டுள்ள விடுதலை {முக்தி / மோக்ஷம்} எனும் உயர்ந்த அறத்தைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(20)

[8] "உரையாசிரியரின் கூற்றுப்படி இது மார்க்கண்டேயராகவோ, சனத்குமாரராகவோ இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



முதலிடத்தில் பிறப்பின் துன்பங்களைச் சொன்ன அவர், அடுத்ததாக (அறச்) செயல்களின் துன்பங்களைக் குறித்துப் பேசினார். அக்காரியத்தை நிறைவு செய்த அவர், படைப்பாளனின் உயர்ந்த உலகத்திலேயே முடிவடையும் வாழ்வின் அனைத்து நிலைகளுக்குரிய துன்பங்களையும் விளக்கினார்[9].(21) அற நடைமுறை {வேள்விகள் / சடங்குகள்}, செயல்கள் மற்றும் அவற்றின் கனிகள் {பலன்கள்} ஆகியவை எதன் நிமித்தமாகச் செய்யப்படுகிறதோ, எது நம்பிக்கைக்குத் தகாததோ, அழியவல்லதோ, நிலையற்றதோ, நிச்சயமற்றதோ அந்த மாயையைக் குறித்தும் சொன்னார்[10].(22) {பஞ்சசிகர்} "(உடலின்) மரணம் அனைவராலும் காணப்படும்போது, உடலில் இருந்து வேறுபட்டதும், ஆன்மா என்று அழைக்கப்படுவதுமான ஒன்று இருக்கிறது என்று, சாத்திரங்களில் உள்ள நம்பிக்கையின் விளைவால் நம்புபவர்கள் {நாஸ்திகர்களின் எதிர்} வாதத்தில் வெல்லப்படுகிறார்கள் என்று ஐயுறுவாதிகள் {நாஸ்திகர்கள்} சொல்கிறார்கள்.(23) ஒருவன் இறந்துவிட்டால், அவனது ஆன்மாவும் அழிகிறது என்றும், எனவே, துன்பம், முதுமை, நோய் ஆகியன ஆன்மாவின் (பகுதியளவு) மரணத்தையே குறிக்கிறது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உடலில் இருந்து ஆன்மா வேறானது, உடலின் இழப்பிற்குப் பிறகும் அது நீடிக்கிறது என்று பிழையாகக் கருதுபவன், அறிவுக்குப் பொருந்தாத கருத்தைப் பேணி வளர்க்கிறான் {என்று அவர்கள் சொல்கிறார்கள்}.(24) உலகில் உண்மையில் இல்லாத அஃது {ஆன்மா}, இருக்கிறது என்று கருதப்பட்டால், மன்னனும்கூட முதுமைக்கோ, மரணத்திற்கோ ஆட்படமாட்டான் என்றும் குறிப்பிடலாம். ஆனால், அந்தக் காரியத்தில் அவன் தன்னை முதுமையையும், மரணத்தையும் கடந்தவனாக உண்மையில் நம்புவானா? {என்றும் அவர்கள் கேட்கிறார்கள்}[11].(25)

[9] "சர்வநிர்வேதம் Sarvnirvedam என்பதற்கு நீலகண்டர் கொடுத்திருக்கும் விளக்கத்தை நான் சற்றே விரிவாக்கியிருக்கிறேன். சாங்கிய கோட்பாடானது, வாழ்வின் அனைத்து நிலைகளும் துன்பத்தையே தருகின்றன என்ற கற்பிதங்களை முன்வைக்கிறது. இதற்கான தீர்வு, அஃதாவது அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நிரந்தரமாகத் தப்புவதே இந்தத் தத்துவத்தின் எல்லையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[10] "இவ்வுலகில் பிறக்கும் மனிதன், எதன் ஆதிக்கத்தின் கீழ் தன் துன்பங்கள் அனைத்தையும் நிரந்தரமாக வெல்லும் வரை வாழ்கிறானோ அந்த மாயையின் பண்பியல்புகள் இவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[11] "24 மற்றும் 25-ம் சுலோகங்களும் அதன் தொடர்ச்சியாக வரும் அனைத்து சுலோகங்களும் ஐயுறுவாதிகளால் {நாத்திகர்களால்} சொல்லப்படுவனவாகும், இது பேசுபவரின் {பஞ்சசிகரின்} கருத்தல்ல" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஒரு பொருள் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்வி எழுகையில், உறுதிகூறப்பட்ட அதன் இருப்பானது, இல்லாமையின் அனைத்துக் குறியீடுகளையும் அளிக்கிற போது, சாதாரண மக்கள் தங்கள் வாழ்க்கைக் காரியங்களைத் தீர்மானிக்க எதனைச் சார்ந்திருப்பார்கள்?[12](26) உள்ளுணர்வு {அனுமானம்} மற்றும் சாத்திரங்கள் {ஆகமம்} ஆகிய இரண்டிலும் நேரடி சாட்சியங்களே {பிரத்யக்ஷங்களே} வேராக இருக்கின்றன. சாத்திரங்கள் {ஆகமங்கள்} நேரடி சாட்சியத்தின் மூலம் மறுத்துக்கூற வல்லனவாக இருக்கின்றன. உள்ளுணர்வை {அனுமானத்தைப்} பொறுத்தவரையில், அதன் சாட்சிய பாதிப்பு அதிகமானதாக {போதுமானதாக} இல்லை.(27) எந்தக் காரியமாக இருந்தாலும், உள்ளுணர்வை மட்டுமே காரணமாகக் கொள்வது நிறுத்தப்பட வேண்டும். இந்த உடலைத் தவிர ஜீவன் என்றழைக்கப்படும் வேறேதும் இல்லை {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}.(28)

[12] கும்பகோணம் பதிப்பில், "இருக்கிறதென்றும், இல்லையென்றும் இவ்வித ஸந்தேகத்தில் தக்க காரணமில்லாதிருக்கும்பொழுது எந்த அனுமானத்தைப் பற்றிக் கொண்டு உலகத்திலுள்ள வியவகாரத்திற்கு நல்ல நிச்சயத்தைச் சொல்ல முடியும்?" என்றிருக்கிறது.

ஓர் ஆலமர விதையானது, இலைகள், மலர்கள், கனிகள், வேர்கள் மற்றும் பட்டை ஆகியவற்றை உண்டாக்கும் திறனைத் தன்னுள் கொண்டுள்ளது. ஒரு பசு உண்டு பருகும், புல் மற்றும் நீரின் மூலம், உற்பத்திக்கான காரணங்களில் இருந்து வேறுபட்ட இயல்பைக் கொண்ட பொருட்களான பாலும், நெய்யும் உண்டாக்கப்படுகின்றன. நீரில் சில காலத்திற்கு அழுக விடப்படும் பல்வேறு வகைப்பட்ட பொருட்கள், தங்கள் இயல்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மதுவை உண்டாக்குகின்றன. அதேவகையில், உயிர் வித்தில் இருந்து, உடலும், புத்தியுடன் கூடிய அதன் குணங்களும், நனவுநிலையும் {அஹங்காரமும்}, மனமும், பிற உடைமைகளும் உண்டாகின்றன. இரண்டு மரத்துண்டுகள் உரசப்படும்போது அவை நெருப்பை உண்டாக்குகின்றன. சூரிய காந்தம் என்றழைக்கப்படும் கல்லானது, சூரியக் கதிர்களின் தொடர்பேற்படும்போது நெருப்பை உண்டாக்குகிறது. கடினமான நீரில் சுடப்பட்ட எந்த உலோகப் பொருளும், நீருடன் தொடர்பேற்படும்போது அதை {நீரை} வற்ற செய்கிறது. அதே போலவே, பொருளாலான உடலானது, மனத்தையும், உணர்வு, நினைவு, கற்பனை முதலியவற்றுக்கான அதன் {மனத்தின்} குணங்களையும் உண்டாக்குகிறது. காந்தக் கல்லானது இரும்பை அசைப்பதைப் போலவே, புலன்களும் மனத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன {என்றும் அவர்கள் சொல்கிறார்கள்}[13].(29)

[13] "29ம் சுலோகம் மிகச் சுருக்கமானதாகவே இருக்கிறது. சொற்கள் இலக்கண ரீதியாக ஒன்றோடொன்று தொடர்பில்லாதவையாக இருக்கின்றன. சில நிலைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கண்டு உணரப்படும் உடலைத் தவிர வேறு ஏதும் இல்லை என்பதைக் காட்ட ஐயுறுவாதிகளால் {நாத்திகர்களால்} முன்வைக்கப்படும் வாதங்களின் தலைப்புகளை இவை பிரதிபலிக்கின்றன. உரையாசிரியர் இந்தச் சுலோகத்தின் பொருளை விரித்துரைத்துக் கூறியிருப்பதையே நான் இங்கே பின்பற்றியிருக்கிறேன். உரையாசிரியர் செய்திருப்பது சரியே என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆலமரத்தின் வித்தில் அதற்குள்ள காரணமும், பசுவின் ஆகாரத்தில் வெவ்வேறான பாலும், நெய்யும், வாஸனையுள்ள பல வஸ்துக்களின் பாகத்தில் மதசக்தியும், இரணு கட்டைகளின் சேர்க்கையால் தீயின் உற்பத்தியும், தர்க்க மதத்தில் ஆத்மா மனம் இவைகளின் சேர்க்கையால் உண்டாகும் ஸ்மிருதி என்ற ஞானமும், இரும்பை அசையச் செய்யும் காந்த மணியும், ரவியின் ஒளியுடன் சேர்ந்து தீயை உண்டுபண்ணும் ஸூர்யகாந்தமென்னும் மணியும் தீயில் நீரைக் குடிக்கும் திறமையுமிருப்பது போலச் சரீரமே ஆத்மாவாக இருக்கலாம்" என்றிருக்கிறது.

இவ்வாறே ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தார் / நாத்திகர்கள்} காரணம் கூறுகின்றனர். எனினும் இந்த ஐயுறுவாதிகள் {தர்க்க மதத்தால் / நாத்திகர்கள்} பிழை செய்கின்றனர். உடல் (உடலின் அசைவு சக்தி மட்டுமே) மறைவதன் மூலம் உயிரற்றதாவதே (அந்த நிகழ்வு {மரணம்} நேரும் அதே நேரத்தில் உடல் அழியாததே) அதற்கு {அந்தப் பிழைக்கு} ஆதாரமாகும். (உடலானது, ஆன்மாவல்ல. ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்ட ஒன்று, அது நிச்சயம் கடந்து வாழ்கிறது என்ற உண்மைக்கு இதுவே ஆதாரம். உண்மையில் உடலும், ஆன்மாவும் ஒரே பொருளாக இருந்தால், அவை இரண்டும் ஒரே நேரத்தில் மறைந்திருக்கும். அதற்குப் பதில், மரணம் நேர்ந்த பிறகும் சடலம் {உயிரற்ற உடல்} சிலகாலத்திற்குக் காணப்பட்டுகிறது. எனவே, உடலிலிருந்து வேறுபட்ட ஏதோவொரு பொருள் அந்த உடலில் இருந்து தப்புவதே மரணம் என்றாகிறது). ஆன்மாவின் தனிப்பட்ட இருப்பை மறுக்கும் மனிதர்கள் {தர்க்க மதத்தார்} தேவர்களிடம் வேண்டுவது (ஆன்மாவானது உடலில் இருந்து தனிப்பட்டது, அல்லது பொருள் திரட்டின் சார்பற்ற தனியிருப்பு என்ற கூற்றுக்கு) மற்றொரு நல்ல வாதமாக அமையும். (இந்த மனிதர்கள் வேண்டும் தேவர்கள் காணப்படவோ, தீண்டப்படவோ இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நுட்பமான வடிவங்களில் இருப்பதாக நம்பப்படுகிறார்கள். உண்மையில் பொருள்திரள் வடிவங்களற்ற தேவர்களின் மீதுள்ள நம்பிக்கை அறிவுக்கு எந்தக் குந்தகத்தையும் விளைவிக்கவில்லையெனில், பொருளற்றதான ஆன்மாவின் இருப்பு மட்டும் அந்த அறிவுக்கு ஏன் குந்தகத்தை விளைவிக்க வேண்டும்?). ஐயுறுவாதியின் கருத்தே செயல்களின் அழிவைக் குறிப்பிடுகிறது என்பது அவருக்கு எதிரான மற்றொரு வாதமாகும். (ஏனெனில், உடலும், ஆன்மாவும் ஒன்றாகவே இறந்தால், இப்பிறவி வாழ்வின் செயல்களும் அழிந்து போகும். இக்கருத்து, அண்டத்தில் காணப்படும் சமமற்ற நிலைகளை எந்த மனிதனாலும் விளக்கப்படச் சாத்தியமில்லாத நிலையை உண்டாக்கும்)[14].(30)

[14] "ஆங்கிலத்தில் படிப்பவர் மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்தச் சுலோகங்களை, மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விரிவுரையின் மூலம் கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும். அடைப்புக்குறி இல்லாத பகுதிகளில் கூட, ஆங்கில இலக்கணத்தில் உள்ள நெருக்கடிகள் மற்றும் தெளிவு ஆகியவை மூல சம்ஸ்க்ருதத்தில் உள்ள சொற்களைவிட {ஆங்கிலத்தில்} அதிகச் சொற்களை என்னைப் பயன்படுத்த வைத்திருக்கின்றன. இந்தச் சுலோகங்கள் அனைத்தும் கணேசரைத் தடுமாறச் செய்யும் நோக்கம் கொண்ட முடிச்சுகள் ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மரணத்திற்குப் பின் சரீரத்தில் நான்கு பூதங்களுக்கு நாசமுண்டாவதும், தேவதைகளின் பிரார்த்தனையும், மரித்ததும் முன் செய்த கர்மங்கள் பயனற்றுப் போவதும், ஒரு பிறப்பில் செய்யாத கர்மங்களின் பயனுண்டாவதும், சரீரத்தைவிட ஆத்மா வேறு என்ற விஷயத்தில் பிரமாணமென்பது நிச்சம்" என்றிருக்கிறது.

இவ்வாறு குறிப்பிடப்படுபவையும், பொருள்வடிவங்களைக் கொண்டவையுமான இவை {ஜடவஸ்துக்கள்}, (பொருளற்ற {வடிவமற்ற} ஆன்மா மற்றும் பொருளற்றவையான {ஜடமல்லாதவையான} உணர்வு, நினைவு போன்றவற்றுக்கு) காரணங்களாக அமைய சாத்தியமில்லை. பொருள்வடிவமற்ற இருப்புகளைப் பொருள் வடிவமுள்ள பொருட்களுடன் அடையாளம் கண்டு அறிந்து கொள்ள முடியாது. (எனவே, பொருள்வடிவமுள்ள பொருட்கள் எவ்வழியிலும் பொருள் வடிவமில்லாத பொருட்களை உண்டாக்கும் காரணங்களாக இருக்க முடியாது).(31) சிலர், மறுபிறப்பு இருக்கிறது, மேலும் அஃது, அறியாமை, செயல்களில் உள்ள விருப்பம், பேராசை, கவனமின்மை, பிற குற்றங்களில் ஈடுபாடு ஆகியனவற்றால் உண்டாகிறது என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.(32) அவர்கள் அறியாமையே (அவித்யையே) மண் {இடம் / க்ஷேத்ரம்} என்று சொல்கிறார்கள். செயல்கள், அந்த மண்ணில் விதைக்கப்படும் விதையாகும். ஆசையென்பது, அந்த விதையை வளரச் செய்யும் காரணமான நீராக அமைகிறது. இவ்வழியிலேயே அவர்கள் {தர்க்க மதத்தார் / ஐயுறுவாதிகள் / நாத்திகர்கள்} மறுபிறப்பை விளக்குகிறார்கள்.(33) அந்த அறியாமையானது, புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு வழியில் உள்தோய்ந்து, ஒரு மனித உடல் அழிந்ததும், உடனே மற்றொறு உடல் பிறக்கிறது’ அது ஞானத்தின் துணையுடன் எரிக்கப்படும்போது, இருப்பின் அழிவே தொடர்கிறது, அல்லது அந்த மனிதன் நிர்வாணம் என்றழைக்கப்படும் நிலையை அடைகிறான் என அவர்கள் {தர்க்க மதத்தார்} வாதிடுகின்றனர்.(34) இக்கருத்துப் பிழையுள்ளதாகும். (இது பௌத்தர்களின் கோட்பாடாகும்). இவ்வாறு மீண்டும் பிறக்கும் ஒன்றின் இயல்பு, பிறப்பு, அறம் மற்றும் மறம் தொடர்புடைய நோக்கங்கள் வேறுபட்டிருக்கும்போது, அஃது ஏற்கனவே இருந்த ஒன்றின் எந்த அடையாளத்தையும் கொண்டிருப்பதாக ஏன் கருதப்பட வேண்டும்? உண்மையில், குறிப்பிட்ட ஒன்றில் மொத்தமாக இருக்கும் இருப்புகளின் சங்கிலியானது, உண்மையான தொடர் இணைப்புகளைக் கொண்ட ஒரு சங்கிலி கிடையாது (ஆனால் அந்த அடுத்தடுத்த இருப்புகள், ஒன்றோடொன்று தொடர்பற்றவையாக இருக்கின்றன) என்ற உள்ளுணர்வை {அனுமானத்தை} மட்டுமே அடையச் செய்யும்[15].(35)

[15] "சுலோகம் 34ல் மறுபிறப்புக் குறித்த சுகதர்கள், அல்லது பௌத்தர்களின் கோட்பாட்டைச் சொல்கிறது என உரையாசிரியர் சொல்கிறார். சுலோகம் 35ல் அந்தக் கோட்பாடு மறுக்கப்படுகிறது. புத்த கோட்பாட்டுக்கான மறுப்பானது, வெறும் அறியாமையும் கர்மம் மட்டுமே மறுபிறப்பை விளக்கிவிட முடியாது என்பதாகும். அழிவற்ற ஓர் ஆன்மா இருக்க வேண்டும். பௌத்தர்கள் நிர்வாணம், அல்லது அழிதல் சாத்தியமே என்பதை நம்புவதால், இஃதை அனுமதிப்பதில்லை. இந்த வாதம் இவ்வாறே செல்கிறது: மறுபிறப்பின் விளைவாக இருக்கும் ஒன்று வேறொன்றாக இருப்பது வெளிப்படையே. ஏற்கனவே இருந்த ஒன்றினோடு அஃதை அடையாகக் கண்டு உறுதிப்படுத்த நமக்கு என்ன உரிமை இருக்கிறது? அறியாமை மற்றும் கர்மம், ஆகியவை ஆன்மாவின் புதுப்பிறவியில் அதன் சூழ்நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்த முடிந்தாலும், அவற்றால் ஓர் ஆன்மாவை உண்டாக்க முடியாது. புத்த கோட்பாட்டுக்கான மறுப்புகள் அடுத்தடுத்த சுலோகங்களின் பின்தொடர்ந்து வருகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மேலும், மறுபிறப்பின் விளைவாக இருக்கும் ஒன்று, உண்மையில் முந்தைய இருப்பில் வேறாக இருக்கும்போது, ஒருவன் செய்யும் செயல்கள், அடுத்த இருப்பில் (அவற்றை அனுபவிக்க அந்தச் செயலைச் செய்தவன் இல்லாமல்) மற்றொருவனின் மீது குவிவதால், ஈகை பயில்வது, அல்லது அறிவு, தவசக்தி ஆகியவற்றை அடைவது ஆகியவை ஒரு மனிதனிடம் என்ன நிறைவை ஏற்படுத்த முடியும்?(36) இப்பிறவியில் ஒருவன், முற்பிறவியில் மற்றொருவனால் செய்யப்பட்ட செயல்களுக்காகத் துன்பத்தை அடைவான், அல்லது துன்பத்தை அடைந்து மீண்டும் இன்பத்தை அடைவான் என்ற விளைவை இப்போது மறுக்கப்படும் இந்தக் கோட்பாடு முன்வைக்கிறது. எனினும், இந்த உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காண்பதன் மூலம், புலப்படாததைக் குறித்த சரியான தீர்மானத்தை நாம் அடைய முடியும்[16].(37) (பௌத்த வாழ்வுக் கோட்பாட்டின்படி) மறுபிறவியின் விளைவால் உண்டாகும் தனிப்பட்ட நனவுநிலை, முற்பிறவியில் இருந்த நனவுநிலையில் இருந்து வேறுபட்டதாகும். எனினும், அந்தத் தனிப்பட்ட நனவுநிலையின் எழுச்சி, அல்லது தோற்றம் குறித்து அந்தக் கோட்பாட்டில் விளக்கப்படுவதும் அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை. (முற்பிறவியில் இருந்த) நனவுநிலையானது, உடல் அழிவது வரை மட்டுமே இருந்து நிலையற்றதாக மட்டுமே இருப்பதால் அது நித்திய தன்மைக்கு முற்றிலும் முரண்பட்டதாக இருக்கிறது. எதற்கு முடிவு உண்டோ, அஃது அதன் முடிவுக்குப் பிறகு இரண்டாம் நனவுநிலையை உண்டாக்கவல்லது என்பது ஏற்புடையதல்ல. மேலும், இரண்டாம் நனவுநிலை உண்டாவதன் காரணமாக முந்தைய நனவுநிலை அழிகிறது எனக் கொண்டால், அப்போது, ஒரு கனத்த தடியின் மூலம் மனித உடல் இறந்தவுடன், அசைவிழந்த அந்த உடலில் இருந்து உடனே இரண்டாவது உடல் எழ வேண்டும்[17].(38)

[16] "ஒரு மனிதனின் செயல்கள் மற்றொரு மனிதனின் நன்மை அல்லது தீமையைப் பாதிப்பது இவ்வுலகில் ஒருபோதும் காணப்படுவதில்லை. சித்திரன் இரவு காற்றில் வெளிப்பட்டிருந்தால், மித்திரனுக்குச் சளி பிடிக்காது. இரண்டு பிறவிகளில், இரண்டு இருவருக்கிடையில் எந்த ஒற்றுமையும் இல்லையெனில், இந்த நேரடி சாட்சியமே, ஒருவனின் முற்பிறவி செயல்கள் அடுத்த வாழ்வில் மற்றொருவனின் வாழ்வைப் பாதிக்கும் என்ற முரண்பாட்டுக்குத் தீர்வாக அமையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[17] "சுலோகத்தின் இரண்டாவது வரியை நான் குறிப்பிட்ட அளவுக்கு விரித்து வழங்கியிருக்கிறேன் என்று சொல்ல அவசியமில்லை. சரியான வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பாக இதைச் செய்திருந்தால் முற்றிலும் அறிவுக்குப் பொருத்தமானதாக இராது. எடுத்துக்காட்டாக, நான், "எது தனிப்பட்ட நனவு நிலையோ அது வேறுபட்டதாகும். எதனிலிருந்து அது வந்ததோ, அது தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை" என்று கொடுக்க வேண்டியது இருந்திருக்கும். இந்த 37 மற்றும் 38ம் சுலோகங்களில் வரும் பகுதி கும்பகோணம் பதிப்பில், "ஸ்வரூபத்தாலும், ஜாதியாலும், சுபகர்மங்களாலும் அவற்றின் பயன்களாலும் இது வேறாயிருக்கிறபொழுது இதில் அதுதான் என்ற பிரத்யபிஜ்ஞை என்ற ஞானம் எவ்விதம் உண்டாகக்கூடும்? விரும்பப்படாத பயனுண்டாவதும் எவ்விதம் கூடும்? இப்படியிருந்தாலும் தானத்தாலும், கல்வியாலும், தவத்தாலும், பலத்தாலும் என்ன பிரியமுண்டாகக்கூடும்? எந்த எந்தக் கர்மம் செய்யப்படுகிறதோ அது அது அனைத்தும் வேறு ஒருவனை அடைகிறதே; இவ்விதமிருந்தால் இவன் இவ்விடத்திலேயே வேறு ஒருவன் செய்த கர்மங்களால் துக்கமுள்ளவனாகவும், ஸுகமுள்ளவனாகவும் ஆகக்கூடுமென்பது நிச்சயமாய்த் தெரியக்கூடுமே; க்ஷணிகஜ்ஞானரூபியான ஆத்மாவானது தான் நசித்து மேன்மேலும் வெவ்வேறான ஆத்மாவை உண்டுபண்ணுகிறதென்று சொன்னால் உலக்கைகளால் சரீரத்தை அடிக்கும்பொழுது வேறு சரீரம் உண்டாவதைக் காணோமே; ஆகையால் இந்த மதம் ஸரியானதன்று" என்றிருக்கிறது.

மேலும், அவர்களது உயிர் அழிவு (அல்லது நிர்வாணம், அல்லது சத்வசங்கியக்) கோட்பாடானது, பருவகாலங்கள், அல்லது வருடம், அல்லது யுகம், அல்லது வெப்பம், அல்லது குளிர், அல்லது ஏற்படைய, ஏற்பில்லாத பொருட்களைப் போல மீண்டும் மீண்டும் தோன்றும் தோற்றப்பாடே அழிவு என்பதற்கான மறுப்புக்கு வெளிப்பட்டிருக்கிறது[18].(39) இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள், இந்த மறுப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு புதிய நனவு நிலையும் பற்றிக் கொள்ளும் நிரந்தரமான ஓர் ஆன்மாவின் இருப்பை உறுதிசெய்தால், நிரந்தரமான ஒரு பொருள் முதுமைக்கும், மரணத்திற்கும் ஆட்பட்டு அழிவைக் கொண்டுவந்து, அதே வேளையில் தானும் பலவீனமடைந்து அழிகிறது என்ற புதிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்பார்கள். ஒரு மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள் காலப்போக்கில் பலவீனமடைந்தால், இறுதியில் அந்த மாளிகையே விழப்போவது நிச்சயம்[19].(40) புலன்கள், மனம், காற்று, குருதி, இறைச்சி, எலும்புகள் அகியன (மற்றும் உடலில் உள்ளடங்கிய அனைத்தும்) ஒன்றன் பின் ஒன்றாக அழிவையடைந்து, அவை ஒவ்வொன்றும் தங்கள் தங்கள் உற்பத்திக் காரணங்களுக்குள் நுழைகின்றன[20].(41)

[18] "(ஏற்கனவே சொல்லப்பட்டது போல) இரண்டாம் நனவுநிலையானது, முந்தைய நனவுநிலையின் அழிவால் விளைந்ததெனில், அந்த அழிவு அழிவே ஆகாது, ஒரு முறை நிர்வாணம் அடையப்பட்ட பிறகும், மீண்டும் புதிய நனவுநிலையும், புதிய பிறவியும் ஏற்படக்கூடும். நிர்வாணத்தால் ஏற்படும் பயன் ஏதுமில்லை என்றாகிவிடும். எனவே, பௌத்த நிர்வாணமானது, பிராமணச் சாத்திரங்களில் குறிப்பிடப்படுவதைப் போன்ற இறுதி விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்காது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[19] "இந்த வாதத்தின்படி, பௌத்தர்கள், மீண்டும் மீண்டும் தோன்று நனவுநிலைகள் பற்றிக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர ஆன்மாவின் இருப்பை உறுதி செய்வதன் மூலம் எந்த நன்மையையும் அடையமாட்டார்கள். பிராமணச் சாத்திரங்களின்படி ஆன்மாவனது குணங்கள், அல்லது உடைமைகள் எதையும் கொண்டதல்ல. அது நித்தியமானது, மாற்ற முடியாதது, குணங்கள் அனைத்தையும் சாராதிருப்பதுமாகும். ஆன்மாவுக்குக் குணங்கள் உண்டென உறுதிசெய்வது, அதன் அழிவுத்தன்மையும், அதன் மூலம் அதன் நிரந்தரத்தன்மை அல்லது அழிவின்மை ஆகிய நிலைகளுக்கும் அழிவுண்டு என்ற நிலைக்கே வழிவகுக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "திதிகளும், ருதுக்களும், வருஷமும், சீதமும், உஷ்ணமும், விருப்பும், வெறுப்பும் எவ்விதம் சென்றது காணப்படுகிறதில்லையோ அதுபோல மோக்ஷமாகும். கிழத்தனத்தாலும் நாசத்தையுண்டுபண்ணும் ம்ருத்யுவாலும் சூழப்பட்டவனுக்கு வீட்டினுடைய வஸ்துவைப் போலப் பலவீனமாயிருப்பது முந்தி முந்தி நாசமடையும்" என்றிருக்கிறது.

[20] "புலன்கள் அழிவடையும்போது, எவற்றின் குணங்களாக இருந்தனவோ அந்த உற்பத்திக் காரணங்களுக்குள், அல்லது பொருட்களுக்குள் கலந்துவிடுகின்றன. அந்தக் காரணங்கள் அல்லது பொருட்கள் என்பன ஆதி பொருள் அல்லது பூதங்களே ஆகும். குணங்கள் அழிவை அடைந்தாலும், (அவை எதன் குணங்களாக இருந்தனவோ) அந்தப் பொருட்கள் அழிவடையாது என்ற ஊகத்திற்கே இது வழிவகுக்கும். நிரந்தரமானதும், சொந்த நனவுநிலை முதலியவற்றைக் குணங்களாகக் கொண்டதாகவும் ஆன்மா இருப்பதால் {பௌத்தர்கள் இஃதை ஏற்பதில்லை}, ஆதி பொருள் தன் குணங்களை அழித்து நீடித்திருப்பிருப்பதைப் போல அதுவும் நீடித்திருக்கும் என்பதால் இது பௌத்தக் கோட்பாட்டைக் காக்கக்கூடும். ஆனால் இந்தக் கோட்பாடு தத்துவம் சார்ந்ததல்ல, மேலும் இஃது ஒப்புடைமையற்றதுமாகும் எனப் பேசுபவர் வாதிடுகிறார். பொருள் என்பது குணங்களின் இணைதல் ஆகும். குணங்கள் அழிக்கப்பட்டால், பொருளும் அழிவடையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



மேலும், மாற்றப்பட முடியாததும், புத்தி, நனவுநிலை {அஹங்காரம்} மற்றும் வழக்கமான பிற குணங்கள் ஆகியவற்றின் புகலிடமும், இவை யாவற்றில் இருந்தும் பிரிந்திருப்பதும், நித்தியமானதுமான ஆன்மாவின் இருப்பு உறுதி செய்யப்பட்டால், அஃது இவ்வுலகில் வழக்கமாகச் செய்யப்படும் அனைத்தையும் பொருளற்றதாக்கும், குறிப்பாக ஈகை மற்றும் பிற அறச்செயல்களின் கனிகளைப் பொருளற்றதாக்கும் அத்தகைய உறுதிப்பாடு மற்றொரு மிக முக்கிய மறுப்புக்கு வெளிப்பட்டு நிற்கும். அச்செயல்களையும், உலகின் மனித ஒழுக்கம் தொடர்புடைய செயல்கள் அனைத்தையும் தூண்டும் ஸ்ருதிகளின் தீர்மானங்களும் பொருளற்றவையாகும். ஏனெனில், புத்தி மற்றும் மனத்தில் இருந்து ஆன்மாவின் தொடர்பறுந்தால், நற்செயல்கள் மற்றும் வேத சடங்குகளின் கனிகளை அனுபவிக்க ஒருவனும் இருக்கமாட்டான்[21].(42) இவ்வாறு பல்வேறு வகையான ஊகங்கள் மனத்தில் எழுகின்றன. இக்கருத்து சரியா, அக்கருத்து சரியா என்பதைத் தீர்மானிக்க எவ்வழியும் இல்லை.(43) இக்கருத்துகளைச் சிந்திப்பதில் ஈடுபடும் குறிப்பிட்ட மனிதர்கள், ஊகத்தின் அடிப்படையிலான குறிப்பிட்ட வரிகளையே பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட கோட்பாடுகளை நோக்கி செலுத்தப்படும் இவற்றைக் குறித்த புரிதல்கள் {புத்தி}, முற்றிலும் அவற்றிலேயே ஈடுபட்டு, இறுதியில் அவற்றிலேயே தொலைந்து போகின்றன.(44) இவ்வாறே மனிதர்கள் அனைவரும் நன்மை அல்லது தீமையின் தொடர்ச்சியால் துன்பத்தை அடைகிறார்கள். வேதங்களே, யானைகளை வழிநடத்தும் யானைவளர்ப்பவர்களைப் போல அவற்றை {தர்க்க மதக் கருத்துகளைச்} சரியான பாதைக்குக் கொண்டுவருகின்றன[22].(45)

[21] "பேசுபவர், இங்கே ஆன்மாவின் பண்பியல்பு குறித்த பழைய பிராமணக் கோட்பாட்டைத் தாக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[22] "ஒருவேளை அவை {வேதங்கள்} வெளிப்படுத்தல் அடிப்படையில் இருப்பதால் அவ்வாறு செய்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "உலக யாத்திரை நடப்பதும் தானதர்மங்களின் பயனுண்டாவதும் அததற்குள்ள வேதவசனங்களும், லோகவியவகாரங்களும் நசிக்குமேயென்று இவ்விதமான பலயுக்திகள் மனத்திலுண்டாகின்றன. ’இது உண்மையானது; இது உண்மையாகாது’ என்று யாதொன்றும் காணப்படுகிறதில்லை. இவ்விதம் ஆலோசிப்பவர்களும் அந்த அந்த விஷயத்தைப் பற்றி ஓடுகிறவர்களுமான அவர்களின் புத்தியானது ஓரிடத்தில் பிரவேசஞ்செய்கிறது; மரத்தைப் போல அதில்தானே ஜீர்ணமடைகிறது. இவ்விதம் நன்மைகளாலும், தீமைகளாலும் கஷ்டப்படும் ஜந்துக்கள் யாவும் யானைக்காரர்களால் யானைகள் இழுக்கப்படுவது போல வேதங்களால் இழுக்கப்படுகின்றன" என்றிருக்கிறது.

பலவீனமான மனம் படைத்த பல மனிதர்கள், பெரும் மகிழ்ச்சி நிறைந்த பொருட்களில் பேராசை கொள்கிறார்கள். எனினும், விரைவில் அவர்கள் அதைவிடப் பெரிய துயரத்தைச் சந்தித்து, ஆசைப்பட்ட இறைச்சியிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிந்து, மரணத்தைச் சந்திக்கிறார்கள்.(46) மரணத்திற்கு விதிக்கப்பட்டவனும், நிலையற்ற வாழ்வைக் கொண்டவனும், சொந்தங்கள், நண்பர்கள், மனைவியர் போன்ற பிற வகை உடைமைகளைக் கொண்டவனுமான ஒருவனுக்கு இவற்றால் என்ன பயன்? இவை அனைத்தையும் கைவிட்டு மரணத்தைச் சந்திக்கும் ஒருவன், இவ்வுலகை எளிதாகக் கடந்து, மீண்டும் திரும்பாமல் இருக்கிறான்.(47) பூமி {நிலம்}, வெளி {ஆகாயம்}, நீர், வெப்பம் {நெருப்பு}, காற்று ஆகியன எப்போதும் உடலை ஆதரித்து வளப்படுத்துகின்றன. இதைச் சிந்திக்கும் ஒருவனால் எவ்வாறு ஒருவனுடைய உடலில் பற்றுக் கொள்ள முடியும்? உண்மையில், அழிவுக்கு உள்ளாகும் உடலில் எந்த இன்பமுமில்லை" {என்றார் பஞ்சசிகர்}.(48) கபடத்தில் இருந்து விடுபட்டவையும், (வேள்விகள் மற்றும் பிற வேதச் செயல்பாடுகளுக்கு உற்சாகமளிக்காமல்) மாயையின் தொடர்பற்றவையும், உயர்ந்த மதிப்பு கொண்டவையும், ஆன்மாவைக் குறித்தவையுமான பஞ்சசிகரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஜனதேவன் ஆச்சரியத்தால் நிறைந்து மீண்டும் அந்த முனிவரிடம் பேச ஆயத்தமானான்" என்றார் {பீஷ்மர்}[23].(49)

[23] "இந்தப் பகுதி முழுவதும் கங்குலி பௌத்தக் கோட்பாடு என்று சொல்வதை நாம் நாத்திகக் கோட்பாடு என்றே கொள்ளலாம். இந்தப் பகுதி முழுவதும் பஞ்சசிகர் பௌத்தத்திற்குப் பதிலளிப்பதாகக் கங்குலி கொள்கிறார். பஞ்சசிகரின் காலம் ஜனக குலத்தின் காலமாகச் சொல்லப்படுவதால் பௌத்தவாதத்திற்கு இடமிருந்திருக்காது, நாத்திகவாதமே இருந்திருக்கக்கூடும். ஆத்மா / பரமாத்மா இல்லை என்பது நாத்திகக் கோட்பாடே. இருப்பினும் அவர்கள் தேவர்களை வழிபடுபவர்களாகவும், மறுபிறவிக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுவதால், மேலே ஓர் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளதைப் போல இவர்களைச் சுகதர்கள் அல்லது தர்க்க மதத்தார் என்றும் கொள்ளலாம்.

சாந்திபர்வம் பகுதி – 218ல் உள்ள சுலோகங்கள் : 49

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்