Nature! | Shanti-Parva-Section-222 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 49)
பதிவின் சுருக்கம் : உண்மையில் மனிதனே செயல்படுபவனாகக் கருதப்பட வேண்டுமா என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, இன்புறவோ, பொறுத்துக் கொள்ளவோ கனிகளை உண்டாக்கும் நோக்கத்தில், நற்செயல்களும், தீச்செயல்களும் மனிதனைப் பற்றுகின்றன.(1) எனினும், மனிதனையே செயல்படுபவனாகக் கருதலாமா? அல்லது அவன் அவ்வாறு கருதப்படக்கூடாதா? இக்கேள்வியில் என் மனம் ஐயத்தால் நிறைகிறது. ஓ! பாட்டா, இதைக் குறித்து நான் உம்மிடம் இருந்து விரிவாகக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாக, பழங்கதையில் பிரஹலாதனுக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(3) தைத்தியர்களின் தலைவனான பிரஹலாதன் உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்றில்லாதவனாக இருந்தான். அவனது பாவங்கள் கழுவப்பட்டன. நற்குலத்தில் பிறந்த அவன், பெரும் கல்வியைக் கற்றிருந்தான். மயக்கம் மற்றும் செருக்கில் இருந்து விடுபட்டவனாகவும், நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} எப்போதும் நோற்பவனாகவும், பல்வேறு நோன்புகளை அர்ப்பணிப்புடன் நோற்பவனாகவும்(4) இருந்த அவன், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாகக் கருதினான். தற்கட்டுப்பாடுடைய அவன், ஒரு வெற்று அறையில் {சிறையில்} தன் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தான். படைக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் தோற்றம் மற்றும் அழிவை அறிந்த அவன்,(5) தனக்கு நிறைவு தராதவற்றில் ஒருபோதும் கோபம் கொள்ளாதவனாகவும், ஏற்புடைய பொருட்களை அடையும்போது ஒருபோதும் மகிழாதவனுமாக இருந்தான். அவன் தங்கத்தையும், மண்ணையும் சமமான பார்வையுடன் பார்ப்பவனாக இருந்தான்.(6) ஆன்மா குறித்த கல்வி, விடுதலையை {முக்தியை} அடைவது, உறுதியான ஞானம் ஆகியவற்றில் நிலையாக ஈடுபட்ட அவன் வாய்மையைக் குறித்த நிலையான தீர்மானங்களை அடைந்தவனாக இருந்தான்.(7)
பொருட்கள் அனைத்திலும் உயர்வானது, உயர்வல்லாதது ஆகியவற்றை அறிந்தவனாக, அனைத்துமறிந்தவனாக, உலகளாவிய பார்வை கொண்டவனாக இருந்த அவன், ஒருநாள் தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்திய நிலையில் ஒரு தனிமையான அறையில் இருந்தபோது, அவனை விழிப்படையச் செய்ய விரும்பிய சக்ரன் {இந்திரன்} அவனை அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(8) "ஓ! மன்னா {பிரஹலாதா}, ஒரு மனிதன் அனைவரின் மதிப்பை வெல்லத்தக்க அனைத்துக் குணங்களும் உன்னுள் நிரந்தரமாக இருப்பதை நான் காண்கிறேன்.(9) உன் புத்தியானது, ஒரு குழந்தையுடையதைப் போலப் பற்று மற்றும் வெறுப்பில் {விருப்புவெறுப்பில்} இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. நீ ஆன்மாவை அறிந்திருக்கிறாய். ஆன்மா குறித்த அறிவை அடைய எது சிறந்த வழிமுறையென நீ கருதுகிறாய்?(10) நீ உனது முந்தைய நிலையில் இருந்து வீழ்ந்தவனாக, உனது எதிரிகள் {தேவர்கள்} கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவனாக, செழிப்பை இழந்தவனாகக் கயிறுகளால் கட்டப்பட்டவனாக இப்போது இருக்கிறாய். நீ இருக்கும் தற்போதைய சூழ்நிலை துன்பத்தைத் தரவல்லது. இருப்பினும், ஓ! பிரஹலாதா நீ எவ்வாறு துன்பங்கொள்ளாமல் இருக்கிறாய்?(11) ஓ! திதியின் மகனே, இந்நிலை ஞானத்தை அடைந்ததால் ஏற்படுகிறதா? அல்லது உன் மனோவுறுதியால் ஏற்படுகிறதா? ஓ! பிரஹலாதா, உனக்கு நேர்ந்த பேரிடர்களைப் பார், இருப்பினும் நீ மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பவனைப் போலத் தெரிகிறாயே" என்று கேட்டான் {இந்திரன்}.(12)
இவ்வாறு இந்திரனால் தூண்டப்பட்டவனும், உறுதியும், வாய்மையில் தீர்மானமான முடிவுகளைக் கொண்டவனுமான அந்தத் தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்}, முன்னவனிடம் {இந்திரனிடம்}, பெரும் ஞானத்தைக் குறிக்கும் இந்த இனிய வார்த்தைகளில் மறுமொழி கூறினான்.(13)
பிரஹலாதன் {இந்திரனிடம்}, "படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் தோற்றம் மற்றும் அழிவு ஆகியவற்றை அறியாதவன், அந்த அறியாமையின் மூலம் திகைப்படைகிறான். எனினும், அந்த இரண்டையும் அறிந்தவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(14) அனைத்து வகைகளைச் சேர்ந்தவையாக இருக்கும் உள்ள பொருட்கள், இல்லாத பொருட்கள் ஆகியவை தங்கள் சொந்த இயல்பின் விளைவால் தோன்றுகின்றன, அல்லது மறைகின்றன. (அத்தகைய தோற்றப்பாடு உண்டாவதற்கு) எந்தத் தனிப்பட்ட முயற்சியும் தேவைப்படுவதில்லை[1].(15) எனவே, தனிப்பட்ட முயற்சியேதும் இல்லாத போது, நாம் காணும் இவை அனைத்தையும் எந்த ஒரு தனிப்பட்டவனும் உண்டாக்கவில்லை {எந்த மனிதனின் செயலிலும் இவை உண்டாகவில்லை} என்பது வெளிப்படை. ஆனால், (உண்மையில்) அந்த ஒருவன் (அல்லது சித்) ஒருபோதும் எதையும் செய்வதில்லை, இருப்பினும் (அறியாமையின் ஆதிக்கத்தின் மூலம்) நாமே நிறுவுகிறோம் என்ற ஒரு நனவுநிலை {அஹங்காரம்} தானே படர்கிறது.(16) நல்ல அல்லது தீய செயல்களைச் செய்பவனாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன், குறை ஞானத்தைக் கொண்டவனாவான். என் தீர்மானத்தின்படி அத்தகைய மனிதன் உண்மையை அறிந்தவனல்ல[2].(17)
[1] "இருப்புநிலை தோன்றி மறைகிறது. இல்லாத நிலையும் தோன்றி மறைகிறது. இஃது இலக்கண ரீதியான ஒரு கட்டமைப்பாகும். உண்மையில் இந்த வார்த்தைகள், அனைத்து வகைத் தோற்றப்பாடுகளின் தோற்றத்தையும் மறைவையும் மட்டுமே குறிக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "ஆன்மாவே அனைத்துச் செயல்களையும் செய்வதாகத் தெரிந்தாலும், உண்மையில் அது செயலின்மை கொண்டது என்று முந்தைய பகுதிகளில் சொல்லப்பட்ட கோட்பாட்டு இங்கே குறிப்பிடப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! சக்ரா {இந்திரா}, ஒருவன் {மனிதன்} என்றழைக்கப்படுபவன் உண்மையில் செயல்படுபவனாக இருந்தால், தன் நன்மைக்காக அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியால் மகுடம் சூட்டப்பட வேண்டும். அந்தச் செயல்கள் ஏதும் தோல்வியடையக் கூடாது.(18) இயன்றதில் உயர்ந்த அளவுக்குப் போராடுபவர்களுக்கு மத்தியிலும், விரும்பப்படாதது நடக்காததும், விரும்புவது நடப்பதும் காணப்படவில்லை. அவ்வாறிருக்கையில், தனிப்பட்ட முயற்சியால் என்ன பயன் ஏற்படுகிறது?(19) சிலரின் வழக்கில், அவர்களது பங்காக எந்த முயற்சியும் செய்யப்படாமலே விரும்பாதது நடக்காததையும், விரும்புவது நிறைவேறுவதையும் நாம் காண்கிறோம். அவ்வாறெனில், இஃது இயற்கையின் {ஸ்வபாவத்தின்} விளைவாகவே இருக்க முடியும்.(20) இயல்புக்குமிக்கத் தன்மைகளை வெளிப்படுத்தும் சிலர், மேன்மையான புத்தியைக் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த குணமும், சிறுமதியும் கொண்ட பிறரிடம் இருந்து செல்வத்தை வேண்டி நிற்பதையும் காண முடிகிறது.(21) உண்மையில், இயற்கையின் தூண்டுதலின் பேரில், ஒருவனுக்குள் நல்ல, அல்லது கெட்ட குணங்கள் அனைத்தும் நுழையும்போது, அவன் (தன் மேன்மையான உடைமைகளைக் குறித்து) தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்கு என்ன இருக்கிறது?(22) இவை அனைத்தும் இயற்கையில் {ஸ்வபாவத்தில்} இருந்து பாய்கின்றன. இதுவே என் தீர்மானமான முடிவாகும். என்னைப் பொறுத்தவரையில் விடுதலையும் {முக்தியும்}, தன்னறிவும் {சுயஞானமும் / ஆன்ம ஞானமும்} அதே மூலத்தில் இருந்தே பாய்கின்றன.(23)
இவ்வுலகில், மனிதர்களைப் பற்றியிருக்கும் நல்ல அல்லது தீய கனிகள் அனைத்தும், செயல்களின் விளைவுகளாகவே கருதப்படுகின்றன. நான் இப்போது செயல்களைக் குறித்து முழுமையாக உனக்குச் சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(24) ஒரு காகம், ஏதோ உணவை உண்ணும்போது, மீண்டும் மீண்டும் கரைந்து (தன் இனத்தைச் சேர்ந்த பிற காகங்களுக்கு) அந்த உணவின் இருப்பை அறிவிக்கிற வகையிலேயே நம் செயல்கள் அனைத்தும் இயற்கையின் அறிகுறிகளை மட்டுமே அறிவிக்கின்றன.(25) உயர்ந்ததும், தானே நிலைத்திருப்பதுமான இயற்கையை அறியாமல், அவளது {இயற்கையின்} மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவன், தனது அறியாமையின் விளைவால் திகைப்படைகிறான். எனினும், இயற்கை மற்றும் அதன் மாறுபாடுகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் ஒருவன் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(26) இருக்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கையையே தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. இதில் ஒருவன் அடையும் தீர்மான உறுதியின் விளைவால் அவன் செருக்காலோ, ஆணவத்தாலோ ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(27) அறவிதிகள் அனைத்தின் தோற்றுவாயும் எதுவென நான் அறியும்போதும், அனைத்துப் பொருட்களின் நிலையில்லாமையையும் நான் அறியும்போதும், ஓ! சக்ரா, துயரில் ஈடுபட இயலாதவனாகிறேன். இவை அனைத்தும் ஓர் எல்லைக்குட்பட்டவையாக {முடிவு கொண்டவையாக} இருக்கின்றன.(28)
பற்றில்லாமல், செருக்கில்லாமல், ஆசையும், நம்பிக்கையும் {எதிர்பார்ப்பும்} இல்லாமல், கட்டுகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அனைத்தில் இருந்தும் தொடர்பறுத்துக் கொண்டு, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தோன்றுவதையும், மறைவதையும் பார்த்துக் கொண்டு பெரும் மகிழ்ச்சியுடன் நான் என் காலத்தைக் கடத்தி வருகிறேன்.(29) ஓ! சக்ரா {இந்திரா}, ஞானம், தற்கட்டுப்பாடு, நிறைவு ஆகியவற்றைக் கொண்டவனும், ஆசையும், எதிர்பார்ப்பும் இல்லாதவனும், தன்னறிவின் {சுயஞானத்தின்} ஒளியில் அனைத்துப் பொருட்களையும் காண்பவனுமான ஒருவனுக்கு எந்தத் தொல்லையோ கவலையோ இருக்காது.(30) இயற்கையின் மீதோ, அவளது {இயற்கையின்} மாற்றங்களின் மீதோ நான் எந்த விருப்பையோ, வெறுப்பையோ கொள்வதில்லை. இப்போது நான் ஒருவரையும் என் பகைவராகவோ, என் சொந்தக்காரனாகவோ காணவில்லை.(31) ஓ! சக்ரா, எக்காலத்திலும் நான் சொர்க்கத்திலோ, இவ்வுலகிலோ, பாதாள உலகங்களிலோ பேராசை கொள்ளவில்லை. ஆன்மாவைப் புரிந்து கொள்வதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்ற நிலையேதும் கிடையாது. ஆனால் அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்த நிலையில் உள்ள ஆன்மாவால் பேரின்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே நான் எதையும் விரும்புவதில்லை" என்றான் {பிரஹலாதன்}[3].(32)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஸ்வர்க்கத்திலும், பாதாளத்திலும், பூமியிலும் நான் விருப்பமுள்ளவனல்லேன். அறிய வேண்டியதிலும், அறிவிலும், அறியாமையிலும் (எனக்கு) வேற்றுமையில்லை" என்றிருக்கிறது.
சக்ரன் {இந்திரன் பிரஹலாதனிடம்}, "ஓ பிரஹலாதா, எந்த வழிமுறைகளின் மூலம் இவ்வகை ஞானத்தை அடையலாம், எதன் மூலம் இவ்வகை அமைதியை ஒருவன் தனதாக்கிக் கொள்ளலாம் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.(33)
பிரஹலாதன் {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா {இந்திரா}, எளிமை, கவனமிக்கத் தன்மை, ஆன்மாவைத் தூய்மையாக்கல், ஆசைகளைத் திறமையாகக் கட்டுப்படுத்தல், பெரியோர்களுக்காகக் காத்திருத்தல் {பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்} ஆகியவற்றின் மூலம் ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்லலாம்.(34) இயற்கையிலிருந்தே ஒருவன் ஞானம் அடைகிறான் என்பதையும், அதே காரணத்தின் மூலமே அமைதியையும் அடைகிறான் என்பதையும் அறிவாயாக. உண்மையில், அனைத்தையும் நீ இயற்கையின் மூலமே பார்க்கிறாய்" என்றான்.(35)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவ்வாறு தைத்தியர்களின் தலைவனால் {பிரஹலாதனால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, ஆச்சரியத்தால் நிறைந்து, உற்சாகமிக்க இதயத்துடன் அவ்வார்த்தைகளைப் பாராட்டினான்.(36) பிறகு, அந்த மூவுலகங்களின் தலைவன் {இந்திரன்}, தைத்தியர்களின் தலைவனை {பிரஹலாதனை} வழிபட்டு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு, தன் சொந்த வசிப்பிடத்தை நோக்கிச் சென்றான்" என்றார் {பீஷ்மர்}.(37)
சாந்திபர்வம் பகுதி – 222ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |