Indra and Vali! | Shanti-Parva-Section-223 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 50)
பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும், பலிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பலியைத் தேடிய இந்திரன்; பிரம்மனிடம் விசாரித்தது; பலி இருக்கும் இடத்தைச் சொன்ன பிரம்மன்; கழுதையாகப் பிறந்திருந்த பலியைக் கண்ட இந்திரன் அவனை எள்ளி நகையாடியது; காலத்தின் வன்மை குறித்து இந்திரனுக்குப் பதிலளித்த பலி...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, செழிப்பை இழந்தவனும், காலத்தின் கனத்த தண்டத்தால் நொறுக்கப்பட்டவனுமான ஓர் ஏகாதிபதி, எவ்வகைப் புத்தியைப் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் அதற்கு மேலும் வாழ முடியும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகப் பழங்கதையில் வாசவனுக்கும் {இந்திரனுக்கும்}, விரோசனனின் மகனான பலிக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(2) வாசவன், அசுரர்கள் அனைவரையும் அடைக்கிய பிறகு, ஒரு நாள், பிரம்மனிடம் சென்று, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கி, பலி எங்கிருக்கிறான் என்பது குறித்து விசாரித்தான்.(3)
{இந்திரன் பிரம்மனிடம்}, "ஓ! பிரம்மா, தான் விரும்பிய அளவுக்குப் பெரிதாகத் தானம் செய்யப்பட்டாலும் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்த பலியை எங்குக் காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக.(4) அவன் காற்றின் தேவனாக இருந்தான். அவன் வருணனாக இருந்தான். அவன் சூரியனாக இருந்தான். அவன் சோமனாக இருந்தான். அனைத்து உயிரினங்களுக்கும் வெப்பமூட்டக்கூடிய அக்னியாக அவன் இருந்தான். (நம் அனைவரின் பயன்பாட்டுக்கான) நீராகவும் ஆனான். இப்போது அவன் எங்கிருக்கிறான் என்பதை நான் காணவில்லை.(5) முன்பு அவன் (சூரியனாக) திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டி (மாலையில்) மறைந்தான். சோம்பலைக் கைவிட்ட அவன், உரிய காலங்களில் அனைத்து உயிரினங்களின் மீதும் மழையாகப் பொழிந்தான். அந்தப் பலியை நான் இப்போது காணவில்லை. ஓ! பிரம்மா, உண்மையில் இப்போது நான் அந்த அசுரர்களின் தலைவனை {பலியை} எங்கே காண முடியும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)
பிரம்மன் {இந்திரனிடம்}, "ஓ! மகவத் {இந்திரா}, இப்போது நீ இவ்வாறு பலியைக் குறித்து விசாரிப்பது உனக்குத் தகாது. எனினும், ஒருவனால் கேட்கப்படும்போது மற்றொருவன் பொய் பேசக்கூடாது என்ற காரணத்தினால் நான் பலி எங்கிருக்கிறான் என்பதை உனக்குச் சொல்வேன்.(7) ஓ! சச்சியின் தலைவா, பலி இப்போது ஓட்டகங்களிலோ, காளைகளிலோ, கழுதைகளிலோ, குதிரைகளிலோ தன் பிறப்பை எடுத்து, தன் இனத்தில் முதன்மையானவனாக ஒரு வெற்று அறையில் இருக்கலாம்" என்றான்.(8)
சக்ரன் {இந்திரன்}, "ஓ! பிரம்மா, நான் பலியை ஒரு வெற்று அறையில் சந்தித்தால், அவனை நான் கொல்லவேண்டுமா? அல்லது விட வேண்டுமா? நான் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(9)
பிரம்மன், "ஓ சக்ரா, பலிக்குத் தீங்கிழைக்காதே. பலி மரணத்திற்குத் தகுந்தவனல்ல. ஓ வாசவா, ஓ சக்ரா {இந்திரா}, மறுபுறம், அவனிடம் அறநெறி குறித்த போதனையை நீ விருப்பத்துடன் வேண்ட வேண்டும்" என்றான்".(10)
பீஷ்மர் தொடர்ந்தார், "தெய்வீகமான படைப்பாளனால் {பிரம்மனால்} இவ்வாறு சொல்லப்பட்ட இந்திரன், பெரும் காந்தியுடன் கூடிய சூழ்நிலையில் ஐராவதத்தின் முதுகில் அமர்ந்து கொண்டு உலகத்தில் திரிந்தான்.(11) படைப்பாளன் சொன்னது போலவே அவன் {இந்திரன்}, ஒரு கழுதையின் வடிவத்தை உடுத்தி ஒரு வெற்று அறையில் வாழ்ந்திருந்த பலியைச் சந்தித்தான்.(12)
சக்ரன் {பலியிடம்}, "ஓ! தானவா, நீ இப்போது உமிகளை உணவாக உண்டு வாழும் ஒரு கழுதையாகப் பிறந்திருக்கிறாய். நீ இவ்வகையில் பிறந்தது நிச்சயம் ஓர் இழிநிலையே. இதற்காக நீ வருந்துகிறாயா? இல்லையா?(13) நான் இதற்கு முன் ஒருபோதும் காணாததைக் காண்கிறேன். செழிப்பு, நண்பர்கள் ஆகியவற்றை இழந்தவனாக, சக்தி மற்றும் ஆற்றல் குறைந்தவனாக உன் எதிரிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் உன்னை நான் காண்கிறேன்.(14) ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்களுடன் உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களை ஒன்றுமில்லாதவர்களாகக் கணக்கிட்டு முன்பு உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய். (15) உன்னையே தங்கள் பாதுகாவலனாகக் கருதிய தைத்தியர்கள், உன் ஆட்சியின் கீழ் வாழ்ந்தார்கள். உன் சக்தியின் மூலம், பூமியானது உழவுக்குக் காத்திராமலே பயிர்களை விளைவித்தது. எனினும், இன்றோ நீ பேரிடரில் மூழ்கியிருப்பதை நான் காண்கிறேன். இதற்காக நீ துன்புறுகிறாயா? இல்லையா?(16) முன்பு நீ செருக்கு படர்ந்த முகத்துடன், கிழக்குக் கடற்கரையில் உன் உற்றாருக்கு மத்தியில் பெருஞ்செல்வங்களைப் பிரித்துக் கொடுத்த போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(17)
முன்பெல்லாம் சுடர்மிக்கக் காந்தியுடன் இருந்த நீ உன் முன் நடனமிடும் ஆயிரக்கணக்கான தெய்வீகக் காரிகைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாய்.(18) அவர்கள் அனைவரும் தாமரை மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்கள் அனைவரும் தங்கத்தைப் போன்ற பிரகாசமிக்கத் தோழிகளையும் கொண்டிருந்தனர். ஓ! தானவர்களின் தலைவா, அப்போதெல்லாம் உன் மனநில்லை என்னவாக இருந்தது? இப்போது என்னவாக இருக்கிறது?(19) தங்கத்தாலானதும், ரத்தினங்கள் மற்றும் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குடையை நீ கொண்டிருந்தாய். அந்நாட்களில் முழுமையாக நாற்பத்திரண்டாயிரம் கந்தர்வர்கள் உன் முன் நடனமிடுவார்கள்[1].(20) உன் வேள்விகளில் நீ மிகப் பெரியதும், முழுமையாகத் தங்கத்தாலானதுமான யூபத்தைக் கொண்டிருந்தாய். அத்தகைய தருணங்களில் நீ ஆயிரம் லட்சம் பசுக்களைத் தானமாக அளித்தாய். ஓ! தைத்தியா, அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?(21) முன்பு நீ வேள்வியில் ஈடுபட்டு, சம்யையைச் சுழற்றும் விதியைப் பின்பற்றி முழுப் பூமியையும் வலம் வந்தாய். அப்போது உன் மனநிலை என்னவாக இருந்தது?[2](22) நான் இப்போது அந்தத் தங்கக் கலனையோ {தங்க ஜாடியையோ}, உனது குடையையோ, உனது விசிறிகளையோ காணவில்லை. மேலும், ஓ! அசுரர்களின் மன்னா, பெரும்பாட்டனால் {பிரம்மனால்} உனக்குக் கொடுக்கப்பட்ட உன் மலர்மாலையையும் நான் காணவில்லை" என்றான் {இந்திரன்}.(23)
[1] "பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள், இரண்டாவது வரியை "ஆறாயிரம் கந்தர்வர்கள் உன் முன்பு ஏழு வகை நடனங்களை ஆடுவார்கள்" என்று கொடுத்திருக்கின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவ்விடத்தில் ஆறாயிரம் கந்தர்வர்கள் ஏழு வகுப்பாகி நர்த்தனம் செய்தார்கள்" என்றிருக்கிறது.[2] "வாட்டார மொழி {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் இந்தச் சுலோகத்தைத் தவறாகப் புரிந்திருக்கின்றனர். சம்யை என்பது முப்பத்தாறு விரல்கட்டை அளவு உயரம் கொண்ட ஒரு சிறிய மரக்கூம்பாகும். பலி அப்போது ஒரு சம்யையை வீசிக் கொண்டோ, சுழற்றிக் கொண்டோ பூமியை வலம் வந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஒரு பலமிக்க மனிதன் வீசும்போது, அந்தச் சம்யை ஒரு குறிப்பிட்ட தொலைவைக் கடக்கும். அந்த வெளி தேவயஜனம் Devayajana என்றழைக்கப்படுகிறது. பலி அத்தகைய ஒவ்வொரு தேவயஜனத்திலும் வேள்விகளைச் செய்தபடியே உலகை வலம் வந்தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் சம்யை குறித்த ஓர் அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு: "’அடி பருத்து நுனி சிறுத்து முப்பத்தாறு அங்குலம் நீளமுள்ள தடி சம்யை என்று சொல்லப்படும். அது பலசாலி ஒருவனால் எறியப்பட்டு எவ்வளவு தூரம் சென்று விழுகிறதோ அவ்வளவு வரைக்கும் ஒரு யாகம் செய்வதற்குத் தகுதியான இடம். இவ்விதம் பல யாகங்கள் செய்து பூமி முழுமையையும் யாகசாலையாக்கி அவற்றை விட்டு விலகினான்’ என்பது பழைய உரை" என்றிருக்கிறது.
பலி {இந்திரனிடம்}, "ஓ! வாசவா {இந்திரா}, நீ இப்போது என் கலனையும், குடையையும், விசிறிகளையும் காணவில்லை. பெரும்பாட்டனால் எனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட எனது மலர்மாலையையும் நீ காணவில்லை.(24) நீ கேட்கும் அந்த என் மதிப்புமிக்க உடைமைகள் இப்போது ஒரு குகையின் இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கின்றன. மீண்டும் என் நேரம் வரும்போது நான் அவற்றை நிச்சயம் காண்பேன்.(25) எனினும், இந்த உன் நடத்தை உன் புகழுக்கோ, பிறப்புக்கோ தகுந்ததல்ல. செழிப்பில் இருக்கும் நீ, வறுமையில் மூழ்கியிருக்கும் என்னைக் கேலி செய்ய விரும்புகிறாய்.(26) ஞானத்தை அடைந்தவர்கள், அதன் மூலம் நிறைவை அடைந்தவர்கள், அமைதிமிக்க ஆன்மாக்கள், உயிரினங்களுக்கு மத்தியில் அறவோராகவும், நல்லோராகவும் இருப்பவர்கள், ஒருபோதும் துயரில் துன்புறுவதோ, இன்பத்தில் மகிழ்வதோ கிடையாது.(27) எனினும், ஓ! புரந்தரா, இழிபுத்தியினாலே நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடுகறாய். என்னைப் போல நீ ஆகும்போது, இது போன்ற பேச்சுகளில் நீ ஈடுபடமாட்டாய்" என்றான் {பலி}" என்றார் {பீஷ்மர்}.(28)
சாந்திபர்வம் பகுதி – 223ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |