Tuesday, July 10, 2018

காலம்! - சாந்திபர்வம் பகுதி – 224

Time! | Shanti-Parva-Section-224 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 51)


பதிவின் சுருக்கம் : வாழும் உயிரினங்கள் இதையும், அதையும் தாங்களே செய்வதாகத் தற்புகழ்ச்சி செய்து கொண்டாலும், அனைத்துப் பொருட்களைப் படைப்பதும் அழிப்பதும் காலமே என்ற உண்மையை இந்திரனுக்குப் பலி விளக்கியதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த பலியைக் கண்டு சிரித்த சக்ரன் {இந்திரன்}, தான் முன்பு சொன்னதைவிடக் கூர்மையான ஒன்றைச் சொல்ல அவனிடம் மீண்டும் பேசினான்.(1)


சக்ரன் {இந்திரன் பலியிடம்}, "முந்தைய காலத்தில், ஆயிரம் வாகனங்கள் மற்றும் ஆயிரம் சொந்தக்காரர்கள் புடைசூழ, உன் காந்தியினால் அனைவரையும் எரித்தபடி, எங்களைப் புல்லாக மதித்து, உலகங்கள் முழுவதும் திரிந்து கொண்டிருந்தாய்.(2) எனினும், இப்போது நீ உற்றார் மற்றும் நண்பர்கள் ஆகிய இருவராலும் கைவிடப்பட்டிருக்கிறாய். உனக்கு நேர்ந்திருக்கும் இந்த வருந்தத்தக்க நிலையைக் கண்டு, நீ துயருறுகிறாயா? இல்லையா?(3) முன்பு உலகங்கள் முழுவதும் உன் ஆட்சியின் கீழ் இருந்தன, உன் இன்பமும் பெரிதாக இருந்தது. புற காந்தியில் உனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சிக்காக நீ துயருறுகிறாயா? இல்லையா? என நான் கேட்கிறேன்" என்று கேட்டான்.(4)

பலி {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா, உண்மையில், காலத்தின் போக்கில் அவை யாவற்றையும் நிலையற்றதாகக் கருதுவதால் நான் துயருறவில்லை. இந்தப் பொருட்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது.(5) ஓ! தேவர்களின் தலைவா, உயிரினங்கள் கொண்டிருக்கும் இவ்வுடல்கள் அனைத்தும் நிலையற்றவையாகும். ஓ! சக்ரா, இந்தக் காரணத்தினால் (இந்த என் கழுதைத் தோற்றத்திற்காக) நான் வருந்தவில்லை. இந்த வடிவமும் என் தவறு எதனாலும் ஏற்படவில்லை.(6) இயக்கக் கோட்பாடும், உடலும் தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே ஒன்றாகின்றன. அவை ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே அழிவை அடைகின்றன.(7) இருப்பினும், இவ்வடிவை {கழுதை வடிவை} ஏற்ற நான், நிரந்தரமாக இதனுடனே பிணைக்கப்பட்டிருக்கவில்லை. ஞானத்தின் விளைவாக இஃதை அறிந்திருப்பதால் கவலைக்கான எந்தக் காரணமும் எனக்கில்லை.(8) ஆறுகள் அனைத்தின் இறுதி ஓய்விடமாகப் பெருங்கடல் இருப்பதைப் போல, உடல் படைத்த உயிரினங்கள் அனைத்தின் கதியும் மரணம்தான். ஓ! வஜ்ரதாரியே, இதை நன்கறிந்த மனிதர்கள் ஒருபோதும் திகைப்படைவதில்லை.(9) எனினும், ஆசை {ரஜோ குணம்} மற்றும் தீர்மான இழப்பில் மூழ்குபவர்கள், இஃதை அறிவதில்லை. புத்தியை இழந்தவர்கள் பேறின்மையுடைய கனத்தின் அடியில் மூழ்கித் தொலைகிறார்கள்.(10)



கூரிய புத்தியை அடையும் ஒருவன், தன் பாவங்கள் அனைத்தையும் அழிப்பதில் வெல்கிறான். பாவமற்ற ஒருவன் நல்லியல்பின் குணத்தை {சத்வ குணத்தை} அடைந்து, அஃதை அடைந்ததன் மூலம் உற்சாகம் நிறைந்தவனாகிறான்.(11) எனினும், நல்லியல்பின் குணத்தில் இருந்து வழுவி மீண்டும் மீண்டும் மறுபிறப்பை அடைபவர்கள், ஆசை மற்றும் புலன்நுகர் பொருட்களால வழிநடத்தப்பபட்டு, கவலை மற்றும் துயரில் ஈடுபடும் கடப்பாட்டை அடைகிறார்கள்.(12) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தையும் அடைவதில் வெற்றி, அல்லது தோல்வி, வாழ்வு, அல்லது மரணம், இன்பம், அல்லது துன்பத்தைக் கொடுக்கும் செயல்பாட்டின் கனிகள் ஆகியவற்றை நான் வெறுப்பதோ, விரும்புவதோ இல்லை.(13) ஒருவன் மற்றொருவனைக் கொல்லும்போது, அவன் அந்த மற்றொருவனின் உடலை மட்டுமே கொல்கிறான். தானே மற்றொருவனைக் கொன்றதாக நினைக்கும் மனிதன், தானே கொல்லப்படுகிறான். உண்மையில், அவர்களில் கொல்பவன் மற்றும் கொல்லப்படுபவன் ஆகிய இருவரும் உண்மையை அறியாதவர்களே[1].(14) ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, எவன் கொன்றானோ, அல்லது தன் ஆண்மையைத் தற்புகழ்ச்சி செய்து கொள்வதற்காக எவரையும் வென்றானோ, அவன், தான் செயல்படுபவனல்ல, (தான் எதைக் குறித்துத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறானோ) அது (முற்றிலும் வேறுபட்ட) உண்மையான இயக்குனரால் {கர்த்தாவால்} நிறைவேற்றப்பட்டது என்பதை அறியவேண்டும்.(15)

[1] "நீலகண்டர் இந்தச் சுலோகத்திற்குப் பொருள் கொண்டிருப்பதையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஹதம் Hatam என்பது நிர்ஜீவன் தேஹம் nirjivan-deham என்று விளக்கப்படுகிறது. அஃதாவது ஆன்மாவை இழந்த உடல் என்று விளக்கப்படுகிறது. "எவன் மற்றொருவனைக் கொல்வானோ அவன் தானே கொல்லப்படுகிறான்" என்பது, அறியாமையில் மூழ்கி தன்னையே கொல்பவனாகக் கருதுபவனைக் குறிக்கிறது. ஏனெனில், ஆன்மா ஒருபோதும் செயல்படுவதில்லை. தன்னையே செயல்படுபவனாக நினைக்கும் ஒருவன், உடல் மற்றும் புலன்களின் குணங்களைத் தன் ஆன்மாவில் செலுத்துகிறான். (ஏற்கனவே சொல்லப்பட்டிருப்பதைப் போல) அத்தகைய மனிதன் கொல்லப்பட்டவனே (அஃதாவது, அறியாமையில் மூழ்கியிருப்பவனே). இந்தச் சுலோகத்தைக் கீதை 2ம் பகுதியின் 19வது சுலோகத்துடன் ஒப்பிட்டால், அங்கே இதே காரியம் சற்றே வேறுபட்ட வழியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ’ஆத்மா கொல்வதாக நினைப்பவன், அல்லது ஆத்மா கொல்லப்படுவதாக நினைப்பவன் ஆகிய இருவரும் எதையும் அறியாதவர்களாவர்; ஏனெனில், ஆத்மா கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை’" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவ்வுலகில் உள்ள பொருட்களைப் படைப்பதற்கும், அழிப்பதற்கும் காரணமாக இருப்பது யார் என்ற கேள்வி எழும்போது, (தானே உண்டான, அல்லது தன்னைத் தானே படைத்துக் கொண்ட) எவனோ ஒருவன் அச்செயலுக்குக் காரணம் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும், அவ்வாறு கருதப்படுபவன் (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) ஒரு படைப்பாளனைக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவாயாக.(16) பூமி, ஒளி அல்லது வெப்பம், வெளி, நீர், ஐந்தாவதாகக் காற்று ஆகிய இவற்றிலிருந்தே அனைத்து உயிரினங்களும் எழுகின்றன. (இஃது என்னால் அறியப்பட்டிருக்கும்போது, என் நிலையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(17) பெரும் கல்வியைக் கொண்டவன், அதிகம் கல்லாதவன், பலம் கொண்டவன், பலமற்றவன், மேனி அழகுடையவன், கோரமானவன், நற்பேற்றைக் கொண்டவன், பேறற்றவன்(18) ஆகியோர் அனைவரும், அளக்க முடியாத ஆழம் கொண்ட காலத்தின் சக்தியால் அடித்துச் செல்லப் படுகிறார்கள். காலத்தால் நான் வெல்லப்பட்டேன் என்பதை நான் அறியும்போது, (என் சூழ்நிலைகளில் உள்ள இந்த மாற்றத்திற்காக) என்ன துயரத்தை நான் உணர்வேன்?(19) எதையும் எரிக்கும் ஒருவன், ஏற்கனவே எரிக்கப்பட்டதையே எரிக்கிறான். கொல்பவன், ஏற்கனவே கொல்லப்பட்ட ஒன்றை மட்டுமே கொல்கிறான். அழிவடைந்த ஒருவன், ஏற்கனவே அழிக்கப்பட்டவனாவான். ஒருவனால் அடையப்பட்ட பொருள், அவன் அஃதை அடையும் நோக்கத்திற்காகவே ஏற்கனவே வந்திருந்தது.(20)

இந்தக் காலமானது ஒரு பெருங்கடலைப் போன்றதாகும். அதில் எந்தத் தீவும் கிடையாது. உண்மையில் அதன் மறுகரை எங்கே இருக்கிறது? அதன் எல்லைகளைக் காண முடியாது. இன்னும் ஆழமாகச் சிந்தித்தாலும், அனைத்துப் பொருட்களின் பேரியக்கமாக இருப்பதும், நிச்சயமாக தெய்வீகமானதுமான இந்தத் தொடரோடையின் எல்லையை என்னால் காண முடியவில்லை. (21) ஓ! சச்சியின் தலைவா, காலமே அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ளாமல் இருந்தால், ஒருவேளை நான் மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகிய உணர்வுகளை உணர்ந்திருப்பேன்.(22) உமியை உண்டு வாழ்வதும், மனிதர்களின் வசிப்பிடங்களில் இருந்து தனியான ஓரிடத்தில் தன் நாட்களை இப்போது கழித்துக் கொண்டிருப்பதுமான கழுதையின் வடிவை நான் இப்போது சுமந்து கொண்டிருக்கிறேன் என்பதை உறுதி செய்து கொண்டு, நீ என்னை நிந்திக்க வந்திருக்கிறாயா?(23) எந்த வடிவங்களைக் கண்டால், நீ என் முன்னிலையில் இருந்து வெகுவிரைவாக ஓடிவிடுவாயோ, அந்தப் பயங்கர வடிவங்களை இப்போதும் நான் விரும்பினால் என்னால் ஏற்க முடியும்.(24) காலமே அனைத்தையும் கொடுக்கிறது, மீண்டும் அதுவே அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் விதிக்கிறது. ஓ! சக்ரா, உன் ஆண்மை குறித்துத் தற்புகழ்ச்சி செய்யாதே.(25)

ஓ! புரந்தரா, முற்காலதில் நான் கோபப்படும் தருணங்களில் அனைத்தும் கலக்கமடையும். எனினும், ஓ! சக்ரா, இவ்வுலகில் அனைத்துப் பொருட்களின் நித்திய குணத்தை {ஸனாதனமான தர்மத்தை} நான் அறிந்திருக்கிறேன்.(26) நீயும் உண்மையை அறிவாயாக. ஆச்சரியத்தால் நிறையாதே. செழிப்பும், அதன் தோற்றமும் ஒருவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதில்லை.(27) உன் மனம் ஒரு குழந்தையுடைய மனம் போல் இருப்பதாகத் தெரிகிறது. அது முன்பு போலவே இன்னும் இருக்கிறது. ஓ! மகவத் {மகவான் / இந்திரா}, உன் கண்களைத் திறந்து, உறுதியுணர்வு மற்றும் வாய்மையில் நிறுவப்பட்ட புத்தியைப் பின்பற்றுவாயாக.(28) தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் சென்ற காலங்களில் என் ஆட்சியின் கீழ் இருந்தார்கள். ஓ! வாசவா {இந்திரா}, இதை நீ அறிவாய்.(29) அறியாமையால் திகைப்படைந்த புத்தியைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும், "விரோசனனின் மகனான பலி இப்போது எந்தத் திசைப்புள்ளியில் இருப்பானோ, அதை வணங்குகிறேன்" என்று சொல்லி என்னைத் துதித்தன.(30)

ஓ! சச்சியின் தலைவா, (இப்போது கிடைக்காத) அந்த மரியாதையை நினைத்து ஒருபோதும் நான் வருந்துவதில்லை. எனது இந்த வீழ்ச்சிக்காக நான் எந்த வருத்தத்தையும் உணரவில்லை. இயக்குபவனுடைய ஆளுகைக்குக் கீழ்ப்படிந்து வாழ்வேன் என்பதில் என் புத்தி உறுதியாக இருக்கிறது.(31) உன்னதப் பிறப்பு, அழகிய பண்புகள், பேராற்றல் ஆகியவற்றைக் கொண்டவனும், ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் கூடியவனுமான எவனோ ஒருவன், அவலநிலையில் வாழும் நிலை காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதாலேயே இது நேர்கிறது[2].(32) அதே போலவே, ஓ சக்ரா, உன்னதமற்ற குலத்தில் பிறந்தவனும், அறிவற்றவனும், பிறப்பில் களங்கமுடையவனுமான எவனோ ஒருவன், தன் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் காணப்படுகிறது. இவ்வாறு விதிக்கப்பட்டதாலேயே இதுவும் நேர்கிறது.(33) ஓ சக்ரா, மங்கலமான ஓர் அழகிய பெண்மணி, அவலநிலையில் தன் வாழ்வைக் கடத்துவதைக் காண முடிகிறது. அதேபோலவே, அனைத்து மங்கலமற்ற குறிகளையும் கொண்ட, கோரமான ஒரு பெண் பேரின்பத்தில் தன் நாட்களைக் கடத்துவதும் காணப்படுகிறது.(34) ஓ! சக்ரா, நம் செயல்பாடுகள் எதனாலும் நாம் இந்நிலையை அடையவில்லை. ஓ! வஜ்ரபாணியே, நீ இப்போது இருக்கும் இந்நிலை உனது எந்தச் செயலாலும் உண்டானதில்லை.(35)

[2] "நெப்போலியன் குறித்துத் தூய ஹெலினாவால் St.Helena எழுதப்பட்டதை இதனுடன் ஒப்பிடுக" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே}, நீ இப்போது அனுபவிக்கும் இந்தச் செழிப்புக்குக் காரணமாக இருக்கும் எந்தச் செயலையும் நீ செய்யவில்லை. இப்போதைய எனது செழிப்பற்ற நிலைக்குக் காரணமாக இருக்கும் எதையும் நானும் செய்யவில்லை. செழிப்பும், வறுமையும் ஒன்றன்பின் ஒன்றாக நேர்கின்றன.(36) காந்தியில் சுடர்விடுபவனாக, செழிப்புடையவனாக, அழகைக் கொண்டவனாக, தேவர்கள் அனைவருக்கும் தலைமைப் பொறுப்பில் நிறுவப்பட்டவனாக, என்னிடம் முழங்கிக் கொண்டிருப்பவனாக இப்போது நான் உன்னைக் காண்கிறேன்.(37) காலமே என்னைத் தாக்கி நிற்கிறது என்ற உண்மையைத் தவிர இதில் வேறொன்றுமில்லை. உண்மையில், காலம் என்னைத் தாக்காதிருந்தால், நீ கையில் வஜ்ரம் தரித்தவனாகவே இருந்தாலும் கூட, என் புறங்கையின் ஒரே குத்தில் இன்று உன்னை வீழ்த்திக் கொன்றிருப்பேன்.(38) எனினும், இஃது என் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான காலமில்லை. மறுபுறம், அமைதியான நடத்தையைப் பின்பற்றுவதற்கான காலமே வாய்த்திருக்கிறது. காலமே அனைத்துப் பொருட்களையும் நிறுவுகிறது. காலமே அனைத்துப் பொருட்களிலும் இயங்கி, அவற்றின் இறுதி உறவிற்கு அவற்றை வழிநடத்துகிறது[3].(39) நான் தானவர்களால் வழிபடப்பட்ட அவர்களுடைய தலைவனாவேன். என் சக்தியால் அனைத்தையும் எரித்தபடி, பலத்துடனும், செருக்குடனும் நான் முழங்கிக் கொண்டிருந்தேன். {அப்படிப்பட்ட} என்னையே காலம் தாக்கியிருக்கும்போது, எவன்தான் அதனால் தாக்கப்படாதிருப்பான்?(40)

[3] "மூலத்தைச் சரியாகச் சொன்னால், "காலமே அனைத்தையும் சமைக்கிறது" என்று வரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஆனால், இது பாரக்கிரமத்திற்குரிய காலமன்று. சாந்தியை அடையத்தக்க காலம் இப்பொழுது வந்திருக்கிறது. காலம் எல்லாவற்றையும் நிலைபெறச் செய்கிறது. அப்படியே காலம் யாவற்றையும் பழுக்கச் செய்கிறது" என்றிருக்கிறது.

சிறப்புமிக்க ஆதித்தியர்களில் ஒருவனான உன்னையும் சேர்த்து, அவர்களில் பன்னிருவரின் சக்தி அனைத்தையும் முற்காலத்தில் தனியாக நான் தாங்கினேன்.(41) ஓ! வாசவா, நீரைத் தாங்கிப் பிடித்து மழையாகவும் நானே பொழியச்செய்தேன். மூவுலகங்களுக்கமான ஒளியையும், வெப்பத்தையும் நானே கொடுத்து வந்தேன்.(42) நானே பாதுகாப்பவனாகவும், அழிப்பவனாகவும் இருந்தேன். நானே கொடுப்பவனாகவும், எடுப்பவனாகவும் இருந்தேன். நானே கட்டுபவனாகவும், கட்டறுப்பவனாகவும் இருந்தேன். அனைத்து உலகங்களிலும் நானே பலமிக்க ஒரு தலைவனாக இருந்தேன்.(43) ஓ! தேவர்களின் தலைவா, அப்போது நான் கொண்டிருந்த அரசாட்சி இப்போது என்னிடம் இல்லை. நான் இப்போது காலத்தின் சக்திகளால் தாக்கப்படுகிறேன். எனினும், அப்பொருட்கள் இப்போது என்னில் ஒளிரவில்லை.(44) (வெளிப்படையாக என்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நானில்லை. (உன்னால் செய்யப்படும் செயல்களையும்) செய்பவன் நீயில்லை. ஓ! சச்சியின் தலைவா, (அந்தச் செயல்களைச்) செய்பவன் வேறு எவனும் இல்லை. ஓ! சக்ரா, காலமே அனைத்துப் பொருட்களையும் பாதுகாக்கவும், அழிக்கவும் செய்கிறது.(45)



வேதங்களை அறிந்த மனிதர்கள் காலமே (நித்தியமானதே) பிரம்மம் என்று சொல்கின்றனர். பிறைநாட்களும் {பக்ஷங்களும்}, மாதங்களும் அதன் உடலாகும். அந்த உடல், பகல்களையும், இரவுகளையும் தன் ஆடைகளாகக் கொண்டிருக்கிறது. பருவகாலங்களே அதன் புலன்களாகும். வருடமே அதன் வாயாகும்.(46) சிலர், இவை அனைத்தையும் (இந்த மொத்த அண்டத்தையும்) பிரம்மமாகவே காண வேண்டும் என்று தங்கள் மேன்மையான புத்தியின் விளைவால் சொல்கின்றனர். எனினும், வேதங்களோ, ஆன்மாவின் ஐந்து உறைகளே பிரம்மமாகக் கருதப்பட வேண்டும் எனப் போதிக்கின்றன.(47) பிரம்மமானது, பரந்த நீர்ப்பரப்பைக் கொண்ட பெருங்கடலைப் போல ஆழமானதும், அடைதற்கரியதுமாகும். அதற்குத் தொடக்கமோ முடிவோ இல்லை, அஃது அழியத்தகாததும் {ஆன்மாவாகவும்}, அழியத்தக்கதுமாக {பிரபஞ்சமாகவும்} இருக்கிறது என்று சொல்லப்படுகிறது[4].(48) அது தானே குணங்களற்றதாக இருப்பினும், இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களுக்குள்ளும் நுழைந்து, அந்தந்தப் பொருளுக்குரிய குணங்களை ஏற்கிறது. வாய்மையை அறிந்தோர் பிரம்மத்தை நித்தியமானதாகக் கருதுகிறார்கள்.(49) அறியாமையுடன் கூடிய செயல்பாட்டின் மூலம், அந்தப் பிரம்மம், (ஞானத்தை மட்டுமே குணமாகக் கொண்ட) பொருளற்ற ஆவியான சித் அல்லது ஆன்மாவுக்குரிய பொருட்பாட்டுக் குணங்களை உண்டாக்குகிறது. எனினும், அனைத்தின் உண்மைக் காரணம் குறித்த அறிவு தோன்றும்போது, அந்தப் பொருட்பாடு ஆன்மாவுக்கு உரியதாக இல்லாமல் போவதால், அஃது {அந்தப் பொருட்பாடு} ஆன்மாவின் இன்றியமையாத குணமல்ல என்றாகிறது[5].(50)

[4] "ஜீவன் அல்லது ஆத்மாவாக இருக்கும் பிரம்மன் அழியத்தகாதது, அனாத்மாவின் வடிவில் வெளிப்படும் பிரம்மம் அழியத்தக்கது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] "சுலோகம் 50-ஐ சொல்லுக்குச் சொல்லாகக் கண்டால் புரியாது என்பதால், அதன் பொருளைச் சற்றே விரிவாக்கி சொல்லியிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பிரம்மமானது தான் உபாதியின் பற்றுதலில்லாததாயினும் புத்தியின் ஸத்வகுணங்களிலிருந்து கொண்டு தன்னை அறிவிக்கிறதாகிறது. எவர்கள் உண்மையைக் கண்டவர்களோ அந்த ஜனங்கள் இந்த ஆத்மாவை நித்தியமான பிரம்மமென்றே நினைக்கிறார்கள்" என்றிருக்கிறது.

காலத்தின் வடிவிலுள்ள பிரம்மமே அனைத்து உயிரினங்களின் புகலிடமாக இருக்கிறது. அந்தக் காலத்தைக் கடந்து எங்கே நீ செல்வாய்? உண்மையில், ஓடுவதாலோ நிற்பதாலோ காலம், அல்லது பிரம்மத்தைத் தவிர்க்க முடியாது.(51) ஐம்புலன்கள் அனைத்தும் பிரம்மத்தை உணர இயன்றவை அல்ல. சிலர் பிரம்மத்தை நெருப்பு {அக்னி} என்று சொல்கிறார்கள்; சிலர் பிரஜாபதி என்றும்;(52) சிலர் பருவகாலங்கள் என்றும்; சிலர் மாதம் என்றும்; சிலர் பிறைநாட்கள் {பக்ஷம்} என்றும்; சிலர் நாட்கள் என்றும்; சிலர் மணிநேரங்கள் என்றும்; சிலர் முற்பகல் என்றும், சிலர் நன்பகல் என்றும்; சிலர் பிற்பகல் என்றும்;(53) சிலர் கணம் என்றும் சொல்கிறார்கள். இவ்வாறு ஒன்றேயான அதைக் குறித்துப் பலவாறாகப் பல்வேறு மக்கள் பேசுகிறார்கள். அது {பிரம்மம்} நித்தியமானதென்றும், அனைத்துப் பொருட்களையும் ஆள்வதென்றும் அறிவாயாக.(54) ஓ! வாசவா, பெரும் பலத்தையும், பேராற்றலையும் கொண்ட பல்லாயிரம் இந்திரர்கள் கடந்து சென்று விட்டார்கள். ஓ! சச்சியின் தலைவா, நீயும் அவ்வழியிலேயே கடந்து செல்வாய்.(55)

உனக்கான காலம் வரும்போது, ஓ! சக்ரா, அனைத்திலும் வலிமையான காலமானது, பெருகும் வலிமையைக் கொண்டவனும், தேவர்களின் தலைவனாக இருப்பவனுமான உன்னையும் கூட அழித்துவிடும்.(56) காலம் அனைத்துப் பொருட்களையும் அடித்துச் செல்கிறது. இக்காரணத்தினால், ஓ! இந்திரா, நீ தற்புகழ்ச்சியில் ஈடுபடாதே. உன்னாலோ, என்னாலோ, நமக்குமுன்பு சென்றுவிட்டவர்களாலோ காலம் அடக்கப்பட முடியாததாகும்.(57) ஒப்பிலாததாக உன்னால் கருதப்படுவதும், நீ அடைந்திருப்பதுமான இந்த அரச செழிப்பானது, முன்பு என்னால் கொள்ளப்பட்டிருந்தது. இது திடமற்றதும், உண்மையற்றதுமாகும் {போலியானதுமாகும்}. இவள் {செழிப்பின் தேவி} நீண்டகாலம் ஓரிடத்தில் இருப்பதில்லை.(58) உண்மையில், உனக்கு முன்பிருந்தவர்களும், உன்னிலும் மிக மேன்மையானவர்களுமான ஆயிரக்கணக்கான இந்திரர்களிடம் இவள் வசித்திருந்தாள். ஓ! தேவர்களின் தலைவா, நிலையற்றவளான இவள், என்னைக் கைவிட்டு இப்போது உன்னிடம் வந்திருக்கிறாள்.(59) ஓ! சக்ரா, இத்தகைய தற்புகழ்ச்சியில் மீண்டும் ஈடுபடாதே. நீ அமைதிநிலையை அடைவதே உனக்குத் தகும். வீண் தற்பெருமை கொண்டவனாக உன்னை அவள் {செழிப்பின் தேவியானவள்} அறிந்தால், வெகு விரைவில் உன்னைக் கைவிடுவாள்" என்றான் {பலி}" {என்றார் பீஷ்மர்}.(60)

சாந்திபர்வம் பகுதி – 224ல் உள்ள சுலோகங்கள் : 60

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்