Sree! | Shanti-Parva-Section-225 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 52)
பதிவின் சுருக்கம் : பலியின் உடலில் இருந்து வெளியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)
சக்ரன் {இந்திரன் பலியிடம்}, "ஓ! பலியே, உன் உடலில் இருந்து வெளிப்படும் தன் சக்தியின் விளைவால் இவ்வாறு காந்தியுடன் சுடர்விடுபவளும், மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவளும், தோள்வளைகளை அணிந்தவளும், அனைத்துப் பக்கங்களிலும் மகிமையின் ஒளியை வெளியிடுபவளுமான இவள் யார்?" என்று கேட்டான்.(3)
பலி {இந்திரனிடம்}, "இவள் அசுர வனிதையா, தேவியா, மனிதப் பிறவியா என்பதை நானறியேன். நீ இவளிடம், கேட்கலாம், அல்லது கேட்காமலும் இருக்கலாம். உனக்கு விருப்பமானதைச் செய்வாயாக" என்றான்.(4)
சக்ரன் {இந்திரன் பலியிடம்}, "ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இத்தகைய ஒளியுடன் கூடியவளும், மகுடம் சூடியவளும், பலியின் உடலில் இருந்து இவ்வாறு வெளிவந்தவளுமான நீ யார்? நான் உன்னை அறியேன். கருணைகூர்ந்து எனக்கு உன் பெயரைச் சொல்வாயாக.(5) உண்மையில், தைத்தியர்களின் தலைவனைக் {பலியைக்} கைவிட்டு வந்த மாயா தேவியைப் போல, சுயகாந்தியில் சுடர்விட்டுக் கொண்டு இங்கே நிற்கும் நீ யார்? ஓ! கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக" என்றான்.(6)
ஸ்ரீ {செழிப்பின் தேவி / லட்சுமி}, "விரோசனன் என்னை அறியமாட்டான். விரோசனனின் மகனான இந்தப் பலியும் என்னை அறியமாட்டான். கல்விமான்கள் என்னைத் துஸ்ஸஹை என்ற பெயரைச் சொல்லி அழைத்தார்கள்[1]. சிலர் என்னை விதித்ஸை என்ற பெயரில் அறிவார்கள்[2].(7) ஓ! வாசவா, எனக்கு வேறு பெயர்களும் உண்டு. அவை பூதி, லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ என்பவையாகும்[3]. ஓ சக்ரா, நீயும் என்னை அறியமாட்டாய். தேவர்களில் எவரும் என்னை அறியமாட்டார்கள்" என்றாள்.(8)
[1] "பெரும் சிரமத்திற்கிடையில் சுமக்கப்படும் ஒன்று என்பது இந்தப் பெயரின் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்[2] "இதன் பொருள் செயலில் ஆசை என்பதாகும்; எனவே, அபரிமிதம், அல்லது ஏராளம் என்பது செயல் அல்லது உழைப்பின் விளைவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "இந்தப் பெயர்கள் அனைத்தும் ஏராளம் என்பதையும், செழிப்பையும் குறிப்பிடுவனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சக்ரன் {செழிப்பின் தேவியான ஸ்ரீயிடம்}, "ஓ! சுமக்கக் கடினமான பெண்ணே, நீண்ட காலம் பலிக்குள் வாழ்ந்திருந்த நீ இப்போது ஏன் அவனைவிட்டு அகன்று செல்கிறாய்? இஃது என் செயலின் நிமித்தமாக நேர்கிறதா? அல்லது பலி செய்த எந்தச் செயலுக்காகவாவது நேர்கிறதா?" என்று கேட்டான்.(9)
ஸ்ரீ {இந்திரனிடம்}, "படைப்பாளனோ, விதி சமைப்பவனோ என்னை ஆள்வதில்லை. காலமே என்னை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்கிறது. ஓ! சக்ரா, பலியை அவமதியாதே" என்றாள்.(10)
சக்ரன் {ஸ்ரீயிடம்}, "ஓ! மகுடத்தால் அலங்கரிக்கப்பட்ட தேவி, என்ன காரணத்திற்காக நீ பலியைக் கைவிடுகிறாய்? (என்னுடன் வாழ்வதற்காக) ஏன் என்னை நீ அணுகுகிறாய்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இதை எனக்குச் சொல்வாயாக" என்றான்.(11)
ஸ்ரீ {இந்திரனிடம்}, "வாய்மை, கொடைகள், நன்னோன்புகள், தவங்கள், ஆற்றல் மற்றும் அறம் ஆகியவற்றில் நான் வாழ்கிறேன். பலி இவை அனைத்தில் இருந்து வீழ்ந்துவிட்டான்.(12) முன்பு அவன் பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு மிக்கவனாக இருந்தான். அவன் உண்மைநிறைந்தவனாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான். எனினும், பின்னாட்களில் அவன் பிராமணர்களிடம் பகையுணர்வை வளர்த்தான், மேலும் தெளிந்த நெய்யை அழுக்கான கரங்களுடன் தீண்டினான்[4].(13) முன்பு அவன் எப்போதும் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுவான். இறுதியாக, காலத்தால் பீடிக்கப்பட்டு அறியாமையில் குருடான அவன், என்னை இடையறாமல் துதிப்பதாக அனைவரிடமும் தற்புகழ்ச்சி செய்யத் தொடங்கினான்.(14) ஓ! சக்ரா, (இந்தக் குற்றங்களுக்காக) இவனைக் கைவிடும் நான், இதுமுதல் உன்னிடம் வசிக்கப் போகிறேன். நீ கவனமாகவும், தவங்கள் மற்றும் ஆற்றலுடனும் என்னைச் சுமக்க வேண்டும்" என்றாள்.(15)
சக்ரன், "ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, உன்னை எப்போதும் சுமப்பதற்குத் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் ஒருவர் கூட இல்லை" என்றான்.(16)
ஸ்ரீ, "ஓ! புரந்தரா {இந்திரா}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், அல்லது ராட்சசர்களில் எவராலும் என்னை எப்போதும் சுமக்க முடியாது" என்றாள்.(17)
சக்ரன், "ஓ மங்கலமான பெண்ணே, நீ எப்போதும் என்னிடமே வசிப்பதற்கு நான் என் நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் ஆணைகளை ஏற்பேன். எனக்கு உண்மையாகப் பதிலளிப்பதே உனக்குத் தகும்" என்றான்.(18)
ஸ்ரீ, "ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன்னுடன் எவ்வாறு இருக்க முடியும் என்பதைச் சொல்கிறேன். வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதியின் படி என்னை நான்கு பகுதிகளாகப் பிரிப்பாயாக" என்றாள்.(19)
சக்ரன், "நான் என் சக்திக்கும் பலத்துக்கும் தக்கபடியான வசிப்பிடங்கள் உனக்கு ஒதுக்குகிறேன். ஓ! லக்ஷ்மி, என்னைப் பொருத்தவரையில், எவ்வழியிலாவது உனக்குக் குற்றமிழைக்காதவாறு எப்போதும் கவனத்துடன் இருக்கப் போகிறேன்.(20) மனிதர்களுக்கு மத்தியில் உள்ளவளும், அனைத்துப் பொருட்களின் மூதன்னையுமான பூமியானவள் அவர்கள் அனைவரையும் சுமக்கிறாள். அவள் உன்னில் நான்கில் ஒரு பகுதியைச் சுமப்பாள். அதற்கான பலம் அவளுக்கு இருக்கிறதென நான் நினைக்கிறேன்" என்றான்.(21)
ஸ்ரீ, "இதோ என்னில் ஒரு கால் பகுதியைக் கொடுத்தேன். இது பூமியில் நிறுவப்படட்டும். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இரண்டாம் பகுதிக்கு உரிய நிலையை அமைப்பாயாக" என்றாள்.(22)
சக்ரன், "மனிதர்களுக்கு மத்தியில் உள்ள திரவ வடிவில் உள்ள நீர்நிலைகள் மனிதர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்கின்றன. அந்த நீர் நிலைகள் உன் மேனியின் நான்கில் ஒரு பகுதியைச் சுமக்கட்டும். உன்னில் ஒரு பகுதியைச் சுமக்கும் பலம் அவற்றுக்கு இருக்கிறது" என்றான்.(23)
ஸ்ரீ, "நீர்நிலைகளில் நிறுவப்படுவதற்காக எனது மற்றொரு கால்பகுதியையும் நான் கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன் பிறகு, எனது மூன்றாம் பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக" என்றாள்.(24)
சக்ரன், "வேதங்கள், வேள்விகள் ஆகியவையும், தேவர்கள் அனைவரும் நெருப்பிலேயே நிறுவப்பட்டுள்ளனர். உனது மூன்றாம் பகுதியை நெருப்பில் இடும்போது அதனை அது சுமக்கும்" என்றான்.(25)
ஸ்ரீ, "நெருப்பிலிடப்போகும் எனது மூன்றாம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இறுதி பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக" என்றாள்.(26)
சக்ரன், "நல்லோர், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோர், பேச்சில் உண்மை நிறைந்தோர் ஆகியோர் உன்னில் நான்காம் பகுதியைச் சுமக்கட்டும். அதைச் சுமக்கும் சக்தி நல்லோருக்குண்டு" என்றான்.(27)
ஸ்ரீ, "நல்லோருக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட இருக்கும் எனது நான்காம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, பல்வேறு உயிரினங்களுக்கு என் பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன, நீ என்னைத் தொடர்ந்து பாதுகாப்பாயாக" என்றாள்.(28)
சக்ரன், "எனது இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக. நான் இவ்வாறே உன்னைப் பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்த உயிரினங்களுக்கு மத்தியில் உனக்கு எதிராகக் குற்றமிழைப்போர் என்னால் தண்டிக்கப்படுவார்கள்" என்றான்.
தைத்தியர்களின் தலைவன் பலி, ஸ்ரீயால் இவ்வாறு கைவிடப்பட்ட பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(29)
பலி, "தற்போது சூரியன், மேற்கைப் போலவே கிழக்கிலும், தெற்கைப் போலவே வடக்கிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(30) எனினும், இந்தச் சூரியன் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, சுமேருவுக்கு மத்தியில் உள்ள பிரம்மலோகத்தில் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நேரப்போகும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் முறியடிப்பேன்.(31) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு பிரம்மலோகத்தில் மட்டுமே நிலையாக ஒளிரும்போதும் மீண்டும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு இடையில் தோன்றும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொள்வேன்" என்றான்[4].(32)
[4] "புராணக் கோட்பாட்டின்படி உலகமானது மேரு மலைகளைச் சுற்றி அமைந்திருக்கிறது என உரையாசிரியர் விளக்குகிறார். பிரம்ம லோகம் அதன் மேலே நிலைத்திருக்கிறது. சூரியன் மேருவை வலம் வந்து திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுகிறான். இது வைவஸ்வத மன்வந்தரம் Vaivaswata Manwantara (விவஸ்வானின் மகனுடைய காலம் அல்லது காலகட்டம்) என்றழைக்கப்படும் காலத்தில் நடைபெறும். ஆனால், இந்தக் காலம் கடந்து சாவர்னிக மன்வந்தரம் Saarvarnika தோன்றியதும் சூரியன் மேருவின் உச்சியில் உள்ள பகுதியில் மட்டுமே ஒளிர்வான், சுற்றிலும் இருளே இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சக்ரன் {பலியிடம்}, "பிரம்மன் உன்னை ஒருபோதும் கொல்லக்கூடாது என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஓ! பலியே இந்தக் காரணத்தினாலேயே நான் உன் தலையில் என் வஜ்ரத்தை வீசாமல் இருக்கிறேன்.(33) ஓ! தைத்தியர்களின் தலைவா, நீ விரும்பும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பேரசுரா, உன்னில் அமைதி நிலைக்கட்டும். நெடுங்கோட்டில் {தீர்க்கரேகையில்} மட்டுமே சூரியன் ஒளிரும் எந்தக் காலமும் நேராது.(34) சூரியனின் இயக்கத்தை முறைப்படுத்தும் சட்டங்களை ஏற்கனவே சுயம்பு (பிரம்மன்) விதித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் கொடுத்தபடியே அவன் {சூரியன்} இடையறாமல் இயங்குவான்.(35) ஆறு மாதங்கள் வடக்கு நோக்கிய {உத்தராயண} போக்கிலும், அடுத்த ஆறு மாதங்கள் தெற்கு நோக்கிய {தக்ஷிணாயணப்) போக்கிலும் அவன் {சூரியன்} பயணிப்பான். சூரியன் (ஒன்றன்பின் ஒன்றாக) இவ்வழியிலேயே பயணித்து, உயிரினங்கள் அனைத்திற்காகக் குளிர்காலத்தையும் வெயில் காலத்தையும் உண்டாக்குவான்" என்றான்".(36)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட தைத்தியர்களின் தலைவனான பலி, தெற்கு நோக்கிச் சென்றான். புரந்தரன் வடக்கு நோக்கிச் சென்றான்.(37) ஆயிரங்கண் இந்திரன், முற்றிலும் செருக்கற்ற வகையில் அமைந்த பலியின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு வானத்திற்கு உயர்ந்தான்" {என்றார் பீஷ்மர்}.(38)
சாந்திபர்வம் பகுதி – 225ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |