The universal dissolution! | Shanti-Parva-Section-233 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 60)
பதிவின் சுருக்கம் : அண்டமே அழிந்து போகம் பிரளயம் எவ்வாறு நேர்கிறது என்பதைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} பகல் கடந்து, அவனது இரவு வேளை வரும்போது, அனைத்துப் பொருட்களையும் அவன் தன்னுள் எவ்வாறு ஈர்த்துக் கொள்கிறான், அல்லது அவன் திரளாக இருக்கும் இந்த அண்டத்தை மிக நுட்பமானதாக்கி, அனைத்தையும் எவ்வாறு தன் ஆன்மாவுக்குள் கலக்கச் செய்கிறான் என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லப்போகிறேன். அண்ட அழிவுக்கான {பிரளயத்துக்கான} காலம் வரும்போது, பனிரெண்டு சூரியர்களும், ஏழு தழல்களுடன் கொண்ட அக்னியும் எரியத் தொடங்குகின்றன. அந்தத் தழல்களால் மறைக்கப்படும் மொத்த அண்டமும், பெருந்தீயாகச் சுடர்விட்டு எரியத் தொடங்கும்.(2) பூமியில் உள்ள அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும், இந்தக் கோளானது எந்தப் பொருளால் ஆனதோ அதற்குள் முதலில் கலந்து மறையும்.(3) இவ்வாறு அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் மறைந்தபிறகு, மரம் செடி கொடிகளை இழந்த பூமியானது வெறுமையான ஆமை ஓட்டைப் போலத் தெரியும்.(4)
அப்போது நீரானது, பூமியின் குணமான மணத்தை ஏற்கிறது. பூமி தன் அடிப்படை குணத்தை இழக்கும்போது அந்தப் பூதம் {நிலமெனும் பூதம்} அழிவின் விளிம்பில் நிற்கும்.(5) அப்போது நீரே மேலோங்கி நிற்கிறது. பெரும் அலைகள் பெருகி, பயங்கர முழக்கங்களை உண்டாக்கி இந்த வெளியை நீரே நிரப்பி அசையும் அல்லது அசையாமல் நிற்கும்.(6) பிறகு நீரின் குணம் வெப்பத்தால் எடுத்துக் கொள்ளப்படும். தன் குணத்தை இழக்கும் நீரானது அந்தப் பூதத்திலேயே ஓய்வெடுக்கும்.(7) சுற்றிலும் சுடர்விட்டெழும் பிரகாசமான நெருப்பின் தழல்கள் வெளியின் மையத்தில் உள்ள சூரியனை மறைக்கும். உண்மையில் அப்போது, சீற்றமிகு தழல்கள் நிறைந்த வெளியானது பெருந்தீயாக எரியும்.(8)
காற்று {வாயு} வந்து வெப்பம், அல்லது ஒளியின் குணமான வடிவத்தை எடுத்துக் கொள்ளும். இதனால் பெரும் வலிமை கொண்ட காற்றின் வசப்பட்டுத் தணிவடையும் அது {வெப்பம் / ஒளி}, பயங்கரமாகக் கலக்கமடையத் தொடங்கும்.(9) காற்றானது தன் சொந்த குணமாக ஒலியை அடைந்து மேல்நோக்கியும், கீழ்நோக்கியும் பத்துப் புள்ளிகள் அனைத்திலும் கடந்து செல்லும்.(10) அப்போது காற்றின் குணமான ஒலியை எடுத்துக் கொள்ளும் வெளியினால் தணிவடையும் அது, கேள்விப்படாத, அல்லது சொல்லப்படாத ஒலிக்கு ஒப்பான இருப்பு வட்டத்திற்குள் நுழையும்.(11) அப்போது வெறும் வெளி மட்டுமே எஞ்சும், ஒலியைத் தன் குணமாகக் கொண்ட அந்தப் பூதமானது, எவ்வகை வடிவமும் கொள்ளாமல், வடிவம், சுவை, தீண்டல், மணம் ஆகிய பண்புகளை இழந்த பிற பூதங்கள் அனைத்துடன் சேர்ந்து இருப்பின் புலப்படா நிலையான ஒலியைப் போல வசிக்கும்.(12)
பிறகு, வெளியின் பண்பான ஒலியானது, புலப்படும் பொருட்கள் அனைத்தின் சாரமாக இருக்கும் மனத்தால் விழுங்கப்படுகிறது. தானே புலப்படாததாக இருக்கும் மனமானது, இவ்வாறே மனத்தின் மூலம் வெளிப்பட்ட அனைத்தையும் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது. புலப்படாததாக, அல்லது நுட்பமானதாக மனத்தில் தெரியும் இந்த மன ஈர்ப்புநிலையே பரந்த புற அண்ட அழிவு என்றழைக்கப்படுகிறது[1].(13) அப்போது சந்திரமாஸ் {சந்திரன்}, (இவ்வாறு) மனத்தை அதன் குணத்திற்குள் தானே ஈர்க்கும்படி செய்து அதை விழுங்குகிறது. சந்திரமாஸுக்குள் நுழைந்து மனம் இருப்பில் இல்லாமல் போகும்போது, ஈஸ்வரனுக்குச் சொந்தமான பிற குணங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.(14) சங்கல்பம் என்றழைக்கப்படும் இந்தச் சந்திரமாஸ், சித்தம் அல்லது தீர்மானம் என்ற அழைக்கப்படும் செயல்பாட்டில் ஈடுபடும் புலங்களை அழிப்பது என்ற மிகக் கடினமான செயலைச் செய்ய வேண்டிய காரணத்தால். மிக நீண்ட காலத்திற்குப் பிறகு, அந்தச் சங்கல்பம் ஈஸ்வரனின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது. இதுவும் விளைந்த பிறகு அடையப்படும் நிலையென்பது உயர்ந்த அறிவு என்று சொல்லப்படுகிறது.(15) காலம் இந்த அறிவை விழுங்குகிறது, மேலும் ஸ்ருதியில் அறிவிக்கப்பட்டுள்ளதைப் போலக் காலமும் தனக்கான வேளையில் வலிமை அல்லது சக்தியால் விழங்கப்படுகிறது. எனினும் வலிமை அல்லது சக்தியானது, மீண்டும் காலத்தால் விழுங்கப்பட்டு, இறுதியில் வித்யையின் ஆளுகைக்குள் கொண்டுவரப்படுகிறது.(16)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஆகாயத்தின் குணமான சப்தத்தை ஸ்தூலமாகக் காணத்தக்க உருவமுள்ள மனமானது எப்பொழுது விழுங்குமோ அப்பொழுது பிரளயகாலத்தில் அவ்வாகாசமும் லயப்படுகிறது. வ்யக்தமான மனத்தின் உருவம் வ்யக்தமும் அவ்யக்தமுமாயிருக்கிறது" என்றிருக்கிறது.
வித்யையைக் கொண்ட ஈஸ்வரன், அந்த இல்லாமையையே தன் ஆன்மாவுக்குள் விழுங்கிக் கொள்கிறான். அதுவே புலப்படாததும் உயர்ந்த பிரம்மமுமாகும். அதுவே நித்தியமானதும், உயர்ந்ததில் உயர்ந்ததுமாகும்.(17) இவ்வாறே இருப்பில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படுகின்றன.(18) உண்மையில், அறிவியல் காரியமும், (சாத்திரங்களின் துணையுடன்) உணரப்பட வேண்டியதுமான இஃது, உண்மையான அனுபவத்திற்குப் பிறகு, பரம ஆத்மாக்களைக் கொண்ட யோகியரால் இவ்வாறே அறிவிக்கப்பட்டிருக்கிறது.(19) இவ்வாறே, புலப்படாத பிரம்மமானது விரிந்து சுருங்கும் (அதாவது, படைத்து, அழிக்கும்) செயல்பாட்டை மீண்டும் மீண்டும் செய்கிறது. இவ்வாறே ஆயிரம் யுகங்களைக் கொண்ட பிரம்மனின் பகலும், இரவும் இருக்கின்றன" என்றார் {வியாசர்}[2].(20)
[2] "16 மற்றும் 17ம் ஸ்லோகங்கள் மிகக் கடினமானவையாக இருக்கின்றன. உரையாசிரியர் அவற்றுக்குப் பொருள் கொள்வதில் பெரும் கல்வித் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும், இக்காரியம் யோகப் புதிரைக் குறித்ததாகும், அதன் உரையாசிரியர் கொடுக்கும் விளக்கமும் விவரிப்பும் சாதாரண அனுபவமும், புத்தியும் கொண்டவர்களுக்கு எட்டாத பொருட்களைக் குறிப்பதாக இருக்கிறது. (17ம் ஸ்லோகத்தில் வரும்) சந்திரமாஸ், காலம், வலம், ஆகாசம் மற்றும் கோசம் ஆகியன யோகத்தின் கலைச்சொற்களாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட கல்விமான்களிடம் நான் இந்தச் சுலோகத்தைக் குறிப்பிட்டுக் கேட்டிருக்கிறேன். எனக்கு வழிகாட்டிகளான அவர்கள், இங்கே யோகிகள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய யோகப் புதிர் விளக்கப்படுவதாகக் கருதுகிறார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் மறைபொருள் கொண்ட இந்த வாக்கியத்தின் வார்த்தைகளைக் கண்டு சிரிக்கலாம். பல வாசகர்கள் இந்த ஸ்லோகங்கள் பொருளில்லாதவை என்றும் எடுத்துக்கொள்ளக்கூடும். எனினும், தீவிர சிந்தனைக்குப் பிறகு யோகம் என்பது பொருளற்றதல்ல என்றே நான் நம்புகிறேன். வடிவியல் அல்லது இயற்கணிதக் கூறுகளை Elements of Geometry or Algebra கல்லாத ஒருவன், எவ்வளவுதான் நுண்ணறிவு படைத்தவனாக இருப்பினும், டின் மோயிரின் கோட்பாடு அல்லது முக்கிய முன்மொழிவின் ஒரு பகுதியை உடனே புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பான். உண்மை பொருளைக் கொடுக்கத் தவறியிருக்கும் நான், சொல்லுக்குச் சொல்லான மொழிபெயர்ப்பைக் கொடுப்பதோடு நிறைவடைகிறேன்" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். சாந்தி பர்வத்தின் 245ம் பகுதியில் உள்ள 2ம் அடிக்குறிப்பில் இதற்கு பிரத்யாஹார யோகம் என்று பெயர் குறிப்பிடப்படுகிறது. கும்பகோணம் பதிப்பில், "ஸங்கல்பத்தை வசமாக்கிக் கொள்ளுவது மிக உத்தமமான ஞானமாகும். அந்த ஞானத்தையும் காலம் விழுங்குகிறது. அக்காலத்தையும் சக்தி விழுங்குகிறதென்று வேதம் உபதேசிக்கிறது. சக்தியைக் காலம் விழுங்குகிறதென்பதில்லை. அக்காலத்தையும் பிரம்மஜ்ஞானமுள்ளவன் தன் வசமாக்கிக் கொள்ளுகிறான். அப்பொழுது பிரம்மஜ்ஞானமுள்ளவன் ஆகாயத்தின் குணமான நாதத்தையும் (அதாவது சப்தப்ரம்மத்தையும்) ஆத்மரூபத்தில் லயிக்கச் செய்கிறான். அந்த ஆத்மரூபம் ஸூக்ஷ்மமான பரப்ரம்மமாகும். அது சாஸ்வதமும் மிக உத்தமமுமாகும். இவ்விதம் எல்ல வஸ்துகளையும் பிரம்மமே லயப்படுத்திக் கொள்ளுகிறது. இது இவ்விதமே உண்மையானது. ஸந்தேகமில்லை" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 233ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |