The duties of Brahmanas! | Shanti-Parva-Section-234 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 61)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் கடமைகள் குறித்தும், பிராமணர்களுக்குக் கொடையளித்து உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்களைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "அனைத்து உயிரினங்களும் படைக்கப்பட்டது குறித்து நீ கேட்டதை இப்போது முழுமையாகச் சொல்லிவிட்டேன். ஒரு பிராமணனின் கடமைகள் யாவை என்பதை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஜாதகர்மம் தொடங்கி, சமாவர்த்தனம் வரையில் உள்ள விழாக்கள் அனைத்தின் சடங்குகளுக்குரிய வேள்விக் கட்டணம் {தக்ஷிணை}, வேதங்களில் தகுதிவாய்ந்த ஓர் ஆசானின் செயல்திறனைச் சார்ந்ததாகும்[1].(2) வேதங்கள் அனைத்தையும் கற்று, ஆசானிடம் வசிக்கும் காலத்தில் அவரிடம் பணிவுடன் நடந்து கொண்டு, ஆசானுக்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, வேள்விகள் அனைத்தின் முற்றான அறிவுடன் அந்த இளைஞன் வீடு திரும்ப வேண்டும் {ஸமாவர்த்தனம் செய்து கொள்ள வேண்டும்}[2].(3) தனது ஆசானின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அவன், நான்கு வாழ்வுமுறைகளில் {ஆசிரமங்களில்} ஏதாவதொன்றைப் பின்பற்றி, தன் உடலைக் கைவிடும்வரை அதற்குரிய கடமைகளை நோற்று வாழ வேண்டும்.(4) அவன் மனைவியருடன் சேர்ந்து இல்லற {கிருஹஸ்த} வாழ்வை வாழ்ந்து வாரிசுகளை உண்டாக்க வேண்டும், அல்லது பிரம்மச்சரியத்தை நோற்று வாழ வேண்டும்; அல்லது காட்டில் தன் ஆசானின் துணையுடனோ, ஒரு யதிக்கு {ஸந்நியாசிக்கு} விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைப் பயின்றோ வாழ வேண்டும்.(5)
[1] "ஜாதகர்மம் என்பது ஒரு குழந்தை பிறந்தவுடனேயே குறிப்பிட்ட வேதமந்திரங்களைச் சொல்லி செய்யப்படும் விழாவாகும். சமாவர்த்தனம் அல்லது உரிய வயதை அடைந்து பிறகு ஆசானின் இல்லத்தில் இருந்து திரும்பும் வரை இத்தகைய பல விழாக்கள் நடைபெறுகின்றன. இவை பிள்ளையின் தந்தையினாலோ, அந்தப் பிள்ளைக்குரிய வேறு எவராலும் நிச்சயம் செய்யப்பட வேண்டிய விழாக்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இந்நாட்டில் கல்விக்காக எந்தக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை. எனினும், சீடன் தன் கல்வியை நிறைவு செய்ததும், ஆசானின் விருப்பப்படி தீர்மானிக்கப்படும் இறுதிக் கட்டணத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். இந்தக் கட்டணம் அந்தச் சீடன் தன் ஆசானின் இல்லத்தில் இருந்து தானாக வெளியேறும் வழிமுறைகளைப் பொறுத்து வேறுபடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இல்லறவாழ்வானது {கிருஹஸ்தாஸ்ரமமானது}, பிற வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திற்கும் வேராகச் சொல்லப்படுகிறது. சுயக்கட்டுப்பாட்டை உடையவனும், உலகப் பொருட்களில் உள்ள பற்றுகள் அனைத்தையும் வென்றவனுமான ஓர் இல்லறத்தான் {கிருஹஸ்தன்} (வாழ்வின் பெரும் நோக்கத்தைப் பொறுத்தவரையில்) வெற்றியை அடைவான்.(6) ஒரு பிராமணன், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலமும், வேத அறிவைப் பெறுவதன் மூலமும், வேள்விகளைச் செய்வதன் மூலமும், தான் பட்டிருக்கும் மூன்று கடன்களை அடைக்கிறான்[3]. பிறகு அவன், தன் செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வேறு வாழ்வுமுறைக்குள் {ஆசிரமத்திற்குள்} நுழைய வேண்டும்.(7) அவன், பூமியில் எதை மிகப் புனிதமான தலம் என்று உறுதி செய்வானோ, அங்கே வசித்து, மேன்மையான நிலையை அடைவதற்காகப் புகழுக்கு வழிவகுக்கும் அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.(8) பிராமணர்களின் புகழானது, மிகக் கடுமையான தவங்களின் மூலமும், அறிவின் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெறுவதன் மூலமும், வேள்விகள் மூலமும், கொடைகள் மூலமும் அதிகரிக்கிறது.(9) உண்மையில் ஒரு மனிதன், இவ்வுலகில் தன் செயல்களோ, நினைவோ நீடிக்கும் வரை (மறுமையில்) அறவோரின் முடிவிலா உலகங்களில் இன்புறுகிறான்.(10)
[3] "பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஒருவன் தன் மூதாதையருக்குப் பட்ட கடனை அடைக்கிறான்; வேத கல்வியின் மூலம் முனிவர்களுக்குப் பட்ட கடனை அடைக்கிறான்; வேள்விகளைச் செய்வதன் மூலம் தேவர்களுக்குப் பட்ட கடனை அடைக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒரு பிராமணன், கல்வி கற்பிக்கவும், கற்கவும், பிற மக்களின் வேள்விகளை நடத்திக் கொடுக்கவும், தானே வேள்வி செய்யவும் வேண்டும். அவன் வீணான தானத்தை அளிக்கக்கூடாது, அல்லது பிறரிடம் இருந்து வீணான தானத்தை {வீணானப்ரதிக்ரகத்தைப்} பெறக் கூடாது.(11) ஒருவனுக்கு வேள்வியில் துணை புரிந்ததன் மூலமும், சீடனின் மூலமும், (திருமணத்தால்) மகளின் (உறவினர்) மூலமும் போதுமான அளவுக்குச் செல்வம் வருமென்றால், அது வேள்வி செய்வதற்கோ, தானமளிப்பதற்கோ செலவழிக்கப்பட வேண்டும். இந்த ஆதாரங்கள் எதனிலிருந்தும் வரும் செல்வம், ஒரு பிராமணனால் ஒருபோதும் தனியாக அனுபவிக்கப்படக்கூடாது[4].(12) இல்லற வாழ்வை வாழும் {கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள} பிராமணன் ஒருவனுக்கு, தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், ஆசான், பெரியோர், நோய்வாய்ப்பட்டோர், பசித்தோருக்காக தானங்களை ஏற்று வாழ்வதைத் தவிர வேறு வழிமுறையேதும் கிடையாது[5].(13) புலப்படாத எதிரிகளின் மூலம் தண்டிக்கப்பட்டோருக்கு, அல்லது தங்கள் சக்திக்குரிய அளவில் அறிவை அடைய முயற்சிப்போருக்கு, சமைத்த உணவு உள்ளிட்ட தன் உடைமைகளில் இருந்து ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கும் அதிகமாகத் தானமளிக்க வேண்டும்.(14) தகுதிநிறைந்த ஒரு மனிதனுக்குக் கொடுக்கப்படக்கூடாதது எதுவுமில்லை. நல்லோராகவும், ஞானிகளாகவும் இருப்பவர்கள், இந்திரனுக்குச் சொந்தமான உச்சைஸ்வர என்றழைக்கப்படும் குதிரைகளின் இளவரசனைப் பெறுவதற்கும் தகுந்தவர்களே[6].(15)
[4] "(திருமணத்தின் மூலம்) ஒரு மகளின் உறவினர்கள், அல்லது மாமனாரிடம் இருந்து எதையும் பெறுவது பயங்கரப் பாவமாகும். இந்த நாள் வரையில் அத்தகைய ஆதாரங்களில் இருந்து பெறப்படுபவை தாராளமாகச் செலவழிக்கப்பட்டே வருகின்றன. திருமணத்தில் தன் மகளை விற்பவர்கள் வீழ்ந்துவிட்டவர்களாகவே உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "உண்மையென்னவெனில், தேவர்கள் மற்றும் பித்ருக்களை வழிபடுவதும், மேலே சொல்லப்பட்டுள்ள பிறரிடம் விருந்தோம்பலுடன் நடந்து கொள்வதும் ஓர் இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} கடமையாகும். எனினும், அந்தப் பிராமணனுக்கு இந்தக் கடமையைச் செய்யப் புறப்பகட்டான வேறு எந்த வழிமுறைகளும் இல்லை. கொடைகளை ஏற்பது மட்டுமே அவனுக்குத் திறந்திருக்கும் ஒரே வழிமுறையாகும். எனவே, அவனைப் பொறுத்தவரையில் அவன் அவ்வாறு இருப்பது எந்தத் தகுதியிழப்பையும் அவனுக்கு உண்டாக்காது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "அத்தகைய மனிதர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று சொல்ல மதிப்புமிக்க எந்தக் கொடையும் கிடையாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உயர்ந்த நோன்புகளைக் கொண்டவனும், பணிவுடையவனுமான (மன்னன்) சத்யசந்தன், ஒரு பிராமணனைக் காப்பதற்காகத் தன் உயிர் மூச்சையே காணிக்கையளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(16) சங்கிருதியின் மகனான ரந்திதேவன், உயர் ஆன்ம வசிஷ்டருக்கு இளஞ்சூட்டுடன் கூடிய நீரை மட்டுமே கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்து, அங்கே உயர்ந்த வெகுமதிகளைப் பெற்றான்.(17) அத்ரியின் அரசமகனும் {ஆத்ரேயனும்}, பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான இந்திரதமனன், தகுந்த ஒரு மனினுக்குப் பல்வேறுவகைச் செல்வங்களை அளித்து மறுமையில் பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(18) உசீனரனின் மகனான சிபி, ஒரு பிராமணனுக்காகத் தன் அங்கங்களையும், தன் மடியில் பிறந்த அன்புக்குரிய மகனையும் கொடுத்து இவ்வுலகில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(19) காசியின் ஆட்சியாளனான பிரதர்த்தனன், ஒரு பிராமணனுக்குத் தன் கண்களையே கொடுத்து இம்மையிலும், மறுமையிலும் பெரும்புகழை அடைந்தான்.(20)
மன்னன் தேவாவிருதன், தங்கத்தாலான எட்டுக் கம்பிகளுடன் கூடியதும், விலைமதிப்புமிக்கதுமான ஓர் அழகிய குடையைக் கொடுத்து, தன் நாட்டு மக்கள் அனைவருடன் சேர்ந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(21) அத்ரி குலத்தைச் சேர்ந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான சாங்கிருதி, குணமற்ற {நிர்குண} பிரம்மத்தைக் குறித்த காரியத்தைத் தன் சீடர்களுக்குப் போதித்துப் பேரின்பத்திற்குரிய உலகங்களுக்குச் சென்றார்.(22) பேராற்றலைக் கொண்ட அம்பரீஷன், பதினோரு அர்ப்புதங்கள்{11,00,00,000} [7] அளவுக்குப் பசுக்களைப் பிராமணர்களுக்குக் கொடுத்துத் தன் நாட்டு மக்கள் அனைவருடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(23) காது குண்டலங்களைக் கொடுத்த சாவித்ரி, தன் சொந்த உடலையே கொடுத்த மன்னன் ஜனமேஜயன் ஆகிய இருவரும் உயர்ந்த பேரின்ப உலகங்களுக்குச் சென்றனர்.(24) விருஷாதபனின் மகனான யுவனாஸ்வன், பல்வேறு வகை ரத்தினங்கள், ஓர் அழகிய மாளிகை மற்றும் பல அழகிய பெண்களைக் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(25)
[7] "அர்ப்புதம் என்பது ஆயிரம் லட்சம் அளவைக் குறிக்கும் http://veda.wikidot.com/sanskrit-numbers எனில், பதினோரு அர்ப்புதங்கள் என்பது பதினோராயிரம் லட்சம் {நூறு மில்லியன் / பத்து கோடி} பசுக்களைக் குறிக்கிறது.
விதேஹர்களின் ஆட்சியாளனான நிமி தன் நாட்டையும், ஜமதக்னியின் மகன் (ராமர் ), மொத்த பூமியையும், கயன், நகரங்கள் மற்றும் ஊர்கள் அனைத்துடன் கூடிய பூமியையும் பிராமணர்களுக்குக் கொடுத்தனர்.(26) ஒருகாலத்தில் மேகங்கள் பொழிவதை நிறுத்திக் கொண்டபோது, பிரம்மனுக்கே ஒப்பான வசிஷ்டர், ஒரு பிரஜாபதியைப் போல (தன் சக்தி மற்றும் அன்பின் மூலம்) அனைத்து உயிரினங்களையும் உயிரோடு பாதுகாத்தார்.(27) கரந்தனின் {கரந்தமனின்} மகனும், தூய்மையடைந்த ஆன்மா கொண்டவனுமான மருத்தன், தன் மகளை அங்கிரஸுக்குக் கொடுத்து விரைவாகச் சொர்க்கத்தை அடைந்தான்.(28) பாஞ்சாலர்களின் ஆட்சியாளனும், மேன்மையான புத்தியைக் கொண்டவனுமான பிரம்மதத்தன், நிதி என்றும் சங்கம் என்றும் அழைக்கப்பட்ட மதிப்புமிக்க இரு ரத்தினங்களைப் பிராமணர்களில் முதன்மையான சிலருக்குக் கொடுத்து பல்வேறு இன்ப உலகங்களை அடைந்தான்.(29) மன்னன் மித்ரஸஹன், தன் அன்புக்குரிய மனைவியான மதயந்தியை உயர் ஆன்ம வசிஷ்டருக்குக் கொடுத்து, அந்தத் தன் மனைவியுடனே சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(30)
அரசமுனியும், பெரும்புகழைக் கொண்டவனுமான சஹஸ்ரஜித், ஒரு பிராமணனுக்காகத் தன் அன்புக்குரிய உயிரையே கைவிட்டு, பேரின்ப உலகங்களுக்கு உயர்ந்தான்.(31) மன்னன் சத்யத்யும்னன், முத்கலருக்குத் தங்கத்தாலானதும் அனைத்து வசதிகளையும் கொண்டதுமான ஒரு மாளிகையை அளித்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(32) தியூதிமான் என்ற பெயரில் அறியப்பட்டவனும், பேராற்றலைக் கொண்டவனுமான சால்வர்களின் மன்னன், ரிசீகருக்குத் தன் மொத்த நாட்டையும் கொடுத்துச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(33) அரசமுனியான மதிராஸ்வன், கொடியிடையாளான தன் மகளை ஹிரண்யஹஸ்தருக்குக் கொடுத்து, தேவர்களாலேயே பெரிதும் மதிக்கப்படும் உலகங்களுக்கு உயர்ந்தான்.(34) அரசமுனியும், பேராற்றலைக் கொண்டவனுமான லோம்பாதன், தன் மகள் சாந்தையை ரிஷ்யசிருங்கருக்குக் கொடுத்துத் தன் விருப்பங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்தான்.(35)
பெருஞ்சக்தியைக் கொண்ட பிரஸேனஜித், கன்றுகளுடன் கூடிய ஒரு லட்சம் பசுக்களைக் கொடுத்து பேரின்பத்திற்குரிய சிறந்த உலகங்களுக்கு உயர்ந்தான்.(36) பெருமை கொண்டவர்களும், நன்கு அமைக்கப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தவர்களுமான இவர்களும், இன்னும் பிறரும், தானங்கள் மற்றும் தவங்களின் மூலம் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(37) அவர்களது புகழ் இந்தப் பூமி உள்ள வரையில் நீடித்திருக்கும். அவர்கள் அனைவரும், தாங்கள் கொடுத்த கொடைகள், வேள்விகள் மற்றும் சந்ததி உருவாக்கல் ஆகியவற்றின் மூலம் சொர்க்கத்திற்குச் சென்றனர்" என்றார் {வியாசர்}.(38)
சாந்திபர்வம் பகுதி – 234ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |