The Excellence of Knowledge! | Shanti-Parva-Section-235 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 62)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் கடமைகள் குறித்தும், ஞானத்தின் சிறப்பைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "வேதங்களிலும் அவற்றின் அங்கங்களிலும் தோன்றும் த்ரயி என்றழைக்கப்படும் அறிவு அடையப்பட வேண்டும். அவ்வறிவு ரிக்குகள், சாமங்கள், மற்றும் வர்ணம் என்றும் அக்ஷரம் என்றும் அழைக்கப்படும் அறிவியல்களில் இருந்து பெறப்படுகிறது. இதைத் தவிர யஜுஸ்கள் மற்றும் அதர்வணங்களும் இருக்கின்றன. இவற்றில் குறிப்பிடப்படும் ஆறு வகைச் செயல்களிலேயே {ஷட்கர்மங்களிலேயே}[1] தெய்வீகமானவன் வசிக்கிறான்.(1) வேத தீர்மானங்களை நன்கறிந்தோர், ஆன்ம அறிவைக் கொண்டோர், நற்குணத்தில் {சத்வ குணத்தில்} பற்றுடையோர், உயர்ந்த அருளைக் கொண்டோர் ஆகியோர் அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும் கதியையும் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(2) ஒரு பிராமணன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நோற்றபடியே வாழ வேண்டும். அவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட நல்லோனைப் போலத் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல் தன் வாழ்வாதாரங்களை ஈட்ட வேண்டும்.(3) நல்லோர் மற்றும் ஞானியரிடமிருந்து அறிவைப் பெறும் அவன், தன் ஆசைகளையும், மனச்சார்புகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சாத்திரங்களை நன்கறிந்தவனான அவன், தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் அக்கடமைகளைப் பயின்று, நற்குணத்தினால் வழிநடத்தப்பட்டு உலகச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லறவாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் பிராமணனும், ஏற்கனவே செல்லப்பட்ட ஆறு செயல்களைச் செய்ய வேண்டும்.(4)
[1] இந்த ஷட் கர்மங்கள் / ஆறு செயல்கள் / ஆறு வகைச் செயல்கள் என்பன: பிராமணருக்கு கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்து கொடுத்தல், {கொடை} ஈதல், {தானம்} ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன. ஷக்த்திரியருக்கு கற்றல், வேள்வி செய்தல், ஈதல், காத்தல், போர் செய்தல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு. வைசியருக்கு கற்றல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏருழவு செய்தல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு கற்றல், முன்னர்ச் சொன்ன மூவகையினருக்கும் தொண்டாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேள்வி செய்தல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு.
அந்தப் பிராமணன், நம்பிக்கை நிறைந்த இதயத்துடன் அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பொறுமை, கவனம், தற்கட்டுப்பாடு, கடமைகளை அறிதல் ஆகியவற்றுடனும், தூய்மையடைந்த ஆன்மாவுடனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவை இல்லாமல் ஒருபோதும் தளர்வுறாமல் இருக்க வேண்டும்.(5) கொடைகள், வேத கல்வி, வேள்விகள், தவங்கள், பணிவு, வஞ்சனையின்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை ஒருவனின் சக்தியைப் பெருக்கி அவனது பாவங்களை அழிக்கின்றன.(6) புத்தியுடன் கூடிய ஒருவன், குறைந்த உணவை உண்டு தன் புலன்களை வெல்ல வேண்டும். உண்மையில், காமம் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கி, தன் பாவங்கள் அனைத்தையும் கழுவி கொண்டு பிரம்மத்தை அடைய அவன் முயற்சிக்க வேண்டும்.(7) அவன் நெருப்பையும், பிராமணர்களையும் வழிபட்டு, தேவர்களை வணங்க வேண்டும். மங்கலமற்ற அனைத்து வகை உரையாடல்களையும், நீதியற்றவையும், தீங்கிழைப்பவையுமான அனைத்து செயல்களையும் தவிர்க்க வேண்டும். இந்த அடிப்படை ஒழுக்கமே ஒரு பிராமணனுக்கு முதலில் விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஞானத்தை அடைந்ததும் அவன், செயல்களிலேயே வெற்றி இருப்பதால் தன்னைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்[2].(9)
[2] "இவை நிச்சயம் அறச்செயல்கள் மட்டுமே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புத்தியுடன் கூடிய ஒரு பிராமணன், கடப்பதற்கு அரிதானதும், கடுமையானதும், பயங்கரமானதும், ஐம்புலன்களையே நீராகக் கொண்டதும், பேராசையையே ஆதாரமாகக் கொண்டதும், கோபத்தையே சகதியாகக் கொண்டதுமான வாழ்வெனும் ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்.(10) அனைத்துப் பொருட்களையும் கலங்கடிப்பதும், விதி சமைப்பவனிடம் இருந்து வெளிவரும் தடுக்கப்பட முடியாத பெருஞ்சக்தியைக் கொண்டதுமான காலமானது, அச்சுறுத்தும் தன்மையுடன் தன் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டு அவன் தன் கண்களை மூடிக் கொள்ளக்கூடாது.(11) இயற்கையின் போக்கில் உண்டாகும் அண்டமானது இடையறாமல் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.(12) வருடங்களெனும் சுழிக்காற்றுகள் நிறைந்திருக்கும் பெரும் ஆறெனும் காலமானது {காலவெள்ளமானது}, மாதங்களையே தன் அலைகளாகவும், பருவகாலங்களையே தன் நீரோட்டமாகவும், பிறைநாட்களையே {பக்ஷங்களையே} தன்னில் மிதக்கும் புற்களாகவும், துரும்புகளாகவும்,(13) இமைகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் {இமைப்பொழுது / நிமிடங்களைத்} தன் நுரையாகவும், பகலிரவைத் தன் நீராகவும், ஆசை மற்றும் காமத்தை தன்னில் உள்ள பயங்கர முதலைகளாகவும், வேதங்கள் மற்றும் வேள்விகளைத் தன்னில் உள்ள தெப்பங்களாகவும்,(14) உயிரினங்களின் அறத்தையே தீவுகளாகவும், ஈட்டல் மற்றும் இன்பத்தைத் தன் நீரூற்றுகளாகவும், பேச்சில் வாய்மை மற்றும் விடுதலையை {முக்தியைத்} தன் கரைகளாகவும், நன்மையைத் தன்னில் மிதக்கும் மரங்களாகவும்,(15) யுகங்களைத் தன் போக்கில் நேரும் ஏரிகளாகவும் கொண்டுள்ளது. பிரம்மத்தைப் போன்றே உணரப்பட முடியாத தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்க ஆறான காலமானது, விதிசமைப்பவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் இடையறாமல் யமனின் வசிப்பிடத்தை நோக்கிச் சுமந்து செல்கிறது.(16)
ஞானமும், பொறுமையும் கொண்ட மனிதர்கள் அறிவு மற்றும் ஞானம் எனும் தெப்பங்களைப் பயன்படுத்தி, இந்தப் பயங்கர ஆற்றைக் கடப்பதில் எப்போதும் வெல்கிறார்கள். எனினும், (அந்தப் பயங்கர ஓடைக்குள் வீசப்படும்போது) இத்தகைய தெப்பங்கள் இல்லாமல் அறிவற்ற மூடர்களால் என்ன செய்ய முடியும்?(17) ஞானம் கொண்ட மனிதன் மட்டுமே இந்த ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்; அறிவுக்குப் பொருந்தும் ஞானம் இல்லாதவன் இவ்வாறு வெல்வதில்லை. முன்னவன் {ஞானம் கொண்டவன்} அனைத்தின் தகுதிகளையும், குறைகளையும் தொலைவிலிருந்தே கண்டு கொள்கிறான். (அதன்படியே அவன் பின்பற்றத் தகுந்ததைப் பின்பற்றுவதிலும், புறக்கணிக்கத்தக்கதைப் புறக்கணிப்பதிலும் வெல்கிறான்).(18) எனினும் நிலையற்ற குறை புத்தி கொண்டவனும், ஆசை மற்றும் பேராசை நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், எப்போதும் ஐயங்களாலேயே நிறைந்திருக்கிறான். எனவே, ஞானமற்ற மனிதன் அந்த ஆற்றைக் கடப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை. மேலும் (ஐயத்துடன்) செயல்படாமல் அமர்ந்திருக்கும் அவனால் ஒருபோதும் அதைக் கடக்க முடியாது.(19) ஞானமெனும் தெப்பம் இல்லாத மனிதன், பெரும் குறைகளின் கனத்தைச் சுமப்பதால் மூழ்கிவிடுகிறான். ஆசையெனும் முதலையால் பற்றப்பட்ட ஒருவன், ஞானத்தைக் கொண்டிருப்பவனாக இருந்தாலும் கூடத் தன் தெப்பம் எதுவென ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டான்.(20)
ஞானமும், புத்தியும் கொண்ட ஒரு மனிதன் இந்தக் காரணங்களுக்காகவே காலமெனும் ஓடையில் (மூழ்கிவிடாமல்) மிதக்க முயற்சிக்க வேண்டும். உண்மையில், பிரம்மத்தை அறிந்தவனே {காலவெள்ளத்தில்} தன்னை மிதக்கச் செய்து கொள்வதில் வெல்கிறான்.(21) உன்னதக் குலத்தில் பிறந்த ஒருவன், இந்தக் காரணங்களுக்காகவே, கற்பித்தலின் மூன்று கடமைகளையும், பிறரின் வேள்விகளை நடத்துவதையும், கொடைகளை ஏற்பதையும் தவிர்த்து, கற்றல், வேள்வி செய்தல், கொடை அளித்தல் என்ற மூன்று செயல்களை மட்டுமே செய்து அந்த ஓடையில் {கால வெள்ளத்தில்} மிதக்க முயற்சிக்க வேண்டும். அத்தகைய மனிதன், ஞானமெனும் தெப்பத்தின் உதவியால் அதை நிச்சயம் கடப்பான்.(22) ஒழுக்கத்தில் தூய்மையாக இருப்பவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், நல்ல நோன்புகளை நோற்பவனும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவனும், ஞானம் கொண்டவனுமான ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நிச்சயம் வெல்வான்[3].(23) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுபவன், கோபம் மற்றும் பொறாமையை வென்று, ஏற்கனவே சொல்லப்பட்ட அறங்களைப் பயின்று, ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட்டு, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு உண்பவனாக இருக்க வேண்டும்.(24)
[3] கும்பகோணம் பதிப்பில், "மூன்று தலைமுறையாகப் பரிசுத்தமான குலத்தில் பிறந்தவனும் (அத்யயனம், யாகம், தானம் என) மூன்று கர்மங்களைச் செய்கிறவனும் (அத்யாபனம் யாஜனம் ப்ரதிக்ரகம் என) மூன்று கர்மங்களில் ஸந்தேகமுள்ளவனுமாகி ஞானத்தால் தாண்டிச் செல்லும் விதமாக அதிலிருந்து மேலே செல்ல முயற்சிக்க வேண்டும். ஸம்ஸகாரங்களைப் பெற்றவனும், அடக்கமுள்ளவனும், நியமமுள்ளவனும், மனத்தை அடக்கியவனுமாயிருப்பவனுக்குத் தடையின்றி இவ்வுலகிலும் மேலுலகிலும் ஸித்தியுண்டாகும்" என்றிருக்கிறது.
நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகளையே அவன் பின்பற்ற வேண்டும்; ஆளுமை செலுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதனைப் போல அவன் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்; அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல், நிந்திக்கப்படாத வழிமுறையைப் பின்பற்றித் தன் வாழ்வாதாரத்தை ஈட்ட வேண்டும்.(25) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களில் உள்ள ஞானத்தின் உண்மைகளை நன்கறிந்தவனும், நன்கு ஆளப்படும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனைப் போன்ற நடத்தையைக் கொண்டவனும், தெளிவான பார்வையைக் கொண்டவனும், தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பவனும், தன் செயல்களின் மூலம் கடமைகளில் {தர்மங்களில் / அறங்களில்} எந்தக் கலப்பையும் உண்டாக்காதவனும்,(26) சாத்திரங்களில் நிறுவப்பட்டுள்ளவற்றை நோற்பவனும், நம்பிக்கை நிறைந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், ஞானம் கொண்டவனும், பொறாமை மற்றும் வன்மம் இல்லாதவனும், நீதி மற்றும் அநீதிக்கிடையிலான வேறுபாட்டை நன்கறிந்தவனுமான ஒருவன் தன் சிரமங்களை அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(27) மனோவுறுதி கொண்டவனும், எப்போதும் கவனம் மிக்கவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், அறத்தை {நீதியை} அறிந்தவனும், தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவற்றைக் கடந்தவனுமான ஒரு பிராமணன், துயரால் ஒருபோதும் தளர்வடைய மாட்டான்.(28)
பழங்காலத்தில் ஒரு பிராமணனுக்கு இவ்வகை ஒழுக்க நடைமுறையே விதிக்கப்பட்டது. அவன் ஞானத்தை அடைய முயற்சி செய்து, சாத்திரச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்வதன் மூலம் அவன் நிச்சயம் வெற்றியை அடைவான்.(29) தெளிவான பார்வையில்லாத ஒருவன் {அறிவில்லாதவன்}, சரியானதையே செய்ய விரும்பினாலும் தவறையே செய்வான். அத்தகைய மனிதன், தன் அறிவைப் பயன்படுத்தினாலும், அநீதியின் இயல்பைக் கொண்ட அறச்செயல்களையே செய்கிறான்.(30) சரியானதைச் செய்ய விரும்பினாலும் அவன் தவறானதையே செய்கிறான். அதேபோலத் தவறானதைச் செய்ய விரும்பி, சரியானதைச் செய்கிறான். அத்தகைய மனதின் மூடனாவான். இருவகைச் செயல்களை அறியாதவன், மீண்டும் மீண்டும் மறுபிறவிகளையும் மரணங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்" என்றார் {வியாசர்}.(31)
ஆங்கிலத்தில் | In English |