The cause for emancipation! | Shanti-Parva-Section-236 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 63)
பதிவின் சுருக்கம் : முக்திக்கு வழிவகுக்கும் ஞானம்; யோக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகள் ஆகியவற்றைச் சுகருக்கு விளக்கிச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "விடுதலை {முக்தி} விரும்பத்தக்கதானால் ஞானம் அடையப்பட வேண்டும். காலம் அல்லது வாழ்வெனும் ஓடையில் மேலும் கீழுமாக அலைக்கழிக்கப்படும் ஒருவன் கரையை அடைவதற்கு ஞானமே தெப்பமாகும் {படகாகும்}.(1) (உயிர் என்று அழைக்கப்படும் ஒன்று மற்றும் ஆன்மாவின் குணத்தைப் பொறுத்தவரையில்) ஞானத்தின் துணை கொண்டு குறிப்பிட்ட தீர்மானங்களை அடைந்த ஞானிகள், அந்த ஞானமெனும் தெப்பத்தைக் கொண்டு அறியாமை கொண்டோரைக் காலம் அல்லது வாழ்வெனும் ஓடையைக் கடக்க உதவ வல்லவர்களாக இருக்கிறார்கள். எனினும் அறியாமை கொண்டோர் தங்களையோ, பிறரையோ காத்துக் கொள்ள இயன்றவர்கள் அல்ல.(2) ஆசை மற்றும் பிற குறைகள் அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டவனும், பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்தவனுமான ஒருவன், இடம் {தேசம்}, செயல்கள் {கர்மா}, பற்று {அனுராகம்}, பொருட்கள் {திரவியம்}, வழிமுறைகள் {உபாயம்}, அழிவு {அபாயம்}, நிச்சயத்தன்மை {நிச்சயம்}, கண்கள், உணவு {ஆகாரம்}, ஒடுக்குமுறை {ஸம்ஹாரம்}, மனம் மற்றும் ஆய்வு {தரிசனம்} ஆகிய பனிரெண்டு யோகத் தேவைகளைக் கவனிக்க வேண்டும்[1].(3) மேன்மையான அறிவை அடைய விரும்புபவன், தன் புத்தியின் துணை கொண்டு, பேச்சு மற்றும் மனம் ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்த வேண்டும். அமைதிநிலையை விரும்பும் ஒருவன் தன் அறிவின் துணை கொண்டு தன் ஆன்மாவைக் கட்டுப்படுத்த வேண்டும்.(4)
[1] "இடம் என்பது சமமானதாகவும், கங்கரங்கள், நெருப்பு, மணல் முதலியவற்றில் இருந்து விடுபட்டதாகவும் தனிமையானதாகவும், ஒலி மற்றும் பிற தொந்தரவுகளில் இருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும். செயல்கள் என்பன, உணவு, விளையாட்டு, கேளிக்கைகளை விடுவது, உலக நோக்கங்கள் நிறைவேற்றுவதை மட்டுமே கொண்ட அனைத்து வகைத் தொழில்களையும் விடுவது, உறக்கம் மற்றும் கனவுகளை விடுவது உள்ளிட்டவையாகும். பற்று என்பது, நல்ல சீடர்களை அடைதல் மற்றும் யோக முன்னேற்றம் நிமித்தமானதாகும். பொருட்கள் என்பன, புனித விறகு, நீர் உள்ளிட்டவையாகும். ஒடுக்குமுறை என்பது எதிர்பார்ப்புகளையும், கவலைகளையும் ஒடுக்குதலாகும். வழிமுறைக்ள என்பது, இருக்கை, அமரும் முறை, உடலின் தன்மை ஆகியவற்றைக் குறிக்கும். அழிவு என்பது ஆசையை வெல்வதையும், கவர்ச்சிகரமான அனைத்துப் பொருட்களையும் துறப்பதையும் குறிக்கிறது. நிச்சயத்தன்மை என்பது வேதங்களில் யோகம் குறித்துச் சொல்லப்பட்டுள்ளவற்றிலும், ஆசான்களிடத்திலும் மாற்றமிலா நம்பிக்கை ஆகியனவாகும். கண்கள் என்பது பிற புலன்களையும் குறிக்கும். இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். உணவு என்றால் தூய்மையான உணவாகும். ஒடுக்குமுறை என்பது உலகப்பொருட்களின் மேல் நாம் கொண்ட இயல்பான விருப்பதை அடக்குதலாகும். ஆசையை முறைப்படுத்தலும், அதற்கு முரணான தீர்மானமின்மை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆய்வு என்பது, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், கவலை, குறைகள் ஆகியவற்றைக் குறித்துச் சிந்தப்பதாகும். இவற்றுக்குப் பொருள் உரைப்பதில் நான் நீலகண்டரையே பின்பற்றியிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலே அடைப்புக்குறிக்குள் தென்படுபவை அனைத்தும் கும்பகோணம் பதிப்பில் உள்ள சொற்களாகும்.
கருணையுள்ளவனாகவோ, கொடூரனாகவோ, வேதங்கள் அனைத்தையும் அறிந்தவனாகவோ, ரிக்குகளை அறியாதவனாகவோ, அறவோனாகி வேள்விகளைச் செய்பவனாகவோ, இழிந்த பாவியாகவோ, ஆற்றல் மற்றும் செல்வத்தில் மேம்பட்டவனாகவோ, துன்பத்தில் மூழ்கியவனாகவோ ஒருவன் இருந்தாலும், (நான் சொல்லும் குணங்களான) இவற்றை {யோகத் தேவைகளை / யோக சாதனங்களை} நோக்கி மனத்தைத் திருப்பும் அவன், கடப்பதற்கரிதான வாழ்வெனும் பெருங்கடலை நிச்சயம் கடப்பான்.(5,6) யோகத்தின் மூலம் பிரம்மத்தை அடைவதன் விளைவுகளைக் குறித்துப் பேசாமல், ஆன்ம விசாரணையில் மட்டுமே தன்னை நிறுவி கொள்ளும் ஒருவன், வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள செயல்களின் தேவைகளைக் கடந்தவனாகிறான் என்று சொல்லப்படுகிறது.(7) ஜீவனைத் தன்னுள்ளே கொண்ட உடல் ஓர் அற்புதத் தேராகும். வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளைச் செய்கையில் அவை அதன் {உடலெனும் அந்த அற்புதத்தேரின்} உபஸ்தமாகவும் {அமரும் இடமாகவும்}, வெட்கம் அதன் வரூதமாகவும் {தேரைக் காக்கும் ஒரு பகுதியாகவும்}, உபாயம் மற்றும் அபாயம் ஆகியன அதன் கூபரமாகவும் {மூக்கணையாகவும்}, அபானன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் அக்ஷமாகவும் {அச்சாகவும்}, பிராணன் என்றழைக்கப்படும் மூச்சுக்காற்று அதன் யுகமாகவும் {நுகமாகவும்}, அறிவு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இருப்புக் காலம் ஆகியன குதிரைகளைக் கட்டும் அதன் நுகத்தடியாகவும் {பிடிப்பாகவும்}, கவனம் அதன் அழகிய வந்தூரமாகவும் {சேர்க்கையாகவும்}, நன்னடத்தையை ஏற்றல் அதன் நேமியாகவும் {கட்டாகவும்}, பார்வை, தீண்டல், மணம், கேள்வி ஆகியன அதன் குதிரைகள் நான்காகவும், ஞானம் அதன் நாபியாகவும் {குடமாகவும்}, சாத்திரங்கள் அனைத்தும் அதன் பிரடோதமாகவும் {சாட்டையாகவும்}, குறிப்பிட்ட சாத்திரத் தீர்மானங்களின் அறிவு அதன் சாரதியாகவும், ஆன்மா உறுதியான இருக்கையைக் கொண்ட அதன் பயணியாகவும், நம்பிக்கை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியன அதன் முன்னோடியாகவும், துறவானது பின்னால் தொடர்ந்து வந்து நன்மை செய்யும் அதன் இணைபிரியாத் தோழனாகவும், தூய்மை அது செல்லும் பாதையாகவும், தியானம் (அல்லது பிரம்மத்தில் கலப்பது) இலக்காகவும் அமையும்போது, {உடலெனும்} அந்தத் தேரானது பிரம்மத்தை அடைந்து அங்கே பிரகாசத்துடன் ஒளிர்கிறது[2].(8-11)
[2] "பெரும் அறிவாற்றலை வெளிப்படுத்துவதும், இரு வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்களாலும் பின்பற்றப்படுவதுமான நீலகண்டரின் விளக்கம் இருக்கும்போதிலும், அவ்விரு மொழிபெயர்ப்பாளர்களும், விடுதலையை அல்லது பிரம்மத்தை அடைய விரும்பும் ஒருவன் பின்பற்றும் வாழ்வுமுறையைச் சொல்லும் இந்த ஸ்லோகங்களின் சில பகுதிகளைத் தவறாகவே புரிந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நற்குணங்கள் ஒரு தேரின் குறிப்பிட்ட பகுதிகளாகப் பொருத்திப் பார்க்கப்படுகின்றன. உவமையாகச் சொல்லப்படும் அந்தத் தேரின் அங்கங்களுக்கும் இங்கே குறிப்பிடப்படும் குணங்களுக்கும் இடையில் (ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களைத் தவிர வேறு) எந்தப் பொருத்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை. உபஸ்தம் என்பது ஒரு தேரில் சாரதி அமரும் இடமாகும். வரூதம் என்பது மோதலில் இருந்து தேரைப் பாதுகாக்கும் ஒரு மரக்கூடாகும். வெட்கம் என்பது நம்மை அனைத்துத் தீய செயல்களில் இருந்தும் விலகச் செய்யும் ஓர் உணர்வாகும். இங்கே கூபரம் என்றழைக்கப்படும் உபாயம் மற்றும் ஆபாயம் ஆகியன 3ம் சுலோகத்தில் விளக்கப்படுவதைப் போல வழிமுறைகளும், அழிவும் ஆகும். அக்ஷம் என்பது சக்கர மத்தியாகும். யுகம் என்பது நுகமாகும். வந்தூரம் என்பது, தேரின் மத்தியில் உள்ள தூணில் இணைக்க நுகத்தில் உள்ள ஒரு பகுதியாகும். நேமி என்பது சக்கரத்தின் சுற்றளவாகும். நாபி என்பது பயணியோ, போர்வீரனோ தேரில் அமர்ந்திருக்கும் ஒரு மத்திய பகுதியாகும். பரடோதம் என்பது குதிரைகளை விரட்ட சாரதி பயன்படத்தும் சாட்டையாகும். ஜீவயுக்தம் என்பதை, இத்தகைய ஜீவன் விடுதலை அல்லது மோக்ஷத்தை அடைய விரும்புவது என்று உரையாசிரியர் விளக்குகிறார். இத்தகைய விரிவான வடிவங்கள் கிழக்கத்திய கவிசர்களின் விருப்பத்திற்குரிய செருக்குநிலையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முதுமை, மரணம் ஆகியவற்றுக்கு மேலான பிரம்மமெனும் இலக்கை அடைவதற்காக இந்த உலகமெனும் காட்டைக் கடக்கும் வகையில் {உடலெனும்} தன் தேரை ஆயத்தம் செய்வதற்கான வேகமான வழிமுறைகளை நான் இப்போது சொல்லப் போகிறேன்.(12) ஒரு நேரத்தில் ஒரே பொருளில் மனத்தை நிலை நிறுத்துவது தாரணை என்றழைக்கப்படுகிறது[3]. நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை முழுமையாக நோற்கும் யோகியானவன் ஏழு வகைத் தாரணைகளைப் பயில்கிறான். மேலும், அருகாமை மற்றும் தொலைவு ஆகிய காரியங்களைப் பொருத்து அவற்றிலிருந்து பல்வேறு வகையான தாரணைகள் எழுகின்றன[4].(13) யோகியர் இதன் மூலம், பூமி {ப்ருதிவி}, காற்று {வாயு}, வெளி {ஆகாயம்}, நீர் {அப்பு}, நெருப்பு {தேயு}, நனவுநிலை {அகங்காரம்} மற்றும் புத்தியில் படிப்படியாகத் தேர்ச்சி பெறுகின்றனர். அதன் பிறகு அவன் படிப்படியாகப் புலப்படாததில் {அவ்யக்தத்தில்} தேர்ச்சியடைகிறான்.(14) விதிக்கப்பட்டிருக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி யோகத்தில் ஈடுபடும் குறிப்பிடப்பட்ட தனிநபர்களால் உணரப்படும் கருத்துகளின் வகையை முறையே நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். மேலும், தன்னையே உள்நோக்கும் ஒருவனால் (விதிகளின் படி) தொடங்கப்படும் யோகத்தில் கிடைக்கும் வெற்றியின் இயல்பைக் குறித்தும் நான் உனக்குச் சொல்லப் போகிறேன்[5].(15)
[3] "ஒரு குறிப்பிட்ட தோற்றம் அல்லது கருத்தில் மனத்தைத் தக்க வைக்க, அல்லது ஈடுபடுத்த செய்யும் சக்தியின் செயல்பாட்டுக்கு ஒப்பானது இந்தத் தாரணை. யோகியர் குறிப்பாக இதையே பயில்கின்றனர். உண்மையில், விரும்பிய அளவுக்கு இதில் பயிற்சி எடுப்பதே முதல் படியாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "ஏழு வகைத் தாரணைகள் என்பன பூமி, காற்று, வெளி, நீர், நெருப்பு, நனவுநிலை, புத்தி தொடர்புடையனவாக இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "இந்த இரு வரிகளின் அமைப்பையும் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. "யோகதம் Yogatah என்பது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி என்ற பொருளைத் தரும். விக்ரமம் Vikramaah என்பது கருத்தின் வகை அல்லது, வரிசை முறையிலான கருத்துகள் என்ற பொருளைத் தரும். ஆத்மானிபச்யதம் Atmanipacyatah என்பது தனக்குள்ளே பார்ப்பவன் அல்லது, புறவுலகில் இருந்து மனத்தை விலக்கி தனக்குள் அதைச் செலுத்துபவன் என்ற பொருளைத் தரும். நீலகண்டரின் உதவியில்லாமல் இந்த வரிகளை முற்றாகப் புரிந்து கொள்ள முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தன் திரள் உடலைக் கைவிடும் யோகி, தன் ஆசானின் போதனைகள் பின்பற்றிப் பின்வரும் நுட்பமான வடிவங்களை வெளிப்படுத்தும் தன் ஆன்மாவைக் காண்கிறான். முதல் நிலையில் அவனுக்கு ஆகாயம் என்பது பனி நிறைந்த ஆவி {புகை} போன்ற ஒரு நுட்பமான பொருளால் நிரம்பியதாகத் தெரிகிறது.(16) உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவின் வடிவமும் இத்தகையதாகவே இருக்கிறது. இந்தப் பனி மறையும்போது இரண்டாவது (அல்லது புதிய) தோற்றம் {உடல்} தென்படுகிறது.(17) அப்போது யோகி தன் இதயமெனும் ஆகாயத்தில் நீரின் வடிவத்தைக் காண்கிறான். அந்த நீர் மறைந்ததும், நெருப்பெனும் வடிவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.(18) இது மறைந்ததும் உணரப்படும் வடிவம் நன்கு கடினமாக்கப்பட்டதும் பளபளப்பானதுமான ஓர் ஆயுதத்தைப் போன்ற பிரகாசமான காற்றாகும். காற்றால் வெளிப்படுத்தப்படும் அந்த வடிவம் மெல்ல மெல்ல சிலந்தி நூலை {ஆட்டு மயிரைப்} போல மெலிதாகிறது.(19) வெண்மையையும், காற்றின் நுட்பமான தன்மையையும் அடைந்த பிரம்மனின் ஆன்மா, மேலான வெண்மையையும், வெளியின் {ஆகாயத்தின்} நுட்பமான தன்மையையும் அடைவதாகச் சொல்லப்படுகிது.(20)
இந்தப் பல்வேறு சூழ்நிலைகளின் விளைவுகளை அவை நேர்வது போலவே உனக்குச் சொல்கிறேன்; கேட்பாயாக. பூமி எனும் பூதத்தை வெற்றிக் கொண்ட யோகியானவன், படைப்பு சக்தியின் தலைமைப் பொறுப்பை அடைகிறான்.(21) இரண்டாவது பிரஜாபதியைப் போல, எளிதில் கலக்கமடையாத முற்றிலும் அமைதியான இயல்பைக் கொண்ட அவனால் தன் உடலில் இருந்து பல்வேறு வகை உயிரினங்களைப் படைக்க முடியும். {வாயு எனும் பூதத்தை வென்று} காற்றின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால், அந்த மனிதனால், தன் கட்டைவிரல், அல்லது கை, அல்லது கால் ஆகியவற்றை மட்டுமே கொண்டு மொத்த பூமியையும் நடுங்கச் செய்ய முடியும்.(22) ஸ்ருதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி இதுவே காற்றின் குணமாகும். வெளியின் தலைமைப் பொறுப்பை அடைந்த யோகி, அந்தப் பூதத்தில் கலப்பது அல்லது விரும்பியபடி மறைவது ஆகியவற்றை அடைந்ததன் விளைவால், வெளியிலேயே {ஆகாயத்திலேயே} பிரகாசமாக நிலைத்திருக்க முடியும்.(23) நீரின் தலைமைப் பொறுப்பை ஒருவன் அடைந்தால் (அகஸ்தியரைப் போல) ஆறுகள், தடாகங்கள் மற்றும் பெருங்கடலையே கூடக் குடித்துவிட முடியும். நெருப்பின் மீதான தலைமைப் பொறுப்பை அடையும் யோகி, பார்க்கப்பட முடியாத {புலப்படாத} வடிவத்தை அடைந்து பிராகாசிக்கிறான். அவன் தன்னுள் உள்ள நெருப்பை அணைத்தால் மட்டுமே புலப்படுவான். யோகி தன் தனிப்பட்ட நனவுநிலையை {அகங்காரத்தை} அழிப்பதில் வென்றால் இந்த ஐம்பூதங்களும் அவனது ஆளுகையின் கீழ் வரும்.(24) ஐம்பூதங்கள் மற்றும் தனிப்பட்ட நனவுநிலை {அகங்காரம்}[6] ஆகியவற்றின் ஆன்மாவான புத்தியானது யோகியால் வெல்லப்படும்போது, அவன் அனைத்தையும் அறிந்தவனாக, (ஐயம் மற்றும் நிச்சமின்மையில் இருந்து விடுபட்ட உணர்வுள்ளவனாக) தன்னிடம் வரும் அனைத்துப் பொருட்களின் முற்றான அறிவைக் கொண்டவனாக ஆகிறான்.(25)
[6] "புத்தியானது, ஐந்து பூதங்கள் மற்றும் தனிப்பட்ட நினைவு நிலை {அகங்காரம்} ஆகிய இந்த ஆறும், அதில் {புத்தியில்} நிலைத்திருப்பதால், அல்லது அதையே தங்கள் புகலிடமாகக் கொண்டிருப்பதால்} அவற்றின் ஆன்மாவாக அழைக்கப்படுகிறது. முந்தைய பகுதிகளில் சொல்லப்பட்டிருப்பதைக் கண்ட வாசகரால் இஃதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இதன் விளைவாகப் புலப்படும் நிலையில் இருக்கும் ஒன்று {ஸ்தூலமாகக் காணப்படும் ஆத்ம ரூபம்}, எதில் இருந்து இந்த உலகம் உண்டாகி புலப்பட்ட நிலையை அடைந்ததோ அந்தப் புலப்படாதது {ஸுக்ஷமம்}, அல்லது பரமாத்மாவுக்குள் கலக்கிறது[7].(26) புலப்படாதது குறித்த அறிவியலை இப்போது விரிவாக விளக்கப் போகிறேன் கேட்பாயாக. ஆனால் அனைத்திற்கும் முன்பாகச் சாங்கிய தத்துவ அமைப்பில் விவரிக்கப்பட்டுள்ளபடி புலப்படும் அனைத்தையும் குறித்து என்னிடம் இருந்து கேட்பாயாக.(27) யோகம் மற்றும் சாங்கியம் என்ற ஈரமைப்புகளிலும் {கோட்பாடுகளிலும்}, இருபத்தைந்து வகை அறிவுகள் {தத்துவங்கள்} கிட்டத்தட்ட இதே வகையிலேயே சமமானவையாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் முக்கியப் பண்புகளைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக.(28) எது புலப்படுவது {விக்தம்} என்று சொல்லப்படுகிறதோ அது பிறப்பு, வளர்ச்சி, சிதைவு {மூப்பு}, மற்றும் மரணம் என்ற நான்கு பண்புகளைக் கொண்டதாக இருக்கிறது.(29) எதில் இந்தப் பண்புகள் இல்லையோ அது புலப்படாதது {அவ்யக்தம்} என்று சொல்லப்படுகிறது. வேதங்களிலும், அறிவியல்களிலும் குறிப்பிடப்படும் ஈரான்மாக்கள் இவற்றின் அடிப்படையிலானவையே.(30)
[7] "புலப்படாதது, அல்லது பரமாத்மாவிலிருந்தே இவ்வுலகம் அல்லது புலப்படும் அனைத்தும் தோன்றுகின்றன அல்லது படைக்கப்படுகின்றன. யோகியானவன், தன் மேன்மையான அறிவின் விளைவால் புலப்படும் அனைத்தும் {ஸ்தூல ஆத்மாக்கள் அனைத்தும்} புலப்படாத பரமாத்மாவே என்பதைப் புரிந்து கொள்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முதலாவதானது (ஜீவாத்மா என்றழைக்கப்படுவது) ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நான்கு பண்புகளையும், (அறம், பொருள், இன்பம், வீடு என்ற) நான்கு நோக்கங்களுக்கான ஏக்கத்தையும் கொண்டதாகும். ஆன்மாவானது புலப்படுவது (வ்யக்தம்) என்றழைக்கப்படுகிறது, மேலும் அது புலப்படாததிலிருந்து (பரமாத்மாவிலிருந்து) {அவ்யக்தத்திலிருந்து} பிறந்ததுமாயிருக்கிறது. அது புத்தியுள்ளதாகவும், புத்தியில்லாததாகவும் இருக்கிறது.(31) இவ்வாறே நான் சத்வம் (செயலற்ற பொருள்) {புத்தி}, க்ஷேத்ரக்ஜ்ஞன் (பொருளற்ற ஆவி) {ஜீவாத்மா} ஆகியவற்றைக் குறித்துச் சொன்னேன்[8]. வேதங்களில் இந்த இருவகை ஆன்மாக்களும் புலன்களுக்குரிய பொருட்களில் பற்றுடையவையாகவே சொல்லப்பட்டுள்ளன.(32) ஒருவன் புலன்நுகர் பொருட்களில் இருந்து தொடர்பறுந்தவனாகத் தனிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்பதே சாங்கியர்களின் கோட்பாடாகும். பற்று, செருக்கு ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், இன்பம் துன்பம், வெப்பம் குளிர், ஆகிய முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்தவனும், கோபத்திற்கோ, வெறுப்புக்கோ வசப்படாதவனும், ஒருபோதும் பொய்மை பேசாதவனும்,(33) அவதூறு கூறப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ கூட அவதூறு செய்தவன் அல்லது தாக்கியவனிடம் நட்பை வெளிப்படுத்துபவனும், பிறருக்கு ஒருபோதும் தீங்கு நினையாதவனும், சொல், செயல் மற்றும் சிந்தை ஆகிய மூன்றையும் கட்டுப்படுத்துபவனும்,(34) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்பவனுமான யோகி பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்.
[8] கும்பகோணம் பதிப்பில், "புத்தியெனும் ஸத்வம் க்ஷேத்ரஜ்ஞனென்னும் ஜீவன் இவ்விரண்டும் அவ்யக்தலக்ஷணமுள்ளவையாகும்" என்றிருக்கிறது.
பூமி சார்ந்த பொருட்கள் எதனிலும் ஆசையை வளர்க்காதவனும், வருவனவற்றை விருப்பமுடன் ஏற்பவனும், தன் உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே பூமிசார்ந்த பொருட்களைச் சார்ந்திருப்பவனும்,(35) பேராசையில் இருந்து விடுபட்டவனும், துயரங்கள் அனைத்தையும் விரட்டியவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அவசியமான செயல்கள் அனைத்தையும் செய்பவனும், மேனியின் தோற்றம் மற்றும் உடுப்பு {உடை அலங்காரங்களைக்} கருத்தில் கொள்ளாதவனும், (வாழ்வின் உண்மையான நோக்கங்களில் அர்ப்பணிப்புடன்) தன் புலன்கள் அனைத்தையும் குவித்தவனும், நிறைவேறாத காரியம் ஏதும் இல்லாதவனும்,(36) அனைத்து உயிரினங்களிடமும் சமமான நட்பைக் கொண்டவனும், மண்ணாங்கட்டியையும், தங்கக்குவியலையும் சமமான கண்ணுடன் கருத்தில் கொள்பவனும், நண்மன் மற்றும் எதிரிக்கிடையில் சமமான மனநிலையைக் கொண்டவனும், பொறுமையைக் கொண்டவனும், புகழையும் பழியையும் ஒன்றாகவே ஏற்பவனும்,(37) ஆசைக்குரிய பொருட்கள் அனைத்திலும் உள்ள ஏக்கங்களில் இருந்து விடுபட்டவனும், பிரம்மச்சரியத்தைப் பயில்பவனும், தன் நோன்புகள் மற்றும் பயிற்சிகள் அனைத்திலும் உறுதியாகவும், நிலையாகவும் இருப்பவனும், இவ்வண்டத்தில் உள்ள எந்த உயிரினத்திடமும் வன்மமோ, பொறாமையோ இல்லாதவனுமான ஒரு யோகியானவன், சாங்கிய அமைப்புமுறையின்படி வீடுபேற்றை {விடுதலையை / முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(38)
(பதஞ்சலியின் அமைப்பு முறை அல்லது) யோகத்தின் மூலம் விடுதலையை {முக்தியை} வெல்லும் மனிதனின் வழிகள் மற்றும் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. (தொடக்கப் படிநிலைகளில்) யோகப் பயிற்சி அளிக்கும் பலத்தைக் கடந்து செயல்படுபவன், விடுதலை {முக்தி} அடைவதில் வெல்கிறான்[9].(39) (சாங்கியம், யோகம் என்ற அமைப்புமுறைகளின்படி விடுதலையை அடைவது என்பது குறித்துப்) பேசுபவர்களால் வெவ்வேறானவையாகச் சொல்லப்படும் (ஆனால் உண்மையில் ஒன்றேயான) இந்தக் காரியங்களைக் குறித்து உள்ளபடியே சொல்லிவிட்டேன்[10]. இவ்வாறே ஒருவன் முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடக்கலாம். இவ்வாறே ஒருவன் பிரம்மத்தையும் அடையலாம்" என்றார் {வியாசர்}.(40)
[9] "தொடக்க நிலைகளில் யோகப்பயிற்சியானது ஒரு யோகி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவனுக்கு இயல்புக்குமீறிய குறிப்பிட்ட சில சக்திகளைக் கொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது. அஃதாவது இந்திரப்பதவியுடன் சொர்க்கத்தில் இருப்பதும் விடுதலைக்கு {முக்திக்கு} இணையில்லாத நரகமே ஆகும். முந்தைய பகுதி ஒன்றில், அந்த இயல்புக்குமீறிய உடைமைகளால் {சக்திகளால்} வழிநடத்தப்பட்டுப் பாதிப்பை அடையும் யோகி, விடுதலையை அடையாமல் {இந்திரப் பதவியுடன் கூடிய சொர்க்கத்தையே அடைந்தாலும்} நரகத்தையே அடைகிறான். எனவே, யோகம் தரும் பலத்தைக் கடந்தவனே விடுதலையை {முக்தியை} அடைகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] கும்பகோணம் பதிப்பில், "யோகத்திலுண்டாகும் அணிமா முதலிய ஐஸ்வர்யத்தை விட்டு விலகியவன் முக்தி அடைகிறான் இவ்விதம் (அந்த அந்த ஸித்தாந்தத்தின்) அபிப்பிராயப்படி உண்டாகும் அறிவானது ஸந்தேகமின்றி உனக்கு உபதேசிக்கப்பட்டது. இவ்விதமிருப்பவன் துவந்துவங்களிலிருந்து விடுபட்டவனாவான்; பரமாத்மாவையும் அடைவான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 236ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |