Who is a Brahmana! | Shanti-Parva-Section-237 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 64)
பதிவின் சுருக்கம் : முக்திக்கு வழிவகுக்கும் ஞானத்தின் தன்மையைக் குறித்து வியாசரிடம் விசாரித்த சுகார்; செயல்கள் கட்டாயக் கடமையா, அல்லது விருப்பத்திற்குரியதா என்பது குறித்துச் சொன்ன வியாசர், உயிரினங்களின் உயர்வு தாழ்வையும், ஞானத்தின் சிறப்பையும் சுகருக்குச் சொன்னது...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "தியானம் செய்ய வல்லவனான ஒருவன், வாழ்வெனும் பெருங்கடலில், மேலும் கீழும் சுமந்து செல்லப்படும்போது, (வேறு எந்த ஆதரவையும் பற்றிக்கொள்வதற்காக அங்கேயும், இங்கேயும் தன் கரங்களையும் நீட்டாமல்) அறிவெனும் தெப்பத்தைப் பற்றிக் கொண்டு, விடுதலையை {முக்தியை} அடைவதற்காக அந்த அறிவையே கடைப்பிடிக்கிறான்" என்றார்.(1)
சுகர் {வியாசரிடம்}, "அந்த அறிவானது யாது? அது, பிழைகள் அகன்று உண்மை காணப்படும்போது அடையப்படும் கல்வியா? அல்லது புரிந்து கொள்ளப்படும், அல்லது அடையப்படும் எந்தப் பொருளின் உதவியின் மூலமாவது செய்யப்படும், அல்லது அடையப்படும் செயல்களைக் கொண்ட கடமைகளின் வழிமுறையா {பிரவிருத்தியா}? அல்லது, ஆன்ம அழிவை நாடுவதன் மூலம், செயல்களைத் தவிர்த்தல் என்றழைக்கப்படும் கடமைகளின் வழிமுறையா {நிவிருத்தியா}? பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரண்டும் எதன் உதவியின் மூலம் தவிர்க்கப்படுமோ அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார் {சுகர்}[1].(2)
[1] "இந்த ஸ்லோகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வித்யை Vidyaa, பிரவிருத்தி, நிவிருத்தி என்ற வார்த்தைகளுக்கு நீலகண்டர் கொடுத்திருக்கும் விளக்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். முதல் வழிமுறையைப் பொறுத்தவரையில் பிழைகள் அகன்று உண்மை அடையப்படுவதன் விளைவால் கிட்டும் போதனை என உரையாசிரியர் நினைக்கிறார். {அவரது உரையில்} வழக்கமான விளக்கமாகக் கயிறும் பாம்பும் சொல்லப்படுகின்றன. கயிறாகப் பாம்பை நினைக்கும் பிழை தவிர்க்கப்படும் போது, உண்மையான உணர்வு பின்தொடர்கிறது. பிரவிருத்தி என்பது போதுமான அளவுக்கு உரையிலேயே தொகுக்கப்பட்டிருக்கிறது. நிவிருத்தி என்பதற்கு, அழிவு மட்டுமே உண்மையான விடுதலை {முக்தி} என்று அதையே நாடும் சூன்யவாதிகள் மற்றும் லோகாயதவாதிகள் (பௌத்தர்கள்} ஆகியோரின் கோட்பாடு எனப் பொருள் கொள்ளலாம். வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் தவறாகவே பொருள் கொண்டிருக்கிறார்கள். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் வழக்கம் போலவே மொத்தமாகத் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த ஞானம் எது? (ஜனனமரணங்கள்) இரண்டையும் விலக்கத்தக்க வித்தை எது? பிரவ்ருத்தி ரூபமான தர்மமா? அல்லது நிவ்ருத்தியா?" என்று சுகர் கேட்பதாக இருக்கிறது.
வியாசர் {சுகரிடம்}, "உண்மையில் எந்தப் புகலிடமோ, அடித்தளமோ இல்லாமல், அனைத்தும் தங்கள் இயல்பின் {ஸ்வபாவத்தின்} விளைவாலேயே நிலைத்திருக்கின்றன என்று நம்பும் {சூன்யவாதியான} மூடன், சீடர்களின் நாட்டத்தை இத்தகைய போதனையால் நிறைத்து, தன் வாதத் திறமையால் அந்தச் சீடர்கள் முன்வைக்கும் முற்றிலும் முரண்பட்ட காரணங்களைப் புறக்கணித்து, எந்த உண்மையையும் அடையாமல் போகிறான்[2].(3) மேலும், பொருட்களின் இயல்பின் {ஸ்வபாவத்தின்} மூலமே அனைத்துக் காரணங்களும் உண்டாகின்றன என்று உறுதியாக நம்புபவர்கள் {லோகாயதவாதிகள்}, (ஞானமுள்ள) மனிதர்களின், அல்லது (அவர்களுக்குப் போதிக்கவல்ல) முனிவர்களின் கூற்றைக் கேட்டாலும் உண்மையை அடைவதில் தவறுகிறார்கள்.(4) இந்த இரு கோட்பாடுகளில் ஒன்றைப் பின்பற்றி (தங்கள் ஊகங்களை) நிறுத்துபவர்களும், உண்மையில் இயற்கையே {அண்டத்திற்கான} காரணம் எனக் கருதுபவர்களுமான மனிதர்கள் {சூன்யவாதிகளும், லோகாயதவாதளும்}, தங்களுக்கான நன்மையை அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை[3].(5)
[2] "இது சூன்யவாதிகளின் கூற்றென வியாசர் குறிப்பிடுவதாக உரையாசிரியர் கருதுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "ஏனம் Enam என்பது ஒருமையாகும். இது பரவலான வகையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உரையாசிரியர் நினைக்கிறார். 3ம் சுலோகத்தில் மறுப்புவாதிகளின் (சூன்யவாதிகளின்) கோட்பாடு குறிப்பிடப்படுகிறது. 4ம் சுலோகத்தில் லோகாயதவாதிகளின் கோட்பாடு குறிப்பிடப்படுகிறது. சூன்யவாதிகள் அண்டமென்பது இருப்பிலுள்ள ஒரு பொருளின் பிழையான தோற்றம் மட்டுமே என்று கருதுகிறார்கள், அதே வேளையில் லோகாயதவாதிகள், அண்டத்தைச் சொந்த இயல்பில் இருந்து உண்டாகும் உண்மையான பொருள் எனக் கருதுகிறார்கள். இந்த வேறுபாட்டைக் கடந்தும் கூட, இந்த இருவரின் கோட்பாடுகளிலும் இயற்கையே காரணம் என்று பேசப்படுகிறது. பேசுபவர் {வியாசர்}, இந்தக் கோட்பாடுகள் இரண்டும் தவறானவை என்று சொல்கிறார்.
இயற்கையே {ஸ்வபாவமே} (படைப்பிற்கும், அது நீடித்திருப்பதற்கும்) காரணம் என்ற இந்த நம்பிக்கையானது, பிழையின் ஆதிக்கத்தினால் மனத்தில் எழுந்து, அதை {அந்த நம்பிக்கையைப்} பேணி வளர்ப்பவர்களுக்கு அழிவைக் கொண்டு வருகிறது. பொருட்கள் தங்கள் சொந்த இயல்பிலேயே இருக்கின்றன என்றும்{1}, அவை {பொருட்கள்} (தங்கள் சொந்த இயல்பின் விளைவால்) தங்களுக்கு முந்தைய வேறெதனிலும் இருந்து உண்டாகின்றன என்றும்{2} {வேறு சொற்களில் ஸ்வபாவவாதம் என்றும் பரிபாவவாதம் என்றும்} சொல்லப்படும் இந்த இரு கோட்பாடுகளைக் குறித்த உண்மையை இப்போது கேட்பாயாக[4].(6) ஞானிகள், வேளாண்மை, உழவு (என்ற வழிமுறைகளின் மூலம்) பயிர் சேகரிப்பு, வாகனங்கள், இருக்கைகள், விரிப்புகள், வீடுகள் அமைத்தல் ஆகியவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.(7) மேலும் அவர்கள், இன்பத்தோட்டங்கள் அமைத்தல், மாடமாளிகைகளைக் கட்டுதல், அனைத்து வகை நோய்களுக்குமான மருந்துகளைத் தயாரித்தல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.(8) (வழிமுறைகளைப் பயன்படுத்தும்) ஞானமே காரியங்கள் கனிவதற்கு வழிவகுக்கிறது. ஞானமே நன்மையான விளைவுகளை வென்றெடுக்கிறது. மன்னர்கள், தாங்கள் ஆட்சி செய்யும் மனிதர்களைப் போன்ற அதே பண்புகளைக் கொண்டிருந்தாலும், இந்த ஞானமே அரசுரிமையை அனுபவிக்கவும், அரசைச் செலுத்தவும் அவர்களுக்குத் தகுதியைக் கொடுக்கிறது[5].(9) இந்த ஞானத்தின் மூலமே உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் அடையாளங்காணப்படுகிறார்கள். படைக்கப்பட்ட பொருட்களில் மேன்மையானவையும், தாழ்ந்தவையும் இந்த ஞானத்தின் மூலமே புரிந்து பார்க்கப்படுகிறது. இந்த ஞானம் அல்லது அறிவே அனைத்துப் பொருட்களுக்கும் உயர்ந்த புகலிடமாக இருக்கிறது[6].(10)
[4] "வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும், 6ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரியில் உள்ள பரிபாவம் paribhaavam என்ற சொல்லைத் தவிர்த்துச் சென்றிருக்கிறார்கள். இந்தச் சுலோகத்தின் முதல் கோட்பாடு மறுப்புவாதிகளையும் {சூன்யவாதிகளையும்}, இரண்டாம் கோட்பாடு லோகாயதவாதிகளையும் குறிக்கிறது. அல்லது முறையே 3 மற்றும் 4ம் ஸ்லோகங்களைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "ஞானத்தின் மூலமே இந்த விளைவுகள் அனைத்தும் அடையப்படுகின்றன. முடிவுகளை அடைவதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்துவதே ஞானமாகும். இயற்கையானது, அரண்மனைகளை ஒருபோதும் உண்டாக்குவதில்லை, அதே போல வாகனங்களையோ, மனிதன் அனுபவிக்கும் எந்த வசதிகளையோ அஃது உண்டாக்குவதில்லை. எவன் இவற்றுக்காக இயற்கையைச் சார்ந்திருப்பானோ, அவன் எவ்வளவு காலம் காத்திருந்தாலும் அவற்றை ஒருபோதும் அடையமாட்டான். மனம் மற்றும் உடல் உழைப்பு ஆகிய இரண்டின் தேவையும், அந்த உழைப்புக்குச் சூட்டப்படும் வெற்றிமகுடமும் இந்தச் சூன்யவாதிகளுக்கும், லோகாயதவாதிகளுக்கும் சிறந்த பதிலையளிப்பதாக இங்கே பேசுபவர் {வியாசர்} நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "இங்கே சொல்லப்படும் பரம் para என்பது சித் என்பதையும், அவரம் avara என்பது அகங்காரமற்றவை, அல்லது பொருள்கள் அனைத்தையும் குறிக்கிறது. பிரக்ஞம், ஞானம், வித்யை என்ற சொற்கள் அனைத்தையும் இங்கே ஒரே பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலே 9 மற்றும் 10ம் ஸ்லோகங்களில் உள்ளவை கும்பகோணம் பதிப்பில், "அறிவுள்ளவர்களால் இவைகள் செய்யப்படுகின்றன. அறிவானது பொருள்களுடன் சேரும்படி செய்யும். அறிவானது க்ஷேமத்தை அடையச் செய்யும். அறிவிற்சிறந்த லக்ஷணமுள்ள அரசர்கள் அறிவினால் ராஜ்யத்தை அனுபவிக்கின்றனர். பிராணிகளுக்குள்ள மேன்மையும், தாழ்மையும் அறிவாலேயே காணப்படுகின்றன. அப்பா, வித்தையால் உண்டுபண்ணப்பட்ட பிராணிகளுக்கு இவ்வுலகில் வித்தை ஒன்றே சிறந்த கதியாகும்" என்றிருக்கிறது.
படைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகைப் பொருட்கள் {உயிரினங்கள்} அனைத்தும் நான்கு வகைப் பிறவிகளைக் கொண்டிருக்கின்றன. அவை கன்றீனும் பாலூட்டிகள் {ஜராயுஜம்}, முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை {அண்டஜம்}, காய்கறிகளில் பிறப்பவை {தாவரங்கள் / உத்பிஜ்ஜம்}, {வியர்வை, மலம் போன்ற} கழிவில் பிறப்பவை {ஸ்வேதஜம்} ஆகியவையாகும். மேலும் உயிரினங்களில் அசையாதனவற்றை விட அசைவன மேன்மையானவையாக அறியப்பட வேண்டும். (புத்தியில்லாத பொருளில் இருந்து) வேறுபட்டிருப்பதும், அறிவுக்குப் பொருத்தமானதுமான புத்தியுள்ள ஆற்றலே (புத்தியில்லாத) பொருளைவிட மேன்மையானதாகக் கருதப்பட வேண்டும்[7].(12) எண்ணற்றவையாக இருக்கும் அசையும் உயிரினங்களில் பல கால்களைக் கொண்டவை மற்றும் இரு கால்களைக் கொண்டவை என்ற இரு வகைகள் உள்ளன. எனினும், பிந்தையதே {இரு கால்களைக் கொண்டதே} முந்தையதைவிட மேன்மையானதாகும்.(13) மேலும் இரு கால் கொண்ட உயிரினங்களில் நிலத்தில் வாழ்பவை, பிறவற்றில் வாழ்பவை என்று ஈரினங்கள் உள்ளன. இவற்றில் முந்தையதே பிந்தையதைவிட மேன்மையானதாகும். மேன்மையானவை சமைக்கப்பட்ட பல்வேறு வகை உணவுகளை உண்கின்றன.(14) நிலத்தில் திரியும் இரு கால் உயிரினங்களிலும், நடுத்தரமானவை, முதன்மையானவை என்று இரு வகைகள் உள்ளன. இவற்றில், தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பதன் விளைவால் நடுத்தரமானவையே {முதன்மையானவற்றைவிட} மேன்மையானவை என்று கருதப்படுகின்றன[8].(15)
[7] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் வகையில் சேஷ்டை Cheshtaa என்ற சொல்லை சரியான பொருளில் கொடுப்பது கடினமாக இருக்கிறது. பொதுவாக அது முயற்சி அல்லது செயல்பாடு என்ற பொருளைத் தரும். எனினும், அஃது இங்கே மனம் மற்றும் உடல் உழைப்பைக் குறிக்கும் புத்தியுள்ள ஆற்றல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில், அதன் {அந்த ஆற்றலின்} செயல்பாடே வேறுபாட்டை உண்டாக்குகிறது" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தாவரங்களைவிட ஜங்கமங்கள் சிறந்தவைகளென்று அறிய வேண்டும். சேஷ்டையென்பது (அறிவின்) விசேஷத்தை அறிவித்து ஜங்கமங்களைச் சிறந்தவைகளாகச் செய்யுமென்பது பொருத்தமுள்ளதுதான்" என்றிருக்கிறது.[8] "உத்தமம் அல்லது முதன்மையானவை எவை, நடுத்தரமானவை எவை என்பதை உறுதிசெய்வதையும் அவற்றிற்கிடையிலான வேறுபாடுகளையும் பின்வரப்போகும் ஸ்லோகங்களில் காணலாம். உண்மையில் முதன்மையானவையே முதன்மையானவையாக இருக்கமுடியும், நடுத்தரமானவற்றால் முதன்மையானவற்றைவிட மேன்மையடைய முடியாது. இருப்பினும் நடுத்தரமானவை தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கின்றன; முதன்மையானவை வேறுபாடுகளைக் கடந்திருப்பதால் அவ்வாறு நோற்பதில்லை; எனவே, அதிகமாக இருக்கும் அறியாமை கொண்டோரே அதாவது தன் வகைக்கான கடமைகளை நோற்பவர்களே ஜாதி தர்மத்தை நோற்காதவர்களைவிட {முதன்மையானவர்களைவிட} மேன்மையானவர்கள் என்று கொள்ளப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நடுத்தரமானவர்களிலும், கடமைகளை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையாகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற வேறுபாட்டை அறிந்திருப்பதால் முந்தைய வகையினரே, பிந்தையவர்களைவிட மேன்மையானவர்களாவர்.(16) கடமைகளை அறிந்தவர்களிலும், வேதங்களை அறிந்தவர்கள், அவற்றை அறியாதவர்கள் என இருவகையினராகச் சொல்லப்படுகின்றனர். அவர்களில் முந்தைய வகையினரிலேயே வேதங்கள் வசிப்பதால் அவர்களே முதன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர்[9].(17) வேதங்களை அறிந்தோரிலும், வேதங்களை உரைப்போர், அல்லாதோர் என இரு வகையினர் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர்களில் வேதங்களை, அவற்றின் கடமைகள் மற்றும் அவற்றில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகள், அந்தச் சடங்குகள் மற்றும் கடமைகளின் கனிகள் ஆகியவற்றை முழுமையாக அறிந்த முந்தைய வகையினரே, அந்தக் கடமைகளையும், சடங்குகளையும் வெளியிடுபவர்களாக இருப்பதால் அவர்களே மேன்மையானவர்களாகச் சொல்லப்படுகின்றனர். உண்மையில், கடமைகள் மற்றும் அவற்றில் உள்ள விதிகள் ஆகியவற்றுடன் சேர்ந்த வேதங்கள் அனைத்தும் அவர்களில் இருந்து பாய்வதாகச் சொல்லப்படுகிறது.(18,19) வேத ஆசான்களிலும், ஆன்மாவை அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று இருவகையினர் உள்ளனர். இவர்களில், பிறப்பு மற்றும் மரணம் என்பவை என்ன என்ற அறிவைக் கொண்டிருப்பதால் முந்தையவர்களே மேன்மையானவர்களாவர்[10].(20)
[9] "ஒருவேளை வேதங்கள் எழுதப்பட்ட நிலையில் இல்லாததால், அவற்றின் பொருள் மனிதர்களின் நினைவுகளில் வசித்திருந்தன என்று இங்கே பொருள் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] "பிறப்பு மற்றும் இறப்பு ஆகியன என்னென்ன என்பதைப் புரிந்து கொள்வது, பிறப்பைத் தவிர்ப்பது (எனவே, மரணத்தையும் தவிர்ப்பது) ஆகியனவே ஆன்ம அறிவின் உயர்ந்த கனிகளாகும். ஆன்மாவைக் குறித்த ஞானமில்லாதோர் மீண்டும் மீண்டும் மறுபிறவிகள் என்ற வட்டத்தில் பயணிக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கடமைகளைப் பொறுத்தவரையில், அவை (பிரவிருத்தி மற்றும் நிவிருத்தி என்று) இரு வகைகளில் இருக்கின்றன. கடமைகளை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகவோ அண்ட அறிவைக் கொண்டவனாகவோ கருதப்படுகிறான். அத்தகைய மனிதனே துறவியாவான். அத்தகைய மனிதனே தன் நோக்கங்களை நிறைவேற்றுவதில் உறுதியுள்ளவன் ஆவான். அத்தகைய மனிதனே உண்மை நிறைந்தவனும், (அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டிலும் தூய்மையானவனும்), {யோக சக்தியால் உண்டாகும்} பலம்படைத்தவனுமாவான்.(21) (பிரவிருத்தியின் கடமைகளை மட்டுமே அறிந்தவனாக இல்லாமல்} பிரம்ம அறிவுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஒரு பிராமணனாக அவனைத் தேவர்கள் அறிவார்கள். அத்தகைய மனிதன் வேதங்களையும் நன்கறிந்தவனாக, ஆன்ம கல்வியில் மெய்யுறுதியான அர்ப்பணிப்புடன் கூடியவனாகவும் இருப்பான்.(22) உண்மையான ஞானத்தைக் கொண்டவர்கள் தங்கள் ஆன்மாவானது, அகம், புறம் என்ற இரண்டிலும் இருப்பதைக் காண்பார்கள். ஓ! குழந்தாய், அத்தகை மனிதர்களே உண்மையில் மறுபிறப்பாளர்கள், மேலும் அத்தகைய மனிதர்களே தேவர்களும் ஆவர்[11].(23) உயிரினங்களின் இந்த உலகம் இவர்களையே சார்ந்திருக்கிறது, இவர்களிலேயே மொத்த அண்டமும் வசிக்கிறது. இவர்களது மகிமைக்கு இணையான வேறேதும் கிடையாது.(24) பிறப்பு, இறப்பு, வேறுபாடுகள், அனைத்து வகைச் செயல்கள் ஆகியவற்றைக் கடந்த அவர்கள் நால்வகை உயிரினங்களின் தலைவர்களும், சுயம்புவுக்கே இணையானவர்களும் ஆவர்" என்றார் {வியாசர்}[12].(25)
[11] "அண்டத்தில் உள்ள அனைத்திலும் தன் ஆன்மாவைக் காண்பதே ஓர் அறவோனின் உயர்ந்த விழைவாகும். இருப்பின் இந்த உயரிய சிந்தனையை ஒருவனுக்கு யோகமே அளிக்கிறது. இஃதை உணர்பவனே உண்மையான ஒரு பிராமணனாகவும், உண்மையில் மறுபிறப்பாளனாகவும், மேலும் பூமியில் தேவனாகவும் சொல்லப்படுகிறான். இங்கே சொல்லப்படும் அதியக்ஜஞம் Adhiyajna, அதிதைவதம் Asdhidaivata ஆகியன ஆன்மாவைக் குறிக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[12] கும்பகோணம் பதிப்பில், "அவர்கள், உற்பத்தி இருப்பு முடிவுகளையும் கர்மங்களையும் முழுமையும் மீறிச் சென்று நான்கு விதமான பிராணிகளனைத்திற்கும் ஈஸ்வரர்களும், ஸ்வதந்த்ரமான ஸாமர்த்தியம் பெற்றவர்களுமாயிருப்பார்கள்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 237ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |