Yuga difference! | Shanti-Parva-Section-238 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 65)
பதிவின் சுருக்கம் : செயல்கள், ஞானம் மற்றும் யுக வேற்றுமைகள் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "பிராமணர்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய செயல்களாக இவையே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஞானம் கொண்ட ஒருவன் எப்போதும் (பரிந்துரைக்கப்பட்ட) செயல்களின் மூலமே வெற்றியை அடைவான்.(1) செயல்களில் ஐயம் எழவில்லையெனில், அப்போது செய்யப்படும் செயல்கள் நிச்சயம் வெற்றிக்கு வழிவகுக்கும். செயல்கள் கட்டாயமானவையா, வாய்ப்பிருந்தால் மட்டும் செய்யப்படுபவையா {கட்டாயமில்லாதவையா} என்ற ஐயமே இங்கே குறிப்பிடப்படுகிறது[1].(2) (செயல்களின் உண்மைப் பண்பில் கொள்ளும் ஐயமான) இதைப் பொறுத்தவரையில், (எதனைக் கொண்டு மட்டுமே பிரம்மமோ, விடுதலையோ {முக்தியோ} அடையப்படுமோ அந்த) ஞானத்தை அடைவதற்கு மனிதனுக்குச் செயல்கள் விதிக்கப்பட்டிருக்கிறதென்றால், அவை (வாய்ப்புள்ளபோது செய்யப்படக்கூடியவையாக இல்லாமல்) கட்டாயமானவையாகவே கருதப்பட வேண்டும். உள்ளுணர்வுகள் மற்றும் அனுபவத்தின் வெளிச்சத்தில் நான் அஃதை இப்போது சொல்லப் போகிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக[2].(3) செயல்களைப் பொறுத்தவரையில் சில மனிதர்கள், முயற்சியே {புருஷ ஸாமர்த்தியமே} அவற்றின் காரணம் என்று சொல்கின்றனர். பிறரோ தேவையே {தெய்வமே / காலமே} அதன் காரணம் என்கின்றனர். இன்னும் பிறர், இயல்பே {ஸ்வபாவமே} அதன் காரணம் என்கின்றனர்.(4) சிலரோ முயற்சி மற்றும் தேவை {காலம்} ஆகிய இரண்டின் விளைவே செயல்கள் என்று சொல்கின்றனர். மேலும் சிலர், காலம், முயற்சி, இயல்பு ஆகியவற்றில் இருந்து செயல்கள் பாய்கின்றன என்று சொல்கின்றனர். (முயற்சி, தேவை {காலம்} மற்றும் இயல்பு ஆகிய) இம்மூன்றில் (வேறு இரண்டும் காரணமல்ல, அம்மூன்றில்) ஒன்று மட்டுமே காரணம் என்று சிலர் சொல்கின்றனர். இவை மூன்றும் சேர்ந்துதான் காரணம் உண்டாகிறது என்று சிலர் கருதுகிறார்கள்[3].(5)
[1] "கர்மம் {செயல்} என்பது ஸ்வபாவமா {இயல்பா}? அல்லது ஞானமா? என்பது (உரையாசிரியர் விளக்குவதைப் போல) கட்டாயமா? அல்லது கட்டாயமில்லையா? என்ற பொருளைக் கொண்டதாகும். இங்கே ஞானம் என்பது ஞானத்திற்கு வழிவகுக்கும் ஞான ஜனகமே ஆகும். வெற்றி அல்லது விடுதலையை {முக்தியை} அடைவதற்கு ஞானம் அவசியமாகும். ஞானத்திற்கு வழிவகுக்கச் செயல்கள் அவசியமானால், செயல்களின்றியும் ஞானம் அடையப்படலாம் என்ற காரணத்தால் அவை {செயல்கள்} கட்டாயமில்லாமல் போகிறதே என்ற ஐயம் இங்கே எழக்கூடும்." எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இந்த ஸ்லோகத்தின் முதல் வரியைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாகும். உரையாசிரியரான நீலகண்டரின் பொறுமைக்காகவும், அறிவாற்றலுக்காகவும் ஒருவன் அவரை மெச்சாமல் இருக்க முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஞானவான் தான் கர்மங்களைச் செய்கிறவனாகி எல்லாவற்றிலும் ஸித்தியை அடைகிறான் ஆனால், கர்மாவில் இவ்விதம் ஸந்தேகம் ஏற்படாமலிருக்குமேயானால் கர்மாவானது ஸித்தியைக் கொடுக்கும். (அந்த ஸந்தேகம் எவ்விதமென்றால்) கர்மாவானது ஸ்வபாவமா, அல்லது ஞானஸாதனமாவென்பதுவே. அவ்விதஸந்தேகத்தில் கர்மாவானது ப்ரம்மத்தையுத்தேசித்து ஞானஸாதனமென்கிற பக்ஷத்தில் அது வேத விதியாகும். யுக்தியினாலும், சாஸ்திரத்தில் காணப்பட்டிருக்கிற முறையினாலும் அதை விரிவாக உரைப்பேன்; கேள்" என்றிருக்கிறது.[3] "தைவம் Daiva என்பது உரையாசிரியரால் கிரஹாம் Grahaah அல்லது காலம் Kaalah என்று விளக்கப்படுகிறது. தேடிக்கண்டுபிடிக்க முடியாத மூலத்தைக் கொண்ட ஒரு வகைக் குருட்டு சக்தியை குறிப்பிடவே இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். எனவே நான் இதை ’தேவை’ என்று பொருள் கொண்டிருக்கிறேன். 5ம் ஸ்லோகத்தில் உள்ள விருத்தி Vritti என்ற சொல் ஒழுக்க நடைமுறையைக் குறிப்பதால் முயற்சி என்ற பொருளைக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படை. அவிவேகம் Avivekam என்பதற்குச் சமுச்சயம் Samuchchayam அல்லது அவை மூன்றின் கலவை என்று பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
செயல்களைச் செய்வதில் ஈடுபடும் சில மனிதர்கள், அனைத்துப் பொருட்களையும் பொறுத்த வரையில், அவை {பொருட்கள்} இருக்கின்றன, அவை இல்லை, அவை இருக்கின்றன என்று சொல்ல முடியாது, அவை இல்லை என்று சொல்லமுடியாது, இருக்கின்றன என்று சொல்ல முடியாது என்பதல்ல, மற்றும் இறுதியாக இல்லை என்று சொல்ல முடியாது என்பதல்ல என்று சொல்கிறார்கள். (இவையே மனிதர்களால் சொல்லப்படும் பல கருத்துகளாகும்). எனினும், யோகியராக இருப்பவர்கள், பிரம்மத்தையே அண்டத்தின் காரணமாகக் காண்கிறார்கள்[4].(6) திரேத, துவாபர, கலி யுகங்களைச் சேர்ந்த மனிதர்கள் ஐயங்களால் அகத்தூண்டல் பெற்றவர்கள் ஆவர். எனினும் கிருத யுகத்தைச் சேர்ந்த மனிதர்கள் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களாக, அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களாக, அறம் நோற்பவர்களாக இருந்தார்கள்[5].(7) அந்த யுகத்தில் மனிதர்கள் அனைவரும், ரிக்குகள், சாமங்கள் மற்றும் யஜுஸ்கள் ஆகியவை வெளிப்படையாகவே வெவ்வேறானவையாக இருந்தாலும் ஒன்றெனவே கருதினார்கள். ஆசை மற்றும் பேராசையை ஆய்வு செய்த அவர்கள் தவத்தை மட்டுமே வழிபாடு செய்தனர்[6].(8) தவப்பயிற்சிகளை அர்ப்பணிப்புடனும், அவற்றில் நிலையுறுதியுடனும், கடுமையுடனும் நோற்கும் ஒருவன், தன் ஆசைகள் அனைத்தின் கனிகளைத் தவங்களால் மட்டுமே அடைகிறான்.(9) தவத்தின் மூலம் ஒருவன் அண்டத்தைப் படைத்தவனின் நிலையை அடைகிறான். தவத்தின் மூலம் அனைத்துப் பொருட்களின் பலமிக்கத் தலைவனாகிறான்[7].(10)
[4] கும்பகோணம் பதிப்பில், "கர்மத்தையே முக்யமாகக் கொண்ட ஆருகதர்கள் விஷயத்தை இது ஒரு ஸமயமிருப்பதால் இவ்விதமென்றும், ஒரு ஸமயமில்லாததால் இவ்விதமில்லையென்றும், ஒரே ஸமயத்தில் இருக்கிறதென்றும் இல்லாததென்றும் ஏற்படாததாலிரண்டு விதமும் இல்லையென்றும், கிரமமாக இருக்கிறதென்பதும் இல்லையென்பதும் ஏற்படுவதால் இரண்டு விதமும் இல்லையென்பதில்லை என்றும் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது.[5] "ஸ்ருதிகளின் தீர்மானங்களைக் குறித்த ஐயங்களால் அகத்தூண்டல் பெற்றவர்கள் என்பது பொருள். அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்கள் என்றால் எவ்வகை ஐயங்களாலும் ஊடுருவப்படாதவர்கள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "திரேதம் உள்ளிட்ட மூன்று பிற யுகங்களில் மக்கள் வேதங்களில் உள்ள ரிக்குகள், சாமங்கள், யஜுஸ்களில் ஒன்றில் மட்டுமே பற்றுடையவர்களாக அல்லது அர்ப்பணிப்புள்ளவர்களாகக் காணப்படுகிறார்கள். பேசுபவர் {வியாசர்}, இதனால் நிறைவடையாமல், எந்தப் பாகுபாடும் இல்லாத கிருத யுகத்தைக் குறிப்பிடுகிறார். அந்த யுகத்தைச் சேர்ந்த மனிதர்கள் வேதங்களை அனைத்தையும் சமமாகவே, உண்மையில் ஒன்றாகவே கருதினார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "ஜீவன் அல்லது சித் என்பது பலமடைந்து, தவ வழிமுறைகளின் மூலம் அண்டத்தைப் படைப்பதில் வெல்கிறது. தவத்தின் மூலம் ஒருவன் பிரம்மத்தை அடைகிறான், எனவே உலகளாவிய வலிமையை அடைகிறான். இது போதுமான அளவிற்கு முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அந்தப் பிரம்மம், வேதத் தீர்மானங்களில் {கர்மகாண்டத்தில்} விவரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வளவையும் மீறி, அந்தத் தீர்மானங்களை அறிந்தவர்களால் கூடப் பிரம்மம் உணரப்பட முடியாததாக இருக்கிறது. மீண்டும் அந்தப் பிரம்மம் வேதாந்தத்தில் அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், பிரம்மத்தைச் செயல்களின் வழிமுறைகளால் காண முடியாது[8].(11) பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வேள்வியானது, யபத்தை (தியானம் மற்றும் ஜெபத்தைக்) கொண்டது, க்ஷத்திரியர்களுக்கானது {க்ஷத்திரியர்களுக்கான வேள்வியானது} தேவர்களை நிறைவு செய்வதற்கு (தூய) விலங்குகளைக் கொல்வதைக் கொண்டது; வைசியர்களுக்கானது பயிர்களை உண்டாக்குதல் மற்றும் வீட்டு விலங்குகளை வளர்த்தலைக் கொண்டது; சூத்திரர்களுக்கானது மூவகையினருக்குத் தொண்டு செய்வதைக் கொண்டது.(12) ஒருவன் தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளை நோற்பது, வேதங்கள் மற்றும் பிற சாத்திரங்களைக் கற்பது ஆகியவற்றின் மூலம் ஒரு துவிஜன் {இரு பிறப்பாளன்} (மறுபிறப்பாளன்) ஆகிறான். ஒருவன் வேறு எந்தச் செயலையும் செய்கிறானோ இல்லையோ, அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாவதன் மூலம் ஒரு பிராமணனாகிறான்.(13) திரேதா யுகத்தின் தொடக்கத்தில் வேதங்கள், வேள்விகள், வர்ணபேதங்கள் மற்றும் பல்வேறு வகையான வாழ்வுமுறைகள் அதனதன் வகையில் முழுமையாக இருந்தன. எனினும், துவாபர யுகத்தில் வாழ்நாள் காலத்தின் அளவு குறைந்ததன் விளைவால் அவையும் சரிவை அடைந்தன.(14) துவாபர யுகத்திலும், கலியுகத்திலும் வேதங்கள் மனக்கலக்கத்தால் மூழ்கடிக்கப்படுகின்றன. மேலும் கலியுகத்தின் முடிவில், அவை கண்ணுக்காவது தென்படுமா என்பது ஐயம்நிறைந்த ஒன்றுதான்.(15)
[8] "கடந்த பகுதியில் "ஞானம் என்பது எது?" என்ற கேள்விக்கு இது பதிலளிப்பதால் இஃது இந்தப் பகுதியில் முக்கியமான ஸ்லோகமாகும் என உரையாசிரியர் விளக்குகிறார். வேதங்களில் செயல்கள் மற்றும் ஞானம் ஆகிய இரண்டும் பேசப்படுகின்றன. செயல்களின் பகுதிகளில் பிரம்மம் என்பது இந்திரனாகவும், பிற தேவர்களாகவும் சொல்லப்படுகிறது. எனவே, அங்கே பேசப்படுவதைப் போலவே, பிரம்மம் கஹனம் gahana, அல்லது அந்த வேதப்பகுதியை அறிந்தவர்களுக்குக் கூட மறைக்கப்பட்டது (அல்லது உணரப்பட முடியாதது) ஆகும். மேலும் வேதாந்தத்தில், அறிவு அல்லது வித்தை என்பது பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறையாகச் சொல்லப்படுகிறது. எனவே கேள்விக்குரிய ஞானம், அல்லது வித்தை என்பது , கடந்த பகுதியில் 2ம் சுலோகத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் போலப் பிரவிருத்தி தர்மம், அல்லது நிவிருத்தி தர்மம் ஆகியவற்றைக் குறிக்கவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்தப்ரம்மமானது கர்மகாண்டங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது கர்மகாண்டத்தை மாத்திரமறிந்தவர்களுக்கு அறிய முடியாது. உபநிஷதங்களிலோவென்றால் அந்தப்ரம்மமானது தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது கர்ம யோகத்தில் அறியப்படுகிறதில்லை" என்றிருக்கிறது.
அந்த யுகத்தில் ஒவ்வொரு வகைக்குமுரிய கடமைகள் மறைந்து, மனிதர்கள் கொடுமையால் பீடிக்கப்படுகிறார்கள். பசு, பூமி, நீர் மற்றும் (மருத்துவக் குணம் கொண்ட உண்ணத்தக்க) மூலிகைகளில் அவற்றின் சாறு கொண்ட தன்மை மறைந்து போகின்றன[9].(16) (உலகளாவிய) கொடுமையின் மூலம் வேதங்கள் மறைகின்றன, அவற்றோடு சேர்ந்து, அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் நான்கு வாழ்வுமுறைகளுக்கான கடமைகளும் மறைந்து போகின்றன. தங்கள் வகைக்கான கடமைகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் பீடிக்கப்படுகின்றனர், அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தும் இழிவான மாற்றத்தை அடைகின்றன.(17) சொர்க்கத்தின் மழை பூமியில் பொருட்கள் அனைத்தையும் வளரச் செய்வதைப் போலவே வேதங்களும் ஒவ்வொரு யுகத்திலும் அங்கங்கள் அனைத்தையும் வளரச்செய்கின்றன.(18) காலம் பல்வேறுவடிவங்களை ஏற்கிறது என்பதில் ஐயமில்லை. அதற்குத் தொடக்கமோ முடிவோ கிடையாது. காலமே அனைத்து உயிரினங்களையும் படைத்து அவற்றை மீண்டும் விழுங்குகிறது. நான் இது குறித்து உன்னிடம் ஏற்கனவே பேசியிருக்கிறேன்.(19) அனைத்து உயிரினங்களின் தோற்றுவாயும் காலமே ஆகும்; காலமே அவற்றை வளரச் செய்கிறது; காலமே அவற்றை அழிக்கவும் செய்கிறது; இறுதியாகக் காலமே அவற்றின் ஆட்சியாளனாகவும் இருக்கிறது. முடிவிலா வகைகளிலான உயிரினங்கள், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலியவை போன்ற) முரண்பட்ட இரட்டைகளுக்கு ஆட்பட்டு, (பரப்பிரம்மத்தால் விதிக்கப்பட்டதைப்போலவே இருந்து, வேறுவகையில் இல்லாமல்) தங்கள் சொந்த இயல்புகளின் படியே காலத்தைச் சார்ந்திருக்கின்றன" என்றார் {வியாசர்}".(20)
[9] "அதாவது பசுக்கள் அபரிமிதமான இனிய பாலைக் கொடுப்பதில்லை; மண் வளம் இல்லாமல் போகும்; நீர் இனிமையானதாக இராது; மருத்துவக குணம் சார்ந்த உண்ணத்தக்க மூலிகைகள், தங்கள் சுவையையும், குணப்படுத்தும் தன்மைகளையும் அழிக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 238ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |