The doctrine of knowledge! | Shanti-Parva-Section-239 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 66)
பதிவின் சுருக்கம் : ஞானம், தவங்கள், புலனடக்கம், துறவு ஆகியவை இல்லாமல் வெற்றியை அடைய முடியாது என்பதையும், சாங்கிய அமைப்பில் விளக்கப்படும் அறிவுக் கோட்பாட்டையும், பிரம்மஞானத்தை அடையு வழி குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு (தன் தந்தையால் {வியாசரால்}) சொல்லப்பட்ட சுகர், அந்தப் பெருமுனிவரின் {வியாசரின்} போதனைகளை உயர்வாக மெச்சி, விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கும் கடமைகளைக் குறித்த பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.(1)
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "ஞானம் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனும், வேள்விகளைச் செய்பவனும், வன்மத்திலிருந்து விடுபட்டவனுமான ஒருவன், நேரடி சாட்சியம் மூலமோ, உள்ளுணர்வின் மூலமோ உணர முடியாததும், வேதங்களில் இவ்விதம் இருக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்ட முடியாததுமான பிரம்மத்தை அடைவதில் எந்த வழிமுறைகளினால் வெற்றியடைகிறான்?(2) என்னால் கேட்கப்படும் நீர் எந்த வழிமுறைகளின் மூலம் பிரம்மத்தை உணரலாம் என்பதைச் சொல்வீராக. தவம், பிரம்மச்சரியம், அனைத்தையும் துறத்தல், புத்தி, சாங்கிய தத்துவத்தின் உதவி, யோகம் ஆகியவற்றின் மூலம் அஃதை உணர முடியுமா?(3) மனம் மற்றும் புலன்கள் ஆகிய இரண்டைப் பொறுத்தவரையில், எந்த வழிமுறைகளின் மூலம் எந்த வகைக் காரிய ஒருமை {ஒரே காரியத்தில் நிலையுறுதியுடன் இருத்தல்} மனிதர்களால் அடையப்படுகிறது? இவை யாவற்றையும் எனக்கு விவரித்துச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டார்.(4)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஞானம் அடைதல் {வித்தை}, தவம், புலனடக்கம், அனைத்தையும் துறத்தல் ஆகியவை இன்றி வேறு எந்த வழிமுறையினாலும் எந்த மனிதனாலும் ஒருபோதும் வெற்றியடைய முடியாது[1].(5) (எண்ணிக்கையில் ஐந்தாக உள்ள) பெரும்பூதங்கள் சுயம்புவின் முதல் (அல்லது அடிப்படை) படப்பைப் பிரதிபலிக்கின்றன. அவை உலக வாழ்வில் உள்ள உடல் படைத்த உயிரினங்களில் மிகப்பெரும் அளவில் அமைந்திருக்கின்றன.(6) உடல்படைத்த அனைத்து உயிரினங்களின் உடல்களும் பூமியில் இருந்தே பெறப்படுகின்றன. அவற்றின் உதிரம் நீரில் இருந்து பெறப்படுகிறது. அவற்றின் கண்கள் ஒளியில் இருந்து பெறப்படுவதாகச் சொல்லப்படுகிறது. பிராணன், அபானன், (இன்னும் மூன்று மூச்சுக்காற்றுகள்) வாயுவைத் தங்கள் புகலிடமாகக் கொண்டிருக்கின்றன. இறுதியாக, அவற்றின் உள்ளிருக்கும் (மூக்குத்துளைகள், காது துளைகள் முதலிய) வெற்றிடங்கள் வெளியாக இருக்கின்றன.(7) (உயிரினங்களின்) பாதத்தில் விஷ்ணு இருக்கிறான். அவற்றின் கரங்களில் இந்திரன் இருக்கிறான். உண்ண விரும்பும் அக்னி அவற்றின் வயிற்றுக்குள் இருக்கிறான். காதுகளுக்குள், செவிப்புலனைப் பிரதிபலிக்கும் திசைப்புள்ளிகள் இருக்கின்றன. நாவில் வாக்காகச் சரஸ்வதி இருக்கிறாள்[2].(8)
[1] "இங்கே சுட்டப்படும் {வித்தை, தவம், புலனடக்கம், துறவு என்ற} நான்கு சொற்களின் மூலம், {பிரம்மச்சரியம், இல்லறம் [கிருஹஸ்தம்], வானப்ரஸ்தம், துறவறம் [சந்நியாசம்] ஆகிய} நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} விளக்கப்படுகிறது என உரையாசியர் சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "ஆன்மா அனுபவிக்க மட்டுமே செய்கிறது, செயல்படுவதில்லை என்ற யோகக் கருத்து சரியானதல்ல என்று காட்டுவதே இந்த ஸ்லோகத்தின் நோக்கமாகும் என்று உரையாசிரியர் விளக்குகிறார். மறுபுறம், ஆன்மாவானது அனுபவிப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை என்ற சாங்கியக் கருத்தே உண்மையானதாகும். பல்வேறு புலன்களில் இருக்கும் தேவர்களே செயல்படவும், அனுபவிக்கவும் செய்கின்றனர். அறியாமையின் மூலமே ஆன்மாவானது, அனுபவங்களையும், செயல்பாடுகளையும் தனதாகக் கருதுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காதுகள், தோல், கண்கள், நாவு, ஐந்தாவதாக மூக்கு ஆகியன அறிவுப்புலன்களாக {ஞானேந்திரியங்களாகச்} சொல்லப்படுகின்றன. இவை தங்கள் தங்களுக்குரிய பொருட்களை உணரும் நோக்கத்திற்காக இருக்கின்றன.(9) ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம், சுவை ஐந்தாவதாக மணம் ஆகியன (ஐந்து) புலன்களுக்கு உரிய பொருட்களாக இருக்கின்றன. இவை புலன்களில் இருந்து தனிப்பட்டவையாகவே (அல்லது சார்பற்றவையாகவே) எப்போதும் கருதப்பட வேண்டும்.(10) தேரோட்டியானவன், தான் விரும்பும் பாதையில் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட அவனது குதிரைகளைச் செலுத்துவதைப் போலவே, மனமும் (தான் விரும்பும் திசைகளில்) இந்தப் புலன்களைச் செலுத்துகிறது. இதயத்தில் அமர்ந்திருக்கும் புத்தியோ மனத்தைச் செலுத்துகிறது[3].(11) புலன்கள் அனைத்தையும் அதன் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும் அல்லது அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் மனமே அவற்றுக்கு {புலன்களுக்குத்} தலைவனாக இருக்கிறது. அதேபோலவே, புத்தியே மனத்தின் தலைவனாக (அவற்றை எதிலும் ஈடுபடுத்துவதிலும், வழிநடத்துவதிலும், அல்லது கட்டுப்படுத்துவதிலும் தலைவனாக) இருக்கிறது[4].(12)
[3] "இங்கே பூதாத்மா Bhutaatmaa என்று சொல்லப்பட்டுள்ளதை விளக்க உரையாசிரியர் புத்தியுபாதிர்ஜீவன் budhhyupaadhirjivah என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைப் பின்பற்றியே நானும் பொருள் கொண்டிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பில், "இதயத்தில் உள்ள ஆத்மா மனத்தைக் கட்டுப்படுத்தும்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "மனத்தையும், ஹ்ருதயத்தை அடைந்த ஜீவன் எப்பொழுதும் ஏவுகிறான்" என்றிருக்கிறது.[4] "நியமம் Niyama மற்றும் விசர்கம் visarga என்பனவற்றை உரையாசிரியர் அழிவு மற்றும் படைப்பு என்று விளக்குகிறார். நான், வழிநடத்தல் அல்லது கட்டுப்படுத்தல் மற்றும் ஈடுபடுத்தல் என்ற பொருளை ஏற்றுக் கொள்வதையே நான் விரும்புகிறேன். நடைமுறையில் இந்த விளக்கங்கள் அனைத்தும் ஒன்றே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
புலன்கள், புலன்நுகர் பொருட்கள், இயல்பு {ஸ்வபாவம்} என்ற வார்த்தையில் சொல்லப்படும் அந்தப் பொருட்களின் குணங்கள், புத்தி, மனம், உயிர்மூச்சுகள், மற்றும் ஜீவன் ஆகியன உடல் கொண்ட அனைத்து உயிரினங்களின் உடல்களிலும் வசிக்கின்றன[5].(13) புத்தியானது எதற்குள் வசிக்கிறதோ அந்த உடலுக்கு உண்மையில் இருப்பு என்ற ஏதும் கிடையாது. எனவே, உடலானது புத்தியின் புகலிடம் கிடையாது. (நல்லியல்பு {சத்வம்}, ஆசை {ரஜஸ்}, இருள் {தமஸ்} என்ற) முக்குணங்களைக் கொண்ட தொடக்கக் காலப் பிரகிருதியே, ஒலிவடிவமாக மட்டும் இருக்கும் புத்தியின் புகலிடமாக இருக்கிறது. ஆன்மாவும் புத்தியின் புகலிடமாக இல்லை. ஆசையே புத்தியை உண்டாக்குகிறது. எனினும், ஆசையானது ஒருபோதும் முக்குணங்களை உண்டாக்குவதில்லை[6].(14) புலன்களைக் கட்டுப்படுத்தவல்ல ஞானியானவன், பதினாறு குணங்கள் சூழ பதினேழாவதாகத் தன் புத்தியில் இருக்கும் ஆன்மாவை தன் மனத்தின் உதவியுடன் காண்கிறான்.(15) கண்கள் அல்லது புலன்கள் அனைத்தின் உதவியினாலும் ஆன்மாவைக் காண முடியாது. அனைத்தையும் கடந்த ஆன்மாவானது, மனமெனும் விளக்கின் ஒளியில் மட்டுமே புலப்படுகிறது.(16) அதே போலவே, ஒலி, ஊறு {தீண்டல்}, வடிவம் ஆகிய தன்மைகளை இழந்து, சுவையும் மணமும் இல்லாமல், அழிக்கப்பட முடியாததாக, (திரளான அல்லது நுட்பமான) உடலற்றதாக, புலன்களற்றதாக இருக்கும் அஃது {ஆன்மாவானது} உடலுக்குள் காணப்படுவதில்லை.(17) புலப்படாததாகவும், உயர்ந்ததாகவும் இருக்கும் அஃது {ஆன்மாவானது}, மடியக்கூடிய உடல்கள் அனைத்திலும் வசிக்கிறது. ஆசான் மற்றும் வேதங்களின் வழிகாட்டலைப் பின்பற்றி அஃதை {ஆன்மாவைக்} காணும் ஒருவன், அதன் பிறகு பிரம்மமாகவே ஆகிறான்.(18)
[5] "உயிரினங்களின் உடல்களில் வசிக்கும் புலன் நுகர் பொருட்கள் என்று சொல்லப்படுவதற்குப் பொருள், தேவையேற்படும்போதோ, அழைக்கப்படும்போதோ அவற்றின் கருத்துரு (மனக்கண் முன்னே) தோன்றும் வகையில் "இதயக்குழியில்" இருக்கின்றன என்பதாகும். ஸ்வபாவம் என்பது வெப்பம் குளிர் முதலியவை போன்ற குணங்களாக விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "இந்த ஸ்லோகம் மிகக் கடினமானதாகும். நான் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியே இதன் பொருளை உரைத்திருக்கிறேன். 13ம் ஸ்லோகத்தில் எவை உடலில் வசிக்கின்றன என்று பேசுபவர் {வியாசர்} சொல்கிறார். 14ம் ஸ்லோகத்தில் உரையாசிரியர் சத்வ இயல்பை புத்தி அல்லது புரிதல் என்ற பொருள் கொண்டு விளக்குகிறார். அவர் சத்வஸ்ய ஆஸ்ரய நாஸ்தி Sattwasya aacryah naasti என்ற வாக்கியத்துடனே தொடங்குகிறார். இதற்குப் புத்திக்குப் புகலிடம் கிடையாது என்பது பொருளாகாது, ஏனெனில் அது பொருந்தாது. ஆனால் புத்தியின் ஆஸ்ரயம் அஃதாவது எதில் புத்தி வசிக்கிறதோ அந்த உடல் உண்மையில் கிடையாது. அதற்கு உண்மையான இருப்பொன்றும் கிடையாது. அது கனவில் தோன்றும் காட்சியைப் போலவே வசித்திருக்கிறது. உடல் இருப்பில் இல்லையென்றால், புத்தியின் உண்மையான புகலிடம்தான் எது? பேசுபவர் {வியாசர்}, அதற்குப் பதிலாக, முக்குணங்களைக் கொண்ட தொடக்கக் காலப் பிரகிருதியைக் குறிக்கும் குணத்தையே சொல்கிறார். பிறகு, சேதனாமும் Chetanaa (இங்கே ஆன்மா) புத்தியின் புகலிடமாக இல்லை. ஏனெனில் ஆன்மாவானது, அனைத்தில் இருந்தும் தொடர்பறுந்ததும், எவ்வகை மாற்றத்திற்கும் உள்ளாக முடியாததுமாக இருக்கிறது. அப்போது, (மேலே சொல்லப்பட்டுளதைப் போலப் புத்தியின் புகலிடமாக இல்லாமல்) குணங்களே புத்தியின் பண்புகளாக இருக்க முடியாதா என்ற கேள்வி மனத்தில் எழுகிறது. இந்த ஐயத்தை விலக்குவதற்காக, சத்வம் என்பது தேஜஸின் (ஆசையின்) உற்பத்திப் பொருள் என்று சொல்லப்படுகிறது. குணங்கள் ஆசையின் சார்பற்று இருக்கின்றன. இவ்வாறே ஆசையின் காரணமாக உண்டாகும் புத்தியானது, குணங்களைச் சார்ந்தோ, அவற்றைப் புகலிடமாகக் கொண்டோ இருக்கிறது. எனவே இந்த ஸ்லோகத்தில், உடலின் இயல்பு, புத்தி, குணங்கள் ஆகியன விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்லோகத்தில் உள்ள முதல்வரியின் இலக்கண அமைப்பு புரிந்து கொள்ள மிகக் கடினமானதாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புத்திக்கு ஆதாரமில்லை. இந்தப் பதினாறு குணங்களும் புத்தியின் விருத்தியே. புத்தியை வாஸனையானது ஸ்ருஷ்டிக்கிறது; குணங்களை ஒருவிதத்தாலும் ஸ்ருஷ்டிக்கிறதில்லை" என்றிருக்கிறது.
ஞானிகள், அறிவு மற்றும் சீடர்களைக் கொண்ட ஒரு பிராமணனையும், ஒரு பசுவையும், ஒரு யானையையும், ஒரு நாயையும், ஒரு சண்டாளனையும் சம கண்ணுடன் ஒன்றாகவே பார்ப்பார்கள்[7].(19) அனைத்துப் பொருட்களையும் கடந்திருக்கும் ஆன்மாவனாது, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்திலும் வசிக்கிறது. உண்மையில், அனைத்துப் பொருட்களும் அதனால் படர்ந்தூடுருவப்பட்டிருக்கிறது.(20) ஓர் உயிரினமானது, அனைத்துப் பொருட்களிலும் தன் சொந்த ஆன்மாவைக் காணும்போதும், அனைத்துப் பொருட்களையும் தன் ஆன்மாவில் காணும்போதும் அவன் பிரம்மத்தை அடைந்ததாகச் சொல்லப்படுகிறான்.(21) வேத ஒலியின் மூலம் ஒருவனுடைய ஆன்மாவிற்குள் எது நிறைகிறதோ அதற்கு ஒப்பிடத்தக்க அளவில் அவன் பரமாத்மாவை நிரப்புகிறான் {பரமாத்மாவில் அந்த அளவுக்கான இடத்தைப் பெறுகிறான்}[8]. எவன் எப்போதும் அனைத்துப் பொருட்களையும் தன் சுயத்துடன் அடையாளம் காண்கிறானோ அவன் நிச்சயம் அழிவின்மையை அடைகிறான்.(22) அனைத்து உயிரினங்களின் ஆன்மாவில் தன்னை அமைத்துக் கொள்பவனும், அனைத்துயிரினங்களில் நன்மையில் ஈடுபடுபவனும், (அனைத்துப் பொருட்களின்) இறுதி கதியை (பிரம்மத்தை) அடைய விரும்புபவனுமான பாதையற்ற மனிதனின் பாதையில் தேவர்களே கூடக் கலக்கமடைகின்றனர் {மயக்கமடைகின்றனர்}[9].(23) உண்மையில், ஞானம் கொண்ட மனிதனால் பின்பற்றப்படும் பாதையானது, வானத்தில் பறவைகள் செல்லும் பாதை, அல்லது நீரில் மீன்கள் செல்லும் பாதையைப் போலப் புலப்படாததாகும்.(24)
[7] "அத்தகைய மனிதர்கள் அனைத்துப் பொருட்களிலும் பிரம்மத்தையே காண்பார்கள். அபிஞானம் Abhijanah என்பது சிஷ்யகுலாதிம் cishyakulaadih என்று உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. இதுவே இங்குள்ள சொல்லின் உண்மையான பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பண்டிதர்களானவர்கள், வித்வானும், நல்லவம்சத்திலுதித்தவனுமாயிருக்கிற பிராம்மணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்திலும், நாயினிடத்திலும், நாயின் மாம்ஸத்தைப் பாகம் செய்யும் நீசனிடத்திலும் ஸமமான ப்ரம்ம திருஷ்டியுடையவர்களாயிருக்கிறார்கள்" என்றிருக்கிறது.[8] "நான் இதைச் சரியாகப் புரிந்து கொண்டேன் என்றால், 21ம் சுலோகத்தின் முதல் வரி இவ்வாறே இருக்கும். வேதாத்மா என்பது வேத ஒலி அதாவது வேதங்களால் அடையப்பட்ட போதனை என்று விளக்கப்படுகிறது. ஆத்மா என்ற சொல் இரண்டாம் வகைமுறையில் வெறுமனே தனிப்பட்ட ஒருவனைக் குறிக்கிறது. அவ்வாறெனில் பொருள் இதுவாகத் தான் இருக்கும். அனைத்தும் ஒருவனின் ஆன்மாவே என்பதையே வேதங்கள் கற்பிக்கின்றன. ஒருவன் எந்த அளவுக்கு இஃதை உணர்கிறானோ அந்த அளவுக்குப் பிரம்மத்தை அடைவான். அவன் முழுமையாக உணர்ந்தானென்றால், முழுமையாகப் பிரம்மத்தை அடைவான். பகுதி அளவே உணர்ந்தால், அவன் பகுதி அளவு பிரம்மத்தையே அடைவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "என்னுடைய ஆத்மாவில் ஆத்மா எவ்வளவாயிருக்கிறதோ வேறு ஆத்மாவிலும் ஆத்மா அவ்வளவாயிருக்கிறது என்று எவன் எப்பொழுதும் அறிகிறானோ அவன் முக்தியை அடையத்தக்கவனாவான்" என்றிருக்கிறது.[9] "அத்தகைய மனிதனின் பாதையானது, வானத்தைப் போலப் புலப்படாததாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. அத்தகைய மனிதன் அடைய முனையும் நோக்கமான பிரம்மத்தை அடையும் பாதையில் தேவர்களே கூட மயக்கமடைவார்கள் என்று உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காலமானது தன் சொந்த சக்தியில் தனக்குள்ளேயே அனைத்தையும் சமைக்கிறது. எனினும், எந்தக் காலத்தில் எவரெவர் சமைக்கப்படுவர் என்பதை ஒருவரும் அறிவதில்லை[10].(25) (நான் எதைக் குறித்துப் பேசுகிறேனோ) அஃது {ஆத்மாவானது}, மேலேயோ, நடுவிலோ, கீழேயோ, குறுக்காகவோ, வேறு எந்தத் திசையிலோ தோன்றுவதில்லை. நிலையற்றதான அஃது எந்த இடத்திலும் காணப்படுவதில்லை[11].(26) இந்த உலகங்கள் அனைத்தும் அதற்குள்ளேயே இருக்கின்றன. அதற்கு வெளியே உள்ள எதுவும் இந்த உலகங்களில் இல்லை. வில்லின் நாணிலிருந்து தூண்டப்பட்ட ஒரு கணையின் வேகத்தில் நிற்காமல் ஒருவன் சென்று கொண்டே இருந்தாலும்,(27) மனோவேகத்திலேயே அவன் சென்றாலும், இவை அனைத்திற்கும் காரணமான அதன் {ஆத்மாவின்} எல்லையை அவன் ஒருபோதும் அடையமாட்டான்[12].(28) வேறெதுவும் திரளானதில்லை என்ற அளவுக்கு அது திரளானதாக இருக்கிறது. அதன் கரங்களும், பாதங்களும் எங்கும் நீண்டிருக்கின்றன. அதன் கண்கள், தலை மற்றும் முகம் ஆகியன எங்குமிருக்கின்றன. அதன் காதுகள் அண்டத்தில் எங்குமுள்ளன. அஃது அனைத்துப் பொருட்களையும் கடந்து நிலைத்திருக்கிறது.(29)
[10] கும்பகோணம் பதிப்பில் "காலமானது ஸகலமான பூதங்களையும் தானாகவே தன்னிடத்திலேயே ஜீரணமாகும்படி செய்கிறது. அவ்வித காலமும் எந்தப் பரமாத்மாவினிடத்தில் ஜீர்ணமாகிறதோ அந்தப் பரமாத்மாவை இவ்வுலகில் ஒருவனும் அறிய முடியாது" என்றிருக்கிறது.[11] "பேசுபவர் {வியாசர்} இதன் மூலம், எவ்வளவு புனிதமான எந்தக் குறிப்பிட்ட தலத்திலும் பிரம்மத்தைக் காணமுடியாது என்று சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[12] "பிரம்மமானது முடிவிலி என்பதால் அவன் ஆத்மாவின் எல்லையை அடைய மாட்டான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அது நுட்பத்திலும் நுட்பமானதாகவும், அனைத்தின் இதயமாகவும் இருக்கிறது. புலப்படாத நிலையிலேயே அஃது இருக்கிறது என்பதில் ஐயமில்லை.(30) இவையே (பரம) ஆத்ம இருப்பின் அழியத்தக்கன {க்ஷரம்}, அழியத்தகாதன {அக்ஷரம்} என்ற இரு வடிவங்களாகும். அசைவன மற்றும் அசையாதன என்ற அனைத்திலும் அஃது அழியத்தக்க இருப்பை வெளிப்படுகிறது; அதே வேளையில், தெய்வீக சைதன்யத்தில் அஃது அழிவில்லாத மற்றும் அழியத்தகாத இருப்பை வெளிப்படுத்துகிறது.(31) இருப்பில் உள்ள அசையும் மற்றும் அசையாதவை அனைத்தின் தலைவனாக இருப்பினும், செயலற்றதாக, குணங்களற்றதாக இருப்பினும், அஃது ஒன்பது வாயில்களைக் கொண்ட நன்கறியப்பட்ட மாளிகையில் நுழைந்து, செயல்பாட்டில் ஈடுபடுகிறது.(32) அடுத்தக் கரையைக் காணவல்ல ஞானம் கொண்ட மனிதர்கள், பிறப்பில்லாதவன் (அல்லது பரமாத்மா) அசைவு {சலனம்}, இன்பம், துன்பம், பல்வேறு வடிவங்கள், நன்கறியப்பட்ட ஒன்பது உடைமைகள் ஆகியவற்றின் விளைவால் செயல்பாடெனும் குணத்தைக் கொள்கிறான் என்று சொல்கின்றனர்[13].(33) செயல்பாடெனும் குணத்தை அடைவதாகச் சொல்லப்படும் அழிவற்ற ஆத்மாவானது, செயலில்லாததாகச் சொல்லப்படும் அழிவற்ற அதே ஆத்மாவேயன்றி வேறில்லை. ஞானம் கொண்ட மனிதன், அந்த அழிவற்ற சாரத்தை அடைவதன் மூலம், வாழ்வு மற்றும் பிறவி {ஜனனம் மற்றும் மரணம்} என்ற இரண்டையும் நன்மைக்காகக் கைவிடுகிறான்" என்றார் {வியாசர்}.(34)
[13] "உடலுக்குள் வசிக்கும் ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே. ஞானம் உள்ள மனிதர்கள் மட்டுமே அஃதை அறிவார்கள் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 239ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |