The doctrine of yoga! | Shanti-Parva-Section-240 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 67)
பதிவின் சுருக்கம் : யோக வழிமுறையையும், செயல்கள் மற்றும் செயல்களில் இருந்து விலகுதல் குறித்த வேத அறிவுப்புகளையும் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஓ! அருமை மகனே, உன்னால் கேட்கப்பட்ட நான், உன் கேள்விக்கான பதிலை உண்மையில் சாங்கிய அமைப்பில் விளக்கப்பட்டுள்ள ஞானக் கோட்பட்டின்படியே சொன்னேன்.(1) (அதே கதிக்காக) யோகக் கோட்பாட்டின்படி செய்யப்படும் அனைத்தையும் நான் இப்போது விளக்கப்போகிறேன்; கேட்பாயாக. புத்தி, மனம், புலன்கள்,(2) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருக்கும்} ஆன்மா ஆகியவற்றின் கலவையே ஞானத்தில் முதன்மையான வகையாகச் சொல்லப்படுகிறது. அமைதியான மனநிலையைக் கொண்டவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆள்பவனும், (தியானத்தின் மூலம்) ஆன்மாவை நோக்கித் தன் பார்வையைத் திருப்பவல்லவனும், (அத்தகைய) தியானத்தில் இன்புறுபவனும், புத்தியைக் கொண்டவனும், செயல்பாடுகளில் தூய்மையானவனுமான ஒருவன், (தன் ஆசானின் உதவியுடன்) அந்த ஞானத்தை அடைய வேண்டும். விவேகிகளால், யோகத்தின் ஐந்து களங்கங்கள் என்று அறியப்படும் ஆசை, கோபம், பேராசை, அச்சம் மற்றும் உறக்கம் ஆகியவற்றைக் கைவிட்டு இந்த ஞானத்தை அடைய அவன் முயல வேண்டும். அனைத்துக் காரியங்களைக் கைவிடுவதால் ஆசை வெல்லப்படுகிறது.(3-5)
பொறுமை கொண்ட ஒருவன், புத்தியின் துணை கொண்டு சிந்திக்கத்தகுந்தவற்றைச் சிந்திப்பதன் மூலம் உறக்கத்தைக் கைவிடுவதில் வெல்கிறான். அவன் உறுதியான முயற்சியின் மூலம் தன் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றை (தகாத பாவகர ஈடுபாடுகளில் இருந்து) கட்டுப்படுத்த வேண்டும். அவன் தன் கண்களின் (கண்களைப் பயன்படுத்துவதன்) மூலம் தன் கரங்களையும், கால்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் மனத்தின் துணை கொண்டு, தன் கண்களையும், காதுகளையும், தன் செயல்களின் துணை கொண்டு தனது மனத்தையும் பேச்சையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வால் அச்சத்தையும், விவேகிகளுக்குப் பணிவிடை செய்வதால் செருக்கையும் தவிர்க்கவேண்டும்.(7) தாமதம் செய்வதை அடக்கும் அவன் இவ்வழிமுறைகளின் மூலம் இந்த யோகக் களங்கங்களை அடக்க வேண்டும். அவன் நெருப்பையும், பிராமணர்களையும் துதித்து, தேவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்.(8) அவன் மங்கலமற்ற அனைத்துவகை உரையாடல்களையும், வன்மம் நிறைந்த பேச்சுகளையும், பிறரின் மனங்களைப் புண்படுத்தும் சொற்களையும் தவிர்க்க வேண்டும்.
பிரம்மமே (அனைத்துப் பொருட்களின்) பிரகாசமிகு வித்தாக இருக்கிறது. மேலும் இந்த வித்தின் சாரத்திலேயே இவை அனைத்தும் இருக்கின்றன.(9) எதில் அனைத்தும் பிறக்கின்றனவோ அந்த அசைவற்ற, அசையாத அண்ட வடிவத்தில் பிரம்மமே கண்ணானது. தியானம், கல்வி, கொடை, வாய்மை, பணிவு, எளிமை, மன்னிக்கும் தன்மை,(10) உடல் தூய்மை, ஒழுக்கத் தூய்மை, புலனடக்கம் ஆகியன ஒருவனின் சக்தியைப் பெருக்கி, (அவ்வாறு பெருகும்போதே) அவனது பாவங்களை அழிக்கின்றன.(11) அனைத்து உயிரினங்களிடமும் சமமாக நடந்து கொள்வதன் மூலமும், எந்த முயற்சியும் இல்லாமல் எளிதாக அடையப்படுபவற்றைக் கொண்டு மனநிறைவுடன் வாழ்வதன் மூலமும் ஒருவன் தன் நோக்கங்கள் அனைத்தின் கனிகளையும் அடைந்து, ஞானத்தைப் பெறுவதிலும் வெல்கிறான்.(12) அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தும், சக்தியுடனும், எளிய உணவை உண்டும், புலன்களை முற்றான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் ஒருவன், ஆசை மற்றும் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கிய பிறகு பிரம்மத்தை அடைவதில் முனைய வேண்டும்.(13) புலன்களையும், மனத்தையும் (புறப்பொருட்கள் அனைத்தில் இருந்தும் விலக்கியப் பிறகு அவற்றை) உறுதியாக ஒன்றிணைத்து, உள்நோக்கிய நிலையான பார்வையுடன், மாலை அல்லது அதிகாலையின் அமைதியான வேளைகளில் தன் மனத்தைப் புத்தியில் நிறுத்த வேண்டும்.(14) மனிதனின் ஐம்புலன்களில் ஒன்றேனும் கட்டுப்படுத்தப்படாமல் இருக்குமேயானால், ஒரு தோற்பையின் அடியில் உள்ள தடுக்கப்பட முடியாத துளையின் வழியே ஒழுகும் நீரைப் போல, அதன் {அந்தப் புலனின்} வழியே அவனது ஞானமனைத்தும் தப்பிச் செல்லும்.(15)
ஒரு மீனவன், தன் வலைகளுக்குப் பேராபத்தைத் தரும் சக்தியற்ற மீனை முதலில் பிடிக்க முனைவதைப் போலவே, ஒரு யோகியும், முதல் தருணத்திலேயே தன் மனத்தைக் கட்டுப்படுத்து முனைய வேண்டும். முதலில் மனத்தை அடக்கிவிட்ட யோகி, அடுத்ததாகத் தன் காதுகளையும், கண்களையும், அதன் பிறகு தன் நாவையும், பிறகு தன் மூக்கையும் அடக்க வேண்டும்.(16) இவை அனைத்தையும் கட்டுப்படுத்திய பிறகு, அவன் அவற்றைத் தன் மனத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும். பிறகு அனைத்துக் காரியங்களில் இருந்து மனத்தை விலக்கும் அவன் அதைப் புத்தியில் நிலைநிறுத்த வேண்டும்.(17) உண்மையில், ஐம்புலன்களைக் கட்டுப்படுத்திய யதியானவன், அவற்றை மனத்திலேயே நிலைநிறுத்த வேண்டும். தங்களுடன் ஆறாவதாக மனத்தைக் கொண்ட இவை {புலன்கள்} புத்தியில் ஒருங்கே குவிந்து,(18) இவ்வாறு கலக்கமில்லாமல் அவை நிலையாகக் குவிவதால், பிரம்மமானது, சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட புகையற்ற நெருப்பைப் போலவோ, பிரகாசமான ஒளியைக் கொண்ட சூரியனைப் போலவோ உணரத்தக்கதாகிறது.(19) உண்மையில் அவன், வானத்தில் உள்ள மின்னலெனும் நெருப்பைப் போல, தன் ஆன்மாவுக்குள் தன்னையே காண்கிறான். பிறகு அதன் முடிவற்ற தன்மையின் விளைவால் அனைத்தும் அதனுள் தோன்றுகிறது, மேலும் அஃது அனைத்திலும் தோன்றுகிறது.(20)
ஞானமும், மனோவுறுதியும், உயர்ந்த அறிவையும் கொண்டவர்களும், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபடுபவர்களுமான உயர் ஆன்ம பிராமணர்கள், அதை {ஆன்மாவைக்} காண்பதில் வெல்கிறார்கள்.(21) இவ்வாறு ஆறுமாதங்கள் கடுந்தவத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு யோகி, {யாருமற்ற} தனியான இடத்தில் அமர்ந்து, அந்த அழிவற்றதுடன் {பிரம்மத்துடன்} சமத்தன்மையை அடைவதில் {அதனுடன் கலப்பதில்} வெல்கிறான்.(22) அழிவு, வரிவு, ஒரே மனிதன் அல்லது உடலுக்குள் பல்வேறு தன்மைகளை அளிக்கும் சக்தி, தெய்வீக மணங்கள், ஒலிகள், பார்வைகள், சுவை மற்றும் தீண்டலின் இனிய உணர்வுகள், குளிர் மற்றும் வெப்பத்தின் இன்பமான உணர்வுகள், காற்றுடனான சமத்தன்மை,(23) (உள்நோக்கிய ஒளியின் மூலம்) சாத்திரங்களையும், மேதைகளின் அனைத்து படைப்புகளையும் புரிந்து கொள்ளும் வல்லமை, தெய்வீகக் காரிகையரின் தோழமை ஆகிய இவை அனைத்தையும் யோகத்தின் மூலமாக அடையும் யோகி, அவற்றை அலட்சியம் செய்து, அவை அனைத்தையும் தன் புத்தியில் கலக்க வேண்டும்[1].(24) ஒருவன் பேச்சையும், புலன்களையும் கட்டுப்படுத்தி அந்தி இருளுக்குப் பின்பும், விடியலுக்கு முன்பும், விடியலின் போதும் மலை முகட்டிலோ, ஒரு நல்ல மரத்தினடியிலோ, ஒரு மரத்திற்கு முன்பாகவோ அமர்ந்து யோகம் பயில வேண்டும்.(25)
[1] "23 மற்றும் 24ம் ஸ்லோகங்கள் யோகக் கருத்தை வழங்குகின்றன. யோகம் பயில்வதன் மூலம் இவை அனைத்தையும் அடையலாம் அல்லது பெறலாம். அந்த மதிப்புமிக்க உடைமைகளால் வழிநடத்தப்படும் யோகி, இவ்வகையில் அனுபவிப்பது யோகிகள் அடைய முனையும் உயர்ந்த நோக்கத்தோடு ஒப்பிடுகையில் நரகமே என்பதால் அவன் நரகத்தில் வீழ்வதாகச் சொல்லப்படுகிறது. பிரமோகம், பிரமம், ஆவர்த்தம் ஆகியன இங்கே பயன்படுத்தப்படும் கலைச்சொற்களாகும். காற்றுடனான சமத்தன்மை என்பது அசைவின் வேகம், விருப்பப்படி மறையும் சக்தி, வானத்தில் உலாவும் வல்லமை ஆகியவற்றைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தன் புலன்கள் அனைத்தையும் இதயத்துக்குள் கட்டுப்படுத்தும் ஒருவன், புலங்கள் குவிந்த நிலையில், உலகின் மனிதன் செல்வத்தைக் குறித்தும், பிற மதிப்புமிக்க உடைமைகளைக் குறித்தும் சிந்திப்பதைப் போல நித்தியமானதும், அழிவற்றதுமான ஒன்றை {பிரம்மத்தைச்} சிந்திக்க வேண்டும். ஒருவன் யோகம் பயிலும்போது ஒருபோதும் தன் மனத்தை அதிலிருந்து விலக்கக்கூடாது.(26) யோகியானவன், அலைபாயும் மனத்தை எந்த வழிமுறைகளினால் கட்டுப்படுத்துவதில் வெல்ல முடியுமோ, அந்த வழிமுறைகளை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். அவன் அதிலிருந்து ஒருபோதும் விழுந்துவிடத் தன்னை அனுமதிக்கக்கூடாது.(27) அனைத்திலிருந்தும் புலன்களும், மனமும் விடுபட்ட யோகி, (பயிற்சிக்காக) வெறுமையான மலைக்குகைகளுக்கும், தேவர்களுக்காக நேர்ந்துவிடப்பட்ட கோவில்களுக்கும், வெறுமையான வீடுகள் அல்லது அறைகளுக்கோ சென்று, அங்கே வாழ வேண்டும்.(28) அவன் மற்றொருவனுடன் பேச்சிலோ, செயலிலோ, எண்ணத்திலோ தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அனைத்துப் பொருட்களையும் அலட்சியம் செய்து, மிகச் சொற்பமாக உண்ணும் யோகி அடைந்த அல்லது இழந்த பொருட்களின் மீது சமமான கண்களையே செலுத்த வேண்டும்.(29)
தன்னைப் புகழ்பவனிடமும், பழிப்பவனிடமும் ஒரே வகையிலேயே நடந்து கொள்ள வேண்டும். அவன் எவருக்கும் நன்மையையோ தீமையையோ நாடக்கூடாது.(30) ஒன்றை அடைவதால் மகிழ்ச்சியையோ, தோல்வி அல்லது இழப்பால் கவலையையோ அடையக்கூடாது. அவன் காற்றை {வாயுவைப்} போல அனைத்து உயிரினங்களிடமும் சீரான நடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும்[2].(31) தன்னை நோக்கிய மனம் கொண்டவனும், தூய்மையான வாழ்வை வாழ்பவனும், அனைத்துப் பொருட்களின் மீதும் சமமாகக் கண்களைச் செலுத்துபவனும், உண்மையில் இவ்வகையிலேயே ஆறு மாதங்கள் யோகத்தில் ஈடுபடுபவனுமான ஒருவனுக்கு, ஒலியால் பிரதிபலிக்கப்படும் பிரம்மமானது மிக விளக்கமாக {பேரொளிமயமாகத்} தோன்றும்[3].(32) (செல்வம் மற்றும் வசதிகளை ஈட்டுவதில்) கவலையால் பீடிக்கப்படும் மனிதர்கள் அனைவரையும் காணும் யோகியானவன், மண்ணாங்கட்டியையும், ஒரு கல் துண்டையும், தங்கக் குவியலையும் ஒரே சமமான கண்ணுடன் பார்க்க வேண்டும். உண்மையில் அவன் (செல்வமீட்டும்) இந்தப் பாதையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதன் மீது வெறுப்பை அடைந்து, ஒருபோதும் திகைப்படையாதவனாக இருக்க வேண்டும்.(33) ஒருவன் {வர்ணத்தால்} தாழ்ந்த வகையைச் சார்ந்தவனாகவே இருப்பினும், ஒருத்தி பெண்ணாகவே இருப்பினும் அவர்கள் இருவரும் மேலே குறிப்பிடப்பட்ட பாதையைப் பின்பற்றினால் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்[4].(34) எவன் தன் மனத்தை அடக்குவானோ, அவன், நிலையுறுதியுடனான புலன்களைத் தவிர வேறு எதனைக் கொண்டும் அடைய முடியாததும், நுட்பத்திலும் நுட்பமானதும், திரளிலும் திரளானதும், விடுதலையேயானதும் {முக்தியேயானதும்}, படைக்கப்படாததும், பழமையானதும், சிதைவில்லாததும், நித்தியமானதுமான பிரம்மத்தைத் தன் புத்தியின் துணையால் தன்னிடமே காண்பான்" என்றார் {வியாசர்}".(35)
[2] "அசங்கம் asangah, அஃதாவது அனைத்துப் பொருட்களில் இருந்தும் தொடர்பறுப்பதில் அவன் காற்றைப் போல இருக்க வேண்டும் என்று உரையாசிரியர் விளக்குகிறார். அனிகேதம் aniketah என்பது ஒரு வீடு அல்லது நிலையான வசிப்பிடம் இல்லாமல் இருப்பது என்ற பொருளைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "சவ்த-பிரம்மாதிவர்த்ததே Cavda-Brahmaativartate என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. நான் உரையாசிரியரையே பின்பற்றுகிறேன். ஒலியால் பிரதிபலிக்கப்படும் பிரம்மம், என்பது உண்மையில் திரித்துவத்தை விளக்கும் மறைமெய்மை சார்ந்த ஓரசையான பிரணவம் அல்லது ஓம் என்ற சொல்லே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் அடங்கின சித்தமுள்ளவனும், ஸாதுவும், எல்லாப்பிராணிகளையும் ஒன்று போலப் பார்க்கிறவனும் ஆறுமாதம் விடாமல் யோகாப்பியாஸம் செய்கிறவனுமாயிருக்கிறவனுக்குப் பிரணவமானது தன் அர்த்தத்துடன் நன்கு விளங்குகிறது" என்றிருக்கிறது.[4] "சூத்திர வகையே இங்கே தாழ்ந்த வகை என்று குறிப்பிடப்படுகிறது. சாங்கியக் கல்வி, "தத்வமசி" Tattwamasi (நீயே அஃது) என்ற ஸ்ருதிகளை மனத்தில் ஆழப் பதிய வைப்பது ஆகியன மேன்மையான மூன்று வர்ணத்தாருக்கே உரியது எனவும், வியாசர் இங்கே யோகவழியை அனைவரும் பின்பற்றத்தகுந்தவர்களே என்று விதிப்பதாகவும் உரையாசிரியர் இங்கே சுட்டிக்காட்டுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் தொடர்ந்தார், "ஞானம் கொண்ட மனிதர்கள், ஆசான்களின் வாயால் உறுதி செய்து கொள்வதன் மூலமும், உயர் ஆன்மாக் கொண்ட பெருமுனிவரால் இவ்வளவு சரியாகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைத் தங்கள் மனத்தில் சிந்தித்துப் பார்ப்பதன் மூலமும், (சாத்திரங்கள் சொல்லும் வகையில்) பிரம்மத்துடனான சமநிலையை அடைந்து, இருப்பில் உள்ள அனைத்துப் பொருட்களையும் விழுங்கும் பிரளய காலம் வரும்வரை அங்கேயே இருப்பார்கள்" {என்றார் பீஷ்மர்}.(36)
சாந்திபர்வம் பகுதி – 240ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |