Knowledge and acts! | Shanti-Parva-Section-241 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 68)
பதிவின் சுருக்கம் : கர்மம் மற்றும் ஞானம் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "வேத அறிவிப்புகள் இருவகையில் இருக்கின்றன. ஒருமுறை "செயல்கள் அனைத்தையும் செய்" என்று அவை கட்டளையிடுகின்றன. மறுமுறை (இதற்கு முரணாக) "செயல்கள் அனைத்தையும் கைவிடு" என்றும் அவை சொல்கின்றன. ஞானத்தின் துணை மூலம் மனிதர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}[1]? செயல்களின் துணை மூலம் அவர்கள் எங்கே செல்கின்றனர் {எந்த கதியை அடைகின்றனர்}?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். நீர் எனக்குச் சொல்வீராக. உண்மையில் ஞானம் மற்றும் செயல்கள் {கர்மம்} குறித்த இந்த அறிவிப்புகள் மாறுபாடு கொண்டவையாகவும், முரணானவையாகவும் இருக்கின்றன" என்று கேட்டார்".(2)
[1] "செயல்கள் மற்றும் ஞானம் ஆகிய இரண்டின் நன்மைகளையும் வேதங்கள் அறிவிக்கின்றன. ஞானம் கொண்டவர்களுக்குச் செயல்கள் விதிக்கப்படவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பராசரர் மகன் {வியாசர்}, தன் மகனிடம் {சுகரிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார்: "முறையே செயல்கள் மற்றும் ஞானத்தைச் சார்ந்திருக்கும் அழியக்கூடிய மற்றும் அழிவற்ற இரு பாதைகளை நான் உனக்கு விளக்கப் போகிறேன். ஓ! குழந்தாய், ஞானத்தின் துணை மூலம் ஒருவன் அடையும் இடத்தையும் {கதியையும்}, செயல்களின் துணை மூலம் அவன் அடையும் வேறு இடத்தையும் {கதியையும்} நான் உனக்குச் சொல்கிறேன்; குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. இந்த இரண்டு இடங்களுக்கு இடையிலான வேறுபாடானது எல்லையற்ற வானைப் போன்று மிகப் பெரிதானதாகும்.(3,4) நீ என்னிடம் கேட்டிருக்கும் இந்தக் கேள்வியானது, நம்பிக்கை கொண்ட ஒரு மனிதனுக்கு ஒரு நாத்திகனின் உரை அளிக்கும் வலியை எனக்குத் தருகிறது.(5)
வேதங்களில் நிறுவப்பட்டிருக்கும் இருவழிகள், பிரவிருத்தியின் மூலம் குறிப்பிடப்படும் (செயல்கள்) கடமைகள் மற்றும் நிவிருத்தியின் அடிப்படையிலான சிறப்புக் கடமைகள் ஆகியனவே ஆகும்.(6) செயல்களின் மூலம் ஓர் உயிரினம் அழிவடைகிறது. எனினும், ஞானத்தின் மூலம் அது விடுதலையடைகிறது {முக்தியடைகிறது}. இதன் காரணமாகவே, வாழ்வெனும் பெருங்கடலின் அடுத்தக் கரையைக் காணும் யோகியர், ஒருபோதும் தங்களைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்வதில்லை.(7) செயல்களின் மூலம், ஒருவன் தனது மரணத்திற்குப் பிறகு, பதினாறு உட்பொருள்களால்[1] தொகுக்கப்பட்ட உடலுடன் மறுபிறப்பெடுக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறான். எனினும் ஞானத்தின் மூலம் அவன், எது நித்தியமானதோ, புலப்படாததோ, அனைத்தையும் அறிந்ததோ அதுவாகவே {பிரம்மமாகவே} மாற்றமடைகிறான்.(8) குறைந்த அறிவுள்ள ஒருவகை மனிதர்கள் செயல்களை மெச்சுகின்றனர். இதன் விளைவால் அவர்கள் (ஒன்றன்பின் ஒன்றாக) இடையறாமல் உடல்களை ஏற்கின்றனர்.(9) கடமைகளைப் பொறுத்தவரையில் கூரிய உள்ளுணர்வுகளைக் கொண்டவர்களும், (ஞானத்திற்கு வழிவகுக்கும்) உயர்ந்த புத்தியை அடைந்தவர்களுமான மனிதர்கள், ஓடைகளில் நீர் அருந்துபவர்கள், எவ்வாறு கிணறுகள் மற்றும் குளங்களின் நீரை ஒருபோதும் மெச்சுவதில்லையோ அவ்வாறே செயல்களை ஒருபோதும் மெச்சுவதில்லை.(10)
[1] அறிவுப்புலன்கள் {ஞானேந்திரியம்} ஐந்து, செயற்புலன்கள் {கர்மேந்திரியங்கள்} ஐந்து, உயிர் மூச்சுகள் {பிராணன்} ஐந்து, மனம் {அந்தக்கரணம்} ஒன்று ஆகியனவே அந்தப் பதினாறு உட்பொருட்களாகும்.
செயல்களின் மூலம் ஒருவன் அடையும் கனியானது, இன்பம் மற்றும் துன்பம், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஞானத்தின் மூலமோ, எங்கே எந்தத் துன்பமும் இல்லையோ;(11) எங்கே ஒருவன் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிவற்றில் இருந்து விடுபடுவானோ; எங்கே ஒருவன் முதுமைக்கு ஆட்படுவதில்லையோ; எங்கே ஒருவன் நனவுநிலையிருப்பை {அகங்காரத்தைக்} கடந்த நிலையை அடைகிறானோ;(12) எங்கே உயர்வானதும், புலப்படாததும், அனைத்தையும் அறிந்ததும், எப்போதும் இருப்பதும், உணரப்பட முடியாததும், துன்பத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதும், அழிவில்லாததும், அழிவை விஞ்சி இருப்பதுமான பிரம்மம் இருக்கிறதோ;(13) எங்கே (இன்பம் மற்றும் துன்பம் முதலிய) அனைத்து முரண்பட்ட இரட்டைகளின் ஆதிக்கத்தில் இருந்தும், விருப்பம் அல்லது நோக்கத்தில் இருந்தும் அனைவரும் விடுபடுவார்களோ அந்த இடத்தை {பிரம்ம ஸ்வரூபத்தை ஞானத்தினால்} அவன் அடைகிறான். அவர்கள், அந்த நிலையை அடைந்து, அனைத்துப் பொருட்களின் மீதும் சமமான கண்களைச் செலுத்தி, உலகளாவிய நண்பர்களாகி, அனைத்து உயிரினங்களின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் ஆகிறார்கள். ஓ! மகனே, ஞானத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனுக்கும், செயல்களில் அர்ப்பணிப்புள்ளவனுக்கும் இடையில் ஒரு பெரிய வளைகுடா இருக்கிறது.(14) ஞானம் கொண்ட மனிதன் அழிவை அடையாமல், தேய்பிறையின் இறுதி இரவில் (அழிவடையாத) நுட்பமான வடிவில் இருக்கும் சந்திரனைப் போல எப்போதும் {நுட்பமாகவே} நீடித்திருக்கிறான்.(15)
(பிருஹதாரண்யகத்தில் யாக்ஞவல்கியர் எனும்) பெரும் முனிவர் இதைக் குறித்து இன்னும் விரிவாகச் சொல்லியிருக்கிறார். செயல்களில் அர்ப்பணிப்புள்ள மனிதனைப் பொறுத்தவரையில், அவனது இயல்பானது {ஸ்வபாவமானது}, புதிதாகப் பிறந்த நிலவானது, ஆகாயத்தில் வளைவான நூலாகத் தெரிவதைப் போல ஊகித்தறியப்படுகிறது[2].(16) ஓ! மகனே, செயல்களைச் செய்யும் மனிதன் {கர்மமயமான புருஷன்}, மாறுதலின் விளைவுகளான பதினோரு உட்பொருள்களுடனும், பதினாறு நுட்பமான வடிவங்களுடனும் மறுபிறப்பெடுக்கிறான் என்பதை அறிவாயாக.(17) தாமரை இலையில் தண்ணீர் துளியைப் போல, அந்த (பொருள்) வடிவத்தில் {உயிரினத்தில்} புகலிடம் கொள்ளும் தேவன், நித்தியமானதும், மனம் மற்றும் புத்தியைக் கடந்து யோகத்தில் வெல்வதுமான க்ஷேத்ரஜ்ஞனாக (ஆன்மாவாக) அறியப்பட வேண்டும்[3].(18) தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் ஆகியன புத்தியின் குணங்களாகும். புத்தியானது, உடலுக்குள் வசிக்கும் தனிப்பட்ட ஆத்மாவின் குணமாகும். மேலும், தனிப்பட்ட ஆன்மாவோ பரமாத்மாவில் {பரமாத்மாவின் குணத்தில்} இருந்து வருகிறது[4].(19) ஆன்மாவுடன் கூடிய உடலானது, ஜீவனின் குணமெனச் சொல்லப்படுகிறது. ஜீவனே செயல்பட்டு, அனைத்து உடல்களையும் உயிர்வாழச் செய்கிறது. எது க்ஷேத்திரம் (என்றும், எது க்ஷேத்ரஜ்ஞன்) என்று{ம்} அறிந்தவர்கள், ஏழு உலகங்களையும் படைத்தவனே {பரமாத்மாவே} மேற்கண்ட ஜீவன் {ஆத்மா} என்று சொல்கிறார்கள்" என்றார் {வியாசர்}[5].(20)
[2] "செயல்களைச் செய்யும் மனிதனானவன், எப்போதும் வளர்ந்து சிதையும் புதிய நிலைவைப் போன்றவனாவான் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "உடலின் எந்தக்குணத்திலும் தொடர்புகொள்ளாமல் ஆன்மா அந்த உடலுக்குள்ளேயே வசிக்கிறது. எனவே, அது தாமரை நீருக்கு ஒப்பிடப்படுகிறது. இலையில் இருந்தாலும் அந்நீர், அந்த இலையின் எந்தப் பகுதியையும் நனைத்துவிடாமல் அதனுடன் எந்தப் பற்றும் கொள்ளாமல் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "தமஸ், ரஜஸ் மற்றும் சத்வம் ஆகியவை ஜீவனின் குணத்தையே தங்கள் சாரமாகக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட ஜீவனின் குணம் ஞானமயகோஷம் Jnaanamay Kosha என்று சொல்லப்படுகிறது. மேலும் ஜீவன் என்பது தற்செயலான ஆன்மாவே ஆகும். ஆன்மா பரமாத்மாவிலிருந்து வருகிறது. இவ்வேறு இருப்பின் சங்கிலி பரமாத்மாவில் இருந்து சுவடு காணப்படுகிறது. 20ம் ஸ்லோகத்தில் அசைவில்லாததாக இருக்கும் உடலானது, ஆன்மாவுடன் இருக்கும்போது, தற்செயலாகக் குணங்களற்ற ஜீவனாகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] மேற்கண்ட 18-20 ஸ்லோகங்கள் பிபேக்திப்ராயின் பதிப்பில், "க்ஷேத்திரக்ஞன் என்பவன், தாமரை இதழ் தண்ணீர் துளியைப் போல உடலில் புகலிடம் கொள்பவனாவான். துறவின் மூலம் ஆத்மாவை வெல்பவன், இஃதை எப்போதும் அறிவான். அனைத்து உயிரினங்களும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணங்கள் கலந்ததே என்பதை அறிவாயாக. ஜீவாத்மாவுக்கு இக்குணங்கள் உண்டு. ஆனால் ஜீவாத்மாவை பரமாத்மாவாக அறிவாயாக. நனவுநிலையானது உயிரினங்களின் குணம் என்று சொல்லப்படுகிறது. அதுவே அனைத்திலும் அவற்றை முயற்சி செய்ய வைக்கிறது. இஃதை அறிந்தவர்கள் உடலைக்கடந்து உயர்ந்திருப்பதைக் குறித்துப் பேசுகிறார்கள். ஏழு உலகங்களும் அதனிலிருந்தே பாய்கிறது" என்றிருக்கிறது. இதே வரிகள் கும்பகோணம் பதிப்பில், "மேகத்தில் ஜலத்திவலை போல அந்தச் சந்திரனிடத்திலிருக்கிற தேவனே நித்தியம் யோகத்தால் மனத்தை ஜயித்தவனான ஜீவனாகத் தெரிந்து கொள். தமஸ், ரஜஸ், ஸத்வங்களை ஜீவன் குணமாகவும், ஜீவனைப் பிரத்யகாத்மாவின் குணமாகவும், பிரத்யகாத்மாவைப் பரமாத்மாவின் குணமாகவும் அறியக்கடவாய். க்ஷேத்ரவித்துக்களானவர்கள் அசேதனத்தை ஜீவன் குணமாகவும், ஜீவனைப்ரவிருத்தியுள்ளவனென்றும் எல்லாவைற்றையும் சேஷ்டிக்கும்படி செய்கிறவனென்றும் ஏழுலோகங்களையும் கற்பித்தவன் ஜீவனைக் காட்டிலும் பரனென்றும் சொல்லுகிறார்கள்" என்றிருக்கிறது. கங்குலி, பிபேக்திப்ராய் மற்றும் கும்பகோணம் பதிப்பில் உள்ளவை ஒன்றுக்கொன்று முற்றிலும் வெவ்வேறானவையாக இருக்கின்றன.
சாந்திபர்வம் பகுதி – 241ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |