The duties of a disciple (Brahmacharya)! | Shanti-Parva-Section-242 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 69)
பதிவின் சுருக்கம் : செயல் பண்புகளின் கடமைகளை மீறாமல் எவ்வாறு முக்தியை அடைய முடியும் என்பது குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; ஆசிரமங்களைக் குறித்தும், நான்கு வகை ஆசிரமங்களில் பிரம்மச்சரியத்தின் நடைமுறை குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "(அண்டம் தழுவிய) க்ஷரம் என்பதோடு தொடங்கும் ஒன்று, (அண்ட) ஆன்மாவிலிருந்து மற்றொன்று என இருவகைப் படைப்புகள் இருப்பதாக நான் இப்போது புரிந்து கொள்கிறேன். புலன்கள் மற்றும் அவற்றுக்குரிய பொருட்களைக் கொண்ட அந்த மற்றொன்று புத்தியின் பலத்தால் காணத்தக்கதாக இருக்கிறது. இந்த இறுதியானது மற்றதைக் கடந்து இருப்பதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுகிறது[1].(1) எனினும் நான், எது இந்த உலகத்தை இயக்குகிறதோ, எது காலதர்மத்தால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறதோ, எதனைக் கொண்டு நல்லோர் அனைவரும் தங்கள் ஒழுக்கத்தை {நடத்தையை} அமைத்துக் கொள்கின்றனரோ அந்த அறவொழுக்கத்தைக் குறித்து நான் மீண்டும் கேட்க விரும்புகிறேன்[2].(2) வேதங்களில், செயல்களைச் செய் என்றும், செயல்களைதப் புறக்கணி என்றும் இரு வகைத் தீர்மானங்கள் இருக்கின்றன. இஃது அல்லது அது குறித்த உண்மை உறுதி செய்வதில் நான் எவ்வாறு வெல்ல முடியும்? இதைத் தெளிவாக விளக்குவதே உமக்குத் தகும்[3].(3) உமது போதனைகளின் மூலம் மனித ஒழுக்கத்தின் முழுமையான நடைமுறை ஞானத்தை அடைந்து, அறம் மட்டுமே பயின்று என்னைத் தூய்மையாக்கிக் கொண்டு, என் புத்தியையும் தூய்மையாக்கிக் கொண்டு என் உடலைக் கைவிட்டு, அழிவற்ற ஆன்மாவை நான் காணப் போகிறேன்" என்றார் {சுகர்}[4].(4)
[1] இந்த ஸ்லோகத்தில் நீலகண்டரின் விளக்கத்தையே பெரிதும் பின்பற்றியிருக்கிறேன். இங்கே சொல்லப்படும் இருவகைப் படைப்புகள் என்பன, ஏற்கனவே முந்தைய பகுதிகளில் வியாசர் சொன்னவற்றையே குறிக்கின்றன. முதல் வகையானது, "க்ஷாரத் பிரப்ரிதி யா சர்கம்" Ksharaat prabriti yah sargah அதாவது க்ஷரம் அல்லது பிரகிருதி தொடங்கி இருபத்து நான்கு உட்பொருட்களைக் கொண்ட படைப்பு என்பது பொருள். மற்றொரு படைப்பானது, புத்தைஸ்வர்யம் buddhaicwaryya அல்லது புத்தியின் பலத்தைக் குறிப்பதும், புத்திகல்பிதாமாக buddhikaliptaah இருப்பதுமான புலன்கள் மற்றும் அவற்றுக்குரிய பொருட்கள் அடங்கிய படைப்பாகும். இந்த இரண்டாம் வகைப் படைப்பானது, உரையாசிரியரின்படி, உத்கிரிஷ்டம் utkrishtah மற்றும் பிரதானமாக pradhaanah, அதாவது முதன்மையானதாகவும், பந்தகட்வம் bandhakatwam அதாவது தனிப்பட்ட அனைத்தையும் கட்டும் சக்தி ஆகியவற்றைக் கொண்ட அதிசர்கமாகும் atisargah. அதிசர்கம் என்பதற்கு நான் வழிப்பொருட்களைக் கொண்ட படைப்பு என்று பொருள் கொள்கிறேன். இரண்டாம் வகைப் படைப்பானது, மற்றொன்றில் இருந்து பெறப்பட்ட அல்லது மற்றொன்றை அடிப்படையாகக் கொண்ட அல்லது மற்றொன்றைக் கடந்து நிற்கின்ற அல்லது மற்றொன்றின் மேல் இருக்கின்ற என்ற பொருளைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸகலஸாதாரணமாகக் கடவுளிடத்திலிருந்துண்டான பிரதானம் முதற்கொண்டு ஏற்பட்ட ஸ்ருஷ்டியையும் அவனவனுக்கும் தனித்தனியே விஷயங்களுடன் கூடிய இந்திரியங்களுடைய ரூபமான புத்தியின் ஸாமர்த்தியத்தினால் செய்யப்பட்ட அதிகஸ்ருஷ்டியையும் கேட்டேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அழியத்தக்கதும், குணங்கள் மற்றும் புலன்களுடன் கூடியதுமான ஒரு படைப்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், மங்கலமானதும், அழிவற்றதும், ஆத்மாவைத் தியானிப்பதால் உணரப்படுவதுமான மற்றொரு படைப்பும் இருக்கிறது" என்றிருக்கிறது.[2] "அறவொழுக்கமானது எவ்வாறு குறிப்பிட்ட யோகத்தின் குணம் மூலம் ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பது குறித்து முந்தைய பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "வெளிப்படையாகவே முரணாக இருக்கும் இந்த இரு தீர்மானங்களின் தன்மை குறித்து வியாசர் ஏற்கனவே விளக்கியிருக்கிறார். எனவே, சுகரின் கேள்வியானது, இந்த இரண்டு தீர்மானங்களும் வெளிப்படையாக எதிராக இருந்தாலும், கீதையில் விளக்கப்பட்டிருக்கும்படி ஒன்றாகவே இருக்குமானால், அந்த ஒற்றுமையை எவ்வாறு தெளிவாக உறுதி செய்து கொள்வது என்பதாகும். உண்மை என்னவென்றால், இது குறித்து இன்னும் தெளிவாகத் தமது தந்தை விளக்க வேண்டும் என்று சுகர் விரும்புகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "மனிதர்களின் ஒழுக்க நடைமுறை, அதாவது சரியானது மற்றும் தவறானதற்கு இடையில் வேறுபாட்டைக் காண்பது. இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது வரி "(யோகத்தின் மூலம்) என் உடலின் நனவுநிலையைக் கைவிட்டு என் ஆன்மாவை நான் காணப் போகிறேன்" என்ற பொருளையும் தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "பிரம்மனால் முதலில் நிறுவப்பட்ட ஒழுக்க நடைமுறையே {விருத்தியே}, பழங்காலத்தின் பக்திமான்களும், விவேகிகளுமான புராதானப் பெரும் முனிவர்களால் முறையாகப் பின்பற்றப்பட்டன.(5) பெரும் முனிவர்கள் பிரம்மச்சரியம் பயில்வதன் மூலம் அனைத்து உலகங்களையும் வெல்கிறார்கள். தன் நன்மைக்கான அனைத்து பொருட்களையும் நாடி, மனத்தைப் புத்தியில் நிலைக்கச் செய்து, காட்டில் வசித்துக் கடும் தவங்களைப் பயின்று, கனி மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்து, புனிதத் தலங்களுக்குச் சென்று, உலகளாவிய நன்மையைப் பயின்று,(7) புகையில்லாத, உலக்கையொலி ஓய்ந்த காலத்தில் காட்டில் உள்ள குடில்களில் பிச்சையெடுக்கச் செல்லும் மனிதன் பிரம்மத்தை அடைவதில் வெல்கிறான்[5].(8) முகத்துதியைத் தவிர்த்து, பிறருக்குத் தலைவணங்குவதையும் தவிர்த்து, நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் தவிர்த்து, வழியில் நேரும் எந்த வழிமுறையினாலும் பசியைத் தணித்துக் கொண்டு நீ காட்டில் வாழ்வாயாக" என்றார் {வியாசர்}.(9)
[5] "குடில்களில் புகையற்ற வேளை என்பதற்கு, அந்தக் குடிலில் வசிப்போர் சமைத்து, உண்டு முடித்த பிறகு என்பது பொருள். உலக்கையொலி ஓய்ந்த காலம், அஃதாவது அரசியைத் தூய்மைப்படுத்தும் பணி செய்யப்படாமல், அதன் விளைவாக அந்தக் குடில் வாசிகளால், பிச்சையெடுத்து வருபவர்களுக்கு அதிகம் கொடுக்க முடியாமல் இருக்கும் காலத்தில் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "(செயல்களின் அடிப்படையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) வேத தீர்மானங்கள், இழிந்தோரின் கருத்துப்படி முரணானவையே. இஃது அதிகாரம் பெற்றதா அல்லது அஃது அதிகாரம் பெற்றதா? என்ற முரண் இருக்கும் போது எவ்வாறு அவற்றைச் சாத்திரம் என்று சொல்வது?(10) இரண்டும் எவ்வாறு அதிகாரம் பெற்றவை என்பதைக் கேட்க விரும்புகிறேன். உண்மையில், செயற்பண்புகளின் கடப்பாடு குறித்த விதிகளை மீறாமல் {கர்மங்களுக்கு விரோதமில்லாமல்} எவ்வாறு விடுதலையை {முக்தி / மோக்ஷத்தை} அடைய முடியும்?" என்று கேட்டார்".(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு சொல்லப்பட்டவரும், காந்தவதியின் மகனுமான அம்முனிவர் {வியாசர்}, அளவில்லா சக்தி கொண்ட தன் மகனின் {சுகரின்} இந்த வார்த்தைகளை மெச்சி, பின்வருமாறு அவருக்குப் பதிலுரைத்தார்.(12)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "பிரம்மச்சாரி, இல்லறவாசி {கிருஹஸ்தன்}, காட்டில் வாழ்பவன் {வானப்பிரஸ்தன்}, (அறம்சார்ந்து) பிச்சையெடுக்கும் வாழ்வை வாழ்பவன் {ஸன்னியாஸி} ஆகிய அனைவரும் தங்கள் தங்களுக்குரிய வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களை} முறையாக நோற்பதன் மூலம் ஒரே உயர்ந்த கதியையே அடைகின்றனர்.(13) அல்லது, ஒரே மனிதன், விருப்பு வெறுப்பில் இருந்து விடுபட்டு இந்த வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} நான்கையும் (ஒன்றன்றபின் ஒன்றாக) அதனதன் விதிப்படி பயின்றால், (அத்தகைய ஒழுக்கத்தின் மூலம்) நிச்சயம் அவன் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளத் தகுந்தவனாகிறான்.(14) நான்கு வாழ்வுமுறைகளும் ஏணியையோ, படிகளையோ கொண்டிருக்கின்றன. அந்த ஏற்றம் பிரம்மத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. அந்த ஏற்றத்தில் ஏறுவதன் மூலம் ஒருவன் பிரம்ம லோகத்தை அடைவதில் வெல்கிறான்.(15)
கடமைகளில் உள்ள வேறுபாடுகளை அறிந்தவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனுமான பிரம்மச்சாரியானவன், தன் வாழ்வின் நான்கில் ஒரு பங்கைத் தன் ஆசான் அல்லது ஆசானின் மகனுடன் வசிக்க வேண்டும்.(16) அவன் தன் ஆசானின் வீட்டில் வசிக்கும்போது, ஆசான் படுக்கைக்குச் சென்ற பிறகே அவன் செல்ல வேண்டும், ஆசான் எழுவதற்கு முன்பே அவன் எழ வேண்டும். சீடனால் செய்யத்தக்கவையும், பணியாளால் செய்யபட வேண்டியவையுமான செயல்கள் அனைத்தும் அவனால் {பிரம்மச்சாரியால்} செய்யப்பட வேண்டும்.(17) அவன், இவற்றை முடித்துவிட்டுத் தன் ஆசானின் அருகில் பணிவுடன் நிற்க வேண்டும். அனைத்துவகைப் பணிகளிலும் தேர்ச்சி பெறும் அவன், தன் ஆசானின் செயல்கள் அனைத்தையும் செய்து, ஒரு பணியாளாகவே நடந்து கொள்ள வேண்டும்.(18) (எதையும் விட்டுவிடாமல்) அனைத்துச் செயல்களையும் நிறைவு செய்து, தன் ஆசானின் காலடியில் அமர்ந்து, கற்றுக் கொள்ளும் ஆவல் மற்றும் விருப்பத்துடன் அவன் கல்வி பயில வேண்டும். எளிமையுடனும், தீய பேச்சைத் தவிர்த்தும் நடந்து கொள்ளும் அவன், தன் ஆசான் அழைக்கும்போது மட்டும் பாடங்களைப் போதிக்க வேண்டும்.(19) உடலும் மனமும் தூய்மையடைந்து, புத்திசாலித்தனம் மற்றும் விரும்பத்தக்க பிற ஒழுக்கங்களையும் அடையும் அவன், இப்போதும் எப்போதும் ஏற்புடையதையே {இனிமையானவற்றையே} பேச வேண்டும். தன் புலன்களை அடக்கும் அவன், ஏக்கமில்லாத கண்களுடன் தன் ஆசானைக் காண வேண்டும்[6].(20)
[6] "துணிவுமிக்க, கடுமையான பார்வையைச் செலுத்தாமல் பணிவான அல்லது அடக்கமான பார்வையே அவன் செலுத்த வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவன் தன் ஆசான் உண்பதற்கு முன் உண்பதோ, தன் ஆசான் பருகுவதற்கு முன் பருகுவதோ, தன் ஆசான் அமர்வதற்கு முன் அமர்வதோ, அதன் ஆசானை படுக்கைக்குச் செல்லும் முன் படுக்கச் செல்வதோ ஒருபோதும் கூடாது.(21) அவன் நிமிர்ந்த உள்ளங்கைகளைக் கொண்டு, தன் ஆசானின் வலக்காலை வலக்கையாலும், இடக்காலை இடக்கையாலும் மென்மையாகத் தீண்ட வேண்டும்.(22) மதிப்புடன் தன் ஆசானை வணங்கும் அவன், அவரிடம், "ஓ! சிறப்புமிக்கவரே, எனக்குக் கற்பிப்பீராக. ஓ! சிறப்புமிக்கவரே, நான் இதை (இந்தப் பணியைச்) செய்வேன். இஃது (இந்த வேலை) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. ஓ! மறுபிறப்பாளரே, மரியாதைக்குரிய நீர் விரும்பி இடும் எந்த ஆணையையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்" என்று சொல்ல வேண்டும்.(23) இவை அனைத்தையும் சொல்லி, (இவ்வாறு) முறையாகத் தன்னை அவரிடம் ஒப்படைக்கும் அவன், தன் ஆசான் செய்ய வேண்டிய எந்தச் செயலையும் செய்து, அவற்றைச் செய்த பிறகு, தன் ஆசானிடம் மீண்டும் ஒருமுறை அந்தச் செயல் முடிவடைந்ததைக் குறித்துச் சொல்ல வேண்டும்.(24) பிரம்மச்சரிய வாழ்வு முறையை நோற்கும்போது அந்தப் பிரம்மச்சாரியால் தவிர்க்கப்பட்ட மணங்கள் அல்லது சுவைகள் அனைத்தும், அவன் தன் ஆசானின் இல்லத்தில் இருந்து திரும்பிய பிறகு பயன்படுத்தப்படலாம். இது விதிக்கு இசைவானதே.(25)
(சாத்திரங்களில்) பிரம்மச்சாரிகளுக்கென விரிவாக விதிக்கப்பட்ட வழக்கங்கள் அனைத்தும் அவனால் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். மேலும் அவன் (அழைப்பிற்குத் தயாராகத்) தன் ஆசானின் அருகிலேயே எப்போதும் இருக்க வேண்டும்.(26) தன் சக்தியில் சிறந்த வகையில் தன் ஆசானின் நிறைவுக்கான பங்கை அளிக்கும் சீடனானவன், அந்த வாழ்வுமுறையில் இருந்து (ஒன்றன்பின் ஒன்றாக) அடுத்தடுத்த வாழ்வுமுறைகளை அதனதனுக்குரிய கடமைகளுடன் பயில வேண்டும்.(27) (இவ்வாறு) தான் வாழ்வின் நான்கில் ஒரு பகுதியை வேத கல்வியில் கடத்தி, நோன்புகள் மற்றும் உபவாசங்களை நோற்று, ஆசானுக்கு (இறுதி) கட்டணத்தைக் கொடுக்கும் சீடன், இல்லற வாழ்வு {கிருஹஸ்தனாக} வாழ விதிப்படி விடைபெற்றுக் கொண்டு வீடு திரும்ப வேண்டும்[7].(28) பிறகு, விதிப்படி மனைவிகளைப் பெற்று, கவனமாக இல்லற நெருப்பை நிறுவிக் கொள்ளும் அவன், எப்போதும் நோன்புகளையும் உபவாசங்களையும் கடைப்பிடித்து இல்லறவாசியாகி {கிருஹஸ்தனாகி} தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தைக் கடத்த வேண்டும்" என்றார் {வியாசர்}.(29)
[7] "பழங்காலத்தில் இந்த நாட்டில் கல்வி ஒருபோதும் விற்கப்பட்டதில்லை. இங்கே குறிப்பிடப்படும் இறுதிக் கட்டணம் என்பது ஆசானின் தொண்டுகளுக்கான கட்டணமாக இல்லாமல், சீடனின் நன்றிக்கடனுக்கான அடையாளமாகக் கொடுக்கப்படும். அதன் மதிப்பு சீடனின் திறனைச் சார்ந்ததாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 242ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |