The duties of a householder (Grihastha)! | Shanti-Parva-Section-243 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 70)
பதிவின் சுருக்கம் : கிருஹஸ்தாஸ்ரமத்தில் உள்ள நான் வகை விருத்திகள்; இல்லறத்தானின் கடமைகள்; விருந்தினர்கள் மேன்மை; விகஸம் மற்றும் அமுதம் போன்ற உணவுகள்; அவன் ஆதரிக்க வேண்டிய உற்றார் உறவினரால் அவனுக்குக் கிடைக்கும் வெற்றி; ஓர் இல்லறத்தான் அடையும் உயர்ந்த கதி ஆகியவற்றைச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "தகுதி {புண்ணியங்களைத்} தரும் நோன்புகளை நோற்கும் இல்லறத்தான், தன் வாழ்வின் இரண்டாம் கட்டத்தில், விதி குறிப்பிடும் வழிகளின்படி மனைவிகளை ஏற்று, (தனக்கான) நெருப்பை நிறுவி {அக்னியை ஆதானஞ்செய்து}, தன் இல்லத்தில் வசிக்க வேண்டும்.(1) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பொறுத்தவரையில், கல்விமான்களால் நான்கு வகை ஒழுக்கங்கள் {விருத்திகள்} விதிக்கப்பட்டுள்ளன. முதல் வகையானது, மூன்று வருடங்கள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களைக் கிடங்கில் வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும். இரண்டாவது, ஒரு வருடம் நீடிக்கும் கிடங்கை வைத்துக் கொள்வதைக் கொண்டதாகும்.(2) மூன்றாவது, நாளையைக் குறித்துச் சிந்திக்காமல் இன்றைக்கானதைக் கொள்வதைக் கொண்டதாகும். நான்காவது, புறாவின் முறைப்படி தானியங்களைச் சேகரிப்பதைக் கொண்டதாகும்[1]. இவை ஒவ்வொன்றிலும் தனக்கும் முந்தையதைவிடப் பிந்தையதே சாத்திர விதிப்படி தகுதி வாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[2].(3) முதல் வகை ஒழுக்கத்தைப் பயிலும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (தானே வேள்வி செய்வது, பிறருக்கு வேள்வி செய்து கொடுப்பது, கற்பிப்பது, கற்பது, கொடையளிப்பது, கொடையேற்பது ஆகிய) நன்கறியப்பட்ட ஆறு கடமைகளையும் செய்ய வேண்டும். இரண்டாம் வகை ஒழுக்கதை {விருத்தியைப்} பின்பற்றுபவன், இவற்றில் (கற்பது, கொடுப்பது, ஏற்பது ஆகிய) மூன்றை மட்டுமே செய்யலாம். மூன்றாம் வகை ஒழுக்கத்தை {விருத்தியைக்} கடைப்பிடிப்பவன் இல்லறக் கடமைகளில் (கற்பது, கொடுப்பது ஆகிய) இரண்டை மட்டுமே செய்யலாம். இல்லறத்தின் நான்காம் வகையைக் கடைப்பிடிக்கும் இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, (சாத்திரங்களைக் கற்பது என்ற) ஒரே ஒரு கடமையை மட்டுமே செய்ய வேண்டும்.(4) ஓர் இல்லறத்தானின் கடமைகள் அனைத்தும் மிகத் தகுதி வாய்ந்தவையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஓர் இல்லறத்தான் தன் பயன்பாட்டுக்காக மட்டுமே எந்த உணவையும் சமைக்கக்கூடாது; அதேபோல, வேள்விகளில் தவிர (உணவுக்காக) விலங்குகளைக் கொல்லவும் கூடாது[3].(5)
[1] " "காபோட்டி" Kaapoti என்றழைக்கப்படும் நான்காம் வகை ஒழுக்கமானது, உஞ்சம் {உஞ்சவிருத்தி} என்றும் அழைக்கப்படுகிறது. கதிர்களில் இருந்து உதிர்ந்தவையும், அறுவடை செய்வோரால் கைவிடப்பட்டவையுமான தானியங்களைச் சேகரித்து, அஃதை உண்டு வாழ்வதே இம்முறை ஒழுக்கம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இவ்வாறு பார்த்தால் இரண்டாவது வகை, முதல்வகையைவிடத் தகுதி வாய்ந்ததாகவும், மூன்றாவது இரண்டாவதை விடவும், நான்காவது மூன்றாவதை விடவும் தகுதி வாய்ந்ததாகவும் உள்ளன. எனவே, நான்காவது அல்லது இறுதியானதே தகுதியில் முதன்மையானது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "ஓர் இல்லறத்தான் தான் சமைத்த உணவில் ஒரு பங்கை ஒரு பிரம்மச்சாரிக்கோ, ஒரு யதிக்கோ, விருந்துக்காக வரும் எவருக்கோ கொடுக்க வேண்டும். அவன் அவ்வாறு செய்யாமல் சமைத்த உணவு மொத்தத்தையும் உண்டானெனில் அவன் ஒரு பிராமணனுக்கு உரியதை உண்டதாகக் கருதப்படுகிறான். உண்மையில், இஃது ஒரு மிகப்பெரிய பாவமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓர் இல்லறத்தான் (உணவுக்காக) ஒரு விலங்கைக் கொல்ல விரும்பினாலோ, (விறகுக்காக) ஒரு மரத்தை வெட்ட விரும்பினாலோ, அசையும் மற்றும் அசையாத இருப்புகளுக்கு முறையாக யஜுஸ்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி அவன் செயல்பட வேண்டும். ஓர் இல்லறத்தான் பகல் பொழுதிலோ, இரவின் முதல் பகுதியிலோ, இறுதிப் பகுதியிலோ உறங்கக்கூடாது[4].(6) காலை வேளைக்கும், மாலை வேளைக்கும் இடையில் அவன் ஒருபோதும் இருமுறை உண்ணக்கூடாது[5]. பருவகாலமின்றி அவன் தன் மனைவியை ஒருபோதும் படுக்கைக்கு அழைக்கக்கூடாது. அவனது வீட்டில் எந்தப் பிராமணனும் உணவு கொடுக்கப்படாமலோ, வழிபடப்படாமலோ துன்புறக்கூடாது.(7) அத்தகைய விருந்தினர்கள், வேள்விக் காணிக்கைகளை அளிப்பவர்களாகவும், வேதங்கள் மற்றும் சிறந்த நோன்புகளை நோற்பதன் மூலம் தூய்மையடைந்தவர்களாகவும், நற்பிறப்பு கொண்டவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும்,(8) தங்கள் வகைக்கான கடமைகளை நோற்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், அறச்சடங்குகள் அனைத்திலும் கவனம் கொண்டவர்களாகவும், தவங்களில் பற்றுள்ளவர்களாகவும் இருப்பதால் அவர்களை அவன் {இல்லறத்தான்} எப்போதும் வழிபட வேண்டும். வேள்விகளிலும், விருந்தினர்களுக்குத் தொண்டாற்றுவதற்காக உள்ள இது போன்ற அறச்சடங்குகளிலும் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கை அளிக்க வேண்டும்.(9) இந்த வாழ்வுமுறையில் {கிருஹஸ்தாஸ்ரமத்தில்}, (சமைக்கப்படும்) உணவின் ஒரு பகுதியை, (ஒருவனின் பிறப்பு அல்லது குணத்தை அலட்சியம் செய்துவிட்டு), வெளிப்பகட்டுக்காக நகங்களும், தாடியும் வளர்ப்பவன், செருக்குடன் தன் (அறப்) பயிற்சிகளை வெளிக்காட்டுபவன், முறையில்லாமல் தன் புனித நெருப்பைக் கைவிட்டவன், தன் குருவுக்கே தீங்கிழைத்தவன் என அனைத்து உயிரினங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன. இல்லற வாழ்வுமுறையைப் பின்பற்றுபவன், பிரம்மச்சாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் (உணவு) கொடுக்க வேண்டும்.(10,11)
[4] கும்பகோணம் பதிப்பில், "கிருஹஸ்தன் தனக்காகப் பாகஞ்செய்யக்கூடாது. வீணாகப் பசுவை ஹிம்ஸிக்கவுங்கூடாது. (பசு முதலான) பிராணியோ அல்லது (அரசு முதலான) ஸ்தாவரவிருக்ஷமோ (சேதன) மந்திரத்தால் ஸம்ஸ்காரத்திற்குத் தக்கவை" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "இல்லற தர்மம் மகத்தானதாகும். எனினும் ஒருவன் அவனுக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளக்கூடாது. காரணமின்றி {வேள்விகள ஏதுமின்றி} விலங்குகள் கொல்லப்படக்கூடாது. ஒரு விலங்கோ, அசைவற்ற ஒரு பொருளை வெட்டப்பட வேண்டுமென்றால், வேள்விக்குரிய விதிகள் பின்பற்றப்பட வேண்டும்" என்றிருக்கிறது.[5] கும்பகோணம் பதிப்பில், "ஒரு நாளும் பகலிலும், முன்னிரவிலும், பின்னிரவிலும் நித்திரை செய்யக்கூடாது. இரண்டு காலத்தின் மத்தியில் போஜனஞ்செய்யக்கூடாது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அவன் பகலிலோ, இரவின் முதல் மற்றும் இறுதிப் பகுதியிலோ உறங்கக்கூடாது. இடையில் அவன் உண்ணக்கூடாது. (காலை மற்றும் மாலை வேளையில் உண்பது பரிந்துரைக்கப்படுகிறது" என்று இருக்கிறது.
ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் விகஸம் உண்பவனாகவும், ஒவ்வொரு நாளும் அமுதத்தை உண்பவனாகவும் இருக்க வேண்டும். வேள்விகளில் காணிக்கையளிக்கப்படுவதில் எஞ்சுவதில் தெளிந்த நெய்யைக் கலந்த உணவு அமுதமாகும்[6].(12) (அனைத்து உறவினர்கள் மற்றும்) பணியாட்களுக்கு உணவளித்த பிறகு உண்ணும் இல்லறத்தான் விகஸம் உண்பவனாகச் சொல்லப்படுகிறான். பணியாட்களுக்கு உணவளித்த பிறகு எஞ்சும் உணவே விகஸம் என்றழைக்கப்படுகிறது. வேள்விக் காணிக்கைகளை அளித்த பிறகு எஞ்சுபவை அமுதம் என்றழைக்கப்படுகிறது.(13) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் ஒருவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே மனநிறைவுடன் இருக்க வேண்டும். அவன் தற்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவன் வன்மத்தைத் தவிர்த்து, புலன்களை அடக்கிக் கொள்ள வேண்டும்.(14)
[6] ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இல்லத்திலும் செய்யப்படும் சமையலே வேள்விதான். அனைத்து உயிரினங்களுக்கும் அதைப் பகிர்ந்து கொடுப்பது வேள்விக்கொடையாகும். அந்த வேள்வியில் எஞ்சும் உணவில் நெய் கலந்து உண்பது அமுதமாகும் என இங்கே சொல்லப்படுவதாகத் தெரிகிறது.
அவன், ரித்விக், புரோகிதர், ஆசான், தாய்மாமன், விருந்தினர்கள், முதியோர் மற்றும் வயதில் இளையோராகத் தன்னைச் சார்ந்திருப்பவர்கள், நோயால் பீடிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், பெற்றோர், தந்தைவழி குடும்பத்தில் வந்த பெண்கள், உடன்பிறந்தான், மகன், மனைவி, மகள் மற்றும் தன் பணியாட்களுடன் ஒருபோதும் சச்சரவில் ஈடுபடக்கூடாது.(15,16) சச்சரவுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஓர் இல்லறத்தான் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். அத்தகைய சச்சரவுகளை வெல்வதன் மூலம் அவன், (இம்மைக்குப் பின்பான மறுமையில்) இன்ப உலகங்கள் அனைத்தையும் வெல்வான். இதில் எந்த ஐயமும் கிடையாது[7].(17) ஆசானானவர் (முறையாக மதிக்கப்பட்டால்) பிரம்மலோகத்திற்கே வழிகாட்டக் கூடியவராவார். தந்தையானவர் (மதிக்கப்பட்டால்) பிரஜாபதியின் உலகங்களுக்கு வழிகாட்டக் கூடியவராவார். ஒரு விருந்தினர், இந்திலோகத்திற்கு வழிகாட்டக்கூடிய பலம் கொண்டவராவார். தேவலோத்தைப் பொறுத்தவரையில் ஒரு ரித்விக்குக்கு அந்தச் சக்தியுண்டு. தந்தைவழி வந்த பெண் உறவினர்களுக்கு, அப்சரஸ்களின் உலக முகரிமை {தலைமை} உண்டு. (குருதியின் மூலமான) உற்ற சொந்தங்களுக்கு விஸ்வதேவர்களின் உலக முகரிமை உண்டு.(18) திருமணத்தின் மூலம் உண்டான உறவினர்கள் மற்றும் இணை உறவினர்களுக்கு {தூரத்து சொந்தங்களுக்கு} (வடக்கு உள்ளிட்ட) பல்வேறு திசைகளிலும், தாய் மற்றும் தாய்மாமனுக்கு உலகிலும் முகரிமை {தலைமை} உண்டு. முதிர்ந்தோர், இளையோர், துன்புறுவோர், வீணானோர் ஆகியோருக்கு வானத்தில் சக்தியுண்டு[8].(19)
[7] "மரபுரிமை பங்குகளின் நிமித்தம் சச்சரவுகள் நிகழும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலேயே உற்றார் உறவினர் என்ற பெயர் வந்ததாக உரையாசிரியர் அனுமானிக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[8] "இங்கே பொருள் என்னவென்றால்: இந்தப் பல்வேறு மனிதர்களும் ஓர் இல்லறத்தானால் முறையாக மதிக்கப்பட்டால், அவர்களால் மேற்குறிப்பிட்ட இடங்களுக்கும், வசதியான பிற இடங்களுக்கும் வழிகாட்ட இயன்றவர்களாக இருப்பார்கள் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மூத்த தமையன் (தனக்கு இளைய தம்பிகள் அனைவருக்கும்) தந்தையைப் போன்றவனே ஆவான். மனைவியும், மகனும் ஒருவனின் சொந்த உடலே ஆவர். பணியாட்கள் தன் நிழலே ஆவர். மகளானவள் பெரும் அன்புக்குரியவளாவாள்.(20) கல்விமானும், கடமைகளை நோற்பவனும், நீடித்திருக்கும் திறன் கொண்டவனுமான ஓர் இல்லறத்தான், இறுதியாகப் பெயர் குறிப்பிடப்பட்ட உறவினர்களைப் பொறுத்தவரையில், அவர்களே தன்னை நிந்தித்தாலும் இந்தக் காரணங்களினால் இதயத்தில் கவலையையோ வருத்தமோ அடையாமல் அவர்களை அவன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(21) அறம்சார்ந்த எந்த இல்லறத்தானும், செல்வத்தைக் கருத்தில் கொண்டு அத்தூண்டுதலின் பேரில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. இல்லற வாழ்வைப் பொறுத்தவரையில் கடமை வழிமுறைகள் மூன்று இருக்கின்றன. அவற்றில் (பட்டியல் வரிசையில்) அடுத்தடுத்து வருவது, அதனதற்கு முந்தையதைவிடப் பெரிதும் தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}[9].(22) (அடிப்படையான) நான்கு வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைப்} பொறுத்தவரையிலும் கூட, பிந்தி வருவது முந்தையதைவிட மேன்மையானது என்ற இதே தகுவிதி பின்பற்றப்படுகிறது. (அதன்படியே, பிரம்மச்சரியத்தை விட இல்லறம் மேன்மையானது, இல்லறத்தைவிட வானப்பிரஸ்தம் மேன்மையானது, வானப்பிரஸ்தத்தைவிடப் பிச்சையெடுத்து வாழ்வது, அல்லது முற்றிலும் துறவு கொண்டு வாழ்வது மேன்மையானது).(23) செழிப்பில் விருப்பமுள்ளவன், அந்தந்த வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் சாத்திரங்கள் விதித்திருக்கும் கடமைகள் மற்றும் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.(24)
[9] "2 மற்றும் 3ம் ஸ்லோகங்களில் சொல்லப்பட்டுள்ள நான்கு வகை விருத்திகளில் முதல்வகை, அல்லது குசலதான்யம் kucaladhaanya என்பது இங்கே விடப்படுகிறது. கும்பதான்யம், அஸ்வதனம் (அல்லது உஞ்சசீலம்) மற்றும் காபோடி ஆகியவை பிற மூன்று வகைகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
கும்பதானிய வகை, உஞ்ச வகை மற்றும் காபோடி வகைகளின் படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு இல்லறவாழ்வை வாழும் உயர்ந்த தகுதியுடையவர்கள் வாழும் நாடு செழிப்பில் வளரும்[10].(25) எந்த மனிதன் அக்கடமைகளை நோற்று இல்லற வாழ்வை உற்சாகமாக வாழ்கிறானோ அவன் தனக்கு முந்தைய பத்துத் தலைமுறை மூதாதையர்களையும், தனக்குப் பிந்தைய பத்துத் தலைமுறை வழித்தோன்றல்களையும் புனிதப்படுத்துகிறான்.(26) ஓர் இல்லறத்தான் தன் இல்லறக் கடமைகளை முறையாக நோற்பதன் மூலம், பெரும் மன்னர்களும், பேரரசர்களும் அடையும் உலகங்களுக்கு இணையான இன்பத்தை விளைவிக்கும் கதியை அடைகிறான். புலன்களை அடக்கியவர்களுக்கும் இதே கதியே விதிக்கப்பட்டிருக்கிறது.(27) உயர் ஆன்மா கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கமானது விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சொர்க்கமானது, (செலுத்துபவனின் விருப்பப்படி நகரும்) இனிமை நிறைந்த தேர்களைக் கொண்டதாக இருக்கிறது. அதுவே வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இனிமைநிறைந்த சொர்க்கமாகும்.(28) கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்ட இல்லறத்தார் அனைவருக்கும் சொர்க்கலோகமே உயர்ந்த வெகுமதியாக இருக்கிறது.(29) சுயம்புவான பிரம்மன் இல்லற வாழ்வுமுறையே சொர்க்கத்தை உண்டாக்கும் காரணமாக இருக்க வேண்டும் என்று விதித்திருக்கிறான். இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பதால், படிப்படியாக இரண்டாம் வாழ்வுமுறையை அடையும் மனிதன் சொர்க்கத்தில் இன்பத்தையும், மதிப்பையும் அடைகிறான்.(30) இதன்பிறகு, தங்கள் உடல்களைக் கைவிட விரும்புவோருக்காக, உயர்ந்ததும், மேன்மையானதுமான மூன்றாவது என்றழைக்கப்படும் வாழ்வுமுறை {வானப்பிரஸ்தாஸ்ரமம்} வருகிறது. (பல்வேறு வகைத் தவங்களின் மூலம்) தங்கள் உடல்களைக் காய்ந்த தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளாகக் குறைத்துக் கொள்ளும் வானப்பிரஸ்த வாழ்வுமுறையானது, இல்லறத்தைவிட {கிருஹஸ்தாஸ்ரமத்தைவிட} மேன்மையானதாகும். அதைக் குறித்துச் சொல்கிறேன் கேட்பாயாக" என்றார் {வியாசர்}".(31)
[10] கும்பகோணம் பதிப்பில், "கும்பத்தில் தானியுள்ளவர்களும், உஞ்சசிலமென்னும் ஒவ்வொருநாள் விருத்தியை உடையவர்களும், புறாவின் விருத்தியை அடைந்தவர்களுமான பூஜிக்கத்தக்க இவர்கள் எந்த ராஜ்யத்தில் வஸிக்கிறார்களோ அந்த ராஜ்யம் மிகவுஞ் செழிப்புள்ளதாகும்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 243ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |