The duties of a forest recluse (Vanaprastha)! | Shanti-Parva-Section-244 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 71)
பதிவின் சுருக்கம் : காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; வானப்ரஸ்த வாழ்வுமுறையைப் பின்பற்றி வெற்றி கண்ட முனிவர்களின் பட்டியல்; நான்காவது வாழ்வுமுறையான துறவறத்தைப் பின்பற்ற வேண்டிய வேளை ஆகியவற்றைக் குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நல்லோரால் விதிக்கப்பட்ட இல்லறவிதிகள் உனக்குச் சொல்லப்பட்டது. ஓ! யுதிஷ்டிரா, அடுத்ததாகச் சொல்லப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது கேட்பாயாக.(1) ஒருவன் படிப்படியாக இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைக்} கைவிட்டு, சிறந்ததான மூன்றாம் வாழ்வு முறைக்குள் நுழைய வேண்டும். தவங்களின் மூலம் தங்களைத் துன்புறுத்திக் கொண்டு, மனைவியரோடு சேர்ந்து வாழும் மனிதர்களுக்குச் சொந்தமானதே இந்த வாழ்வுமுறை {ஆசிரமம்} ஆகும். காட்டில் ஒதுங்கி வாழ்வோரால் {வானப்ரஸ்தர்களால்} பயிலப்படுவதே இந்த வாழ்வுமுறையாகும்.(2) ஓ! மகனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களின் நடைமுறைகளையும் {ஒழுக்கங்களையும்}, அனைத்து வாழ்வுமுறைகளையும் {ஆசிரமங்களையும்} சந்திக்க நேரும் இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களால் நோற்கப்படும் கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக. உண்மையில், புனிதத்தலங்களில் வசிப்போருக்கும், உரிய ஆலோசனைக்குப் பிறகு இந்த வாழ்வுமுறையில் வாழ்பவர்களுக்குமான கடமைகளைக் குறித்துக் கேட்பாயாக.(3)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஓர் இல்லறத்தான் தன் உடலில் சுருக்கங்களையும், தன் தலையில் நரைத்த முடியையும், தன் பிள்ளைகளின் பிள்ளைகளையும் {பேரர்களையும்} கண்ட பிறகு காட்டில் ஓயச் செல்ல வேண்டும்.(4) அவன், தன் வாழ்வின் மூன்றாம் பாகத்தை வானப்ரஸ்த வாழ்வுமுறையை நோற்பதில் கடத்த வேண்டும். அவன் இல்லறத்தானாக இருந்தபோது, கவனித்த {பராமரித்த ஹோம} நெருப்புகளை இப்போதும் கவனிக்க வேண்டும். வேள்வி செய்ய விரும்பும் அவன், (சடங்குகளின் விதிப்படி) தேவர்களைத் துதிக்க வேண்டும்.(5) நோன்புகளை நோற்று, எளிய உணவை உண்ணும் அவன், நாளின் ஆறாம் பாகத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே உண்ண வேண்டும்[1]. அவன் எப்போதும் கவனம் நிறைந்தவனாக இருக்கவேண்டும். தன் நெருப்புகளைக் கவனித்துக் கொள்ளும் {பராமரிக்கும்} அவன், சில பசுக்களையும் வைத்துக் கொண்டு, கடமை உணர்வுடன் அவற்றைப் பராமரிக்க வேண்டும்[2]. வேள்விச் சடங்குகள் அனைத்திலும் அவன் கவனமாக இருக்க வேண்டும்.(6) தான் இருக்கும் பகுதியில் (எவரின் உடைமையாகவும் இல்லாமல்) {உழவின்றி} தானாக விளையும் அரிசி, கோதுமை மற்றும் பிற வகைத் தானியங்களிலேயே அவன் வாழ வேண்டும். விருந்தினர்களுக்கு உணவூட்டிய பிறகு, எஞ்சுவதையே அவன் உண்ண வேண்டும். இந்த மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்}, அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக அளிக்க வேண்டும்[3].(7)
[1] ஒரு நாள் என்பது அறுபது நாழிகைகளைக் கொண்டது. அதில் பகல் முப்பது நாழிகை, இரவு முப்பது நாழிகை. இங்கே குறிப்பிடப்படும் காலமானது "பகல் பதினெட்டே முக்கால் நாழிகைக்கு மேல்" என்று கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில் இது மாலை வேளை என்று {மட்டும்} இருக்கிறது.[2] "பசுவானது ஒரு புனித விலங்காகும். ஒரு பசுவுக்கு உணவூட்டி, அதை முறையாக வளர்ப்பதில் தகுதி {புண்ணியம் இருக்கிறது}. தகுதிக்காகவும் {புண்ணியத்துக்காகவும்}, அவற்றில் இருந்து பெறப்படும் நெய்யின் மூலம் செய்யப்படும் ஹோமம் அல்லது வேள்விக்காகவும் காட்டில் ஒதுங்கி வாழ்வோர் {வானப்ரஸ்தர்கள்} பசுக்களைப் பராமரித்து வந்தனர். வசிஷ்டரின் பசுக்கதை நன்கறியப்பட்ட ஒரு கதையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "அக்னிஹோத்ரம், தர்சபூர்ணமாஷி, சதுர்மாஸ்யம், பசு வேள்வி மற்றும் சோம வேள்வி என்ற ஐந்து வேள்விகளே அவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வானப்ரஸ்த வாழ்வுமுறைக்கென்று நான்கு வகை ஒழுக்க நெறிகள் விதிக்கப்பட்டுள்ளன. சிலர் அந்த நாளுக்குத் தேவையானதை மட்டுமே திரட்டுகின்றனர். சிலர் ஒரு மாதம் நீடிக்கும் அளவுக்குத் திரட்டிச் சேமிக்கின்றனர்.(8) {சிலர் ஓராண்டு நீடிக்கும் அளவுக்குப் போதுமானவற்றைச் சேமிக்கின்றனர்}[4]. சிலர் பனிரெண்டு ஆண்டுகள் நீடிக்கும் அளவுக்குப் போதுமான தானியங்களையும், தேவையான பிற பொருட்களையும் சேகரிக்கின்றனர். காட்டில் ஒதுங்கி வாழ்பவர்கள் {வானப்ரஸ்தர்கள்}, விருந்தினர்களை வழிபடவும், வேள்விகளைச் செய்யவும் இவ்வழிமுறைகளில் செயல்படலாம்.(9) அவர்கள், மழைக்காலங்களில் தங்களை மழைக்கு வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும், கூதிர் காலத்தில் {பனிக்காலத்தில்} நீரில் மூழ்க வேண்டும். வேனிற்காலத்தில் அவர்கள் தலைக்கு மேலே சூரியன் சுட்டெரிக்க நான்கு நெருப்புகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்க வேண்டும். எனினும், வருடம் முழுவதும் அவர்கள் உணவில் எளிமையானவர்களாகவே இருக்க வேண்டும்.(10) அவர்கள் வெறுந்தரையிலேயே அமரவும், உறங்கவும் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் கால் கட்டைவிரல்களில் {கால் நுனிகளில்} மட்டுமே நிற்கிறார்கள். (வேறு எந்த இருக்கையோ, படுக்கையோ கொள்ளாமல்) வெறுந்தரை மற்றும் சிறிய புல் விரிப்பிலேயே நிறைவடைபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் காலை, நடுப்பகல் மற்றும் மாலை வேளைகளில் (வேள்விக்குத் தயாராவதற்கான) தங்கள் தூய்மைச் சடங்குகளைச் செய்கிறார்கள்.(11)
[4] கும்பகோணம் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் உள்ள இவ்வரி கங்குலியில் இல்லை. இருப்பினும் இந்த வரி இல்லையென்றால் நான்கு வகை என்பதன் பட்டியல் நிறைவடையாது.
அவர்கள் தானியங்களைத் தூய்மையாக்க தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். வேறு சிலர் அக்காரியத்திற்குக் கற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்[5]. அவர்களில் சிலர், மிதமாகக் கொதிக்க வைக்கப்பட்ட கோதுமை (அல்லது பிற தானியக்) கஞ்சியை வளர்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள்.(12) வேறு சிலர் அதே போன்ற கஞ்சியைத் தேய்பிறையில் மட்டுமே குடிக்கிறார்கள். சிலர் (எதையும் அடைய நாடாமல்) தானாக வருவதை மட்டுமே உண்கிறார்கள். கடும் நோன்புகளைப் பின்பற்றும் சிலர் கிழங்குகளை மட்டுமே, சிலர் கனிகளை மட்டுமே, சிலர் மலர்களை மட்டுமே உண்டு, வைகானசர்களால் பின்பற்றப்படும் வழிமுறையை முறையாக நோற்கிறார்கள்.(13) விவேகமும், பக்தியும் கொண்ட மனிதர்களால் இவையும் இன்னும் பல்வேறு நோன்புகளும் பின்பற்றப்படுகின்றன. (துறவறம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையான) நான்காவது உபநிஷத்துகளின் அடிப்படையிலானதாகும்.(14) அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கடமைகள் சமமாக அனைத்து வாழ்வுமுறைகளிலும் நோற்கப்படலாம். பிறவற்றில் இருந்து வேறுபட்ட இந்த முறை, இல்லறம் மற்றும் காட்டுவாழ்வு ஆகியவற்றுக்குப் பிறகு வருகிறது.(15)
[5] "முறைப்படி உரலையோ, தானியத்தைச் சார்ந்த தூய்மைப்படுத்தும் கருவியைப் பயன்படுத்தாமலோ அவற்றை உணவாகப் பயன்படுத்துவார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மகனே {சுகரே}, இந்த யுகத்திலேயே கூட, அனைத்துப் பொருட்களின் உண்மைகளை அறிந்தவர்களும், கல்விமான்களுமான பல பிராமணர்கள் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றியதாக அறியப்படுகிறார்கள். அகஸ்தியர், {சப்தரிஷிகளான அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், வசிஷ்டர், நாரதர் மற்றும் கிரது ஆகிய} ஏழு முனிவர்கள், மதுச்சந்தர், அகமர்ஷணர்,(16) ஸாங்கிருதி, விரும்பிய எங்கும் வசித்தவரும், (எதையும் நாடிப் பெறாமல்) தானாக வந்ததை எடுத்துக் கொண்டவருமான {யதாவாஸரும், அக்ருதஸ்ரமருமான} சுதிவாதண்டி[6], அஹோவீர்யர், காவ்யர், தாண்டியர், கல்விமானான மேதாதி,(17) வலிமையும் சக்தியும் கொண்டவரான {புதரும், பலவானுமான} கர்மநிர்வாஹர், தவ வலிமையைப் பெறுவதற்காகப்) பெரிதும் முயற்சி செய்தவரான {கிருதஸ்ரமரான} சூன்யபாலர் ஆகியோர் அனைவரும் இந்தக் கடமை நடைமுறைகளின் ஆசான்களாகவும், அவற்றைப் பின்பற்றிச் சொர்க்கத்தை அடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(18) ஓ! மகனே, தங்கள் தவத்தகுதியின் கனிகளை உடனே காணும் பலம் கொண்ட பெரும் முனிவர்கள் பலர்[7], யாயாவரர்கள் என்ற பெயரில் அறியப்படும் எண்ணற்ற தவசிகள், கடமைகளின் வேறுபாடுகளைக் குறித்த துல்லிய அறிவைக் கொண்டவர்களும் மிகக்கடுமையான தவங்களைச் செய்தவர்களுமான முனிவர்கள் பலர்,(19) குறிப்பிட எண்ணற்றவர்களாக இருக்கும் வேறு பிராமணர்கள் பலர் ஆகியோர் காட்டு வாழ்வுமுறையை {வானப்ரஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றினர். கடுந்தவங்களில் அர்ப்பணிப்புள்ளவர்களும், அறத்தில் நிலையுறுதியுடன் கூடியவர்களும், புலன்களை அடக்கியவர்களும், தங்கள் தவங்களின் கனிகளை உடனே காண வல்லவர்களுமான வைகானஸர்கள், வாலகில்யர்கள், சைகதர்கள் ஆகியோர் அனைவரும் இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றி இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(21)
[6] "அதாவது, நிலையான வசிப்பிடம் ஏதும் இல்லாமல், வாழ்வுக்குத் தேவையான எதற்காகவும் ஒருபோதும் முயற்சி செய்யாமல் இருப்பவர் என்பது பொருள். பர்துவான் மொழிபெயர்ப்பாளர் "யதாவாஸர், அக்ருதஸ்ரமர் என்ற இரண்டு வார்த்தைகளை, சுதிவாதண்டி முனிவரின் பெயருக்கான உரிச்சொற்களாக எடுத்துக் கொள்ளாமல், தனித் தனி முனிவர்களின் தனிப்பெயர்களாகவே எடுத்துக் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் மேற்சொன்னவாறு தனித்தனி பெயர்களாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் போகக் கர்மநிர்வாஹர் மற்றும் சூன்ய பாலருக்குமிடையில் மூன்று பெயர்கள் தனித்தனி பெயர்களாக வருகின்றன.[7] "அதாவது, தங்கள் விருப்பங்களான அருள் மற்றும் சாபங்கள் என்ற இரண்டைப் பொறுத்தவரையிலும் உடனே வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாக, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களுக்கிடையில் கணக்கிடப்படாமல் உள்ள அவர்கள், ஆகாயத்தில் ஒளியுடல்களாகத் தெரிகின்றனர். வாழ்வின் நான்காவது அல்லது இறுதிப் பகுதியை அடைந்ததும், முதுமையால் பலவீனமடைந்து, நோயால் பீடிக்கப்பட்ட ஒருவன் (துறவறம் என்றழைக்கப்படும் நான்காம் முறைக்காக) காட்டு வாழ்வு முறையைக் கைவிட வேண்டும். அவன், ஒரே நாளில் நிறைவடையக்கூடியதும், தனது உடைமைகள் அனைத்தையும் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டிய நிகழ்வுமான ஒரு வேள்வியைச் செய்து,(22,23) தன் ஸ்ராத்தத்தையும் செய்ய வேண்டும். அனைத்துப் பொருள்களில் இருந்து விலகும் அவன், தன்னிடம் மட்டுமே அர்ப்பணிப்புக் கொண்டு, தன்னில் மட்டுமே இன்பமடைந்து, தன்னிடமே ஓய்வு கொள்ள வேண்டும்[8]. அவன் (அதுமுதல்) தன் வேள்வி நெருப்புகள் அனைத்தையும் தன்னிலேயே நிறுவி, அனைத்து வகைப் பற்று மற்றும் பந்தங்களைக் கைவிட வேண்டும்.(24) (ஒருவேளை முற்றான துறவை அடையத் தவறினால்) அவன் ஒரே நாளில் நிறைவடையக்கூடிய அத்தகைய வேள்விகளையும், சடங்குகளையும் எப்போதும் செய்ய வேண்டும்[9]. எனினும், வேள்வி செய்பவர்களின் (பொதுவான) வேள்விகளைச் செய்யும்போது அதிலிருந்து சுய வேள்வி பிறந்தால்,(25) அப்போது (அவன் பொதுவான அனைத்து வேள்விகள் செய்வதையும் தொடராமல்) தன் விடுதலையின் {முக்தியின்} நிமித்தமாக, தன் சுயத்தையே மூன்று நெருப்புகளில் வேள்வி {தியாகம்} செய்யலாம்[10]. அவன், தன் உணவில் குறை காணாமல், (ஒவ்வொரு முறையும் நன்கறியப்பட்ட) யஜுர்வேத மந்திரங்களைச் சொல்லி, அஃதை {அந்த உணவை} ஐந்து அல்லது ஆறு வாய்நிறைய {கவளம்} உண்டு, அவற்றை முறையாக ஐந்து உயிர் காற்றுகளுக்குக் காணிக்கையாக்க வேண்டும்[11].(26)
[8] "ஆத்மயாஜி Atmayaaji என்பது தன் சொந்த சிராத்தம் அல்லது ஈமச் சடங்குகளை ஒருவன் செய்து கொள்வது என்று விளக்கப்படுகிறது. ஆர்ஷம் aarshaa என்பது அடுத்தச் சொல்லில் வரும் சந்தியாகும்; ஆத்மகிருதம் aatmakrida என்பது மனைவி அல்லது பிள்ளைகளிடம் இன்பங்கொள்ளாமல் தன்னிடமே இன்பம் கொள்வதாகும்; அதேபோலவே, ஆத்மாஸ்ரயம் aatmacraya என்பது மன்னர்களைச் சார்ந்திராதவர்கள், அல்லது எவரிடமும் புகலிடம் கொள்ளாதவர்கள் என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லாப் பொருள்களையும் தக்ஷிணையாகக் கொண்டதும் (ஒரு நாளில் முடிக்கக்கூடியதுமான) ஸத்யஸ்காரம் (பிராஜாபத்யம் அல்லது த்ரைதாதவி) என்னும் இஷ்டியைச் செய்துவிட்டு, ஸ்திரீ முதலான யாவரையும் தியாகம் பண்ணி அக்கினிகளை ஆத்மாவில் ஸமாரோபணஞ்செய்துவக் கொண்டு ஜீவஸ்ராத்தம் முதலானவைகளைச் செய்து ஆத்மாவில் பற்றுதலுள்ளவனும், ஆத்மாவில் க்ரீடையுள்ளவனும் ஆத்மாவை ஆஸ்ரயித்தவனுமாயிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.[9] "அத்தகைய வேள்விகளாவன, உதாரணத்திற்குப் பிரம்ம யாகம் என்றழைக்கப்படுபவை முதலியவையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] "யாஜினாம் யக்ஞம் Yaajinaam yajna என்பது தேவர்களுக்குக் காணிக்கையளித்து வேத மந்திரங்களின் துணையுடன் செய்யப்படும் வேள்வியாகும். சுய வேள்வி என்பது யோகமாகும். எனவே, முதல் வரியின் பொருள் என்பது, "பொதுவான வேள்விகளையும் சடங்குகளையும் செய்யும்போது, மனம் தூய்மையடைந்து, அந்த வேள்வியைச் செய்பவர் யோகம் பயில இயன்றவராவது" ஆகும். "அவன் தன்னிலேயே மூன்று நெருப்புகளைக் கொண்டு முறையாக வேள்வி செய்ய வேண்டும்" என்பது, உண்மையாக மந்திரங்களைச் சொல்லாமலும், நெருப்பைத் துதித்துக் காணப்படும் சடங்குகளைச் செய்யாமலும் அவன் தன் முக்திக்காகத் தன்னையே வழிபட்டு, மனத்தின் அழிவையும், யோக புத்தியையும் நாட வேண்டும் என்பதே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[11] "இந்த நாள் வரையில், மரபுவழுவாத பிராமணன், அல்லது க்ஷத்திரியன், அல்லது வைசியன் ஆனவன், பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகிய ஐந்து முக்கிய உயிர்மூச்சுகளுக்குச் சிறிய அளவில் ஐந்து வாய்நிறைய காணிக்கையளிக்கமால் ஒருபோதும் உண்பதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காட்டில் ஒதுங்கி வாழும் வாழ்வைப் பின்பற்றும்போது, தவம் நோற்பதில் ஈடுபடும் ஒருவன், தன் தலைமுடி, உடலில் உள்ள மயிர் ஆகியவற்றைச் சிரைத்து, தன் நகங்களை உரித்து, செயல்களின் மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் புனிதம் நிறைந்த நான்காம் மற்றும் இறுதியான வாழ்வுமுறைக்குள் {ஸந்நியாச ஆசிரமத்திற்குள் / துறவறத்திற்குள்} கடந்து செல்ல வேண்டும்.(27) நான்காம் வாழ்வுமுறைக்குள் நுழையும் மறுபிறப்பாளன், அனைத்து உயிரினங்களுக்கும் (அபயமளிக்கும் {தீங்கிழையாமை / அஹிம்சை என்ற}) உறுதிமொழியைக் கொடுத்து, மறுமையில் சுடர்மிக்க ஒளியுலகங்கள் பலவற்றை ஈட்டுவதில் வென்று, இறுதியாக முடிவிலியை அடைகிறான்.(28) பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டு, சிறந்த மனநிலையையும், ஒழுக்கத்தையும் கொண்டவனும், தன்னை அறிந்தவனுமான மனிதன், இம்மைக்கோ மறுமைக்கோ தேவையான எந்தச் செயலையும் செய்ய ஒருபோதும் விரும்பமாட்டான். கோபமில்லாதவனாக, பிழை தவிர்த்தவனாக, கவலை மற்றும் நட்பில்லாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், இவ்வுலகக் காரியங்களில் முற்றாக எந்த விருப்பமும் இல்லாத ஒருவனைப் போல வாழ்கிறான்.(29) (சந்நியாசத்தை நோற்கும்) ஒருவன், யமம், மற்றும் அவற்றுக்குப் பின்னே நடக்கும் (நியமத்திலடங்கிய) கடமைகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டக்கூடாது. அத்தகைய ஒருவன், தன் வாழ்வுமுறைக்கான விதியின் படி வாழ்ந்து, வேத கல்வியையும், தன் பிறப்பின் வகையைக் குறிக்கும் புனித நூலையும் சக்தியுடன் வீசியெறிய வேண்டும். அறத்திற்கு அர்ப்பணிப்புடனும், முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள புலன்களுடனும் கூடியவனும், தன்னறிவைக் கொண்டவனுமான அவன், தான் அடைய விரும்பும் கதியை ஐயமற அடைகிறான்[12].(30) இது மூன்றாம் வாழ்வுமுறைக்கு {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்குப்} பிறகு வரும் நான்காவது வாழ்வுமுறையாகும் {சந்நியாசாஸ்ரமமாகும்}. இது மிக மேன்மையானதும், எண்ணற்ற உயர்ந்த அறங்கள் நிறைந்ததுமாகும். மற்ற மூன்று வகை வாழ்வுமுறைகளில் உள்ள தகுதியில் இஃது அவற்றை விஞ்சியிருக்கிறது. இதுவே மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதாகச் சொல்லப்படுகிறது. அறிவொழுக்கத்தில் சிறந்ததும், அனைவருக்கும் உயர்ந்த புகலிடமாக இருப்பதுமான அந்த வாழ்வுமுறைக்குரிய கடமைகளைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக" என்றார் {வியாசர்}.(31)
[12] "(உரையாசிரியர் விளக்குவதைப் போல) யமத்தில் உள்ள கடமைகளாவன, உலகளாவிய நன்மை, வாய்மை, நம்பிக்கை, பிரம்மச்சரியம், பற்றிலிருந்து விடுதலை ஆகியனவாகும். நியமத்தில் உள்ள கடமைகளாவன, (உடல் மற்றும் மனத்) தூய்மை, மனநிறைவு, வேத கல்வி, பரமாத்ம தியானம் ஆகியனவாகும். ஸ்வசாஸ்திர சூத்திரம் Swacaastra sutra என்பது சொந்த சாத்திரங்களின் சூத்திரங்கள், அதாவது தான் பின்பற்றும் சந்நியாசத்தைப் பொறுத்தவரையில் விதிக்கப்பட்ட கடமைகள் என்பதாகும்; அதில் முக்கியமானது ஆத்ம அல்லது சுய விசாரணையாகும்; பூதிமந்தம் Bhutimanta என்பது வேதம் உரைப்பதையும், புனித நூலையும் குறிக்கும். சன்னியாசத்தைக் கைக்கொண்டவன், விடாத ஆன்ம விசாரணை செய்து, வர்ணத்தைக் குறிக்கும் அடையாளங்கள் மற்றும் பிற குறியீடுகள் அனைத்தையும் வீசியெறிவதில் தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டும். "விரும்பத்தக்க கதி" என்பது உண்மையில் உடனே அடையப்படும் அல்லது படிப்படியாக அடையப்படும் விடுதலை அல்லது முக்தியே ஆகும். கும்பகோணம் பதிப்பில், "யதியானவன், தனக்குரிய வேதம், ஸூத்ரம், ஹோமம், மந்திரம் இவைகளில் சக்தியுடன் நித்தியமாய் நடந்து வருகிற யம முதலிய யோகங்களில் மனவருத்தமடையக்கூடாது. அப்படிப்பட்ட ஆத்ம யோகிக்கு இஷ்டப்படி கதி கிடைக்கும்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 244ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |