The duties of a mendicant (Sannyasa)! | Shanti-Parva-Section-245 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 72)
பதிவின் சுருக்கம் : சன்னியாச வாழ்வுமுறைக்கான நடைமுறைகள், உணவுப் பழக்கங்கள், கடமைகள், கட்டுப்பாடுகள்; மறுபிறப்பாளர்களும், பிராமணர்களும் யார் என்பது குறித்துச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "காட்டு வாழ்வுமுறையின் கடமைகளை நோற்று வாழும்போது, உயர்ந்த ஞானப்பொருளை அடைய முனையும் ஒருவன், எவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்கு, யோகத்தில் தன் ஆன்மாவை நிறுவிக் கொள்ள முடியும்?" என்று கேட்டார்.(1)
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "பிரம்மச்சரியம் மற்றும் இல்லறம் என்ற முதல் இரண்டு வாழ்வுமுறைகளைச் செய்வதன் மூலம் (உடலும் ஒழுக்கமும்) தூய்மையடைந்த ஒருவன், அதன் பிறகு வரும் மூன்றாம் வாழ்வு முறையில் {வானப்ரஸ்தாஸ்ரமத்தில்} யோகத்தில் தனது ஆத்மாவை நிறுவிக் கொள்ள வேண்டும். உயர்ந்த இலக்கை உடைமையாக அடைவதற்குச் செய்ய வேண்டியதைக் குவிந்த கவனத்துடன் இப்போது கேட்பாயாக.(2) மனம் அல்லது இதயத்தின் களங்கங்கள் அனைத்தையும் முதலில் சொல்லப்பட்ட (பிரம்மச்சரியம், இல்லறம் {கிருஹஸ்தம்}, காட்டறம் {வானப்ரஸ்தம்} என்ற) மூன்று வாழ்வு முறைகளின் நடைமுறையெனும் எளிய வழிமுறைகளில் அடக்கி, அனைத்து வாழ்வுமுறைகளிலும் மிகச் சிறந்ததும், மிக மேம்பட்டதுமான சந்நியாசம் அல்லது துறவறத்திற்குச் செல்ல வேண்டும்.(3) அவ்வாறாகத் தூய்மையை அடைந்து, நீ உன் நாட்களைக் கடத்துவாயாக. நான் சொல்வதைக் கேட்பாயாக. ஒருவன், தனக்கு உதவி செய்யவோ, தனக்குத் துணை புரியவோ ஒருவரும் இல்லாமல், (அவனது உயர்ந்த இலக்கை அடைவதைப் பொறுத்த வரையில்) வெற்றியை அடைவதற்காகத் தனியொருவனாக யோகம் பயில வேண்டும்.(4) தோழமை இல்லாமல் யோகம் பயில்பவனும், தனது பிரதிபலிப்பாகவே அனைத்தையும் காண்பவனும், (அண்ட ஆத்மாவால் அனைத்துப் பொருட்களும் படரந்தூடுருவியிருக்கும் {நீக்கமற நிறைந்திருப்பதன்} விளைவால்) ஒருபோதும் எதையும் அலட்சியம் செய்யாதவனுமான ஒருவன் விடுதலையை {முக்தியை} அடைவதில் இருந்து ஒருபோதும் வீழ்வதில்லை. வேள்வி நெருப்பைப் பராமரிக்காமல், நிலையான வசிப்பிடம் ஏதுமில்லாமல் உள்ள அத்தகைய மனிதன் {ஒரு சந்நியாசி}, தன் உணவுக்காகப் பிச்சையெடுக்க மட்டுமே ஒரு கிராமத்திற்குள் நுழைய வேண்டும்.(5)
அவன் நாளைக்காகச் சேர்த்து வைக்காமல் அன்றைய நாளுக்குத் தேவையானதை மட்டுமே பெற வேண்டும். அவன் உயர்ந்ததில் {பரத்தில்} இதயத்தை நிலைநிறுத்தியபடி, தவங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். உரிய ஒழுங்குமுறையின்படி சிறிதளவே உண்ணும் அவன், ஒருநாளைக்கு ஒரு முறைக்கு மேல் உண்ணக்கூடாது.(6) மண்டையோடு, மரத்தடியில் உறைவிடம், அணிந்து கொள்ளக் கந்தை, எத்தோழமையுமின்றித் தனித்திருத்தல், அனைத்து உயிரினங்களிடமும் பாகுபாடில்லாமை ஆகியன (அறம் பயிலும் ஒரு) துறவியின் பிற குறியீடுகளாகும்.(7) அச்சமடைந்த யானைகள் கிணற்றுக்குள் விழுவதைப் போல வார்த்தைகள் எவனிடம் நுழையுமோ, எவனிடம் இருந்து அவை மீண்டும் பேசுபவனிடம் திரும்பி வராதோ, அவனே விடுதலையை {முக்தியை} இலக்காகக் கொண்ட இந்த வாழ்வுமுறையைப் பின்பற்றத் தகுந்தவனாவான்[1].(8) ஆண்டியானவன் (அல்லது துறவியானவன்) எந்த மனிதனின் தீச்செயல்களையும் ஒருபோதும் கவனிக்கக்கூடாது. பிறரை இகழ்ந்து சொல்லப்படும் எதையும் அவன் ஒருபோதும் கேட்கக்கூடாது. குறிப்பாக அவன் ஒரு பிராமணனைக் குறித்துத் தீமையாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.(9) அவன் எப்போதும் பிராமணர்களுக்கு ஏற்படையவற்றை மட்டுமே பேச வேண்டும். (தன்னைக் குறித்து) இகழ்வாக ஏதும் சொல்லப்படும்போது, அவன் (பதிலளிக்காமல்) முற்றான அமைதியை நீட்டிக்க வேண்டும். உண்மையில் அத்தகைய அமைதியே அவனுக்குப் பரிந்துரைக்கப்படும் மருத்துவச் சிகிச்சையாகும்.(10)
[1] "கிணற்றுக்குள் வீசப்படும் யானைகள், ஆதரவற்றவையாகி அவற்றால் வெளியே வர முடியாது. எனவே, எந்த மனிதனுக்குள் கிணற்றில் விழுந்த யானைகளைப் போலச் சொற்கள் நுழையுமோ, அவன் பிறரின் தீய பேச்சுகளுக்குப் பதிலளிக்கமாட்டான். அத்தகைய பொறுமையுள்ள மனிதன் மட்டுமே சந்நியாசத்தை ஏற்க வேண்டும் என்று இங்கே சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எவன் கிழக்கு வானைப் போலத் தன் ஒருவனாலேயே தான் இருக்கும் இடத்தை நிறைக்கிறானோ, தனக்கு முற்றிலும் தனிமையான அல்லது வெறுமையாகத் தோன்றும் இடத்தை எவனால் ஆயிரக்கணக்கான மனிதர்களும், பொருட்களும் நிறைந்ததாக்க முடியுமோ, அவனே உண்மையான பிராமணன் என்று தேவர்களால் கருதப்படுகிறான்[2].(11) எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உடுத்திக் கொள்கிறானோ, எவன் தானாகக் கிடைக்கும் எதையும் உண்டு வாழ்கிறானோ, எவன் தான் காணும் எந்த இடத்திலும் உறங்குகிறானோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்.(12) பாம்பைப் போன்றதே தோழமை என்றும்; (இனிய பண்டம் மற்றும் பானங்களில் இருந்து கிடைக்கும்) முழு அளவு நிறைவானது நரகம் என்றும்; சவத்தைப் போன்றவளே பெண் என்றும் எவன் அச்சம் கொள்கிறானோ, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(13) எவன் கௌரவிக்கப்படுகையில் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, எவன் அவமதிக்கப்படுகையில் ஒருபோதும் கோபம் கொள்வதில்லையோ, எவன் அனைத்து உயிரினங்களுக்கும் கருணையை உறுதியளித்திருக்கிறானோ {அபயம் அளித்திருக்கிறானோ}, அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(14) இறுதி வாழ்வுமுறையை {ஸந்நியாச வாழ்வுமுறையை} நோற்கும் ஒருவன், மரணத்தை மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அதே வேளையில் அவன் வாழ்வையும் மகிழ்ச்சியாகக் காணக்கூடாது. அவன் (தலைவனின்) ஆணைக்காகக் காத்திருக்கும் பணியாளைப் போலத் தன் வேளைக்காக மட்டுமே காத்திருக்க வேண்டும்.(15)
[2] "வரிக்கு வரியான மொழிபெயர்ப்பையே நான் அளித்திருக்கிறேன். முதல் வரியானது தன்னையே அனைத்துமாக, அனைத்தையும் தானாகவே காணும் மனிதனைக் குறிக்கிறது என்று உரையாசிரியர் விளக்குகிறார். இரண்டாம் வரியானது, கூட்டம் நிறைந்த ஓரிடத்தை முற்றிலும் தனிமையானதாக, வெறுமையானதாக யோகத்தின் மூலம் தோன்றச் செய்யும் அதே மனிதனைக் குறிப்பிடுகிறது. பிரத்யாகாரம் என்றழைக்கப்படும் இந்த யோகம் சாந்திபர்வத்தின் 233ம் பகுதியில் விளக்கப்பட்டிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எவனால ஆகாயம் எப்போதும் முழுமையடைகிறதோ, எவனால் வெற்றிடம் மக்கள் நிறைந்தது போலாகிறதோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று நினைக்கிறார்கள்" என்றிருக்கிறது.
அவன் தன் இதயக் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் வாக்கின் களங்கங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவன் தன் பாவங்கள் அனைத்தையும் கழுவிக் கொள்ள வேண்டும். எதிரிகள் அற்றவனான அவனுக்கு எது அச்சத்தை ஏற்படுத்த முடியும்?(16) எவனுக்கு எந்த உயிரினத்திடமும் அச்சமில்லையோ, எவனிடம் எந்த உயிரினமும் அச்சங்கொள்வதில்லையோ அவன் அனைத்து வகைக் குற்றங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதால் எந்த இடத்தில் இருந்தும் அவனுக்கு அச்சம் ஏற்பட முடியாது.(17) காலால் நகரும் பிற உயிரினங்கள் அனைத்தின் காலடித் தடங்களும் யானையின் காலடித்தடம் விழுங்கிவிடுவதை போலவே அனைத்துப் பதவிகளும் நிலைகளும் யோகத்திற்குள் ஈர்க்கப்படும்[3].(18) அதே போலவே, பிற கடமைகள் மற்றும் நோன்புகள் எதுவும் (அனைத்து உயிரினங்களுக்கும்) தீங்கிழையாமை என்ற ஒற்றைக் கடமைக்குள் அடங்கிவிடும். பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதைத் தவிர்ப்பவன் எப்போதும் நீடித்திருக்கும் இன்ப வாழ்வை வாழ்வான்.(19) தீங்கிழையாமல் இருப்பவனும், அனைத்து உயிரினங்களிடமும் சம பார்வை கொண்டவனும், வாய்மையில் அர்ப்பணிப்புடன் இருப்பவனும், மனோவுறுதியுடன் கூடியவனும், தன் புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பை வழங்குபவனுமான ஒருவன், ஒப்பீட்டைக் கடந்த கதியை அடைகிறான்.(20)
[3] "குன் kun (மண்ணால் செய்யப்பட்ட பூமி அல்லது உடல்) என்பதிலும், ஜராயதிதி குஞ்சர அதாவது சமாதியில் உள்ள யோகி என்பதிலும் உரையாசிரியரின் விளக்கத்தைப் பின்பற்றுகிறேன். யோகத்தின் கனிகள் பிற செயல்கள் எதன் கனிகளையும் ஈர்த்துவிடும் என்பதே இங்கே பொருளாகத் தெரிகிறது. இந்திரனின் பதவியும் நிலையும் கூட யோகத்தின் மூலம் அடையப்படலாம். யோகம் மட்டுமே அளிக்கக்கூடிய விடுதலை {முக்தி} நிலையில் அடங்காத எந்த இன்பநிலையும் கிடையாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மரணம் என்றழைக்கப்படும் நிலையானது, தன்னறிவில் நிறைவுடன் உள்ளவனும், அச்சத்திலிருந்து விடுபட்டவனும், விருப்பம் மற்றும் எதிர்பார்ப்புகள் அற்றவனுமான ஒரு மனிதனைக் கடப்பதில் வெல்வதில்லை. மறுபுறம் அத்தகைய மனிதனே மரணத்தைக் கடந்து செல்வதில் வெல்கிறான்.(21) எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனோ, எவன் தவங்களைச் செய்பவனோ, எவன் அனைத்துப் பொருட்களையும் பற்றியிருந்தாலும், பற்றில்லாமல் இருக்கும் வெளியைப் போல வாழ்கிறானோ, எவனுக்குத் தான் என்று அழைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லையோ, எவன் தனிமையான வாழ்வை வாழ்வானோ, எவனுடைய ஆன்மா அமைதியானதோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(22) எவனுடைய வாழ்வு அறப்பயிற்சிக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய அறம், தன்னிடம் கடமையுணர்வுடன் பணி செய்பவர்களின் நன்மைக்கானதாக இருக்கிறதோ, எவனுடைய பகல்களும், இரவுகளும் தகுதியை {புண்ணியத்தை} அடைவதற்காக மட்டுமே இருக்கின்றனவோ அவனையே தேவர்கள் பிராமணன் என்று அறிகிறார்கள்[4].(23) எவன் ஆசையிலிருந்து விடுபட்டவனோ, எவன் (உலக மனிதர்களால் செய்யப்படும் செயல்களைச் செய்ய) ஒருபோதும் முயற்சி செய்வதில்லையோ, எவன் எவனுக்கும் தலைவணங்குவதில்லையோ, எவன் மற்றொருவனைத் துதிபாடுவதில்லையோ, எவன் அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டவனோ அவனையே தேவர்கள் பிராமணனாக அறிகிறார்கள்.(24) அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியில் நிறைவடைந்து, துன்ப எதிர்பார்ப்பில் அச்சத்தால் நிறைகின்றன. எனவே, பிற உயிரினங்களைத் துன்பத்தில் நிறைக்கும் வாய்ப்பில் துயரடையுபவனான நம்பிக்கையுள்ள மனிதன், அனைத்து வகைச் செயல்களிலும் இருந்தும் முற்றாக விலக வேண்டும்.(25)
[4] "இங்கே குறிப்பிடப்படும் ஹர்யார்த்தம் Haryyartham என்பது ஹரியையோ, தகுதியை ஈட்டும் சீடனையோ பணியாளையோ குறிக்கும். சில உரைகள் (பிறரின்) மகிழ்ச்சிக்காக என்ற பொருளில் உள்ள ரத்யார்த்தம் Ratyartham என்ற சொல்லைக் கொண்டுள்ளன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
எந்த உயிரினத்துக்கும் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதிக்கொடையானது, அனைத்துக் கொடைகளையும் கடந்து நிற்பதாகும். எவன் தொடக்கத்திலேயே தீங்கிழைக்கும் அறத்தைக் கைவிடுகிறானோ, அவன் அனைத்து உயிரினங்களுக்குத் தீங்கிழைப்பதில்லை என்ற உறுதியை அளிக்கும்போது விடுதலையை {முக்தியை} அடைவதில் வெல்கிறான்.(26) எந்த மனிதன் திறந்திருக்கும் தன் வாயில், காட்டில் ஒதுங்கி வாழ்வோருக்கு {வானப்ரஸ்தர்களுக்காக} விதிக்கப்பட்டிருக்கும் ஐந்து அல்லது ஆறு வாய்நிறையக்கூட உண்ணவில்லையோ அவன் உலகத்தின் நாபி என்றும், இந்த அண்டத்தின் புகலிடம் என்றும் சொல்லப்படுகிறான். {அவனது} தலை, பிற அங்கங்கள், நல்ல மற்றும் தீய செயல்கள் ஆகியன நெருப்பைக் கொண்டதாகின்றன.(27) தன்னைத்தானே தியாகம் செய்யும் அத்தகைய மனிதன், தன் புலன்களையும், மனத்தையும் தன் இதய வெளிக்குள் வசிக்கும் நெருப்பில் ஆகுதி செய்கிறான். தனக்குள் உள்ள அத்தகைய நெருப்புக்குள் அத்தகைய ஆகுதியை ஊற்றுவதன் விளைவால், தேவர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களுடன் கூடிய இந்த அண்டமே நிறைவடைகிறது[5].(28) ஒளியுடன் கூடியதும், மூன்று உறைகளில் மறைக்கப்பட்டதும், பரமாத்மாவின் முதன்மையான இயல்பைப் பகிர்ந்து கொள்ளும் ஈஸ்வரனின் தன்மைகளான முக்குணங்களுடன் கூடியதுமான ஜீவாத்மாவைப் புரிந்து கொண்டவர்கள், அனைத்து உலகங்களிலும் பெருமதிப்பிற்குரியவர்களாகிறார்கள். மனிதர்கள் அனைவருடன் கூடிய தேவர்களும் அவர்களது தகுதிகளை உயர்வாகப் பேசுகின்றனர்.(29) எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், வேதங்கள் அனைத்தையும், வெளியையும் {ஆகாயத்தையும்}, உணரத்தக்க பிற பொருட்களையும், சாத்திரங்களில் தோன்றும் சடங்குகளையும், ஒலியால் உணரப்படும் யாவற்றையும், பரமாத்மாவின் மேன்மையான இயல்பையும் காண்பதில் வெல்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்.(30)
[5] கும்பகோணம் பதிப்பில், "சராசரமான ஜகத்துக்கு நாபியும் இருப்பிடமுமான வைஸ்வாநரனானவன் தனக்கு அவயவங்களான அவனுடைய அங்கத்தையும், நல்லதும், கெட்டதுமாயிருக்கிற கர்மத்தையும் ஸகலத்தையும் அடைகிறான். எந்த வைஸ்வாநரம் ஹ்ருதயத்தில் ஓர் ஓட்டை அளவில் நாபிக்கு மேல் இருக்கிறானோ அவனிடத்தில் பிராண வாயு இந்திரிய முதலானவைகளை ஆத்மாயாஜியானவன் ஹோமம் செய்கிறான். ஹோமம் செய்யப்பட்ட அவனுடைய அக்னி ஹோத்ரமானது தேவர்கள் முதலான எல்லாப் பிராணிகளுடைய ஆத்மாவிலுமிருக்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உலகத்தின் நாபியிலிருந்து முகம் மேல்நோக்கி உயர்த்தப்பட்டு, அதற்குள் ஆகுதிகள் காணிக்கையிடப்படுகின்றன. நெருப்பின் தலையும், மேல் அங்கங்களும் நல்லது, தீயது என அனைத்தையும் ஏற்கின்றன. அவன் தன் இதயத்திற்குள் தன் உயிரையே ஆகுதியாகக் காணிக்கையளிக்கிறான். அந்த அக்னி ஹோத்ரத்தில் தன் ஆத்மாவைக் காணிக்கை அளிப்பதில் உலகங்கள் அனைத்தும் தேவர்களும் நிறைவடைகின்றனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஒருவன் தன்னைத் தானே ஆகுதிகாயக் காணிக்கையளிப்பதை ஒப்பிடும் அளவில் வேள்விப்பீடமும், நெருப்பும் இங்கே உவமையாகச் சொல்லப்படுகின்றன" என்றிருக்கிறது.
எவன் தன் உடலுக்குள் வசிக்கும் ஆன்மாவில், (அளவில்லா) ஆகாயத்தாலும் அளக்க முடியாததும், தங்கமயமானதும், முட்டையில் இருந்து பிறந்ததும், முட்டைக்குள்ளேயே வசிப்பதும், பல சிறகுகளைக் கொண்டதும், இரு சிறகுகளைக் கொண்ட ஒரு பறவையைப் போன்றதும், பல ஒளிக்கதிர்களால் ஒளிமயமானதும், பூமியில் பற்றில்லாததுமான முதன்மையான பொருளை {பரமாத்மாவைக்} காண்கிறானோ, அவன் உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனாகத் தேவர்களாலும் வழிபடப்படுகிறான்[6].(31) தொடர்ந்து சுழல்வதும், சிதைவற்றதும், அனைத்து உயிரினங்களின் இருப்புக் காலத்தை விழுங்குவதும், ஆறு பருவ காலங்களை அச்சாகக் கொண்டதும், பனிரெண்டு மாதங்களாலான பனிரெண்டு ஆரங்களைக் கொண்டதும், சிறந்த இணைப்புகளைக் கொண்டதும், எதன் திறந்த வாய்க்குள் (விழுங்கப்படத் தயாராக) இந்த அண்டம் செல்கிறதோ அந்தக் காலச்சக்கரத்தில் நிறுவப்பட்டிருக்கும் புத்தியைக் கொண்டவனைத் தேவர்களும் வழிபடுகிறார்கள்.(32) கனவற்ற உறக்க நிலையே அகன்ற உணர்வற்ற பரமாத்ம நிலையாக இருக்கிறது. அந்த உணர்வற்ற நிலையே இந்த அண்டத்தின் உடலாக இருக்கிறது. அது படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. உணர்வற்ற அந்தப் பரந்த நிலையில் ஒரு பகுதியை அடையும் ஜீவன் தேவர்களை நிறைவடையச் செய்கிறது. இறுதியாக நிறைவடையும் அவர்கள், அந்த உணர்வற்ற நிலையின் திறந்த வாயை நிறைவு செய்கிறார்கள்.(33) ஒளியுடனும், நித்தியக் கொள்கையுடனும் கூடிய ஜீவன் தொடக்கமில்லாததாகும். அது (குறிப்பிட்ட பாதைகளைப் பின்பற்றுவதன் மூலம்) நித்திய மகிழ்ச்சியுடைய முடிவிலா உலகங்களை அடைகிறது. எவனைக் கண்டு எந்த உயிரினமும் அஞ்சாதோ, அவன் ஒருபோதும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(34) நித்திக்கத்தக்க எதையும் ஒருபோதும் செய்யாதவனும், மற்றொருவனை ஒருபோதும் நிந்திக்காதவனுமான ஒருவனே உண்மையில் மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதன் பரமாத்மாவைக் காண்பதில் வெல்கிறான். அறியாமை விலகியவனும், பாவங்கள் கழுவப்பட்டவனுமான ஒருவன், பிறரால் அனுபவிக்கப்படும் இன்பத்தை இம்மையிலும், மறுமையிலும் அனுபவிப்பதில்லை (ஆனால் அவன் முற்றான விடுதலையை {முக்தியை} அடைகிறான்).(35) நான்காம் வாழ்வுமுறையை {சந்நியாஸாஸ்ரமத்தை} நோற்கும் ஒருவன், அனைத்திலும் தொடர்பற்றவனாகப் பூமியில் உலவிக் கொண்டிருக்கிறான். அத்தகைய ஒருவன், கோபம் மற்றும் குற்றத்தில் இருந்து விடுதலை பெற்றவனாக இருக்கிறான். அத்தகைய ஒருவன் மண்ணாங்கட்டியையும், தங்கக் குவியலையும் சம கண்ணுடனே பார்ப்பான். அத்தகைய மனிதன் தன் பயன்பாட்டுக்காக ஒருபோதும் எதையும் சேகரிக்க மாட்டான். அத்தகைய ஒருவன் நண்பர்களையோ, பகைவர்களையோ கொள்ள மாடடான். அத்தகைய ஒருவன் புகழ் அல்லது பழி மற்றும் ஏற்புடையது மற்றும் ஏற்பில்லாதது ஆகியவற்றில் முற்றிலும் கவனமற்றவனாக இருப்பான்" என்றார் {வியாசர்}.(36)
[6] "இங்கே சுட்டப்படும் அனைத்தும் பரமாத்மாவையே குறிக்கின்றன. பரம்பொருளே ஆகாயத்தைவிடப் பெரியது. அறிவை மட்டுமே தன் குணமாகக் கொண்ட சித் தங்கமயமானதாக இருக்கிறது. முட்டையில் இருந்து பிறந்தது என்றால் அண்டத்திற்குச் சொந்தமானது என்ற பொருள். முட்டைக்குள் என்பது இதயத்தால் புரிந்து கொள்ள முடியாது என்ற பொருள். பல இறகுகள் என்பது குறிப்பிட்ட தேவன் வசிக்கும் பல அங்கங்களைக் கொண்டது என்ற பொருள். இரு சிறகுகள் என்பன பற்றில்லாமை அல்லது முற்றாகத் தொடர்பறுத்தல் என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 245ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |