The knowledge of soul! | Shanti-Parva-Section-246 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 73)
பதிவின் சுருக்கம் : ஆத்மாவை அறிந்த கொள்ள இந்திரியங்கள், தன்மாத்திரைகள், மனம், புத்தி, சித்தம் ஆகியவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைச் சுகருக்குச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஜீவாத்மாவானது, பிரகிருதியின் மாற்றங்கள் யாவற்றுடன் கூடியதாக இருக்கிறது. இவை {பிரகிருதியின் மாற்றங்கள்} ஆன்மாவை அறிவதில்லை, ஆனால் இவையனைத்தையும் ஆன்மா அறிந்திருக்கிறது.(1) பலமானவையும், நன்கு பழக்கப்பட்டவையும், பேருறுதி கொண்டவையுமான குதிரைகளைத் தான் தேர்ந்தெடுக்கும் பாதையில் செலுத்தும் ஒரு நல்ல சாரதியின் செயல்பாட்டைப் போலவே, ஆன்மாவும், ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்கள் என்றழைக்கப்படுவனவற்றின் துணையுடன் செயல்படுகிறது.(2) புலன் நுகர் பொருட்களானவை {தன்மாத்திரைகளானவை}, புலன்களைவிட {இந்திரியங்களைவிட} மேன்மையானவையாக இருக்கின்றன[1]. அந்தப் பொருட்களைவிட {தன்மாத்திரைகளைவிட} மனம் மேன்மையானதாக இருக்கிறது. மனத்தைவிடப் புத்தி மேன்மையானதாக இருக்கிறது. மஹத் என்றும் அழைக்கப்படும் ஆன்மாவானது, புத்தியைவிட மேன்மையானதாக இருக்கிறது.(3) மஹத்தைவிட மேன்மையானதாகப் புலப்படாதது (அல்லது பிரகிருதி) இருக்கிறது. அந்தப் புலப்படாததுக்கும் மேன்மையானதாகப் பிரம்மம் இருக்கிறது. பிரம்மத்தைவிட மேன்மையானது ஏதுமில்லை. அதுவே சிறப்பின் உயர்ந்த எல்லையும், உயர்ந்த கதியுமாக இருக்கிறது.(4) பரமாத்மாவானது ஒவ்வொரு உயிரினத்திலும் மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அதைக் காண்பதில்லை. நுட்பமான பார்வை கொண்ட யோகியர் மட்டுமே தங்கள் கூரிய நுண்ணியப் புத்தியின் துணையுடன் பரமாத்மாவைக் காண்கிறார்கள்.(5)
[1] புலன்கள் {இந்திரியங்கள்} - மெய், வாய், கண், செவி மற்றும் மூக்கு என்பனவாகும், புலன்நுகர் பொருட்கள் {தன்மாத்திரைகள்} - ஊறு {தீண்டல்}, சுவை, ஒளி {காட்சி / வடிவம்}, ஒலி மற்றும் நாற்றம் {மணம்} என்பனவாகும்
தங்களில் ஆறாவதாக மனத்தைக் கொண்ட புலன்களையும், புலன்நுகர் பொருட்களையும், புத்தியின் துணையுடன் உள் ஆன்மாவில் கலந்து, சிந்தனையின் நோக்கம், சிந்தனை, சிந்திப்பவன் என்ற மூன்று நனவுநிலைகளைக் குறித்துச் சிந்தித்து,(6) தியானத்தின் மூலம் அனைத்து வகை இன்பங்களிலிருந்தும் விலகி, தானே பிரம்மம் என்ற அறிவை மனத்தில் தரித்து, அதே வேளையில் பலத்தின் நனவுநிலைகள் {அகங்காரங்கள்} அனைத்தையும் புறந்தள்ளி, அதன் மூலம் தன் ஆன்மாவை முற்றான அமைதியடையச் செய்யும் யோகி, அழிவின்மையை அடைகிறான்.(7) எனினும் தன் புலன்கள் அனைத்திற்கும் அடிமையாக இருப்பவனும், சரி மற்றும் தவறு என்ற கருத்துகளில் குழப்பமுள்ளவனும், ஏற்கனவே மரணமடையக்கூடிய நிலையிலுள்ளவனுமான மனிதன், உண்மையில் (ஆசைகளுக்கு) சுயத்தை அடிபணியச் செய்வதன் மூலமே மரணத்தைச் சந்திக்கிறான்.(8) ஒருவன் தன் ஆசைகள் அனைத்தையும் அழித்து, திரள் புத்தியை {சித்தத்தை} நுணுக்கமான புத்திக்குள் {சத்வத்திற்குள்} கலக்க வேண்டும். இவ்வாறு திரள் புத்தியை {சித்தத்தை} நுண்ணியப் புத்தியில் கலப்பதன் மூலம், ஒருவன் இரண்டாவது காலஞ்சர மலையாகிறான்[2].(9) யோகியானவன், தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலம் அறம் மற்றும் மறம் ஆகிய இரண்டையும் கடந்தவனாகிறான். தன் இதயத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தன் உண்மையான இயல்பில் வாழ்வதன் மூலமும் அவன் உயர்ந்த மகிழ்ச்சியை அடைகிறான்[2].(10)
[2] "சித்தம் என்பது திரள் புத்தியாகவும், சத்வம் என்பது நுணுக்கமான புத்தியாகவும் உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. மனத்தால் கொண்டுவரப்படும் தோற்றங்களுடன் கூடிய புத்தி, அல்லது புலன்களே இங்கே திரள் என்று அழைக்கப்படுகிறது; அதே வேளையில் பிரம்மம் குறித்த கருத்துகளைக் கொண்டது நுட்பமானது என்றழைக்கப்படுகிறது. காலஞ்சரம் என்ற பெயர் கொண்ட மலையைப் போலவே நீக்கப்பட {அசைக்கப்பட} முடியாத ஒன்று, அல்லது காலத்தின் பாதிப்பை அழிக்கும் ஒருவன், அஃதாவது அண்டத்தையே வெல்லும் காலத்தையே வெல்லும் ஒருவன் என்ற பொருளில் "காலஞ்சரம்" என்ற சொல் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எல்லா ஸங்கல்பங்களையும் தள்ளிவிட்டுச் சித்தத்தைப் புத்தியில் பிரவேசிக்கச் செய்ய வேண்டும். சித்தத்தைப் புத்தியில் செலுத்திவிட்டுக் காலத்தை நசிக்கச் செய்கிறவனாயிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.[3] "இரட்டை நனவுநிலைகளைக் கடப்பதே இங்கே தூய்மைப்படுதல் என்று சொல்லப்படுகிறது. அறமானது, சொர்க்கத்தைவிடவும் மிக உயர்ந்த முக்திக்கு வழிவகுக்க இயலாததாக இருப்பதால் அதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஆத்மானிஷ்டித்வாம் Atmanishthitwaa என்றால் ஒருவன் உண்மையான இயல்புடன் வாழ்வது என்பதாகும், அஃதாவது அனைத்தையும் ஆன்மாவுக்குள் கலத்தல் என்பதாகும். இரட்டை நிலைகளின் நனவைக் கடக்கும்போது இஃது அடையப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நான் சொன்ன அந்த இதயத் தூய்மை என்பது, ஒருவன் கனவற்ற தூக்கத்தில் (சுற்றமனைத்தையும் மறந்த) நனவற்ற நிலையில் உணர்வற்ற நிலையை அனுபவிப்பதாகும். அந்நிலையை அடைந்த யோகி, முற்றமைதியான சூழல் உள்ள இடத்தில் நிலையாக எரியும் விளக்கின் தழலைப் போல வாழ்கிறான்.(11) உணவில் எளிமையடைந்து, தன் இதயத்தைத் தூய்மை செய்து கொண்ட யோகி, தன் ஆன்மாவை ஆன்மாவுக்குள் செலுத்துவதால், ஆன்மாவுக்குள் ஆன்மாவைக் காண்பதில் வெல்கிறான்[4].(12) ஓ! மகனே, உனக்குப் போதிப்பதற்கான இந்த உரையாடல் வேதங்கள் அனைத்தின் சாரமாகும். இங்கே வெளிப்படுத்தப்படும் உண்மைகள், உள்ளுணர்வின் துணையால் மட்டுமோ, வெறும் சாத்திரக் கல்வியாலோ புரிந்து கொள்ள இயலாதனவாக இருக்கின்றன. ஒருவன் நம்பிக்கையின் துணை கொண்டே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்[5].(13) அறப்பணிகள் மற்றும் உண்மையின் அடிப்படையிலான உரையாடல்கள் அனைத்திலும் உள்ள செல்வத்தைக் கடைவதன் மூலமும், பத்தாயிரம் ரிக்குகளைக் கடைவதன் மூலமும் இந்த அமுதம் எழுகிறது {உதிக்கிறது}.(14) உண்மையான அனைத்து விவேகிகளின் அறிவையும் கொண்ட இஃது, தயிரிலிருந்து வெண்ணெயைப் போலவும், மரத்திலிருந்து நெருப்பைப் போலவும் என் மகனுக்காகவே எழுந்திருக்கிறது {உதித்திருக்கிறது}.(15)
[4] "முதல் வரியில் உள்ள ஆத்மானம் என்பது ஜீவாத்மாவாகும், ஆத்மானி என்பது பரமாத்மாவாகும். இரண்டாம் வரியிலும் இந்த இரு வார்த்தைகளுக்கிடையில் இதே வேறுபாடு தென்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] கும்பகோணம் பதிப்பில், "ஓ புத்திரனே, உபதேச ரூபமான இந்தச் சாஸ்தரமானது எல்லா வேதங்களுடைய ரகஸ்யமும், வேதத்தைத் தவிர மற்ற சப்தங்களாலும் பிரத்தியக்ஷானுமானங்களாலும் அறியப்படாததும் தன் அனுபவத்தினாலேயே அறியக்கூடியதுமாயிருக்கிறது. திரவியம் போன்ற எந்த வஸ்துவானது தர்மத்தைப் பற்றின எல்லாச் சரித்திரங்களிலும், விசித்திரமான கதைகளிலும் காணப்படுகிறதோ அந்த அமிருதமானது அனேக ரிக்குகளைக் கடைந்து எடுக்கப்பட்டது. ஓ புத்திரனே, தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்கப்படுவதுபோலவும், கட்டையிலிருந்து அக்கினி எடுக்கப்படுவது போலவும், வித்வான்களுடைய ஞானமானது ப்ரமாணத்திலிருந்து எடுக்கப்பட்டது." என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இது வேதங்கள் மற்றும் புனித உரைகள் அனைத்தின் சாரமாகும். ஓ மகனே, ஆத்மாவை உணர்வதற்கு, இவையே புனித உரைகளின் போதனைகளாக இருக்கின்றன. இது தர்மங்கள் அனைத்தின், உண்மைகள் அனைத்தின் சாரமாக இருக்கிறது. இந்த அமிர்தம், ரிக்வேதத்தின் பத்தாயிரம் வரிகளைக் கடைந்து எடுக்கப்பட்டதாகும். இது தயிரில் இருந்து வெண்ணையை எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மரத்தையும், நெருப்பையும் போன்றதாகும். ஓ மகனே, இவ்வகையில் நான் கல்விமான்களின் ஞானத்தை உனக்குக் கொடுத்திருக்கிறேன்" என்றிருக்கிறது.
ஓ! மகனே, திடமான போதனைகள் நிறைந்த இந்த உரையாடலானது, ஸ்நாதகர்களுக்குச் சொல்லப்படும் நோக்கம் கொண்டவையாகும்[6]. அமைதியான ஆன்மா இல்லாதவன், அல்லது தற்கட்டுப்பாடு இல்லாதவன், அல்லது தவங்களைச் செய்யாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(16) வேதங்களை அறியாதவன், அல்லது பணிவுடன் தன் ஆசானுக்குப் பணி செய்யாதவன், அல்லது வன்மத்திலிருந்து விடுபடாதவன், அல்லது உண்மையும், கபடமற்றநிலையும் கொள்ளாதவன், அல்லது ஒழுக்கம் குறித்த கவலையில்லாதவன் ஆகியோருக்கு இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது.(17) விவாத அறிவியலின் மூலம் விழங்கப்படும் அறிவைக் கொண்ட ஒருவனுக்கோ, இழிந்த அல்லது தாழ்ந்த ஒருவனுக்கோ இஃதை ஒருபோதும் சொல்லக்கூடாது. எனினும், புகழ்கொண்டவன், (தன்னொழுக்கத்திற்காக) மெச்சத்தகுந்தவன், அல்லது அமைதியான ஆன்மாவைக் கொண்டவன், அல்லது தவத்தகுதியைக் கொண்ட(18) ஒரு பிராமணன், அல்லது தனது மகன், அல்லது கடமையுணர்வுமிக்கச் சீடன் ஆகியோருக்கு கடமைகளின் சாரத்தையே கொண்ட இந்த உரையாடலைச் சொல்லலாமேயன்றி, எக்காரணம் கொண்டும் வேறு யாருக்கும் இதைச் சொல்லக் கூடாது.(19) எந்த மனிதனும் செல்வங்கள் அனைத்துடன் கூடிய மொத்த பூமியையும், உண்மையை அறிந்த ஒருவனுக்குக் கொடையாக அளித்தாலும், {உண்மையை அறிந்தவனான} அவன் அந்த {செல்வக்} கொடையைவிட இந்த அறிவுக்கொடையையே மேன்மையானதாகக் கருதுவான்.(20)
[6] "வேதங்களை முழுமையாகக் கற்று இல்லற வாழ்வை நோற்பவர்களே ஸ்நாதகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இந்த இடத்தில் இது வேதங்கள் மற்றும் தூய நடத்தையில் நம்பிக்கை கொண்ட மனிதர்களைக் குறிப்பதாக அமைந்திருக்கக்கூடும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இதைவிடப் பெரிய புதிரானதும், ஆன்மா தொடர்புடையதும், மனிதர்களின் சாதாரணப் புத்தியைக் கடந்ததும், முதன்மையான முனிவர்களால் காணப்பட்டதும், உபநிஷத்துகளில் சொல்லப்பட்டதும், உன் கேள்வியின் பொருளாக அமைந்திருப்பதுமான காரியம் குறித்து நான் உன்னிடம் இப்போது உரையாடப் போகிறேன்.(21) இன்னும் உனக்கு எதனில் ஐயம் உள்ளது என்பதை எனக்குச் சொல்வாயாக? ஓ! மகனே, உனக்கு முன்பே அமர்ந்திருக்கிறேன், கேட்பாயாக. உண்மையில், எதைக் குறித்து நான் உன்னிடம் மீண்டும் ஒருமுறை பேச வேண்டும்?" என்று கேட்டார் {வியாசர்}.(22)
சாந்திபர்வம் பகுதி – 246ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |