The charcteristics of Five elements! | Shanti-Parva-Section-247 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 74)
பதிவின் சுருக்கம் : அத்யாத்மா என்றால் என்ன? வெவ்வேறு பொருட்களில் ஐம்பூதங்களின் வெவ்வேறான பகிர்மானத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு? என்பன குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; வியாசரின் பதில்; மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புகள்...
சுகர் {தன் தந்தை வியாசரிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, அத்யாத்மா குறித்து இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. உண்மையில் அத்யாத்மா என்பது என்ன? எங்கிருந்து அது வருகிறது?" என்று கேட்டார்[1].(1)
[1] "அத்யாத்மா என்பது ஆன்மா குறித்த சாத்திரமாகும். இங்கே அஃது, ஐந்து செயற்புலன்கள், ஐந்து அறிவுப்புலன்கள், மனம், சித்தம் முதலியவையாக அழைக்கப்படும் இன்னும் மூன்று {எனினும் இஃது ஒன்றாகவே கணக்கிடப்படுகிறது}, ஐந்து உயிர் மூச்சுகள், ஐபூதங்கள், ஆசை, செயல்கள் மற்றும் அவித்யை அடங்கிய இருபத்தேழு காரியங்களுக்கான தத்துவ உரையாடலைக் கூறுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஓ! மகனே, மனிதர்களின் அத்யாத்மா என்று கருதப்படுவதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன், (அத்யாத்மா குறித்து) நான் தரப்போகும் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) நிலம், நீர், ஒளி, காற்று, வெளி ஆகியன அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அடங்கிய பெரும்பூதங்களாகும். ஒன்றாகவே இருப்பினும் அவை பெருங்கடலின் அலைகளைப் போல வெவ்வேறானவையாகக் கருதப்படுகின்றன (உள்ளடக்கப் பொருளால் ஒன்றாகவே இருப்பினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகவே கணக்கிடப்படுகின்றன).(3) ஓர் ஆமையானது தனது அங்கங்களை நீட்டி, மீண்டும் அவற்றைச் சுருக்கிக் கொள்வதைப் போலவே, (ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட) பெரும்பூதங்களும், எண்ணிலா சிறு வடிவங்களில் வசிப்பதன் மூலம், (படைப்பு என்றும் அழிவு என்றும் அழைக்கப்படும்) மாற்றங்களுக்கு உட்படுகின்றன.(4) அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டம் முழுமையும் இந்த ஐம்பூதங்களே இருக்கின்றன. படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அனைத்திலும், இந்த ஐந்துவகைப் பூதங்களே குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன.(5) இந்த ஐம்பூதங்களும் இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் இருக்கின்றன. எனினும், அனைத்துப் பொருட்களையும் படைத்தவன், (வெவ்வேறு பொருட்களில் வெவ்வேறு அளவுகளில் அமைத்ததன் மூலம்) வெவ்வேறு முடிவுகளை எட்டுவதற்காக அந்தப் பூதங்களைச் சமமற்ற வகையில் பகிர்ந்திருக்கிறான்" என்றார் {வியாசர்}.(6)
சுகர், "அண்டத்தின் பல்வேறு பொருட்களில் (நீர் சொல்லும் இந்த ஐம்பெரும் பூதங்களின்) சமமற்ற பகிர்வை ஒருவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? அவற்றில் புலன்கள் எவை? குணங்கள் எவை? இஃதை எவ்வாறு புரிந்து கொள்வது?" எனக் கேட்டார்.(7)
வியாசர், "இவற்றை முறையாக ஒன்றன்பின் ஒன்றாக உனக்கு விளக்குகிறேன். உண்மையில் எவ்வாறு, என்ன நடக்கிறது என்பதை நான் விளக்கும்போது, அதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(8) ஒலி {சப்தம்}, கேள்விப் புலன் {செவி /ஸ்ரோதரம்}, உடலில் உள்ள துளைகள் அனைத்தும் என இம்முன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. உயிர் மூச்சுகள் {வாயுக்கள் / பிராணன்}, அங்கங்களின் செயல்பாடு {சேஷ்டை}, ஊறு {தீண்டல் /ஸ்பர்சம்} ஆகியன காற்றின் குணத்தைக் கொண்டுள்ளன.(9) வடிவம் {ரூபம்}, கண்கள் {நேத்ரம்}, குடலுக்குள் உள்ள செரிமான நெருப்பு {அக்னி} ஆகியன ஒளியால் {தேயுவால்} தோன்றுகின்றன. சுவை, நாக்கு மற்றும் உடல் நீர்மங்கள் அனைத்தும் அடங்கிய இம்மூன்றும் நீரில் இருந்து வந்தனவாகும்.(10) மணம், மூக்கு மற்றும் உடலென்ற இம்மூன்றும் பூமியின் குணங்களாக இருக்கின்றன. நான் உனக்குச் சொன்ன இவையே புலன்களுடன் தொடர்புடைய ஐம்(பெரும்)பூதங்களின் மாற்றங்கள் ஆகும்.(11)
தீண்டல் காற்றின் குணமாகவும்; சுவை நீரின் குணமாகவும், வடிவம் ஒளியின் குணமாகவும் சொல்லப்படுகின்றன. ஒலி தன் தோற்றுவாயை வெளியில் {ஆகாயத்தில்} கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மணமோ பூமியின் {நிலத்தின்} தன்மையாகச் சொல்லப்படுகிறது.(12) மனம், புத்தி, இயற்கை ஆகிய இம்மூன்றும் தங்கள் முந்தைய நிலைகளில் இருந்து எழுந்து, (ஒவ்வொரு மறுபிறவியிலும் தங்களுக்குரிய) குணங்களை விட உயர்ந்த நிலையை அடைந்து, அந்தக் குணங்களைக் கடந்து செல்லாமல் இருக்கின்றன[2].(13) ஆமையானது தனது அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போலவே புத்தியும், புலன்களைப் படைத்து மீண்டும் தனக்குள்ளேயே அவற்றை இழுத்துக் கொள்கிறது[3].(14) உள்ளங்காலுக்கு {பாதங்களுக்கு} மேலும், உச்சந்தலைக்குக் கீழும் உள்ள பகுதியில் இருந்து எழும் தனிப்பட்ட அடையாளத்தின் நனவுநிலையானது, அடிப்படையில் புத்தியின் செயல்பாட்டாலேயே உண்டாகிறது[4].(15)
[2] "மனம், புத்தி, இயற்கை (அல்லது தனிப்பட்ட மனித விலங்கு தாவரம் முதலியவற்றின் நிலைகள்) ஆகியன தங்கள் முந்தைய நிலைகளாலே இருக்கின்றன, அதிலும் குறிப்பாக இயல்பு {இயற்கை} என்பது முந்தைய இருப்புநிலையில் உள்ள ஆசைகளின் விளைவாகவே இருக்கிறது. இத்தகைய தோற்றுவாயைக் கொண்ட இவை ஐம்பூதங்களாலும் உண்டாகின்றன. அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்து உயர்ந்த குணத்தை அடையும் அக்குணங்களைக் கடந்து செல்வதில்லை, அல்லது வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், அவை உண்மையில் உணரும் (மணம், வடிவம் முதலிய) குறிப்பிட்ட குணங்களைப் பற்றும் சக்தியை அடைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனம், புத்தி, வாஸனை இம்மூன்றும் மனோமயக்கங்கள், ஸத்வரஜஸ்தமோ குணங்களுக்குப் பிறகு உண்டான இவைகள் அந்தக் குணங்களை விட்டிருப்பதில்லை" என்றிருக்கிறது.[3] "புலன்களும், மனமும், புத்தியின் குறிப்பிட்ட வடிவத் தோற்றங்களே ஆகும். மனத்தின் அடிப்படைச் செயல்பாடே உணர்வுகளைப் பேணிவளர்ப்பதும், புறக்கணிப்பதும்தான். புத்தியானது, நிச்சயாத்மிகம் Nicchayaatmika, அல்லது நிச்சயமான தீர்மானங்களை எட்டுவதில் ஈடுபடும் ஒன்றாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "உள்ளங்காலுக்கும், உச்சந்தலைக்கும் இடையில் உள்ள அனைத்தும்தான் உண்மையில் மொத்த உடல், அல்லது சுயம் அல்லது நபராகிறது. அஸ்மின் கிருத்யே Asmin Kritye என்பது அஹம் இதி யத் தர்சனம் தஸ்மின் காரணியே aham iti yat darcanam tasmin karniye ஆக இருக்கிறது. உரையாசிரியர் இதன் பொருளைச் சரியாகச் சொல்கிறார் என்பதில் ஐயமேதுமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பாதத்திற்கு மேல் தலைக்குக் கீழுள்ளதை அறிகிறதென்கிற அக்காரியத்தில் உத்தமமான புத்தியானது இருக்கிறது" என்றிருக்கிறது.
புத்தியே (வடிவம், மணம் முதலிய ஐந்து) பண்புகளாக மாற்றமடைகிறது. புத்தியே, ஆறாவதாக மனத்தைக் கொண்டிருக்கும் (ஐந்து) புலன்களாக மாற்றமடைகிறது. புத்தி இல்லாத போது இந்தப் பண்புகள் எங்கே போகின்றன?[5](16) மனிதனில் ஐம்புலன்கள் இருக்கின்றன. மனமானது ஆறாவதாக (ஆறாம் புலனாகச்) அழைக்கப்படுகிறது. புத்தியானது ஏழாவதாக அழைக்கப்படுகிறது. ஆன்மாவானது எட்டாவதாகும்.(17) கண்கள் (முதலிய புலன்கள்), வடிவ (மற்றும் மணம் முதலிய) உணர்வுகளைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளன. மனமானது, (அந்த உணர்வுகளின் துல்லியத்தில்) ஐயங்கொள்வதற்காக இருக்கிறது. புத்தியானது இந்த ஐயங்களைத் தீர்க்கிறது {அந்த ஐயங்களில் ஒரு தீர்மானத்தை எட்டுகிறது}. ஆன்மாவானது, அவற்றுடன் கலந்துவிடாமல் சாட்சியாக மட்டுமே இருந்து செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் காண்கிறது.(18) ரஜஸ், தமஸ், சத்வம் ஆகிய இம்மூன்றும் தங்கள் தங்களுக்கு ஏற்றபகுதிகளில் இருந்து உண்டாகின்றன. இவை (தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலிய) அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே இருக்கின்றன. இவை குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும் இவை தூண்டும் செயல்களின் மூலம் இவற்றை அறியலாம்[6].(19)
[5] வடிவம் முதலியவை மற்றும் அந்தப் பண்புகளை உணரும் மனத்துடன் கூடிய புலன்கள் ஆகிய இரண்டின் தன்மைகளும் புத்தியே ஆகும், அதன்காரணமாகவே புத்தி இல்லாத போது இவை இருப்பதில்லை. புலன்கள், மனம், மற்றும் புலன்களும் மனமும் உணரும் பண்புகளோடு புத்தியை அடையாளம் காண்பது இந்தச் சுலோகத்தின் நோக்கமாகும். இதில் வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் பிழை செய்திருக்கின்றனர். கும்பகோணம் பதிப்பில், "புத்தியானது சப்தமுதலான குணங்களின் ஸ்வரூபத்தை அடைகிறது. புத்தியே மனமுதலான எல்லா இந்திரியங்குமாகிறது. புத்தியில்லாத விஷயத்தில் குணங்கள் ஏது?" என்றிருக்கிறது.[6] "ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற இந்த முக்குணங்களும் தங்களில் இருந்து வேறுபட்ட எதனிலிருந்தும் தோன்றாமல், முற்பிறவியில் அல்லது முந்தைய இருப்பில் தங்களுக்குரிய ஒப்பான பகுதிகளில் இருந்தே தோன்றுகின்றன. முற்பிறவியில் சித்தம் அல்லது புத்தியில் நீடித்த அவை தங்களுக்குரிய அந்த நிலைகளில் இருந்தே எழுகின்றன. எனவே அவற்றில் இருந்து எழும், சித்தமும், புலன்நுகர் பொருட்களும் {தன்மாத்திரைகளும்}, புலன்களும் இந்த முக்குணங்களால் பாதிப்பை அடைகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ரஜஸ், தமஸ் ஸத்வம் இம்மூன்றும் (பூர்வவாஸனையான) தன் காரணத்தினால் உண்டாகின்றன. அந்தக் குணங்கள் எல்லாப்பிராணிகளிடத்திலும் ஸமமாயிருக்கின்றன. அந்தக் குணங்களை ஊகித்து அறிய வேண்டும்" என்றிருக்கிறது.
அந்தச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், ஒருவன் தன்னை உற்சாகம் அல்லது மகிழ்ச்சி, அமைதி மற்றும் தூய்மையுடன் கலந்து {செயல்பட்டு} உணரும் நிலைகள் அனைத்தும் சத்வ குணம் என்று அறியப்படுகிறது.(20) கவலையுடன் கலந்த உடல் அல்லது மன நிலைகள் அனைத்தும், ரஜஸ் என்றழைக்கப்படும் குணத்தின் ஆதிக்கத்தால் விளைவதாகக் கருதப்பட வேண்டும்.(21) உறுதியற்ற தன்மையைக் காரணமாகக் கொண்டு (புலன்கள், மனம் அல்லது புத்தி கொள்ளும்) மயக்கத்தோடு கூடியவையும், (அறிவின் மூலமோ உள்ளொளியின் மூலமோ) புரிந்து கொள்ள முடியாதவையுமான நிலைகள் அனைத்தும் தமஸ் செயல்பாட்டைச் சார்ந்தவையாக அறியப்பட வேண்டும்.(22) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, உற்சாகம் {ப்ரீதி), இன்பம் {ஆனந்தம்}, உள்ளச்சமநிலை {ஸம்பாவனை}, இதய நிறைவு {மனத்தின் தெளிவு} ஆகியன அனைத்தும் சத்வ குணத்தின் விளைவுகளாகும்.(23) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் செருக்கு {அபிமானம்}, வாக்கில் பொய்மை {பொய்யுரைத்தல்}, பேராசை {லோபம்}, மயக்கம் {மோகம்}, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியன ரஜஸ் குணத்தின் குறியீடுகளாகும்.(24) எந்தவொரு காரணத்திலுமிருந்து எழும், தீர்மான மயக்கம் {மோகம்}, கவனமின்மை {அஜாக்ரதை}, உறக்கம் {நித்ரை}, மயக்கநிலை {அறியாமை}, சோம்பல் ஆகியவற்றைத் தமஸ் குணத்தின் குறீயீடுகளாக அறியப்பட வேண்டும்" என்றார் {வியாசர்}.(25)
சாந்திபர்வம் பகுதி – 247ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |