The Intelligence! | Shanti-Parva-Section-248 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 75)
பதிவின் சுருக்கம் : மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புத் தொடர்ச்சி...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "மனமானது, (பொருட்கள் அல்லது இருப்பிலுள்ளவற்றைக் குறித்த) எண்ணற்ற கருத்துகளை (தனக்குள்ளேயே) உண்டாக்கிக் கொள்கிறது. புத்தியானது எது, எதுவாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கிறது. எது ஏற்புடையது, எது ஏற்பில்லாதது என்பதை இதயம் {அகங்காரம்} பகுத்தறிகிறது. இந்த மூன்று சக்திகளே செயல்களைத் தூண்டுகின்றன[1].(1) புலன்களைவிடப் புலன்நுகர் பொருட்கள் {தன்மாத்திரைகள்} மேன்மையானவை. அந்தப் பொருட்களை {தன்மாத்திரைகளை} விட மனம் மேன்மையானது. மனத்தை விடப் புத்தி மேன்மையானது. புத்தியைவிட ஆன்மா மேன்மையானதாகக் கருதப்படுகிறது.(2) (மனிதனின் பொதுவான காரியங்களைப் பொறுத்தவரையில்) புத்தியே ஒருவனின் ஆன்மாவாகும். புத்தியானது தன்னியக்கமாக (பொருட்களைக் குறித்த) கருத்துகளைத் தனக்குள்ளேயே அமைத்துக் கொள்ளும்போது அது மனம் என்று அழைக்கப்படுகிறது[2].(3) (நோக்கம் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டிலும்) புலன்கள் ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பதன் விளைவால், (ஒன்றாகவே இருக்கும்) புத்தியானது, பல்வேறு மாறுபாடுகளின் விளைவால் வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துகிறது. கேட்கும்போது அது செவிப்புலனாகிறது, தீண்டும் போது அஃது ஊறுபுலனாகிறது {தீண்டல் புலனாகிறது}.(4) அதேபோலவே, காணும்போது அது பார்வைப்புலனாகிறது, சுவைக்கும்போது சுவைப்புலனாகிறது, நுகரும்போது அது மணப்புலனாகிறது. (பல்வேறு செயல்பாடுகளுக்காக) மாறுபடும்போது புத்தியே அவ்வாறு பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறது.(5) புத்தியின் இந்த மாறுபாடுகளே புலன்களாக அழைக்கப்படுகின்றன. புலப்படாத ஆன்மாவானது அவற்றுக்கு மேலான தலைமைப் பொறுப்பில் (அல்லது கண்காணிப்பாளராக) நிறுத்தப்பட்டிருக்கிறது. உடலில் வசிக்கும் புத்தியானது (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) மூன்று நிலைகளில் நீடிக்கிறது[3].(6)
[1] மனம், புத்தி, அகங்காரம் எனக் கொள்க.[2] "மூலத்தில், ஆத்மா என்ற வார்த்தை பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப் படுகிறது. சில வேளைகளில் அது ஜீவாத்மாவாகவும், சில வேளைகளில் பரமாத்மாவாகவும், சிலவேளைகளில் யாதொன்றின் முக்கியப் பகுதி அல்லது சாரமாகவும், சில வேளைகளில் சுயமாகவும், சில வேளைகளில் ஒரு நபர் அல்லது உடலைக் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. (எந்த இடத்தில்) எப்பொருளில் ஒரு வார்த்தைப் பயன்படுத்தப்பட்டாலும், அந்தப் பொருளைப் பகுத்துப்பார்ப்பதில் கடினமேற்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பில், "புத்தியானது வெவ்வேறான விகாரத்தை அடைகிறது. புத்தியின் விகாரங்களை இந்திரியங்களென்று சொல்லுகிறார்கள். அவைகளில் புருஷனானவன் காணப்படாதவனாக இருக்கிறான். புருஷனிடத்தில் புத்தியானது இருந்து கொண்டு ஸாத்விகராஜஸதாமஸ விருத்திகளில் இருக்கிறது" என்றிருக்கிறது.
சில வேளைகளில் அது {புத்தி} உற்சாகமடைகிறது, சிலவேளைகளில் துன்பவயப்படுகிறது; சில வேளைகளில் அது மகிழ்ச்சியோ துன்பமோ இல்லாத நிலையை அடைகிறது.(7) எனினும், (ஏற்கனவே சொல்லப்பட்டது போல) மூன்று காரியங்களை {குணங்களை} உண்டாக்கும் புத்தியானது, ஆறுகளின் தலைவனான பெருங்கடல், தனக்குள் விழும் ஆறுகளின் வலிமைமிக்க நீரோட்டங்களை எதிர்த்து நீடித்திருப்பதைப் போலவே அந்த மூன்று நிலைகளையும் {முக்குணங்களையும்} விஞ்சியிருக்கிறது[4].(8) புத்தியானது எதையும் விரும்பும்போது மனம் என்ற பெயரால் அஃது அழைக்கப்படுகிறது. மேலும் புலன்கள் அனைத்தும், (வெளிப்படையாக ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருந்தாலும்) புத்திக்குள் அடங்கியவையாகவே கொள்ளப்பட வேண்டும்.(9) வடிவம், மணம் முதலிய உணர்வுகளைப் பெறுவதில் ஈடுபடும் புலன்கள் அனைத்தும் அடக்கப்பட வேண்டும்.(10)
[4] "இங்கே சொல்லப்படும் வேளா Velaa என்பதை அலை என்றோ நீரோட்டம் என்றோ கொள்ளலாம். புத்தியானது, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று நிலைகளில் இருந்தாலும், யோகத்தின் மூலம் அவற்றை அதனால் கடக்க முடியும். புத்தியின் இயல்பான மற்றும் இயல்புக்குமீறிய நிலைகள் இந்தச் சுலோகத்தில் பேசப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸத்வரஜஸ்தமோ குணரூபமான இந்தப் புத்தியானது, நதிகளையெல்லாம் ஏற்பதும் அலைகளுள்ளதுமான ஸமுத்திரமானது பெரிய கரையை அடுத்திருப்பதுபோல மூன்று குணங்களையும் அடுத்திருக்கிறது" என்றிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட புலனானது, புத்தியில் அடங்கியொடுங்கும்போது, உண்மையில் புத்தியானது (அந்தப் புலனிலிருந்து) வேறுபட்டதில்லை என்றாலும், இருப்பில் உள்ள பொருட்களின் வடிவில் அது மனத்துக்குள் நுழைகிறது. அவற்றை {இருப்பில் உள்ள பொருட்களைத்} தொடர்ந்து வருவதாகச் சொல்லப்படும் கருத்துகளின் அடிப்படையிலேயே, (உடன் நிகழ்வாக இல்லாமல் தனித்தனியாக) அடுத்தடுத்த புலன்களுக்கும் இதுவே நேர்கிறது[5].(11) தேர்ச்சக்கரத்தின் சுற்றளவில் தாங்கள் கொண்டுள்ள பற்றின் விளைவால் செயல்படும் ஆரங்களைப் போல, (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களும், (மனம், புத்தி, நனவுநிலை [அகங்காரம்] என்ற} இந்த மூன்றையும் பற்றிக் கொண்டு, (மனம், புத்தி மற்றும் நனவுநிலையில் இருக்கும்) பல்வேறு பொருட்களைப் பின்தொடர்கின்றன[6].(12) சிறந்த யோக காரியத்தின் துணையுடன் யோகியரால் அடையப்படும் இந்த ஞானமானது, மனிதர்களின் எந்தச் சிறப்பான முயற்சியுமின்றி உலகம் சார்ந்த பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் அடையப்படுகிறது[7].(13) அண்டமானது (புத்தியின் படைப்பான) இவ்வியல்பின்படியே இருக்கிறது. எனவே, ஞானம் கொண்ட ஒரு மனிதன் (உலகப் பொருட்களின் மீது பற்று கொள்வதன் மூலம்) ஒருபோதும் திகைப்படைவதில்லை {மயக்கமடைவதில்லை}. அத்தகைய மனிதன் ஒருபோதும் துன்புறாதவனாகவும், ஒருபோதும் மகிழாதவனாகவும், (அதிக அளவு உலகப் பொருட்களைக் கொண்டிருக்கும் மற்றொருவரைக் கண்டு உண்டாகும்) பொறாமையில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான்.(14) ஆசைக்குரிய (உலகம் சார்ந்த) பொருட்கள் அனைத்தின் மத்தியிலும் திரியும் இயல்பைக் கொண்ட புலன்களின் துணை மூலம் ஆன்மா காணப்பட முடியாததாக இருக்கிறது. தூய்மையான புலன்களைக் கொண்ட அறவோரும் கூட ஆன்மாவைக் காணத் தவறுகிறார்கள் என்றால், தூய்மையற்ற புலன்களைக் கொண்ட தீயோரைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?(15)
[5] "நான் இந்த ஸ்லோகத்தைச் சரியாகப் புரிந்திருக்கிறேன் என்றால், ஒருவேளை இங்கே சொல்லப்படும் உணர் கோட்பாடானது, ஐரோப்பிய மாறாநிலைவாதத்திற்கு {மனோதத்துவத்தற்கு} ஏற்பில்லாத ஒருவகைக் கருத்தியலாக இருக்கலாம். முதலில் புலன்கள் புத்தியின் மாறுபாடுகளாக {மாறுபட்ட வடிவங்களாக} மட்டுமே சொல்லப்படுகின்றன. மனமும் கூட, அதன் {புத்தியின்} மாறுபாடு {மாற்றுவடிவம்} மட்டுமே ஆகும். ஒரு குறிப்பிட்ட புலனான கண், ஒரு குறிப்பிட்ட கணத்தில் புத்தியில் அடங்கியொடுங்குமானால், அந்தப் புத்தியே அந்தக் கண்ணாக இருப்பினும், அந்தக் கண்ணுடன் கலந்து, மனத்தில் நுழைந்து, அங்கே ஒரு தோற்றத்தை உண்டாக்குவதன் விளைவாகவே அந்தத் தோற்றமானது புலப்படுகிறது. உண்மையில், மனத்தையும், புத்தியையும் சாராத புறவுலகேதும் இல்லை. எது ஒரு மரம் என்றழைக்கப்படுமோ, அது பார்வைப் புலனின் துணையுடன் புத்தியின் மூலமாக மனத்தால் உண்டாக்கப்பட்ட ஒரு கருத்தோ, தோற்றமோ மட்டுமே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுது எந்த இந்திரியமானது புத்தியோடு சேருகிறதோ அப்பொழுது (அந்த இந்திரியத்தினால் அறியப்படுவதும்) மனத்தின் ஸங்கல்பரூபமுமான பதார்த்தத்தில் புத்தியானது பிரிவையடையாததாயிருக்கிறது" என்றிருக்கிறது.[6] "இங்கே பேசுபவர் {வியாசர்}, சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற குணங்கள் புலன்நுகர் பொருட்களைப் பற்றுகின்றன என்ற கோட்பாட்டை எதிர்க்கிறார். அவை மனம், புத்தி மற்றும் நனவுநிலை ஆகியவற்றையே பற்றுகின்றன என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. பொருட்களில் குணங்கள் இருப்பதாகத் தெரியலாம், ஆனால் உண்மையில், அப்பொருட்களை உண்டாக்குபவையான மனம், புத்தி மற்றும் நனவுநிலையில் தாங்கள் கொண்டுள்ள நிரந்தரத் தொடர்பின் காரணமாகவே அவை அப்பொருட்களைப் பின்தொடர்கின்றன. உரையாசிரியர் ஒரு கணத்தில் ஒரு மனைவியின் அழகிய அங்கங்களைக் காணும் தருணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அத்தருணத்தில் அவை {அந்த மனைவியின் அங்கங்கள்} ஒரு கணவனிடம் இன்பத்தையும், சக்காளத்தியிடம் பொறாமையையும், பலவீனமான இதயம் கொண்ட பார்வையாளனிடம் (நிறைவில்லாத துன்பத்துடன் கூடிய) ஆசையையும் தூண்டுகின்றன. அதே வேளையில் அந்த அங்கங்கள் மாற்றமடையாமல் இருக்கின்றன. அப்போது, கணவன் எப்போதும் நிறைவுடன் இருப்பதில்லை, சக்காளத்தியும் அவற்றைப் பார்ப்பதால் எப்போதும் பொறாமையால் நிறைந்திருப்பதில்லை, பார்வையாளனும் எப்போதும் கலங்குவதில்லை. சக்கரத்தின் சுற்றளவில் பற்றியிருக்கும் ஆரங்கள், அந்தச் சுற்றளவோடு சுழல்வது போலவே, மனம், புத்தி மற்றும் நனவுநிலையில் {அகங்காரத்தில்} பற்றியிருக்கும் சத்வம் முதலிய குணங்கள், அவற்றோடு சுழல்கின்றன, அதாவது மனம் முதலியவற்றால் உண்டாகும் பொருட்களைப் பின்தொடர்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிரவ்ருத்திஸ்வபாவமான ரஜஸை ஸத்வமும், அனுஸரிக்கிறது எந்தப் பதார்த்தங்கள் (உலகத்தில்) இருக்கின்றனவோ அவைகளெல்லாம் இம்மூன்று குணங்களிலேயே ஆரக்கால்கள் வண்டிச்சக்கரத்தின் வட்டையை அனுஸரிப்பது போல அனுஸரித்தவைகளாகச் செல்லுகின்றன" என்றிருக்கிறது.[7] "இந்த 13ம் சுலோகம் தற்போதைய பதிப்பாகவே தரப்படுகிறது. நான் மூலத்தின் சரியான முறையைப் பின்பற்றாமல் பொருளையே தந்திருக்கிறேன். இந்த வரியை சாந்திபர்வம் பகுதி 194ன் 42ம் சுலோகத்தோடு ஒப்பிடவும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மனமானது, உதாஸீனமுள்ளவைகளும் விஷயங்களின் ஸம்பந்தத்திற்குத்தக்கபடி வெளியில் ஸஞ்சரிக்கின்றவைகளும் புத்தியை ஸாரமாகவுடையவைகளுமான இந்திரியங்களால் தீபம் போலத் தன்னிஷ்டப்படி பிரகாசத்தைச் செய்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒரு மனிதன், புலன்களைக் கட்டுப்படுத்த புத்தியை ஒரு விளக்கைப் போலப் பயன்படுத்த வேண்டும். ஆசையை நீக்கவும், ஈடுபாடறுக்கவும் யோகத்தைப் பயன்படுத்த வேண்டும்" என்றிருக்கிறது. கங்குலி, கும்பகோணம் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகள் இந்தச் சுலோகத்தின் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கின்றன.
எனினும், ஒருவன் தன் மனத்தின் துணையுடன், அவற்றின் {புலன்களின்} கடிவாளங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் போதுதான், அவனது ஆத்மாவானது, (பார்க்க முடியாத இருளில்) விளக்கொளியின் விளைவால் காட்சியில் தோன்றும் ஒரு பொருளைப் போலத் தன்னையே கண்டடைகிறது.(16) உண்மையில் அனைத்துப் பொருட்களும் அவற்றைச் சூழ்ந்திருக்கும் இருள் அகன்று தென்படுவதைப் போலவே, ஆத்மாவும் அதனைச் சூழ்ந்திருக்கும் இருள் அகலும்போது தென்படுகிறது[8].(17) நீரில் நகரும் நீர்க்கோழியானது அந்தப் பூதத்தால் நனைக்கப்படாததைப் போலவே விடுதலையடைந்த ஆன்மாவைக் கொண்ட யோகியானவன், (சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற) முக்குணங்களின் குறைபாடுகளால் ஒருபோதும் களங்கப்படுவதில்லை.(18) அதே வகையிலேயே, உலகம் சார்ந்த பொருட்கள் அனைத்திலும் எந்தப் பற்றும் கொள்ளாமல் அவற்றை அனுபவிக்கும் ஞானியும் (பிறரின் வழக்கில் இத்தகைய இன்பத்தால் எழும்) எந்த வகைக் குற்றங்களாலும் களங்கப்படாதிருப்பான்.(19) எவன் செயல்களை முறையாகச் செய்த பிறகு அவற்றைத் தவிர்த்து, உண்மையாக இருப்பிலுள்ள ஆன்மா ஒன்றில் மட்டுமே திளைப்படைகிறானோ, எவன் படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்கிறானோ[9], எவன் முக்குணங்களில் இருந்து தன்னைத் தனித்திருக்கச் செய்து கொள்வதில் வெல்கிறானோ,(20) அவன் ஆன்மாவால் உண்டாக்கப்படும் புத்தியையும், புலன்களையும் பெறுகிறான்.
[8] "அதாவது புத்தியின் இருள் அகன்றவுடனேயே உண்மை ஞானம் வென்று, ஆன்மாவானது புலப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] "அதாவது முறையே அதற்கு முந்தைய வாழ்வுமுறைகளைக் கடந்து சந்நியாசம் அல்லது இறுதி வாழ்வுமுறையைப் பின்பற்றும் ஒருவனைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
குணங்கள் ஆன்மாவைப் புரிந்து கொள்ள இயலாதவையாக இருக்கின்றன. எனினும் ஆன்மாவானது, எப்போதும் அவற்றை {குணங்களைப்} புரிந்து கொள்கிறது. ஆன்மாவானது சாட்சியாக இருந்து குணங்களைக் கண்டு, முறையாக அவற்றை இருப்புக்கு அழைக்கிறது. மிக நுட்பமானவையான புத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரண்டிற்கும் இடையிலான இந்த வேறுபாட்டைக் காண்பாயாக.(22) அவற்றில் ஒன்றே {புத்தியே} குணங்களைப் படைக்கிறது. மற்றது {ஆன்மாவானது} அவற்றை ஒருபோதும் படைப்பதில்லை. இயல்பாகவே அவை ஒன்றுக்கொன்று வெவ்வேறானவையாக இருப்பினும் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றன.(23) நீரில் வாழும் மீனானது, அது வாழும் {நீரெனும்} அந்தப் பூதத்தில் இருந்து வேறானதாகும். ஆனால், மீனும் அதன் வீடான நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும் வகையிலேயே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆன்மாவும்} கலந்த நிலையில் ஒன்றாகவே நீடிக்கின்றன. அழுகிய அத்திப்பழத்தில் பிறந்த கொசுவானது, அதனிலிருந்து வேறானதேயன்றி உண்மையில் அஃது அத்தியல்ல. கொசுவும், அத்தியும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைப் போலவே சத்வமும், க்ஷேத்ரஜ்ஞனும் {ஆத்மாவும்} இணைந்திருக்கின்றன.(24) {முஞ்சப்} புற்கட்டில் உள்ள ஒரு புல்லானது, அந்தப் புற்கட்டில் தனித்திருந்தாலும், அதனுடன் கலந்த நிலையில் நீடித்திருப்பதைப் போலவே, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறானவையாக இருப்பினும், தங்கள் சுயத்திலேயே நீடித்து, நிலையாக ஒன்றுகலந்த நிலையிலேயே காணப்படுகின்றன" என்றார் {வியாசர்}.(25)
சாந்திபர்வம் பகுதி – 248ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |