The Knowledge! | Shanti-Parva-Section-249 | Mahabharata In Tamil
(மோக்ஷதர்மம் - 76)
பதிவின் சுருக்கம் : ஞானம் மற்றும் ஞானியின் பெருமைகளைச் சுகருக்கு எடுத்துச் சொன்ன வியாசர்...
வியாசர் {தன் மகன் சுகரிடம்}, "ஒருவனைச் சூழ்ந்திருக்கும் பொருட்கள் புத்தியால் படைக்கப்படுகின்றன. ஆன்மாவானது, அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் தனித்திருந்து அவற்றைக் கண்காணிக்கிறது. புத்தியே அனைத்துப் பொருட்களையும் படைக்கிறது. (பொருட்களின் உற்பத்திக்காக) மூன்று அடிப்படை குணங்களும் மாற்றமடைகின்றன. பலம்பொருந்திய க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மாவானது, அவற்றுடன் கலக்காமலேயே அவையனைத்தையும் கண்காணிக்கிறது.(1) புத்தியால் படைக்கப்படும் பொருட்கள் தங்கள் சொந்த இயல்பை அடைகின்றன. உண்மையில், சிலந்தியானது (தன் உடல் பொருளைக் கொண்டே) இழைகளைப் படைப்பதைப் போலவே, புத்தியால் படைக்கப்படும் பொருட்களும், புத்தியின் இயல்பைக் கொள்கின்றன.(2) யோகம் அல்லது அறிவால் விரட்டப்படும் குணங்கள் இல்லாமல் போவதில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அவை சென்ற பிறகு, அவை திரும்புவதற்கான குறியீடுகள் மட்டுமே காணப்படுவதில்லை (ஆனால் அவை உண்மையாக அழிந்ததற்கான எந்தச் சாட்சியமும் கிடையாது). ஞானத்தால் விரட்டப்படும்போது, அவை ஒருபோதும் திரும்பாமல் அழிந்தே போகின்றன என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.(3) ஒருவன் இவ்விரு கருத்துகளையும் முறையாகச் சிந்தித்து, எதைச் சரியென அவன் நினைக்கிறானோ அதன்வழியே சிறப்பாக முயற்சிக்க வேண்டும். அவன் அவ்வழியிலேயே மேம்பட்டு தன் சொந்த ஆன்மாவில் மட்டுமே புகலிடம் கொள்ள வேண்டும்[1].(4)
[1] "இங்கே சொல்லப்படும் இரு கருத்துகளில் அதிக நடைமுறை வேறுபாடு கிடையாது எனப் பேசுபவர் {வியாசர்} நினைக்கிறார். ஒருவனுடைய ஒழுக்க நடைமுறையானது இந்த இரண்டு கோட்பாடுகளாலும் எந்தப் பாதிப்பையும் அடையாது என்பதைச் சிந்தித்த பிறகு அவற்றில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆன்மாவானது தொடக்கமும் முடிவுமற்றதாகும். மனிதன் தன் ஆன்மாவை முறையாக அறிந்து கொண்டு, கோபவசப்படாமல், இன்பத்தில் மூழ்காமல், பொறாமையில் இருந்து விடுபட்டவனாகத் திரிந்து செயல்பட வேண்டும்.(5) புத்திப் புலங்களின் செயற்பாட்டில், இருப்பாக விளைவதும், (அறுப்பதற்குக்) கடினமானதும், அறிவால் அழியக்கூடியதுமான முடிச்சை இவ்வழிமுறையின் மூலம் அறுக்கும் ஒருவன், (எந்த நிகழ்விலும்) வருத்தங்கொள்ளாமல், ஐயங்கள் விலகியவனாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(6) இவ்வுலகக் காரியங்களில் கலப்பவர்கள், நிலத்திலிருந்து ஆழமான பெரிய ஆற்றில் விழும் நீச்சல் தெரியாதவர்களைப் போல, உடலாலும் மனத்தாலும் துன்புறுவார்கள்.(7) எனினும் உண்மையை அறிந்த கல்விமான், திடமான தரையில் நடக்கும் ஒருவனைப் போலத் தன்னை உணர்வதால் ஒருபோதும் துன்புறுதவதில்லை. உண்மையில் அவன், அறிவை மட்டுமே குறியீடாகக் கொண்ட சித்-ன் குணத்தை மட்டுமே வெளிப்படுத்தும் ஒன்றாக ஆத்மாவைப் புரிந்து கொள்வதால் ஒருபோதும் துன்புறுவதில்லை.(8)
உண்மையில், அனைத்து உயிரினங்களின் தோற்றத்தையும் மறைவையும், அவற்றின் ஏற்றத்தாழ்வுகளையும், வேறுபாடுகளையும் இவ்வாறு புரிந்து கொள்ளும் ஒருவன், உயர்ந்த இன்பநிலையை அடைவதில் வெல்கிறான்.(9) குறிப்பாக அறத்தையே தன் பிறப்பாகக் கொண்ட பிராமணனுக்கு இந்த அறிவே உடைமையாகும். ஆன்மாவையும், இவ்வாறு சொல்லப்படும் இன்பநிலை ஆகியவற்றின் ஞானங்கள் ஒவ்வொன்றும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுக்கப் போதுமானவையாக இருக்கின்றன.(10) அத்தகைய ஞானத்தை அடைவதால் ஒருவன் கல்விமானாகிறான். ஒரு ஞானியின் குறியீடாக வேறு எது இருக்க முடியும்? அத்தகைய ஞானத்தை அடைந்த பிறகு அவர்களில் விவேகமிக்கவர்கள் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களாகத் தங்களைக் கருதி விடுதலையை {முக்தியை} அடைகிறார்கள்.(11)
ஞானமற்ற மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பொருட்கள் ஞானிகளுக்கு ஒருபோதும் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஞானியால் அடையப்படும் அழிவற்ற கதியை விட உயர்ந்த கதி வேறேதும் இல்லை.(12) உண்மையில் ஒருவன், அனைத்துவகைக் குற்றங்களும் நிறைந்த பூமிசார்ந்த இன்பப் பொருட்கள் அனைத்தையும் வெறுப்புடன் காண்பான். பிறரைக் கண்டு அத்தகைய பொருட்களில் இன்பங்கொள்ளும் மற்றொருவன் துயரத்தால் நிறைகிறான். இக்காரியத்தைப் பொறுத்தவரையில், கற்பனையான மற்றும் அதற்கு மாறான இரு பொருட்களையும் அறிந்தவர்கள் ஒருபோதும் துயரில் ஈடுபடாமல் உண்மையில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்பாயாக.(13) கனிகளை எதிர்பாராமல் ஒரு மனிதன் செய்யும் எதுவும், அவனது முற்பிறவிச் செயல்களை அழிக்கும். எனினும், அத்தகைய மனிதன் இப்பிறவியிலும், முற்பிறவியிலும் செய்த செயல்களால் விடுதலைக்கு {முக்திக்கு} வழிகாட்ட முடியாது. மறுபுறம், ஒரு ஞானி செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், முற்பிறவி மற்றும் இப்பிறவியின் செயல்களுக்கு நேரும் இத்தகைய அழிவால் அவனை ஏற்பில்லாத ஒன்றுக்கு (நரகத்திற்கு} வழிநடத்திச் செல்ல முடியாது" என்றார் {வியாசர்}.(14)
சாந்திபர்வம் பகுதி – 249ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |